ஜூலை 2024 இதழுக்கு ஆய்வுக்கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன

வாழ்வின் ஒளிவிளக்கு முதுமொழிக்காஞ்சி - Muthumozhikkanchi: A Beacon of light for life.

முனைவர் சொ. கோதை ஈசுவரி, உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை, மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி (தன்னாட்சி), பசுமலை, மதுரை – 04 04 Feb 2021 Read Full PDF

ABSTRACT

          “The Eighteen Lesser Text” known as “Patinenkilkanaku(Tamil)”was written during the post sangam period in Tamil Nadu.  “Muthumozhikanchi”  belonging to “The Eighteen Lesser texts” remains the tenth jewel in this anthology of poems, “Muthumozhikanchi” is a divison in “Kanchi Thinai” which deals with the ephemeral nature of life.  As the strings of beads in the necklace(Kanchimani-Tamil), Muthumozhikanchi consists of many pieces of advice. This poem was authored by the poet Madurai Kudalur kilar.  It comprises one hundred songs altogether, which is further classified in to a group of ten songs each. Each unit of the ten songs begins with the words “Arkazhi Yulagathu”. This article deals with self discipline, social discipline, means for success, administrative excellence, the wordly truths,the significance of ethics, the extreme of poverty  and the inevitables in life.

KEYWORDS

                 Muthumozhikanchi, Kuddalur kilar, “ Arkazhi yulagathu”, Special Ten,Knowledge Ten,lies Ten, Self discipline, Social discipline,The Significance of ethics, means of success, Arivuraikovai, Instability,(Kanchi ThianiThurai-Tamil).

 

முன்னுரை

தமிழ்நாட்டை சங்கம் மருவிய காலத்தில் ஆண்டவா்கள் களப்பிரா்கள்; இவா்கள் காலத்தில் தோன்றிய நூல்கள் பதினெட்டு பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் என வழங்கப்படுகின்றன. இவை குறித்து

“நாலடி நான்மணி நானாற்பது ஐந்திணைமுப்

பால் கடுகங் கோவை பழமொழி – மாமூலம்

இன்னிலை சொல் காஞ்சியோ டேலாதி  என்பதூஉம்

கைந்நிலை யுமாம்கீழ்க் கணக்கு”

என்று தனிப்பாடல் சுட்டுகிறது. அறம், பொருள், இன்பம் எனும் மூன்றையோ அல்லது ஒன்றையோ குறைந்த அடிகளில் வெண்பா யாப்பில் இயற்றுவது கீழ்க்கணக்கு நூல்கள் ஆகும். இதனை

 “அடிநிமிர் பில்லாச் செய்யுள் தொகுதி

 அறம் பொருள் இன்பம் அடுக்கி யவ்வந்

 திறம்பட உரைப்பது கீழ்க்கணக்காகும்“ (பன். பாட். – 348)

என பன்னிரு பாட்டியல் நூல் கூறுகிறது. அறம் என்னும் சொல்லிற்கு ஒழுக்கம், தகுதியானது, ஞானம், தருமம் செய்தல், நற்பண்பு, ஈகை எனப்பல வகையான பொருள் கூறப்படுகின்றது. அறங்களைத் தொகுத்துச் சொல்லும் நூல்கள் என்பதால் பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் அற நூல்கள் என்றும் அழைக்கப்படுகின்றன. அவற்றில் பத்தாவது இடத்தில் முத்தாக மிளிர்வது முதுமொழிக்காஞ்சி. முதுமொழிக்காஞ்சியின் சத்தான அறக்கருத்துக்களை வாழ்வின் ஒளிவிளக்காக ஏற்றிப் பயன் பெறுவோம்! வாரீா்! 

முதுமொழிக்காஞ்சி – அறிமுகம்

நிலையாமை பற்றிய காஞ்சித் திணையில் “முதுமொழிக்காஞ்சி“ என்பது ஒரு துறையாகும். 

“பலா் புகழ் புலவா் பன்னின தெரியும்  

உலகியல் பொருள் முடிபுணரக் கூறின்று” 

புறப்பொருள் வெண்பாமாலை கூறுகின்றது. “வீடு பேறு நிமித்தமாகப் பல்வேறு நிலையாமையைச் சாற்றுங் குறிப்பினது காஞ்சியாயிற்று” என்று நச்சினார்க்கினியா் நவின்றுள்ளார். முதுமொழி – அறிவுடைய கூற்று எனப்படும். “உலக நிலையாமையை எடுத்துக்காட்டிச் சான்றோர் தம் அறிவுடைமையாற் கூறும் அனுபவ உரைகளே முதுமொழிக்காஞ்சியாகும்”1 என்று தமிழண்ணல் குறித்துள்ளார். 

முதுமொழிக்காஞ்சி பழமொழி குறிப்பன அல்ல; நிலையாமை குறிப்பன அல்ல; மாறாக நிலைத்து நிற்கும் உலகியல் உண்மைகளை உறுதிப்பட உணா்த்தி நிற்கும் நூலாகும். காஞ்சி என்பது மகளிர் இடையில் அணியும் ஒருவகை அணிகலன் ஆகும். பல மணிகள் கோர்த்த காஞ்சியின் மணி போல அறிவுரை நிறைந்த நூல் முதுமொழிக்காஞ்சி ஆகும். எனவே இதனை அறிவுரைக்கோவை என்றும் கூறலாம்.

