ஜூலை 2024 இதழுக்கு ஆய்வுக்கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன

செந்தமிழ் இதழில் இலக்கண உரையாடல்கள்

கி.கிருஷ்ணமூர்த்தி, முழுநேர முனைவர் பட்ட ஆய்வாளர், உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம், தரமணி. 04 Feb 2021 Read Full PDF

நெறியாளர் :                          

முனைவர் து. ஜானகி

உதவிப் பேராசிரியர்

திருக்குறள் காட்சிக்கூடப் பொறுப்பாளர்

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்

தரமணி, சென்னை 

முன்னுரை

தமிழ் இதழியல் வரலாற்றை எழுதுகையில் அதனைச் செந்தமிழ் இதழிலிருந்து  தொடங்க வேண்டும். அந்த அளவிற்கு 1900 களின் முதன்மையான இலக்கியப் பங்களிப்பை ஆற்றிய இதழாகச்செந்தமிழ் இதழ் விளங்கியது. அரச அவைகளில் புலவர்கள் நிகழ்த்திய புலமைக் காய்ச்சல்களைத்  தாண்டிய அறிவுசார் விவாதம் இருபதாம் நூற்றாண்டில் ஆராய்ச்சி இதழ்களுக்கு மாறியது. அவ்வகையில், அரசவை என்ற விவாத வெளி ஆராய்ச்சி இதழாக மாற்றமடைந்த இருபதாம் நூறாண்டின் தொடக்கத்தில் தமிழில் அந்த இடத்தைப் பற்றிக்கொண்ட இதழாகச் செந்தமிழ் இதழினைச் சுட்டலாம். 

அவ்வகையில்,இக்கட்டுரை செந்தமிழ் இதழில் 1903 ஆண்டு முதல் 1915  ஆண்டு வரை வெளியான இலக்கண விவாதங்களையும் அதன் காரணமாக தமிழ் இலக்கணப் புலத்திற் நிகழ்ந்த சில முதன்மையான் முடிவுகளையும் குறித்து விவாதிக்க முற்படுகிறது.

 செந்தமிழ் இதழின் தோற்றம்

மதுரைத் தமிழ்ச்சங்கத்தின் வெளியீடாக திங்கள் இதழ் ஒன்று தொடங்கப்பட்டது. இவ்விதழிற்குத் தொடக்கக் காலத்தில் இரா. இராகவையங்கார் அவர்களும் அவர்களின் காலத்திற்குப் பின்னர் மு.இராகவையங்கார் அவர்களும்  ஆசிரியர்களாக அமைந்திருந்தனர். இவ்விதழிற்குச் செந்தமிழ் எனப் பெயரிடப்பட்டக் காரணத்தை அதன் முதலாமிதழ் பின்வருமாறு தெரிவிக்கிறது

இஃது தமிழின் செம்மையினை உலகிற்கு நன்கு அறிவுறுத்தலானும், செந்தமிழ் வளர்ச்சியைச் செய்தலானும், செவ்விதாய தமிழானே நடத்தலானும்,செந்தமிழ் நாட்டுத் தலை நகர் கண்ணே தோற்றமுடைத்தாகலானும், செந்தமிழ் எனப் பெயர் பெற்று விளங்கும்.( செந்தமிழ் தொகுதி,1)

இவ்வாறு தனது பெயர் பற்றிய விளக்கத்தினைத் தருக்க முறையில் அமைத்துக்கொண்ட இவ்விதழ் இரண்டு முதன்மையான காலக்கட்டங்களில் தனது பார்வையைக் குவித்தது.

