ஜூலை 2024 இதழுக்கு ஆய்வுக்கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன

“அகத்தியர் பெயரால் வழங்கும் நூல்கள்”

முனைவர் வெ.அர.தாரணி உதவிப்பேராசிரியர் தலைவர் தமிழ்த்துறை, நேரு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கோயம்புத்தூர் – 641 105 30 Apr 2021 Read Full PDF

முனைவர் வெ.அர.தாரணி

உதவிப்பேராசிரியர் தலைவர்

தமிழ்த்துறை, நேரு கலை மற்றும் அறிவியல் கல்லூரி,

கோயம்புத்தூர் – 641 105.

ஆய்வுச்சுருக்கம்:

உலகம் போற்றும் உன்னதத் தமிழாம் நம் அருமைத்தமிழில் புலவர் பலர் வாழ்ந்து வந்துள்ளனர். அவ்வகையில் பழந்தமிழ்ப்புலவர் தங்கள் வரலாற்றினைக் குறித்து வைக்கும் பழக்கங்கொள்ளாமையால், அவர்களின் காலம் பற்றியும், வரலாறு பற்றியும் அறிவதில் சிக்கல்கள் உண்டாயின. ஆராய்ச்சியாளர்களின் முயற்சிகள் இச்சிக்கல்களைத் தீர்ப்பதில் பெரும் வெற்றி பெற்றுள்ளன. அவ்வாறு விளக்கம் பெற்றுத் திகழும் புலவர்களுள் முதன்மையானவர் அகத்தியர் ஆவார். இவர், தமிழ் மொழிக்கு முதன்முதலாக இலக்கணம் வகுத்தார் என்னும் செய்தி, பழந்தமிழ் இலக்கண இலக்கியங்களிலும், அவற்றின் உரைகளிலும், பிற்கால நூல்களிலும் காணப்படும் சில குறிப்புகளால் நிறுவப்பெற்றுள்ளது. இவர் செய்த இலக்கணத்தின் பெயர் அகத்தியம் என்பதும், அது, இயலிசை, நாடகம் என்பதும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளன.

அகத்தியர் மருத்துவம், சோதிடம், ஆன்மிகம், ஞானம் அறநெறி முதலிய பிற துறைகள் பற்றியும் நூல் பல இயற்றியுள்ளார் என்பது, இவர் பெயரால் அமைந்து காணப்படும் பல நூல்களால் உணரப்படுகிறது. மேலும், இவர் சிவநெறி போற்றி  அந்நெறியினைப்பரப்பிய் அசெந்தமிழ் முனிவர் என்றும், பழந்தமிழ் மன்னர்களோடு தொடர்பு கொண்டு நாட்டிற்கும் மொழிக்கும் நலம் பல புரிந்தவர் என்றும் அறிஞர்கள் குறிப்பிட்டுள்ளனர். தமிழகத்தில் அகத்தியர் வாழ்வு, தமிழ் மக்களின் சமயம், சமுதாயம், மொழி, கலைகள் போன்ற பல துறைகளோடும் இணைந்து வந்துள்ளது. அதனால், அவற்றின் இயல்பினை அறிவதற்கு இவருடைய வாழ்வும், வாக்கும் பற்றிய ஆராய்ச்சி தேவை எனும் நோக்கில் சிந்தனை எழ வேண்டும். அச்சிந்தனைக்கு ஏற்ப அதனடிப்படையில் இக்கட்டுரை பதிவு மேற்கொள்ளப்படுகிறது.

திறவுச்சொற்கள்: பிரயோக விவேகம், மத்துஞ் சிலையி நேர்வாளம், துத்துந் துரிசு, பாழ்த்த பிணம், சீரப்பா காமிகள், மெத்துமேனி, துய்ய இரதங் கெந்தமும்,      