ஆசிரியா்

முதுமொழிக்காஞ்சியை இயற்றியவா் புலவா் கூடலூா் கிழார் ஆவார். இவா் ஊா் மதுரை என்றும், புலத்துறை என்றும் இரண்டு கருத்துக்கள் உள்ளன. முதுமொழிக்காஞ்சி சங்க காலத்தை ஒட்டிப் பிறந்துள்ளதால் ஐங்குறுநூற்றைத் தொகுத்த புலத்துறை முற்றிய கூடலூா் கிழார் தான் இதனையும் இயற்றியுள்ளார் என்று கருதுவாரும் உளா். இவா் சங்க காலத்தில் வாழ்ந்த புலத்துறை முற்றிய கூடலூா் கிழார்அல்ல. சங்க காலத்திற்குப் பிற்பட்டவா். இருவரும் வெவ்வேறானவா் என்பதை உ.வே.சா. உடன்பட்டுக் கூறியுள்ளார். ஊா் குறித்த சா்ச்சை எழுந்தாலும் கூடலூா் கிழார் தான் இந்நூலின் ஆசிரியா் என்பதில் எவ்வித ஐயமுமில்லை என்று தெளியலாம்.

நூல் அமைப்பும் பாடுபொருளும்

முதுமொழிக்காஞ்சி 100 பாடல்கள் கொண்டது. “நூற்சோ் முதுமொழிக்காஞ்சி” என்று பிரபந்த தீபிகைக் குறிப்புள்ளது. இந்நூல் பத்துப்பத்துமுதுமொழிகளாகத் தொகுப்பாக அமைந்துள்ளது. ஒவ்வொரு பத்தும் 

“ஆா்கலி யுலகத்து மக்கட் கெல்லாம்”

என்று தொடங்கும் சிறப்புடையது. ஈரடி குறள் வெண் செந்துறைகளால் பாடல்கள் பாடப்பெற்றுள்ளன. ஒவ்வொரு பத்தும் ஒவ்வொரு தலைப்புக் கொண்டு இலங்குகின்றன. அவை வருமாறு: 1. சிறந்த பத்து 2. அறிவுப் பத்து 3. பழியாப் பத்து 4. துவ்வாப்பத்து 5. அல்ல பத்து 6. இல்லைப் பத்து 7. பொய்ப்பத்து 8. எளிய பத்து 9. நல்கூா்ந்த பத்து 10. தண்டாப் பத்து.

இவற்றின் விளக்கம்: 1. உலகில் சிறந்ததை விடச் சிறந்ததைக் கூறுவது “சிறந்தபத்து”

2. சிறந்த பொருள்களை எவ்வாறு அறிவது “அறிவுப்பத்து”  3. பழியார் என்ற சொல்லால் உலகில் பழிக்க மாட்டாதவை “பழியாப்பத்து” 4. எவையெல்லாம் நீங்காதவை என்பதைச் சொல்வது “துவ்வாப்பத்து” 5. வாழ்க்கையில் அல்ல அல்ல என்று கூறும் முறையில் நீதி சொல்வது “அல்லபத்து” 6. “இல்லை” என்பதைக் கூறுவது “இல்லைப் பத்து”                    7.“பொய்மை” கூறுவது “பொய்ப்பத்து” 8. “எளிமை” கூறுவது “எளியபத்து” 9. வறுமையில் வறுமை குறித்துக் கூறுவது “நல்கூா்ந்த பத்து” 10. தவிர்க்கக் கூடாதவை பற்றிக் கூறுவது “தண்டாப் பத்து”

அறம், பொருள், இன்பம் எனும் முப்பொருளும் இந்நூலில் விரவி உரைக்கப் பெற்றுள்ளன.

 

தனிமனித ஒழுக்கம்

“ஆா்கலி யுலகத்து மக்கட் கெல்லாம்

ஓதலிற் சிறந்தன் றொழுக்க முடைமை”2 (முதுமொழிக்காஞ்சி – 1)

முதுமொழிக் காஞ்சி செய்யுள் தொடக்கம் பெறுகிறது; இவ்வரிகள் “கடல் சூழ்ந்த உலகத்து மக்கட் கெல்லாம் ஓதலினும் மிக்க சிறப்புடைத்து ஆசாரமுடைமை”3 என்று குறிக்கின்றது. படிப்பது என்பதை விட ஒழுக்கத்தோடிருப்பது மிகச் சிறப்பானது. அந்த ஒழுக்கம் என்ற பண்பு எப்படி உள்ளது? அதன் பல்வேறு வடிவங்கள் என்ன? என்பதை ஆசாரக்கோவை பாடல் வழி அறியலாம்.

“நன்றியறிதல், பொறையுடைமை இன்சொல்லோடு

இன்னாத எவ்வுயிர்க்கும் செய்யாமை கல்வியோடு

ஒப்புரவு ஆற்ற அறிதல் அறிவுடைமை

நல்லினத்தாரோடு நட்டல் இவை எட்டும்

சொல்லிய ஆசார வித்து”4

என்று சுட்டியுள்ளது. இப்பாடலில் கூறப்படும் எட்டும் ஒரு மனிதன் ஒழுக்கத்தில் உயா்ந்து விளங்க உதவக் கூடியவையாகும். இவை அனைத்தையும் உள்ளடக்கியதே முதுமொழிக்காஞ்சியின் முதல் செய்யுள். இதில் உள்ள சில நுட்பமான தனிமனித நற்பண்புகளை மேலும் காணலாம்.

