ஜூலை 2024 இதழுக்கு ஆய்வுக்கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன

கொடையை முன்னிறுத்திய போர்கள்

முனைவர் ஜ. பபீதா, உதவிப்பேராசிரியர் தமிழ்த்துறை, ஆக்சிலியம் கல்லூரி, வேலூர் - 6 04 Feb 2021 Read Full PDF

ஆய்வுச் சுருக்கம்:

  பொருள்தேவையை  நிறைவு செய்வதில் உற்பத்தியைவிட பிறர் பொருளைக் கைப்பற்றலே எளிமையாகவும் பெருமளவு கிடைப்பதாகவும் இருந்தது. ஆதலால் பகை நாட்டுப்  பொருளை  கைப்பற்றுவதற்கு வலிமையுடைய வீரர்கள் ஒன்றாகத் திரண்டு அவர்கள் தலைவன் வழி நடத்த வீரத்தை நிலைநாட்டி பெரும் பொருளைக் கைப்பற்றினர். அது போரென்றானது. அவ்வாறு கைப்பற்றிய பொருளை பிறருக்கு கொடுத்தமையால் சமூகத்தில் போர் முதன்மை அங்கத்தை வகித்தது. அகவாழ்க்கைக்குத் தேவையான புறவாழ்க்கைச் சூழலில் போர் முதன்மையாகக்  கருதப்பட்டது. எனவேதான்  மனித வாழ்வியலுக்கு இலக்கணம் வகுத்த தொல்காப்பியர் அகம் புறம் என இரண்டாகப் பிரித்து புறத்தில் போரை முதன்மையாக்கி அதற்கு துறைகளை வகுத்து இலக்கணம் விளக்குகின்றார். ஆகையால் தான் கொடையை முன்னிறுத்திய போர்கள் இலக்கியங்களில் பெருமளவு  பதிவாகியுள்ளது.இக்கட்டுரை கொடையை முன்னிறுத்திய போர்களைப் குறித்து ஆராய இருக்கின்றது.

திறவுச் சொற்கள்:

கொடை , போர், இலக்கியங்கள், வீரம், தமிழகம்.

 

புகழே போருக்குக் காரணமாதல்: 

வீர உணர்வானது அக்கால மக்களின் தலைமைக் குணமாக போற்றப்பட்டது. அறிவாற்றல், நிர்வாகத்திறன்  மேம்பாடுகள், நாகரீக நிலை போன்றவையற்ற சமூகத்தில்  வேட்டையாடியும் உணவினைப் பகுத்துண்டும் வாழ்ந்த இனக்குழு மக்களிடையே வலிமையும், வீரமும் உடையவன் தலைவன் என்பதனை,

களம்புகல் ஓம்புமின் தெவ்விர் போரெதிர்ந்து

எம்முளும் உளன்ஒரு பொருநன் வைகல்

எண்;தேர் செய்யும் தச்சன்

திங்கள் வலித்த காலன் னோனே (புறம். 87)

ஒளவையாரின்  பாடல் அரண் செய்கின்றது. சுங்க காலத்து மக்களும் மன்னர்களும் போரை விரும்பினர். போரில் வெற்றிபெற்றவர்களை புலவர்கள் புகழ்ந்து பாடியுள்ளனர். புலவர்களால் பாடப்படுகின்ற புகழ் விருப்பத்தின் காரணமாக போர்கள் நடைபெற்றன எனலாம்.

கொடையின் மேன்மை

வீரன் ஒருவனது உயிரிழப்பானது அவனது கொடைப் பண்பால் நேர்ந்தது. வீரனைப் பகைத்தோ போரிட்டோ அவனை  வெல்லமுடியாது என்பதனால், பாடும் புலவர்  போன்று  கைதொழுது காலன் அவனை வணங்கி அவன் உயிரை  கொடைப்பொருளாகப் பெற்றிருக்க வேண்டும் என்பதனை,

செற்றன்று ஆயினும், செயிர்த்தன்று ஆயினும்,

உற்றன்று ஆயினும், உய்வு இன்றுமாதோ

பாடுநர் போலக் கைதொழுது ஏத்தி,

இரந்தன்றாகல் வேண்டும் - பொலந்தார்

மண்டு அமர் கடக்கும் தானைத் 

திண் தேர் வளவற் கொண்ட கூற்றே  (புறம். 226)

