ஜூலை 2024 இதழுக்கு ஆய்வுக்கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன

தமிழ் இலக்கியங்களில் காணப்படும் இசைப்பகுதிகள்

முனைவர் கே .பி.கனிமொழி உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை அக்சிலியம் கல்லூரி, வேலூர். 04 Feb 2021 Read Full PDF

ஆய்வு   சுருக்கம்

இசை உணர்வின் எழுச்சியால் இசைப்பாடல்கள் தோன்றுகின்றன. இவ்இசையானது மக்கள் தம் நுண்ணறிவு மாட்சியால், பற்பல வகையாகிய இன்னிசைகளைத் தம்மிடற்றிலிருந்தும், கருவிகளிலிருந்தும் எழுப்புகின்றனர். இசையின் இயல்புகளையும், வேறுபாடுகளையும் சிறப்பாக அறியாவிடினும், பொது வகையில் இசையை விரும்பாதவர் யாரும் இல்லை. பச்சிளங் குழவியும் இசையை விழைகின்றது. ஆனினங்கள், இசையைக் கேட்டு அசையிடாதிருக்கின்றன. யானை முதலிய வனவிலங்குகளும், பாம்பு முதலியனவும் இசைக்கு வசமாகின்றன. அறிவே உருவாகிய ஆண்டவனும் இசையை விரும்புகின்றான். அவன் இசை வடிவமாக இருக்கின்றான் என்றும், இசையின் பயனாக உள்ளான் என்றும், இசை பாடுகின்றான் என்றும் ஆன்றோர் கூறுவர். சங்க இலக்கியங்களான பத்துப்பாட்டும், எட்டுத்தொகையும் மற்றும் தொல்காப்பியம், ஐம்பெரும்காப்பியங்களில் ஒன்றான சிலப்பதிகாரத்திலும் தமிழிசைப் பற்றிய பல செய்திகள் கூறப்பட்டுள்ளன. எட்டுத்தொகையில் ஒன்றான பரிபாடலில் காணப்படும் பாடல்கள் இசைப்பாடல்களாக அமைவதோடு மட்டுமின்றி, இசைப்பற்றியும், இசைக்கருவிகள் பற்றிய தகவல்களைக் கொண்டனவாகவும் விளங்குகின்றன. தற்போது படித்தவர் முதல் பாமரர் வரை இசை பரவி நிற்கின்றது. இவ்வாறு இலக்கியங்களில் இசைப் பெற்றிருக்கும் இடம் மகத்தானது என்பதை இக்கட்டுரை எடுத்துரைக்கின்றது.

திறவுச்சொற்கள்

இசை , விலங்குகள், ஆலாபனம் ,இசை நூல்கள், யாழ்

முன்னுரை

இசை என்பது ஒழுங்கு செய்யப்பட்ட, கட்டுப்படுத்தப்பட்ட அழகு ஒலியாகும். இசை என்ற சொல்லுக்கு இசைய வைப்பது என்று பொருள். மனிதனையும், உயிரினங்களையும் இசைய வைக்கின்ற பணிய வைக்கின்ற ஓர் அருஞ்சாதனம் இசை. இசையை சிரவண கலை என்றும் அழைப்பர். இவ்விசை மென்மையும், நுண்மையும் வாய்ந்து, செவிப் புலனைக் குளிர்வித்து, உள்ளத்தைக் கனிவிக்கும் இனிய ஓசையாகும். தும்பி, வண்டு, குயில், கிளி, பூவை முதலிய உயிர்களிடத்து இவ்வினிய இசை இயற்கையாகவே அமைந்து இன்பம் செய்கின்றது. இறைவன் இசையானவன் என்பதை “ஏழிசையாய் இசைப்பயனாய்” என்று சுந்தரும், “எம்மிறை நல்வீணை வாசிக்குமே” என்று அப்பரும் சிறப்பிக்கின்றனர். கலைகளுக்கெல்லாம் தெய்வமாகிய நாமகள் கையில் வீணையை அமைத்துள்ள நம் முன்னேர்கள் இசைக்கலையை எவ்வளவு சிறந்ததாகப் போற்றியிருத்தல் வேண்டும்.

