ஜூலை 2024 இதழுக்கு ஆய்வுக்கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன

உளவியல் நோக்கில் குறிஞ்சிப்பாட்டு

க.லதா, முனைவர் பட்ட ஆய்வாளர், ஆதிபராசக்தி கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கலவை 30 Apr 2021 Read Full PDF

கட்டுரையாளர்

                   க. லதா

                    முனைவர் பட்ட ஆய்வாளர்

                    ஆதிபராசக்தி கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கலவை

ஆய்வு நெறியாளர்

                   முனைவர்: கோ. சாந்தி

                   உதவிப்பேராசியர்,

                   த.இ.மு. கல்லூரி, சாய்நாதபுரம் வேலூர்.

ஆய்வுச்சுருக்கம்

     குறிஞ்சிப்பாட்டு 261 அடிகளால் ஆனது. இப்பாடல் கரந்து வாழ்க்கை நடத்தும் காதலர்களின் களவு ஒழுக்கத்தைச் சிறப்பித்துக் கூறுகிறது. கபிலர் என்னும் பெரும்புலவர் இந்நூலை இயற்றிய ஆசிரியர் ஆவார். இவர்பறம்பின் கோமான் ஆகிய பாரியின் உயிர்த்தோழராவார். நச்சினார்க்கினியரின் உரை முடிவைக் கொண்டு ஆரிய அரசன் பிரகதத்தனுக்கு தமிழ் அறிவிப்பதற்காக இந்நூல் இயற்றப்பட்டது என்று கூறுவர்.

     குறிஞ்சிப்பாட்டு ஆசிரியப்பாவால் ஆனது. குறிஞ்சித்திணைக்குரிய முதல், கரு, உரிப்பொருள்கள் இப்பாட்டில் கூறப்பட்டுள்ளது. அறத்தொடுநிற்றல் துறை பற்றிய கருத்துக்களை இப்பாட்டில் காணலாம். இவற்றிற்கு மற்றொரு பெயர் பெருங்குறிஞ்சி என்றும் அழைக்கப்படும்.

     குறிஞ்சிப்பாட்டில் தெய்வ நம்பிக்கை வழிபாடு. மறுபிறப்பு, திணைப்புனம் காத்தல், பூக்களைப் பறித்து விளையாடல், கழைக்கூத்தாடல், விரும்தோம்பல், தலைவன், தலைவியின் நிலை, மாலைக் காலத்தின் வருகை, பூக்களைப் பறித்துப் பாறையில் குவித்தல் முதலிய செய்திகள் பாடலில் கொடுக்கப்பட்டு உள்ளன.

திறவுச் சொற்கள்

  1. 99 வகைமலர்கள்
  2. தெய்வ நம்பிக்கை
  3. விருந்தோம்பல்
  4. விளையாடல்
  5. தலைவன், தலைவியின் மனநிலை
  6. மாலைக் காலத்தின் வருத்தம்

முன்னுரை

     பண்டைக்கால மக்களின் வாழ்க்கையை படம் பிடித்துக்காட்டும் கண்ணாடியாக விளங்குவது சங்க இலக்கியப் பாடல்கள் ஒவ்வொன்றும் வாழ்க்கையில் பல்வேறு நிலைகளை குறிப்பிடுகின்றன. ஒவ்வொரு தனிமனிதனும் தன்னுடைய வாழ்க்கையில் தள்ள வேண்டியவற்றையும் கொள்ள வேண்டியவற்றையும் அடிபிறழாமல் அழகுற எடுத்துச் சொல்லும் உயிர்ப்பாடல்கள் தான் இலக்கியங்கள் அதனால் தான் இலக்கியமும் வாழ்க்கையும் இரண்டறக் கலந்தது என்பார்கள். இவ்விலக்கியங்களில் அந்தகாலத்தில் வாழ்ந்த மக்களின் வாழ்க்கை முறைபற்றியும் அவர்களின் மனநிலை பற்றி ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகக் கொள்ளப்படுகிறது. அதனைக் காணலாம்.

