ஜூலை 2024 இதழுக்கு ஆய்வுக்கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன

சூர்யகாந்தன் சிறுகதைகளில் தனிமனித பண்பாட்டுச் சிதைவு காரணிகள்

கு. நித்தியா, முனைவர் பட்ட ஆய்வாளர் (ப/நே), அக்சிலியம் கல்லூரி (த),வேலூர் - 632006 04 Feb 2021 Read Full PDF

ஆய்வு நெறியாளர்: முனைவர் நா. குமாரி, நெறியாளர் & தமிழ்த்துறைத் தலைவர்,அக்சிலியம் கல்லூரி (த),வேலூர் - 632006

ஆய்வுச் சுருக்கம்

கொங்கு வட்டார இலக்கிய வகைமை தோன்றுவதற்கு வித்திட்டவர் காவ்யா சண்முகசுந்தரம் ஆவார். அவ்விதையை விருட்சமாக்கி வளர்த்தெடுத்த பெருமைக்குரியவர் சூர்யகாந்தன் எனில் மிகையில்லை.  இன்றளவும் தன் மண்சார்ந்த விளிம்பு நிலை மனிதர்களின் வாழ்வியல் அவலங்களை தனது படைப்புகளின் வழியே எடுத்துரைத்து வருபவர் சூர்யகாந்தன்.  தன் வாழ்வில் நேரில் கண்ட அனுபவங்களே இவரது புனைகதை இலக்கியங்களின் கருவாக திகழ்கிறது.  விளிம்பு நிலை மனிதர்களின் வாழ்வியலைப் பெரிதும் பாதிக்கும் புறக்காரணிகளான ஒடுக்குமுறை, சுரண்டல், சாதியக் கொடுமை முதலானவற்றை நாவல் இலக்கியங்கள் எடுத்தியம்புகிறது என்றால், அம்மக்களின் அன்றாட வாழ்வியலைச் சிதைவுக்குள்ளாக்கும் அக்காரணிகளை சிறுகதை இலக்கியம் எடுத்தியம்புகிறது.  சூர்யகாந்தன் சிறுகதைகளில் விளிம்புநிலை மக்களின் வாழ்வியலைச் சிதைக்கும் காரணிகளை விளக்கிக் கூறுவதே இவ்வாய்வுக் கட்டுரையின் நோக்கமாகும்.

திறவு சொற்கள்

சூர்யகாந்தன், கொங்கு வட்டாரம், சிதைவுக் காரணிகள், விளிம்பு நிலை மனிதர்கள், சிறுகதை இலக்கியம்.

முன்னுரை

தமிழ் இலக்கிய வகைமைகளில் தனித்த இடமும் சிறப்பும் பெற்றது சிறுகதை வடிவமாகும். சிறுகதையின் குறுகிய அளவும் அமைப்பும் கருத்து வெளிப்பாட்டிற்குப் பெரிதும் துணைபுரிகிறது. எண்ணற்ற படைப்பாளிகளின் பங்களிப்பு சிறுகதை வளர்ச்சியை அடுத்தடுத்த படிநிலைக்கு இட்டுச் சென்றுள்ளது. அவ்வகையில் கொங்கு வட்டார மக்களின் வாழ்வியலை கண்முன்னே நிழலாடும் வகையில் படைத்தளித்து வருபவர் சூர்யகாந்தன். கொங்கு வட்டாரம் சார்ந்த கல்வியறிவு ஏதுமற்ற சமுதாயத்தில் விளிம்புநிலையில் வாழும் மக்களின் வாழ்வியலைச் சிக்கலுக்கு உள்ளாக்கும், தனிமனித பண்பாட்டுத் தளத்தில் பெரும் சிதைவுகளை உண்டாக்கும் காரணிகளைப் படைத்துக் காட்டியிருப்பது இவரது தனிச்சிறப்பு. இவரது சிறுகதைகளில் காணலாகும் தனிமனித பண்பாட்டுச் சிதைவு காரணிகளை எடுத்துரைப்பதே இவ்வாய்வுக் கட்டுரையின் நோக்கமாகும்.

