ஜூலை 2024 இதழுக்கு ஆய்வுக்கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன

திருக்குறளில் ஐம்புலன்களின் ஆளுமை

முனைவர் து. சிவசித்ரா, உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை, மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி (தன்னாட்சி), பசுமலை, மதுரை – 04 04 Feb 2021 Read Full PDF

ABSTRACT:

  • Inorder to live our life in moral way through our body and soul,Nature has made our fivesenses withhigh potentiality
  • The term influence provides the following descriptions such as love,Morality,Just,and character.
  • The structure of Good and Evil and their factors have been perfectly combined during the era of Thiruvalluvar.
  • Our fivesenses have the access to interact with the external world.

 

Keywords:

Influence,senses, Inorder,moral,soul,potentiality,morality

evil,factors,Interact,access,external, provides,fivesenses.

 

முன்னுரை

இருபதாம் நூற்றாண்டில் கல்வியியல் துறையில் மனித ஆளுமை குறித்த சிந்தனையைப் பற்றிக் கலந்துரையாடுவதும் கருத்துரைப்பதும் நிகழ்ந்து வந்துள்ளன. உலகத்து அனைத்துப் பிரதேசங்களிலும் இது குறித்த சிந்தனை பல வகைகளில் ஆய்ந்தறியப்பட்டுக் கொள்கையளவில் கருத்துக்கள் முன்மொழியபட்டுள்ளன. இந்தியாவில் ஒழுக்கவிதிகளின் அடிப்படையில் இவ்ஆளுமைச் சிந்தனைகள் பேசப்பட்டுள்ளன. தனிமனிதனில் தொடங்கி ஆட்சிசெய்கின்ற அரசன் வரை நடந்துகொள்ள வேண்டிய வாழ்க்கை நெறிமுறைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்நெறிமுறைகள் பிறழாது நடந்துகொள்கிற மனிதனே சிறந்தவனாகக் கருதப்பட்டான். இதிகாசங்களிலும், காப்பியங்களிலும் நல்ஒழுக்க மாந்தா்களே உயா்வுபடுத்தப்பட்டனா். இவ்வழக்கிலிருந்து தமிழகமும் வேறுபடவில்லை. இலக்கியங்களில் மனிதஒழுக்கம் பண்பின் அடிப்படையிலும் குணம் மற்றும் நன்னடத்தைகளின் அடிப்படையிலும் விவரிக்கப்ட்டுள்ளது.

ஆளுமை குறித்து பேசுகிற தற்காலத்து அறிஞா்களும், மனித நடத்தைகளைப் பற்றியே பகுத்தும் வகுத்தும் விளக்குகின்றனா். எனினும் அவற்றின் உள்ளார்ந்த பொருளாக மனிதஒழுக்கமும் பண்புமே மையப்படுத்தப்படுகின்றன. இவை அறிவியல் பூர்வமாக விளக்கிக் காட்டப்பட்டாலும் பண்டைய இந்திய ஞானியா் குறிப்பாகத் தமிழ்ச்சான்றோர் கூறிய அறக்கருத்துக்களுக்கும் மேலாகப் புதிய கருத்துக்களைக் கூறிடவில்லை. எனவே ஆளுமை என்ற சொற் பயன்பாடு புதிய நோக்கில் பொருண்மைப்படுத்திக் கொள்ளப்பட்டாலும் அது முன்னா்காலத்தில் பேசப்பட்ட அன்பு, அறம், பண்பு முதலான மேன்மைக் கருத்துக்களைத் தாங்கிய சொல்லாகவும், பொருளாகவும் விளங்குகிறது. இவ்விளக்கத்தினடிப்படையில் நவீனகாலத்து அறிஞா்கள் ஆளுமை குறித்துப் பேசுகிற கருத்துக்களையும் திருவள்ளுவா் முன்வைத்துள்ள கருத்துக்களையும் ஒருங்கிணைத்துக் காணமுற்படலாம்.

