ஜூலை 2024 இதழுக்கு ஆய்வுக்கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன

எட்டுத்தொகையில் காணலாகும் ஒலி உவமைகள்

செ.முத்துமாரி, முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ் உயராய்வு மையம், இராணி அண்ணா அரசு மகளிர் கல்லூரி, திருநெல்வேலி. 04 Feb 2021 Read Full PDF

ஆய்வுச்சுருக்கம்

எட்டுத்தொகை நூற்களில் காணலாகும் ஒலி உவமைகளுள் ‘இயற்கை ஒலி’ பற்றிய செய்திகளை ஆய்வதாக அமைகிறது. வானத்தின் இடிக்கு முரசு ஒலியை ஒப்புமைப்படுத்திக் கூறிய சிறப்பினையும், கடலின் ஒலிக்கு முரசு, பறை, இடி, யானையின் முழுக்கம் ஆகியவற்றின் ஒலியை உவமையாகக் கூறிய விதத்தினையும், அருவி ஒலிக்கு தண்ணுமை, முரசு, மத்தளம், பறை போன்ற ஒலிகளோடு ஒப்புமைப்படுத்திக் கூறிய நுட்பத்தினையும், காற்றின் ஒலிக்கு யானையின் உயிர்ப்பு, குழலோசை, அருவியின் ஓசை, சிலம்பின் பரல் ஒலி, பறை ஆகியவற்றோடு ஒப்பிட்டுக் கூறியுள்ள திறத்தினையும், இக்கட்டுரையானது கூறுகிறது. 

எட்டுத்தொகை நூற்களில் காணலாகும் ஒலி உவமைகளுள் ‘இயற்கை ஒலி’ பற்றிய செய்திகளை ஆய்வதாக அமைகிறது. வானத்தின் இடிக்கு முரசு ஒலியை ஒப்புமைப்படுத்திக் கூறிய சிறப்பினையும், கடலின் ஒலிக்கு முரசு, பறை, இடி, யானையின் முழுக்கம் ஆகியவற்றின் ஒலியை உவமையாகக் கூறிய விதத்தினையும், அருவி ஒலிக்கு தண்ணுமை, முரசு, மத்தளம், பறை போன்ற ஒலிகளோடு ஒப்புமைப்படுத்திக் கூறிய நுட்பத்தினையும், காற்றின் ஒலிக்கு யானையின் உயிர்ப்பு, குழலோசை, அருவியின் ஓசை, சிலம்பின் பரல் ஒலி, பறை ஆகியவற்றோடு ஒப்பிட்டுக் கூறியுள்ள திறத்தினையும், இக்கட்டுரையானது கூறுகிறது. 

 

திறவுச்சொற்கள்:

 

எட்டுத் தொகை,உவமைகள்,ஒலி,இயற்கை ஒலி ,அதிர்வுகள்

 

 

முன்னுரை

அதிர்வுறும் பொருள்களிலிருந்து ஊடகங்கள் வழியே பரவும் அலைப் பண்புடைய ஆற்றலே ஒலி ஆகும். காற்றிலிருந்து செவிப்பறைச் சவ்வு மூலமாக ஒலி அலைகள் செவிச்சுருளுக்குக் கடத்தப்படுகின்றன. காதின் உட்பகுதியில் இவ்வொலி அலைகளை உணரும் இயல்புடைய சில ஆயிரக்கணக்கான உணர்வு நரம்புகள் அமைந்திருப்பதால் செவிகள் ஒலியை எளிதான முறையில் உணர்கின்றன. சங்கப்புலவர்களும் தாம் கேட்டு உணர்ந்த ஒலிகளை இலக்கியங்களில் பதிவு செய்துள்ளனர். ஒன்றன் ஒலியை மக்களுக்கு எளிதான முறையில் உணர்த்துவதற்காக அதனோடு தொடர்புடைய இணையான ஒலியை ஒப்புமைப்படுத்திக் கூறியுள்ளனர். இத்தகைய நுட்பமான திறத்தினை இக்கட்டுரையின் வாயிலாக காண்போம்.

