ஜூலை 2024 இதழுக்கு ஆய்வுக்கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன

மாணிக்கவாசகரின் பக்தித் திறன்

மு.பெருமாள், உதவிப் பேராசிரியர், பகுதி நேர முனைவர் பட்ட ஆய்வாளர், முதுகலை மற்றும் தமிழாய்வுத்துறை, அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி, செய்யாறு 30 Apr 2021 Read Full PDF

கட்டுரையாளர்:

  மு.பெருமாள்,   

  உதவிப் பேராசிரியர்,

  பகுதி நேர முனைவர் பட்ட ஆய்வாளர்,

  முதுகலை மற்றும் தமிழாய்வுத்துறை,

  அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி,

  செய்யாறு.     

நெறியாளர்                  

  முனைவர். கு. சீனிவாசன்.,எம்.ஏ., எம்.ஏ.,(யோகா)எம்.பில்.,பிஎச்.டி.,

  முதுகலை மற்றும் தமிழாய்வுத்துறை,

  அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி,

  செய்யாறு.

         

 

ஆய்வுச் சுருக்கம்      

    

சமயக் குரவர் நால்வருள் நான்காமவராகவும் நால்வர் நான்மணிமாலையில் போற்றப்படுபவருமாகிய மாணிக்கவாசகர் பாண்டிய நாட்டில் உள்ள திருவாதவூரில் பிறந்தவர். இவர் இயற்றிய மனதை உருக்கும் திருவாசகமும், காதல் இரசம்  ததும்பம் திருக்கோவையாரும் இவரது பக்தித் திறத்தைப் பல கோணங்களில் சுட்டிக் காட்டுகின்றன. குறிப்பாகத் திருவாசகத்தினுள் மாணிக்கவாசகரின்  பக்தி திறன் எவ்வாறு அமைந்துள்ளது என்பதை நோக்குவதே இவ்வாய்வுக் கட்டுரையின் நோக்கமாகும்.

 

திறவுச்சொற்கள்:

சமயக்குரவர், மாணிக்கவாசகர், சிவம், சிவநாமம், பக்திபாடல்கள்

 

நன் நெறிகள் நான்கு

 

இறைவனை அடைய நான்கு வகையான நெறிகளைச் சமயக் குரவர் நால்வர்தம் வாழ்வு சுட்டிக் காட்டுகிறது.

 

1. திருஞானசம்பந்தர்- மகன்மை நெறி (சர்புத்திர மார்க்கம்)

2. திருநாவுக்கரசர் - தொண்டுநெறி –(தாச மார்க்கம்)

3. சுந்தரர் - நட்புநெறி –(சக மார்க்கம்)

4. மாணிக்கவாசகர் - பொதுமைநெறி ( சன் மார்க்கம்)

 

இந்நான்கு நெறிகளையும் உலகிற்கு உணர்த்த இந்நால்வரையும் இறைவன் பயன்படுத்திக் கொண்டான் என்றால் மிகையாகாது. இவரது பொதுமை நெறியை பத்தொன்பதாம் நூற்றாண்டில் வடலூரில் வாழ்ந்த வள்ளலார் தனது தலைமை நெறியாகக் கொண்டார். அந்நெறி உலகளாவிய சமரச  சுத்த சன்மார்க்க சங்கமாக வேறூன்றி உலகிற்கு நன்மை செய்து வருகிறது. இந்நிகழ்வு மாணிக்க வாசகரின் பக்தித் திறத்தைப் பலப்படுத்திய  நிகழ்வாகும்.

 திருப்பெருந்துறையில் குருந்த மரத்தடியில் சிவபெருமான் குருவாக அமர்ந்து மாணிக்கவாசகருக்கு திருப்பாதத்தைக் கொடுத்து ஆட்கொண்டார்  அரிமர்த்தன பாண்டியனிடம் அமைச்சராகப் பணிசெய்த திருவாதவூரர் இறைவன் மீது ஆரா காதல் கொண்ட அடியவராக மாறிப் போனார்.

தன்னை ஆட்கொண்ட நிகழ்வினை,

 ஈர்த்து என்னை ஆட்கொண்ட எந்தை பெருமானே1

 

என்ற சிவபுராண வரிகளால் தெளிவு படுத்துகிறார். 

