ஜூலை 2024 இதழுக்கு ஆய்வுக்கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன

ஆழ்வார்கள் விடு தூது

ரா. வேதவல்லி, முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த் துறை, சர் தியாகராயா கல்லூரி, சென்னை - 21 30 Apr 2021 Read Full PDF

கட்டுரையாளர் : ரா. வேதவல்லி,

முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த் துறை,

சர் தியாகராயா கல்லூரி, சென்னை - 21

நெறியாளர் : முனைவர் சொ. மகாதேவன்

இணைப் பேராசிரியர், துறைத் தலைவர் தமிழ்த் துறை,

சர் தியாகராயா கல்லூரி சென்னை - 21

ஆய்வுச்சுருக்கம் ;

  ஆழ்வார்கள் விடு தூது என்னும் தலைப்பில் மேற்கொள்ளப்படும்; இந்த

ஆய்வானது, ஆழ்வார்களின் அருளிச் செயல்களான நாலாயிர திவ்யப்ரபந்தத்தில் உள்ள ‘நாயக - நாயகி’ பாவத்தில் தூது விடுதலை பற்றியதாகும்.

     நாலாயிர திவ்யப்ரபந்தத்தில் நம்மாழ்வார், திருமங்கையாழ்வார், ஆண்டாள்

ஆகியோர் அருளிச் செய்த தூது விடும் பாசுரங்களே ஆய்விற்கு எடுத்துக்

கொள்ளப்பட்டுள்ளன. வண்டு, குயில், கிளி, அன்னம், நாரை அன்றில் போன்ற

பறவைகளையும் நெஞ்சு, மேகம், வாடை இவற்றையும் தூதுப் பொருட்களாகக்

கொண்டனர். இப்பறவைகள் உள்ளுரையில் நல்லாசிரியனைக் குறிக்கும்.

     ஆழ்வார்களின் இறையனுபவம், பெண் தன்மை, ஆழ்வார் நாயகியர், தாய்,

தோழி, தலைவி, போன்ற நிலைகளில் ஆழ்வாரின் பாடல்கள், பராங்குச

நாயகியான நிலையில் அவரின் ஏக்கம் , பிரிவும் புணர்வும், நாயக நாயகியின்

பாவனையின் ஆழம், தூது விடல், தூது விடும் பறவைகளுக்கு உள்ளுறைப்

பொருள், தூதுவழி ஆழ்வார்கள் பெற்ற அனுபவம், தூதுப் பொருட்களோடு

ஆசார்யர்கள் ஒப்பீடு போன்ற தலைப்புகளில் ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.

திறவுச் சொற்கள்:

ஆழ்வார், தூது, திவ்யபிரபந்தம், நாயகியர், பெண்தன்மை, ஞானி

ஆழ்வார்களின்  இறையனுபவம்  ;

           ஆழ்வார்கள் இறைவனால் மயர்வற மதிநலம் அருளப் பெற்றவர்கள். மதி

என்பது ஞானத்தையும், நலம் என்பது பக்தியையும் குறிக்கும் 

ஆழ்வார்கள் சிறந்த பக்தர்கள்  மட்டுமல்லாது ஞானிகளும் ஆவர். அப்படிப்பட்ட

ஞானிகளின் இறையனுபவத்தில் நிறைந்த காதல் அனுபவமே பாடல்களாக

வெளி போந்தன. ஆழ்வார்கள் அகத்தினின்றும் எழுந்த அருட்பாக்களே அருளிச்  

செயல்கள் என்றும் கூறுவது மரபு. பிரேம தசையில் அவர்கள் பாடிய

பாடல்களே அகப் பாடல்களாக அமைந்தன.

ஆழ்வார்களின் பெண் தன்மை

     இறைவனின் குணங்களிலும், எல்லையற்ற வடிவழகிலும் ஈடுபட்ட

ஆழ்வார்கள் அவனை முக்கரணங்களாலும் இனிது அனுபவிக்க முற்பட்டு, அது

நடவாமையாலே துக்கித்துப் பெண் நிலையை எய்தினார் என்பது திரண்ட

கருத்து.

     விசிஷ்டாத்வைத கொள்கையின்படி பக்தியாலேதான் மோட்சம  .  பக்தி

என்பது இறைவனிடத்தில் காமம். இறைவன் ஒருவனே ஆண். அவனே

புருஷோத்தமன். அவனது பேராண்மைக்கு முன் மற்றவை அனைத்தும்  “ஸ்த்ரீ

ப்ராயமிதரத் ஸர்வம்’ என்றபடி பெண்தன்மை அடைகிறது. எம்பெருமான்

தலைவனாகவும், ஆத்மாவாகவும், ஆட்கொள்பவனாகவும், புருஷோத்தமனாகவும் இருப்பதற்குச் சேர ஜீவாத்மாவானது அடியனாகவும் சரீரமாகவும் ஆட்பட்டவனாகவும் ஆகிறது.

