ஜூலை 2024 இதழுக்கு ஆய்வுக்கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன

சுஜாதாவின் இலக்கிய ஆளுமை

சா.அனி கரோலின், முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ் உயராய்வு மையம் , ராணி அண்ணா அரசு மகளிர் கல்லூரி, திருநெல்வேலி. 04 Feb 2021 Read Full PDF
  • நெறியாளர்: முனைவர் ஆ. விஜயலெட்சுமி, உதவிப் பேராசிரியர் , தமிழ் உயராய்வு மையம் , ராணி அண்ணா அரசு மகளிர் கல்லூரி, திருநெல்வேலி.

 

தமிழ் இலக்கிய உலகில் எழுத்தாளா ‘சுஜாதா’ என்ற ஸ்ரீரங்கம் ரங்கராஜன் தமிழ் இலக்கியத்துறைக்குப் பெரும்பங்காற்றியவர். இவரது முதல் கதை „இடது ஓரத்தில்‟ எனும் படைப்பு 1962-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 23-இல் ‘குமுதம்’ பத்திரிகையில் பிரசுரமானது. அன்று தொடங்கி கிட்டத்தட்ட 46-ஆண்டுகளுக்கு மேல் எழுத்துப்பணிக்குப் பெரும்பங்காற்றியவர். அவருடைய உயரிய பணிகளுக்கு இடையே புதுக்கவிதை (1), சிறுகதைகள்(40), புதினங்கள் (60), குறுநாவல்கள்(40), கட்டுரை நூல்கள்(20), மேடை நாடகங்கள் (15), உரை நூல்கள்(3), பிறநூல்கள் (2), துப்பறியும் தொடர்கதை முதலான நவீன இலக்கிய வகைமைகள் சார்ந்த நூல்களை வெளியிட்டுச் சாதனை படைத்தவர். 10-க்கு மேற்பட்ட படங்களுக்குத் திரைக்கதை எழுதி திரையுலகிற்கு முக்கியப் பங்காற்றியவர். வெகுசன பத்திரிகை எழுத்தாளராகவும் விளங்கியவர். தமிழ் எழுத்துலகில் எழுத்தாளர் சுஜாதாவின் பங்களிப்பு அழுத்தமானது; ஆழமானது; உயிரோட்டமானதாகும். விகடனின், ‘கற்றதும் பெற்றதும்’ இதழில் நான்கு பாகங்களிலும் அவரது படைப்புகள் வெளிவந்துள்ளன. இந்நான்கு பாகங்களுள் முதல் பாகத்தில் வெளிவந்துள்ள இலக்கிய வகைமைகளை ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பெற்று அவரது ‘இலக்கிய ஆளுமை’ குறித்து இக்கட்டுரையில் ஆராயப்பெற்றுள்ளது.

 

ஆளுமை - சொல் - பொருள் விளக்கம்

‘ஆளுமை’ என்ற தமிழ்ச் சொல்லை ஆங்கிலத்தில் ‘Personality’ என்று குறிப்பர். மேலும், ‘Personality’ எனும் சொல் “ ‘Persona’ எனும் இலத்தீன் மொழிச் சொல்லிலிருந்து பிறந்ததாகும்” (அ.மீனாட்சி சுந்தரம், 2009:215). ஆளுமை என்பதற்கு பல்வேறு அறிஞர்கள் பல்வேறு வரையறைகளைத் தந்துள்ளனர். அகராதிகள். கலைக்களஞ்சியம், வாழ்வியல் களஞ்சியம் ஆகியவற்றில் இவை குறித்த வரையறைகள் காணப்படுகின்றன. இங்கு ஆய்வுக் கட்டுரையின் அளவைக் கருத்தில் கொண்டு வாழ்வியல் களஞ்சியம் கூறும் வரையறையை மட்டும் கொடுக்கப்பெற்றுள்ளது. “தனிமனிதனுடைய எண்ணங்கள், செயல்படும் முறை, நடத்தைகள், அவன் பிறரிடம் பழகும் முறை, மனப்பான்மைகள், அவன் வாழ்க்கையைப் பற்றிக் கொண்டுள்ள கண்ணோட்டம், அறிவாற்றல், உணர்ச்சி வெளிப்பாடுகள் ஆகிய பல கூறுகள் இணைந்த தொகுப்பிலிருந்து அவனுக்கு ஏற்படும் ஒரு தனித்தன்மையே அவனது ஆளுமை எனப்படும்” என விளக்குகிறது (வாழ்வியற் களஞ்சியம், தொகுதி - ஐஐ).