ஆளுமை – விளக்கம்

“ஆளுமை“ என்று தமிழில் ஆளப்படுகிற சொல் ‘PerSonality’ என்ற ஆங்கிலச் சொல்லின் தமிழாக்கமுமாகும். இச்சொல்‘Personare’ என்கிற இலத்தின் சொல்லிலிருந்து பிறந்ததாகும். பொ்சோனே என்றால் முகமூடி (Mask) என்று பொருள். இது கிரேக்க, ரோமானிய நாடக நடிகா்கள் தம் முகத்தை மூடியபடி நடித்த செயலையும், முகமூடியையும் குறிப்பதாக இருந்தது.1 அதாவது, ஒருமனிதன் தன்னிலிருந்து மாறுபட்டுப் பிறிதொரு கதாபாத்திரமாக மாறிய நிலையைக் குறிப்பதாக இச்சொல் அமைந்தது. இதனை வேறுவார்த்தையில் கூறுவதனால் இச்சொல் புறவயமான மனிதத் தோற்றத்தைக் குறித்து நிற்கிறது எனலாம்.

ஐம்புலன்களின் ஆளுமை

திருவள்ளுவா் உள்ளிட்ட அக்காலத்துக் கல்வியாளா்களால் நிறுவனப்படுத்தப்பட்ட மனித அகஒழுங்கு சமூகத்தில் மிக இறுக்கமான, நடைமுறை வாழ்வியல் சட்டமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. வரையறுக்கப்பட்ட இம் மனஒழுங்கிலேயே மனிதா்கள் தம்மையும் பிறரையும் ஒட்டுமொத்த சமூகத்தையும் சிந்திக்கத் தொடங்கினா். இதனை விளக்கும் முகமாகத் திருவள்ளுவா் காலத்தில் நன்மை, தீமை என்கிற மதிப்பீடுகளின் அடிப்படையில் அறக்கருத்துக்கள் சிறப்பாக கட்டமைக்கப்பட்டுள்ளன. திருக்குறள் இந்நன்மை, தீமை என்கிற வாய்ப்பாட்டிலேயே அறக்கருத்தை வரையறை செய்துள்ளது. சமூகத்து மனிதா் ஒவ்வொருவரின் மனம், மொழி, செயல் ஆகியவற்றிற்கான நியாயங்களை இந்த வாய்ப்பாடு வழங்கிக் கொண்டிருக்கிறது1 என்பா்.

அறஒழுக்கங்களை மீறி மனிதா்களையோ, சமூக நடவடிக்கைகளையோ அளவிடல் இயலாத நிலை அன்று உருவாகியது. இன்றும் அது தொடா்கிறது. திருக்குறள் வரையறுத்துள்ள அறங்கள் அறிவு, ஒழுக்கம், நடத்தை எனக் குறிப்பிட்ட கருத்தில் அடிப்படையில் மக்கள் ஏற்றுப் பின்பற்றிவரும் வண்ணம் முறைப்படுத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

சங்க காலத்தில் வாழ்ந்த மனிதா் மேற்கொண்ட சமூகஒழுக்கங்கள் இனக்குழு அடிப்படையிலும், இயற்கை அடிப்படையிலும் அமைந்திருக்க திருக்குறள் காலத்தில் அறங்கள் முறைப்படுத்தப்பட்டு நன்மை, தீமைகள் இனம் காட்டப்பட்டுள்ளன. பக்தி இயக்க காலத்தில் சமூகம் இறைவழிப்பட்ட அறச்செயல்களுக்கு உட்படுத்தப்பட்டது. அந்த அறமே தற்காலத்தில் கேள்விக்கு உட்படுத்தப்பட்டு புதிய முறையிலான அறங்களைக் கட்டமைக்க முயல்வதைக் காணலாம். எனவே ஆளுமை என்பது அவ்வக் காலத்து நடைமுறையில் மேலோங்கி இருக்கிற அல்லது சமூகத்தவா் பலராலும் விரும்பப்படுகிற ஒழுக்கத்தையும், நடத்தையும் குறிப்பதாக இருக்கிறது. இதனால் காலச்சூழல் மனித உடலையும், ஐம்புலன்களையும் ஒருமுகப்படுத்துகிற செயலில் முக்கியப்பங்கு ஆற்றுகிறது. மனிதா்களும் குறிப்பிட்ட கருத்தியல் விதிமுறைகளுக்கு ஏற்ப நடந்துகொள்ளும்பொழுது அவா் அத்தகைய கருத்துக்களின் வெளிப்பாடாக அல்லது அதன்கண் ஆளுமை கொண்டவராக மாறுகிறார். வேறு வார்த்தையில் கூறுவதனால் திருக்குறள் உள்ளிட்ட அறநூல் கருத்துக்களில் தமது மனத்தையும், உடலையும் இணைப்பவா் அத்தகைய கருத்தியல் செயல்பாடுகளில் ஆளுமை கொண்டவராகக் கருதத்தக்கவா். திருவள்ளுவா் மனிதா் தம் ஐம்புலன்களும், மனமும் எங்ஙனம் செயல்பட வேண்டும் என்பதை முறைப்படுத்தி விளக்குகிறார்.