முன்னுரை:; அகத்தியர் பெயரால் வழங்கும் நூல்கள் பெயர் அளவிலும், நூல்கள் அமைப்பிலும், நூற்பாக்கள் அளவிலும் சில உள்ளன. பெயரளவில் அமைந்தவை பேரகத்தியம், சிற்றகத்தியம், ஆகியன. நூல்களாக இன்று நமக்குக் கிட்டுவன பேரகத்தியத் திரட்டு, அகத்தியர் தேவாரத் திரட்டு  ஆகியன. நூற்பாக்கள் அளவில் கிட்டுவன அகத்தியனார் ஆனந்த ஒத்து, அகத்தியர் பாட்டியல் என்பன. மேலும், அகத்தியர் ஞானம், அகத்தியர் துறையறி விளக்கம் என்னும் பெயரில் பல செய்யுட்கள், “ இருபது சித்தர் பெரிய ஞானக் கோவை”  என்னும் சித்தர் பாடல் தொகுப்பில் உள்ளன. இன்னும் மருத்துவம், இரசவாதம் முதலான நூல்கள் பலவும் அகத்தியர் பெயரால் உள்ளன என்பது பற்றிய செய்திகள் இக்கட்டுரை வாயிலாகப் பதிவு செய்யும் பொருட்டு முயற்சி செய்யப்பட்டுள்ளது.

பேரகத்தியம்

பேரகத்தியம்  என்னும் பெயரில் இப்பொழுது எந்நூலுமில்லை. முதல் சங்கப்புலவராக விளங்கிய அகத்தியரே அகத்தியம் என்னும் தொன்மையான இலக்கண நூலைச் செய்தார் என்பது முன்னர்த் தெளிவுப்படுத்தப்பட்டுள்ளது. இது இயல் இசை நாடகம் என்னும் மூன்றனுக்கும் உள்ள இலக்கணம் எனவும், பன்னீராயிரம் நூற்பாக்களைக் கொண்ட நூல் எனவும் கூறப்படுகிறது. இவற்றால் அகத்தியம் பண்டைக் காலத்தே மிகப்பெரிய இலக்கண நூலாக விளங்கியது எனக்கருதலாம்.. எனவே, இவ்வகத்தியத்தையே நூற்பாக்களின் எண்ணிக்கை மிகுதியைக் கொண்டு பேரகத்தியம் எனப்பெயரிட்டு வழங்கியிருக்கலாம். ஆயினும் அந்நூலே அந்நூலைப்பற்றிய பிற குறிப்புகளோ கிடைக்கவில்லை. தொல்காப்பியம் மக்களிடையே செல்வாக்குப் பெறத்தொடங்கிய பின்னர், இப்பேரகத்தியத்தைக் கற்பார் அருகியிருக்க வேண்டும். இதனால் காலப்போக்கில் அது வழக்கிழந்து போயிருக்கக் கூடும் என எண்ண இடமேற்படுகிறது இதன் நூற்பாக்களுள் சிலவற்றையே உரையாசிரியர்கள் மேற்கோளாக ஆண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சிற்றகத்தியம்:

பேரகத்தியம்” சிற்றகத்தியம் என்னும் இரு நூல்களையும் அகத்தியர் செய்தார் எனப் “புலவர் புராணம்” கூறுகிறது. பேரகத்தியம் என்னும் பெயர் நோக்கிச் ‘சிற்றகத்தியம்” எனவும் ஒரு நூலை அகத்தியர் செய்தார் எனத்தவறாகச் சிலர் எண்ணி விட்டனர் என்பார். ந.மு. வேங்கடசாமி  நாட்டார். எனவே சிற்றகத்தியம் என்னும் பெயரில் ஒரு நூலை அகத்தியர் செய்யவில்லை என்பதே இவர் தம் கருத்தாகும். “சிற்றகத்தியம் என்பது பேரகத்தியம் கண்டு கட்டிவிட்ட கதை பேலும்” என்று சோம. இளவரசு கூறியுள்ளதும் என ந.மு. வேங்கடசாமி நாட்டார் கருத்தினைத் தழுவியதாகும். ஆனால், உ.வே.சாமி நாதர், “பழைய உரைகளிற் காணப்படும் மேற்கோள் வழக்கால் சிற்றகத்தியம் பேரகத்தியமென இரண்டு நூல்கள் இருந்து வந்தன வென்று தெரிகிறது. அவற்றைப்பற்றிய  வேறே ஒரு செய்தியும் தெரியவில்லை என்பார்.