சூர்யகாந்தனும் சிறுகதைகளும்

உயர்ந்த இலட்சியங்களை எடுத்தியம்பும் நோக்குடன் படைக்கப்பட்டுள்ள சூர்யகாந்தன் சிறுகதைகள் விளிம்பு நிலை மனிதர்களின் யதார்த்த வாழ்வியலை அழகாகச் சித்தரிப்பவை. தான் வாழும் சமுதாயத்தில் கண்ட காட்சி அனுபவங்களே இவரது சிறுகதையின் கருக்களாக விளங்குகின்றன. சுரண்டலும் ஆதிக்க மனப்பான்மையும் சாதிய ஒடுக்குமுறைகளையும் தம் அன்றாட வாழ்வில் எதிர்கொள்ளும் மக்களின் வாழ்வியலை மேலும் வேதனைக்குள்ளாக்கும் வகையில் இவர்தம் பழக்க வழக்கங்களும் அமைந்துவிடுகிறது. பல்வேறு தீய பழக்க வழக்கங்களும் தீய சிந்தனைகளும் இம்மக்களின் வாழ்வியலைப் பெரிதும் பாதிக்கும் அகக் காரணிகளாக விளங்குகின்றன. அவற்றுள்,

  • மதுப்பழக்கம்
  • கூடாப் பண்பு
  • வறுமை

என்னும் காரணிகளின்வழி இம்மக்களின் பண்பாட்டு வாழ்வியல் எத்தகைய சிதைவுக்கு உள்ளாகிறது என்பதை தமது சிறுகதைகளின் வழியே எடுத்துக்காட்டியுள்ளார் ஆசிரியர் சூர்யகாந்தன்.

மதுப் பழக்கம்

‘குடி குடியைக் கெடுக்கும்’ என்னும் வாசகம் ஏனோ குடிப்பவர்களின் செவியில் விழுவதே கிடையாது. சமுதாயத்தில் மது அருந்துவது ஒரு இழிவான செயலாகவே கருதப்படுகிறது. மது மனிதனின் அறிவை மயக்கி அவனுடைய நல்ல பண்புகளை அழிப்பதோடு பல தீய செயல்கள் புரியவும் துணை போகிறது. கள்ளும் மதுவும் மனிதரை மயக்கி அழிக்கும் ஆற்றல் உள்ளவை. கள்ளுண்டவர் நஞ்சுண்டவர் ஆவர். கள் வெறியால் என்றும் போதையிலே மயங்கி, பேதையாய் பிணம் போல் கிடப்பர். இறந்தவர்களுக்கும் மதுவுண்டு மயங்கிக் கிடப்பவர்களுக்கும் வேற்றுமையில்லை என்பதை வள்ளுவர்,

‘துஞ்சினார் செத்தாரின் வேறல்லர் எஞ்ஞான்றும்

நஞ்சுண்பார் கள்ளுண் பவர் ’1

என்று கடிந்துரைப்பார். மதுவினால் ஏழை எளிய மக்களின் வாழ்வு எத்தகைய இன்னலுக்கு உள்ளாகிறது என்பதை சூர்யகாந்தன் தமது சிறுகதைகளில் எடுத்துக் காட்டியுள்ளார். ‘ஒரு இரவும் ஒவ்வொரு இரவும்’ என்ற சிறுகதையில் அடுத்த வேளை உணவுக்கே வழியின்றி தள்ளாடும் குடும்ப சூழ்நிலையிலும் ரங்கன் தினமும் குடித்து விட்டு தனது மனைவியிடம் மது மயக்கத்தில் சண்டையிடுவதை,

ழே, எங்கேழ போனே? வாழே வெளியே ழ்ழே… எனக்குக் கோழி மொட்டு வறுத்து வெச்சிருக்கியா ? கொண்டுட்டு வந்து வையி! என்கிற கத்தல் வாசலில் எதிரொலித்தது. 

     ஏண்டி, நாங்கேக்கிறதென்ன? நீ கம்னு குத்தவெச்சு ஈறு குத்தியிட்டா இருக்கே? என்று குடிசைக்குள்ளே வந்து அவளை எட்டி உதைத்தான் ’2.

என்று மதுவெறி தலைக்கேறிய நிலையில் தன் குடும்ப நிலையை மறந்து, மனைவியின் மீது வன்முறையைப் பிரயோகிக்கும் செயலைச் சுட்டிக் காட்டுகிறார்.