 

உவமை - விளக்கம்

 

    ‘தெரியாத ஒரு பொருளை விளக்க மக்களுக்குத் 

    தெரிந்த உலகிலுள்ள ஒரு பொருளை ஒப்புமைக்

    கூறுவது புலவர் உள்ளம் ஒன்றை உணரும்போது 

    அதன் தொடர்பான மற்றொன்றையும் உணரும்.

    அது போழ்து அவற்றுள் ஒருமைக்காட்டி அவர்

    அகக்கண் புது அழகு காணும். இதுவே உவமை ஆகும்’. (1)

 

வினைபயன் மெய்உரு என்ற நான்கே 

வகைபெற வந்த உவமைத் தோற்றம். (2)

(தொல்.பொ.உ.272)

 

என்பது உவமை குறித்த தொல்காப்பியர் விளக்கம். இதனுள் உவமைக்கும் உவமிக்கப்படும் பொருளுக்கும் சிலப்பொதுத் தன்மைகள் இருந்தால்தான் ஒன்றை மற்றதனோடு உவமிக்க முடியும் என்றும், அவ்வுவமைகள் வினை, பயன், மெய், உரு என்ற நான்கையும் நிலைக்களன்களாகக் கொண்டுள்ளன என்றும் கூறப்படுள்ளது.

 

எட்டுத்தொகையில் ஒலி உவமைகள்

சங்க இலக்கியங்களில் ஏராளமான ஒலிகள் பற்றிய செய்திகளும், அவ்வொலிகளின் இயல்பினை எடுத்துரைக்க உவமைகளும் கையாளப்பட்டுள்ளன. எனவே, எட்டுத்தொகை நூற்களில் காணலாகும் ஒலி உவமைகளுள் ‘இயற்கை ஒலி’ பற்றிய செய்திகளை ஆய்வதாக இக்கட்டுரை அமைகிறது. வானத்தின் இடிகளும், காற்றின் ஒலியும், அருவியின் இரைச்சல், மழையின் ஒலி, கடலின் ஒலி போன்ற பல ஒலிகள் இயற்கையான ஒலிகளாக அமைகின்றன.

 

இடி ஒலி

வானம் கடல் நீரை முகந்து கொண்டு மழை பொழியத் தொடங்கும் முன் மின்னலையும், இடிகளையும் உண்டாக்கும். இடி ஏற்படும்போது மிகுந்த சத்தம் வரும். இந்த இடி ஒலியின் அளவு 110 டெசிபெல் ஆகும்.

 

வளையல் போல் மின்னி கூட்டம் கொள்ளும் முகில்கள் இனிய இசையை உடைய முரசுபோல் ஒலிப்பதை நக்கீரர்.

 

‘பொலந் தொடி போல மின்னி கணங் கொள்

இன் இசை முரசின் இரங்கி’

(நற்:197:9-10)

 

என்னும் வரிகளில் இடியின் ஒலிக்கு முரசின் ஒலியை உவமையாக கூறியுள்ளார். இதே உவமை (குறு:270.380), (அகம்:180), (பதி:84) என்னும் பாடல்களிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

கடல் ஒலி

காற்று அதிகாமாக வீசும்போது கடலில் அலைகள் உருவாகும். அவ்வலைகள் கரையை நோக்கி வரும்போது ஒலியினை ஏற்படுத்தும. இக்கடலின் ஒலியும் முரசின் ஒலியோடு ஒப்புமைப்படுத்தப்பட்டுள்ளது.

 

குட்டுவன் பகைவேந்தரைக் கொல்லும் வேளையில் முரசு அதிரும். அம்முரசின் ஒலிபோல் கடல் ஒலிக்கிறது.