 

இலக்கியமும் ஆளுமையும்

‘இலக்கியமும் ஆளுமையும்’ எனக் காணும்போது, 1.இலக்கியப் படைப்பாளிகளின் ஆளுமை, 2.இலக்கியத்தில் பயின்றுவரும் பாத்திரஙகளின் ஆளுமை, 3.இலக்கியம் ஆளுமை வளர்ச்சிக்கு உந்து சக்தியாக அமைவதைக் காண்பது” என மூன்று நோக்கு நிலைகளில் காணவேண்டும் என்கிறார் இரா.காஞ்சனா(2015:124). மேலும் அவர் (2015:126), “இலக்கிய வழி ஆளுமை வளர்ச்சிக்கு வித்திடப்படுவதையும் காணமுடியும்” என்கிறார். இக்கருத்தின் மூலம் இலக்கியம் ஒரு படைப்பாளியின் ஆளுமையைத் தீர்மானிக்கிறது என அறிந்துகொள்ள முடிகின்றது.

 

படைப்பாளியின் ஆளுமை

ஒவ்வொரு படைப்பாளிக்கும் தனித்தனி ஆளுமை உண்டு. அவர்களுக்கென தனித்த பண்புகள் உண்டு. இத்தகைய, “படைப்பாளிகளின் தனிமனித ஆளுமைப் பண்புகளை வெளிக்கொணர அவர்களது படைப்புகளை முதன்மை ஆதாரமாகக் கொண்டாலும் அவர்களது பிற எழுத்துக்கள் அவர்களைப் பற்றிய பிறரது திறனாய்வுகள், அவர்களது நாட்குறிப்புகள், வரலாற்றுச் செய்திகள், அவர்கள் எழுதிய கடிதங்கள், அவருக்குப் பிறர் எழுதிய கடிதங்கள், பதிவுசெய்யப்பட்ட பிற ஆதாரங்கள் போன்ற பலவற்றையும் துணைமை ஆதாரமாகக் கொள்வது அவசியம். அப்போதுதான் அவர்களது ஆளுமை பற்றிய நம் கணிப்புகள் சரியானதாக அமையும்” என்கிறார் (இரா.காஞ்சனா,2015:125). ஒரு படைப்பாளியின் படைப்பு ஆளுமையை உணர்ந்துகொள்ள “படைப்பாளியின் தானெனும் உணர்வு (ego), சுயம் (self), ஆளுமை (Personality)” (பொன்மணி,2016:63) பற்றி விளக்கப்பட்டிருப்பதைக் காணவேண்டும். இத்தகைய வரையறைகளை உள்வாங்கிக்கொண்டு எழுத்தாளர் சுஜாதாவின் படைப்புகள், அவருடைய விமர்சனங்கள், அவர் இலக்கியத்தின் மீதுகொண்டுள்ள ஆழம், அறிவியல் பார்வை மற்றும் அவர் மேற்கொண்டுள்ள சில பண்புகளின் அடிப்படையில் படைப்பாளியின் ஆளுமை பற்றி ஆராயப்பெற்றுள்ளது.

 

கற்றதும் பெற்றதும்; பாகம்-I

‘கற்றதும் பெற்றதும்’ எனும் இதழின் முதல் பாகத்தில் சங்க இலக்கியம் முதல் இன்றைய நவீன இலக்கியப் படைப்புகள் வரை இடம்பெற்றுள்ளன. சங்க கால இலக்கியம், சங்க மருவிய கால இலக்கியம், பக்தி இலக்கியம், புராணம், இதிகாசம், பாரதியார் கவிதைகள், புதுக்கவிதை முதல் சைஃபிகூ கவிதைகள் வரை இடம்பெற்றுள்ளன. இப்படைப்புகளில் அறிவியல் கருத்தாக்கங்களைக் கருப்பொருளாகக் கொண்ட கவிதைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பெற்றுள்ளதைக் காணமுடிகின்றன.

