ஜூலை 2024 இதழுக்கு ஆய்வுக்கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன

அழ.வள்ளியப்பாவின் சின்னஞ்சிறு பாடல்களில் குழந்தைகளின் மனவெளிப்பாடுகள்

முனைவர் அ.கமலம், உதவிப்பேராசிரியர், தமிழ் உயராய்வு நடுவம், டோக் பெருமாட்டி கல்லூரி, மதுரை 2 30 Apr 2021 Read Full PDF

                                     முனைவர் அ.கமலம்,

                                   உதவிப்பேராசிரியர்,

                                   தமிழ் உயராய்வு நடுவம்,

                                  டோக் பெருமாட்டி கல்லூரி        

                        மதுரை 2.

ஆய்வுச்சுருக்கம்:-

     குழந்தைப்பருவம் என்பது எதைப்பற்றியும் கவலைப்படாத பருவம். அப்பருவத்தில் ஓசைநிறைவுள்ள பாடல்கள் அதிகமாக இடம்பெறுகின்றன. அவற்றைக் குழந்தைகள் விளையாட்டின் பொழுது பாடுவது. ஓய்வான நேரங்களில் பாடுவது என இருவகையாகப் பாகுபடுத்துவர் டாக்டர் தி.நடராசன். குழந்தைப்பாடல்கள் பாடுவதில் வல்லவர் அழ.வள்ளியப்பா. குழந்தைக்கவிஞர் எனப் போற்றப்படுபவர். அவருடைய சின்னஞ்சிறு பாடல்கள் என்னும் தலைப்பில் அமைந்த பாடல்களிலிருந்து வெளிப்படும் குழந்தைகளின் மனஎண்ணங்களைப் பிரதிபலிப்பதாக இக்கட்டுரை அமைகிறது.

திறவுச் சொற்கள்:-

     குழந்தைப்பாடல்கள் - பொருண்மை – மனஎண்ணங்கள் - பயன்கள் - தற்காலக் குழந்தைகளின் இழப்புகள்

முன்னுரை:-

     நாட்டுப்புறப் பாடல் வகைகளில் ஒன்று குழந்தைப்பாடல்கள். இதனைக் குழந்தைக்காக மற்றவர்கள் பாடுவது. குழந்தைகள் சிறுவர்களாக வளர்ச்சி பெற்றுப் பாடுவது என வகைப்படுத்துவர் நாட்டுப்புறவியல் அறிஞர் டாக்டர் சு.சக்திவேல். இவை குழந்தைகளின் உள்ளத்தைப் புலப்படுத்துவனவாக அமைகின்றன. எளிதாகப் புரிந்து கொள்ளக்கூடிய வகையில் எளிமையும் இனிமையும் நிறைந்தனவாக அமைந்துள்ளன. இப்பாடல்கள்  விளையாட்டு மற்றும் ஓய்வுநேரங்களில் பாடப்படுவனவாகக் காணப்படுகின்றன. இக்;கட்டுரைக்கு ஆய்வுப்பொருளாக அமைந்தது அழ. வள்ளியப்பா அவர்களின் ‘சின்னஞ்சிறு பாடல்கள்’. இப்பாடல்களில் குழந்தைகளின் மனஎண்ணங்களை வெளிக்காட்டுவதாக இவ்வாய்வுக்கட்டுரை அமைகிறது.

குழந்தைப்பாடல்கள்:-

     நம் பழந்தமிழ் இலக்கியங்கள் குழந்தைச்செல்வம் பற்றி பல நல்ல பாடல்களைப் படைத்துள்ளன. சான்றாக, புறநானூறு பாடலை எடுத்துக்கொண்டால்,

          ‘குறுகுறு நடந்து சிறுகை நீட்டி

          இட்டும் தொட்டும் கௌவியும் துழந்தும்

          நெய்யுடை அடிசில் மெய்பட விதிர்த்தும்

          மயக்குறு மக்களை இல்லோருக்குப் பயக்குறை

          இல்லை தாம் வாழும் நாளே’1     

ஏனக் குழந்தைச்செல்வத்தின் உன்னதம் உணர்த்தப்படுகிறது. இத்தகைய குழந்தைப்பாடல்களை இருவகையாகப் பிரிப்பர்.

