ஜூலை 2024 இதழுக்கு ஆய்வுக்கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன

வாழ்வியல் அறங்களில் திருவள்ளுவர் - திரு.வி.க. ஒப்பீடு

முனைவர் ஞா. சுஜாதா, தலைவர் மற்றும் உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, த.கி.மு. மகளிர் கல்லூரி (தன்னாட்சி), சாயிநாதபுரம், வேலூர் – 1 04 Feb 2021 Read Full PDF

ஆய்வுச்சுருக்கம்:

அறம் என்னும் சொல்லுக்கு நன்று என ஒரு பெயர். ‘வீழ்நாள் படாமை நன்று ஆற்றின்’ என்னும் குறளில் குறிக்கப்படுகின்றது. அதிலிருந்து நோக்கினால், நற்செய்கைகளைத்தான் அறன் என்று சுட்டுவது புலனாகும். அறம் அழியாதது. காரணம், அவ்வழியாமையோடு, செய்தவனை நாடி ஒரு நெறிகொண்டு எக்காலத்தும் தம் பயனைத் தந்து இன்பம் பெருக்கி வரும். இந்த இயக்கம் அதற்கு இறைவனியக்கத்தாற் கிடைக்கிறது. அறத்தை இதனால் அறத்தாறு என்று நெறிப்பெயரில் திருவள்ளுவர் ஓர் எடுத்துக்காட்டுடன் விளக்குகின்றார். முன்னோர்களால் உணர்த்தப்பட்ட அறம், பொருள், இன்பம் மூன்றில் அறம் மட்டுமே இப்பிறப்பிற்கு மட்டுமல்லாது மறுபிறப்பிற்கும் நன்மையைத் தருவதாகும். ஆகவேதான் மற்ற அறங்களைக் கூறுவதற்கு முன் அதன் வலிமையை எடுத்துரைத்துள்ளார் திருவள்ளுவர். ‘அறன் வலியுறுத்தலாவது அறம் வலிமையுடைத்தென்பதைனை அறிவித்தல்’ என்று மணக்குடவரும், முனிவரால் உணர்த்தப்பட்ட மூன்றில் அறமே வலியுடைத்தென்று கூறல் எனப் பரிமேலழக்ரும் உரை கூறியுள்ளனர். திரு.வி.க. அறம் – அறன் தீக்குணங்களை அறுப்பது, மனமாசற்ற நிலை, எல்லா நற்குணங்களும் சேர்ந்த ஒன்று. அறன் ஒரு மரம் போன்றது. என்றும், மற்ற எல்லா அறப்பண்புகளும் இதன் உறுப்புக்கள் என்றும் உரை கூறியுள்ளார் தனித்தனியாக வாழும் வாழ்க்கையில் உணரும் உணர்வையெல்லாம் இந்த இல்லற வாழ்விலும் உணரலாம். ஒருவர் குறை மற்றொருவர்க்கு நன்கு புலப்படும். ஆகையால் இன்னும் தெளிவாக மனநிலையைப் புரிந்த்கொள்ள வாய்ப்பு உண்டு. ஆகையால், மனம் வாழும் நிலையையும் அதற்குரிய அறநெறியையும் தனிவாழ்க்கை வாயிலாக விளக்க வந்த திருவள்ளுவர், முதலில் இல்வாழ்க்கையை விளக்கியுள்ளார். பிறகு அதற்கு சார்பானவைகளையும் விளக்கியுள்ளார். இந்தப் பயிற்சியின் பயனாகப் பரந்த அன்பு அருளாக வளர்ந்து பற்றற்ற வாழ்க்கை வாழ்வதே துறவறம். ஆகையால், அந்தத் தனிவாழ்க்கையையும், அதன் பிறகு விளக்கியுள்ளார். இவற்றை ஆராய்ந்தால் திருவள்ளுவர் அறத்துப்பால் முழுவதிலும் மனத்தின் வாழ்வையே விளக்கி அது தூய்மைப்படுவதற்கு வேண்டிய அறநெறியை அறிவுறுத்துகின்றார் என்பது தெளிவாகும்.இக்கட்டுரையில் வாழ்வியல் அறங்களில் திருவள்ளுவர்  மற்றும் திரு.வி.க. ஒப்பீடு குறித்து ஆராயப்பட உள்ளது.