 

திருவாசகத்திற்கு உருகார் ஒரு வாசகத்துக்கும் உருகார்” என்ற பழமொழியும் “வாதவூரர் கனிவினில்” என்ற ஆன்றோர் வாக்கும் மாணிக்கவாசகர் இறைவன் மீது கொண்ட பக்தி உருக்கத்தையும்  நெருக்கத்தையும் நமக்கு எடுத்துக் காட்டுகின்றது. எனவே தான் இவர் தம் திருவாசகத்தில் மனதைப் பறிகொடுத்த மேலை நாட்டவரான ஜி.யு போப் தன்னை ஒரு தமிழ் மாணவன் என்று அறிவித்ததோடு, திருவாசத்தையும் ஆங்கிலத்தில் முதல் முறையாக மொழி பெயர்த்து  மாணிக்கவாசகரின் பக்தித் திறத்தை உலகறியச் செய்தார்.

அந்தணனாகி தன்னை ஆண்டு கொண்டருளி இந்திர ஞாலம் காட்டிய இயல்பையும் வாதவூரினில் வந்து இனிதருளி பாதச் சிலம்பொலி காட்டிய பண்பையும் பூவளம் அதனில் பொலிந்து இனிது அருளி பாவம் நாசமாக்கிய பரிசையும் மாணிக்கவாசகர் தனது கீர்த்தித் திருவகவல் வழி வெளிபடுத்துகிறார்.

இறைவனைப் போற்றி வணங்கினால் பக்கியானது உள்ளத்தில் துளிர் விடும்   என்பதனைத் தனது போற்றித் திருவகவல் வழி சுட்டி உள்ளார்.

திருவள்ளுவரும் மெய், வாய், கண், மூக்கு, செவி எனும் ஐம்பொறிகளையும் கட்டுபடுத்திய தூயவனின் உண்மையான ஒழுக்கமுடைய நெறியைப் பின்பற்றி நிற்பவர்களின் புகழ் வாழ்வு நிலையானதாக அமையும் என்கிறார் இதனை,

    ` பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க

     நெறிநின்றார் நீடுவாழ் வார்2    

என்று சுட்டுகிறார்.

வள்ளுவர் சுட்டிய பொய்தீர் ஒழுக்க நெறியே மாணிக்கவாசகரின் பக்தி நெறியாகும். அப்பக்தி நெறியே சன்மார்க்க நெறியாகும். தனது ஐம்புலன்கள் தனக்கு வஞ்சனை செய்வதை,

     மலஞ்சோரு மொன்பது வாசற் குடிலை

    மலங்கப் புலனைந்தும் வஞ்சனையைச் செய்ய3

 என்ற வரிகளால் புலப்படுத்துகிறார்.

 ஐம்புலன்களும், ஐம்பொறிகளும் கட்டுபாட்டில் உள்ளபோது கடவுளின் அருள் பேராற்றல் நம்மீது பொழியும் அப்போது நமது பக்தியின் திறன் பறந்து ஓங்கும் இதனைத் திருவாசத்தில் உள்ள பல பாடல்களின் மாணிக்கவாசகர் தெறியப் படுத்துகிறார்.

     அத்தா போற்றி, ஐயா போற்றி, நித்தா போற்றி, நிமலா போற்றி பத்தா போற்றி, பவனே போற்றி என்று போற்றிப் புலம்பும் மாணிக்கவாசகர் முக்திநெறி அறியாத மூர்க்கரொடு பழகி தனது அடையாளத்தை இழந்தபோது இறைவன் பக்தி நெறி இதுதான் என்று அவருக்கு உணர்த்த சித்தமலம் அறிவித்த நிகழ்வை,

முத்தி நெறி அறியாத மூர்க்கரொடு முயல்வேனை

  பக்தி நெறி அறிவித்து பழ வினைகள் பாறும்

  சித்த மலம் அறுவத்து சிவமாக்கி எனையாண்ட

  அத்தன் எனக்கு அருளிய வாறுஆர் பெறுவார்? அச்சோவே!4

என்ற பாடல் வழி பதிவு செய்துள்ளார்,

      இவரது பக்தித் திறம்  உயர்வுடையது ஏனெனில் அது இறைவனால் அருளப்பட்டது ஆகும் .