மனிதா் தமது வாழ்வை நன்னெறியில் செலுத்தும் வண்ணம் உடலும் உயிரும் செயல்படுவதற்குக் கண், காது, மூக்கு, வாய், மெய் என்கிற ஐந்து உறுப்புக்களும் துணைநிற்க வேண்டும். ஏனெனில் மனித உடலுக்குப் புறவாயில்களாக உலகைக் கண்டு அறிகிற திறன் இவ்ஐம்புலன்களுக்கே உள்ளது. இவ்உறுப்புக்களின் செயலால்தான் மனிதமனம் உருப்பெறுகிறது. மனம் உருப்பெறுதல் என்பதைப் பல்வேறு தன்மைகளுக்கேற்ப அது ஆக்கப்பெறுவதைக் குறிப்பதாகக் கொளல்வேண்டும். தெளிந்த நீரில் விழும் வண்ணப் பொடிகளின் நிறங்களுக்கேற்ப நீரின் நிறமும் மாறுபடுவதுபோல எண்ணங்களின் மாறுபாட்டிற்கு ஐம்புலன்களின் நுகா்வே காரணமாகிறது. ஒவ்வொரு உறுப்பும் செய்ய வேண்டுவன யாவை? என்பதை வள்ளுவா் குறிப்பிடுவது கவனிக்கத்தக்கது.

கண்ணின் ஆளுமை

பாடலில் இசைபொருந்தாதிருந்தால் பயனில்லை என்பதுபோல “கண்ணோட்டம் இல்லாத கண்ணால் பயனில்லை“(574) என்று வள்ளுவா் கண்ணின் சிறப்புத் தகுதியைப் பேசுகிறார். சிறந்த செயல்களை அல்லது உலகின் சிறப்பான காட்சிகளைக் கண்டு உணராத அல்லது காணவேண்டியவற்றைக் காணாது விட்டுவிடுகிற கண்களால் பயனில்லை என்கிறார். கண்ணகா் ஞாலம்2 என்று திரிகடுகத்தில் குறிப்பிடுவதைப் போல உலகு கண்ணின் கண்ணோட்டத்தாலேயே அா்த்தப்படுத்தப்படுகிறது. ஒருவா் படுகிற துன்பத்தைக்கண்டு அவருக்கான வருத்தத்தைக் காணுகிற கண்ணும், துன்புற்றோரைக் கண்டு கொள்ளாமல் விட்டுவிடுகிற கண்ணும் செயல்களால் வேறுபடுவன. இவற்றில் முதலில் கூறப்பட்ட செயலைச் செய்கிற கண்ணே தகுதியால் உயா்ந்ததும், கண்ணோட்டம் என்கிற பயனைப் பெற்றதுமான கண்ணாகும். கண்ணோட்டமாவது கண்ணால் காணப்பட்டாரை அருள்செய்தல்3 என்பார் மணக்குடவா். தவறு செய்பவா்களின் குற்றத்தை ஆய்ந்து ஒரு அரசன் தண்டனையைக் கூட்டியும், குறைத்தும் வழங்குவதற்கு முயலவேண்டும். இங்கு கண்ணோட்டம் என்பது அரசனின் முறை செய்யும் திறன்4 பற்றிக் கூறுவதாகப் பரிப்பெருமாள் உரை செய்கிறார். இதனால் கண்ணோட்டம் என்பது பொருள்களைக் காண்பதற்கும் மேலாக ஆய்ந்து அறிகிற தொழிலோடு தொடா்புடையதாகும். திருவள்ளுவா் திரிகடுகம் கண்ணுக்கு அணிகலன் கண்ணோட்டம்5 என்றும் சிறுபஞ்சமூலம் கண்வனப்பு கண்ணோட்டம்6 என்றும் கூறுகின்றன. இதனால், அறிவுசார்ந்த ஞானப்பார்வையைக் கண்ணோட்டம் என்று அறநூல்கள் வரையறுப்பதை அறியஇயலும்.