 

‘கடும் பகட்டு யானை நேடுந் தேர்க் குட்டுவன்

வேந்து அடு மயக்கத்து முரசு அதிர்ந்தன்ன,

ஓங்கற் புணரி, பாய்ந்து ஆடு மகளிர்’

(நற்:395:4-6)

 

முரசு ஒலி அதிர்ந்த குரலினை உடையது, கடல் ஒலி இவ்வொலிக்கு இணையாக ஒலிப்பதால் முரசு ஒலியை உவமையாக கூறியுள்ளனர். இச்செய்தி (குறுந்:328) என்னும் பாடலிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

கடல் அலையின் ஒலி பறையின் ஒலியோடும் உவமிக்கப்பட்டுள்ளது. இதனை,

 

‘நிரைதிமில் களிறாக, திரை ஒலி பறையாக’

(கலி:149:1)

என்னும் வரியில் காணலாம்.

 

கடற்பரப்பு கலங்கும்படி காற்று அடிப்பதால் பெரிய அலைகள் இடியோசை போல முழங்குகிறது. இதனைக் காக்கைப்பாடினியார் நச்செள்ளையார்,

 

‘விளங்கு இருள் புணரி உரும் என முழங்கும்’

(பதி:51:2)

 

என கடலின் ஒலிக்கு இடியின் ஒலியை உவமையாகக் கூறியுள்ளார். இதே உவமை (அகநானூற்றுப்310) பாடலிலும் உள்ளதைக் காணலாம்.

 

மேலும் கடல் அலையானது இடுமணலின் நெடிய உச்சியைத் தொட்டுக் குத்தும் போது யானை போல முழங்குகிறது.

 

‘எயில் இரு களிறே போல் – இடுமணல் நெடுங் கோட்டைப்

பயில்திரை, நடுநன்னாள் பாய்ந்து உறூஉம் துறைவ!’

(கலி:135:4-5)

 

  என்னும் வரிகள் மூலம் நல்லந்துவனார் கடலின் ஒலிக்கு யானையின் முழக்கத்தை உவமையாகக் கூறியுள்ளச் சிறப்பினைக் காண முடிகிறது.

 

மேற்கண்ட பாடல்கள் வழி கடலின் ஒலிக்கு முரசு, பறை, இடி, யானையின் முழக்கம் ஆகியவற்றின் ஒலிகள் உவமையாகக் கூறப்பட்டுள்ளதைக் காணலாம். உவமையாகக் கூறப்பட்ட ஒலிகளும் மிகுந்த ஒலி அதிர்வை உடையன. எனவே சங்கப்புலவர்கள் இவ்வுவமைகளைக் கையாண்டுள்ளமை அவர்தம் நுண்ணறிவைப் புலப்படுத்துவனவாகும்.

 

அருவி ஒலி

அருவியின் ஓசை சங்கப்பாடல்களில் வாத்திய இசைகளோடு அதிக அளவில் ஒப்புமைப்படுத்தப்பட்டுள்ளதைக் காண முடிகிறது. அருவி மலையிலிருந்து கீழ் நோக்கி விழும்போது ஒலியுண்டாகும். அவ்வொலியைத் தண்ணுமை, முரசு, மத்தளம், பறை போன்ற ஒலிகளோடு ஒப்புமைப்படுத்திப் புலவர்கள் கூறியுள்ளதைக் காணலாம்.

 

புலையன் அகன்ற வாயையுடைய தண்ணுமையின் கண்ணிடத்தில் ஓங்கி அடிப்பது போன்று அருவி முழங்கி ஒலிக்கிறது. இதனைப் பெருங்குன்றூர்கிழார்,

 

‘பேழ் வாய்த் தண்ணுமை இடம் தொட்டன்ன

அருவி இழிதரும் பெரு வரை நாடன்’

  (நற்:347:6-7)

என்னும் வரிகளில் ஒலி உவமையுடன் கூறியுள்ளார்.

அருவி கூத்தர்களின் முழவொலி போல் ஒலிப்பதை

 

      ‘பெருவரை மிசையது நெடுவெள் அருவி

      முதுவாய்க் கோடியர் முழவின் ததும்பி’

   (குறு:78:1-2)

என்னும் வரிகளின் மூலம் உணரலாம்.