 

சங்க கால இலக்கியம்

எழுத்தாளர் சுஜாதா, சங்க கால இலக்கியத்தில் இவ்விதழில் நான்கு பாடல்களைப் பதிவுசெய்து அவை குறித்து விளக்கியுள்ளார். சங்க இலக்கியங்களில் நூறு பாடல்களுக்கு மேல் பாடிய ஐந்து பேரில் முதன்மையானவர் கபிலர் ஆவார். இவர் எட்டுத்தொகை, பத்துப்பாட்டுகளில் மொத்தம் 235-பாடல்கள் அகம் - புறம் இரு துறைகளிலும் பாடியுள்ளார். கபிலர் பாடிய பாடல்களுள் ஐங்குறுநூற்றில் இடம்பெற்றுள்ள 292-ஆம் பாடல் இன்றைய பெண்ணியச் சிந்தனையாளர் களுக்கும், சங்க காலத்தைப் பொற்காலம் என்று கூறுபவர்களுக்கும் வருத்தத்தைத் தரக்கூடிய பாடல் என்று குறிப்பிட்டுள்ளார். இங்கு இப்பாடலை மட்டும் சான்றாகக் கொண்டு ஆராயப்பெற்றுள்ளன.

“மயில்கள் ஆலப் பெருந்தேன் இமிர

 தண்மழை தழீஇய மாமலை நாட

 நின்னினும் சிறந்தனள் எமக்கே நீநயந்து

 நன்மனை அருங்கடி அயர

 எம்நலம் சிறப்ப யாம் இனிப் பெற்றோளே”

 

என வாரிசு வேண்டி இரண்டாம் திருமணம் செய்து கொண்ட தலைவனை நோக்கி அவன் முதல் மனைவி பாடுவதாக இப்பாடல் அமைந்துள்ளது. இப்பாடல், “மயில்கள் ஆடவும்

 

தேனீக்கள் பாடவும் குளிர்ந்த மேகங்கள் தழுவும் பெரிய மலை நாட்டுக்கு உரியவனே... நீ விரும்பி இந்தப் பெண்ணைத் திருமணம் செய்துகொண்டு வந்து விட்டாய். (என்ன செய்வது) என்னுடைய இல்லற வாழ்க்கை சிறப்பாக அமைவதற்காக எனக்குத் துணையாக வந்திருக்கும் இவள் எனக்கு உன்னை விட நல்லவள்!” (கற்றதும் பெற்றதும்-I, ப.109) என்று தலைவனின் நலம் பேணும் பொருட்டு விட்டுக்கொடுக்கும் பெண்கள் சங்க காலத்தில் இருந்துள்ளனர். ஆனால், இன்று அத்தகைய பெண்களைக் காணவில்லை என்பதைச் சமூகச் சிந்தனையோடு மறுவாசிப்பிற்கு உட்படுத்தியது சுஜாதாவின் இலக்கிய ஆளுமையைப் புலப்படுத்துகிறது.

 

யாப்பு இலக்கணம் - பா வகைகள்

 

பரந்தாமனாரின் ‘கவிஞராக’ எனும் நூல் யாப்பிலக்கணத்தைத் தெளிவாக விரிவாகச் சொல்லித் தருகிறது. தமிழில் கவிதை எழுத வருபவர்கள் அனைவரும் யாப்பிலக்கணம் படிக்கவேண்டும் என்று விரும்புகிறேன். ஏன், கதை எழுதுபவர்களுக்குக்கூட யாப்பு தெரிந்திருப்பது ஒரு சௌகரியம். எனக்கு உத்தரவாதமாக இது உதவியிருக்கிறது. யாப்புக்குப் பயப்பட வேண்டியதே இல்லை. தமிழ் மொழியின் யாப்பு ஓர் அழகான கட்டம் போன்றது. யாப்பில் எழுதுவது ஒரு விளையாட்டுப் போல. சில விதிகள் கொண்டு விளையாட்டு. இதை சுவாரஸ்யமாக ஆடமுடியும். உதாரணமாக இந்தப் பாடலைப் பாருங்கள்.