இசையைப் போற்றிய தமிழ்நூல்கள்

தமிழ் மொழியானது இயற்றமிழ், இசைத்தமிழ் நாடகத்தமிழ் என மூன்று பெரும் பிரிவுடையது. அதனால் முத்தமிழ் என்ற வழக்கு உண்டாயிற்று. சங்க காலத்தில், முத்தமிழுக்கும் இலக்கண, இலக்கியங்கள் பற்பல இருந்தன. ஆசிரியர் அகத்தியனார் இயற்றிய அகத்தியம் என்பது முத்தமிழ் இலக்கணமே. தலைச்சங்கப் புலவர்கள் இயற்றிய பெருநாரை, பெருங்குருகு என்பனவும், நாரதர் இயற்றிய பஞ்ச பாரதீயம், அகத்தியர் மாணக்கராகிய சிகண்டி என்பவர் இயற்றிய இசை நுணுக்கம் முதலாயினவும் பழைய இசைத்தமிழ் நூல்களாகும். சங்க இலக்கியத்திலும் இசைப் பற்றிய குறிப்புகள் உள்ளன. சான்றாக ,

தொல்காப்பியம்

ஏறக்குறைய நாலாயிரம் ஆண்டுகளின் முன் தோன்றிய பேரிலக்கணமாகிய தொல்காப்பியத்தில், இசையைப் பற்றிய குறிப்புகளும், இசைப்பாடுதலையே தொழிலாகவுடைய பாணர் முதலானவர்களைப் பற்றிய குறிப்புக்களும் காணப்படுகின்றன. அந்நூலிலே முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல், பாலை என்னும் ஐந்து நிலங்கட்கும் வெவ்வேறு வகையான யாழ் அல்லது பண் உண்டு என்று குறிப்பிடப்படுவதால், எவ்வகைக் குடிமக்களும் இசையுணர்ச்சி உடையராய் இருந்தனர் என்பதும் பெறப்படும். யாழ் என்னும் சொல் பழந்தமிழர் வகுத்த பண்ணிசையைக் குறிக்கும். பண்வகைகளை ‘யாழின் பகுதி’ எனவும் இசைநூலை ‘நரம்பின் மறை’ எனவும் தொல்காப்பியர் குறித்துள்ளார். பறை என்னும் சொல் தாளம் பற்றியதாகும். அதாவது தாளத்தைக் கொட்டிக் கொடுக்கும் பல்வேறு தாளக் கருவிகளின் முறைகளும் மரபுகளும் பற்றியதாகும். இசை என்ற சொல் தொல்காப்பியத்தில் 24 இடங்களில் வந்துள்ளது.

திருக்குறள்

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த தெய்வப்புலவர் திருவள்ளுவர் குழல், யாழ், என்னும் இசைக் கருவிகளைப் பற்றியும், பண்ணைப் பற்றியும் திருக்குறளில் கூறியுள்ளார். 

சிலப்பதிகாரம்

சிலப்பதிகாரத்தில் ஒரு முழுமையான பழமையான வளமையான இசைநூல் அடங்கியுள்ளது. முப்பது காதைகளில் ஏழு காதைகள் இசைப்பாடல்களின் வகையால் பெயர் பெற்றது. இவற்றோடு இசை இலக்கணச் செய்திகள், இசைக்குறிப்புகள், இசைக்கருவிகளின் பெயர்கள், தாளக் குறிப்புகள் இடம் பெற்றுள்ள காதைகள் மொத்தம் பதினாறு காதைகளாகும். அக்காலத்திலே பேரியாழ், மகரயாழ், சகோடயாழ், செங்கோட்டியாழ் என நால்வகை யாழ்கள் இருந்தன. பேரிகை, இடக்கை, உடுக்கை, மத்தளம், திமிலை, குடமுழா, தண்ணுமை, தடாரி முதலிய முப்பத்தொருவகைத் தோற்கருவிகள் வாசிக்கப்பட்டன. ஆயிரம் நரம்புடைய ஆதியாழ் இருந்ததென்றும், ஆதியிசை பதினோராயிரத்துத் தொளாயிரத்துத் தொண்ணூற்றொன்று (11,991) என்றால் வியப்படைவதில் ஆச்சிரியமில்லை. பழந்தமிழ் நூல்கள் அவற்றின் உண்மையைத் தெரிவிக்கின்றன.