       இறைவன் மாணிக்கவாசகருக்குத் தனது கூத்தினை அறிவித்து பொய்யெல்லாம் மெய் என்று புணர்முலையார் போகத்தே மயக்கத்தோடு கிடந்த என்னை இறந்து போகாமல் காத்தருளி, பந்தம் அறுத்து எனை ஆண்டு, உய்யும் நெறி காட்டு வித்து

     நம்மையுமோர் பொருளாக்கி நாய்சிவிகை ஏற்றுவித்து

      அம்மையெனக்  கருளிவாறார் பெறுவார் அச்சோவே5

என்ற வரிகள் வழி சுட்டுகிறார்.      

இதனையே,

நாழிற் கடையாய்க் கிடந்த அடியேற்கு                          தாயின் சிறந்த தயா ஆனதத்துவனே6

என்று சுட்டுகிறார்.                

     நான் நாயைக் காட்டிலும் கடையவன், நீ தாயைக் காட்டிலும் உயர்ந்தவன் என்ற கருத்தைப் பதிவு செய்வதன் வழி இவர்தம் பக்தி திறன் வெளிப்படுகிறது.

     கண்ணப்பனுக்கு நிகரான அன்பு தன்னிடத்தில் இல்லை என்று தெரிந்த பின்னும் இறைவன் அவரை ஆட்கொண்டார்,

கண்ணப்பன் ஒப்பதோர் அன்பின்மை கண்டபின்                                                                                             என்  அப்பன் என் ஒப்பில் என்னையும் ஆட்கொண்டருளி                    வண்ணப் பணித்தென்னை வாஎன்ற வான் கருணைச்                         சுண்ணப் பொன் கீற்றற்கே கென் றூதாய் கோத்தும்பீ7

என்ற பாடல் வழி சுட்டி உள்ளார். இவரின் பக்தித்திறம் யாதெனில் அடக்கமே ஆகும். இவர் அடக்கத்தின் பாற்பட்டதால் அவரை உலகமே போற்றிப் புகழ்கிறது.

அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை 

     ஆரிருள் உய்த்து விடும்8

என்ற வள்ளுவரின் குறளுக்கு வார்ப்பாகத் திகழ்பவர் மாணிக்கவாசகர். 

சிவமும் சக்தியுமாய் வந்து என்னை ஆட்கொள்ளாமல் இருந்திருந்தால் சீரழிந்து இருப்பேன், என் சிந்தையும் சீர் குலைந்து இருக்கும் என்கிறார் மாணிக்கவாசகர் மேலும் மனதுக்கு எட்டாத சிவனை சிவஞானத்தால் காணலாம் என்கிறார்.

          ஞானத்தை (Wisdom) அடைய அறிவு (Knowledge)  அவசியம், அறிவை  அடைய பக்தி அவசியம், பக்தியை அடைய பணிவு அவசியம், பணிவை அடைய பரமனாகலாம். இக்கருத்தைச் சித்தன் போக்கு சிவன் போக்கு என்ற பழமொழியால் அறியலாம்.  பக்தி பெறுக சித்தி பெருகும் என்பதனை மாணிக்கவாசகர்  இவ்வான்மீக உலகிற்கு உணர்த்தி உள்ளார்.

சிவன் இருப்பது சுடுகாடு, அவன் உடுப்பது புலித்தோல் தாய் தந்தை இல்லாத தனியன் எனினும் அவன் சினம் உற்றால் உலகமே கற்குவியலாய் குவியும் என்கிறார் மாணிக்கவாகர். உலகம் ஒரு சுடுகாடு இங்கே எல்லாமும் அழியக் கூடியவை இந்த அழிவுத் தன்மையை உணர்த்தவே “கோயில் சுடுகாடு” எனக் குறித்தார். ஆணவம் அழித்தற்குக் கொல் புலித்தோலைக் குறியாகச் சுட்டி உள்ளார். பிறப்பும், இறப்பும் இருந்தால் பெற்றோர்கள் இறப்பார்கள். இறைவன் முழுமுதற் கடவுள் என்ற காரணத்தால் “தாயுமிலி தந்தையிலி தான்தனியன்” என்று பதிவு செய்தார் மாணிக்கவாசகர். இத்தகு உலகியல் உண்மையை, நிலையாமையை இறைவன் மீது கொண்ட பக்தியால் இவ்வுலகிற்கு உணர்த்தி உள்ளார் இதனை,               