          ‘ஒன்று குழந்தைகள் பாடுவது. மற்றொன்று குழந்தைகளுக்காக மற்றவர்கள் பாடுவது. பெற்று வளர்த்த தாய், தந்தை, உடன்பிறந்த தமக்கை, பாட்டி முதலியோர் பாடுவர்.’2

குழந்தைப்பாடல்களின் அமைப்பு:-

     குழந்தைப்பாடல்களின் எளிய அமைப்பைக் கொண்டு அதனைப் புரிந்து கொள்ளலாம். ஈரடிப் பாடல்களும் நீண்ட பாடல்களும் உண்டு. சில பாடல்கள் வினா விடை முறையில் அமைந்திருப்பதையும் காணலாம். குழந்தைப்பாடல்களில் இயற்கைப் பொருட்களும் செயற்கைப் பொருட்களும் விளையாட்டும் வேடிக்கையும் பாடற் பொருளாகின்றன. சிறுவர் பாடல்களில் காக்கை கதை சொல்லும், கிளி பேசும், நிலவு விளையாடும்.

          ‘குழந்தை விளையாட்டுப் பாடல்களை உடற்பயிற்சி விளையாட்டுப் பாடல்கள் (Physical play songs)> வாய்மொழி விளையாட்டுப் பாடல்கள்(Verbal play songs) என இரண்டாகப் பகுக்கப்படுகின்றன.’3

சின்னஞ்சிறு பாடல்கள்:-

‘அழ. வள்ளியப்பா (நவம்பர் 7, 1922- மார்ச் 16, 1989) குழந்தை இலக்கியங்கள் படைத்த மிக முக்கியமான கவிஞர். 2,000 க்கும் மேலான குழந்தைகளுக்கான பாடல்கள் எழுதியுள்ளார்.’4

சமூகநடத்தைகள்:-

     சமூகநடத்தைகள் பற்றி உளவியலாளர் பல கருத்துகளைத் தெரிவிக்கின்றனர். சமூகத்தின் நடத்தை, ஒழுக்கக்கோட்பாடுகள் சிறு குழந்தைகளின் மனங்களில் மாற்றங்களை ஏற்படுத்தவல்லன. இதனை,

          “நல்லொழுக்க நடத்தையில் மனச்சாட்சி என்னும் உள்ளுணர்வு இன்றியமையாப் பங்கினைப் பெற்றுள்ளதாகும். இம்மனச்சாட்சியெனப்படுவதை ‘மேனிலை’ மனம் அல்லது ‘மிகைநிலை மனம்’ என்பதன் தொழிலாகும் என்று பிராய்டு போன்றோர் கருதுகின்றனர்.” 5

          “சமூகநடத்தை மதிப்புகள், தரங்கள் போன்றவை மேன்மன நிலைப்பகுதியில் எழுகிறது. மனச்சாட்சி, வாழ்க்கைக் குறிக்கோள்கள் ஆகியன மேன்மனநிலைப் பகுதியின் கூறுகளாகும். சமூகம் ஏற்காத பண்புகளைத் தடைசெய்தல், நல்லொழுக்கப் பண்புள்ள நடத்தையினை மேற்கொள்ள ‘ஈகோ’வினைத் தூண்டுதல், குறைபாடுகளற்ற நிறைவினை இலட்சியமாக்குதல் ஆகியன மேன்மன நிலைப்பகுதியின் முக்கிய செயல்களாம்”6

என உளவியலறிஞர்கள் மனிதர்களின் மனம் உண்மையுடையதாகத் திகழவும் சிறந்த மனிதர் சமுதாயம் உருவாகவும் மனச்சாட்சி மிக முக்கியம் என்கின்றனர். அத்தகையதொரு சிறந்த இளைய சமுதாயம் உருவாக, சின்னஞ்சிறு பாடல்கள்வழி பல கருத்துகளை முன்வைக்கிறார் குழந்தைக் கவிஞர்.

இறைவணக்கம்:-

     நூலின் தொடக்கத்தில் தொந்திக் கணபதியைச் சிறுவன் வணங்கி, வரம் கேட்பதாக அமைகிறது.

