ஜூலை 2024 இதழுக்கு ஆய்வுக்கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன

திருவாய்மொழியில் ஐந்து விடயங்கள் பற்றிய அறிவு

எஸ்.சுஜாதா, முனைவர்பட்ட ஆய்வாளர்(பகுதி நேரம்) , சர் தியாகராயா கல்லூரி, சென்னை 30 Apr 2021 Read Full PDF

கட்டுரையாளர் :

எஸ்.சுஜாதா,    

முனைவர்பட்ட ஆய்வாளர்(பகுதி நேரம்)              

சர் தியாகராயா கல்லூரி                          

சென்னை – 21                                                 

நெறியாளர்:

முனைவர்.ப.தனஞ்சயன்

எம்.ஏ.எம்.ஃபில்,பி.எச்.டி

தமிழ்த்துறை,

சர் தியாகராயா கல்லூரி

சென்னை-21

 

ஆய்வுச் சுருக்கம் :

பேரின்பப் பெருவாழ்விற்கான ஐந்து விடயங்கள் திருவாய்மொழியில் கூறப்பட்டிருப்பதாக திருவாய்மொழியின் உரையான ஈடு முப்பத்தாறாயிரப்படியில் உரையாசிரியர் காட்டுகிறார். அவற்றை விளக்குவதே இந்த ஆய்வின் நோக்கம்.

திறவுச் சொற்கள்:

அர்த்த பஞ்சகம் ,தாரகன் ,பரத்வம் ,உபாயம் ,ப்ராப்யம்      

 

முன்னுரை

 

‘அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது’ என்று கூறுகிறோம். ஆனால் அவ்வாறு பிறந்த நாம் பல இன்னல்களுக்கு ஆளாகின்றோம். நாம் செய்யும் பாப, புண்ணியங்களினால் மீண்டும் மீண்டும் பிறக்கின்றோம். கர்ம வினைகளினால் பிறப்பு பின்பு இறப்பு மீண்டும் கர்ம வினைகளினால் பிறப்பு என்னும் இந்த சுழலிலிருந்து எவ்வாறு மீண்டு வருவது?

இந்த சுழலிலிருந்து மீண்டு பேரின்பப் பெருவாழ்வு கிடைக்க நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை திருவாய்மொழியில் கூறப்பட்டிருப்பதாக அதன் உரைகளுள் ஒன்றான ஈடு முப்பத்தாறாயிரப்படியில் காட்டியிருக்கிறார். அதுவே அர்த்த பஞ்சக ஞானம் என்று கூறப்படுகிறது. அதாவது, ஓர் ஆன்மா அறிய வேண்டிய ஐந்து விடயங்கள் பற்றிய அறிவு என்பதாகும்.

 

திருவாய்மொழியில் ஐந்து விடயங்கள் பற்றிய அறிவு  ( அர்த்த பஞ்சகம் )

ஒருவன் வேதம், உபநிடதம் முதலிய அனைத்தும் கற்றிருந்தாலும் அர்த்த பஞ்சக ஞானம் பெறவில்லை என்றால் பிறவிப் பெருங்கடலை நீந்த முடியாது. அர்த்த பஞ்சக ஞானம் அனைத்துக் கலைகளுக்கும் உயிர் போன்றது. இதுவே வைணவர்களின் அடிப்படைக் கொள்கையாகும்  என்கிறார் முனைவர் ந.சுப்பு ரெட்டி அவர்கள் (1) இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த இந்த விடயங்களாவன :

1.    ஆன்மாக்களால் அடையப்பட வேண்டிய இலக்காகிய இறைவனின் தன்மை

2.   இறைவனை அடைய வேண்டிய ஆன்மாக்களின் தன்மை

3.   இறைவனை சென்றடைய வேண்டிய வழியின் தன்மை

4.   இறைவனை அடைய தடையாயிருக்கும் எதிரியின் தன்மை

5.   இறைவனை அடைவதனால் பெறப்படும் பயன்.