கோயில் சுடுகாடு கொல்புலித்தோல் நல்லாடை  

தாயுமிலிதந்தையிலிதான் தனியன் காணேடீ                     தாயுமிலி தந்தையிலி தான்தனியன் ஆயிடினும்                         

 காயில் உலகனைத்தும் கற்பொடிகாண் சாழலோ.9                                                                                                                                                     

என்று சுட்டி உள்ளார்

            மாணிக்கவாசகர்  முதன்முதலாக  பெண்களின் விளையாட்டுகளைக் கொண்டும் அவர்களின் செயல்களைக் கொண்டும் பதிகம் பல அமைத்து சிவனுக்கு பாமாலைச் சூட்டி உள்ளார். திருஅம்மானை, திருவெம்பாவை, திருப்பொற்சுண்னம், திருக்கோத்;தும்பி, திருத்தௌ;ளேனம், திருச்சாயல், திருப்பூவல்லி,  திருத்தோள்நோக்கம், திருப்பொன்னூசல், முதலிய பெண்கள் விளையாட்டுக்களை முதன்முதலில் பக்தி இலக்கிய உலகிற்கு அறிமுகப் படுத்தியவர் மாணிக்கவாசகர் ஆவார்.

     ஞானம் அடைய விடாமல் தடுப்பது சோம்பல்; அதிகாலையில் எழுந்தால் சோம்பல் நீங்கும் என்ற உண்மையை தாம் பாடிய திருப்பள்ளி எழுச்சியில் வழி விளக்குகிறார். 

இறை வணக்கம் செய்து வருவோர்க்குத் தெளிவு பிறக்கும் என்பதனை,

போற்றி எனவாழ் முதல் ஆகிய பொருளே         

புலர்ந்தது பூங்கழற்கு இணைதுணைமலர் கொண்டு    

ஏற்றிநின் திருமுகத்து எமக்கருள் மலரும்                      எழில்நகை கொண்டுநின் திருவடிதொழுகோம்                 சேற்றிதழ் கமலங்கள் மலரும் தண்வயல் சூழ்

திருப்பெருந்துறை உறை சிவபெருமானே                      ஏற்றுயர் கொடியுடையாய் எனைஉடையாய்  

எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே10

என்ற பாடல் வழிச் சுட்டுகிறார்.

        இறைவன் முதல், நடு, இறுதியாக விளங்குகிறார் என்பதையும், திருப்பெருந்துறையில் தன்னை ஆட்கொண்டதனையும் திருப்பள்ளி எழுச்சியின் வழி சுட்டுகிறார். இதனை,

முந்திய முதல்நடு இறுதியும் ஆனாய்                 

மூவரும் அறிகிலர் யாவர் மற்றறிவார்                        பந்தணை விரலியும் நீயும் நின் அடியார்                         பழங்குடில் தொறும் எழுந்தருளிய பரனே            

செந்தழல் புரைதிரு மேனியும் காட்டி             

திருப்பெருந்துறை உறைகோயிலும் காட்டி                             அந்தணன்ஆவதும் காட்டிவந்தாண்டாய்       

ஆரமுதேபள்ளி எழுந்தருளாயே11

என்ற பாடல் வழிச் சுட்டி இறைவனைக் கிடைக்க முடியாத அமுதமே என்கிறார்.

 மும்மூர்த்திகளால் அறியமுடியாத இறைவன் மாணிக்கவாசகரின் பக்தித் திறத்திற்கு   ஆட்பட்டு இறைவன் அவரை ஆட்கொண்டான். இந்நிகழ்வு இவரது பக்தித் திறத்தின் உச்சத்தைக் காட்டுவதை உணரலாம். இறைவனின் அருளை எளிதில் பெற முழு சரணாகதி அவசியம். அதாவது இறைவனிடத்து தன்னை முழுமையாக அடைக்கப்படுத்தலே சரணாகதி ஆகும்.