          ‘நல்லவன் என்னும் ஒருபெயரை

          நான்பெற நீவரம் தா தா தா’7

ஆதிமனிதன் இயற்கையின் மீது கொண்ட நம்பிக்கை, இயற்கையைப் படைத்த தெய்வத்தின் மீது கொண்ட நம்பிக்கை ஆகிய இரண்டையும் கடைபிடிக்கும்;போது சிறந்தவனாக இச்சமுதாயத்தில் வாழலாம் என்ற வித்து குழந்தைகளின் மனதில் விதைக்கப்படுவது இப்பாடல்வழி ஊட்டப்படுகிறது.

பகிர்ந்துண்ணல்:-

     தம்மிடம் உள்ள உணவுப்பொருளை அருகிலுள்ளவர்கள் உண்டனரா என அறிந்து அதன்பின் உண்ண வேண்டும். இதனை ஆத்திசூடியில் ஒளவை ‘ஐயமிட்டுண்’ என்கிறார். இதே போன்ற ஒரு கருத்தைப் மாம்பழம் பாடல் குழந்தைகளுக்கு உணர்த்துகிறது. இப்பாடலில் வரும், மல்கோவா மாம்பழம், தித்திக்கும் மாம்பழம், அல்வா போல மாம்பழம் ஆகிய வார்த்தைகள் குழந்தைகளுக்கு மாம்பழத்தைப் பிடிக்க வைக்கிறது. அதோடு,

          ‘தங்கநிற மாம்பழம்

          உங்களுக்கும் வேண்டுமா?

          இங்கே ஓடி வாருங்கள்

          பங்கு போட்டுத் தின்னலாம்.’8

என்ற பகிர்ந்துணர்வை ஊட்டுகிறது.

ஓசைநயம்:-

     பாடல்களில் இடம்பெறும் பொருள்களின் தன்மைக்கேற்ப ஓசை நயத்தை மாற்றிப் பாடல் எழுதியுள்ள பாங்கு போற்றத்தக்கது. ‘வண்டி வருகுது’ பாடலில் ஒவ்வொரு விதமான வண்டிக்கும் அதன் இயக்கத்திற்கேற்ப ஓசை மாறும் என்பதைக் குழந்தைகளுக்கு அறிவுறுத்தும் வண்ணம் இப்பாடல் அமைகிறது.

காளை மாட்டு வண்டி ‘கடகட’ என்றும் ‘டக்டக்டக்’ என்ற ஓசையோடு வருவது குதிரை வண்டி என்றும் சைக்கிள் வண்டி ‘டிரிங் டிரிங் டிரிங்’ என்றும் ‘பாம் பாம் பாம்’ எனப் பாய்ந்து வருவது மோட்டார் வண்டி எனவும் ரயில் வண்டி ‘குப் குப் குப்’ என்ற சத்தத்துடன் வரும் எனவும் பாடுகிறார்.

 ‘அதோ பாராய்’ என்ற மற்றொரு பாடலில் ஒவ்வொரு உயிரினத்தின் இயக்கத்தை ஒலிநயத்தோடு குறிப்பிடுகிறார். அதாவது,

‘குதித்து குதித்து ஓடும் குதிரை,

அசைந்து அசைந்து செல்லும் ஆனை

பறந்து பறந்து போகும் பருந்து

நகர்ந்து நகர்ந்து செல்லும் நத்தை

தத்தித் தத்திச் செல்லும் தவளை

என உயிரினங்களின் இயக்கத்தை ஒலிக்குறிப்போடு குறிப்பிட்டு,

          துள்ளித் துள்ளி நாமும்

          பள்ளி செல்வோம் வாராய்’9

பள்ளிக்குச் சென்று படிக்கும் ஆர்வத்தைத் தூண்டுவதாக இப்பாடல் அமைவதற்கு ஒலிக்குறிப்பும் காரணமாவதை அறியமுடிகிறது. இதே போல் ‘துட்டு தந்தால் லட்டு’ பாடலில் வந்த சொல்லே திரும்பத் திரும்ப வருகிறது. அதற்குக் காரணம் ஞாபகசக்தியை மேம்படுத்தி, மனவலிமை பெருக்குவதற்கு ஒரு மனப்பயிற்சியாக இப்பாடல் அமைவதை,

          ‘பட்டு பட்டு பட்டு

          பட்டு வாயில் பிட்டு

          துட்டு துட்டு துட்டு

          துட்டுத் தந்தால் லட்டு’ – ஒரு பொருளை வாங்கும் போது பணம் கொடுத்து, ஒன்றைக் கொடுத்து ஒன்றைப் பெறவேண்டும் என்ற நல்ல பழக்கத்தை இப்பாடல் வலியுறுத்துகிறது.