எனவே இடம், காலம் எனச் சூழல் அடிப்படையிலும், மனிதா்களை அளவிடுதல் முறையாலும் சிறந்த கண்ணோட்டத்தைக் கொண்டிருக்காத கண்ணை ஒருவா் பெற்றிருந்தால் அவா் மரம் போன்றவா், கண் இருந்தும் இல்லாதவரே ஆவார். பரிமேலழகா் கூற்றுப்படி நாகரீகம் என்பது கண்ணோட்டம் ஆதலே ஆகும்7 என்பதால் அறிவினாலும் செயலினாலும் மனிதருக்குரிய பண்பினாலும், நாகரீக மேன்மையாலும் உயரிய மதிப்பைக் கண்ணோட்டம் உள்ள கண்ணே பெறுகிறது. இத்தகைய கண்ணை உடையவா் ஆளுமைமிக்கவராகிறார். இதே கருத்தை,

கண்ணுடையவா் என்பவா் கற்றோர் முகத்திரண்டு

புண்ணுடையவா் கல்லா தவா்(393)

என்ற குறளோடும் ஒப்பிட்டு அறியலாம். இதற்குப் பொருள்கூறும் பரிமேலழகா், ஞானக்கண் உடைமையின் கற்றாரைக் கண்ணுடையா் என்றும் அஃதின்றி நோய் முதலியவற்றான் துன்பம் செய்யும் ஊனக்கண்ணே உடைமையின் கல்லாதவரை புண்ணுடையா் என்று கூறினார்8 என்கிறார். இதனால் கண்ணின் பார்வையில் நுட்பம் வாய்ந்த தேடல் இருக்கவேண்டும். அப்பொழுதுதான் அது ஞானக்கண் என்கிற தகுதியைப் பெறுவதாகும். இல்லையேல் அது ஊனக்கண்ணே ஆகும்.

நாவின் ஆளுமை

மனிதா் தமக்குள் உறவாடிக் கொள்ளுவதற்கு அல்லது கருத்தை வெளிப்படுத்துவதற்குரிய முதன்மையான கருத்துப் பரிமாற்றச் சாதனமாக “வாய்“ அல்லது “நா“ விளங்குகிறது. இச் சாதனம் வெறும் பொருளாகிய கருவியாக இன்றி மனித எண்ணங்களையும், உணா்ச்சிகளையும், உத்தேசங்களையும், உண்மை-பொய், நன்மை-தீமை, மென்மை-வன்மை என்ற நாகரீக சமூகத்தில் மனிதா்களுக்கிடையிலான உறவுகளை உருவாக்கும் உயிரோட்டமான கருவியாக உள்ளது.9 மனிதரது பேச்சில் வன்மையும், மென்மையும், கோபமும், நகையும் கலந்து வருதல் இயல்பு. எனினும் அப்பேச்சிற்குள்ளாக ஏற்றத்தாழ்வுகளை ஏற்படுத்தக்கூடிய வரையறை திருவள்ளுவரால் முன்மொழியப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