     வேண்டுதல் வேண்டாமை இல்லாத இறைவனது அடியினைச் சேர்ந்தவர்க்கு எப்போதும் துன்பங்கள் இல்லாமல் போகும் இதனை,

வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு        யாண்டும் இடும்பை இல12                                    

என்று வள்ளுவர் சுட்டுகிறார்.

     இவர் வழி நின்று தனது அடைக்கலத் தன்மையை அடையாளப் படுத்துகிறார் மாணிக்கவாசகர்.

     இறைவா நான் பக்குவமற்றவனாக, அஞ்ஞானம் உற்றவனாக உன்னிடம் அடைக்கலம் வேண்டுகிறேன். நான் வெறுப்பனவற்றையே செய்பவன், பெண்ணெனும் அலைமோதி காமம் என்கிற சுறாமீன் தாக்கி அழிந்து கொண்டிருப்பவன்,  மனத்தளர்ச்சி உற்று உன் திருவடியில் பற்று இல்லாதவனாய், உன்னை வாழ்த்தி வணங்க முடியாமல் இருக்கின்றவன், உன்னிடம் இறைபக்தி இருக்கும் மெய்யன்பர்கள் உன் திருவடிச் சார்ந்து அழியாச் செல்வத்தைப் பெற்று இன்பம்; அடைந்து தானும் அவ்வாறு பெற வேண்டுகிறேன். ஆனால் எவ்விதம் வணங்குவது அதற்கான நெறிமுறைகள் யாவை என்பதை நான் அறியேன், உன்னையும் நான் அறிந்திலேன் உன்னை அறியும் அறிவும் என்னிடம் இல்லை. ஏதும் அறியா மூடனாக விளங்குகிறேன். ஆகவே நீதான் உன்னை வெளிப்படுத்த வேண்டும். நான் உய்வதற்கான நெறிமுறைகளை எனக்கு கற்பித்திட வேண்டும் அடியேன் உனக்கு அடைக்கலம் .இதனை,   

            பிறிவறியா அன்பர்நின் அருட்பெய்கழல் தான் இணைக்கீழ்

              மறிவறியாச் செல்வம் வந்த பெற்றார் உன்னை வந்திப்பதோர்

             நெறியறியேன் நின்னையே அறியேன் நின்னையே அறியும்

             அறிவறியேன் உடையாய் அடியேன் அடைக்கலமே.13

 

     இந்த பாடல் அடைக்கலச் சிறப்பை அகிலத்திற்கு உணர்த்தி உள்ளார் வாதவூரடிகள்.

     மாணிக்கவாசகருக்காக இறைவன் மனித வடிவில் வந்து ஞான குருவாக  ஆட்கொண்டான் அப்படி இருக்க அவர் “நெறிமுறை அறியேன்”. வழிவகை அறியேன்” என்று புலம்புவது எப்படிப் பொருந்தும் எனும் வினா எழலாம். மாணிக்கவாசகர் மக்களின் நிலையில் தன்னை வைத்து இறைவனிடம் முறையிடுகிறார் என்பதை நாம் அறிய வேண்டிய உண்மை. ஆணவத்தை முற்றும் துறந்து இறைவனிடம் சரணடையுங்கள் என்று வளியுறுத்துவதே இவரது பக்தித் திறம் ஆகும்

     இவரது பக்தித் திறனின் மேலீட்டால் இறைவன் அருளமுதம் வழங்கினான் என்பதை,

     வழங்குகின்றாய்க் குன்னருளார் அமுதத்தை வாரிக்கொண்டு

 விழுங்குகின்றேன் விக்கினேன் வினையேனென் விதியின்மையால் தழங்கருத்தேனன்ன தண்ணீருகத் தந்துய்யக் கொள்ளாய்

அழுங்குகின்றேன் உடையாய் அடியேன் உன் அடைக்கலமே14

 

என்ற பாடலின் வழி வெளிப்படுத்துகிறார்.