     அவன் புருஷோத்தமனாய் இருப்பது ஜீவாத்மாக்களுக்கு பெண்

தன்மையை விளைவிக்கிறது. இதனையே அழகிய மணவாளப் பெருமாள் நாயனாரும்,   ‘மணிவல்லிப் பேச்சு வந்தேறியன்று’ என்பர். அதாவது பெண்மை ஆன்மாவிற்கு இயற்கையாகையாலே  அதை உள்ளபடி கண்ட ஆழ்வாருக்கு

அதனால் உண்டான பேச்சு  இயற்கை என்று இதனை விளக்குகிறார்

மணவாளமாமுனிகள்.

ஆழ்வார்  நாயகியர்  

     காதல் உணர்வு இயற்கையில் ஆத்மாக்களை ஒன்றுபட ஈர்ப்பதாகும் .

ஆண் பெண் கவர்ச்சியின் அடிப்படை இயற்கையாய் அமைந்தது. ஓன்று கூடும்

புணர்ச்சி இன்பத்தை விடப் பிரிந்திருக்கும் . நிலையிலேயே இருவருக்கும், ஒன்றுபடும் ஆவல் அதிகரிக்கும். பிரிவில்  அன்பின் ஆழம் புலப்படும்.

     திருமங்கையாழ்வார் படைப்பிலும் இதனைக் காணலாம். இறைவனாகிய

தலைவன் தன்பால், தெய்வீகக் காதல் கொண்ட ஆத்மாவிடம், சேர்க்கை, பிரிவு

என்று மாறி மாறி விளையாடுகிறான். சேர்க்கையில் ஆனந்தமும், பிரிவில்

துயரமும் மாறி மாறி வரும் . ஆண்டாள், இராதை ஆகியோரிடம் கண்ணனின்

காதல் இத்தகையது. பிரிவு என்பது “லீலா  விபூதி” என்ற இவ்வுலகில்

மிகுதியாய் வரும். சேர்க்கை என்பது குறைந்திருக்கும். பரத்துவமாகிய

“நித்திய விபூதி” யில் சேர்க்கை நித்தியமானது.

     இறைவனை அடைய ஏங்கும் தலைவியின் நிலையில் உள்ள ஆத்மா

“நான்” “எனது” என்ற, கணத்தில் அழியும். பற்றுக்களை நீக்கி, “தான்

நிலையான இறைவனது உரிமை” என்ற பற்றினை பற்றுகிறது. 

      திருமங்கைமன்னன், நம்மாழ்வார், ஆண்டாள் ஆகியோரது அகப் பாசுரங்களில் ஆத்மா நெஞ்சுருகித் தன்னிலை அழிந்து தலைவனாம் பரம் பொருளுடன் ஒன்றுபடுவது சிறப்பாய்க் காட்டப்பட்டுள்ளது. இந்தப் பாசுரங்களில் தலைவி கூற்று, தோழிகூற்று, தாய்க் கூற்று என்று மூவர் பேச்சுக்கள் அமைந்துள்ளன. ஆத்மாக்கள் இறைவனையே சார்ந்திருக்கும் நிலையே இதன் அடிப்படை.  தேன் கலந்த மருந்து போல், அகப் பொருள் கலந்த ஆன்மீகப் பாசுரங்கள்  இவை.பரமாத்மாவிடம் பெண்ணியல்போடு சரணாகதி அடைவதே இதன் அடிப்படை ஆகும்.

.தாய்,  தோழி, தலைவி

     மனத்தளவில் ஆழ்வார் பெண்ணாக மாறிவிடுகிறார். தன் ஆண் உடம்பை

மறக்கிறார். இதனை வேங்கடத்து இறைவனிடம் தன்மனத்தை இழந்த தலைவி நிலையில் வரும் திருவிருத்தப் பாசுரங்களில் காணலாம். திருவிருத்தத்தில் நாயகி தன் உடல் உறுப்பைப் பற்றிச் சொல்லுவதால் இந்த மனோபாவத்தின் முழுமை புலப்படுகிறது. திருவாய்மொழி முழுமையுமே நம்மாழ்வாரின்

இறையனுபவத்தை வெளிப்படுத்தும்.  எனினும், 27 பதிகங்கள்

பெண்ணியல்பியலாக தலைவி நிலையில் பாடப்பட்டவை. 17

திருவாய்மொழிகளில் பராங்குச நாயகியுடனுடைய காதல், “ப்ரேமத்தில் பெண்பேச்சாக” வெளிப்படுகிறது. கரைகடந்த காதலினால் தன் நிலை மீறி பேசுவதைக் காணலாம். தாய்ப் பாசுரங்களில் தன் மகள் தகுந்த

மணவாளனோடு கூடி, மனமகிழ்ச்சியோடு வாழ விரும்புவதைக் காணலாம். ஏழு திருவாய்மொழிகளில் தோழி பேசுகிறார். தலைவனோடு தலைவி கூட விரும்புவதை வற்புறுத்துகிறாள்.