திறவுச் சொற்கள்: திருவள்ளுவர் , அறம் , திரு வி க , வாழ்வியல், நீதி நூல்கள்

முன்னுரை

வாழ்க்கை மிகப்பெரிய கலை வாழத் தெரிந்தவர்களாக

விளங்குதலே சமுதாயத்திற்குச் செய்யத்தக்க நல்ல

தொண்டு நம்மைப் பார்த்துப் பிறர் கற்குமாறு

நாம் ஒரு சமூக நூலாகப் பயன்படுவோம் (மு. வரதராசன்)

இலக்கியங்களே அவைதோன்றிய காலத்தின் மக்கள் வாழ்க்கை நிலையைக் காட்டும் காலக் கண்ணாடியாகவும் அடுத்து வரும் காலத்தின் வழிகாட்டியாகவும் விளங்குகின்றன.

வாழ்வியம் அறம் – ஒப்பீடு

கிறித்துப் பிறப்பதற்கு முன்பே தமிழ்நாட்டில் தமிழர்கள் அரசியல், கலை, இலக்கியம், பண்பாடு, தொழில், நாகரிகம் ஆகியவற்றில் சிறந்திருந்தனர் என்பது இலக்கியங்கள் வழி அறியலாகும் உண்மையாகும். அவ்விலக்கியங்களுள் சிறப்புற்று அன்று முதல் இன்றுவரை மக்களின் வாழ்க்கையோடு ஒன்றி நிற்பது திருக்குறள். திருக்குறளில் திருவள்ளுவர் வலியுறுத்தும் வாழ்வியல் அறங்களை இருபதாம் நூற்றாண்டின் உரையாசிரியரான திரு.வி.க. வள்ளுவரோடு ஒன்றியும் மற்ற உரையாசிரியர்களிடமிருந்து சிறுது வேறுபட்டும் மதிப்பீடு செய்துள்ளார்.

தருமர், மணக்குடவர், தாமத்தர், நச்சர், பருதி, பரிமேலழகர், திருமலையர், மல்லர், பரிப்பெருமாள், காலிங்கர், எல்லையுரை செய்தாரிவர் என்ற பழைய வெண்பா வழி திருக்குறளுக்கு முதலில் உரை எழுதியோர் பதின்மர் என அறிய முடிகின்றது. மேலும் அது தோன்றியது முதல் இன்றுவரை பல உரையாசிரியர்கள் உரை எழுதியுள்ளனர். இவர்களில் பலரது உரை இன்று முழுமையாகக் கிடைக்கவில்லை என்றாலும் கிடைத்த உரைகளில் சிலரது உரையில் ஒன்றியும், சிலரது உரையில் வேறுபட்டும் முதல் நூறு குறட்பாக்களுக்கு உரை எழுதியுள்ளனர் திரு.வி.க. மற்ற நூல்களில் திருக்குறளின் கருத்துக்களைப் பெரிதும் கையாண்டு மதிப்பீடு செய்துள்ளார். இவர் திருக்குறள் அறவழி வாழ்வை மேற்கொண்டு பயன் பெற்றவர் என்பது உணரத்தக்கதாகும்.

அறன் வலியுறுத்தலின் அவசியம்

திருவள்ளுவர் அறத்தை வலியுறுத்துவதற்கென்றே அறன் வலியுறுத்தல் என்ற அதிகாரம் படைத்துள்ளார். இதன் முதல் குறளில் சிறப்பையும் செல்வத்தையும் அறம் தரும் என்ற குறிப்பு வருகின்றது. இதில் செல்வம் என்பது பொருள் குறித்து வருதலால் சிறப்பு என்பது அருளைக் குறித்தது என்று கொள்ளவேண்டும். தலைப்பாடு என்று பொருள் கொண்டால் அருள் தலைமை என்பது கருத்தாகும்.