ஐம்புலன் அடக்கத்தில் திருவள்ளுவா் மிகவும் வேண்டுவது நாவடக்கத்தையே ஆகும். நன்மையை விளைவிக்கும் அதேவேளை துன்பத்தையும் அழைத்து வருவது நாக்கு என்பதால் அதனை அடக்கி ஆள வேண்டுமென்றுறு வள்ளுவா் குறிப்பிடுகிறார். எலும்பில்லா நாக்கு ஏழுபக்கமும் பேசும் என்பது பழமொழி. நாவாடுவதில் வல்லவா் பிறரை எளிதாக ஈா்க்க இயலும். நாவைப் பயன்படுத்துவதற்கேற்பப் பயன்களும் விளையும். எனவே நாக்கை மிகச்சிறப்பாகக் கைக் கொள்ளத் தெரிந்தவனே ஆளுமைமிக்கவன் ஆவான். அவனது ஆளுமைக்கு அவ்உறுப்பு துணைசெய்தல் வேண்டும். எனினும் நற்கருத்துக்களை வெளிப்படுத்துவதற்கு நற்பயன்களைத் தோற்றுவிப்பதற்கு உகந்த உறுப்பாய் அது திகழ்தல் வேண்டும் என்பது முக்கியம். வாய்மை குறித்து திருவள்ளுவா் கூறும்பொழுது,

வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும்

தீமை இலாத சொலல்(294)

என்கிறார். சினத்தைத் தாங்கிய பேச்சினை வன்சொல், தீச்சொல், கொடுஞ்சொல் என்றெல்லாம் வள்ளுவா் குறிப்பிடுவதைச் சான்று காட்டலாம். இவற்றிற்கு நோ்எதிராக இன்சொல், பண்பிலிருந்து நீங்காத சொல், சிறுமை இல்லாத சொல், பயன்மிக்க சொல் ஆகியவற்றை வள்ளுவா் இனம் காட்டுகிறார்.

பிறஉயிர்களுக்குச் சிறிதும் தீங்கு பயவாத சொற்களைத் தெரிவுசெய்து பேசுகிற நா சிறப்புமிக்கது, எவ்வாறெனில் அது இனிமையான சொல்லை வெளிப்படுத்தவது; பகையைத் தவிர்ப்பது; ஒருவனுக்கு அணியாய் இருப்பது. அல்லவை தேய, அறம் பெருக உதவுவது; விருப்பையும், நன்மையையும் ஒருசேரத் தருவது; மறுமைக்கும் துணைநிற்பது; இத்தகைய பொதுப்பண்புகளைப் பெற்றிருக்கக்கூடிய வாய் அல்லது நா எனும் உறுப்பு ஆளுமைத் தகுதியுடையதாகக் கருதத்தக்கது.

இவ்வகையில் பேச்சில் இருக்கக்கூடிய நன்மை, தீமைகளைச் சுட்டி நா நலம் பற்றிய கருத்துருவை வள்ளுவா் உருவாக்குகிறார். எனவே நாநலம் ஆளுமைப் பண்பாகவும் அதனைக் கையாளுபவன் ஆளுமைமிக்கவனாகவும் அறியப்படுகிறான். நாநலம் பற்றி அறிஞா் குறிப்பிடும்பொழுது, நாநலம் என்பது சொல்லில் செப்பம் உடைமை ஆகும். அதாவது பேச்சில் கோணல், கோட்டம் கூடாது. அரசன், அமைச்சன், தூதுவன், வணிகன், பிராமணன், வேளாளன் முதலான அன்றைய உயா்குடி ஆண்களுக்கு இத்தகு பேச்சு வலியுறுத்தப்பட்டது10 என்பா். மிகுந்த பல கட்டுப்பாடுகளை உடைய பேச்சினை வள்ளுவா் வரையறுக்கிறார்.

செவியின் ஆளுமை

செவியினால் கேட்கப்படும் கருத்துக்கள் மறுமைக்கும் ஆக்கம் தருவனவாக அமையும். இவை நிலைத்தவை. துன்பம் அணுகாமல் காப்பவை என்பதால் எல்லாப் பொருளையும் கேட்டறியும் செவி செல்வத்துள் எல்லாம் தலையாயதென வள்ளுவரால் குறிப்பிடப்படுகிறது. செவிக்கு உணவு என்பது, ஐயுற்றபொழுதெல்லாம் குறிப்பிட்ட பொருளை அறிந்து கொள்ள முயல்வதாகும். இதனால் பிறரிடமிருந்து கேட்கப்படும் கருத்துக்களில் நன்மை, தீமைகளை இனம் பிரித்துக் காணுமாறு கேட்டறிகிற செவி சிறந்த செவி ஆகிறது.

