ஜூலை 2024 இதழுக்கு ஆய்வுக்கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன

“திருமுறைத் திருத்தலங்களில் இறைத் திருவடிவங்கள்”

க. கங்கா, முனைவர்பட்ட ஆய்வாளர், சர் தியாகராயா கல்லூரி, சென்னை -600 021 30 Apr 2021 Read Full PDF

கட்டுரையாளர்                       

க. கங்கா                          

முனைவர்பட்ட ஆய்வாளர், சர் தியாகராயா கல்லூரி, சென்னை -600 021                                     

நெறியாளர்

முனைவர் ப. தனஞ்செயன்

உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, சர் தியாகராயா கல்லூரி,சென்னை-600 021

 

 ஆய்வுச்சுருக்கம்

இயற்கைப் பொருள்களில் இயைந்து நிற்கும் இறைவன் தனக்கென ஓர் வடிவில்லாத நிலையினன். உலகின் உயிர்கள் உய்யும் பொருட்டு அருவாகவும், அருஉருவாகவும், உருவாகவும் வடிவுகொள்கிறான் என்பர். அந்நிலையில் அருவுருவத் திருமேனியாக இலிங்கத் திருக்கோலங்கள் மூலமுர்த்தியாக விளங்கும் திருத்தலங்களில் இறைச் சிறப்பு மேன்மைக் கொள்கிறது. உருக்கொண்ட நிலையில் 15 மகேசுவர மூர்த்தங்களும் பின்னாளில் அவை அட்டமூர்த்தமாகப் பெருகிய நிலையும் இக்கட்டுரையில் விரித்துரைக்கப்படுகிறது, இவ்வாறு உருவங்களின் தத்துவங்கள் வெவ்வேறு வகைப்பாட்டில் அறியலாகும் செய்தி செவ்வனே விளக்கம் பெறுகின்றது.

திறவுச்சொற்கள்:

உருவம், அருஉருவம், திருமேனி, லிங்கமேனி, திருமுறைத் திருத்தலம்

 

மக்களை எல்லா நிலைகளிலும் பக்குவப்படுத்திச் சீர்ப்படுத்துவதே சமயம் ஆகும், ஆக்கம் தரும் உயர்வினும் ஒழுக்கத்துடன் கூடிய சமய வாழ்வு தரும் உயர்வு மிக மிகப் பெருமையுடையது. இதுவே சமயப் பண்பாட்டின் தெளிவு எனலாம் என்பர் செ. வைத்தியலிங்கம்.1

ஒரு உன்னத சக்தி உண்டு அது எல்லையற்றது என்பது எல்லா மதங்களிலும் காணப்படுகின்ற சிறப்பம்சம். தியாகம் அல்லது துறவினால் மட்டுமே அந்த உன்னதத்தை புரிந்துக் கொள்ள முடியும். எல்லா மத சரித்திரங்களும் இதே பின்னணியில் தான் அமைந்துள்ளன, மண் ஒன்று தான் அது குயவனின் கைத்திறத்தால் வெவ்வேறு வடிவங்கள் பெறுகின்றது. மதமும் அப்படித்தான் இங்ஙனம் அநேக வகைகளாயின.

இயற்கை வழிபாட்டைத் தொடங்கி மனிதன் உருவ வழிபாட்டிற்கு மாறியபோது தன்னைப் போன்றே உருவங்களைப் படைத்தான், பெயர்களை வைத்தான், குணங்களைப் படைத்தான் அவற்றிற்கு வரலாறுகள் இதன் வழியே வந்தன.

இந்து மதம் ஆறு உட்பிரிவுகளை உடையது. சிவனை வழிபடுவது சைவம், திருமாலை வழிபடுவது வைணவம், முருகனை வழிபடுவது கௌமாரம், விநாயகரை வழிபடுவது காணாபத்யம், சூரியனை வழிபடுவது சௌரம், சக்தியை வழிபடுவது சாக்தம் என்ற படியாக, மேலும் உருவமில்லாத கடவுளுக்கு உருவத்தைக் கற்பித்தவன் மனிதன் ஓர் நாமம், ஓருருவம் ஒன்று மில்லாத இறைவனுக்குப் புராணங்கள் வழி ஆயிரம் நாமம் சாற்றி அநேக உருவங்களைப் படைத்தான் கலைஞன்.