 

என இந்த ஐந்து விடயங்கள் பற்றிய அறிவே ‘ அர்த்த பஞ்சகம் ‘ எனப்படுகிறது.

இறைவனின் தன்மை :

‘ உயர்வற உயர் நலம் உடையவன்’  (2) என்கிறார் ஆழ்வார். எல்லா குற்றங்களுக்கும் எதிர் தட்டாய் தன்னை அடைந்தாருடைய தோஷங்களை தீயினில் தூசு போல் போக்குபவன். எங்கும் பரந்து இங்கு உளன் அங்கு இல்லை என்னாதபடி உளன். ‘ உடல் மிசையுயிரெனக் கரந்தெங்கும் பரந்துளன் ‘ (3) என்கிறார் ஆழ்வார். அதாவது, அனைத்து உயிர்களுக்குள்ளும், உயிரற்ற பொருட்களுக்குள்ளும் இறைவன் உள்ளுரை ஆன்மாவாக ( அந்தர்யாமித்வம் ) உள்ளான். இந்த உடலினுள் ஆன்மா உள்ளதைப் போல் ஆன்மாவிற்குள் ஆன்மாவாய் உள்ளான். இவ்வாறு இறைவன் அனைத்தினுள்ளும் உள்ளுரைப் பொருளாக இருந்தாலும் அந்த உயிர் மற்றும் உயிரற்ற பொருட்களின் நல்ல மற்றும் தீய செயல்களினால் ஏற்படும் பலன்கள், எவ்வாறு நாம் உண்ணும் சர்க்கரை பொங்கல், வாயின் உள்ளேயே நாக்கு இருந்தாலும் அதில் ஒட்டுவதில்லையோ அதே போல நம்முடைய செயல்கள் இறைவனை சேர்வதில்லை.

‘ பரதத்வமாவது – ஸ்வ வ்யதிரிக்த வஸ்துக்கள் எல்லாவற்றுக்கும் தாரகனுமாயும் கட்டுப்படுத்துபவனுமாயும் (நியந்தாவுமான)  இருக்கின்றான் என்பதை சேஷpயுமான ஶ்ரிய:பதி ‘ (4)

ஶ்ரீ தத்வ பதவி என்கிற நூலில் சுவாமி வேதாந்த தேசிகன் இவ்வாறு கூறுகிறார். இதன் பொருளாவது உயர்ந்த தத்துவம் என்று கூறப்படுகின்ற இறைவன் தன்னைத் தவிர உள்ள மற்ற அறிவுள்ள மற்றும் அறிவற்ற பொருட்களையும் தாங்குபவனாய், நடத்துபவனாய் அவைகளால் ஏற்படும் பயன்களைப் பெருபவனாய் உள்ளான் என்று காட்டுகிறார்.

 அனைத்து வஸ்துக்களிலும் உள்ளுறை பொருளாய் நின்று அவற்றின் ஸ்வரூபம் , ஸ்திதி, ப்ரவ்ருத்தி இவற்றை தன் ஸங்கல்பத்துக்கு அடங்கினவாய் கொண்டு விளங்குபவன் என்கிறார் சுவாமி தேசிகன்.(5)

       இறைவனை அவனுடைய கல்யாண குணங்களைக் கொண்டே அறியப்படுகிறது. அதில் முக்கியமான ஐந்து கல்யாண குணங்களாவன,

1 எப்பொழுதும் மாறுபடாத தன்மை ( சத்யத்துவம் )

2 எப்பொழுதும் குறைவுபடாத அறிவின் இருப்பிடம் ( ஞானத்துவம் )

3 இந்த இடத்தில் தான் இருக்கிறான் இந்த காலத்தில் தான் இருந்தான் என்று இருப்பிடத்தாலும் காலத்தாலும் அளவிட முடியாதவன். எல்லா காலத்திலும் எல்லா இடங்களிலும் நிறைந்திருக்கும் தன்மை ( அநந்தத்வம் )

4 அளவிடமுடியாத ஆனந்தத்தை உடையவன். மகிழ்ச்சியே வடிவானவன் ( ஆனந்தத்வம் )

5 குற்றங்கள் இல்லாத தன்மை ( அமலத்வம் )

  ‘ அமலனாதி பிரான் ‘ ( அமலனாதிபிரான் – 1 )

இவ்வாறு இறைவனின் ஐந்து குணங்கள் போற்றப்படுகின்றன.