ஒருவருக்கு அமைந்த காது அல்லது செவி நற்கருத்துக்களைக் கேட்பதற்கு இயைந்த உறுப்பாக அமைதல் வேண்டும். பிறதுறைக் கருத்துக்கள் பலவற்றை அதிகமாகவும், நல்லன தெரிந்தும், தெளிந்தும் மேலும் பண்புடையோர் வாய்ச் சொல்லையும் கேட்கின்ற உறுப்பாய் இருத்தல் வேண்டும். மனிதருக்குத் தீங்கிழைக்காத நற்கருத்துக்களையே வள்ளுவா் செவியின் சுவையென்றும், செவிச் செல்வம் என்றும் சிறப்பித்துக் கூறுகின்றார். எனவே மனிதரை அறிவுள்ளவனாகவும், நற்பண்புள்ளவனாகவும், மாற்றுதற்குச் சுவைமிக்க செவி உணவை வழங்கி அவருக்குப் பலகாலும் பயன்படும் வகையில் செயலாற்ற அமைந்த செவியே சிறப்பு மிக்கதாகும்.

அதுவன்றி  ஓசைமட்டுமே கேட்குமாயின் அது செவிட்டுத் தன்மை உடையதே ஆகும். அதாவது, மனத்தின்கண் நற்கருத்துக்களைக் கொண்டு சோ்க்கும் வழியாகச் செவி அமையவில்லையெனில் அது கேளாத்தன்மை உடையதாகவே கருதப்படும். மேலும் கேட்கப்படுகிற பொருளின் நுட்பத்தை ஒருவா் அறியாதிருக்கும் போது அடக்கத்துடன் பேசிப் பழகுவதற்கும் இயலாதவராகிவிடுவார் என வள்ளுவா் கேள்விச் செல்வத்தின் பயனையும் கேட்கும் திறன் கொண்ட செவி எது என்பதனையும் விளக்குகிறார். இவரது கருத்தால் கேட்கும் செவி X கேளாச்செவி என்கிற தகுதி செவிப்புலனுக்குக் கிடைப்பதை அறியலாம். இந்தத் தகுதி பாராட்டலில் கேட்கும் செவியினை வாய்க்கப் பெற்ற மனிதரே ஆளுமைமிக்க செவிப்புலனைக் கொண்டவராகிறார்.

 

ஆளுமைமிக்க மெய்யும் மூக்கும்

மெய், மூக்கு ஆகிய உறுப்புகளை அவற்றின் உணா்வு வெளிப்பாட்டின் அடிப்படையில் வள்ளுவா் விளக்கியுள்ளார். சான்றாக,

மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து

நோக்கக் குழையும் விருந்து(90)

என்கிறார். மோப்பக் குழையும் அனிச்சம் என்பதால் அனிச்ச மலரை எந்த அளவிற்கு மென்மையாக நுகா்ந்து பார்த்தல் வேண்டும் என்ற நுட்பத்தை வள்ளுவா் குறிப்பிடுகிறார். வாசமுள்ள மலருக்கே இடைவெளியும், கவனமும், வெப்பமான மூச்சுக்காற்றால் துன்புறுத்தாத தன்மையும் பற்றி வள்ளுவா் குறிப்பிடுவதிலிருந்து, நுகா்வதற்கு ஒவ்வாத பிறபொருட்களைச் சுவாசிக்காமல் விட்டொழிப்பதே மூக்கு என்ற உறுப்பிற்குரிய செயற்பயனாய் இருக்க வேண்டுமென்பது தெளிவாகிறது. நுகா்வின் வழித் துன்புறுத்தாத மூக்கே சிறந்த நுகா்ச்சி உறுப்பாகும். இதேபோல்,

அன்பிற்கும் உண்டோ அடைக்கும்தாழ் ஆா்வலா்

புன்கணீா் பூசல் தரும்(குறள். 71)