‘கொழுந்துகளை நறுக்கும் வேர்கள்’  என்னும் சிறுகதையில் சரஸ்வதி என்னும் சிறுமி விடுமுறை நாட்களில் வேப்பங்கொட்டைகளைச் சேகரித்து வைக்கிறாள். ஓரளவு சேர்ந்தவுடன் அவற்றை எடைக்குப் போட்டு பாடப் புத்தகங்கள் வாங்க நினைக்கிறாள். ஆனால், இவள் பள்ளிக்கூடம் சென்ற நேரத்தில் இவளது தந்தை அதனை எடைக்குப் போட்டு வந்த பணத்தில் குடித்து அவளது நினைப்பில் மண் அள்ளிப்போடுவதைப் போன்ற செயலைச் செய்துவிடுவதை,

முன் திண்ணையில் அலங்கோலமாகப் படுத்துக் கிடக்கும் தன்னுடைய தந்தையின் இந்தப் பாவச் செயலைச் சுட்டு எரித்துவிடுகிற கோபத்தோடு பார்த்தபடி நின்றிருந்த சரஸ்வதி, அப்பா... அப்பா என உஷ்ணமான குரலில் உலுக்கினாள்.

ஏய்...! ஏம்புள்ள... எடஞ்சல் பண்றே? வேப்பங்கொட்டை வித்த பதனஞ்சு ரூபாயீல, பத்து ரூபாய்க்கு நல்லாக் குடிச்சேன். மூணு ரூபாய்க்குச் சாக்கணா வாங்கித் தின்னேன்! இந்தா புடி ரெண்டு ரூபா...! கணக்குச் செரித்தான? உங்கம்மா கிட்டெ குடுத்து சோறு ஆக்கச் சொல்லு புள்ளே... - அதட்டலாய்ப் பிதற்றினான்.3

என்று ஆசிரியர் குறிப்பிடுகிறார். இதன்வழி பெற்றோரின் குடிப்பழக்கம் குழந்தைகளின் கனவுகள் சிதறிடக் காரணமாய்த் திகழ்வதை அறிய முடிகிறது. மேலும், கதையின் தலைப்பும் கதைக் கருவிற்கு ஏற்ப நயமாய் அமைந்துள்ளது.

 

 

கூடாப் பண்பு

நல்ல பண்புகள் உடையோர் தாம் மறைந்த பின்னரும் புகழால் வாழ்வர். அத்தகைய பண்பு இல்லாதோர் வாழ்ந்தாலும் இறந்தவர்க்கு ஒப்பாவர். அவர்களால் ஒரு நன்மையும் கிடையாது. நற்பண்பு உடையவர்களால் மட்டுமே இவ்வுலக இயக்கம் நடைபெறுகிறது. இல்லையேல் என்றோ அழிந்து போயிருக்கும் என்பதை,

‘ பண்புடையார்ப் பட்டுண்டு உலகம் அதுவின்றேல்

மண்புக்கு மாய்வது மண் ’4 

என்று வள்ளுவர் எடுத்துக்காட்டுகிறார். நல்லொழுக்கம் உடையவர் மேன்மை அடைவதும், தீயொழுக்கம் உடையவர் தீராப் பழியைச் சுமந்து நிற்பதும் உலகில் காணுகின்ற காட்சி என்பதை,

‘ ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை இழுக்கத்தின்

எய்துவர் எய்தாப் பழி ‘5

என்ற குறள் விளக்கி நிற்கிறது. ‘உயிருள்ள இறந்த காலங்கள்‘ என்னும் சிறுகதையில் நாயுடுவின் இரண்டாம் மகன் தீயொழுக்கம் மிகுந்தவனாக உள்ளான். தன்னுடைய அண்ணனின் திருமணத்திற்காக நிலத்தை விற்று, சேமித்து வைத்துள்ள பணத்தைத் தந்தைக்குத் தெரியாமல் எடுத்துக்கொண்டு ஊரை விட்டே ஓடிப் போகின்றான். ஓடியவன் அப்பணத்தையும் சூதாட்டம் ஆடி இழந்துவிடுகிறான். பின்னர் வாழ வழியின்றி மீண்டும் சொந்த ஊருக்கே திரும்பி வருவதை,