இது குறித்து மேலும், மயிலை, சீனி, வேங்கடசாமி குறிப்பிடுவதும் இங்குக் கருதத்தக்கது. “காக்கைப்பாடினியார் என்னும் பெயருள்ளவர் இருவர், தத்தம் பெயரால் இயற்றிய காக்கை பாடினியம் என்னும் நூல்களுக்குப் பெருங்காக்கைப்பாடினியம், சிறுகாக்கைப்பாடினியம் என்று பெயர்கள் வழங்கப்படுவது போல, வெவ்வேறு காலத்திலிருந்த அகத்தியர்கள் தத்தம் பெயரால் இயற்றிய அகத்தியம் என்னும் நூல்களுக்குச் சிற்றகத்தியம், பேரகத்தியம் என்று பெயர் வழங்கினார்கள் போலும். என்பர்.

சிற்றகத்தியம் என்னும் நூல் அகத்தியரால்  இயற்றப்பெற்றதா இல்லையா என்பது குறித்து அறி ஞர்களிடையே கருத்து மாறுபாடுகல் நிலவினும், சிற்றகத்திய நூற்பாக்கள் எவையும் கிடைக்காத நிலையில் ந.மு.வேங்கடசாமி நாட்டாரின் கருத்து ஏற்புடையதாக உள்ளது.

பேரகத்தியத்திரட்டு ச.பவாநந்தம் பிள்ளை “பேரகத்தியத் திரட்டு” என்னும் நூலில் ‘ பேரகத்தியம்’ என்னும் தலைப்பின்கீழ் 164 அகத்திய நூற்பாக்களைத் தொகுத்துத் தந்துள்ளார். இந்நூற்பாக்கள் முழுமைக்கும் இவரே உரையும் எழுதியுள்ளார். மேலும் இந்நூலின் பிற்பகுதியில் ‘உரை நூல்களிற் கண்ட பேரகத்திய மேற்கோள் சூத்திரங்களாகப்’ பத்தொன்பதனை எடுத்துக்காட்டியுல்லார். இவற்றுள் ‘ பேரகத்திய நூற்பாக்கள்’ குறித்த இவருடைய கருத்துக்கள் இங்கு நினைக்கத்தக்கன..

“அகத்தியச் சூத்திரங்களெனச் சிதைந்து ஆங்காங்குச் சில வழங்குவனவாயின. அவற்றிற் சில சூத்திரங்களை வித்வான் களத்தூ- வேதகிரி அவர்கள் சுமார் அறுபது ஆண்டுகளுக்கு முன்னர் வெளியிட்டனர் – வேதகிரி அவர்கள் தம்மிடத்து மூவாயிரம் சூத்திரங்கள் கிடைத்துள்ளனவென்று சொல்லி நூற்றுப் பத்தைந்து சூத்திரங்களே வெளியிட்டனர். மற்றைச் சூத்திரங்களும் கிடைக்குமென்று பல்காலும் பல்வேறிடங்களிலும் முயன்றும் கிடைத்தில. பின்னும் பதினாறு சூத்திரங்கள் கிடைத்தன. கிடைத்தமட்டில் இது அகத்தியனார் செய்த தென்பதற்கு மேற்கண்ட வேதகிரி அவர்கள் கூற்றேயன்றி வேறு ஆதரவு கிடைத்திலது. அகத்தியம் என்னும் நூல் ஒன்று நிலவுகின்றது என்று எண்ணியிருப்பார்க்கு மனவமைதியுண்டாமாறு அதனை வெளியிடத் துணிந்தேன்” எனும் இவர்தம் கூற்றால், ‘பேரகத்தியத் திரட்டிலுள்ள’ ‘பேரகத்திய நூற்பாக்கள்’ பிற்காலப் புலவரால் எழுதப்பெற்றன என்பது தெளிவாகிறது.