இருவேறு  ஆசிரியர்கள், இருவேறு பார்வைகள்

ரா.இராகவையங்கார் ஆசிரியராகப் பொறுப்பேற்றக் காலக் கட்டத்தில், இலக்கணப் பதிப்புகள், தமிழ் இலக்கண விவாதங்கள் ஆகிய செந்தமிழ் இதழை அலங்கரித்தன. பின்னர், மு.இராகவையங்கார் ஆசிரியராகப்  பொறுப்பேற்றதும் கல்வெட்டுக்கள், அகழ்வாய்வுகள் குறித்த ஆய்வுகளில் செந்தமிழின் குவிமையம் மாறியது. இக்காரணத்தால் செந்தமிழில் மு.ரா. அவர்கள் எழுதிய கட்டுரைகள் தொகுப்பாக்கப் பெற்று தமிழ் சிலா கவி சாசன சரிதம் செந்தமிழ் பிரசுர வெளியீடாக வந்தது.

இரா.இராகவையங்கார்

மதுரை சேதுபதி உயர்நிலைப் பள்ளியிலும் திருச்சி தேசியப் பள்ளியிலும் தமிழாசிரியராகப் பணியாற்றிய இவர் து. அ. கோபிநாதராவிடம் அக்காலத்தில் கல்வி பயின்ற மாணவர். பாஸ்கர சேதுபதியின் காலத்தில் இரா. இராகவையங்கார், அவரது ஆதீன வித்துவானாக நியமிக்கப்பட்டார். 1903 இல் தொடங்கப்பட்ட செந்தமிழ் என்னும் தமிழ்ச் சங்க மாத இதழுக்கு,முதல் ஆசிரியராகவும் 1935 இல் அண்ணாமலைப் பலகலைக்கழகத் தமிழாராய்ச்சி பகுதிக்கு தலைவராகவும் பொறுப்பேற்று செயல்பட்டார்.  தொல்காப்பிய செய்யுளியலுக்கு  நச்சினார்க்கினியர் உரையைக் கண்டுபிடித்து அதனை 1917 இல் வெளியிட்டார். இது தொடர்ந்து  செந்தமிழ் இதழில் வெளியானது. நேமிநாதம், பன்னிருபாட்டியல் ஆகிய இலக்கண நூல்களையும் பதிப்பித்துள்ளார். தமிழ்ச் சங்க வெளியீடாக இந்த நூல்கள் வெளியிடப்பட்டன. இவை குறித்த கூர்மையான விவாதங்களையும் செந்தமிழ் இதழ் வெளியிட்டது.

 

 

செந்தமிழ் இதழில் வெளியான இலக்கண உரை முடிவுகள்

தொல்காப்பியப் பொருளதிகாரத்தின் ஒன்பது இயல்களையும் ஒருசேர வைத்து 1885 ஆம் ஆண்டு முதன்முறையாக சி.வை.தா பதிப்பித்தார். இதில் மொத்தம் 664 நூற்பாக்கள் அமைந்திருந்தன. இதற்கு பன்னிரண்டு பக்கங்களில் விரிவான முன்னுரையை சி.வை.தா வரைந்திருந்தார். இப்பொருளதிகார உரை நச்சினார்க்கினியருடையது எனக் கருதியே அவர் பதிப்பித்திருந்தார். இதனை அவர் பின்வருமாறு குறிப்பிடுகிறார்.

இஃது பரத்துவாசி நச்சினார்க்கினியர் இயற்றிய உரையோடும் பல தேசப் பிரதி ரூபங்களைக் கொண்டு பரிசோதித்து யாழ்ப்பாணம் சி.வை. தாமோதரம் பிள்ளையால் பதிப்பிக்கப்பட்டது.

( தொல்காப்பியம், சி.வை. தா. பதிப்பு. முன்னுரை)

தொல்காப்பியம் பொருளதிகரம் முழுவதும் நச்சினார்க்கினிஅர் உரை என்று கருதியே சி.வை.தா. பதிப்பித்திருந்தார். இதனை மறுத்து,இரா.ரா செந்தமிழ் இதழில் பொருளதிகாரம் ஒன்பது இயலும்  நச்சினார்க்கினியருடைது இல்லை என்று மறுத்து எழுதினார். இதற்கு முதலாவதாக அவர் செய்யுளியலை எடுத்துகொண்டு ஆராய்ந்தார்.

