ஜூலை 2024 இதழுக்கு ஆய்வுக்கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன

அணிகளின் தாய் - உவமையணி

ஜெ.சீதாலக்ஷ்மி, முனைவர் பட்ட ஆய்வாளர் (பகுதி நேரம்), சர் தியாகராயா கல்லூரி, சென்னை - 21 30 Apr 2021 Read Full PDF

        அணிகளின் தாய் - உவமையணி

கட்டுரையாளர்

ஜெ.சீதாலக்ஷ்மி,                       

முனைவர் பட்ட ஆய்வாளர் (பகுதி நேரம்)                              

சர் தியாகராயா கல்லூரி, சென்னை - 21.

நெறியாளர்:                                                  

முனைவர். ப. தனஞ்செயன்,

எம். ஏ., எம். ஃபில்., பி.எச்டி.

சர். தியாகராயா கல்லூரி

தமிழ்த் துறை

சென்னை - 21

                                                                                                                                      

                                                                             ஆய்வுச்சுருக்கம்:

     கவிதைக்கு அழகு அணி நயம். அதிலும் அணிகளின் தாய் எனப்படும் உவமையணியின் நயம் மிக உயர்ந்தது அத்தகைய உவமையணி காலந்தோறும் பெற்ற வளர்ச்சி, தொல்காப்பியர் கூறும் உவமவியல், உவமையின் பயனும் சிறப்பியல்புகளும் என ஓர் கட்டுரை எடுத்தியம்புவதே இந்த ஆய்வின் நோக்கமாகும்.

திறவுச் சொற்கள் :

ஒப்புமை , உத்தி , கவிதை, உவமையணி, அணி

முன்னுரை:

     யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல்

இனிதாவது எங்கும் காணோம் 1

என்றான் பாட்டுக்கொரு புலவன் பாரதி. மிகத் தொன்மையான அத் தமிழ் மொழி விரிந்த இலக்கணப் பரப்பைக் கொண்டது. அதாவது இலக்கணம் எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி என்னும் பாகுபாடுகளைக் கொண்டது. அணி என்பதற்கு அழகு என்று பொருள்.செய்யுளில் உள்ள சொல்லழகு, பொருளழகு முதலியவற்றை வரையறுத்துக் கூறும்.கவிஞர்கள் உவமைகள் மூலம் பொருள்களைத் தெளிவாகப் பிறர் உள்ளத்தில் பசுமரத்து ஆணி போல் பதிய வைக்கின்றனர். தமிழ் மொழியின் தொன்மையை ஆராயின்  அணியிலக்கணம் என்று தனியாகக் கிடையாது.

     இறையனாரகப் பொருள் உரையில் வரும்,’தமிழ்தான் நான்கு வகைப் படும்.எழுத்தும், சொல்லும், பொருளும், யாப்புமென’ என்னும் பகுதி அக்காலத்தில் தமிழ் இலக்கணத்தின் பிரிவு யாப்பினோடு கலந்திருந்தது என்று தெரிகிறது.ஆதலின் அக்காலத்தின் பின்னரே அணியிலக்கணம் தமிழில் தனியே அமைக்கப் பட்டதென்று கூறலாம் 2

பொருளணிகளில் தலைமை சான்ற உவமையணியிலிருந்து காலப் போக்கில் உருவகம், வேற்றுமை, ஒட்டணி முதலிய பல அணிகள் தோன்றின. இதனால் உவமை அணியைத் தாய் அணி என்றும் கூறுவர்.

உவமை அணியின் இலக்கணமும் விளக்கமும்:

     ஓரு பொருளுக்கும் மற்றொரு பொருளுக்குமிடையே உள்ள ஒப்புமையை எடுத்துக் கூறுவது உவமை அணி ஆகும்.பல பொருள்களுக்கு இடையே உள்ள ஒப்புமையும் கூறப் படலாம். பண்பு உவமை, தொழில் உவமை, பயன் உவமை என உவமை மூன்று வகைப்படும்.