மக்களில் சிலர், அறமும் செய்யாமல் மறமும் செய்யாமல் சும்மா இருந்தால் ஒரு தொல்லையும் இல்லை என்று நினைப்பவர்களாக இருக்கிறார்கள். அறம் செய்யாதவர்கள் சும்மா இருக்கமுடியாது. யாரும் அறமோ மறமோ ஏதாவது ஒன்றில் ஈடுபடவே நேரும். அறத்தைச் செய்யாமையால் மட்டும் தீங்கு வரும் என்பதில்லை; அறத்தை மறந்திருந்தாலே தீங்குதான் என்பதைத் திருவள்ளுவர் இரண்டாவது குறளில் தெரிவிக்கின்றார்.

மறவாமல் செய்யவேண்டுமென்றால் அறத்தை இயன்ற அளவிலாவது இடைவிடாமல் வாய்ப்புள்ளபோதெல்லாம் செய்து வரவேண்டும் என்பதனை, ‘ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே, செல்லும் வாயெல்லாம் செயல்’ என்று அதனை அடுத்த குறளில் தெரிவிக்கின்றார்.

‘மனத்துக்கண் மாசிலனாதல் அனைத்து அறன்’ என்பதில் அறன் என்று வரும் சொல் அறச்செய்கை என்னும் பொருளுக்குரியது. முன் குறளில் கூறிய அறச்செயல், மன அழுக்கு அற்றிருக்க வேண்டும் என்பது இந்நான்காம் குறளின் கருத்து. ஐந்தாவது குறளில் வரும் அறன் என்னும் சொல்லும் அறச்செய்கையை உணர்த்தும். அதனால், அதன் வினைச்சொல் நடைபெறுவது என்னும் கருத்தில் இயன்றது என வந்தது.

அறம் என்னும் சொல்லுக்கு நன்று என ஒரு பெயர். ‘வீழ்நாள் படாமை நன்று ஆற்றின்’ என்னும் குறளில் குறிக்கப்படுகின்றது. அதிலிருந்து நோக்கினால், நற்செய்கைகளைத்தான் அறன் என்று கட்டுவது புலனாகும்.

அறம் அழியாதது. காரணம், அவ்வழியாமையோடு, செய்தவனை நாடி ஒரு நெறிகொண்டு எக்காலத்தும் தம் பயனைத் தந்து இன்பம் பெருக்கி வரும். இந்த இயக்கம் அதற்கு இறைவனியக்கத்தாற் கிடைக்கிறது. அறத்தை இதனால் அறத்தாறு என்று நெறிப்பெயரில் திருவள்ளுவர் ஓர் எடுத்துக்காட்டுடன் விளக்குகின்றார்.

முன்னோர்களால் உணர்த்தப்பட்ட அறம், பொருள், இன்பம் மூன்றில் அறம் மட்டுமே இப்பிறப்பிற்கு மட்டுமல்லாது மறுபிறப்பிற்கும் நன்மையைத் தருவதாகும். ஆகவேதான் மற்ற அறங்களைக் கூறுவதற்கு முன் அதன் வலிமையை எடுத்துரைத்துள்ளார் திருவள்ளுவர்.

‘அறன் வலியுறுத்தலாவது அறம் வலிமையுடைத்தென்பதைனை அறிவித்தல்’ என்று மணக்குடவரும், முனிவரால் உணர்த்தப்பட்ட மூன்றில் அறமே வலியுடைத்தென்று கூறல் எனப் பரிமேலழக்ரும் உரை கூறியுள்ளனர்.

திரு.வி.க. “அறம் – அறன் தீக்குணங்களை அறுப்பது, மனமாசற்ற நிலை, எல்லா நற்குணங்களும் சேர்ந்த ஒன்று. அறன் ஒரு மரம் போன்றது.”1 என்றும், மற்ற எல்லா அறப்பண்புகளும் இதன் உறுப்புக்கள் என்றும் உரை கூறியுள்ளார்.

வலி – என்பது வலிமை, ஆற்றல் என்றும், உறுத்தல் – அறிவுறுத்தல், தெரியச் செய்தல் என்றும் இரண்டும் இணைந்து வலியுறுத்தல் – வற்புறுத்தலுமாம் என அறன் வலியுறுத்தல் – அறத்தின் வலிமையை அறிவுறுத்தல், அறனை வற்புறுத்தல் என்றும், மேலும் எடுத்துரைத்துள்ளார்.