‘போன இடத்தில் சீட்டாட்டத்தில் கொண்டு சென்ற பணமும் பறிபோய் விட்டிருந்தது. கையும் அடிபட்டு எலும்பும் முறிந்த பின்னர் சுமாராகச் சரியாகி கையை ஒரு கோணலாக வைத்துக் கொண்டுதான் வந்திருந்தான்’6 என ஆசிரியர் குறிப்பிடுவதின் வழி, திருட்டும் சூதாட்டச் சிந்தனையும் தீய ஒழுக்கங்களாக உருமாறி எத்தகைய இன்னல்களை தனிமனித வாழ்வில் ஏற்படுத்துகின்றன என்பதை இச்சிறுகதையின் வழி எடுத்துக்காட்டியுள்ளார்.

வறுமை

சமுதாயத்தில் தனி மனிதனால் நிகழ்த்தப்படும் தீமைகளுக்கும், தனிமனிதன் மீது நிகழ்த்தப்படும் தீமைகளுக்கும் அடித்தளமாய் விளங்குவது வறுமையே ஆகும். வறுமை மனிதனைச் சுயமாகச் சிந்திக்க அனுமதிப்பதில்லை. அது எதிர்கால வாழ்க்கையை வளமாக்க உதவுவதில்லை. எனவேதான்,

‘ இனியொரு விதிசெய் வோம் - அதை

எந்த நாளும் காப்போம்;

தனியொருவனுக் குணவிலை யெனில்

ஜகத்தினை அழித்திடு வோம் ‘7

என்றான் பாரதி. வறுமை இல்லாத வாழ்வே இனிமை நிறைந்த வாழ்க்கையாகும்.

சூர்யகாந்தன் கதைகளின் களமாகப் பெரும்பாலும் கிராமங்களே திகழ்கின்றன. நவீன தொழில்நுட்பமும் கல்வியும் இன்றுவரை தேவையான அளவிற்குக் கிராமங்களை சென்றடையாத காரணத்தினால் மக்கள் வறுமையில் வாடுவது தொடர்கதையாக நிகழ்கிறது.

வறுமையின் பிடியில் ஒரு குடும்பம் சிக்கித் தவிக்கிறது எனில் முதலில் பாதிப்புக்கு உள்ளாவது குழந்தைகளே ஆவர். வறுமையின் சூழ்நிலை அவர்களது கனவைப் புறந்தள்ளி குழந்தைத் தொழிலாளராக மாற்றிவிடுகிறது.

குடும்பத்திலுள்ள வறுமையின் காரணமாய்க் குழந்தைகள் வேலைக்கு அனுப்பப்பட்டாலும் குழந்தைகளின் அறிவு மழுங்கடிக்கப்பட்டு, சுரண்டலுக்கும் உள்ளாகி, கொத்தடிமைகள் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டு விடுகின்றனர்.

‘ஆத்தா பட்டினியிருக்கக் கூடாது‘ கதை, இராமநாதபுர மாவட்டத்தை விட்டு வெளியேறி பிழைப்புத் தேடி மெட்ராஸ் கடற்கரையில், சுண்டல் விற்கும் ஏழைச் சிறுவர்களின் மனநிலையைப் படம்பிடித்துக் காட்டுகிறது. ஆறுக்குட்டியும், முருகனும் படும் அவஸ்தைகளை,

‘மணல்லெ ஒயாம நடந்து நடந்து ராத்திரி படுத்தா உள்ளங்காலு தீயாட்டம் எரியுது. வவுத்துக்குள்ளெயும் என்னமோ தகதகன்னு சூடு பொறளுது... அன்னாடும் கடல்லெ ஓய்வு ஒழிச்சல் இல்லாமெ அடிச்சிட்டு இருக்கிற அலைகளாட்டமா... எங்களோட கால்களுக்கும் ஓய்வு கெடையாது...’8

  என்று ஆசிரியர் சுட்டிக்காட்டுகிறார். குழந்தைகளை வறுமை தொழிலாளர்களாக மாற்றுகிறது என்றால், ஆதரவற்ற பெண்களைப் பாலியல் தொழிலாளர்களாக மாற்றுகிறது.