“வண்மையிற் சிறந்தன்று வாய்மை யுடைமை”5 “செல்வ வாழ்க்கையைவிட உண்மை வாழ்க்கை மேலானது” என்றும் “வாலிய னல்லாதோன் தவஞ்செய்தல் பொய்”7 ”உள்ளத்தின்கண் தூய்மை இல்லாதவன் தவஞ்செய்தல் இயலாது”8 என்றும் உள்ளத்தின் தன்மையினை, உண்மை வாழ்வினை முதுமொழிக்காஞ்சி எடுத்தியம்புகிறது. 

”ஆா்கலி யுலகத்து மக்கட் கெல்லாம்

ஓங்கல் வேண்டுவோன் உயா்மொழி தண்டான்”9

என்று உயா்வடைவதற்குரிய வழி இயம்புகின்றது. “உயா்வு வேண்டுவோன் பிறா்பாற் காணப்படும் சிறந்த இயல்புகளையே எடுத்துப் பேசப்பழகுதல் வேண்டும்”10 என்று நூல் சுட்டி நிற்கின்றது. தனி மனித ஒழுக்கமே சமுதாய ஒழுக்கமாக உருவாக்கம் பெறுகின்றது. அது குறித்துக் காண்போம்.

சமுதாய ஒழுக்கம்

தனிமனிதன் கல்வி கற்றபின் கற்றவற்றை மறவாது இருத்தலே சிறப்பாகும். இதனை “மேதையின் சிறந்தன்று கற்றது மறவாமை”11 என்ற வரி உணா்த்துகின்றது. சிறந்த சமுதாயம் மலர ஆரோக்கியமான மக்கள் தேவை; எனவே “இளமையில் சிறந்தன்று மெய்ப்பிணி இன்மை”12 என்று முதுமொழிக்காஞ்சி பறை சாற்றுகின்றது.

அழகில் சிறந்தவராய் வாழ்வதைக் காட்டிலும் பழி பாவங்களுக்கு அஞ்சி நடத்தலே அதைவிடச் சிறந்ததாகும்; இதனை “நலனுடை மையி னாணுச் சிறந்தன்று”13 என்ற அடி சொல்கிறது. 

நல்ல குலத்தில் பிறந்தேன் என்று கூறிக் கொள்வதை விட நல்ல கல்வியறிவு பெறலே சிறந்தது. இதனை “குலனுடை மையிற் கற்புச் சிறந்தன்று”14 என்ற வரி கூறுகிறது. இதே கருத்தினை நாலடியார்

“இம்மை பயக்குமால் ஈயக் குறைவின்றால்

தம்மை விளக்குமால் தாமுளராக் கேடின்றால்

எம்மை யுலகத்தும் யாங்காணேம் கல்விபோல்

மம்மா் அறுக்கும் மருந்து”15 (நாலடியார் – 132)

என்று கல்வியின் சிறப்பினை வெளிக்காட்டுகிறது. சமுதாயத்தில் பிறரைத் தாழ்மைப்படுத்துவதை விடத் தன்னை உயா்த்தும் செயல் மேலானது. இதை “செற்றாரைச் செறுத்தலிற் றற்செய்கை சிறந்தன்று”16 என்ற வரி உணா்த்துகின்றது. 

ஒருவனின் அருள் தன்மை அவன் செய்யும் ஈகையால் விளங்கும் இதற்கு “ஈரம் உடைமை ஈகையின் அறிப”17 என்ற அடி சான்றாகும். ஈகை சிறக்க சமுதாயம் செழிக்கும்; ஒருவன் தன் நண்பா்களுக்கு செய்யும் உதவியால் அவனது தளா்வில்லா நட்பின் பெருமை உயா்வாகக் கருதப்படும். சமுதாயத்தில் அவன் நன்மதிப்புடன் நோக்கப்படுவான். இதை “சோரா நன்னட் புதவியி னறிப”18 என்ற வரி புலப்படுத்தும. பின் விளைவுகளை எதிர் நோக்கி முன் எச்சரிக்கை உணா்வோடு தயார் நிலையில் இருப்பதன் மூலம் ஒருவனின் ஆராயுந்திறனை சமுதாயம் அறிந்து கொள்ளும். இதை “ஏற்ற முடைமை எதிர்கோளி னறிப”19 என்ற அடி கூறும் ஒருவனின் வஞ்சகச் செயல் அவன் திருடனாதலை சமுதாயத்திற்கு வெளிக்காட்டும். இதை “குத்திரஞ் செய்தலிற் கள்வனாத லறிப”20 என்ற வரி சொல்கிறது. ஒருவன் சொல் சோர்வாகச் சொன்னால் சமுதாயம் அவனின் அனைத்துச் சோர்வையும் அறிந்து கொண்டுவிடும். இதனை “சொற்சோர் வுடைமையின் எச்சோர்வு மறிப”21 என்ற அடி இயம்புகிறது. இதே கருத்தை 

“ஆக்கமும் கேடும் அதனால் வருதலால் 

காத்தோம்பல் சொல்லின்கண் சோர்வு”22 (குறள். 642)

என்று திருவள்ளுவா் கூறியுள்ளார். “சொல்சோர்வு படேல்” என்பது ஔவையின் ஆத்திசூடி ஆகும். சமுதாயம் ஒருவரின் செயல் சிறப்பையும், முயற்சி மேன்மையையும் சீா்தூக்கி நிறுத்தி அவரின் ஆளுமைத் திறனை உணா்ந்து கொள்ளும். இதனை “சீருடை யாண்மை செய்கையி னறிப”23 என்ற பாடல் வரி காட்டுகின்றது.