 

“முன்னை அத்தனை பொய்களைக் கேட்டபின்

 மூடரான நாம் இன்றும் திருந்திவோம்

 இன்னும் எத்தனை எத்தனை தேர்தலோ

 இன்னும் எத்தனை பச்சைத் துரோகமோ

 அன்னை மீண்டுமோர் வருடம் ஆள்வரோ

 அதற்கு முன் கலைஞர் வருவரோ

 என்ன கட்சி இடம் பிடிக்குமோ நம்

 இன்னல்கள் கொஞ்சமேனும் குறையுமோ”

 

என்று சுட்டியுள்ளார். இது தமிழிலேயே மிகக் கடினமான யாப்பமைப்பைக் கொண்ட நேரிசைக் கட்டளைக் கலிப்பா. இதன் இலக்கணம் ஒவ்வொரு அரை அடியிலும் ஒற்றெழுத்து (புள்ளி வைத்த எழுத்து) களை நீக்கிவிட்டு எண்ணிப் பார்த்தால் 11 எழுத்துக்கள் இருக்கவேண்டும். இப்படிப்பட்ட கடினமான விதியிருந்தாலும் 11 நிமிடத்தில் என்னால் இதை எழுத முடிந்தது. இத்தனைக்கும் நான் கவிஞனல்ல” (கற்றதும் பெற்றதும்-ஐஇப.121) என்று குறிப்பிட்டுள்ளார். இது அவரின் இலக்கணம், இலக்கிய மீது கொண்டுள்ள ஆழ்ந்த புலமையை வெளிப்படுத்துகிறது.

 

இலக்கிய சிந்தனையும்; அறிவியல் பார்வையும்

“உலகத்தின் இயற்கை, ஊழின் காரணமாக இருவேறு வகைப்படும். செல்வம் உடையவராதலும் வேறு; அறிவு உடையவராதலும் வேறு” என்று (குறள்.374) திருவள்ளுவர் குறிப்பிட்டுள்ளார். அதுபோல், இலக்கியம் வேறு, அறிவியல் வேறு. முன்னதில் உணர்ச்சி, கற்;பனை போன்றவை முதன்மையான இடத்தைப்பெறும்; பின்னதில் அறிவுத் திறன் மேலோங்கி நிற்கும். இவ்வகையில் சுஜாதா தனிப்பட்;ட ஆளுமைத் திறன் கொண்டவராக விளங்குகின்றார். அவரிடம் உணர்ச்சியும் கற்பனையும் மிகுந்த இலக்கிய சிந்தனை இருக்கின்றது. பொறியியல் மாணவர் என்பதால் அறிவியல் பார்வையும் காணப்படுகிறது. அவர் இலக்கியத்தின் வழி அறிவியலைப் பார்க்கின்றார். “அறிவியலைத் தமிழில் எழுதத்தேவையான கலைச் சொல்லாக்கம் பற்றி சுஜாதாவின் கருத்து செயல்படுத்த எளியது” என்கிறார் இரா. முருகன்(2020:48). கவிதை, கதை, நாடகம் எனும் கற்பனை வளம் பொருந்திய கலை வடிவங்களைப் படைத்துத் தந்துள்ள சுஜாதா, தமது கூர்மையான அறிவுத் திறன் வெளிப்படும் வகையில் அரிய அறிவியல் சார்ந்த கட்டுரைகளையும் சமூகப் பிரச்சனைகளை மையமாகக் கொண்ட புனைகதைகளையும் நூலாக்கம் செய்துள்ளார்.

இன்று பெண் கவிஞர், ஆண் கவிஞர் என்ற பால்வேறுபாடு பார்க்கின்றோம். இவ்வேறுபாடு தேவை இல்லாததது என்ற கருத்தைச் சமூகத்திற்கு எடுத்துரைப்பதைக் காணமுடிகின்றது. பெண் கவிஞர் என்கிற பாகுபாடு தேவைதானா என யோசித்தோம். அடுத்த நூற்றாண்டில் கவிதை என்ன ஆகும் என்று வியந்தோம். கம்யூட்டர்கள் கவிதை எழுதத் துவங்கிவிடும். முதலில் சினிமாப் பாடல்கள், பின்னர் பிரம்மராஜன், பெருந்தேவி வகைக்கவிதைகள். சிந்திக்கத் துவங்கியதும் மனிதனுக்குப் போட்டியாகக் கவிதைகள் எழுதிவிடும் என்று, “நல்லதோர் வீணை செய்தே – அதை, நலங்கெடப் புழுதியில், எறிவதுண்டோ?” என்ற பாரதியாரின் தமிழ்க் கவிதை வடிவத்தை எடுத்துக்கொண்டு அறிவியல் பார்வையோடு கவிதையைக் கொடுத்துள்ளார்.