     ஆழ்வார் தாம் ஆடவராயினும் , தாய், தோழி என்ற பெண்ணியல்புகளை

மேற்கொண்டு தலைவியின் காதலைக் குறிப்பிடும் போது பெண்ணுள்ளம்

முழுமையாக வெளிப்படக் காணலாம். பராங்குசர் என்ற நம்மாழ்வார் பராங்குச

நாயகியாகிறார். பரம், வியூகம், அவதாரம், அந்தர்யாமித்துவம் , அர்ச்சை ஆகிய எந்த வடிவாயினும் இறைவனுடைய வடிவழகில் மனம் செலுத்தித் தலைவி ஈடுபாடு கொள்கிறாள். ஏதேனும் ஒரு அவதார நிகழ்ச்சியிலோ, ஆலய

வடிவத்திலோ மிகுந்த ஈடுபாடு காட்டப்படுகிறது. நாயக நாயகி பாவத்தில்

அமைந்த 27 திருவாய்மொழிகளுள் 9 திருவாய் மொழிகளும் 3 பாசுரங்களும்,

அர்ச்சாவதாரத்தின் மீது கொண்ட அளவற்ற காதலைக் குறிப்பிடுகின்றன.

பராங்குச நாயகியின் ஏக்கம் நம்மாழ்வார் நாராயணனிடம் கொண்ட காதலை அவரது திருவிருத்தம் என்னும் நூல் விளக்கும்  

     . தலைவியின் வேறுபாடு கண்ட தோழி வியந்துரைத்தல், பிரிவாற்றாத தலைவி நெஞ்சழிந்து உரைத்தல், வாடைக்கு ஆற்றாது வருந்திக் கூறல், அந்நிலையில் , தலைவியின் மாமை கண்டு தோழி இரங்கல்,

தலைவியின் எழில் கண்டு வியந்து தலைவன் நலம் பாராட்டல், அவன்

பிரிவுணர்ந்த தலைவி தோழிக்குரைத்தல், தலைவனைப் பிரிந்த தலைவி

ஆற்றாமை கண்டு தோழி இரங்கல், வெறிவிலக்கு, வரைவு கடாவுதல், செவிலி

இரங்கல், தார் பெற்றுத் தலைவி மகிழ்தல், அன்னங்களையும் ,

வண்டானங்களையும் , தூது வேண்டல், தூது செல்லாத மேகங்களைக் கண்டு

தலைவி இரங்கல், கூடல் இழைத்தல், உருவெளிப்பாடு, நெஞ்சத்தூது,

வண்டுவிடு தூது, கட்டுவிச்சி  கூறல், செவிலி இரங்கல்  , கால மயக்கு, மதி

உடம்பாடு, தலைவி தலைவனைக் காண விரைதல், மாலைப் பொழுது கண்டு

இரங்கல்,  பாங்கன் தலைவியைக் கண்டு தலைவனை அடுத்து வியந்து கூறல்,

அறத்தொடு நிற்றல் , தலைவி தலைவனிடத்துத் தனக்குள்ளே அன்புறுதியைத்

தோழிக்குக கூறல் போன்ற சங்க இலக்கிய அகமரபுப் பாசுரங்கள்

திருவிருத்தத்தில் அமைந்துள்ளன.

தெய்வத் தண்ணந்துழாய்த் தாரா யினும் தழையாயினும், தண்

கொம்பதாயினும்,கீழ்வேரேயாயினும், நின்ற மண்ணாயினும்   கொண்டு வீசுமினே (1)

என்ற பாசுரப் பகுதியில் திருமாலுக்குகந்த துளசிச் செடியின் இலையோ,

தொடுத்த மாலையோ, கிளையோ, வேரோ, அடி மண்ணோ கொண்டு இவன்

ஏக்கத்தைப் போக்க வேண்டும் என்ற உணர்ச்சிப் பிழம்பைக் காணலாம்.

இதே போல திருவரங்கம், திருவேங்கடம், திருவெஃகா ஆகிய

பெருமான்களையும் தலைவி நினைந்தேங்கக் காணலாம்.

பிரிவும் புணர்வும்

     உலகியல் காதலுக்கும் ஆழ்வார்களின் தெய்வீகக் காதலுக்கும் பெரு

வேறுபாடு உண்டு. கண்ணன் மீது கொண்ட காதலை வெளிப்படுத்தும்

பாசுரங்களில், அவனுடைய வடிவழகை வருணிக்கும் பகுதிகள் என்றும் குன்றாத தெய்வீகப் பேரழகையே உணர்ந்து பாடியவையாம், கவிதைச் சிறப்பும் தத்துவ நோக்கும் உடைய ஆழ்வார் பாசுரங்கள் ஈடும் எடுப்பும்  இல்லாதவை. ஜீவாத்மா பரமாத்மாவோடு இணைவதையே

இவ்வகைப்பாடல்களில் உருவகபடுத்தப்படுகின்றன.