இலக்கியங்கள்

     இலக்கியங்கள் தாம் தோன்றிய காலத்து மக்களின் வாழ்வியல் நெறிகளைப் பிரதிபலிக்கின்றன. அந்த வாழ்வியல் நெறிகள் வழியாக சமுதாயத்தின் உளவியலும், சமுதாய உறுப்புக்களான தனிமனித உளவியலும் உணரப்படும். பத்துப்பாட்டுள் ஒன்றான குறிஞ்சிப்பாட்டு 'அறத்தொடு நிலையை" மையப்படுத்தி அமைந்த அகப்பாட்டு ஆகும். களவு, கற்பு என்னும் இரண்டு ஒழுக்கங்களும் இணைகிற இடமாக அறத்தொடுநிலை அமைகிறது. அறத்தொடு நிற்கும் முன்பும், பின்பும், தனிமனித நிலையிலும் சமுதாய நிலையிலும் காணப்படும் உளவியல் பற்றியதாக இந்த ஆய்வு அமைகிறது.

தனிமனிதனும் சமூகமும்

     தனித்து வாழ்ந்த மக்கள் இணைந்து வாழ மாறுபட்ட மனநிலையில் திகழ்த்தது குழு வாழ்க்கை அதனால் நிலை பெற்றதே சமூக அமைப்பு.

     சமூகம் என்பது மிகப்பெரிய மக்கள் குழு, தனக்கென்று ஒரு குறிப்பிட்ட பண்பாட்டைக் கொண்டது. தானே வாழும் ஆற்றல் உடையது. ஒவ்வொரு மனிதனும் சமூகத்தில் அதன் உறுப்பாக இருக்கிறான். உறுப்பு சிறப்படையும்பொழுது முழுப் பொருளாகிய சமூகமும் சிறப்பெய்துகிறது. எனவே, தனிமனிதன் சமூக பொருளாதார பண்பாட்டுத் தளங்களில் உயர்வடையச் செய்ய வேண்டியுள்ளது. என்பது ஆய்வாளர்கள் கூறும் கருத்து1 இந்த அடிப்படையில் ஒரு சமூகத்தின் சமூக பொருளாதார பண்பாட்டுக் கூறுகள், தனிமனிதனின் சமூக பொருளாதார பண்பாட்டுக் கூறுகளோடு நெருக்கமான உறவுடையன எனலாம்.

     இலக்கியப் படைப்பு ஒரு சமூகத்தில் நிகழ்வது. அது படைக்கப்படும் கால மனித வாழ்வியலை மையப்படுத்தும் போது உளவியலை உதறிவிட முடியாது. 'அகமாந்தர் தங்கள் மன உணர்வுகளை வெளியிடக் கையாளும் அணுகுமுறைகளும் அக மாந்தரைப் படைப்பதில் சங்க இலக்கியக் கவிஞர்கள் மேற்கொண்ட அணுகுமுறைகளும் உளவியலை மையமாக்க கொண்டு அமைந்திருத்தலை நன்கு உணரமுடிகிறது.2 ஆ. இராமகிருட்டிணன், அகத்திணை மாந்தர்-ஒர் ஆய்வு புலநெறி மரபு ஆகியவற்றைக் கூறுவர்.

தோழியின் அறத்தொடு நிற்கும் உள்ளம்

     தலைவியோடு எப்போதும் இருக்கும் ஆயத்தில் தலைவிக்கு மிக நெருக்கமானவளாக அமையும் தோழி அவளது உள்ளத்தைத் தானே அறிந்து கொள்வதும் உண்டு ஆனால் குறிஞ்சிப்பாட்டுத் தலைவியின் உள்ளத்துயர் 'செப்பல் வன்மையின் செறித்து" என்பதால் நான் அவளிடம் கேட்டுத்தெளிந்தேன் என்கிறாள் தோழி.