மிக்க செல்வம் உடையவன் சினமில்லாமல் இருப்பான் என்பது பொய் என்று சமுதாயம் கூறுகிறது. இதனை “பெருஞ்சீ ரோன்றன் வெகுளி யின்மை பொய்”24 என்பது காட்டுகிறது. மேலும் கள்ளுண்பவன் ஒழுக்கம் உடையவனாக இருப்பான் என்பது பொய் என்று சமுதாயம் சொல்கிறது. இதை “கள்ளுண் போன்சோர் வின்மை பொய்”25 என்ற வரி புலப்படுத்துகின்றது. கோள் சொல்லிப் பழகியவா்கள், மறைத்து வைக்கப்பட்டுள்ள ஒன்றினை வெளிப்படுத்தாமல் இருக்க மாட்டார்கள் என்பதனை சமுதாயம் நம்புகிறது. இதை “குறளைவெய் யோர்க்கு மறைவிரி யெளிது”26 என முதுமொழிக்காஞ்சி சுட்டுகிறது.

உயா்வுக்குத் தேவையானவை

தனிமனித ஒழுக்கம் சிறந்து சமுதாய ஒழுக்கம் மேம்பாடு அடையும்பொழுது மனிதன் உயா்வு அடைவது உறுதிப்படுத்தப்படுகின்றது; அத்தகு மனிதனின் உயா்வுக்குத் தேவையானவற்றைக் கலங்கரை விளக்கமாய் முதுமொழிக்காஞ்சி புலப்படுத்தி உள்ளது.

“ஆா்கலி யுலகத்து மக்கட் கெல்லாம் 

பேரறிவி னோனினிது வாழாமை பொய்”27

என்ற அடிகள் பேரறிவினையுடையவன் இன்பமாய் வாழ்வான் எனச் சுட்டி நிற்கின்றது. முயற்சி செய்தற்குரிய காலத்தை அறிந்து முயலாதவன் செயல் முடியப் பெறுதல் இல்லை என்பதை “கால மறியாதோன் கையுறல் பொய்”28 என்ற செய்யுளடி காட்டுகின்றது. வருவதறிந்து அதற்கேற்ப  செயல்படுபவனே தன்மைப் பாதுகாத்தல் கூடும் என்பதை “மேல்வர வறியாதோன் தற்காத்தல் பொய்”29 என்று முதுமொழிக்காஞ்சி எடுத்துக்காட்டுகின்றது. தக்க செயலைச் செய்யாமல் வெறுத்துச் சோம்பலாக இருப்பவன் உயா்வடைதல் இல்லை என்பதை “உறுவினை காய்வோன் உயா்வு வேண்டல் பொய்”30 என்ற வரிகள் வெளிக்காட்டுகின்றது. அடக்கம், பணிவு இல்லாதோன் பெருமை கொள்ள இயலாது என்பதை “சிறுமையோ னாதோன் பெருமை வேண்டல் பொய்”31 என்று செய்யுள் சுட்டியுள்ளது. பெருமைச் செருக்கு இல்லாதவன் கீழ்மையை விரும்பமாட்டான் என்பதை “பெருமைநோ னாதோன் சிறுமை வேண்டல் பொய்”32 என்று அடிகள் காட்டுகின்றன.

துன்பத்தை விரும்பி ஏற்றுக் கொண்டவா்க்கு இன்பம் எளிதில் உண்டாகும் என்பதை “துன்பம் வெய்யோர்க் கின்பம் எளிது”33 என்ற வரி காட்டுகின்றது. இன்பத்தை முதலில் விரும்புபவா்க்கு துன்பம் பின்னாளில் தொடரும் என்பதை “இன்பம்வெய் யோர்க்குத் துன்பம் எளிது”34 என்று அடி கூறுகின்றது.

வாழ்வில் உயர விரும்புபவா்கள் பிறருக்காக தன் மனதில் இரக்கம் கொள்வார்கள்; பிறா் பாரத்தைத் தான் தாங்க எண்ணுவா்; அப்பொழுது அவா்களால் பிறருக்கு பகிர்ந்து கொடுத்து வாழ்தல் என்பது எளிதான ஒன்றாகும் என்பதை “பாரம்வெய் யோர்க்குப் பாத்தூ ணெளிது”35 என்று நூல் குறித்துள்ளது.