     ஜீவாத்மாவுக்குப் பரமாத்மாவிடம் தோன்றும்  தெய்வீகக் காதலாகிய பேரவாவின் ஆழத்தை விடப் பரமாத்மாவுக்கு ஜீவாத்மாக்களிடம் தோன்றும்  காதலின் ஆழம் மிகுதியானது. “நாம் அவனை நோக்கி ஓரடி வைத்தால் அவன் நம்மை நோக்கி ஈரடி வைப்பான்” என்பது துணிபு. பிரிவில் ஒவ்வொரு நொடியும் நெடுங்காலமாய் நீளும்  புணர்வில் நெடுங்காலம் ஒரு நொடியாய்க்குறுகும்.

நீயும்பாங்கல்லை காண் நெஞ்சமே! நீளிரவும்

ஓயும் பொழுதின்றி ஊழியாய்நீண்டதால் 

காயுங்கடுஞ்சிலை என்காகுத்தன்வாரானால் 

மாயும் வகையறியேன் வல்வினையேன் பெண்பிறந்தே (2)

என்ற பாசுரத்தில் இரவு நீட்டிப்புக்கு வருந்திக் கூறும் தலைவியைக்

காணலாம். பிரிவில்  தலைவி தலைவனுடைய கல்யாண குணங்களை

நினைத்து ஏங்குகிறாள். புணர்வில் அவனது அழியாப் பேரழகில் தன்னை

மறக்கிறாள். பிரிவும் புணர்வும் மாறி மாறி வருகையில் தீயில் புடமிட்ட

பொன்னாக ஆழ்வார் நாயகியின் மனம் செம்மைப்படுகிறது. இறுதியில்  

ஒன்றுபடுவதைக் காணலாம்.

நாயக நாயகியின் பாவனையின் ஆழம்

கவிதையாற்றலும் கற்பனை நயமும் மிக்கது தலைவியின் உள்ளம்.

அர்ச்சை வடிவத்தை நேருக்கு நேராகத் தரிசிக்கும்போது பேரானந்தப்

பெருங்கடலில் அமிழ்ந்த உள்ளம் பெருங்காதலில் உருகிப்போகிறது. பிரிவின்

துன்பம் புணர்வில் மறைகிறது. மாயன் தலைவியின் மனத்தில் புகுந்து, ‘ஆரா

அமுது’ ஆகிறாள். இறைவனை ஆரா அமுதமாக அனுபவித்துப் பாடுவது

“வைணவமரபு” “அமுதிலும் ஆற்ற இனியன்” என்பது திருவாய்மொழி, “தேனும்

பாலும். நெய்யும்,கன்னலும், அமுதும் ஒத்தேநானும், யானும் எல்லாம்

தன்னுள்ளே கலந்தொழிந்தோம் (3) என்பது இறையன்பு அனுபவ வெளிப்பாடு,

என தாவிய நின்று, நின்று உருக்கி உண்கின்ற இச்சிறந்த வான்சுடரே (4)

என்று கண்ணனை ஆழ்வார் உருகி அழைக்கிறார். பத்துடை அடியவர்க்கு

எளியவன் (5) என்று அவரது சௌலப்யம் போற்றப்படுகிறது. இந்த

எளிமைத் தன்மையே அவனிடம் காதல் அன்பு கொள்ளவும் துணை புரிகிறது.

மாயோன், ஆழ்வார் நாயகியிடம் ஒளிந்து நின்று விளையாடுகின்றான். பிரிவில்

நாயகியின் அன்பு தூய்மையடைகிறது. நீர் நுமது என்ற இவை வேர் முதல்

மாய்த்து (6) என உலகியல் எண்ணங்களினின்று மனத்தை அகற்றி,

வைராக்யத்துடன் பகவத் காமத்தில் மனம் செல்கிறது. ஆன்மீகக் காதல்

எம்பெருமானை அடையும் வேட்கையாக மாற்றம் பெறுகிறது.

திருவாய்மொழியிலும், திருவிருத்தத்திலும் காணப்படும் பிரிவுத் துயரமும்,

ஏக்கமும் , உருக்கமும் பக்தி இலக்கியத்தில்  ஈடு இணையற்ற படைப்பாகும் .