பேரகத்திய நூற்பாக்களின் காலம் தொல்காப்பியம், நன்னூல் முதலான இலக்கன நூல்களில் உரையாசிரியர்களால் மேற்கோளாக எடுத்தாளப்பெற்ற அகத்திய நூற்பாக்களுள் ஒன்றேனும் ‘பேரகத்தியத் திரட்டிலுள்ள’ பேரகத்திய நூற்பாக்களுள் காணப்படவில்லை. மேலும் பேரகத்தியம், தொல்காப்பியம், நன்னூல் என்னும் இவ்விரு நூல்களின் நூற்பாக்களைப் பெரிதும் தழுவியும், பிரயோக விவேகம், இலக்கணக் கொத்து, வெண்பா பாட்டியல் முதலான இலக்கண நூல்களின் சில நெறிகளைப் பின்பற்றியும் அமைந்துள்ளது. எனவே பிரயோக விவேகம், இலக்கணக் கொத்து, வெண்பாப் பாட்டியல் ஆகிய நூல்களுக்குப் பின்னரே ‘’பேரகத்திய திரட்டி’லுள்ள பேரகத்திய நூற்பாக்கள் எழுதப்பெற்றுள்ளன.

அகத்தியர் தேவாரத்திரட்டு

தேவார மூவர் பாடிய திருப்பதிகங்களே தேவார அடங்கன் முறையாக விளங்குகிறது. கல்வி, அறிவு, ஒழுக்கங்களிற் சிறந்து விளங்கிய சிவலாய முனிவர். இவ்வடங்கல் முறையின் பெருமையை உணர்ந்து நாள்தோறும் ஓத விரும்பினார். ஆயினும் அவரால் அங்கனம் செய்யவியலவில்லை. எனவே தில்லையை அடைந்து, சிவபெருமானை வணங்கித் தம் கருத்து முற்றிப்பெறப் பன்னெடுங்காலம் தவஞ்ச் செய்தார்..அக்காலை. ‘சிவலாய முனிவனே’ பொதிகைமலையில் வாழும் அகத்திய முனிவனை அடைந்தால், நீ எண்ணிய கருத்து முற்றுப்பெறும் என ஒரு வான்மொழி எழுந்த்து. அதனைக்கேட்ட முனிவர், கூத்தப் பெருமானை வணங்கிப் பொதியமலையை அடைந்தார். அங்கே மூன்றாண்டுகள் அகத்திய முனிவரை எண்ணித்தவஞ் செய்தார். அதற்கிரங்கிய அகத்திய முனிவர் வெளிப்பட்டு, தேவார அடங்கன் முறை முழுவதையும் அவருக்குக் கூறி, அதன் பொருளையும் விளக்கினார். பின்னர் அவற்றினின்றும் 25 திருப்பதிகங்களை மட்டும் தந்து இவற்றை முறையே ஓதின் அடங்கன்  முறை முழுவதையும் ஓதியதன் பயனைப் பெறலாம்  எனக்கூறி மறைந்தார். சிவாலய முனிவர் அங்கனமே அவ்விருபத்தைந்து திருப்பதிகங்களையும் ஒதிக்கொண்டிருந்து வீடுபேறு அடைந்தார். இச்செய்தியினை, திருப்பதிகக் கருத்துரை நிலைமண்டில ஆசிரியப்பா செப்புகிறது.

அகத்தியனார் ஆனந்த ஒத்து ‘ஆனந்த ஒத்து’ என்னும் இலக்கணத்தை அகத்தியர் செய்தார் என்பதை. யாப்பருங்கல விருத்தி உரையினால் உணரலாம். இது அறுவகை ஆனந்தங்களையும் கூறுவதாகச் சுட்டி அதற்கேற்ப, ஆறு நூற்பாக்களையும் மேற்கோளாக உரையாசிரியர் காட்டியுள்ளார். இலக்கண விளக்கப்பாட்டியலுரை காரரும் இந்நூற்பாக்களை எடுத்துக்காட்டியுள்ளார். எனினும் இவர் காட்டியுள்ள சில நூற்பாக்கல் பாடவேறுபாடுகளுடன் காணப்படுகின்றன.