புல்லாய், பூண்டாய், புழுவாய், பறவையாய், பல்மிருகமாய், மனிதனாய், வளருகின்ற உயிர்த் தோற்றத்தை அறிந்த மனிதன் இறைவன் மீனாய், ஆமையாய், பன்றியாய், சிங்கமாய், வாமனனாய், மனிதனாய், ராஜதந்திரியாய் வளர்கின்றான் என்று கற்பனை செய்கின்றான். மேலும், அறுபத்தி நான்கு திருவிளையாடல்களை இயற்றினான். ஆதலால் இறைவன் அறுபத்தி நான்கு மூர்த்தங்களாக உருவாகின்றான். எண்ணங்கள் விரிவாக விரிவாக அறுபத்தி நான்கு ஆயிரமாக உயர்ந்து கொண்டே போனாலும் வியப்பு ஒன்றும் இல்லை என்று வியந்து கூறுகிறார் சு.கி.சிவம்.2

கண்ணுக்குப் புலப்படாததும், மனம் வாக்கு கருத்துக்கு எட்டாததும், உள்ளத்திற்கு உள்ளே உறைவதும் ஒலியாய் ஒளிமயமாய் எங்கும் எதிலும் எப்போதும் நிறைந்த பொருளாய் தோற்றம் வளர்ச்சி ஒழுக்கங்களுக்கெல்லாம் காரணமாய் விளங்குவதும் பரம்பொருளேயாகும். உருவங்களை நுணுக்கமாக உரைக்கும் புராணங்கள், உபபுராணங்கள் மூலமாகத் தான் மக்களை உயர்நிலைக்கு கொண்டு செல்ல முடியும் என்பர்.3

பரம்பொருளாக விளங்கும் இறைவனின் அருட்கோலத்தை சைவர்கள் மூன்று நிலைகளில் விளக்கிக் காட்டுவர். கடவுளின் அருவ, உருவ, அருவுருவ நிலைகள். இவை ஒன்றுக்கொன்று முரண்பாடற்றவை. காணும் பொருள் அனைத்தும் அவன் வடிவமே தம்மால் படைக்கப்பட்ட உயிரினங்களின் வழிபாட்டை ஏற்று அவற்றிற்கு அருள்புரிய வேண்டி இறைவன் பல வடிவங்களை மேற்கொள்கிறான். இதனை அருணந்தி சிவாசாரியாரும்

அருவமும் உருவாரூபம் ஆனதும் அன்றிநின்ற

உருவமும் மூன்றும் சொன்ன ஒருவனுக்குள்ளவாமே

என்று கூறுவர்.4

சிவபெருமானின் மூன்று நிலைகளையும்,

உருவம் - விக்கிரகத் திருமேனி

அருவுருவம் - உருவமும் உருமற்ற நிலையும் (சிவலிங்கத் திருமேனி)

அருவம் - உருவமற்ற நிலை

என்று பிரித்துக் காட்டுவர்.

சிவபரம்பொருள் ஒன்பது வகையான தோற்றங்களை மேற்கொண்டுள்ளது. அவை சிவம். சக்தி. நாதம். விந்து, சதாசிவம், ஈசன், அரன், மால், அயன் என்பன இவற்றை

சிவம், சக்தி, நாதம், விந்து - அருவம்

சதாசிவம் - அருவுருவம்

ஈசன், அரன், மால், அயன் – உருவம் எனவும் பிரித்துக் காண்பர்.5

அருவம்

கண்ணுக்குப் புலனாகா, காற்று வடிவம் சிவன் அருவ வடிவிற்கு எடுத்துக்காட்டாகும். ஏனைய நிலம், நீர், தீ, ஞாயிறு, திங்கள் ஆகிய ஐந்து வடிவங்களும் உருவமற்ற சிவனின் அருவுருவ வடிவமாக கருதப் பெற்று வழிபடப்பெற்றன என்பர் முனைவர் சிவ திருச்சிற்றம்பலம்.6 இதன்படி கீதை பேசுவதும் பெரும்பாலும் இறைவனின் அருவ நிலையையே என அறிய முடிகிறது.