     பண்பும் தொழிலும் பயனும் என்று இவற்றின்

     ஒன்றும் பலவும் பொருளோடு பொருள் புணர்ந்து

     ஒப்புமை தோன்றச் செப்புவது உவமை 3

என்ற தண்டி நூற்பா உவமை அணியின் இலக்கணத்தைத் தெளிவு பட விளக்குகிறது.

உவமை அல்லது உவமானம், பொருள் அல்லது உவமேயம், ஒத்த பண்பு, உவமை உருபு என உவமை அணியில் நான்கு உறுப்புகள் உள்ளன.

கவிஞர் விளக்கிக் கூறக் கருதும் பொருள், பொருள் அல்லது உவமேயம் எனப்படும். அப்பொருளை விளக்க அவர் இயைத்துக் கூறும் மற்றொரு பொருள் உவமை அல்லது உவமானம் எனப்படும்.

எடுத்துக் காட்டு:

     கயல் போன்ற விழி.

     இங்கு கவிஞர் விளக்கக் கருதிய பொருள் விழி. ஆகவே ‘விழி’ உவமேயம். அதை விளக்க அவர் இயைத்துக் கூறும் பொருள் கயல்.எனவே ‘கயல்’ உவமானம்.

     உவமேயத்துக்கும் உவமானத்துக்கும் பொதுவாக உள்ள இயல்பு ஒத்த பண்பாகும்.

எடுத்துக்காட்டு:

     பவளம் போலும் செவ்வாய்

     வாய்க்கும் பவளத்துக்கும் ஒத்த பண்பாகிய செம்மை இங்கு செவ்வாய் என்று சுட்டிக் காட்டப்பட்டிருக்கிறது.

     உவமானத்தையும் உவமேயத்தையும் இணைக்கும் போல, புரைய, ஒப்ப, மான, அன்ன போன்ற சொற்கள் உவமை உருபுகள் எனப்படும்.  

உவமையணி காலந்தோறும்பெற்ற வளர்ச்சி:

தொல்காப்பியர் காலம்:

முற்காலத்தில் மக்கள் கூறும் செய்திகளைத் தெளிவாகப் புரிய வைப்பதற்கு உவமைகளைப் பயன்படுத்தினர். போல, புரைய போன்ற உவம உருபுகள் இயல்பாக ஏற்பட்டன. தொல்காப்பியர் உவமையை அணி என்று எங்கும் குறிப்பிடவில்லை. ஆனால் தம் உவம இயலில் உவமயின் பாகுபாட்டையும், இன்னின்ன  ஒப்புமைப் பண்பிற்கு இன்னின்ன உருபுதான் வர வேண்டுமென்பதையும் விளக்கியுள்ளார்.

தொல்காப்பிய உவமவியல் அணியிலக்கணம் கூறப் புகுந்ததன்று. தொல்காப்பியர் உவமவியலுள் உவமைக்கே முதலிடம் தந்துள்ளார். 4

தொல்காப்பியர் உவமையின் பாகுபாட்டையும், உவமை தோன்றும் நிலைக்களன்களையும் கூறினாரே அன்றி உவமைக்கு இலக்கணத்தைக் கூறிற்றிலர். 5

அதன்படி, தொல்காப்பியர் உவமையை நான்காகப் பாகுபாடு செய்துள்ளார். வினை, பயன், மெய், உரு என்ற நான்கும் பற்றி உவமை கூறப் பெறும் என்று குறிப்பிட்டுள்ளார். இவை முறையே ‘புலியன்ன மறவன்’, ‘மாரியன்ன வண்கை’, ‘துடியன்ன இடை’, ‘பொன்போல் மேனி’ என்ற எடுத்துக்காட்டுகளால் அறியலாம். பிற்காலத்தில் தோன்றிய எல்லா அணி வகைகளையும் தொல்காப்பியத்தின் உவமவியலுள் அடக்கி விடலாமென்பர்.