கூத்தும் இசையும்  

ஏழிசைகளுக்கு குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம் என்னும் தமிழ்ப் பெயர்கள் வழங்கிப்பட்டன. இப்பொழுது ஆலாபனம் என்பது ஆளத்தி என்னும் பெயரால் வழங்கிற்று. இசைப்பாட்டுகள் எல்லாம் செந்துறை, வெண்டுறை, வரி, உரு முதலிய பெயர்களால் வழங்கின. வரி, உரு முதலியவற்றில் பல வகைகள் உண்டு. கீர்த்தனைகள் என்று கூறப்படுவன உருக்களில் அடங்குவனவாகும். பல வகையான கூத்துகளோடும் வரிப்பாடல்கள் பாடப்பட்டன. கொற்றி, பிச்சி, சித்து, சிந்து, ஆண்டி, அம்மானை, பந்து, கழங்கு, உந்தி, தோள்வீச்சு, சாழல், தெள்ளேணம் முதலிய எண்ணிறந்த கூத்து வகைகளும், அவற்றிற்குரிய பாடல்களும் பயிற்சியில் இருந்தன. அவை பெரும்பாலும் மகளிருடைய விளையாட்டுக்களாக விளங்கின. சான்றாக-மகளிர் கிளியோட்டுவதும் பாட்டு, சாந்திடிப்பதும் பாட்டு, உழத்தியர் நாற்று நடுவதும் பாட்டு, களைப் பறிப்பதும் பாட்டு என எல்லாச் செயல்களும் பாட்டுகளோடு நிகழ்ந்தன. 

முற்காலத்தில் தமிழகத்திலிருந்த ஆடவரும், மகளிரும், இசையும், கூத்தும் ஆகிய இன்ப விளையாட்டுக்களால் களி சிறந்து, உடம்பும், உள்ளமும் தளிர்த்திருந்தனர் என்னும் உண்மை புலனாகிறது. அம்மானை, பந்து, ஊசல், வள்ளை என்னும் வரிப் பாட்டுக்களைச் சிலப்பதிகாரத்தில் காணமுடிகிறது. அன்பே வடிவாகிய மாணிக்கவாசகப் பெருமான், ஓதுவார் உள்ளத்தை உருக்கும் திருவாசகத்திலே தெள்ளேணம், சாழல், தோணோக்கம், உந்தி முதலாகிய வரிப் பாடல்களை அமைத்துள்ளார் என்றால், அப்பாடல்களும் கூத்துக்களும் அந்நாளில் எப்படி கொண்டாடப்பட்டிருத்தல் வேண்டும் என்பது தெளிவாகிறது.

இசைப்பாக்களின் சிறப்பு 

காரைக்கால் அம்மையார் திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகத்தில் தமிழ் இசைக் கருவிகள் பட்டியலை ஒரே பாடலில் அழகாக கொடுத்திருக்கிறார். துத்தங்கைக் கிள்ளை விளரி தாரம்… எனத் தொடங்கும் பாடல். 

சிலப்பதிகாரத்தில் உள்ள மங்கல வாழ்த்துப் பாடல், கானல் வரி, வேட்டுவ வரி, ஆய்ச்சியர் குரவை, ஊர்சூழ் வரி, குன்றக் குரவை, வாழ்த்துக் காதை என்னும் ஏழு காதைகளும் இசைப்பாக்களின் தொகுதியேயாகும்.