அருவ நிலை ஞானமே திருமேனியாகக் கொண்டது. இதனை நிட்களசிவம் என்றும் நின்மல சிவம் என்றும் கூறுவர்.

அருஉருவம்

கண்களுக்கு புலனாகி உறுப்புகளின்றி காணப்படும். நீர், தீ, மண் போன்ற வடிவங்கள் சிவனின் அருவுருவ வடிவமாகும். இதனை சகள நிட்கள திருமேனி என்றழைக்கப்படுகின்றது. உருவம் உண்டு உறுப்புகள் இல்லை. இவ்விரு தன்மைகளும் பெற்றதால் சிவலிங்கம் அருவுருவத் திருமேனியாகும்.

காணாத அருவினுக்கும் உருவினுக்கும் காரணமாய்

நீள்நாகம் அணிந்தார்க்கு நிழற்குறியாம் சிவலிங்கம்

என்பது சேக்கிழார் பெருமான் வாக்கு.7

உருவம்

சோமாஸ்கந்தர், தட்சிணாமூர்த்தி போன்றவை சிவன் உருவ வடிவங்களாகும். இவை சகளத்திருமேனி என்றழைக்கப்படுகின்றன. புறக்கண்களால் காட்சியளவில் இன்னதென்று அறியப்படும் உறுப்புகளுடன் இவை காணப்படுகின்றன.

 

 

திருமுறைத் திருத்தலங்களில் இறைவடிவம்

திருமுறைத் திருத்தலங்களாகக் கருதப்பெறும் 284 திருக்கோயில்களில் ஒன்றை தவிர அனைத்திலும் சிவபெருமானின் அருவுருவ வடிவான சிவலிங்கமே மூலமூர்த்தியாக அமையப் காண்கிறோம். கொங்கு நாட்டு தலமானத் திருச்செங்கோட்டில் மட்டுமே மூலவர் உமையொருபாகனாக அர்த்தநாரீசுவரராகக் காட்சி தந்து அருள் புரிகிறார். உருவ வடிவில் அமைந்த அறுபத்து நான்கு சிவமூர்த்திகளும் திருக்கோயில்களில் கோட்ட மூர்த்தங்களாகவும். திருச்சுற்றுக் கடவுளராகவும். திருவிழா நாயகர்களாகவும், தனித்த நிலையில் சிறப்பெய்துகின்றனர். இவை தவிர கருவறைப் பின்புறச் சுவரிலும், மண்டபத்தூண், விமானம், கோபுரம் போன்ற இடங்களில் முழுமையாகவோ அன்றிப் புடைப்புச் சிற்பமாகவோ அமைக்கப்படுகின்றன. திருவிழாத் தேரின்கண் மரச்சிற்ப உருவிலும் காணப்படுகின்றன. எந்த இடத்தில் என்ன வடிவம் கொண்டாலும், திருக்கோயில்களில் காணலாகும் தெய்வத் திருமேனிகள் அனைத்துமே வழிபாட்டிற்குரியனவாகும்.