கற்பனைத் திறன்:-

     அழ.வள்ளியப்பா தமது பாடலில் ஓர்உயிரினம் பற்றிக் குறிப்பிட்டால் அதன் முழு தோற்றத்தையும் வருணித்து குழந்தைகளின் கற்பனைத் திறனை வளர்ப்பதை, ‘யானை வருது’ என்ற பாடல்வழி குறிப்பிட்டுச் செல்கிறார். யானை அசைந்து, கழுத்துமணியை ஆட்டி, காதைக் காதை அசைத்து, நெற்ற

pப்பட்டம் கட்டி, நீண்ட தந்தத்தோடு, தும்பிக்கையை வீசி, தூக்கி சலாம் போட்டு வருவதைப் பார்க்க வாருங்கோ எனக் குழந்தைகளை அழைத்து உற்சாகப்படுத்துவதாக அமைகிறது. ‘பார்க்க வாருங்கோ’ என ஒவ்வொரு வரியின் முடிவிலும் அழைப்பது மிகச் சிறப்பாக அமைந்திருக்கிறது.

     பூனையின் பழக்கவழக்கங்கள் முழுவதையும் ‘மியாவ் மியாவ் பூனையார்’ என்ற பாடலில் குறிப்பிடுகிறார்.

வினா விடை அமைப்பு:-

     வினாக்கள் கேட்டு குழந்தைகளின் மூளையில் சுறுசுறுப்பை ஏற்படுத்தி, புத்துணர்ச்சிக்குத் தூண்டும் வண்ணம் அமைவது இந்த வினாவிடை அமைப்பு முறை.

          ‘டக்டக் சத்தம் போடுமாம்

          தாவித் தாவி ஓடுமாம்

          கொள்ளும் புல்லும் தின்னுமாம்’10

 எனத் தொடங்கி குதிரையின் பல்வேறு செயல்பாடுகளை வரிகளாகக் கொடுத்து இறுதியில்,

          ‘அந்த மிருகம் என்னவாம்?

என வினா எழுப்பி அத்தனை செயல்பாடுகளுக்குமான விடை,

          ‘அதுவே குதிரை குதிரையாம்!’ எனப் பதிலுரைப்பது குழந்தைகளின் அறிதல் ஆர்வத்தைத் தூண்டும் வண்ணமாக அமைகிறது.  

உணவுப்பழக்கம்:-

     இன்றைய சூழலில் குழந்தைகளுக்கு உணவு ஊட்டுவதற்கு அலைபேசி, தொலைகாட்சி, இணையவழி விளையாட்டுகளைக் காட்டி உணவு புகட்டவேண்டிய இருக்கிறது. ஆனால் அழ.வள்ளியப்பா அவர்கள் ஒவ்வொரு காய்கறிகளையும் கூறி அதில் என்ன தயாரிக்கலாம் எனப் பட்டியலிடுகிறார்.

          ‘வாழைக்காய் வேணுமா?

          வறுவலுக்கு நல்லது.

          கொத்தவரை வேணுமா?

          கூட்டுவைக்க நல்லது.

          பாகற்காய் வேணுமா?

          பச்சடிக்கு நல்லது.’11

இன்றே சமையல் பண்ணலாம், இன்பமாக உண்ணலாம் என உணவருந்துதலில் உள்ள இனிமையை விளக்குகிறார். இப்பாடலுக்கு மேல் அமைந்துள்ள பாடத்தில் இருபிள்ளைகள் தரையில் அமர்ந்து வாழையிலையில் உண்பதாகக் காட்டியுள்ளார். உணவு உண்ணும் முறையை இவ்விதம் உணர்த்தியிருக்கிறார்.

இருப்பிடங்கள்:-

          உலகிலுள்ள ஊர்வன, நடப்பன, பறப்பன தொடங்கி ஒவ்வொன்றிற்கும் ஓர் இருப்பிடம் உண்டு. அவ்விருப்பிடங்கள் ஒவ்வொன்றும் தன்மையால் வேறுபடுவன என்பதை ‘வீடு எங்கே?’ பாடலில் கூறுகிறார்.