என்ற ஒளவையாரின் பாடலின் வழியே, சங்ககால மக்கள் வீரத்தில் சிறந்தவர்களாகவும், தம் உயிர் பிரிந்தபோதும் கொடை தந்து புகழ் எய்தி வாழும் பேற்றினைப் பெற வேண்டும் என்பதனையும் கருதியுள்ளனர். கொடையின் மேன்மையினைப் போரின் மேலும் கூற்றுவனின்  மேலும் ஏற்றிப் பாடியிருப்பதன் வாயிலாக அக்கால போர்முறைகள் கொடையினை முன்னிறுத்தியுள்ளது.

தமிழகத்தை ஆட்சி செய்த மன்னர்கள் தம் வீரத்தை பிற நாட்டின்கண் நிலைநிறுத்த அந்நாடுகளை  கைப்பற்றி தன்னுடைய ஆட்சியை விரிவாக்க நினைக்கவில்லை. பகை நாட்டினை வென்று பகை மன்னரை அடிமைப்படுத்தி அந்நாட்டிலுள்ள் செல்வ வளங்களை கொள்ளையிட்டும், பகை நாட்டினைத் தீயிட்டு கொளுத்தியும், வளமிக்க நிலங்களை பாழ்படுத்தியதோடு பகைநாட்டை அழிக்கவும் செய்தனர். இதனை,

கடுந்தேர் குழித்த ஞள்ளல் ஆங்கண்

வெள் வாய்க் கழுதைப் புல் இனம் பூட்டி 

பாழ் செய்தனை, அவர் நனந் தலை நல் எயில்

புள்ளினம் இமிழும் புகழ்சால் விளை வயல்  (புறம். 15: 1-4)

என்று  நெட்டிமையார் முதுகுடுமிப் பெருவழுதியைப் பாடியுள்ளார்.

கொடைப்போர்

பகையரசர் பணிந்தால் அவர்களிடம் திறையினைப் பெற்றுக்கொண்டு நாடுகளை திருப்பி அவர்களுக்கே நல்கினர். அவ்வாறு  பணியவில்லையென்றால் பகைநாட்டை அழித்து வெற்றிக்கொண்டனர். பகைநாட்டினை வெற்றி கொண்டதற்கு அடையாளமாக கழுதை ஏர் உழுதல் விளை நிலத்தை எரித்து பாழாக்குதல், காவல் மரத்தை அழித்தல் போன்றவை நடைபெற்றது.

விளைகின்ற நிலத்தை பாழாக்குதல் என்பதில், அங்கிருந்து கவர்ந்து வரப்பட்ட பொருளை பிறருக்குத் தருவதன் மூலம், தருபவர் தன் புகழை நிலை நிறுத்திக் கொண்டனர். புலவர்கள் இவர்களை புகழ்வதால், அப்புகழை விரும்பிக் கொடை வழங்குவதற்காகவே, கொடைப்போர் மேற்கொண்டனர் என்பதும் பெறப்படுகிறது.

படைகொண்டு சென்று பகைவர்கள் ஊர்களை அழித்து, போரில் வென்றவர்கள் அங்குள்ள மன்றம் போன்றவற்றில் கழுதைகளைவிட்டு, உழும்படி செய்வதும், அங்கே வெள் வரகு, கொள் முதலியவற்றை விதைத்தலும் பண்டைய அரசர்களிடம் நிலவிய பழக்கங்களாகும். கழுதையேர் உழுததனை,

வேள் வாய்க் கழுதைப் புல் இனம் பூட்டி 

பாழ் செய்தனை  (புறம். 15: 2-3)

என்றும்,

அணங்குடை மரபின் இருங்களம் தோறும்

வேள்வாய்க் கழுதை புல் இனம் பூட்டி

வேள்ளை வரகும் கொள்ளும் வித்தும் (புறம். 392: 9-11)

நின்படைஞர், சேர்ந்த மன்றம் கழுதை போகி (பதிற். 25:4

எழுதெழின் மாடத் திடனெலாம் நூறிக்

கழுதையேர் கையொளிர்வேல் கோலா உழுததற்பின்

வெள்வரகு கொள்வித் திடினும் விளியாதாற்,

கள்விரவு தாரான் கதம் (பு.வெ. நூ.120)

வடதிசை மன்னர் மன்னெயின் முருக்கிக் 

கவடி வித்திய கழுதையே ருழவன் (சிலம்பு. அடி. 27: 225-6)

பகைவர் மதிலை அழித்துக் கழுதையேரால் உழுது, வெள்ளை வரகும் கொள்ளும் விதைத்தல் பண்டைய மன்னர்களின் போர் மரபாக இருந்தது.