திருமுறைத் தலங்களில் இலிங்கத் திருமேனிகள்

சிவ வடிவங்களில் மிகத் தொன்மையானது சிவலிங்க வடிவாகும். இலிங்கம் என்பதற்கு குறி என்பது பொருள் காண முடியாத இறைவனைக் காணுவதற்குரிய அடையாளமே சிவலிங்கமாகும்.8 லிங்கம் – லயம் தோற்றம், உலகு தோன்றி ஒடுங்கும் இடம் என்பது பொருளாகும்.9

இலிங்கம் பரார்த்தலிங்கம், சுயம்புலிங்கம், காணலிங்கம், தைவிகலிங்கம், திவ்யலிங்கம், ஆரிடலிங்கம், மானுடலிங்கம், இராட்சதலிங்கம், பாணலிங்கம், சணிகலிங்கம் என உருவாக்கியவர்கள் பெயரால் வகைப்படுத்தப்படுகின்றன.10

இலிங்கம் அடி – பிரம்மபாகம், நடு – விஷ்ணுபாகம், மேல் – உருத்திரபாகம் என மூன்று பகுதியை கொண்டது. மேல்பாகம் பாணம் என்றும், அடிபாகம் ஆவுடை என்றும் அழைக்கப்படுகின்றன. சிவபெருமானின் மகேசுவர மூர்த்தங்களை நின்ற இருந்த கிடந்த கோலங்களில் கூறுவது போல இலிங்க வடிவிலும் காட்டுவதுண்டு. சிவலிங்கத்தில் உயரமான பாணம் நின்ற திருக்கோலம் எனவும் நடுத்தரமான அளவுடையவை அமர்ந்த திருக்கோலமாகவும் மிகச் சிறிய அளவுடையவை கிடந்த கோலம் எனவும் வகைப்படுத்தப்படுகின்றன.

திருமுறைத் திருத்தலங்களில் காணப்படும் மூல மூர்த்தியான இலிங்கத் திருமேனி பலவித அளவுகளிலும், அமைப்புகளிலும், வண்ணங்களிலும் காட்சியளிக்கின்றன.

அளவு - வடிவம்

திருக்கோயில்களில் காணலாகும் இலிங்கத் திருமேனிகளை பெரியது, உயரமானது, சிறியது, பருத்தது, மெல்லியது, சாய்ந்தது, குட்டையானது, உருண்டையானது எனப் பல வடிவங்களில் காணப்படுகின்றன,

அதன்படி, தென்குடித்திட்டை திருத்தலத்தில் காளி தேவி தம் கையினால் இலிங்கம் பிடித்து வழிபட்டமையால் இலிங்கம் குட்டையாக உள்ளது.11

வார்த்த மானீச்சரம் திருத்தலத்தில் வானாசுரன் இலிங்கத்தினை பெயர்த்து எடுக்க முற்பட்ட போது சற்று வடக்காக சாய்ந்து கோணலாக காட்சியளிக்கிறது.12

திருக்கள்ளில், திருமுல்லைவாயில், பொண்ணாகடம், திருவெண்காடு அகிய தலங்களில் இலிங்கம் உயரமாக உள்ளது.

திருப்பல்லவனீச்சரம், திருச்சிராப்பள்ளி, குடமுக்கு போன்ற தலங்களில் பருத்து காணப்படுகிறது. திருவிற்குடியில் உருண்டையாகவும். கீழ்வேளூரில் மெல்லியதாகவும் இலிங்கத் திருமேனிகள் காணப்படுகின்றன.

அமைப்பு

தேவர்களும், மனிதர்களும், பிற உயிரினங்களும் இறைவனை வழிபட்ட முறைகளையும், இறைவன் அவர்களுக்கு அருள்புரிந்த நிலைகளையும் குறித்துக் காட்டும் வகையில் பல திருக்கோயில்களில் இலிங்கத் திருமேனிகளில் மாற்றங்களும் வடுக்களும் காணப்படுகின்றன.

இறைவனை வழிபட்டதால் ஏற்பட்ட வடுக்கள்

திருக்கச்சி ஏகம்பத்தில் உமாதேவியார் கம்மை நதிக்கரையில் மணலால் இலிங்கம் அமைத்து வழிபட இறைவன் ஆற்றில் வெள்ளம் வருமாறு செய்தார். உமையம்மை இலிங்கத்தைத் தழுவிக் காத்ததால் சிவலிங்கத்தில் வளையல் தழும்பும் முலைச் சுவடும் பதிந்துள்ளது.13

சிறுகுடியில் அம்பிகை மணலில் இலிங்கம் அமைத்து வழிப்பட்டதால் கைவிரல் பதிவாகி உள்ளது.