சங்க காலம்:

     சங்க காலத்தில் அணி இலக்கண நூல் என்று எதுவும் தோன்றவில்லை. எனவே சங்கப் பாடல்களில் எண்ணற்ற உவமைகள் உபயோகப்படுத்தப் பட்டிருந்தாலும் அவை அணி என்று கூறப்படவில்லை. உருவகம், ஒட்டு, உள்ளுறை என்று மட்டுமே அமைந்துள்ளன. இந்தச் செய்தியை இலக்கிய வரலாற்று நூல்களால் நாம் அறியலாம். சங்க இலக்கியங்களில் புராணக் கதைகள் உவமையாகக் கூறப்பட்டுள்ளன.

பல்லவர் காலம்:

     சங்க காலத்துக்குப் பின் வந்த சமண சமயத்தைச் சார்ந்த களப்பிரர் என்ற அரச மரபினரின் ஆட்சியால் தமிழ் நாட்டில் தமிழ் இலக்கிய வளர்ச்சி தடைப்பட்டது என்பர். எனவே இவர்களது காலத்தை இருண்ட காலம் என்பது பொதுவான மரபு. தமிழகத்தில் களப்பிரர் ஆட்சிக்குப் பின் பல்லவர் ஆட்சி நிலவியது. கி. பி. 260 தொடங்கி 450 ஆண்டுகள் காஞ்சியைத் தலைநகராகக் கொண்டு நிலைபெற்றிருந்த பல்லவர் ஆட்சியில் சைவ நாயன்மார்கள் பாடல்களும், வைணவ ஆழ்வார்கள் பாடல்களும், உரை நூல்களும் பெருமளவில் தோன்றின.

     இராச சிம்ம பல்லவன் காலத்தில் காஞ்சியில் வாழ்ந்த தண்டி என்னும் புலவர் ’காவியா தர்சம்’ என்ற அணி இலக்கண நூலை வடமொழியில் இயற்றினார். அவர் உவமைகளை அணிகளாகக் கூறினார். இக்காலம் முதல் செய்யுட்களில் வரும் உவமைகள் அணியென்று வழங்கப்பட்டன.

சோழர் காலம்:

     விசயாலயன் வழி வந்த சோழர்கள் ஆழ்ந்த சிவ பக்தர்களாய் இருந்தனர். தேவார திருவாசகப் பாடல்களை ஆலயங்களில் ஒலிக்கச் செய்தனர். நாதமுனிகள், ஆழ்வார்களின் பாசுரங்களை ‘நாலாயிர திவ்வியப் பிரபந்தம்’ என்னும் பெயரில் தொகுத்தளித்தார்.

     வீர ராசேந்திர சோழன் காலத்தில்’வீரசோழியம்’ என்ற இலக்கண நூல் தமிழில் இயற்றப்பட்டது. பொருட்புலம்பாட்டை மையலிட்டு அமைந்த தொல்காப்பிய உவமை, இலக்கிய அலங்காரத்திற்குப் பயன் படுத்தப்பெறும் சமஸ்கிருத உபமாவுக்கு நிகராகக் கருதும் சூழ்நிலை உருவாயிற்று. தொல்காப்பியத்தில் அணியாகக் குறிக்கப் பெறாத உவமையை அணியாகக் கருதும் மரபு இளம்பூரணரால் தொடங்கப் பெற்றது. 

 

 

தண்டியலங்காரம்:

     ஐவகை இலக்கணங்களுள் அணியிலக்கணத்தைத் தனியே உணர்த்தும் இத் தமிழ் நூல் காவியாதரிசனமென்னும் வட நூலின் மொழிபெயர்ப்பு.மேலும் அணியியல் என்னும் மறு பெயரையும் உடையது. பொதுவியல், பொருளணியியல், சொல்லணியியல் என மூன்று இயலாகப் பகுக்கப்பட்டு 125 சூத்திரங்களை உடையது. இந்நூலாசிரியர் சோழ நாட்டவர், கம்பர் மகனார் அம்பிகாபதியின் குமாரர் – தண்டி என்பவர் என்று சிலர் கூறுவர். தண்டியலங்காரம், “பண்பு, தொழில், பயன் என்பனவற்றைக் காரணமாகக் கொண்டு ஒரு பொருளை மற்றொன்றோடு இயைத்து ஒப்புமை தோன்றச் செப்புவது உவமையணி” என்று கூறும்.