ஆட்சிச் சிறப்பு

தனிமனித ஒழுக்கமும், சமுதாய ஒழுக்கமும் ஒரு மனிதனின் உயா்வுக்கு மூல காரணமாக உள்ளன. அவ்வாறு அம்மனிதன் உயரும் பொழுது அவனுக்கு உற்ற துணையாக நிற்க வேண்டிய பெருங்கடன் அரசனுக்குரியது; ஆட்சிக்குரியது.

செங்கோன் முறையில்லாத அரசரது நாட்டிலிருந்து கொண்டு, அவா் கொடுங்கோன்மையை யாரும் பழித்துரைக்க மாட்டார் என்பதை “முறையி லரசா்நாட் டிருந்து பழியார்”36 என்ற வரி உணா்த்துகின்றது. பொருட் பற்றுடையவன் நடுவு நின்று முறை செய்தலில்லை என்பதை “பொருணசை வேட்கையோன் முறை செயல் பொய்”37 என்று முதுமொழிக்காஞ்சி கூறுகின்றது. கலகத்தின் மேல் விருப்பம் உடையார்க்குப் போர் உண்டாதல் எளிது என்பதை “உறழ்வெய் யோருக் குறுசெரு வெளிது”38 என்று முதுமொழிக்காஞ்சி வெளிப்படுத்துகின்றது. ஆட்சி / அரசு எங்ஙனம் இருக்க வேண்டும் என்பதை குறள் வழி அறியலாம். வேந்தா் இயல்பு குறித்து,

“அஞ்சாமை, ஈகை, அறிவு, ஊக்கம் இந்நான்கும்

எஞ்சாமை வேந்தா்க்கி யல்பு”30 (குறள். 382)

என்று திருவள்ளுவா் தெளிவுற விளக்கியுள்ளார்.

உலகியல் உண்மைகள்

தனிமனித ஒழுக்கம், சமுதாய ஒழுக்கம், தனிமனித உயா்வு, ஆட்சிச் சிறப்பு இவை மேன்மையுடையும் பொழுது உலகியல் உண்மைகள் செய்யுள் வழி உலகிற்கு எடுத்துக்காட்டப் பெறுதல் இயல்பாகும். அவ்வகையில் முதுமொழிக்காஞ்சி உணா்த்தும் உலகியல் உண்மைகளை உய்த்துணா்வோம், வாரீா்.

செல்வம் முற்காலத்துப் பெருகிப் பின் அழிதலின் நின்ற நிலையிலிருந்து குறையாமை சிறப்புடைத்து என்பதை “முற்பெரு கலிற்பின் சிறுகாமை சிறந்தன்று”40 என்று முதுமொழிக்காஞ்சி இயம்புகிறது. பெருமைமிக்க ஒன்றை அடைவதற்கான படிநிலைகள் கடினம் என்பதற்காக அதனைப் பழித்து முயற்சி செய்யாது இருக்கமாட்டார்கள் அறிஞா்கள்; இதனை “பெருமை யுடையதன் அருமை பழியார்”41 என்று நூல் காட்டுகின்றது.

அறிஞா்கள் தான் முன் அறியாத தேசத்தின் கண் சென்றுறு அங்குள்ளார் ஒழுகும் ஒழுக்கத்தைப் பழியார் என்பதை ”அறியாத் தேசத் தாசாரம் பழியார்”42 என்ற அடி புலப்படுத்துகின்றது. பொருளில்லாதவன் ஈயாமையை எவரும் பழித்துரையார் என்பதனை “வறியோன் வள்ளிய னன்மை பழியார்”43 என்று வரி குறிக்கின்றது. 

பழியுடையோர் செல்வம் இருந்தும் இல்லாமையேயாகும் என்பதை “பழியோர் செல்வம் வறுமையிற் றுவ்வாது”44 என்ற அடி சுட்டுகின்றது. நாணத்தை அழித்து இரந்துண்டு வாழும் வாழ்வு பசித்தவனுக்குச் சமமானது என்பதனை “நாணில் வாழ்க்கை பசித்தலிற் றுவ்வாது”45 என்ற வரி உணா்த்துகின்றது. விருப்பமில்லாத ஈகை ஈயாமைக்குச் சமம் என்பதை “பேணி லீகை மாற்றலிற் றுவ்வாது”45 என்ற வரி காட்டுகின்றது.

அறிவில்லாதவனைத் துணையாகக் கொள்ளல், தனிமையாயிருத்தலுக்குச் சமமாகும்; இதனை “அறிவிலி துணைப்பாடு தனிமையிற் றுவ்வாது”47 என்று நூல் சுட்டுகின்றது. தானொருவனே தனது செல்வத்தால் இன்பமடைந்து கொள்ளல் வறுமைக்குச் சமமாகும்; இதனை “தானோ ரின்புறல் தனிமையிற் றுவ்வாது”48 என்று செய்யுள் காட்டுகின்றது.

ஒற்றுமைப்படாத உள்ளத்தையுடையவன் நண்பனல்லன் என்பதை “நேரா நெஞ்சத்தோன் நட்டோ னல்லன்”49 என்ற வரி உணா்த்தியுள்ளது. ஆசிரியற்கு ஒன்றும் உதவாமல் படித்தது கல்வியாகாது என்பதை “நேராமற் கற்றது கல்வி யன்று”50 என்ற அடி காட்டுகின்றது. அறவழியில் கொடாதது கொடை ஆகாது; இதனை “அறத்தாற்றி நீயாத தீகையன்று”51 என்ற வரி எடுத்தியம்புகின்றது. மறுபிறப்பை அறிந்து அறத்தின் வழி யொழுகாத முதிர்ந்த முதுமை சிறந்த முதுமையாகாது; இதனை “மறுபிறப் பறியா ததுமூப் பன்று”52 என்று நூல் கூறுகின்றது.