கோலச் செந்தாமரை கண்ணற்கு - என் கொங்கலரேலக் குழலி இழந்தது

சங்கே” (7) கொங்கல் தண்ணந் துழாய் முடியானுக்கு என் மங்கையிழந்தது

மாமை நிறமே (8) இதேபோல் பல பாசுரங்களில் பிரிவில்  தலைவியின் நிறம் 

மாறுபடுவதும் உடல்  இளைப்பதுவும், வளை கழல்வதுவும் , கண்ணநீர்

கைகளால் இறைக்கும் ;” (9) நிலையும், உடல் நடுக்கமும், உள்ளச்  சோர்வும் 

போன்ற பலவித மாறுபாடுகள் தோன்றுகின்றன. அன்றிலும் கிரௌஞ்சமும்

துயரத்தில் அலறுகின்றன. திருத்துழாயைப் பெறத் தலைவி உள்ளம்

ஏங்குகிறது. உண்ணும் சோறு பருகும் நீர் தின்னும்  வெற்றிலையும் எல்லாம்

கண்ணன் (10) என்ற நிலைக்கு ஆழ்வார் நாயகி ஆளாவது காணலாம்.

ஆடி ஆடி அகங்கரைந்து இசைபாடிப்பாடிக் கண்ணீர் மல்கி எங்கும்

நாடி நாடி நரசிங்கா என்று வாடி வாடும்  இவ்வாணுதலே (11)

என்று ஏக்கமுற்ற நாயகியின் நிலை பேசப்படுகிறது. தீயைத் தழுவி “அச்சுதன்”

என்பாள் , காற்றைத் தழுவிக் “கோவிந்தன்” என்பாள் , கண்ணீர் மல்கி

இறைவனை நினைத்து ஏங்குவாள். “பாசம் கொண்ட பரஞ்சுடர்ச் சோதிக்கு,

நேசம் கொண்ட நங்கையின் அன்பு” பலவாறு புலனாகிறது.

நாலாயிர திவ்யப் பிரபந்தத்தில் பெரிய திருமொழி, திருநெடுந்தாண்டகம்,

திருவாய் மொழி திருவிருத்தம்,நாச்சியார் திருமொழி ஆகியவற்றில் தூதுக்குரிய பாடல்கள் உள்ளன.

தேமருவுபொழிலிடத்து மலர்ந்தபோதைத்

தேனதனைவாய்மடுத்து, உன்பெடையும்நீயும ;

பூமருவிஇனிதமர்ந்து பொறியிலார்ந்த

அறுகாலசிறுவண்டே!  தொழுதேன் உன்னை

ஆமருவிநிரைமேய்த்த  அமரர்கோமான்

அணியழுந்தூர்நின்றானுக்குஇன்றே சென்று

நீமருவியஞ்சாதே  நின்றுஓர்மாது

நின்நயந்தாளென்று இறையே இயம்பிக்காணே. (12)

தூவிரியமலருழக்கித் துணையோடும்பிரியாதே

பூவிரியமதுநுகரும் பொறிவரிய சிறுவண்டே!

தீவிரியமறைவளர்க்கும்  புகழாளர்திருவாலி

ஏவரிவெஞ்சிலையானுக்கு என்நிலைமைஉரையாயே. (13)

தூதுரைத்தல் செப்புமின்கள் தூமொழிவாய்வண்டினங்காள்

போதிரைத்துமதுநுகரும்  பொழில்மூழிக்களத்துறையும்

மாதரைத்தம்மார்வகத்தே வைத்தார்க்கு, என்வாய்மாற்றம்

தூதுரைத்தல் செப்புதிரேல் சுடர்வளையும்கலையுமே. (14)

திருமங்கையாழ்வார் அருளிச் செய்த பெரிய திருமொழியில் செம்போத்து,

காக்கைப் பிள்ளை, குயில் , பல்லிக் குட்டி, களி, கோழி ஆகியவற்றை விளித்து

மாயனை அழைக்கும் படி வேண்டுவதாகச்  சில பாடல்கள் உள்ளன. அவற்றுள்

ஒன்று

கரையாய் காக்கைப்பிள்ளாய்!

கருமாமுகில்போல் ; நிறத்தன்

உரையார்தொல்புகழ் உத்தமனைவர

கரையாய் காக்கைப்பிள்ளாய்.;. (15)

இத்தன்மைத்தான பாடலைத் தூதின் திரிபு எனக் கொள்ளலாம்.

தூது விடல்

“திருவிருத்தம்” காவிய வடிவில் பிரிவினைச் சித்தரிக்கிறது. பிரிவுற்ற

தலைவி தலைவனிடம் தன் காதலை வெளிப்படுத்தத் தூது அனுப்புகிறாள்.