 

          நாயக நாயகி பாவத்தில் மாணிக்கவாசகர் நானூறு கட்டளைக் கலித்துறைப் பாக்களின் வழி திருக்கோவைப் பாடி இறைவனுக்குச் சிறப்பு செய்துள்ளார் இதனை, “பாவை பாடிய வாயால்  கோவைப் பாடுக”  என்று இறைவனே கேட்டுக் கொண்ட நிகழ்வு இவரது பக்தித் திறத்திற்குச் சான்று பகர்கிறது.

     மாதங்களில் நான் மார்கழியாய் இருக்கிறேன் என்று திருமால் கீதையில் பதிவு செய்துள்ளார் மேலும் பிரம்ம முகூர்த்தத்தில் இறை வழிபாடு செய்வது சாலச் சிறந்தது மக்கள் அதிகாலையில் எழுந்து வழிபாடு செய்வதற்காக இயற்றப்பட்டது திருவெம்பாவை  ஆகும்.

          திருவண்ணாமலைக்கு வருகை புரிந்த மாணிக்கவாசகர் மலை சுற்றும் பாதையில் உள்ள அடிஅண்ணாமலையில் தங்கி தன்னைப் பெண்ணாக  மாற்றிக் கொண்டு சிவபெருமான் மீது திருவெம்பாவை பாடுகிறார்

          பாவை என்பது ஒரு வகை நோன்பு, பெண்கள் தனக்கு நல்ல கணவன் அமைய வேண்டியும் மாதம் மும்மாரி பெய்ய வேண்டுடியும் நோற்கும் நோன்பே பாவை நோன்பு.

அடிஅண்ணாமலையில் உள்ள அனைத்தும் இளம் பெண்களையும் பாவை நோன்பு நோன்பு நோற்க அழைக்கும் இவரது பக்தித்  திறம் உலகறிந்ததே தென்கிழக்கு ஆசிய நாடுகளின் ஆண்டாள் பாடிய திருப்பாவையையும், இவரது திருவெம்பாவையையும் பாடிய பின்னரே அரசர்க்கு முடிசூட்டு விழா நிகழ்த்தும் மரபு தற்போதும் பின்பற்றப்  படுகிறது.

      முதலும் முடிவும் இல்லாத அறியாப் பேரொளியை நாங்கள் பாடினோம். நீ கண்டு கொள்ளாது உறங்கி கொண்டிருக்கிறாய் நாங்கள் மகாதேவனை வாழ்த்தும் ஒலி உன்காதில் கேட்கவில்லையா? அது தெருவெல்லாம் கேட்கிறதே அதை கேட்ட வேறொரு பெண் எழுந்தாள் தேம்பி அழுதாள், படுக்கையில் இருந்து புரண்டு விழுந்து மயங்கி கிடந்தாள் என் தோழியே உன் நிலை என்ன? இதுவோ உன் தன்மை சொல்வதை ஏற்று ஆராய்ந்து பார் என்று அறை கூவல் விடுக்கிறார்    இதனை,                        

ஆதியுமந்த முமில்லா வரும்பெருஞ் சோதியை                           யாம்பாடக் கேட்டயும் வாள்தடங்கண்

மாதே வளருதியோ வன்செவியோ நின்செவிதான்

மாதேவன் வார்கழல்கள் வாழ்த்திய வாழ்த்தொலிபோய்            வீதிவாய்க் கேட்டலுமே விம்மிவிம்மி மெய்ம்மறந்து

போதார் அமளியின் மேல்நின்றும் புரண்டிங்ஙன்

ஏதேனும் ஆகாள் கிடந்தாள் என்னேஎன்னே

ஈதே எம்தோழி பரிசேலோர் எம்பாவாய்15

என்ற பாடல் வழியாக ஆண்;டவனை ஆராதனை செய்கிறார். 