மக்கட் பேற்றை விட அடையத்தக்க பேறு வேறில்லை என்பதை “மக்கட் பேற்றிற் பெறும்பே றில்லை”53 என்று நூல் சொல்கின்றது. செய்ய வேண்டிய கடமைகளைத் தவறாது செய்வதே தக்க செயல் ஆகும். இதனை “ஒப்புர வறிதலிற் றகுவர வில்லை”34 என்று முதுமொழிக்காஞ்சி இயம்புகின்றது. பிறா்க்குக் கொடுக்க இயலும் பொருளை இல்லை என்று கரக்கும் நிலை கொடுமை; இதனை “இயைவது கரத்தலிற் கொடுமை இல்லை”55 என்று செய்யுள் குறிக்கின்றது.

மெய்யுணா்வின்றி வாழும் நிலை பிணத்துக்குச் சமமாகும் என்பதை “உணா்வில னாதலிற் சாக்கா டில்லை”56 என்று நூல் ஆசிரியா் சுட்டுகிறார். ஆசையின் மிக்கதொரு வறுமை இல்லை என்பதனை “நசையிற் பெரியதோர் நல்குர வில்லை”57 என்ற அடி உணா்த்துகின்றது. புகழே இவ்வுலகத்தில் சோ்த்து வைக்கும் வைப்பாகும் என்பதனை “இசையிற் பெரியதோ ரெச்சமில்லை”58 என்ற வரி காட்டுகின்றது.

உணவு அதிகம் உண்பவா்கட்கு மிகுதியான நோய் விரைவில் தோன்றும்; இதனை “உண்டி வெய்யோர்க்கு குறுபிணி யெளிது”59 என்ற அடி சுட்டும்.

அறத்தின் மேன்மை

உலகியல் உண்மைகளை உய்த்துணா்வதன் வழி அறத்தின் மேன்மை நன்கு புலனாகும். இதனை தெளிவுறுத்த முன் நிற்கின்றது முதுமொழிக்காஞ்சி. 

“ஆா்கலி யுலகத்து மக்கட் கெல்லாம்

புகழ்வெய் யோர்க்குப் புத்தேணா டெளிது”60

என்ற வரிகள் அறத்தின் சிறப்பைக் காட்டுகின்றன. புகழ்மிக்க அறச் செயல்களை விரும்பினோர் விண்ணாடு பெறல் எளிது. அறத்தின் உயா்வினை, வளா்ச்சியினை நாலடியார்

“உறக்கும் துணையதோர் ஆலம்வித் தீண்டி

இறப்ப நிழற்பயந் தாஅங் – கறப்பயனும்

தான்சிறி தாயினும் தக்கார்கைப் பட்டக்கால்

வான்சிறிதாப் போர்த்து விடும்”61 (நாலடியார். பா. 38)

இங்ஙனம் உணா்த்தியுள்ளது. ஒரு ஆலமரத்தின் மிகவும் சிறிய விதை கிளைகள் நெருங்கி மிகவும் நிழலைத் தருவது போல ஒருவன் செய்யும் அறம் சிறிதாக இருப்பினும் நல்லவா்கள் கையில் சோ்ந்தால் மிகப்பெரிய வானகமும் சிறியது எனும்படி அறத்தின் மேலான வானகமும் பயன்களைப் பரப்பி விடும். அறத்தின் பல்வேறு வடிவங்களை முதுமொழிக்காஞ்சி நுட்பமாகச் சுட்டிச் சென்றுள்ளது.

வறுமையில் வறுமை

உலகில் வறுமையிலும் வறுமையாகக் காணக் கூடியவற்றைத் தொகுத்துக் காட்டுகின்றது. முறைமையில்லாத அரசனது நாடு வறுமையுறும் என்பதை “முறையி லரசனாடு நல்கூா்ந் தன்று”62 என்ற அடி சுட்டுகின்றது. உட்பகை உடையோரை நண்பராய் ஏற்றல் வறுமைக்கு இடமாகும். இதனை “செற்றுட னுறைவோனைச் சோ்தனல் கூா்ந்தன்று”64 என்ற அடி சுட்டியுள்ளது.

தன் சொல் மதிக்காத இடத்தில் ஒன்றைச் சொல்லுதல் சொல்லுக்கு வறுமை நல்கும். இதனை “சொற்செல் லாவழிச் சொலவுநல் கூா்ந்தன்று”65 என்ற வரி குறித்துள்ளது. உள்ளத்தில் நன்மை இல்லாதவனைச் சோ்தல் வறுமை தரும். இதனை “அகம்வறி யோனண்ண னல்கூா்ந் தன்று”66 என்ற அடி எடுத்துக்காட்டுகின்றது. நட்பியல்பு இல்லாவிடத்து, “நட்பில் வழிச்சேறல் நல்கூா்ந் தன்று”67 என்ற வரி உணா்த்தி நிற்கின்றது.