அகத்தியர் பாட்டியல்

கி.பி.பதினாறாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் எனக் கருதப்படுகிற பரஞ்சோதியார் தாம் இயற்றிய சிதம்பரப் பாட்டியலில்,

பாமேவு தமிழ்ப் பொதியக் குறுமுனிவன் கூறும்

பாட்டியலைச் சுருக்கமதாய்ப் பகர்ந்திடுவேன் யானே” என ‘அகத்தியர் பாட்டியலைக் குறிப்பிட்டுள்ளார். மேலும் பன்னிரு பாட்டியல் என்னும் நூலிலும் ‘அகத்தியர் பாட்டியல்’ என்னும் பெயரில் இரண்டு நூற்பாக்கள் காணப்படுகின்றன. எனவே ‘அகத்தியர் பாட்டியல்’ என்னும் பெயருள்ள நூல் ஒன்று இருந்ததென்பதனைத் தெளியலாம்.

அகத்தியர், அகத்தியம் என்னும் பரந்துபட்ட பேரிலக்கண நூலை இயற்றினார் என்பர் உரையாசிரியர்கள். அத்தகைய பெரு நூலை இயற்றிய அகத்தியர், பாட்டியல் என்னும் ஒரு சிறு நூலினை இயற்ற வேண்டிய இன்றியமையாமை இல்லை. எனவே பாட்டியல் நூல்கள் எழுந்த காலத்து, பிற்காலத்துப் புலவர் ஒருவர் அகத்தியர் பெயரால் செய்த ஒரு நூலே இது எனக் கொள்ளல் பொருந்தும்.

அகத்தியர் ஞானம் அகத்தியர் துறையறி விளக்கம்:

அகத்தியர் ஞானம் அகத்தியர் துறையறி விளக்கம் இருபது சித்தர் பெரிய ஞானக்கோவை என்னும் நூலில் அகத்தியர் ஞானம் 5,6,9,13, 16, என்னும் தலைப்புகளில் 49 பாடல்களும், அகத்தியர் துறையறி விளக்கம் என்னும் தலைப்பில் 113 பாடல்களும் ஆக 162 பாடல்கள் உள்ளன.

எடுத்துக்காட்டாக அகத்தியர் ஞானம் 5-இல் உள்ள முதல் பாடலை இங்குக் காணலாம்.

“மனமது செம்மை யானால் மந்திரஞ் செபிக்கவேண்டாம்;

மனமது செம்மை யானால் வாயுவை யுயர்த்த வேண்டாம்;

மனமது செம்மை யானால் வாசியை நிறுத்த வேண்டாம்;

மனமது செம்மை யானால் மந்திரஞ் செம்மை யாமே”.. அகத்தியர் ஞானம் 16- இல் முதல் பாடல் வருமாறு,        

            பாரப்பா சீவன்விட்டுப் போகும் போது

                 பாழ்த்தபிணங் கிடக்குதென்பார் உயிர்போச் சென்பார்:

           ஆரப்பா அறிந்தவர்கள்? ஆரும் இல்லை:

              ஆகாய சிவத்துடனே சேருமென்பார்

           காரப்பா தீயுடன்தீச் சேரு மென்பார்:

                  கருவறியா மானிடர்கள் கூட்ட மப்பா:

            சீரப்பா காமிகள்தா மொன்றாய்ச் சேர்ந்து

               தீயவழி தனைத்தேடிப் போவார் மாடே”..

 இப்பாடல்களின் நடையை நோக்குங்கால், ஒருவர் இறந்த பின்பு, அவரை யாரும் பெயரிட்டு அழைப்பதில்லை. பிணம் என்றுதான் சொல்கிறார்கள். ஒருவர் இறந்த பின்பு ஒருவருடைய ஆன்மா (உயிர்) எங்கு போகிறது என்பதை அறிந்தவர் இவ்வுலகில் ஒருவருமே இலர் என்பதாகும்.

மாடுதா னானாலும் ஒருபோக் குண்டு;

    மனிதனுக்கோ அவ்வளவுந் தெரியா தப்பா!,

நாடுமெத்த நரகமென்பார்; சொர்க்க மென்பார்;

   நல்வினையோ தீவினையோ எண்ண மாட்டார்;

ஆடுகின்ற தேவதைகள் அப்பா! கேளு; அரிய தந்தை

    யினைஞ்சேரு மென்றுந்த் தோணார்;

சாடுமெத்த பெண்களைத்தான் குறிப்பா

     யெண்ணித் தளமான தீயில்விழத் தயங்கி னாரே!