ஆன்மாவின் இயல்பு :

உயிரானது ஆன்மா என்று அழைக்கப்படுகிறது. இது அறிவின் இருப்பிடமாக ( ஞானத்தின் ) உள்ளது. மிகவும் சிறியதான இதை அணு அளவானது என்பர்.  ஆயினும் இது கண்களுக்கு தெரியாது. இறைவனைப் போலவே ஆன்மாக்களும் நித்தியமாக என்றும் உள்ளவை ( அனாதி ). பிறப்பு, இறப்பு அற்றது. கர்ம வினைகளின் பயனாகவே ஓர் உடலுக்குள் இந்த ஆத்மா வருகிறது. இதற்கு பிறப்பு என்றும் அந்த உடலை விட்டு ஆன்மா வெளியில் வருவதை இறப்பு என்றும் கூறுவர். ஆன்மாவின் தனமையை நோக்கின் இது இறைவன் ஒருவனுக்கே அடிமை என்பதே வைணவர்களின் அசைக்க முடியாத நமபிக்கை. ‘ ஏன்றேனடிமை இழிந்தேன் பிறப்பிடும்பை ‘ (6) என்கிறார் திருமழிசையாழ்வார்.

இறைவன், தன் விருப்பத்தால் ( சங்கல்பம் ) உயிர்களுக்கு குணங்கள் மற்றும் கருவிகளான இந்திரியங்களை வழங்குகிறான். அவற்றை உயிர்கள் தங்கள் கர்ம வினைகளுக்கு தக்கவாறு உபயோகிக்கும் படி செய்கிறான். ஆன்மா உடலைப் பெற்று, வினைப்பயனை அனுபவிப்பதும், பின் அவற்றை வெறுத்துத் தள்ளுவதும், பின்னும் அவற்றை விரும்புவதுமாய் இந்தப் பிறவிப் பெருங்கடலில் உழல்கின்றான் என்று சுவாமி தேசிகன் பின்வரும் பாடல் வழி காட்டுவர்.

“ தானடைத்த குணங்கருவி தங்கிரிசை வழியொழுக்கி,

 ஊனெடுத்துண்டுமிழ்ந்துழலும் உயிர்க்கெல்லாமுயிராகிக் “(7)

 

ஆன்மா இறைவனை சென்றடைய வேண்டிய வழியின் தன்மை :

 

ஆன்மா இறைவனை அடையும் நெறியினை அன்புநெறி ( பக்தி ), அடைக்கலநெறி ( ப்ரபத்தி ) என்னும் இரண்டு வழிகளையே இறைவனை சென்றடையும் சிறந்த பாதைகளாக வேதம், இதிஹாசம், புராணம், ஆழ்வார்கள், ஆசாரியர்களின் நூல்கள் அனைத்திலும் காட்டப்பட்டுள்ளது என்றும்,அறம், பொருள், இன்பம், வீடு என்னும் இந்த நான்கு பேறுகளே அனைவராலும் விரும்பப்படுவது என்றே அனைத்து நூல்களிலும் சொல்லப்படுகிறது. இதில், அறத்தின் மூலமே மற்ற மூன்றும் பெறப்படுகின்றன. இறை நுகர்ச்சியே வாழ்ச்சி எனப்படுகிறது. இறை அநுபவத்தை தரக்கூடிய வீடுபேறே சிறந்ததாகக் கருதப்படுகிறது. அதனை அடைவதற்குரிய வழியே ஆறு எனப்படுகிறது. இந்த வழியில், செயல் நெறி,( கர்ம யோகம் ) அறிவு நெறி,( ஞான யோகம் ) அன்பு நெறி,( பக்தி யோகம் ) அடைக்கல நெறி பகுப்புகளாக அமைக்கப்பட்டுள்ளன.