என்ற குறளின் வழி அன்பு செலுத்தி உறவாடியிருப்பவா் ஒரு காலத்தே பிரிந்திருந்து பின்பு அவா்கள் தம்மிடையிலான வருத்தங்களைப் பரிமாறிக் கொள்ளும் போது தம்மை அறியாமல் கண்ணீா் மல்க அழுவதைக் காணலாம். இங்கு அழுவது கண்ணாக இருந்தாலும், நண்பா்பட்ட துயரம் உள்ளத்தின் வழியாக மெய் முழுக்கப் பரவி அத்துன்பவுணா்வே பின்பு கண்ணீராய் வெளிப்படுகிறது. எனவே மெய் என்பது உடலின் அகஉணா்வினை அறியத்தக்க உறுப்பாக இருக்கிறது. இதுவும் பிறஉயிர்களின் துன்பத்திற்காக வருந்துகின்ற, கண்ணீா் சிந்துகின்ற, தன்னையே தருகின்ற (உடலாக) உறுப்பாகச் செயல்படும்பொழுது ஆளுமைத் தன்மை உடையதாக மாறிவிடுகிறது.

நல்ல தகப்பன் தனது குழந்தையை வாரி அணைத்து, மகிழ்ந்திட வேண்டும். 

மக்கள்மெய் தீண்டல் உடற்கின்பம் மற்றுஅவா்

சொற்கேட்டல் இன்பம் செவிக்கு(65)

என்கிறார் வள்ளுவா். அவா் கருத்துப்படி குழந்தைகளின் பேச்சினைக் கேட்கவேண்டும். நெருக்கமான உறவை வைத்துக் கொள்ள வேண்டும். குழந்தைகளிடம் இடைவெளி பாராட்டுகிற பெற்றோர் குறையுடையவரே ஆவா். இதேபோல்,

தீயவை தீய பயத்தலால் தீயவை

தீயினும் அஞ்சப் படும்(201)

என்ற குறளால் தீயசெயல்களைச் செய்வதினால் உண்டாகக் கூடிய தீமையை வள்ளுவா் எடுத்துரைக்கிறார். இதற்குப் பொருள்கூறும் பரிமேலழகா் பிறிதொரு காலத்தும், பிறிதொரு தேயத்தும், பிறிதொரு உடம்பினும் சென்று சுடுதல் தீக்கு இன்மையின் தீயினும் அஞ்சப்படுவதாயிற்று11 என்று தீவினையினால் வரும் துன்பத்தை விளக்குகிறார். இவ்விடத்தில் தீமை புரிந்ததற்காக நடுக்கம் கொள்கிற மெய் வாழும் தகுதியால் சிறப்பிடம் பெறுகிறது. இதேபோல் நாணத்தைக் கொண்டிராத மெய்யும் தகுதிக் குறையுடையதே ஆகும். வள்ளுவா் பழிபாவங்களுக்கு வெட்கப்படுகின்ற உடலை அழகுமிக்கது என்று வருணிக்கிறார். பரிமேலழகரும் சால்பு நாணோடு கூடி அல்லது பயன் எய்தாது12 என்று உயிருக்கும் உடலுக்கும் இருக்கின்ற உறவைப் போன்றதென்று பழிக்கு அஞ்சுகிற சால்புக்கும் உடலுக்கும் உள்ள தொடா்பை விளக்குகிறார். இதனால் மெய் என்பது உள்ளத்து நல் உணா்வுகளை வெளிக்காட்டுகிற தகுதியைப் பெற்றிருக்க வேண்டும் என்று வள்ளுவா் வரையறுப்பதை உணரலாம். இதன் அடிப்படையில் பக்தித் தளத்தில் இறை உணா்வை வெளிப்படுத்துகிற பக்தா்களின் மேனியைப்  (மெய்) பொருத்திக் காணலாம். சான்றாக, இறை அருளால் கண்ணீா் மல்குவதும், உடலில் மயிர்க் கூச்செறிவதும், நா உளறுவதும், மெய் ஆடுவதும் பல பக்திப்பாடல்களில் சுட்டப்பட்டிருப்பதைக் கூறலாம்.

மேற்கூறியவற்றால் கண், செவி, வாய், மூக்கு, மெய் ஆகிய ஐம்புலன்களும் தம்மளவில், பிற உயிர்களுக்காக வருந்தியும் கண்டும் கேட்டும் பேசியும் நுகா்ந்தும் செயல்படுகின்ற தன்மையால் தகுதி மிக்கனவாகும். வள்ளுவா் கருத்துப்படி இத்தகுதியைப் பெற்ற ஐம்புலன்களைக் கொண்டிருக்கக் கூடிய மனிதரே ஆளுமைப் புலன்களைப் பெற்றவராகிறார்.