 

தலைவன் நாட்டில் உள்ள அருவியின் ஓசை முரசின் ஒலி போல கேட்கும் என்பதை மதுரை நல்வெள்ளி,

 

‘துன்அரு நெடுவரைத் ததும்பி அருவி

தண்ணென் முழவின் இமிழ்இசை காட்டும்’

(குறுந்:365:3-4)

என்னும் வரிகளில் பதிவு செய்துள்ளார். இவ்வுவமையை அகம்:25, புறம்:143, பதி:78 என்னும் பாடல்களிலும் காணமுடிகிறது.

 

இன்னொலியுடன் வீழும் குளிர்ந்த நீரினையுடைய அருவியின் இனிய ஓசை, கூட்டமான மத்தளங்களின் இசையைப் போல கானகத்தில் ஒலிக்கிறது.

 

‘பாடு இன் அருவிப் பனி நீர் இன் இசை

தோடு அமை முழவின் துதை குரல் ஆக’.

(அகம்:82:3-4)

 

அருவியின் ஒலிக்கு இசைக்கருவிகளில் ஒன்றான மத்தளத்தின் இசையை உவமையாக கபிலர் கூறியுள்ளார். இவ்வுவமை பரி பாடலிலும் கூறப்பட்டுள்ளது.

 

மலைச்சாரலில், தேனொடு கலந்து வீழும் அருவி, இன்னொலி எழும்பும் வாத்தியத்தை போன்று, ‘இம்’ என்னும் ஓசையுடன் மலைக்குகையும், பிளப்பிடங்களும் எதிரொலிக்குமாறு வீழ்கிறது இதனை, 

 

‘இன்இசை இமிழ்இயம் கடுப்ப இம்மெனக்

கல்முகை விடர்அகம் சிலம்ப வீழும்’

(அகம்:172:3-4)

 

என்னும் வரிகளின் மூலம் உணரலாம்.

பறையொலி போல மலைகளில் அருவி முழங்குவதை,

 

‘பறை இசை அருவி முள்ளுர்ப் பொருந!’

  (புறம்:126:8)

 

என்னும் வரியில் காணமுடிகிறது. இவ்வுவமை புறம்:229 என்ற பாடலிலும் உள்ளதைக் காணலாம்.

 

காற்றின் ஒலி

காற்று வேகமாக எழுந்து வீசும்போதும், அடர்த்தியான மரங்களின் நடுவே ஊடுருவிச் செல்லும்போதும் ஒலி உண்டாகும். காற்றின் ஒலிக்குச் சங்கப்புலவர்கள் கூறிய உவமைகள் அவர்தம் நுண்மாண் நுழைபுலத்தை வெளிப்படுத்துவன,

மாலைப்பொழுதில் வரும் காற்று யானை பெருமூச்சு விட்டாற்போல் வருகிறது.

 

‘அல்கலும் அலைக்கும் நல்கா வாடை

பரும யானை அயா உயிர்த்தா அங்கு’

(நற்:89:7-8)

 

மாலைநேரத்தில் வரும் குளிர்ந்த காற்றுக்கு யானையின் மூச்சு  ஒலியை உவமையாகக் கூறியுள்ள புலவரின் நுண்மையான அறிவுத் திறனை இப்பாடல் வழி உய்த்துணர முடிகிறது. மேலும், மேல் காற்றினால் எழுகின்ற ஒலி, குழல் இசை போல வீசுகிறது என்பதை,

 

‘கோடை அவ்வளி குழலிசை ஆக’

(அகம்:82:2)

 

என காற்றின் ஒலிக்கு குழல் ஒலியை உவமையாகக் கூறியுள்ளதையும் காணலாம்.

காற்றினால் இலை பலவும் உதிர்ந்த கிளைகளை உடைய வெண்பாலை மரத்தில் உள்ள காய்ந்த நெற்றுகள் மலையிலிருந்து வீழும் அருவி போல ஒல்லென ஒலிக்கின்றன.