சிறப்பீனும் செல்வமும் ஈனும் அறத்தினூஉங்கு

ஆக்கம் எவனோ உயிர்க்கு2  

உயிருக்குச் சிறப்பையும் செல்வத்தையும் கொடுக்கும் அறத்தைவிட சிறந்ததொன்றில்லை எனத் திருவள்ளுவர் அறத்தினை வலியுறுத்தியுள்ளார்.

இல்வாழ்க்கையில் பெண் வாழ்வியல் அறம்

இல்வாழ்க்கை என்பதன் பொருள் ஒரு ஆணும் பெண்ணும் இணைந்து காதலால் கருத்தொருமித்து வாழும் வாழ்க்கையே இல்வாழ்க்கை என்பது காதல் வாழ்வைத் தானே குறிக்கின்றது. காதல் வாழ்க்கைப் பற்றி முழுமையாக திருவள்ளுவர் இன்பத்துப்பாலில் கூறியிருக்கும்போது அறத்துப்பாலில் கூறிய காரணத்தை ஆராய்வோமானால் காமத்துப்பாலில் காதலர் ஒருவருக்காக ஒருவர் தியாகம் செய்து வாழும் வாழ்க்கையைக் கூறியுள்ளார். ஆனால், அறத்துப்பாலில் இல்வாழ்க்கையில் காதலர் ஒருமனப்பட்டு விருந்தினர் முதலானவர்களுக்காகத் தியாகம் செய்து வாழும் வாழ்க்கையைக் காட்டியுள்ளார்.

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை

பண்பும் பயனும் அது

இல்வாழ்வோர் அறம்

இல்லறத்தில் தன்வாழ்க்கை இல்லையென்றும், துறவறத்தில் மட்டுமே தனி வாழ்க்கை உள்ளதென்றும், அந்தத் தனிவாழ்க்கையில் மட்டுமே அறத்திற்கு அடிப்படையான மனத்தூய்மை விளங்கும் என்றும், அதனால் இல்வாழ்க்கை இங்கு வேண்டாதது என்றும் சிலர் கூறலாம். ஆனால், இல்லறம் நடத்தும் கணவனும் மனைவியுமாகிய இருவரும் ஒத்த மனம் உடையவர் ஆதலின், கணவனோ மனைவியோ மறைத்து வாழும் வாழ்க்கைக்கு இங்கு இடம் இல்லை.

இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான்

முயல்வாருள் எல்லாம் தலை

அன்புடன் வாழ்வதே இல்வாழ்க்கையின் பண்பு. அறத்தைப் போற்றி வாழ்வதே இல்வாழ்க்கையின் பயன். அறநெறியில் இல்வாழ்க்கை நடத்தினால் போதும். வேறுவழியில் போய்ப் பெறத்தக்க பயன் ஒன்றும் இல்லை. அறத்தின் வழியோடு இல்வாழ்க்கை வாழ்கின்றவனே வாழ முயல்கின்றவர்கள். எல்லோரிலும் தலையானவன். ஆகவேதான் பதிவிரதனான இராமனையும் சீதாதேவியையும் மக்களில் தலையாய பண்புடன் விளங்குவதாக கம்பன் கவித்திறத்தால் அமைத்துக் காட்டுகின்றார்.

இல் அறம் அல்லது நல் அறம் அன்று

மனையாளுடன் கூடிவாழும் இல்லறமே நல்லறம். மற்ற வாழ்வு நல்லறமன்று என்று ஒளவையார் ஆத்திசூடியில் கூறியுள்ளார்.