செயல் நெறி : (கர்ம யோகம்)

செயல் நெறி என்பது ஆன்மாவை உள்ளபடி அறியும் அறிவை முதலில் பெற்று, தன் நிலைக்குத் தக்கதாய் விதிக்கப்பட்ட செயல், அதனால் ஏற்படும் விளைவுகளில் விருப்பமின்றி, நாம் செய்கிறோம் என்கிற எண்ணம், பற்று ஆகியவை இன்றி இறைவனுக்குச் செய்யும் வழிபாடு என்னும் நினைவோடு செய்வதாகும். இதை ‘சாத்வீகத்யாகம்’ என்றும் கூறுவர். இவ்வாறு நாம் நம் செயல்களைச் செய்தால் பேற்றினை அடைவதற்கு தடையான தீவினை அழிந்து, மனம் மலமற்று நிர்மலமாகிறது. அதனால் இறைவனிடத்தில் விருப்பம் பிறந்து, பின்னர் மேலான அன்பு (பரபக்தி), மேலான அறிவு (பரஞ்ஞானம்), மிக்க மேலான அன்பு (பரமபக்தி) மாறி, பேற்றினை நல்கும் என்று கூறப்படுகிறது.

அறிவு நெறி : (ஞான யோகம்)

அறிவு நெறி பற்றி வைணவ உரை சக்கரவர்த்தி பெரியவாச்சான் பிள்ளை ‘இந்த்ரியோபாதி ரூபமான ஞான யோகம்’ என்று கூறுவர்.(8) அதாவது, ஐம்பொறிகளை வருத்தி கடைபிடிக்கும் நெறியாகும். பொறிகளை அடக்குவதால் ஆன்மாவை உணரமுடியும். இதனால் இறைவனை அடையும் அறிவும், அவனைக் குறித்து அன்பும் பிறக்கும். அவை பிறக்கவே மேலான அன்பு, மேலான அறிவு, மிக்க மேலான அன்பு ஆகியன பிறந்து, பேற்றினை அடைவிக்கும் என்பர்.

அன்பு நெறி : (பக்தி யோகம்)

 

அன்பு நெறியானது எட்டு வித யோகங்களைக் கொண்டு கண்டறியப்படுவது. இது மிகவும் உயர்ந்ததும், கடினமானதுமாகும்.

“ராஜ வித்யாராஜ குஹ்யம் பவித்ரம் இதம் உத்தமம்” (9). பகவான் கண்ணன் கீதையில் ராஜ வித்யா என்று கூறப்படுகின்ற இந்த அன்பு நெறியை மிகவும் உயர்ந்தது என்கிறார். இந்த யோகத்தைக் கடைபிடிக்கும் போது தடை ஏற்பட்டால் மறு பிறப்பிலும் இந்த யோகம் தொடரும் என அறியலாகிறது. உடலை விட்டு உயிர் பிரியும் முன் இறைவனைப் பற்றிய சிந்தனை அவசியம் தேவை என இது உறுகின்றது. அப்பொழுது தான் வீடு பேறு கிட்டும். இது சாதன பக்தி என்று அழைக்கப்படுகிறது. இதை வீடு பேறு கிட்டும் வரை கடைபிடித்துக் கொண்டே இருக்க வேண்டும். இப்படி கடைபிடிப்பின் பயன் என்பது தக்க சமயத்தில் கிட்டும் என்பது திண்ணமாகக் கூறப்படுகின்றது.

அடைக்கல நெறி

கிடைக்க வேண்டிய பேறும் அதற்கான வழியும் இறைவனே என்று அவன் திருவடிகளில் தஞ்சம் புகுவது அடைக்கல நெறியாகும். அன்பு நெறியை கடைபிடிக்க முடியாதவர்கள் அடைக்கல நெறியை வீடு பேற்றிற்காக மேற்கொள்வர். இந்த அடைக்கல நெறியானது, பிரபர்த்தி, சரணாகதி, பர சமர்ப்பணம், உபாயானுஷ;டானம் என்ற பெயர்களால் வழங்கப்படுகிறது.