     அடியார்க்கு நல்லாரும் சில சூத்திரங்களைஅணியியலென்னும் பெயரோடு எடுத்துக் காட்டுகின்றார். அவர் கூறுவன யாவும் தமிழ்த் தண்டியலங்காரத்தில் உள்ளவை. ஆதலின் அவர் தண்டியலங்காரத்தையே அணியியலெனக் கொண்டாரென்று தோன்றுகிறது. 6

     இதற்குப் பின் மாறனலங்காரம், இலக்கண விளக்கம் முதலிய நூல்கள் தோன்றின. வீரசோழியம், தண்டியலங்காரம், மாறனலங்காரம் ஆகிய நூல்கள் பல்வேறு அணிகளைப் பற்றி விரிவாகக் கூறினாலும், அடிப்படையான உவமையை மறப்பதில்லையாதலால் தொல்காப்பியமே இவற்றிற்கு அடிப்படையாக அமைகிறது எனக் கருதலாம்.

மரபும் மாற்றமும்:

     மக்களின் சிந்தனைக்கும் திறனுக்கும் ஏற்ப ஒவ்வொறு களத்திலும் மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. அணியிலக்கணத்தின் மரபிலும் மாற்றங்கள் நிகழ்ந்தன. தொல்காப்பியர் சொன்ன உவமவியல் விரிந்து பல அணிகளாயின. முகத்துக்குத் தாமரை, பல்லுக்கு முல்லை என்பன போல இன்னதற்கு இன்னது மரபு நிலை என்று இருந்தாலும், இதை மீறிப் பல புதிய உவமைகள் கூறப்பட்டு வருகின்றன. மனிதனின் மனக் கற்பனை, மன வளர்ச்சி, அறிவின் வளர்ச்சி, ஆகியவற்றிற்கேற்றபடி உவமைகளும் பல்வேறு மாறுதல்களை அடைந்துள்ளன. தாயாகிய உவமைக்குப் பல பிள்ளைகள் பிறப்பது சாத்தியமாதலால் இந்தப் புதிய உவமைகளின் மாற்றமும் வளர்ச்சியும் தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு அடிக்கோலாக அமையும் என்பது திண்ணம்.

தொல்காப்பியர் கூறும் உவமவியல்:

     தமிழின் தொன்மையைக் காப்பாற்றி, நிலை நாட்டுவதற்காக எழுதப்பட்டது தொல்காப்பியம்.தொல்காப்பியர் உவமையை, பொருளை விளக்கும் கருவி  என்று கூறுகிறார். விளக்க இயலாத தத்துவங்களையும், உணர்ச்சியின் ஆழ, அகலங்களையும், கருத்துகளின் இன்றியமையாத தன்மைகளையும், விளக்குவதற்கு உவமைகள் பெரிதும் பயன்படுகின்றன. கவிதையின் இனிமையும், உணர்ச்சியும், ஆழ்பொருளும் உவமை மூலம் சிறப்பதாகக் கூறுவர். இங்கு தொல்காப்பியர் கூறும் உவமவியலின் கருத்துகள் சிலவற்றைக் காண்போம்.

  1. வினையாகிய தொழில், பயன், மெய்யாகிய வடிவம், உருவாகிய நிறம் ஆகிய வகைகளில் உவமை தோன்றும்.

வினை, பயன், மெய், உரு என்ற நான்கே

வகை பெற வந்த உவமத் தோற்றம் 7

  1. கவிதையில் உவமையாக வரும் பொருள் சிறப்புடையதாகவும், உயர்ந்த கருத்தைத் தருவதாகவும் இருத்தல் வேண்டும்.