இல்லறம் அறத்திற்கு வழிகாட்டி

திருக்குறள் வாழ்க்கைக்கு வழிகாட்டியாக அமைந்த நீதி நூல்களுள் தலைமை இடம் கொண்டது ஆகும். இக்கருத்தை மனதில் கொண்டே திரு.வி.க பெண்ணின் பெருமை அல்லது வாழ்க்கைத் துணை என்றும் மு.வ. திருவள்ளுவர் அல்லது வாழ்க்கை விளக்கம் என்றும் நூலுக்குப் பெயரிட்டுள்ளனர். ஒவ்வொரு மனிதனும் தனது வாழ்வில் திருக்குறளாய்த் திகழ்தல் வேண்டுமென்றே விளக்குகின்றார். மனித வாழ்க்கை செம்மையுற என்னென்ன அறங்கள் தேவையோ அவை அத்தனையும் திருக்குறளில் புதைந்துள்ளன. இவ்வுண்மையை உணர்ந்தே தமிழ்ப் புலவர்கள் பலரும் உரை எழுதி மகிழ்கின்றனர். அவர்கள் வரிசையில் திரு.வி.க. திருக்குறளுக்கு உரை எழுதியது முதல் நூறு குறளுக்கு மட்டுமே என்றாலும் திருக்குறள் அறத்தின் வழி வாழ்ந்த பெருமை அவருக்கு உண்டு.

ஆண் பெண் சேர்க்கையால் தன்னலம் அகற்றக்

காதலை இயற்கை கருவியாகக் கொண்டது;

சேர்க்கைக் கூட்டறம் போக்கும் தன்னலம்;

கூட்டறத் தொடக்கம் வீட்டில் என்பர்;

வீடு பதியாய் நாடாய் உலகாம்;

தன்னல ஒருத்தி தன்னல ஒருவன்

காதல் சேர்க்கை ஈதல் பிள்ளை;

பெற்றோ ரிடத்தில் உற்றால் தன்னலம்

பிள்ளை வளருமோ? உள்ளுக தியாகம்

தன்னலம் அருகும் அன்பு பெருகும்

இன்றும் திருமண விழாக்களில் திருக்குறளை ஓதி, அவ்வழி நடந்து இல்லறம் நல்லறமாகுக என்று பெரியோர் வாழ்த்துகின்றனர். ஆனால், எல்லோரும் அவ்வண்ணம் வாழ்வதில்லை. திரு.வி.க.வோ திருக்குறள் வழி வாழ்ந்தவர். ஆகவே அவரின் மதிப்பீடு திருக்குறளுக்கு மிகவும் பொருத்தம் உடையதாகும்.

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும்

தெய்வத்துள் வைக்கப்படும்

என்ற திருவள்ளுவரின் அற வாழ்வை மதிப்பீடு செய்துள்ளது மட்டுமல்லாது அவ்வழி வாழ்ந்ததன் பயனையும் வெளிப்படுத்தியவர். அவ்வழி வாழாது துன்புறும் மூர்க்கர்களுக்காகவே பல செய்திக்ளை எடுத்துரைக்கின்றார். 

குறள்வழி வாழ்தலின் மேன்மையைக் காந்தியடிகளைக் கொண்டு எடுத்துரைத்துள்ளார்.

எவ்வுயிர்க் குயிராம் ஈசன் இணையடி வாழ்க ஐயன்

செவ்விய வடிவ மாகுந் திருவருள் இயற்கை வாழ்க

அவ்வரு தொடர்பு கண்ட அடிகளார் காந்தி வாழ்க

இவ்வுல கெங்கும் அன்னார் எழில்நெறி வாழ்க வாழ்க

இல்வாழ்க்கையின் உண்மை அறத்தை உணர திருவள்ளுவர் கூறிய அறங்களை ஒற்றியே திரு.வி.க. மதிப்பீடு செய்துள்ளார்.

வாழ்க்கைத் துணைநலத்தில் பெண்ணிய அறம்

வாழ்க்கைத் துணை என்ற ஆறாம் அதிகாரத்தில் வாழ்க்கைத் துணையாகிய மனைவியின் அறங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. துணை என்ற சொல் உயர்ந்த பொருளைப் பற்றுதலைக் குறிக்கும். கடவுள் துணை என்பது போல, வாழ்க்கைத்துணை என்ற சொல் வாழ்க்கை நடத்துதலில் ஆணைக்காட்டிலும் பெண்ணே முதன்மையானவள் என்பதைக் குறிக்கிறது.

வள்ளுவர் செய் திருக்குறளை

மருவறநன் குணர்ந் தோர்கள்

உள்ளுவரோ மனுவாதி

ஒருகுலத்துக் கொருநீதி

என்ற மனோன்மணீயக் கருத்திற்குப் பொருந்தும் சிறப்புடையதாகத் திகழ்வது திருக்குறள்.