          ‘வண்ணக் கிளியே வீடெங்கே?

          மரத்துப் பொந்தே என்வீடு.

          தூக்கணாங்குருவி வீடெங்கே?

          தொங்குது மரத்தில் என்வீடு

          கறுப்புக் காகமே வீடெங்கே?

          கட்டுவேன் மரத்தில் என்வீடு.

          பொல்லாப் பாம்பே வீடெங்கே?

          புற்றும் புதருமே என்வீடு

          கடுகடு சிங்கமே வீடெங்கே?

          காட்டுக் குகையே என்வீடு

          நகரும் நத்தையே வீடெங்கே?

          நகருதே என்னுடன் என்வீடு’12

கிளி – மரப்பொந்திலும் தூக்கணாங்குருவி – தொங்கும் வடிவில் அமைக்கும் கூட்டிலும் சிங்கம் - காட்டிலுள்ள குகையிலும் நத்தை – தன்னுடனே வீட்டைச் சுமந்து செல்லும் எனவும் குறிப்பிட்டுச் சிறுவர்களுக்கு வாழிடம் பற்றித் தெளிவுறுத்துகிறார்.

முடிவுரை:-

     அழ. வள்ளியப்பா அவர்களின் சிறுவர் பாடல்கள், மனதில் நம்பிக்கை வளர்த்தல், அறிவுத்திறன் மேம்பாடு, நல்ல பழக்கவழக்கங்களைக் கற்றுக்கொள்ளுதல், பெரியோரை மதித்தல், இயற்கையைப் பேணுதல் போன்ற நல்ல பண்புகளை வளர்த்து நல்லதொரு தலைமுறைக்கு வழிகாட்டுகின்றன. இன்றைய சூழலிலுள்ள குழந்தைகள் தகவல் தொடர்புச் சாதனங்களைக் கண்டு பெறும் அறிவு ஒருபுறம் இருக்க, கண் குறைபாடுகள் ஏற்பட்டு சிறுவயதிலே மனஅழுத்தத்திற்கு ஆளாகும் நிலை உள்ளது. இவை போன்ற பாடல்களை அவர்கள் கற்கும் போது கூடுதல் நன்மைகள் ஏற்படும். மனரம்மியம், சுறுசுறுப்பு பெற்றுத் திகழ்வர்.

அடிக்குறிப்புகள்:-

1.    புலியூர்க்கேசிகன், புறநானூறு, பா.எ -188

2.   சு.சக்திவேல், நாட்டுப்புற இயல் ஆய்வு, ப. 47

3.   ஆறு.இராமநாதன், நாட்டுப்புறவியல் ஆய்வு, ப.48

4.   https://ta.wikipedia.org/wiki/

5.   எஸ். சந்தானம், கல்வியின் உளவியல் அடிப்படைகள், ப.333

6.   மேலது, ப.403

7.    (http://www.tamilvu.org/library/nationalized/pdf/82-a.zhavalliyappa/senanserupadalgal.pdf  g.1)

8.   மேலது, ப.2

9.   மேலது,  ப.6

10.   மேலது, ப.12

11.   மேலது,  ப.14

12.   மேலது,  ப.15

துணைநூல் பட்டியல்:

1.    சக்திவேல் சு., நாட்டுப்புற இயல் ஆய்வு, மணிவாசகர் பதிப்பகம், 2012

2.   சந்தானம் எஸ்.,கல்வியின் உளவியல் அடிப்படைகள், பழனியப்பா பிரதர்ஸ், மதுரை 1. முதற்பதிப்பு 1981

3. புலியூர்க்கேசிகன், புறநானூறு, செண்பா பதிப்பகம், சென்னை.

4. வள்ளியப்பா அழ., சின்னஞ்சிறு பாடல்கள் (பாடல்); 6ஆம் பதிப்பு 1992; குழந்தைப் புத்தக நிலையம், சென்னை; 26 பாடல்கள்

இணையதளம்:-

  1. https://ta.wikipedia.org/wiki/

2. http://www.tamilvu.org/library/nationalized/pdf/82

  1. a.zhavalliyappa/senanserupadalgal.pdf