அடைக்கல நெறியானது மறைகளிலும் அதனை விளக்க வந்த உபநிடதங்களிலும் தக்க விளக்கங்களோடு உரைக்கப்பட்டுள்ளது.

அதன்படி “நான் குற்றங்களுக்கெல்லாம் இருப்பிடமாக இருப்பவன்;;;;;; உன்னைத் தவிர வேறு வழி அற்றவன். நீயே எனக்கு ஆறும் பேறுமாவாய்” என்று வேண்டும் மனநிலையே அடைக்கலம் என்கிறது அஹிர்புந்த்ய ஸம்ஹிதை (36-38) என்னும் நூல். அதாவது இன்னார் தான் அடைக்கல நெறியைக் கடைபிடிக்க வேண்டும் என்கிற கட்டாயம் என்பது இல்லை. காகம், யானை, அரக்கன் என்று அனைவரும் இறைவனிடம் அடைக்கலம் புக முடியும் என்று நம் முன்னோர்கள் காட்டியுள்ளனர்.

அடைக்கலம் (சரணாகதி) புக மிக முக்கியமாக தேவையானவை :

1.    நம்மை நாமே காத்துக் கொள்ள முடியாத மனநிலை.

2.   யாரிடம் அடைக்கலம் புகுகிறோமோ, அவரிடம் மேலான நம்பிக்கை.

3.   இறைவனின் வார்த்தைகளாக மறைகளிலும் மற்ற நூல்களிலும் சாஸ்திரங்களிலும் இங்ஙனம் செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளவற்றை செய்தல், செய்யக் கூடாது என்பவற்றை விலக்கல் வேண்டும்.

4.   ‘உகக்குமவை உகந்து உகவா வனைத்து மொழிந்து’ (10) இறைவனிடம் நம்மைக் காக்கும் பொறுப்பை ஒப்படைத்து இறைஞ்சி வேண்டுதல்..

       இறைவனிடம் அடைக்கலம் புகுந்தவுடன் ஆன்மாக்களின் நல்ல மற்ற தீய வினைகள் ‘தீயினில் தூசு’ (11) போல் மறைந்துவிடும். இந்த வழி பின்பற்றின் வீடுபேறு வெகு விரைவில் கிட்டக் கூடியது. மிகவும் எளிய முறையும் ஆகும்.

ஆன்மாக்கள் அடையும் பயன்கள்

      இந்த உயிர்கள் அனைத்தும் நான்கு விதமான பயனை அடைய விழைகின்றன அவையாவன, அறம் ,பொருள், இன்பம், வீடு என்பனவாகும். அறம் பொருள் இன்பம் என்னும் இந்த மூன்றையும் விட வீட்டின்பமே சிறந்ததாகக் கருதப்படுகிறது.

        அறத்தின் மூலம் நல்ல வழியில் ஈட்டிய பொருளை தானே வைத்துக் கொள்ளாமல் ஏழை எளிய மக்களுக்கு நல் வழியில் செலவு செய்வதே சிறந்து என்பர். உடல் உறுப்புகள் மூலம் பெறப்படும் இன்பம் யாவையும் சிற்றின்பமாக கருதப்படுகிறது. இவை நிலையற்றவை.. நீர்க்குமிழி போன்று தோன்றி மறையக் கூடியவை.

      வீட்டின்பத்தையே பேரின்ப பெரு வாழ்வாக கருதப்படுகிறது. இது நிலையானது. இங்கு கிடைக்கும் இன்பமானது முடிவற்றது..

 ‘ அந்தமில் பேரின்பத்து அடியாரோடிருந்தமை’ (12) என்பதன் வழி, இது எளிதாக புரியும்.

பயனை அடைய தடையாய் இருப்பவை:

         வீடு பேற்றினை அடைவதற்கு தடையாய் இருப்பவைகளாவன சொரூப விரோதி, பரத்வ விரோதி,  புருஷார்த்த விரோதி, உபாய விரோதி, மற்றும் ப்ராப்ய விரோதி.