மனித சமுதாயத்தில் பெண்களுக்கு இழைக்கப்படும் தீமைகளுள் ஒன்று பாலியல் தொழில். யாரும் விரும்பி இதனை ஏற்பது கிடையாது. குடும்பத்தின் வறுமை சூழல் இந்நிலைக்குப் பெண்களை ஆளாக்குகிறது. சில அடியாட்களைக் கொண்டு நடத்தப்படும் விபச்சார விடுதி பற்றியும், இத்தொழிலில் ஈடுபடும் பெண்களின் மனநிலைக் குறித்தும் ஆசிரியர் எடுத்துரைத்துள்ளார்.

‘ரங்கம்மாளின் இனிப்புக்கு மயங்கி உள்ளே போய் உட்கார்ற வாலிப வட்டங்களைத் திருப்திப் படுத்தி அனுப்ப நான்கைந்து குமரிகளை வைத்திருந்தாள். அது போகக் கள்ள சாராயம் விற்பனைக்கும் கடைக்குள்ளே வசதிகள் உண்டு. உள்ளே நுழைகிற ஆசாமி... கட்டியிருக்கிற வேட்டியைத் தவிர, மற்றவை எல்லாவற்றையும் அவிழ்த்துக் கொடுத்து விட்டுத் தடுமாறி ரோட்டுக்குத்தான் வர வேண்டும்’9

என்று விபச்சார விடுதி குறித்தும், அங்கு சென்று வரும் பெண்களின் நிலை குறித்தும் ‘கரும்பை விரும்பும் கரையான்கள்’ என்ற சிறுகதையில் ஆசிரியர் எடுத்துக்காட்டுகிறார்.

‘சிலுவை சுமக்கும் பறவைகள்’ என்ற சிறுகதையில் பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்களின் மனஉணர்வு எத்தகைய வேதனையை உள்ளடக்கியது என்பதை,

‘இந்த ஒலகம்கிற சாவு ரூம்லெ நாம ஒண்ணு மேலே ஒண்ணாக் குவிக்கப்பட்டுக் கெடக்கறோம். இதுகளெ யாரு புரட்டிப் போட்டா என்ன? வெட்டித் துண்டு துண்டா அறுத்துப் போட்டாதா என்ன? பொணங்களுக்குத் தெரியவா போகுது?’10

என்று பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்கள் நடைப்பிணம் போன்ற வாழ்வையே வாழ்ந்து கொண்டுள்ளனர் என்பதை இதன்வழி ஆசிரியர் எடுத்துரைக்கிறார்.

இத்தகையத் தொழிலில் ஈடுபடுவோரைக் கண்டால் சமுதாயம் அவர்களை ஏளனம் செய்வதோடு, ஏன்? நாலு வீட்ல பத்துப் பாத்திரம் தேய்ச்சி மானத்தோடு பிழைக்கக் கூடாதா? ஏனிந்த இழி பிழைப்பு? என்று வினவுகிறது. ஆனால் உண்மை நிலை என்னவென்றால் வறுமையின் காரணமாய்ப் பணிக்குச் செல்லும் பெண்கள் மீதும் பாலியல் வன்முறை நிகழ்த்தப்படுகிறது.

‘தீவட்டித் தீர்ப்புச் சொல்கிறது’  என்ற சிறுகதையில் தன் பண்ணையில் வேலை செய்யும் மாதாரிச்சி மீது காமவெறி கொண்ட பண்ணையார் மகன், ஒருநாள் குடிவெறியில் அவளது கணவன் இல்லாத நேரத்தில், அவளை பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்குவதை,

 

‘சாமீ... என்ர புருசனுங்களா? திருட்டு வேலையா...? என்ற சன்னமான சொற்களை வந்திருக்கும் விலங்கு கேட்ட மாதிரி தெரியவில்லை. அவன் அதைச் சொல்லவா வந்திருக்கிறான். இல்லை. அவனுடைய வெறிக்கு இவளைத் தீனியாக்க வந்திருக்கிறான்.