பவள வுலக்கை கையாற் பற்றித்

தவள முத்தங் குறுவாள் செங்கண்

தவள முத்தங் குறுவாள் செங்கண்

குவளை யல்ல கொடிய கொடிய

 

 

மற்றொரு பாடலான,

பொன்னி லங்கு பூங்கொடி  பொலஞ்செய் கோதை வில்லிட

மின்னிலங்கு மேகலைக ளார்ப்ப வார்ப்ப வெங்கணுந்

தென்னன் வாழ்க வாழ்க வென்று சென்றுபந் தடித்துமே

தேவரார மார்பன் வாழ்க வென்றுபந் தடித்துமே

என்பன முறையே கானல்வரியிலும், வாழ்த்துக் காதையிலும் உள்ளன. தேவாரம், திருவாசகம், திருவிசைப்பா, திருவாய்மொழி முதலியன, வானோரும் அளவிடற்கரிய சிறப்புடைய இசைப்பெருஞ் செல்வக் களஞ்சியங்களாகும்.

இயற்றமிழும் இசையும்

தொல்காப்பியனார் சொற்றொடர்களின் ஓசையமைதிக்கு வண்ணம் என்று பெயர் கொடுத்து அதை இருபதாக வகைப்படுத்தியுள்ளார். வல்லெழுத்துப் பயின்று வருவது வல்லிசை வண்ணம், மெல்லெழுத்துப் பயின்று வருவது மெல்லிசை வண்ணம், நெட்டெழுத்துப் பயில்வது நெடுஞ்சீர் வண்ணம், குற்றெழுத்துப் பயில்வது குறுஞ்சீர் வண்ணம் என்று இவ்வாறு வண்ணங்கள் வகுக்கப்பட்டுள்ளன. இதனாலும் செய்யுட்களெல்லாம் எதுகை, மோனை முதலிய தொடை விகற்பகங்களோடு பாடப்படுவதாலும், இயற்றமிழ்ப் பாக்களும் இசையமைதி பெற்றிருப்பது நன்கு புலனாகும். வெண்பா முதலிய பாக்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையான இசையுடனேயே தொன்று தொட்டு ஓதப்படுகின்றன. அவற்றுள்ளும் கலிப்பா, பரிபாட்டு என்பனவற்றை இசைப்பாக்கள் என்றே பேராசிரியர் முதலிய பேருரையாளர்கள் கூறுவாராயினர். 

எட்டுத்தொகையுள் ஒன்றாகிய பரிபாடல் செய்யுட்கள் ஒவ்வொன்றுக்கும் பண் வகுத்திருப்பதும் நோக்குதற்குரியது. பாலை யாழ், காந்தாரம் என்ற பண்கள் அதில் குறிக்கப்பட்டுள்ளன. இசை வகுத்தோராக ஒரு பதின்மர் பெயர் அதில் காணப்படுதலின் மூலம் இசைவாணர்கள் எவ்வளவு மிகுதியாக இருந்திருத்தல் வேண்டும் என்றும் கருத முடிகிறது. மற்றும் வெண்பா முதலிய பாக்களுக்கு இனமாக வகுக்கப்பெற்ற தாழிசை, துறை முதலாயினவும் இசைப்பாக்களேயாதல் வேண்டும் என்பதையும் அறியலாம்.

மெய்பாடுகளில் இசை

மக்களுடைய உள்ளக்கிளர்ச்சியாகிய வீரம், அச்சம், இழிப்பு, வியப்பு, காமம், அவலம், வெகுளி, நகை, சாந்தம் என்பவற்றை மெய்படத் தோற்றுவிக்கும் கவிதைகள் எல்லாம் இசையமைதி உடையனவே எனலாம். தொல்காப்பிய மெய்ப்பாட்டியலில் உள்ள உணர்ச்சியாகிய சுவைகளுக்கு இலக்கணம் கூறப்பட்டிருப்பதால் அக்காலத்திலேயே அத்தகைய செய்யுட்கள் அதிகமாக இருந்திருக்க வேண்டும். நமக்கு கிடைத்துள்ள இடைக்காலத்து நூல்களான சீவகசிந்தாமணி, கம்பராமாயணம், பெரியபுராணம் முதலியன சுவையுணர்ச்சி ததும்பப் பெற்றப் பாடல்களால் அமைந்தனவாகும். சான்றாக,

கம்பராமாயணம் 

இராமன் வனம் புகுவான் என்ற சொல்லைக் கேட்ட அளவில் அயோத்தி மாநகரம் எய்திய துயரத்தைக் கம்பர் வருணித்திருக்கும் பாடலைக் காண்போம். 