இக்கருத்தைக்கொண்டே இல்லறத்தில் ஆணுக்குத் துணையாக இருப்பவள் இல்லாள். அவனுடைய மனைவி இவளையே வாழ்க்கைத் துணை என்கின்றனர். அவனது வாழ்நாள் முழுவதும் அவனது இன்பதுன்பங்களில் பங்குகொண்டு அவனை வழிநடத்திச் செல்பவனே துணையாக அமைகின்றாள்.

துணை - பொருள்

துணை என்ற சொல்லுக்குப் பொருளாக இரண்டு, கூட்டாளி, ஒப்புமை, அளவு, புணர்ச்சி, வரையில் என்று நர்மதாலின் தமிழ் அகராதி குறிப்பிடுகின்றது. துணை என்ற சொல்லுக்குப் பொருளாக ஆதரவு ஆயுதமுனை, இணை, உதவி, ஒப்பு, சகாயம், சல்லியம், சோடு என்று நா. கதிரைவேற்பிள்ளை தமிழ்மொழி அகராதி குறிப்பிடுகின்றது.

 

துணை - மனைவி, உதவி செய்பவள்

துணைமை: உதவி, நீதிநெறி

துணை என்பது ஒருவருக்கு எல்லாவிதத்திலும் உதவிகரமாக இருப்பது. கோவலனும் கண்ணகியும் மதுரைக்குச் செல்ல வழித்துணையாக வந்தவர் கவுந்தியடிகள். சீதையும் இராமனும் காட்டிற்குச் செல்ல இலக்குமணன் துணையாக வந்தான். வாலி, சுக்ரீவன், குகன் வந்தனர். முருகனுக்குத் துணையாக வேலும் மயிலும் நின்று அரக்கர்களை அழித்தன.

ஆண், பெண் என்ற இருவரும் சேர்ந்து வாழும் வாழ்க்கை இல்வாழ்க்கை. அவ்வில்வாழ்க்கையில் ஓர் ஆண்மகன் தன்மனைவியோடிருந்து, தென்புலத்தார், தெய்வம், விருந்து, ஒக்கல் என்ற நான்வகையினரையும் காப்பதோடு தன்னையும் காத்துக்கொள்ள வேண்டியவனாகின்றான். 

எச்செயலைச் செய்வதற்கு முன்னும் அச்செயல் சிறப்பாக நடந்து முடிய இறைவனை வேண்டுவது இயல்பு. அதற்கு அடையாளமாகக் கடவுள் துணை என்று எழுதுவது மரபு. அவ்வாறு எழுதுவதன் பொருள் தன்னால் செய்யக்கூடிய அச்செயல், தடையின்றி சிறப்புற நடந்து முடிய வேண்டும் என்ற நோக்கோடு தனக்கு மிஞ்சிய சக்தியுடைய இறைவனின் துணை தேவை என்பதையே உணர்த்துகிறது. இங்குக் கடவுள் சக்தியானது அச்செயலைத் திறம்படச் செய்வதற்குத் தேவைப்படுகிறது. அச்சக்தி அவன் செய்கிறபொழுது ஏற்படக்கூடிய தங்கு தடைகளையெல்லாம் நீக்கும் வல்லமை வாய்ந்தது. எனவே அச்சக்தியின் துணை அவனுக்குப் பெரிதும் நன்மையே தருகிறது. அச்சக்தி அவனுக்கு அச்செயலை முடிப்பதற்குத் தேவைப்படுவதால் அதன் துணை அவனுக்கு அவசியமாகிறது. அதைப்போன்றே வாழ்க்கையைத் திறம்பட நடத்திச்செல்ல ஒரு ஆணுக்கு ஒரு வல்லமை படைத்த பெண்ணின் துணை தேவைப்படுகிறது. அப்பெண்ணின் துணையாகலேயே அவனுடைய வாழ்க்கை நலம்பெற அமையும் என்பதை உணர்த்தவே வள்ளுவர் வாழ்க்கைத்துணைநலம் என்ற அதிகாரத்தைப் படைத்துள்ளார். அவனின் துணைநலம் பெற அமையாவிட்டால் அவன் வாழ்க்கையும் நலமுடன் அமையாது வள்ளுவர் மற்றோரிடத்திலே,

வினைவலியும் தன்வலியும் மாற்றான்வலியும்

துணைவலியும் தூக்கிச் செயல்10 

என்கின்றார்.