     'எய்யா மைலை நீயும் வருந்துதி3

     செப்பல் வன்மையின் செறித்து யான் கடவலின்4

என்ற வரிகள் அறத்தொடு நிற்கும் தோழி 'நான் அறிந்து நடந்ததல்ல தலைவியின் காதல் என்று முதலில் தன்னை அதிலிருந்து நீக்கி நிறுத்திக் கொள்வதைக் காட்டுகின்றன. 'உன்னைப் போல் எனக்கும் தெரியாது" என்று சொல்லும்போது தோழியும் செவிலியும் ஒருவரையொருவர் குற்றஞ்சாட்ட வாய்ப்பிருக்காது. மேலும் மூன்றாவது மனிதர் போல் நிகழ்ந்தவற்றை முற்றிலுமாக தாயிடம் சொல்லுவதற்கான வாய்ப்பு தனக்கு ஏற்படும் போது தோழியின்  உளவியலாக இருந்துள்ளது. தொடர்ந்து தலைவனைப் பார்த்த சூழல், தலைவிக்கு நிகழ்ந்த அச்சம், தலைவன் காத்த தண்ணளி, தலைவியின் பெருமை ஆகியவற்றைப் படிப்படியாகத் தாய் ஏற்றுக் கொள்ளுகிற வகையில் சொல்கிறாள்.

பேரச்சம், சிறு அச்சம்

     முதலிலேயே பேரச்சம் கூறிவிட்டுப் பிறகு சிறு அச்சம் கூறினால் அது மனதில் பாய்ந்து பதியாது என உளவியலை அறிந்த அவள் முதலில் நாய்களால் வந்த அச்சத்தைத் தம் விளையாட்டுகளுக்குப் பின் கூறி செவிலியின் மனத்தை அடுத்து வரும் பேரச்சத்திற்கு தயார் செய்து வைக்கிறான். பிறகே யானையால் வந்த பெரிய அச்சத்தைக் கூறித் தாயின் அனுதாபத்தைப் பெற முறையாக முயல்கிறாள். அந்நிலையில் தலைவனின் தண்ணளி நியாயமானது என்பதை அத்தாயின் உள்ளங்கொள்ளவும் செய்கிறாள் இந்த ஆய்வுக் கருத்து தோழியின் தான் குற்றஞ்சாட்டப்படாமல் இருத்தல், தலைவி மீது அனுதாபத்தை ஏற்படுத்துதல், தலைவியின் காதலுக்குத் தாயின் ஆமோதிப் பெறுதல் என்ற வகையான உளவியல் நிலையை உறுதிசெய்கிறது.

     'இகல்மீக் கடவும் இருபெருவேந்தர்

      இருபேர் அச்சமொடுயானும் ஆற்றலேன்" (குறி.பா.27-29)

என்பதில் தம்முள் மாறுபாடு கொண்ட இரு பெருவேந்தரை சமாதானம் செய்யச் சொல்லும் அறிவுடையோர் போல தலைவிக்கும் செவிலிக்கும் இடையில் நின்று தான்வருந்துவதாகத் தோழி கூறுகிறாள். இது ஒரு வகையில் தன் மீது அனுதாபத்தை ஏற்படுத்தி, பின் காரியத்தை வெற்றியாக முடிக்கும் மனநிலையாகும்.

     'அட்சில் ஓதி! அசையல் ஆவதும்

      ----------------

      ----------------

      என்முகம் நோக்கு நக்கனன்". (குறி.பா.180-183)

என்ற தோழிக் கூற்றுத் தலைவன் அருள் உள்ளம் கொண்டவன் என்பதைக் காட்டுகிறது. அதோடு நிற்காமல் தலைவன் கண்ணியதேவறாதவன் நிற்கு நற்செய்கைகள் பொருந்தியவன் என்பதையும் தாயின் மனதில் பதிக்கிறாள் தோழி.

     'நேர்அறை முன்கைபற்றி, நிமர்தர

      கலங்கல் ஓம்புமின்". (குறி.231-233)

என்று சொல்லி நம் உளர் நீர் துறைக்கும்ப் பக்கம் வரை வந்து பாதுகாப்பாக விட்டுச் சென்றான் என்று கூறுகிறாள்.

அறிவுரைகூறும் சமூக உளவியல்

     தோழி அறத்தோடு நிற்க்கும் குறிஞ்சிப் பாட்டின் இலக்கியத் தொடச்சியில் தனி மனிதன் சமூகம், என்ற இரண்டு நிலைகளிலுமே அமைகிற உளவியல் தோழி வாயிலாகவே அறியப்படுகிறது.

     சமூகத்தின் உயர்ந்தவர்களாகவும் சான்றோராகவும் இருப்பவர்கள் ஒழுக்கத்தையே பெரியதாக நினைப்பார்கள்; ஒழுக்கம் உயிரைவிடமேலானது" என்று திருவள்ளுவரும் தெளிவாகவே குறிப்பிட்டுள்ளார்.