கடிமரம் அழித்தல்

பகை நாட்டிலுள்ள காவல்மரத்தை அழித்தால் தோல்வி உறுதியாகிவிடும். ஆதலால்தன் அக்கால மன்னர்கள் தம்நாட்டில் காவல் மரத்தை வைத்து காப்பாற்றினார்கள். காவல் காப்பதால் ‘கடிமரம்’ என்றழைக்கப்பட்டது. பகைவருடைய காவல் மரத்தை அரசர் வெட்டுவிப்பர். இதனை,

வடிநவில் நவியம் பர்யதலி னூர்தொறும்

கடிமரந் துளங்கிய காவு நெடநகர் (புறம். 23: 25-6)

கருங்கைக் கொல்ல னரஞ்செ யவ்வாய் 

நெடுங்கை நவியம் பாய்தலி னிலையழிந்து

வீகமழ் நெடுஞ்சினை புலம்பக் காவுதொறும் 

கடிமரந் தடியு மோசை தன்னூர்   (புறம். 36: 6-9)

கடிமரந் தடித லோம்புநின் 

நெடுநல் யானைக் கந்தாற் றவே  (புறம். 57.10-11)

களிறுங் கடிமரஞ் சேரா சேர்ந்த (புறம். 336:4)

ஆகிய சான்றுகளால் அறியலாகிறது. பகைவர்களி;ன் காவலையுடைய பொழில்களையும் அழிவுக்குள்ளாக்கினர் என்பதைக் 

     கடி காவின் நிலை தொலைச்சி (மதுரைக். அடி. 153)

என்னும் பாடலடி சான்றுரைக்கின்றது.

பழையன் என்னும் குறுநில மன்னன் தன் காவல்மரமாகக் காத்துவந்த கரிய கிளைகளையுடைய வேம்பினது முழவைப் போன்ற அடிமரத்தை வெட்டச் செய்தான் கடல்பிறக்கோட்டிய செங்குட்டுவன் என்பதை,

பழையன் காக்குங் கருஞ்சினை வேம்பின்

முழாவரை  முழுமுத றுமியப் பண்ணி (பதிற். 5ம் பதிகம்)

பழையன் காக்குங் குழைபயி னெடுங்கோட்டு 

வேம்புமத றடிந்த வேந்துவாள் வலத்துப் 

போந்தைக் கண்ணிப் பொளைய  (சிலம்பு.அடி. 27:124-6)

போன்ற பாடலால் அறியலாம்.

முரசங்களைக் கைப்பற்றுதல்

  சோழன் இளம்பெருஞ்சென்னி தன் குடிகளுக்கு பகையால் வரும் துன்பத்தை போக்குவதே கடமை எனக் கருதி, தன்னை எதிர்த்த பாழி நாட்டு மன்னனின் மதிலை அழித்தான். பகை நாட்டிற்கு சென்று பகைவரை வென்று போர்க்களத்தில் அவரிட்ட முரசைக் கொள்வதை,

துளங்குகுடி விழுத்திணை திருத்தி முரசுகொண்

டாண்கட னிறுத்தநின் பூண்கிளர் வியன்மார்பு (பதிற். 31:33)

என்று பதிற்றுப்பத்து எடுத்துரைக்கின்றது.