குற்றாலத்தில் அகத்தியர் சிவத்திருமேனியாக மாற்றப்பட்டதால் இலிங்கத்தின் மீது ஐந்து கைவிரல் காணப்படுகின்றன.

திருக்கடவூரில் எமன் இலிங்கத்தின் மீது பாசக் கயிற்றை வீசியமையால் பாசத் தழும்பு உள்ளன,

திருக்குறுக்கையில் மன்மதன் எறிந்த பஞ்சபாணங்களுள் ஒன்றான பத்மம் பதித்த அடையாளம் உள்ளது,

கொட்டையூரில் ஆமணுக்கு கொட்டைச் செடியின் கீழ் இலிங்கம் வெளிப்பட்டதால் இலிங்கத்தில் கொட்டை கொட்டையாக வடு காணப்படுகின்றது.14

உயிரினங்கள் ஊர்ந்ததால் ஏற்பட்ட வடுக்கள்

குடவாயில் என்ற தலத்தில் இலிங்கத் திருமேனியில் கருடன் தீண்டி வழிபட்டமையால் பாம்பின் வடு காணப்படுகிறது.

திருஎறும்பியூரில் திரிசிரனுடைய சகோதரன் கரன் என்பவன் எறும்பு உருக்கொண்டு இங்கு வழிப்பட்டதால் இலிங்கத்தின் மீது எறும்புகள் ஊர்ந்த அடையாளம் காணப்படுகின்றது. திருநீடுரில் நண்டு பூசித்தமையால் அதன் அடையாளம் உள்ளது. திருநெல்வேலியில் பாற்குடம் சுமந்து சென்ற பெண்ணை இறைவன் மூங்கில் வடிவமாக இருந்து இடற செய்து பாலை தன் மீது கவிழ்த்ததால் வெட்டுப்பட்ட அடையாளம் உள்ளது. திருநெல்லூரில் பிருங்கி முனிவர் வண்டு வடிவில் வழிப்பட்டமையால் இலிங்கத்தில் வண்டு துளைத்த அடையாளம் காட்சியாகின்றது.15

இலிங்கத்தின் வண்ணங்கள்

திருவான்மீயூர் தலத்தில் பசு பால் சொறிந்து வழிப்பட்டமையால் இலிங்கம் வெண்மையாக காட்சியளிக்கிறது என அறியலாகிறது. திருஆடானை தலத்தில் சூரியன் நீல நிற இரத்தினத்தால் இலிங்கம் அமைத்து வழிபட்டமையால் இலிங்கம் நீலமாக காட்சி கொடுக்கின்றது. திருஇடைச்சுரம், ஈங்கோய்மலையில் பச்சை நிறத்தில் காணப்படுகின்றன. திருநல்லூரில் ஒரு நாளில் ஆறுநாழிகைக்கு ஒரு முறை என்று ஒரு நாளைக்கு ஐந்து முறை நிறம் மாறுகின்றது.16

இலிங்கத் திருமேனியில் சிற்பங்கள்

இலிங்கத் திருமேனியில் சிறப்பம்சங்களைக் கொண்டு சில தலங்கள் காணப்படுகின்றன. முகலிங்கம் - பெருமான் தமக்குரிய ஐந்து முகங்களுடன் காட்சி தரும் திருக்கோலமாகும். திருவக்கரையில் மூன்று முகம் கொண்ட முகலிங்கம் காணப்படுகிறது. சக்திலிங்கம் - காஞ்சி ஆதிபீடபரமேசுவரி ஆலத்தில் உள்ள 40 அடி உயரமுடைய இலிங்கத்தில் உருத்திரபாகத்தில் சக்தி வடிவம் அமர்ந்த நிலையில் உள்ளது. ஆந்திரமாநிலம் குடிமல்லம் என்னும் இடத்தில் உள்ள இலிங்கத்தின் உருத்திரபாகத்தில் இருகைகளையுடைய சிவன் முயலகன் மீது நிற்கும் நிலையில் உள்ளது. இது மட்டும் அல்லாது அன்னூர் சிவன் கோயிலில் இலிங்கம் இறக்கைகளுடன் காணப்படுவது வியப்புக்குரியதாகும்.17 இது போன்ற இலிங்க அமைப்பு எங்குமே காணப்படவில்லை.