இந்த விவாதம் செந்தமிழ் முதல் இதழிலிருந்தே வெளியானது. தான் எழுதிய மறுப்புரைகளின் அடிப்படையில்,தொல். செய்யுளியலுக்கு  நச்சினார்க்கினியர் உரையைச் செந்தமிழ் பிரசுர வெளியீடாகக் கொண்டுவந்தார். இதில் முன்னுரையைத் தன் கருத்துக்களை பின்வருமாறு மறுப்புரையாக முன்வைத்தார்.

தொல்காப்பியப் பொருளதிகாரம்  நச்சினார்க்கினியர் இயற்றிய உரையோடும் பதிப்பிக்கப்பட்டது என்பது அப்பொருளதிகாரம் அச்சிட்டார் கருத்து….. செந்தமிழ் முதற்தொகுதி முதற்பகுதி ஆராய்ச்சிக் கண் அச்சிட்ட பொருளதிகாரச் செய்யுளியல் உரைக்காரர்  பேராசிரியர் என்பதும்தெளிவாக்கப்பட்டன. அச்செய்யுளியல்  நச்சினார்க்கினியர் இப்போது செந்தமிழ் வாயிலாக வெளிவருவதும் பலரும் அறிவர்.

( செந்தமிழ் தொகுதி, 2)

 

இரா. இராகவையங்கார் ஆசிரியராக இருந்த காலத்தில் சி.வை.தாமோதரம் பிள்ளையவர்கள் தொல்காப்பியம்  நச்சினார்க்கினியர் உரையினைப் பதிப்பித்து வெளியிட்டிருந்தார். இதில் பொருளதிகாரத்திலுள்ள மெய்ப்பாட்டியல், உவமவியல், செய்யுளியல் , மரபியல் ஆகிய இயல்களுக்கான உரைகள்  நச்சினார்க்கினியர் உரை அல்ல என்றும் அவை பேராசிரியர் உரை என்றும் பல ஏட்டுச் சுவடிகளின் துணைகொண்டு நிறுவினார். இந்த  உரைமுடிவு குறித்த விவாதம் ஏறழத்தாழ பல மாதங்களாக செந்தமிழில் வெளியானது.

இது மட்டுமல்லாமல், திருக்கோவையாருக்கு வரையப்பட்ட உரை பேராசிரியருடையதென்றும், புறப்பொருள் வெண்பாமாலையின் உரையாசிரியர் மாகறல் சாமுண்டி தேவநாயர் (இன்று இக்கருத்து ஏற்றுக்கொள்ளப் படவில்லை)எனவும் தம் ஆராய்ச்சிகளால் நிறுவினார். இரா. இராகவையங்காரின் இத்தகைய முதன்மையான இலக்கண உரையாசிரியர் குறித்த முடிவுகளையே இன்றைய தமிழ்கூறு நல்லுலகம் ஏற்றுக்கொண்டுள்ளது. சி.வை.தாமோதரனார் அவர்கள் இரா. இராகவையங்காரின் ஆய்வு முடிவுகள் வெளிவருகையில், உயிருடன் இல்லை என்பது இத்தகைய விவாதங்கள் தொடராமல் போனதற்கான காரணம் எனலாம்.

செந்தமிழ் இதழ்  தொடங்கப்பட்ட போதே அது இலக்கண விவாதமாக குறிப்பாக தொல்காப்பியப் பொருளதிகாரம் சார்ந்த உரையாடலாக மாறியது.

பிரயோக விவேகம்

பிரயோக விவேகம் என்னும் வடமொழிக்கும் தமிழுக்கும் இலக்கணம் கூறும் நூல் ஒன்று பதிப்பிக்கப்பட்டது. இந்த நூலின் சில மறுக்கத்தக்க பகுதிகளைக் குறித்து,உபசர்க்கம் என்னும் தலைப்பில் 1903 ஆம் ஆண்டு ( செந்தமிழ் இதழ் -2) கட்டுரை ஒன்றினை வரைந்தார். வடமொழி முனொட்டுக்களாகிய pஇர, பிரா, அப, சம, சம், அநு, அறு, அவ, நிஸ், நிர், துஸ் ஆகியவைகளின் பயன்பாடு குறித்து கட்டுரை விவாதிக்கிறது.