 

“சொல்லடா சிவசாமி என்னைச்

 சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய்

 எல்.எஸ்.ஐ தாராயோ

 இந்த இன்டர்நெட் பயனுற வாழ்வதற்கே..?”

 

மனநிறைவு தந்த இம்மாதிரி நிகழ்ச்சி ஏன் தூர்தனிலோ, ததொகா சானல்களிலோ அமைப்பதில்லை என்று வருத்தமாக இருந்தது” (கற்றதும் பெற்றதும் – I, ப.28) என்று தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருப்பது எழுத்தாளர் சுஜாதாவின் இலக்கிய ஆளுமையையும் அறிவியல் பார்வையையும் உணர்த்துகின்றது. இதேபோல் மற்றொரு கவிதையையும் அறிவியல் பார்வையோடு படைத்துள்ளதைக் காணமுடிகின்றது.

ஒளவையார் ஆத்திசூடி மூலம் பல அறக்கருத்துகளை வழங்கியவர். அதேபோல், பாரதியாரும் ஆத்திசூடியில், “ரௌத்திரம் பழகு” என்று கூறியுள்ளார். இவ்வரிக்கு „கோபத்தை அடக்க வேண்டும்‟ என்பது பொருளாகும். இக்கோபம் தான் இதயநோய்களின் பாதிப்புக்குக் காரணம், மீதிதான் கொலஸ்ட்ரால், பிபி (BP), டயாபடிஸ் போன்றவற்றைக் குற்றம்சாட்ட

முடியும்‟ என்கிறார். இதற்கு, ‘வில்லியம் ப்ளேக்கின்’ அருமையான வரிகளை மேற்கொள் காட்டுகிறார்.

 

ஆங்கிலக் கவிதை

சுஜாதாவின் தமிழ் மொழிபெயர்ப்புக் கவிதை

“ I am angry with my friend

  I told my wrath,

  My wrath did end

  I am angry with  my foe

  I told it not,

  My wrath did grow”

“ நண்பன்மேல் கோபப்பட்டேன் 

   கோபத்தைச் சொன்னேன்

   கோபம் முடிந்தது

   எதிரிமேல் கோபப்பட்டேன்.

   அதைச் சொல்லவில்லை.

   கோபம் வளர்ந்தது …”

 

 

எதிரிகள் இல்லையேல் கோபம் இல்லை. கோபத்துக்கு வடிகால் வேண்டும். அது இல்லையேல் ஹார்ட் அட்டாக் வரும்” (கற்றதும் பெற்றதும்-I,ப.112) என்கிறார். இங்கு பாரதியாரின் அறச்சிந்தனையின் வெளிப்பாடுதான் ‘ரௌத்திரம் பழகு’ என்பதாகும். அதாவது கோபத்தை அடக்கவேண்டும் என்றார். எழுத்தாளர் சுஜாதா, பாரதியாரின் அறச்சிந்தனையின் வழி அறிவியல் சார்ந்த கருத்துகளைப் புலப்படுத்தியுள்ளார். இது சுஜாதாவின் இலக்கிய ஆளுமையையும் அறிவியல் ஆளுமையையும் வெளிப்படுத்துகின்றது.

 

சைஃபிகூ கவிதை

நவீன இலக்கியங்களில் புதுக்கவிதைக்கு அடுத்தநிலையில் வந்திருப்பது ஹைக்கூ, சென்ட்ரீயூ கவிதைகள் ஆகும். இக்கவிதைகள், “அடுத்த நூற்றாண்டுக் கவிதை எப்படியிருக்கும் என்பதைப் பற்றி யோசித்தோம். www.poetry.com என்னும் வலை முகவரியில் விடை கிடைக்கிறது. நண்பர் இரா.முருகன் அமெரிக்காவில் இருந்து இதைக் குறிப்பிட்டிருக்கிறார் என்று சுஜாதா குறிப்பிட்டுள்ளார். ‘சயின்ஸ் ஃபிக்ஷன்’ எனும் விஞ்ஞானக் கதைகள் முதலில் ஹைக்கூ வடிவம் பெற்று, ‘சைஃபிகூ’ என்று ஒரு புதிய பாவினத்தை 1995-லிருந்து கொண்டு வந்திருக்கிறார்கள். விஞ்ஞானக் கற்பனைகளைப் பற்றி ஹைக்கூ எழுதுவது அதன் நோக்கம். சம்பிரதாயமான ஹைக்கூவின் பதினேழு அசை, பருவக்குறிப்பு போன்ற விதிகளை அப்படியே கடைப்பிடிக்கத் தேவையில்லை. விஞ்ஞானம் சார்ந்த கற்பனைக் கருத்தை ஹைக்கூ வடிவில் முயற்சிக்க வேண்டும்‟ என்கிறார்கள். உதாரணம்...