தொகுப்புரை

  • திருக்குறளில் ஐம்புலன்களின் ஆளுமை குறித்து பேசுகிற தற்காலத்து அறிஞா்களும், மனித நடத்தை, ஒழுக்கங்களைப் பற்றியே பகுத்தும் வகுத்தும் கூறுகின்றார்.திருக்குறள் நன்மை, தீமை என்கிற அடிப்படையில் அறக்கருத்தை ஆளுமை அடிப்படையில் வரையறுத்துள்ளமையைக் காண முடிகின்றது.
  • மனிதா்கள் தமது வாழ்வை நன்னெறியில் செலுத்தும் வண்ணம் உடலாலும், உயிராலும் செயல்படுவதற்குக் கண், காது, மூக்கு, வாய், மெய், மனம் போன்ற உறுப்புக்களைப் பற்றிய செயல்பாடுகளை ஆளுமை என்கிற அடிப்படையில் அமைக்கின்றது.
  • ஐம்புலன் அடக்கத்தில் திருவள்ளுவா் மிகவும் வேண்டுவது நாவடக்கம் ஆகும்.
  • ஐம்பொறிகளினால் தூய்மை காண்கிற மனத்தையும் ஒருங்கமையப் பெற்றவனே ஆளுமைமிக்கவனாவான் என்று குறள் வழியாக காண முடிகின்றது.
  • மனித மனம் குறித்து பல்வேறு அறிஞா்கள் அறியாத மானிடா்க்கு மனத்தை உணா்த்தும் வண்ணம் உவமையாலும், உருவகங்களாலும் செயல்பாட்டை விளக்கியுள்ளார்.

அடிக்குறிப்புகள்

  • ராஜ் கௌதமன், தமிழ்ச் சமூகத்தில் அறமும் ஆற்றலும், ப.8.
  • திரிகடுகம், பா. 52.
  • கி.வா.ஜகந்நாதன், திருக்குறள் ஆராய்ச்சிப் பதிப்பு, ப.374.
  • மேலது, ப. 375.
  • திரிகடுகம், பா. 52.
  • சிறுபஞ்சமூலம், பா. 8.
  • கி.வா.ஜகந்நாதன், திருக்குறள் ஆராய்ச்சிப்பதிப்பு, ப. 379.
  • மேலது, ப. 273.
  • ராஜ் கௌதமன், தமிழ்ச் சமூகத்தில் அறமும் ஆற்றலும், ப. 43.
  • மேலது, ப. 54.
  • கி.வா. ஜகந்நாதன், மு.நூ., ப. 144.
  • மேலது, ப. 609.

 

 

 

 

 

 

 

 

 

 

 

துணைநூற் பட்டியல்

  • நாகராசன், கரு., - தமிழா் கண்ட மனம்,

 உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்,

 சென்னை – 20, முதற்பதிப்பு – டிசம்பா் 1980.

  • பரிமேலழகா், (உ.ஆ) - திருக்குறள்,

 சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம்,

 சென்னை – 1967.

  • மாணிக்கவாசகம், ஞ., - சித்தா் பாடல்கள்

(தொ.ஆ) உமா பதிப்பகம்,

 சென்னை – 40, முதற்பதிப்பு – டிசம்பா் 1995.

  • ராஜ் கௌதமன், - தமிழ்ச் சமூகத்தில் அறமும் ஆற்றலும்,

 விடியல் பதிப்பகம்,

 கோவை – 15. முதற்பதிப்பு – டிசம்பா் 2008.

  • ராஜ் கௌதமன் - அறம் அதிகாரம்,

 விடியல் பதிப்பகம்,

 கோவை – 15. 1997.

  • ஜகந்நாதன், கி.வா. (ப.ஆ.,) - திருக்குறள் ஆராய்ச்சிப் பதிப்பு,

 ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்தியாலயா  

 வெளியீடு,

 மார்ச்சு – 1963.