உயர்ந்ததன் மேற்றே உள்ளுங் காலை 8

  1. ஒரு பொருளின் சிறப்பு, அதன் நலன், அதன் மேல் கொண்டுள்ள பேரன்பு, அதன் வலிமை என்ற நான்கும் உவமை தோன்ற நிலைக்களனாக அமையும்.

சிறப்பே நலனே காதல் வலியொடு,

அந்நால் பண்பும் நிலைக்களம் என்ப. 9

  1. உவமத்தைச் சுட்டிக் கூறவில்லையெனில், பொருள்களைப் புணர்த்திக் கொள்ளலாம். உவம உருபு தொக்கி நின்றால், தொகை உவமை என்பர். இவ்வாறு உருபு வெளிப்படையாக இல்லாமல், உவமிக்கப்படும் பொருளை எதிர்காட்டுவதால், சுட்டிக் கூறா உவமம் என்று தொல்காப்பியர் கூறினார்.

சுட்டிக் கூறா உவம மாயின்,

பொருளெதிர் புணர்த்துப் புணர்ந்தன கொளலே.10

  1. உவமானமும் பொருளும் தம்முள் ஒத்து அமைதல் வேண்டும்.

உவமையும் பொருளும் ஒத்தல் வேண்டும் 11

மயக்கமற்ற சிறப்பு நிலையால் உவமிக்கப்படும் பொருளையே உவமமாகக் கூறினாலும் அது உவமமாகும்.

பொருளே உவமம் செய்தனர் மொழியிலும்

மருளறு சிறப்பின் அஃது உவமமாகும். 12

உவம உருபுகள்:

    அவைதாம்,

அன்ன ஏய்ப்ப உறழ ஒப்ப,

என்ன மான என்றவை எனாஅ,

ஒற்ற ஒடுங்க ஒட்ட ஆங்க,

என்ற வியப்ப என்றவை எனாஅ,

எள்ள விழைய இறப்ப நிகர்ப்பக்

கள்ளக் கடுப்ப ஆங்கவை எனாஅக்

காய்ப்ப மதிப்ப தகைய மருள,

மாற்ற மறுப்ப ஆங்கவை எனாஅப்

புல்லப் பொருவப் பொற்பப் போல,

வெல்ல வீழ ஆங்கவை எனாஅ

நாட நளிய நடுங்க நந்த,

ஓடப் புரைய என்றவை எனாஅ,

ஆறு ஆறு அவையும் அன்ன பிறவும்,

கூறுங்காலைப் பல்குறிப் பினவே. 13

என்று தொல்காப்பியர் 36 உவம உருபுகளைக் கூறியுள்ளார்.

     உவமைகளை விளக்க வரும் உவம உருபுகள் யாவை என்பதைத் தொகுத்துக் கூறுவது இலக்கண நூல்களின் மரபு. தொல்காப்பியரும் தற்காலத்து நிலவிய உவம உருபுகளைத் தொகுத்துள்ளார். அவரால் விடுபட்டவையும், பிறவும் பின் வந்த உரையாசிரியர்களால் தொகுத்துக் காட்டப் பெறும். தொல்காப்பியத்துள் காணப்படும் ‘அன்னவும் பிறவும்’, ‘பிற’ போன்றமையும் சொற்கள் வருங்கால இலக்கண அமைவுகளைத் தழுவிக் கொள்வன போல் காணப்படுகின்றன.” 14

     வினை, வினைக் குறிப்பு, நன்மை, தீமை, வடிவு, அளவு,நிறம், குணம் என முன்பு வினை, பயன், வடிவு, எண்ணம் எனப்பட்ட நான்கு உவமங்களும் எட்டாகும் நிலைக்களன் என்பது கருத்து.