சொரூப விரோதி: 

இந்த உயிர்களின் தன்மை இறைவனுக்கு அடிமை பூண்டு தொண்டு புரிவதே. ஆனால் அவ்வாரின்றி யான் எனக்கு உரியன் (அகங்காரம்) அனைத்தும் என்னுடையது, எனக்காகவே (மமகாரம்) என்ற எண்ணங்களும் ஏற்படுவது தடையாகக் கருதப்படுகிறது. ஆன்மா (சுதந்திரன்) தன்னிச்சையாக செயல்படக் கூடியது என்கிற எண்ணமும் தடையாகக் கருதப்படுகிறது.

பரத்வ விரோதி:

‘பர’ என்றால் உயர்ந்த என்று பொருள். உயர்ந்த தத்துவமாக கருதப்படும் திருமகளுடன் கூடிய திருமாலைத் விட மற்றை தெய்வங்களை உயர்வாகவோ அல்லது சமமாகவோ எண்ணுவது பரத்வ விரோதி.

புருஷர்த்த விரோதி:

இறைவனுக்கு தொண்டு புரிவதே புருஷhர்த்தம் எனப்படுகிறது. அதை விடுத்து மற்றை செயல்களில் விருப்பம் கொள்வது புருஷார்த்த விரோதி எனப்படுகிறது.

உபாய விரோதி:

உபாயம் என்றால் வழி. நாம் கடைபிடிக்கும் வழி எளியதாய் இருப்பதால் பயன் விரைவில் கிடைக்குமோ கிடைக்காதோ என்று ஐயப்படுவது உபாய விரோதி.

பிராப்ய விரோதி:

பிராப்யம் என்றால் அடையப்பட வேண்டிய இறைவனைக் குறிக்கும். ஆன்மா வினைகளின் பயனாக ஏற்பட்ட இந்த உடலுடன் தொடர்புடைய பொருட்களில் ஈடுபாடு ஏற்பட்டு அவற்றை அடைவதிலேயே எண்ணம் ஏற்படுகிறது.

 இதனால் இறைவனைப் பற்றிய சிந்தனை மற்றும் அவனை அடைவதற்கான முயற்சி தடை படுகிறது.

திருவாய்மொழியில் ஐந்து விடயங்கள்

         அர்த்த பஞ்சகம் என்று சொல்லப்படும் ஐந்து விடயங்களை ஆழ்வார் இருபது திருவாய்மொழிகளில் தெளிவாகக் காட்டுகிறார்.

       இறைவனின் தன்மையை ‘உயர்வர உயர் நலம்’ (13) ‘ திண்ணன் வீடு’ (14) ,அணைவது (15), ஒன்றும் தேவும் (16), ஆகிய நான்கு திருவாய்மொழிகளில் தெளிவாக  காட்டுகின்றனர்.

பயிலும் சுடரொளி (17) ஏறாளும் இறையோனும் (18) ,கண்கள் சிவந்து (19) ,கருமாணிக்க மலை (20) ஆகிய நான்கு திருவாய்மொழிகளில் ஆன்மாவின் தன்மையை விளக்குகிறார்.

வீடுமின்(21), சொன்னால் விரோதம் (22), ஒரு நாயகமாய் (23), கொண்ட பெண்டிர் (24) ஆகிய நான்கு திருவாய்மொழிகளில் தடையாக இருக்கும் விரோதியின் தன்மை காட்டப்பட்டது.

நோற்ற நோன்பிலேன் (33), ஆறவமுதே (26), மானேய் நோக்கி (27), பிறந்தவாறும் (28) ஆகிய நான்கு திருவாய்மொழிகளில் இலக்கை சென்றடைய வழி ( உபாயஸ்வரூபம் ) காட்டப்பட்டது.