இறைவனுடைய வடிவங்களின் வளர்ச்சி நிலை

சிவன் வடிவின் பல்வேறு நிலைகளைப் பற்றிய செய்திகள் தலபுராணங்கள், சகளாதிகாரம், காஸ்யபசிற்பசாத்திரம், கந்தபுராணம், தென்குடித்திட்டைப்புராணம், சிவபராக்கிரமம் ஆகிய நூல்களில் பலவாறாகக் குறிப்பிடப் பெற்றுள்ளன. சோமாஸ்கந்தர், சந்திரசேகரர், இடபவாகனர், நிருத்தமூர்த்தி, ஜடாதரர், திரிபுராந்தகர், கல்யாணசுந்தரர், அர்த்தநாரீஸ்வரர், கஜசம்ஹாரர், பாசுபதர், கங்காளர், அரிஅர்த்தர், பிட்சாடனர், சண்டேசனுக்ரகர், தெட்சணாமூர்த்தி, காலசம்ஹாரர், லிங்கோத்பவர் என்று பதினாறு சிவ வடிவங்களைப் பற்றி சகளாதிகாரம் நூல் குறிப்பிட்டுள்ளது.

உலகைப் படைக்க அருட்சக்தியைத் தன்னுள்ளே அடக்கியது அர்த்தநாரீசுவரக் கோலம், குடும்ப வாழ்வின் நலம் கூறுவது சோமாஸ்கந்த மூர்த்தம், தன்னை அண்டியவரைக் காத்து நிற்கும் சந்திரசேகரர்த் திருக்கோலம், அடியவர் பிழை பொருத்துக் காக்கும் பிட்சாடனத் திருவுருவம், எமபயம் நீக்கும் காலச்சம்ஹார தோற்றம், அடியவர் அரக்கக் குணம் அழிக்கும் சரபேசுவரர் கோலம், உயிர்களை நீர்க்கொடுத்துக் காத்து நிற்கும் கங்காதரத் திருக்கோலம், மக்கள் மனச்செருக்கை அழிக்கும் கஜசம்ஹார மூர்த்தம். பரிவற்று ஒளிரும் சக்தியின் வெளிப்பாட்டுத் தோற்றம் உமாமகேசுவர மூர்த்தம், வேள்வி வளர்த்து மணம் முடித்த கல்யாணசுந்தரக் கோலம். அரியும் அரனும் ஒன்று என உணர்த்தும் சங்கரநாராயணத் திருக்கோலம், மும்மூர்த்தியும் ஒரு முர்த்தியே என உரைக்கும் ஏகபாதர் தோற்றம், தத்துவத்தை வெளிப்படுத்தி நிற்கும் லிங்கோத்பவர் கோலம் என்று இறைவன் உயிர்கள் மீது வைத்த கருணையினால் பலவகைத் திருமேனிகளாகக் காட்சியளிக்கின்றார்.