 

தொகுப்புரை

     முன்னை பழம்பொருட்கு  முன்னைப் பழம் பொருளாகவும், பின்னைப் புதுமைக்கும் போர்த்தும் அப்பெற்றியனாகவும் விளங்குகின்ற சிவபெருமானை தனது திருவாசகம் எனும் தேனால் அபிடேகம் செய்து பக்தித் திறத்தால் பாடிப் பரவி, எல்லோர் மனத்தையும் உருகச் செய்யும் இவரது செயல் இறைவனுக்கு உகந்ததே ஏனைய மூவரினும் இவரது பாடல் எளிமை மிகுந்ததாக, ஏற்றம் உடையதாக, சமுதயத்தை மாற்றம் செய்வதாக அமைந்துள்ளது. 

  • தேன் தானும் கெடாது தன்னைச் சேர்ந்தவரையும் கெடுக்காது அதுபோல மாணிக்கவாசகரின் பக்தி அவரையும் உயர்த்தி அனைவரையும் உயர்த்திப் பார்க்கிறது. எனவேதான் “திருவாசகம் என்னும் தேன்” என்று போற்றிப் புகழ்கிறார்கள்
  • மாணிக்கவாசகரைப்  போலவே அவனருளால் அவன்தாள் வணங்கி அல்லல் நீங்கி ஆனந்தம் பெறுவோம்.
  • திருவாசகத்தை  ஓதி மணிவாசகத்தைப் பெறுவோம்.
  • இறைவனை நாம் தேடிச் செல்லாமல் அவரைக் கண்டு உணர்வோம்.
  • பொதுமை நெறி கைக்கொண்டு புது உலகம் படைக்கச் செய்வோம்.
  • பக்தியே முக்திக்கும் சித்திக்கும் வழி என்பதே மாணிக்கவாசகரின் பக்தித் திறமாகும்.           

 

அடிக்குறிப்புகள்

  1. டாக்டர் சாது சு.ஸ்ரீனிவாஸ், திருவாசகம் மூலமும் உரையும், ஸ்ரீ இந்;து பப்ளிகேஷன்ஸ், சென்னை, சிவபுராணம், பாடல் வரி 74.
  2. வித்துவான், ச. தண்டபாணி தேசிகர், திருக்குறள் உரைவளம், தருமபுர ஆதீனம், கடவுள் வாழ்த்து, குறள் 6, பக்கம் 17.
  3. டாக்டர் சாது சு.ஸ்ரீனிவாஸ், திருவாசகம் மூலமும் உரையும், ஸ்ரீ இந்து பப்ளிகேஷன்ஸ் சென்னை, சிவபுராணம், பாடல் வரி 56.
  4. மேலது, அச்சோப் பதிகம், பாடல் 4, பக்கம் 136.
  5. மேலது, பாடல் 9, பக்க எண் 139.
  6. மேலது, சிவபுராணம், பாடல் வரி 60, பக்கம் 4.
  7. மேலது, திருக்கோத்தும்பீ, பாடல் 6, பக்கம் 185.
  8. வித்துவான், ச. தண்டபாணி தேசிகர், திருக்குறள் உரைவளம், தருமபுர ஆதீனம், அடக்கமுடைமை, குறள் 1, பக்கம் 194.
  9. டாக்டர் சாது சு.ஸ்ரீனிவாஸ், திருவாசகம் மூலமும் உரையும், ஸ்ரீ இந்து பப்ளிகேஷன்ஸ் ,சென்னை, திருச்சாயல், பாடல் 3, பக்கம் 195.
  10. மேலது, திருப்பள்ளி எழுச்சி, பாடல் 9,  பக்கம் 203.
  11. மேலது, திருப்பள்ளி எழுச்சி, பாடல் 10,  பக்கம் 204.
  12. வித்துவான், ச. தண்டபாணி தேசிகர், திருக்குறள் உரைவளம், தருமபுர ஆதீனம், கடவுள் வாழ்த்து, குறள் 4, பக்கம் 13.
  13. டாக்டர் சாது சு.ஸ்ரீனிவாஸ், திருவாசகம் மூலமும் உரையும், ஸ்ரீ இந்து பப்ளிகேஷன்ஸ், சென்னை, அடைக்கலப்பத்து, பாடல் 9. பக்கம் 248.
  14. மேலது, பாடல் 10, பக்கம் 249.

மேலது, திருவெம்பாவை, பாடல் 1, பக்கம் 112.