தலையாலங்கானம் என்னும் ஊரில் பகைவர்க்கு அச்சம் தோன்றும்படி தங்கி, நெடுநில மன்னர் இருவரும், குறுநில மன்னர் ஐவரும் இறந்துபடுமாறு, போரில் அவர்களை வென்று, அவர்களுடைய முரசங்களைக் கைக்கொண்டு களவேள்வி செய்து கொல்லுகின்ற வலிமை மிகுந்த புகழையுடைய வேந்தே,

 

     நாடுகெட எரிபரப்பி

ஆலங்கானத்து அஞ்சுவர இறுத்து,

அரசுபட அமர் உழக்கி,

முரசுகொண்டு களம் வேட்ட

அடுதிறல் உயர்புகழ் வேந்தே (மதுரை. ஆடி. 126-130)

என்று மாங்குடி மருதனார் பாடியுள்ளதிலிருந்து முரசங்களைக் கைக்கொண்டு களவேள்வி செய்துள்ளமை புலனாகிறது. பாண்டியன் நெடுஞ்செழியன் போரிலே பகைவரை வென்று அவர்களுடைய வலிமையெல்லாம் அடங்குமாறு ஒருநாள் ஒருபகலிலே அவர்தம் முரசமொடு வெண்கொற்றக் குடைகளையும் ஒருசேர வயப்படுத்திக் கொண்டான் புகழ் எங்கும் பரவுமாறு பகைவரது படைகளைக் கொன்று களவேள்வி செய்தனன் என்பதனை,

முரைசொடு வெண்குடை அகப்படுத்து, உரை செல 

கொன்று, களம் வேட்ட ஞான்றை  (அகம். 36: 21-22)

என்று அகநானூறும், வெல்லுதற்கரிய வலிமை வாய்ந்த வஞ்சினம் கூறிய சேர சோழராகிய வேந்தர்களை வருத்துவதற்கு அரிய போர்க்களத்தில் இறந்துபடப் போரிட்டு அவர்களின் கட்டுமிக்க முரசினைக் கைக்கொண்டான். இதனை,

பிணியுறு முரசம் கொண்ட காலை (புறம். 25:7)

அரும்சமம் சிதையத்தாக்கி முரசமொடு

ஒருங்கு அகப்படேஎன் ஆயின்  (புறம்.72: 8-9)

என்று புறநானூறு குறிப்பிடுகின்றது. தன்னோடு பகைகொண்டோரின் வலிய கட்டமைந்த முரசத்தொடு அவர் மண்ணையும் கொள்ளுதல்

விசிபிணி முரசமொடு மண்பல தந்த

திருவீழ் நுண்பூண் பாண்டியன் மறவன்  (புறம். 179: 4-5)

என்று கூறப்படுகின்றது.

பகைநாட்டில் போர்மேற்சென்று அவர்களின் நிலங்களையும், முரசங்களையும், வெண்கொற்றக்குடைகளையும் கவர்ந்து பகைநாடுகளில் தன் புகழை நிறுவியதோடு, அங்கிருந்து பெற்றதைப் பரிசிலர்க்கு வழங்குவதையே மரபாகப் போற்றினர்.     கிடைத்த பொருளை அரியபொருள் என்று கருதி தாம் வைத்து அனுபவிக்க வேண்டும் என்ற எண்ணம் கொள்ளாமல் அதனை பாதுகாக்காமலும் பிறருக்குக் கொடுத்தனர். இவ்வாறாக போரின்கண் தாம்பெற்ற பொருள்களை மன்னன் பரிசிலர்க்கு கொடுத்தமைக்கு புலவரின் புகழ்மொழியே காரணமாகும். போர் மேற்கொள்ள வேண்டுமென்ற போர் விருப்பமானது சங்ககால மக்களிடம் இயல்பாகவே இருந்துள்ளமை அறிந்துகொள்ள முடிகின்றது.

துணை நூற்பட்டியல் :

1. சங்க இலக்கியம் - புறநானூறு, மடாலயம் பதிப்பகம், கோவிலூர்.

2. சங்க இலக்கியம் - புறநானூறு மூலமு; உரையும், என்.சி.பி.எச் பதிப்பகம், சென்னை– 98.

3. சங்க இலக்கியம் - பதிற்றுப்பத்து மூலமும் உரையும், வர்த்தமானன் பதிப்பகம், சென்னை– 17.

4. சங்க இலக்கியம் - பத்துப்பாட்டு மூலமும் உரையும், மடாலயம் பதிப்பகம், கோவிலூர்.

5. தொல்காப்பியம் இளம்பூரணம், தமிழ்மண் பதிப்பகம், சென்னை.