புலன்களால் அறிய இயலாத இறைவனை உணர முடியாச் சிற்றறிவினர்க்கே மகேசுவர மூர்த்தங்கள் உரியது. தெளிவும், பக்குவமும் உடையவர்க்கு சிவலிங்கத் திருமேனியே வழிபாட்டிற்குரியதாகிறது. உலகத்திலேயேயுள்ள பலவகைப்பட்டவர்கள் தகுதிக்கும், ஆவலுக்கும், கற்பனை விருப்பங்களுக்கும் ஏற்றவாறு வழிபடுவதற்கேற்ற வண்ணம் அவை பலவகைப்பட்டு விளங்குகின்றன என்பர் செ.வைத்தியலிங்கம்.18

பொற்கட்டியும் அதனால் செய்யப்பெரும் அணிகலன்களும் போலவே சிவபரம்பொருளும், சிவமுர்த்தங்களும் வேற்றுமையற்றவை இத்தகைய பக்குவப்பட்ட உணர்வுடன் சிவமுர்த்தங்களைப் போற்றும் போது தான் சமய உலகில் தோன்றிய அவற்றின் நோக்கம் நிறைவேறும்.

சான்றெண்விளக்கம்

  1. செ. வைத்தியலிங்கம், தமிழ்ப்பண்பாட்டு வரலாறு, ப.98.
  2. தொ.மு. பாஸ்கரத் தொண்டைமான், ஆடும் பெருமாளும் அளந்த நெடுமாலும், ப.79.
  3. செ. வைத்தியலிங்கம், தமிழ்ப்பண்பாட்டு வரலாறு, ப.98.
  4. சிவ திருச்சிற்றம்பலம், சைவ சமய கலைக்களஞ்சியம், தொகுதி 1, சிவ வடிவங்களும் தொகையகராதியும், ப.9.
  5. வை. இரத்தினசபாபதி, வீர சைவம், ப.134.
  6. சிவ திருச்சிற்றம்பலம், சைவ சமய கலைக்களஞ்சியம், சிவ வடிவங்களும் தொகையகராதியும், ப.10.
  7. மிழலைத் தொண்டன், இந்துமத உண்மைகள், ப.18.
  8. கே. ஆறுமுக நாவலர், இந்து மத இணைப்பு விளக்கம், ப.48.
  9. மிழலைத் தொண்டன், இந்துமத உண்மைகள், ப.17.
  10. சிவ திருச்சிற்றம்பலம், சைவ சமய கலைக்களஞ்சியம், தொகுதி 1, சிவ வடிவங்களும் தொகையகராதியும், ப.11.
  11. பூமா ஜெய செந்தில்நாதன், திருமுறை தலங்கள், ப.558.
  12. மேற்படி, ப.606.
  13. மேற்படி, ப.21.
  14. மேற்படி, ப.361.
  15. மேற்படி, ப.641.
  16. மேற்படி, ப.457.
  17. மேற்படி, ப.579.
  18. கே. ஆறுமுக நாவலர், இந்து மத இணைப்பு விளக்கம், ப.51.

துணைநூற்பட்டியல்

  1. ஆறுமுக நாவலர், கே.     -  இந்து மத இணைப்பு விளக்கம்

                        எம்.எஸ்.எம். அச்சுக்கூடம்,

                        சென்னை. 1964.

  1. இரத்தின சபாபதி. வை.    -  வீரசைவம்

  பொன்விழா வெளியீடு,

  சென்னைப் பல்கலைக்கழகம்,

  சென்னை. 1977.

  1.  மிழலைத் தொண்டன்    -  இந்து மத உண்மைகள்

                        என்.ஆர்.பதிப்பகம்,

                             மயிலாப்பூர், சென்னை. 1988.

  1. வைத்தியலிங்கம், செ.     -  தமிழ்ப்பண்பாட்டு வரலாறு

                        (பாகம் 2,3)

                             அண்ணாமலை பல்கலைக்கழகம்,

                             சிதம்பரம். 1997.

  1. சிவ திருச்சிற்றம்பலம்      -  சைவ சமய கலைக்களஞ்சியம்

                      தொகுதி 1 சிவ வடிவங்களும்,

                      தொகையகராதியும்

                        ராஜேஸ்வரி புத்தக நிலையம்

                        தி.நகர், சென்னை. 2002.

  1. ஜெய செந்தில்நாதன், பூமா.சிவத் திருமேனிகள்

                        வர்த்தமானன் பதிப்பகம்,

                        தி.நகர், சென்னை. 1997.