“எரிகற்கள்

 ஒரு சப்தமுமின்றி மோத,

 சிதறல்களினூடே செல்கிறோம்...”

(கற்றதும் பெற்றதும் – I, ப.30) விண்வெளிப் பயணம் பற்றிய சைஃபிகூ இது. இதுபோல் பல உதாரணங்கள் இந்த வலைமனையில் உள்ளன. எழுத்தாளர் சுஜாதா தன் முயற்சியின் மூலம்,

“சந்திரனில் இறங்கினேன்...

 பூமியில் புறப்படும்போது,

 கதவைப் பூட்டினேனோ? ”

(கற்றதும் பெற்றதும்-பாகம்-I,ப.30) எனும் கவிதையைத் தந்துள்ளார். இது எழுத்தாளரின் படைப்பாக்கத்திறனை உணர்த்துகின்றது.

இறுதியாக, ஒருவனுக்குப் பல கூறுகள் இணைந்த தொகுப்பிலிருந்து ஏற்படும் ஒரு தனித்தன்மையே அவனது ஆளுமை என இக்கட்டுரை உணர்த்துகின்றது. இலக்கியங்களில் காணப்பெறும் சமூகச் சிக்கல்களை வாசகர்களின் மறுவாசிப்பிற்கு உட்படுத்துவது எழுத்தாளரின் சமூகச் சிந்தனையையும் இலக்கிய ஆளுமையையும் புலப்படுத்துகின்றது. எழுத்தாளர் சுஜாதா ழுத்தாளர் சுஜாதா புலவர்கள், கவிஞர்களின் இலக்கிய வடிவங்களை எடுத்துக்கொண்டு அவற்றில் அறிவியல் சார்ந்த கருத்துகளைப் புலப்படுத்தியிருப்பது அவரின் இலக்கிய ஆளுமையையும் அறிவியல் பார்வையையும் வெளிப்படுத்துகின்றது. கவிதை எனும் கற்பனை வளம் பொருந்திய கலை வடிவங்களைப் படைத்துத் தந்துள்ள சுஜாதா, தமது கூர்மையான அறிவுத்திறன் வெளிப்படும் வகையில் அரிய அறிவியல் சார்ந்த கட்டுரைகளையும் சமூகப் பிரச்சனைகளை மையமாகக் கொண்ட புனைகதைகளையும் நூலாக்கம் செய்துள்ளார் என்பதை இவ்வாய்வுக் கட்டுரை வழி கண்டறியப்பெற்றுள்ளது.

 

முதன்மை நூல்

1.  சுஜாதா, 2016: கற்றதும் பெற்றதும், பாகம்-I, சென்னை: விகடன் பிரசுரம் வெளியீடு.

 

துணை நின்ற நூல்கள்

1. காஞ்சனா, இரா., 2015: ஆளுமை வளர்ச்சியும் ஆளுமைக் கோட்பாடுகளும், மதுரை: விஷ்ணுப்பிரியா பதிப்பகம் வெளியீடு.

2. பாலுசாமி, நா., (மு.பதி.ஆ)., ஆளுமை, வாழ்வியற் களஞ்சியம், தொகுதி - இரண்டு, தஞ்சாவூர்: தமிழ்;ப் பல்கலைக்கழகம் வெளியீடு.

3. பொன்மணி, 2016: ஜெயகாந்தனின் படைப்பு ஆளுமை, மதுரை: மீனாட்சி புத்தக நிலையம் வெளியீடு.

4. முருகன், இரா., 2020: இந்திய இலக்கியச் சிற்பிகள் - சுஜாதா, புதுடெல்லி: சாகித்திய அகாதெமி வெளியீடு.

5. மோகன், இரா., 2009: இலக்கிய ஆளுமைகள், மதுரை: மீனாட்சி புத்தக நிலையம் வெளியீடு.