அம்சிறைய மடநாரை, ஆழிவரி வண்டு, சிறுகுருகு, இளங்கிளி, சிறுபூவை

போன்ற பறவைகளையும், வாடைக் காற்றையும், தன் மடநெஞ்சையும்

கண்ணனை நோக்கித் தூது அனுப்பும்  நிலையை அஞ்சிறைய மட நாரை

(16) என்ற திருவாய் ழொழியில் ; காணலாம். குருகினங்கள், புள்ளினங்கள்

அன்னங்கள், குயில்கள், கிளிகள், பூனைகள், வண்டானங்கள் போன்றவற்றை

தூது அனுப்பவதாக “வைகல் பூங் கழிவாய்” (17) என்ற திருவாய் மொழி கூறும்,

புள்ளினங்கள், கிளிகள், வண்டுகள், தும்பிகள், பூவைகள் , புறா வினங்கள்

போன்றவற்றை தூது அனுப்புவதைப் போலவே பொன்னுலகாளீ ரோ” (18) என்ற திருவாய்மொழியில்  காணலாம். நாரை, குருகு, கொக்கு, முகில், வண்டு, தும்பி,அன்னம் போன்றவற்றைத் தூது அனுப்புவதாக எங்கானலகம்கழிவாய் (19) 1 என்ற திருவாய் மொழியில்  வருகிறது.

     இந்த நான்கு திருவாய் மொழிகளிலும் வியூகம் விபவம், பரத்துவம்,

அந்தர்யாமித்துவம், அர்ச்சை வடிவங்களிடம் தூது அனுப்புவதாக

ஆசார்யஹிருதயம் கூறும். தனது எல்லையற்ற பிரேமையினால் நாயகனையே

தானாக நினைத்துப் பார்க்கிறாள். வண்டுகள் நோக்கித் தன்னிலையை

இறைவனது “மாசு இல்  மலரடிக்கீழ் சென்று சொல்லுமாறு” (20) கேட்கிறாள்.

ஆழ்வார்  தூது விடுகின்ற பறவைகளுக்கு உள்ளுறை பொருள்

பெண்ணிலை எய்துகின்ற ஆழ்வார் எம்பெருமானிடத்தில் அவனைப் பிரிந்து

தாம் படுகின்ற துயரை அவனுக்குத் தெரிவிக்கும்படி பறவைகளைத் தூது

விடுகின்றார். இராமபிரான் அனுமனைத் தூதுவிட்டபடியால் குரங்கினம் பெருமை அடைந்தது போல ஆழ்வார் பறவைகளதை; தூது அனுப்பியதால் பறவை இனங்கள் பெருமை பெற்றன என்று பராசரபட்டர் அருளிச் செய்வராம்..

எம்பெருமானிடத்தில் தம்மைக் கொண்டு சேர்க்கின்றவர்கள் (ஆசாரியர்கள்)

பறவைகளாகக் கொள்ளப்படுவர் என்று நாயனார் உள்ளுறை பொருள்

உரைக்கின்றார். எம்பெருமானை விரைவில் அடைவதற்கு உறுப்பான

அவர்களுடைய ஞானத்தையும் ஒழுக்கத்தையும் சிறகுகளாகக் கூறுகின்றனர்.

இவர்கள் தூதுவிடுவதாக வருமிடங்களில் அந்தந்த இடங்களுக்குத் தக்கவாறு

ஆசிரியர்களையோ, ஒரு சாலை மாணாக்கர்களையோ, புத்திரர்களையோ,

மாணாக்கர்களையோ குறிப்பதாகக் கொள்ள வேண்டும் என்பது வைணவ மரபு.

தூது வழி ஆழ்வார்கள் பெற்ற அனுபவம்

பக்தனுக்கு ஞானாசிரியனே உகந்த தூதுவர் ஆதலால் இப்படிப்பட்ட

ஞானாசிரியர்கள் தூதர்களாக வரிக்கப்பட்டனர். மேலும்  தூதுக்கான அஃறிணைப் பொருட்களை வைணவ ஆசாரியர்களோடு ஒப்பிட்டு முறையில் குறிப்பிடுவது போற்றுதற்குரியதாகவே கருதப்படுகின்றது. அதன்படி கீழே விளக்கங்கள் கொடுக்கப்பட்டுள்ளது.

1. அன்னம் - செல்வ நம்பி, பெரியாழ்வார், நாதமுனிகள் ஆளவந்தார்

ஆகியோர்

2. தும்பி, வண்டு – நாதமுனிகள் , திருப்பாணாழ்வார்

3. கிளி, பூவை, குயில், மயில் - மதுர கவிகள், தொண்டரடிப்பொடி ஆழ்வார்,

கூரத்தாழ்வான், திருமலையாண்டான், எம்பார், அருளாளப் பெருமாள் ,

எம்பெருமானார் முதலியோர்

4. நாரை, கொக்கு, குருகு – குலசேகரப் பெருமாள், முதலிகள்

5. மேகம் - திருமழிசைப்பிரான், திருமங்கையாழ்வார், இராமானுஜர் ஆகியோர்.