 

‘செல் வளி தூக்கலின் இலை நீர் நெற்றம்

கல் இழி அருவியின் ஒல்லென ஒலிக்கும்’

(நற்:107:4-5)

 

அருவி மிகுந்த ஒலியுடன் மலையிலிருந்து விழக்கூடியது, அவ்வருவிக்கு இணையாக நெற்றுகளின் ஒலியை உவமையாகக் கூறியுள்ள திறம் அவர்தம் புலமைக்குச் சான்றாகும். மழையின்றி வறண்டு நிற்கும் வாகைமரத்தில் கோடைக்காற்று வீசும்போது அம்மரத்தில் உள்ள நெற்றுகளின் விதைகள் தலைவி அணிந்த சிலம்பின் பரல் ஒலிபோல் ஓசையை உண்டாக்குகின்றன.

 

‘அத்தவாகை அமலை வால் நெற்று

அரிஆர் சிலம்பின், அரிசி ஆர்ப்பக்’

  (குறுந்:369:1-2)

 

வாகை மரத்தின் நெற்று ஒலிக்குச் சிலம்பின் பரல் ஒலியைப் புலவர் உவமையாகக் கூறியுள்ளார். 

வாகைமரத்தின் முதிர்ந்த நெற்றுகள் கொண்ட கொத்துக்கள் காற்றின் காரணமாக கூத்தர் ஆடும் களத்தில் கொட்டும் பறையைப் போல் விட்டுவிட்டு ஒலிக்கின்றன.

 

‘வாடல் உழிஞ்சில் விளை நெற்று அம் துணர்

ஆடுகளப் பறையின் அரிப்பன ஒலிப்ப’

  (அகம்:45:1-2)

 

நெற்றுகளின் ஒலியைப் பறை ஒலியோடு ஒப்பிட்டு கூறியுள்ள சிறப்பினை இப்பாடலின் வழி உணர முடிகிறது.

காற்றினால் எழுகின்ற பல்வேறு ஒலிகளை யானையின் உயிர்ப்பு, குழலோசை, அருவியின் ஓசை, சிலம்பின் பரல் ஒலி, பறை ஆகியவற்றோடு ஒப்பிட்டுக் கூறியுள்ள திறம் சங்கப்புலவர்களின் புலமையை வெளிப்படுத்துவதாகும்.

 

முடிவுரை

பழந்தமிழர் நாம் கண்டதையும் கேட்டதையும் தம் நுண்ணறிவைக் கொண்டு ஆயந்தறிந்தனர். செவிப்புலம் கொண்டு உணர்ந்த ஒலிகளையும் அவ்வாறே ஆராய்ந்து உணர்த்த முற்பட்டனர். இதற்கு ஒலி உவமைகளே சான்றாகும். இடியின் ஒலிக்கு முரசு ஒலியையும் கடலின் ஒலிக்கு முரசு, பறை, இடி, யானையின் முழக்கம் ஆகியவற்றின் ஒலிகளையும் உவமையாகக் கூறியதோடு, அருவியின் ஓசையை வாத்திய இசைகளோடும், காற்றினால் எழுகின்ற ஒலிகளை யானையின் உயிர்ப்பு, குழலோசை, அருவியின் ஓசை, சிலம்பின் பரல் ஒலி, பறை ஆகியவற்றோடும் ஒப்பிட்டுக் கூறியுள்ள திறத்தினை இக்கட்டுரையின் வாயிலாக அறியமுடிகிறது.

 

அடிக்குறிப்புகள்

 

  • சு.பத்மா, நற்றிணையில் உவமை, ப.227
  • எஸ்.கௌமாரீஸ்வரி, தொல்காப்பியம் பொருளதிகாரம். ப.375

துணைநூற்பட்டியல்

  • இரா.குணசீலன், சங்க இலக்கியத்தில் ஒலிக்கூறுகள், ஆய்வியல் நிறைஞர் பட்ட ஆய்வேடு, 2003.
  • எஸ்.கௌமாரீஸ்வரி, தொல்காப்பியம் பொருளதிகாரம், முதுகலை தமிழ் ஆராய்ச்சி ஏடு, 1969.
  • இ.பழனியாண்டி, அனைவருக்குமான இயற்பியல், மீர் பதிப்பகம், சென்னை. 1984.