அகத்தியர் இப்பாடலில் மனிதர்களின் அறியாமையை எள்ளி நகையாடுகின்றார். ஏனெனில், ஐந்தறிவு பெற்ற் அஃறிணை உயிர்கள் அனைத்தும் தத்தம் செயலை ஒழுங்காக ஆற்றி வருகின்றன. ஒரு வயலில் இறங்கி பயிர்களை மேயும் மாட்டை அதன் உரிமையாளன் ஒருமுறை பிரம்பால் அடித்து தண்டிப்பானானால் அது தன் வாழ் நாள் வரை வயலில் சென்று மேயாது. ஆனால், மனிதன் அவ்வாறில்லை. மனிதர்கள் வெறும் வாயளவில் நரகம் என்றும், சொர்க்கமென்றும் கூறுவர். ஒருவர் தாம் இறந்த பின்பு, அவர்கள் பாவங்கள் செய்திருப்பின் நரகத்தில் வீழ்ந்து வெந்தழிவார் என்றும், புண்ணியங்கள் செய்திருப்பின் சொர்க்கத்தில் மகிழ்ச்சியாக வாழ்வார் என்றும் பேசிக்கொள்கின்றனர்.

இவ்வளவையும் சிந்திக்கத் தெரிந்த மனிதர்கள் குளிக்கப் போய் சேற்றை பூசிக்கொண்டாற்போல, ஏன் மீண்டும், மீண்டும் பாவங்களைச் செய்ய வேண்டும். இவையெல்லாம் பிற்காலத்தவர்களால் பாடப்பெற்றவை என்பது தெளிவாகிறது. எனவே இவை அகத்தியர் பெயரைக் கொண்ட சித்தர் ஒருவரால் பாடப்பெற்றவை எனக் கொள்ளலாம்.

பிற நூல்கள் அகத்தியர் பெயரால் நூற்றுக்கு மேற்பட்ட மருத்துவ, இரசவாத நூல்கள் காணப்படுகின்றன. சோதிட நூல்களும் இவர் பெயரால் வழங்கி வருகின்றன. இந்நூல்களைச் செய்தவர் அகத்தியம் எனப்படும் இலக்கணத்தைச் செய்த  தலைச்சங்கப் புலவராக இருக்கவியலாது. “அகத்தியர் வைத்திய ரத்தினச் சுருக்கம் முந்நூறு” என்னும் நூலிலிருந்து பின்வரும் பாடலை எடுத்துக் காட்டாக்க் குறிப்பிடலாம்.

“ மூழ்கவே வியாதி யெல்லாங் கடலே புக்கும்

    முக்கியமாய் அகத்தியர்க்குச் சிவந்தான் பண்ணி

 நெகிழாதே தியானமது எந்நேரம் பண்ணு

     நேரான தேவியைத்தான் தியானம் பண்ணு

 தகிழவே சிவந்தனையே பூசை பண்ணி,

     தவமானால் வியாதியெல்லாந்த தவறுண்டே போம்

 மகிழவே வைத்தியத்தைச் செய்தா னாகில்

     வையகத்தி லொப்பாரு மீசன் முற்றே”..

அகத்தியர் நயன விதி 500- இல் மற்றுமொரு பாடல்

   துத்தந் துரிசு அரிதாரம் துய்ய இரதங் கெந்தகமும்

   மத்துஞ் சிலையி நேர்வாளம் வடிவாம் வெள்ளையுடன் கூட்டி

மெத்துமேனி யிலைச்சாற்றில் மேலாயரைத்து உண்டை செய்து

கொத்துக் கட்ட கண்ணோய்கள் குலைந்து போருங் கண்டீரே”. இப்பாடல்களின் நடையையும் கருத்தையும் நோக்குழி, இவையெல்லாம் இலக்கண அறிவு நிரம்ப்பெற்ற  புலவரால் இயற்றபெற்றனவாக்க் கூறமுடியவில்லை. மருத்துவம், இரசவாதம், ஞானம் ஆகியவற்றில் பயிற்சி பெற்ற அகத்தியர் என்னும் பெயரைத் தாங்கி பிற்காலத்தவர்களால் எழுதப்பெற்ற பெயரைத் தாங்கிய பிற்காலத்தவர்களால் எழுதப்பெற்ற நூல்களே இவை.