தூது பொருட்களோடு ஆசாரியார்கள் ஒப்பீடு 

வைணவ மரபுப்படி தூது என்பது ஞானத்தின் பக்தியின், பிரபத்தியின் வெளிப்பாடாக உரைக்கப்படுகிறது. வைணவ ஆசாரியர்களின் உயரிய குணங்களை ஒப்பீட்டு முறையில் தூதுப் பொருட்களோடு கீழே காணலாம்.
 

அன்னம்

ஆசாரியர்கள்

1. நீரையும் பாலையும் வெவ்வேறாகப்

பிரிக்கும் 

 சாரத்தையும் அசாரத்தையும்

பிரிப்பார்கள் 

2. எம்பெருமான் அன்னத்தின் உருவமாய்

இருந்து சாத்திரங்களைக் கொடுத்தான்.

இவர்களும் கேட்கின்ற சீடர்களுக்கு

சாத்திரங்களை உபதேசிப்பர்.

 

3. அன்னம் சேற்று நீரில் பொருந்தாது.

.இவர்களும் இவ்வுலக வாழ்க்கை

யாகிற சேற்றில் பொருந்தார்கள்.

4. அன்னமானது பெண்களின் நடையழகைக் கண்டு அவ்வாறே தானும் பின்பற்றும் 

 

 அன்னத்தின் நடையுடையை

பிராட்டியின் அநந்யார்ஹ

சேஷவண்டு ஆசாரியார்கள்


 

 

வண்டு

ஆசாரியர்கள்

1. வண்டு தேனைத் தவிர மற்றொன்றை

உணவாகக் கொள்ளாது

1. எம்பெருமானாகிய தேவனை 

அனுபவிப்பதையே விரதமாகக்

கொண்டிருப்பவர்கள்.

2. வண்டுகள ; தம்மோடே

சேர்கின்றவற்றையும் தம்மினத்தோடே

சேர்விக்கும்

2. இவர்களும் “தூவியம் புள்ளுடைத்

தெய்வ வண்டு” ஆகிய

எம்பெருமானோடு  சேர்விப்பவர்கள் 

 

கிளி,பூவை  

ஆசாரியர்கள்

1. கிளி வலையில் அகப்படும் 

1. எம்பெருமானது திருகண்ணோக்கு

வகையில் அகப்படுவார்கள்.

2. கிளி தன்னை வளர்ப்பவர்களுக்கு

வசப்பட்டிருக்கும் 

2. இவர்கள் தங்களுக்கு ஞானமூட்டி

வளர்க்கின்ற ஆசாரியர்களுக்கு

வசப்பட்டிருப்பவர்கள்.

3. “தயிர் பழஞ்சோற்றொடு பாலடிசிலும்

தந்து” என்கிறபடியே பெண்கள்

உண்பிக்க கிளி உண்ணும்

3. இவர்களும் எம்பெருமானுடைய

கல்யாண குணங்களை ஆசாரியன்

அனுபவிக்க அனுபவிப்பர்கள்

4. கிளி கற்பித்ததையே சொல்லும்

4. இவர்களும் முன்னோர் மொழிந்த

முறை தப்பாமல் கேட்டு அதை

பின்பற்றி பேசுவார்கள்.

5. தலைவனோடு சேர்க்க வேண்டும்

என்று கூறித் தலைவி ஆதரித்த

நிலையிலும் எம்பெருமானைப் பிரிந்த

நிலையில் தலைவி வெறுத்துக்

கூறிய நிலையிலும் உகந்திருக்கும்.

5. ஆசாரியன் ஆதரித்த போதும்

எல்லாம் நமக்கு நன்மையே என்று உகந்து இருப்பவர்கள். 

.

நாரை, கொக்கு குருகு

ஆசாரியர்கள்

1. குருகு உள்ளும் புறமும்

வெண்மையாக இருக்கும் 

1. தூய்மை வாய்ந்த மன, மொழி

மென்மையுடையவர்கள்

2. நாரைகள் தங்களுக்கு

உணவாகிற மீன்களைக்

கவருவதற்காக அலைகள் மேலே

வந்து விழுந்த போதும்

கடற்கரையில் அசையாமல்

இருக்கும் 

.2. எம்பெருமான் பக்கலில் நெஞ்சை

ஊன்ற வைத்து நிற்பதனால்,

இவ்வுலகத் துன்பங்கள்

மேன்மேலும் வந்து தாக்கினாலும்

அவற்றுக்கு வருந்தாதே

இருக்குமவர்கள்.



 

மேகம்

ஆசாரியர்கள்

1. மழை பெய்ய வேண்டி காலங்களிலே

கடலிலே புக்கு அதனுடைய நீரைப்

பருகிக் கொண்டிருக்கும்.

1. எம்பெருமானுடைய  கல்யாண

குணங்களாகிய கடலில் புகுந்து

அதை அனுபவித்துக் கொண்டு

இருப்பர்.

2. மேகமானது எம்பெருமானது

திருமேனியோடொத்த நிறத்தை

உடைத்தாயிருக்கும்.