இதே இதழில் அ.குமாரசாமிப் புலவர் இலக்கண ஆராய்ச்சி என்னும் தலைப்பில்  நன்னூல் விருத்தி உரைக்காரரை மறுத்தும் எழுதியுள்ளார்.  விருத்தி உரைக்காரரோடு  புலவர் முரண்கொள்ளும் இடங்கள் பல உள்ளன.

ஆகுபெயர், அன்மொழித்தொகை விவாதங்கள்

ஆகுபெயர், அன்மொழித்தொகை என்னும் தலைப்பில்  நாகப்பட்டினத்திலிருந்து ஞானசாகரம் என்னும் இதழின் ஆசிரியராகச் செயல்பட்ட மறைமலையடிகள் கட்டுரை ஒன்றும் காணக்கிடைக்கிறது. திருக்குறள் காமத்துப்பாலில் முதல் திருக்குறளான கணங்குழை என்பது  ஆகுபெயர் என்பது பரிமேலழகர் கருத்து. அதனை மறுத்து சிவஞான முனிவர் இலக்கண விளக்க சூறாவளியில், கணங்குழை என்பது அன்மொழித்தொகை என மறுத்து எழுதினார். இது தொடர்பான நீண்ட இலக்கண விவாதத்தை மறைமலையடிகளார் முன்வைக்கிறார். அவர், சிவஞான முனிவரைத் தம் கருத்துக்களால் ஆதரிக்கிறார் என்பது சுட்டத்தக்க ஒன்று.

அன்றைய நாளில் இலக்கணப் பெரும்புலவராக திகழ்ந்த ஆ. சண்முகம் பிள்ளை, சி கணேசையர் ஆகிய இருவரும் இவ்விவாதத்தில் பங்கு பெற்றனர். அ. சண்முகம் பிள்ளை ஆகுபெயர் என்றும் சி. கணேசையர் அன்மொழித்தொகை என்றும் விவாதித்தனர். இதன் பின்னர் மறைமலையடிகள் ஒருவாறாக இந்த பல இதழ்களாகத் தொடர்ந்த விவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

அவ்வாகுபெயர் கனங்குழை என்னும் தொகை மேல் வந்தது. மற்றி அதன் புறத்தொக்க மகள் என்னும் சொல்லின் கண் செயற் கைப்படுதுரைத் தோன்றியதாமென்றுணர்க. ஆசிரியர் சிவஞான யோகிகள் கனங்குழை அன்மொழித்திகை என நிறுவி அவரை மறுத்தௌ வாய்மையாமென்பதும் உணர்க. 

(செந்தமிழ் தொகுதி,22-24. ப.240)

இதன் பின்னர் இவ்விவாதமானது முடிவிற்கு வந்தது.

தொல்காப்பியரின் சமயம்

தொல்காப்பியர் சமண சமயத்தைச் சார்ந்தவர் என்பது இன்று அறிவார்த்தமான தமிழ் ஆய்வாளனின் முதன்மையான எடுகோள். இதனை ஆரம்பக் காலத்தில் சான்றாதரங்களோடும் தத்துவார்த்த நோக்கோடும் நிறுவியவருள் முதன்மையானவராக ச.வையாபுரிபிள்ளை அமைகிறார். 