ஆவும் அழுத, அதன் கன்றழுத, அன்றலர்ந்த

பூவும் அழுத, புனற் புள்ளழுத கள்ளொழுகும்

காவும் அழுத களிறு அழுத கால் வயப்போர்

மாவும் அழுதன அம்மன்னவனை மானவே

அவலச்சுவை என்னும் சோக ரசம் இவற்றில் ததும்புவதைக் காணலாம்.

செல்லுஞ்சொல் வல்லானெதிர் தம்பியும், தெவ்வர் சொல்லும்

சொல்லுஞ் சுமந்தேன், இருதோள் எனச்சூம்பி யோங்கும்

கல்லுஞ் சுமந்தேன், கணைப்புட் டிலும்கட்டமைந்த

வில்லும் சுமக்கப் பிறந்தேன் வெகுண்டுஎன்னை யென்றான்

சீற்றம் தணியமாறு கூறிய இராமருக்கு எதிராக எனது சீற்றத்தால் என்ன பயன் என்று இலக்குமணன் கூறும் மாற்றத்திலும், அவனது கோப உணர்ச்சி பொங்கித் ததும்புதலை காணமுடிகிறது.

இனி, சுந்தர மூர்த்திகள் பரவை நாச்சியாரைக் கண்டதனைத் தெரிவிக்கும் பாடல்,

கற்பகத்தின் பூங்கொம்போ, காமன்றன் பெருவாழ்வோ,

பொற்புடைய புண்ணியத்தின் புண்ணியமோ புயல்சுமந்து

விற்குவளை பவளமலர் மதிபூத்த விரைக்கொடியோ

அற்புதமோ, சிவனருளோ, அறியேன்என் றதிசயித்தார்

என்னும் அருமையான தெய்வப்பாடலில் விளங்கும் உவகை, வியப்பு என்னும் சிருங்கார, அற்புத ரச உணர்ச்சிகளை காணலாம். 

முடிவுரை

பழங்காலத்தில் இசையின் பயனை மக்கள் நன்கு அறிந்திருந்தனர். அதனை தம் வாழ்வில் ஒரு கூறாகவே போற்றிக் காத்தனர் என்பதற்கு இவ்விலக்கியங்களே சான்று பகிர்கின்றன. இவ்விசை மயமாக இருக்கும் செந்தமிழ்ப் பாடல்கள் பாற்கடல்போற் பரந்துள்ளன. அவற்றையெல்லாம் படித்தறிந்து இன்புற வேண்டுவது தமிழ் மக்கள் கடமையாகும் என்பதை இக்கட்டுரை விளக்குகிறது.

 

துணைநூற் பட்டியல்

1. ந.மு.வேங்கடசாமி நாட்டார்   -      கட்டுரைத் திரட்டு, நாட்டார் பதிப்பகம்,

                           சென்னை -14, 1972.

2. இரா. கலைவாணி                  - சங்க இலக்கியத்தில் இசை, ஏழிசைப் பதிப்பகம்,    

                                                                      சென்னை, 2005.

3. புலியூர்க்கேசிகன்,                   -  சிலப்பதிகாரம், அறிவுடைமைப் புத்தகம்,

                                                               சென்னை, 1999. 

4. பி.எஸ்.தேசிகன்.,                   - கம்பராமாயணம், கங்கை புத்தக நிலையம்,     

                                                                சென்னை, 1990

5. இளம்பூரணார் உரை,           -  தொல்காப்பியம், சாரதா பதிப்பகம்., 

                                                               சென்னை., 2000.