எம்மா வீடு (29), ஒழிவில் காலம் (30), நெடுமாற்கடிமை (31), வேய்மறு (32) ஆகிய நான்கு  திருவாய்மொழிகளில் இலக்காகிய இறைவனை அடைவதால் கிடைக்கும் தொண்டு புரிதலாகிய பயனின் தன்மை கூறப்படுகின்றது.

முடிவுரை

எவன் ஒருவன் தான் யார் என்பதை உணர்கிறானோ அவனுக்கு மற்றப் பொருட்களைப் பற்றிய அறிவும் உண்டாகும். ஆன்மாக்களையும், அறிவற்ற பொருட்களையும் தவிர அனைத்தையும் உட்புகுந்து தாங்கி கட்டுப்படுத்துபவன் ஒருவன் உள்ளான் என்பதே திருவாய்மொழி உரைகளின் மூலம் காட்டப்படுகிறது. ஒப்பாரும் மிக்காரும் இல்லாத அந்த ஒருவனையே இறைவன் என்று கூறப்படுகிறது. வீடு பேற்றிற்கு நான்கு வழிகள் ( செயல் நெறி, அறிவு நெறி, அன்பு நெறி, அடைக்கல நெறி ) கூறப்பட்டிருப்பினும், அடைக்கல நெறியே எளியதும் சிறந்ததுமாக திருவாய்மொழி உரையாசிரியர்கள் காட்டியுள்ளனர். ஆகையால் அந்த இறைவனிடம் அடைக்கலம் புகுவதால் பேரின்பப் பெருவாழ்விற்கு அவனே வழியும் ஆவான் என்று காட்டுகிறார் ஈட்டில் உரையாசிரியர்.

வைணவ நெறிகளில் ஒன்றான அடைக்கல நெறியின் மூலம், பற்றுவதற்கு எளியனான பரமனை பற்றி வீடுபேற்றை அடையலாம் என்று காட்டப்படுகிறது.

பக்தி இலக்கியங்களில் பேரின்பப் பெருவாழ்விற்கான ஆராய்ச்சி இனிவரும் ஆய்வாளர்களுக்கான ஆய்வுக் களமாக அமைய இந்த ஆய்வுக் கட்டுரை வழிவகுக்கும் எனபதில் ஐயமில்லை.

அடிக்குறிப்புகள்:

1.    அர்த்த பஞ்சகம் எழுதியவர் ந.சுப்புரெட்டி

2.   திருவாய்மொழி (1-1-1)

3.   திருவாய்மொழி (1-1-7)

4.   ஶ்ரீ தத்த்வபதவி எழுதியவர் சுவாமி தேசிகன்

5.   அர்த்த பஞ்சகம் எழுதியவர் சுவாமி தேசிகன்

6.   நான்காம் திருவந்தாதி 95

7.    அர்த்த பஞ்சகம் 4

8.   திருமாலை 25 வ்யாக்யானம்

9.   பகவத்கீதை 9ம் அத்யாயம் 2

10.   அடைக்கலப்பத்து 5

11.   திருப்பாவை

12.   திருவாய்மொழி (10-9-11)

13.   திருவாய்மொழி (1-1)

14.   திருவாய்மொழி (2-2)

15.   திருவாய்மொழி (2-8)

16.   திருவாய்மொழி (4-10)

17.   திருவாய்மொழி (3-7)

18.   திருவாய்மொழி (4-8)

19.   திருவாய்மொழி (8-8)

20.   திருவாய்மொழி (8-9)

21.   திருவாய்மொழி (1-2)

22.   திருவாய்மொழி (3-9)

23.   திருவாய்மொழி (4-1)

24.  திருவாய்மொழி (9-1)

25.   திருவாய்மொழி (5-1)

26.   திருவாய்மொழி (5-8)

27.   திருவாய்மொழி (5-9)

28.   திருவாய்மொழி (5-10)

29.   திருவாய்மொழி (2-9)

30.   திருவாய்மொழி (3-3)

31.   திருவாய்மொழி (8-10)

32.   திருவாய்மொழி (10-3)

33.   திருவாய்மொழி (5-7)