அவனது முரட்டுப் பிடியில் சிக்கிய அவள் சற்று நேரத்தில் துவண்டு போனாள். வெறியைத் தீர்த்துவிட்டு அவன் வெளியே வரும்போது இருட்டு விலகவில்லை. கட்டிய நாள்வரை புருசன் ஒருவனுடனேயே வாழ்ந்து மகிழ்ந்து வந்த அந்த அப்பாவிப் பெண் உயிர்போன பிணமாகத் தன் குடிசைக்குள்ளே சுருண்டு கிடக்கிறாள்...!’11

என்று அப்பெண்ணின் பரிதாப நிலையைச் சுட்டிக்காட்டுகிறார். வறுமையின் கோரப்பற்கள் எப்படியாவது வாழ வேண்டும் என்ற சிந்தனையைத் தருகின்றதே அன்றி, தனிமனித வாழ்வின் அகக் காரணிகளும், சமுதாய வாழ்வின் புறக் காரணிகளும் அவர்களை மானத்தோடு வாழ விடுவதில்லை.

முடிவுரை

கொங்கு வட்டாரம் சார்ந்த விளிம்பு நிலை மக்களின் வாழ்வியலைக் கண்முன்னே நிழலாடும் வகையில் எடுத்துரைப்பவர் சூர்யகாந்தன்.

விளிம்புநிலை சமூகத்தில் வாழும் மக்களைப் பண்பாட்டு ரீதியில் சுரண்டலும், ஒடுக்குமுறைகளும் பாதிக்கிறது எனில், அவர்களின் தனிமனித வாழ்வை மதுப்பழக்கமும், கூடாப் பண்புகளும், வறுமையும் பாதிப்படையச் செய்கின்றன.

குழந்தைத் தொழிலாளர் உருவாக்கத்திற்கும், பெண்கள் பாலியல் தொழிலைத் தேர்ந்தெடுப்பதற்கும், ஆதிக்க உணர்வுடையோரால் பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கப்படுவதற்கும் வறுமை நிலையே முதற்காரணமாய்த் திகழ்கிறது.

தனிமனித பண்பாட்டுச் சிதைவு காரணிகளாக சுட்டப்பட்டுள்ளவற்றால் தனிமனித வாழ்வு மட்டுமின்றி அவர்களைச் சார்ந்து வாழ்வோரின் வாழ்வியலும் கேள்விக்குள்ளாவதை ஆசிரியர் தமது சிறுகதைகளின் வழி எடுத்துக் காட்டியுள்ளார்.

சான்றெண் விளக்கம்

1. குறள். 926

2. சூர்யகாந்தன், பயணங்கள், ப.41

3. சூர்யகாந்தன், முத்துக்கள் பத்து, பக்.30-31

4. குறள். 996

5. குறள். 137

6. சூர்யகாந்தன், வேட்கை, ப.80

7. பாரதியார், மகாகவி பாரதியார் கவிதைகள், ப.37

8. சூர்யகாந்தன், மண்ணின் மடியில், ப.30

9. சூர்யகாந்தன், விடுதலைக் கிளிகள், ப.63

10. சூர்யகாந்தன், மேலது, ப.76

11. சூர்யகாந்தன், சூர்யகாந்தன் சிறுகதைகள், ப.166

துணை நின்ற நூல்கள்

1. சூர்யகாந்தன், சூர்யகாந்தன் சிறுகதைகள், தனலட்சுமி பதிப்பகம், சென்னை, இரண்டாம் பதிப்பு, 2013

2. சூர்யகாந்தன், பயணங்கள், பாவை பப்ளிகேஷன்ஸ், சென்னை, முதற்பதிப்பு, 2009

3. சூர்யகாந்தன், மண்ணின் மடியில், பாவை பப்ளிகேஷன்ஸ், சென்னை, இரண்டாம் பதிப்பு, 2012

4. சூர்யகாந்தன், முத்துக்கள் பத்து, அம்ருதா பதிப்பகம், சென்னை, முதற்பதிப்பு, 2008

5. சூர்யகாந்தன், விடுதலைக் கிளிகள், பாவை பப்ளிகேஷன்ஸ், முதற்பதிப்பு, 2009

6. சூர்யகாந்தன், வேட்கை, நீயூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்., சென்னை, முதற்பதிப்பு, 2012

7. சுந்தரமூர்த்தி, இ., (ப.ஆ.), பாரதியார் கவிதைகள், பாவை பப்ளிகேஷன்ஸ், சென்னை, எட்டாம் பதிப்பு, 2009

8. வரதராசனார், மு., (உ.ஆ.), திருக்குறள் தெளிவுரை, பாரி நிலையம், சென்னை, 216வது பதிப்பு, 2014