அலர் தூற்றும் சமூக உளவியல்

     ஆண்-பெண் காதல் மீது இயற்கை சமூகத்தை நிலை நிறுத்தி உள்ளது. ஆனால் ஆணும் பெணும் கொள்ளும் காதலை 'உயிர் இயற்கை" என்று ஏற்றுக்கொள்வதில் சமூகம் திறந்த மனது கொள்ளவில்லை காரணம் பொய்யும் வழுவும் தோன்றிய கால பெண்ணின் வாழ்க்கை சிக்கலும் உடையதாகலாம்.

     தலைவன் பகற்குறியில் வந்தால் பிறரது அச்சத்திற்கு ஆளாகலாம் என்பதால் இரவுக்குறியில் தலைவியைச் சந்திக்க வருவான். அவ்வாறு வரும்போது சமூகசூழல் தடையாக இருப்பது வளர்த்த காவலரின் காவல்நாய் இளைத்தல், தாய்விழித்துக் கொள்ளுதல், ந்pலவு ஒளி வருதல் ஆகியவற்றை தலைவியைத் தூற்றும் ஊரைநினைத்து இரவு நேரத்தில் சந்திக்க முயல்வதைப் போற்றாத தலைவன் 'கொன்னூர்மாயவரசின்இயல்பு" என நினைப்பதால் தவிர்ப்பான் நிலையாக இருந்ததை பாட்டு வெளிப்படுத்துகிறது.

தொகுப்புரை

  • குறிஞ்சிப் பாட்டில் தலைவன், தலைவியின் மனநிலைப் பற்றி அறியப்படுகிறது.
  • தலைவனுடன் வாழ்கின்ற வாழ்க்கை இப்போது இல்லாவிட்டாலும் மறுபிறப்பிலாவது சேர்ந்து வாழ்வோம் என்ற நிலையில் மறுபிறப்புக் கொள்கையானது வலியுறுத்தப்படுகிறது.
  • காந்தள் பூ முதல் எருக்கம் பூ வரையுள்ள தொண்ணுற்றொன்பது மலர்களை பாடலின் குறிப்பிட்ப்பட்டு உள்ளன.
  • தலைவன், தலைவியை மலையுறை தெய்வத்தின் முன்னிலையில் நிறுத்தி, அவளின் அழகைப் பாராட்டி, உன்னை என் இல்லக்கிழத்தியாக ஏற்றுக்கொள்வேன் என்று வாக்குறுதி கொடுக்கிறான்.
  • தலைவனின் குன்றானது குறிஞ்சி நில மக்கள் வாழும் நிலமாகவும் சுனையைத் தலைவனின் குடும்பமாகவும், மாம்பழ, பலாப்பழச்சாறு கலந்த கலவையைத் தலைவனாகவும், தேனடையிலிருந்து ஒழுகும் தேனைத்தெய்வமாகவும், மயிலைத் தலைவியாகவும் பொருத்திப்பார்க்கும் அழகு புலப்படுகிறது. இந்தப் பாடலின் மூலம் தலைவனின் உயர்குடிப் பிறப்பை மட்டுமின்றி, அவர்களின் கூட்டம் தெய்வத்தால் நிகழ்ந்தது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பார்வை நூல்கள்

  1. பத்துப்பாட்டு மூலமும் தெளிவுரையும் - தொகுதி -II, வித்துவான். நாராயண வேலுப்பிள்ளை
  2. இலக்கித்தில் மனித உரிமைக் கோட்பாடுகள் - ஆ.ஜெகதீசன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ். முதற்பதிப்பு, 1980
  3. அகத்திணை மாந்தர்- ஓர் ஆய்வு – புலனெறி மரபு –         ஆ. இராமகிருட்டிணன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ். முதற்பதிப்பு, 1982

அடிக்குறிப்புகள்

1.    இலக்கியத்தில் மனித உரிமைகள் கோட்பாடுகள், ஆ.ஜெகதீசன்-பக்-13

2.   குறிஞ்சிப்பாட்டு- 8 – வரி

3.   மேலது – 12 – வரி

4.   மேலது – 27 - 29 வரி வரை

5.   மேலது – 180 - 183 வரி வரை ,6. மேலது – 231 - 233 வரி வரை.