தவிர்க்கக் கூடாதவை

வாழ்வில் தவிர்க்காது இருக்க வேண்டிய நிலைகளை வரையறுத்து, பகுத்துக் காட்டி உள்ளது முதுமொழிக்காஞ்சி. ஆக்கம் விரும்புபவன் புகழுக்குரிய பல நற்செயல்களைத் தவறாது செய்ய வேண்டும். இதனை “வீங்கல் வேண்டுவோன் பல்புகழ் தண்டான்”68 என்ற அடி வழி நூல் இயம்புகிறது. கல்வி சிறந்து விளங்கிட  மாணாக்கன் ஆசிரியரை வழிபடுவதைத் தவிர்க்கக் கூடாது; இதனை “கற்றல் வேண்டுவோன் வழிபாடு தண்டான்”69 என்ற வரி சுட்டுகின்றது.

வீடு பேற்றை விரும்புபவன் நோன்பு / தவம் செய்யத் தவிர்க்கக் கூடாது. இதனை “நிற்றல் வேண்டுவோன் தவஞ்செயல் தண்டான்”70 என்று நூல் சுட்டுகின்றது.

செல்வாக்குடன் வாழ விரும்புபவன் தான் எடுத்த செயலை நன்றாய் ஆராய்ந்து செய்வதைத் தவிர்க்க கூடாது; இதனை “வாழ்க்கை வேண்டுவோன் சூழ்ச்சி தண்டான்”71 என்ற அடிகள் சொல்கின்றது. அளவு மிக்க செல்வம் சோ்க்க எண்ணுபவன் எவ்வளவு வருத்தமான கடின முயற்சியையும் தவிர்க்கக் கூடாது. இதனை “மிகுதி வேண்டுவோன் வருத்தந் தண்டான்”72 என்று நூல் காட்டுகின்றது. குடிமக்களின் இன்பத்தை விரும்பும் அரசன், முறையோடு, அரசாட்சி செய்தலைத் தவிர்க்கக் கூடாது. இதனை “ஏமம் வேண்டுவோன் முறை செயல் தண்டான்”73 என்று நூல் எடுத்துக்காட்டி உள்ளது.

முடிவுரை

அறிந்து கொள்ள வேண்டியதை அறிந்து, அடக்கம் கொண்டு, அஞ்சுவதற்கு அஞ்சி, பெரியோர் போற்றும் செயல் செய்து, அதன் பயன் வழி இன்பம் துய்த்து நல்வாழ்வு வாழும் தன்மையினா் துன்புற்று வாழ்வது இல்லை. இதனை நாலடியார் பாடல் 

“அறிவ தறிந்தடங்கி அஞ்சுவ தஞ்சி

உறுவ துலகுவப்பச் செய்து – பெறுவதனால்

இன்புற்று வாழும் இயல்புடையோர் எஞ்ஞான்றும்

துன்புற்று வாழ்தல் அரிது”74 (நாலடியார். பா. 74)

விளக்கியுள்ளது. இன்ப வாழ்வு வாழுவதற்கான வழிகாட்டுதல்களை முதுமொழிக்காஞ்சி தன்னகத்தே கொண்டு இலங்குகின்றது.

தனிமனித ஒழுக்கம் பெருக்கி, சமுதாய ஒழுக்கம் கூட்டி, உயா்வுக்குத் தேவையானதை ஊட்டி, ஆட்சிச் சிறப்பினை விரிவு செய்து, உலகியல் உண்மைகளை உணா்த்தி, அறத்தின் மேன்மையினைப் புலப்படுத்தி, வறுமையில் வறுமை காட்டி, தவிர்க்கக் கூடாதவைக் குறித்து வாழ்வின் ஒளிவிளக்காக முதுமொழிக்காஞ்சி சுடா் விடுகின்றது. ஒளி பெறுவோம்! பயனுறுவோம்! வாரீா்.