முடிவுரை: இறையனாரகப்பொருளுரையால் அறியப்பெறும் முதற் சங்கப் புலவராகிய அகத்தியர் இயற்றிய அகத்தியத்தையே பின்வந்தோர் பேரகத்தியம் என வழக்கினில் அதன் பெருமை கருதி அழைத்திருத்தல் கூடும். பிற்காலத்திய “பேரகத்தியத்திரட்டு” இதனின் வேறானது, “சிற்றகத்தியம்” என்னும் நூலை அகத்தியர் செய்தாரா இல்லையா என்பதில் அறிஞர்களிடையே காணப்படும் கருத்து வேறுபாடுகள் ஆராயப்பெற்று ந.மு.வேங்கடசாமி நாட்டாரின் கருத்து ஏற்புடையதாகலாம் என அறியப்படுகிறது. “ஆனந்த ஒத்து” என்னும் பெயருடைய ஒன்றை அகத்தியர் செய்தார் என யாப்பருங்கல விருத்தியாசிரியர் குறிப்பிட்டிருக்க, பேராசிரியரும் நச்சினார்க்கினியரும் இதனை உடன்படவில்லையெனினும், ஆனந்த ஒத்தினைச் செய்தவர் தொல்காப்பியருக்குப் பின்வந்த அகத்தியர் ஆக இருத்தல் கூடும், “அகத்தியர் பாட்டியல்” என்னும் பெயரில் நிலவும் நூல் பிற்காலப் புலவரால் இயற்றப்பெற்றது. மருத்துவம், இரசவாதம் முதலிய அகத்தியர் பெயரால் வழங்கும் நூல்கள் மிக மிகப் பிற்காலத்தவர்களால் இயற்றப்பெற்றவை என அறியப்படுகிறது.

அடிக்குறிப்புகள்:

  1. அ.ச. பவாநந்தம்பிள்ளை, ‘முகவுரை’ பேரகத்தியத்திரட்டு, ப.11
  2. அ.தண்டபாணிசுவாமிகள் புலவர் புராணம், அகத்தியர் மகாமுனிவர் சருக்கம்,
  3. ந.மு.வேங்கடசாமி நாட்டார்,’அகத்தியர்’ செந்தமிழ்ச்செல்வி, சிலம்பு. க.ப.110
  4. சோம. இளவரசு, இலக்கண வரலாறு, ப.30
  5. உ.வே.சாமிநாதர், சங்கத்தமிழும் பிற்காலத் தமிழும், ப.22
  6. மயிலை. சீனி.வேங்கடசாமி, மறைந்து போன தமிழ் நூல்கள், ப.227
  7. அகத்தியர் தேவாரத்திரட்டு
  8. அ.சிதம்பரனார், அகத்தியர் வரலாறு, ப.93
  9. யாப்பருங்கலம், பக்.558,559,562
  10. இலக்கண விளக்கம், பொருளதிகாரம் பாட்டியல்; நூ.887 உரை மேகோள், பக்.275-276
  11. பரஞ்சோதியார், சிதம்பரப்பாட்டியல், உறுப்பியல், 1-4.
  12. இருபது சித்தர் பெரிய ஞானக்கோவை, ப.302.

துணை நூற்பட்டியல்:

உ.வே. சாமிநாதன்,               சங்கத்தமிழும் பிற்காலத்தமிழும்

                                தாம்சன், அச்சுக்கூடம், சென்னை.

தண்டபாணி சுவாமிகள்,         புலவர் புராணம், கேசரி அச்சுக்கூடம்

                               சென்னை, மூன்றாம் பதிப்பு,

இளவரசு, சோம,                இலக்கண வரலாறு, தொல்காப்பியர்   

                               நூலகம், சிதம்பரம், முதற்பதிப்பு,1963.

ச.பவாநந்தம்,                   பேரகத்தியத்திரட்டு, எஸ்.பி.ஸி.கே.

                               அச்சுக்கூடம், சென்னை, 1912. 

வேங்கடசாமி, சீனி.மயிலை,     மறைந்து போன தமிழ் நூல்கள்,

                               சாந்தி நூலகம், சென்னை, 1967.