1915 ஆம் ஆண்டுதொல்காப்பியம் முழுவ்துமாகப் பதிப்பிக்கப்பட்டுவெளிவந்த நிலைஇல், தொல்காப்பியர் எச்சமயத்தைச் சார்ந்தவர் என்ற விவாதம் மேலெழுந்தது; இதற்கும் செந்தமிழ் இதழே களமமைத்துக் கொடுத்தது. 1915 இல் ச.வையாபுரிப்பிள்ளை தொல்காப்பியர் சமயம் eன்னும் கட்டுரையை எழுதினார். தொல்.இளம்பூரணர் உரையை 1868 இல் சோடாவதனம் சுப்புராயச் செட்டியாரல் பதிப்பிக்கபட்டு வெளியானது. ஆகவெ, இளம்பூரணர் உரையை உதாரணம் காட்டி வையாபுரிபிள்ளை தமது விவாதத்தை முன்வைக்கிறார்.பல்புகழ் நிறுத்த படிமையோன்..என்று  இளம்பூரணர் தொல்காப்பியரைக் குறிக்கிறார். படிமை என்பது சமண சமய வழக்கு என்பதை ஆங்கிலத்தில் ஸ்டீவன்சன் எழுதியுள்ள சமண சமயத்தின் இதயம் என்னும் கட்டுரையை எடுத்துக்காட்டி நிறுவுகிறார்.

 

இதனால் படிமை என்பது ஜைன சமா வழக்குச் சொல்லென்பதும்…. ஆகவே, பல்புகழ் நிறுத்த படிமையோன் என்று சிறப்பிக்கப் பெற்ற தொல்காப்பியர் ஜைன சமாத்தவர் என்பதும்…. அகத்தியனாரது மாணக்கருள் ஒருவராகிய அவிநார்  ஜினரென்று மகாமகோபத்திய சாமிநாதையர் அவர்களால் அவரது மைலை நாதர் பதிப்பில் காட்டப்பட்டுள்ளது. ஆதலால், தொல்காப்பியரும் ஜெனரென்று கொள்வதில் ஆதொரு தடுமாற்றமும் உண்டாதற்கில்லை.

 ( ச.வே. சுப்பிரமனியன், தொல்காப்பியப் பதிப்புகள், ப.82)

 

வையாபுரிபிள்ளையின் கருத்துகளுக்கு அதாவது தொல்காப்பியர் சமண சமயத்தைச் சார்ந்தவர் என்பதற்கு ஆதாரமாக, சோடாவதனம் சுப்புராய செட்டியாரின் இளம்பூரணர் உரைப்பதிப்பும், மைலை நாதர் உரையும் சான்றாதாரங்களாக அமைந்தன.

நிறைவுரை

செந்தமிழ் ஆராய்ச்சி இதழ்  அது தொடங்கப்பட்ட காலமாகிய 1903 ஆண்டு முதல் ஏறத்தாழ 1915 ஆம் ஆண்டு வரையில் மிக அதிகமாக இலக்கணப் பதிப்புகள், இலக்கண ஆராய்ச்சிகள் ஆகியன தமிழ் அறிஞர்களிடையே வளர்வதற்கு மிகப்பெரும் வெளியை ஏற்படுத்தியது எனலாம். இவை இன்றைய ஏற்றுக்கொள்ளப்பட்ட இலக்கணம் சார்ந்த பல பொது உண்மைகளாகத் தமிழ் ஆராய்ச்சிப் புலத்தை வலம் வருகின்றன. அதாவது இலக்கணம் தொடர்பான இன்றைய கால பொது கருத்தியலைஇருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வெளிவந்த இதழின் விவாதங்களே முடிவு செய்தன. அதில் செந்தமிழ் இதழின் இடம் மறுக்க முடியாத ஒன்று எனலாம்.

செந்தமிழ் இதழில் தொடராக வந்த பல இலக்கண விவாதங்கள்  இலக்கணப் பதிப்புகளாகவும் நூல்களாகவும் செந்தமிழ் பிரசுர வெளியீடாக வெளிவந்தன. இது, இவ்விதழின் கூடுதலான பதிப்புச் செயல்பாடாகும்.

துணை நின்ற நூல்கள்

  • செந்தமிழ் இதழ் தொகுதிகள், 1 ,2 மற்றும் 22-24.
  • ச.வே.சுப்பிரமணியன், தொல்காப்பியப் பதிப்புகள்,  உ.த,நி.
  • சி.வை.தா,தொல்காப்பியம்,பொருளதிகாரம், முன்னுரை.