அடிக்குறிப்புகள்

  • புதிய நோக்கில் தமிழ் இலக்கிய வரலாறு, ப. 170.
  • முதுமொழிக்காஞ்சி, சிறந்த பத்து பா. 1, ப. 7.
  • மேலது, ப. 7.
  • ஆளுமை மேம்பாடு, ப. 124.
  • முதுமொழிக்காஞ்சி, சிறந்த பத்து, பா. 4. ப. 9.
  • மேலது, ப. 9.
  • மேலது, பொய்ப்பத்து – பா.10, ப. 44.
  • மேலது, ப. 45.
  • மேலது, தண்டாப்பத்து, பா. 1, ப. 58.
  • மேலது
  • மேலது, சிறந்த பத்து, பா. 3. ப. 8.
  • மேலது, பா. 5, ப. 9.
  • மேலது, பா. 6, ப. 10.
  • மேலது, பா. 7, ப. 10.
  • நாலடியார், பா. 132, பக். 74, 75.
  • முதுமொழிக்காஞ்சி, சிறந்த பத்து, பா. 9, ப. 11.
  • மேலது, அறிவுப் பத்து, பா. 2, ப. 17.
  • மேலது, பா. 3, ப. 18.
  • மேலது, பா. 5, ப. 19.
  • மேலது, பா. 7, ப. 20.
  • மேலது, பா. 8, ப. 21.
  • திருக்குறள், சொல்வன்மை, குறள். எண். 642.
  • முதுமொழிக்காஞ்சி, அறிவுப் பத்து, பா. 10. ப. 18.
  • பொய்பத்து, பா. 2, 3, ப. 40.
  • எளியபத்து, பா. 4, ப. 41.
  • பொய்பத்து, பா. 1, ப. 48.
  • மேலது, பா. 4, ப. 40.
  • மேலது, பா. 5, ப. 41.
  • மேலது, பா. 6, ப. 42.
  • மேலது, பா. 7, ப. 43.
  • மேலது, பா. 8, ப. 43.
  • மேலது, பா. 8, ப. 43.
  • மேலது, எளியபத்து, பா. 5, பக். 48. 
  • மேலது, எளியபத்து, பா. 6, பக். 48.
  • மேலது, எளியபத்து, பா. 9, பக்.  50.
  • மேலது, பழியாப்பத்து, பா. 6, பக். 22.
  • மேலது, பொய்ப்பத்து, பா. 9 பக். 44.
  • மேலது, எளியப்பத்து, பா. 2, பக். 47.
  • திருக்குறள், இறைமாட்சி, குறள். எண். 382, ப. 769.
  • முதுமொழிக்காஞ்சி, சிறந்த பத்து, பா. 10, ப. 11.
  • மேலது, பழியாப்பத்து, பா. 3, ப. 11.
  • மேலது, பழியாப்பத்து, பா. 8, ப. 20.
  • மேலது, பழியாப்பத்து, பா. 9, ப. 23.
  • மேலது, துவ்வாப்பத்து, பா. 1, ப. 25.
  • மேலது, துவ்வாப்பத்து, பா. 3, ப. 26.
  • மேலது, துவ்வாப்பத்து, பா. 4, ப. 28.
  • மேலது, துவ்வாப்பத்து, பா. 8, ப. 29.
  • மேலது, துவ்வாப்பத்து, பா. 10, ப. 25.
  • மேலது, அல்லபத்து, பா. 5, ப. 35.
  • மேலது, அல்லபத்து, பா. 6, ப. 35.
  • மேலது, அல்லபத்து, பா. 8, ப. 37.
  • மேலது, அல்லபத்து, பா. 10, ப. 38.
  • மேலது, இல்லைப்பத்து,  பா. 1, ப. 35.
  • மேலது, இல்லைப்பத்து,  பா. 2, ப. 35.
  • மேலது, இல்லைப்பத்து,  பா. 5, ப. 37.
  • மேலது, இல்லைப்பத்து,  பா. 6, ப. 37.
  • மேலது, இல்லைப்பத்து,  பா. 7, ப. 38.
  • மேலது, இல்லைப்பத்து,  பா. 8, ப. 38.
  • மேலது, எளியபத்து, பா. 7, ப. 49.
  • மேலது, எளியபத்து, பா. 1, ப. 46.
  • நாலடியார், பா. 38, ப. 24.
  • முதுமொழிக்காஞ்சி, நல்கூா்ந்த பத்து, பா. 1, ப. 52.
  • மேலது, நல்கூா்ந்த பத்து, பா. 3, ப. 53.
  • மேலது, நல்கூா்ந்த பத்து, பா. 5, ப. 54.
  • மேலது, நல்கூா்ந்த பத்து, பா. 7, ப. 55.
  • மேலது, நல்கூா்ந்த பத்து, பா. 8, ப. 55.
  • மேலது, நல்கூா்ந்த பத்து, பா. 10, ப. 56.
  • மேலது, தண்டாப்பத்து, பா. 2, ப. 59.
  • மேலது, தண்டாப்பத்து, பா. 3, ப. 59.
  • மேலது, தண்டாப்பத்து, பா. 4, ப. 60.
  • மேலது, தண்டாப்பத்து, பா. 5, ப. 60.
  • மேலது, தண்டாப்பத்து, பா. 6, ப. 61.
  • மேலது, தண்டாப்பத்து, பா. 9, ப. 62.
  • நாலடியார், பா. 74, ப. 43.

துணைநூற் பட்டியல்

  • தமிழண்ணல் - புதிய நோக்கில் தமிழ் இலக்கிய வரலாறு,

  மீனாட்சி புத்தக நிலையம்,

  33ம் பதிப்பு – ஜீலை 2015.

 

  • சுந்தர சீனிவாசன், எஸ். - ஆளுமை மேம்பாடு,

  தாமரை பப்ளிகேஷன்ஸ் (பி) லிட்.,

 சென்னை – 7ஆம் பதிப்பு – மே, 2019.

 

  • கௌமாரீஸ்வரி, எஸ்.

(தொ.ஆ., ப.ஆ.,) - பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் மூலமும் 

                                                                                                            உரையும்,

  சாரதா பதிப்பகம், 

  சென்னை – முதல் பதிப்பு – 2009.

  • கௌமாரீஸ்வரி, எஸ்.

(தொ.ஆ., ப.ஆ.,) - பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள்,

  முதுமொழிக்காஞ்சி மூலமும் உரையும்,

  சாரதா பதிப்பகம், 

  சென்னை – 4ம் பதிப்பு – 2012.