ஆண் தன்னுள்ளத்திலெழுந்த காமமிகுதியைப் பொறுத்துக்கொள்ள முடியாதவனாய் மடல் ஏறி ஊர் மக்களின் துணையைக் கொண்டு தன் துணையை அடைகின்றான். இச்செயலின் மூலம் தனது காமத்தை அவனால் அடக்கி ஆளமுடியவில்லை என்பது புலனாகின்றது. ஆனால், பெண்ணோ கடல்போன்ற காமம் தன்னுள்ளத்தில் எழுந்தாலும் மடலேறுவதில்லை. அக்காமத்தை உள்ளத்தில் அடக்கிப் பொறுத்துக்கொள்கின்றாள். அதனால்தான் திருவள்ளுவர், இன்பத்துப் பாலில் நாணுத்துறவுரைத்தல் என்ற அதிகாரத்தில்,

கடலன்ன காமம் உழந்தும் மடலேறாப்

பெண்ணிற் பெருந்தக்க தில்11 

என்ற குறளில் பெருந்தக்கப் பிறப்பு பெண் பிறப்பு என்கிறார். இதனாலேயே ஆண் வலியைக் காட்டிலும் பெண் வலி பெரிதாக எண்ணப்படுகிறது.

முடிவுரை

வாழ்க்கைத் துணைநலம் என்ற அதிகாரத்தின் தலைப்புக்கு உரை எழுதிய உரையாசிரியர்கள் பல்வேறு கருத்துக்களை முன் வைக்கின்றனர். இருபதாம் நூற்றாண்டின் உரையாசிரியரும் பெண்ணியச் சிந்தனையாளருமான திரு.வி.கல்யாண சுந்தரனார் தமது திருக்குறள் விரிவுரையில் பல செய்திகளைப் புலப்படுத்துகின்றார்.

திரு.வி.கல்யாணசுந்தனரனார் பெண்ணியக் கோட்பாடுகள் பற்றிய பல கருத்துக்களைத் தருகையில் வாழ்க்கைத்துணையின் பெருமைகளைத் தமது பெண்ணின் பெருமை, முருகன் அல்லது அழகு, தமிழ்த்தென்றல் அல்லது தலைமைப் பொழுவுகள், திருக்குறள் விரிவுரை ஆகிய நூல்களில் குறிப்பிடுகின்றார்.

அடிக்குறிப்புகள்

  • திரு.வி.க., திருக்குறள் விரிவுரை, ப.347
  • குறள். 31
  • குறள்.45
  • குறள். 47
  • ஒளவையார், ஆத்திசூடி, ப.6
  • திரு.வி.க. பொருளும் அருளும், ப.71
  • குறள். 50
  • திரு.வி.க. காந்தியஞ்சலி, ப.1
  • சுந்தரனார், மனோன்மணீயம், ப.30
  • குறள். 471
  • குறள். 500

  துணைநூற்பட்டியல்

  • மல்லிகா.அரங்க., தமிழ் இலக்கியமும் பெண்ணியமும், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை, 2002
  • மெய்யப்பன்.ச., (ப.ஆ) திருக்குறள் மணக்குடவர் உரை, மணிவாசகர் பதிப்பகம், சென்னை, 2003
  • வரதராசன்.மு., திருவள்ளுவர் அல்லது வாழ்க்கை விளக்கம், பார் நிலையம், சென்னை, 1962
  • மகாலிங்கம்.ப., திரு.வி.க.வின் சமுதாய நோக்கு, செல்வம் பதிப்பகம், சென்னை, 1999.
  • சேயோன் (ப.ஆ), திருக்குறள் சிந்தனைக் களஞ்சியம், மயிலைத் திருவள்ளுவர் தமிழ்ச்சங்கம், சென்னை, 2002
  • வரதராசன்.மு., திரு.வி.க, ஏழாம் பதிப்பு, பாரி நிலையம், சென்னை, 1983.