 

2. எம்பெருமானை  நெஞ்சுக்குள்

கொண்டிருப்பதால் அவனுடைய

நிறத்தை ஒத்தவர்களாயிருப்பர்.

3. மேகமானது மழை பெய்து எல்லா

உயிர்களையும் காக்கும் பொருட்டு

ஆகாயம் முழுதும் திரியும். 

3. உலக மக்களுக்கு உய்யும்

வகையைக் காட்ட எல்லா

இடத்திலும் சஞ்சரிப்பார்கள்.

 

4. மேகமானது மழையைப பொழிந்து

தடாகத்தை நிறைக்கும்.

4. எம்பெருமானது குணங்களாகிற

மழையினைப் பொழிந்து ஞானமாகிற

மடுவை நிறைப்பார்கள்.

5. மேகமானது தனக்காக அன்றி பிறர்

நலத்தைக் கண்டு உகக்கவே

காரியம் செய்யும்.

5. தங்களுக்காக அன்றி சீடர்களுடைய

நலத்தையே கண்டு உகந்து காரியம்

செய்வர்.

முடிவுரை

ஆழ்வாரின் அகப் பாடல்கள் அகமாந்தர் கூற்றுகளாகவே உள்ளன.

அவற்றுள் தலைவன், தலைவி, தோழி, தாய், செவிலி, கட்டுவிச்சி , பாங்கன்

என்ற அகமாந்தர்களின் கூற்றுகளில் முழுமையாக நம்மாழ்வார் ஒருவரே

பாடல்களை அருளிச் செய்துள்ளார். ஆழ்வார் பாடல்களில் பேசப்படும் காமம்

ஜீவாத்மாவிற்கும் பரமாத்மாவிற்கும் இடையே ஏற்படுவது. அகப் பொருளில்

தலைமகளுக்கு ஏழு பருவங்கள் கூறப்பட்டிருப்பது போல பக்தி நூல்களில்

நாயகிக்கு (பேற்றில் பதற்றம்) ஏழு நிலைகள் கூறப்படுகின்றன. தூது விடப்

படும் பறவைகள் நல்லாசிரியருக்கு இணையாக  கூறப்படுகிறது. கண்ணனுக்கு

ஆமது காமம் என்றபடி இது பகவத் காமமாதலால் இது எல்லா

பாவங்களிலிருந்தும் விடுபடுவதற்கும்  வீடு பேறு அடைவதற்கும்  இவ்வகப்

பொருள் நூல்கள் காரணமாகின்றன. சிற்பக்கலை போன்ற பிற துறைகளின்

அங்கங்களிலும்  அகப்பாடல்களின் தாக்கத்தைக் காணலாம்.

சான்றெண் விளக்கம்

1. திருவிருத்தம் 53

2. திருவாய்மொழி 5.4.3

3. திருவாய்மொழி 2.3.1

4. திருவாய்மொழி 5.10.1

5. திருவாய்மொழி 1.3.1

6. திருவாய்மொழி 1.2.3

7. திருவாய்மொழி 6.6.1

8. திருவாய்மொழி 6.6.2

9. திருவாய்மொழி 7.2.1

10. திருவாய்மொழி 6.7.1

11. திருவாய்மொழி 2.4.1

12. திருநெடுந்தாண்டகம் 26

13. பெரியதிருமொழி 3.6.1

14. திருவாய்மொழி 1.4.8.. 

15. பெரிய திருமொழி 10.10.2

16.திருவாய்மொழி  1.4.1.

17. திருவாய்மொழி 6.1.1

18. திருவாய்மொழி 6.8.1

19. திருவாய்மொழி 9.7.1

20. திருவிருத்தம் 54

துணைநூற்  பட்டியல்

1. அண்ணங்கராசாரியர் ஸ்வாமி பி.ப

 a. திருவாய்மொழி திவ்யார்த்த தீபிகையுரை

க்ரந்த மாலா வெளியீடு, காஞ்சிபுரம்.

b.. ஆசார்ய ஹ்ருதய ஸாரம்.    ஸத்க்ரந்த

ப்ரகாசந ஸபா மதராஸ்

(தமிழ்ப் பிரசுரம் நெ.4) 1948

2. அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் அருளிச் செயல்

ரகசியம் ஸ்ரீநிவாஸ் பிரஸ் திருச்சி 1972

 

3. அரங்கராஜன்  இரா.

“திருவாய்மொழிப் பேருரையாளர் நம்பிள்ளை  உரைத்திறன்”

கோனார் பிரிண்டர்ஸ், மதுரை 1986

4. புருஷோத்தம நாயுடு பு.ரா.

“பகவத் விஷயம் - திருவாய் மொழி ஈட்டின் தமிழாக்கம்”

பத்து தொகுதிகள் சென்னைப் பல்கலைக் கழகம்

சென்னை 1961 - 1973..