     “நாலிரண் டாகும் பாலுமா றுண்டே15

உவமையின் உயர்வும் பயனும்:

     இலக்கியக் கூறுகளுள் உவமை தலையாய கூறாகும். உவமையை ஆளும் புலவருடைய கற்பனைத் திறன் வெளிப்படும்; அவர்தம் கூர்ந்து நோக்கும் திறன் புலப்படும்; அப்புலவருக்குள்ள உலகியல் அனுபவங்கள் வெளிப்படும்; மேலும் கவித்துவத்துக்குரிய அழகுணர்ச்சியும் தலைகாட்டும்; தெரியாதவற்றைத் தெரிய வைக்கும் உவமை.  16

 என்ற கூற்றால் உவமையின் சிறப்பை அறியலாம்.

     உவமிக்கப்படும் பொருளை விட உவமை உயர்ந்ததாக இருக்க வேண்டும் என்பதைத் தொல்காப்பியத்தின் உவமவியலில் கண்டோம். அவ்வுயர்ந்த உவமையால் மனிதனின் பண்புகளும், ஒழுக்கமும் மேலும் உயர வேண்டும் என்பதே அதன் உள் நோக்கம். இதுதான் உவமையின் சிறந்த பயனாகவும் இருக்க முடியும். பாடல்களின் திரண்ட கருத்தைத் தெள்ளத் தெளிவாக உணர்ந்து இன்பம் பெற உவமைகள் பெரிதும் உதவி புரிகின்றன.

     உவமை என்பது கவிகளின் அனுபவப் பொருளாகும்: பொருள் என்பது அவன் காணும் புதிய பொருளாகும். அவன் ஏற்கனவே கண்டு வைத்த பொருளைப் புதிதாகக் காணும் பொருளோடு பொருத்தி வைத்து அப்பொருளின் உயர்வு தாழ்வுகளை அளந்து அறிவிக்கின்றான் எனக் கூறுவர். பொதுவாகப் பொருளின் சிறப்பை வற்புறுத்தவே உவமை அமைக்கப்படுகிறது. அதன் உயர்வைக் காட்ட அதனினும் உயர்ந்த பொருளையே வரையறையாக அமைக்க வேண்டியுள்ளது. எனவே உவமை, பொருளை விட உயர்ந்ததாக இருக்க வேண்டும் என்று எதிர் பார்க்கப்படுகறது. 17

முடிவுரை:

     பெருமையாகப் பேசப்படும் அணிகளில் உவமை அணி என்பது போற்றற்குரியதாகும். சொற்சுவை, பொருட்சுவை போன்ற பலவிதமான உத்திகளைக் கொண்டு ஓர் இலக்கியம் மக்கள் மனதில் நீங்கா இடம் பெற வேண்டுமெனில் அதில் உவமை மிகத் திறமையாகக் கையாளப்பட்டிருக்க வேண்டும்.கவிதைகளுக்கு உவமைகள் உரமாக உதவுகின்றன.

     வடிவாலும் உருவாலும் பண்பாலும் பிறவற்றாலும் பெரும்பான்மையான பொருள்கள் தொடர்புற்றிருத்தலை அறியும் அளவிற்கேற்ப நம்முடைய அறிவும், ஆழமும், அகலமுமுடையதாகின்றது. சில பொருள்களிடையே இவ்வொப்புமையைப் புலன்களால் அறிதல் கூடும். சிலவற்றிடம் இஃது அறிவின் துணை கொண்டு மட்டுமே அறிதல் இயலும். இன்னும் சில சமயங்களில் ஆழ்ந்து சிந்தித்தும் ஒரே வழி அநுபவித்தும் பொருள்களிடம் இவ்வொப்புமையைக் காணவும் நேரிடும். பொருள்களிடையே காணப்பெறும் இவ்வொப்புமையைக் கவிஞன் கண்ணால் கண்டும், காதால் கேட்டும், அறிவால் அறிந்தும், வாழ்க்கையில் அநுபவித்தும் அறிந்து கூறுகிறான். இவ்வாறு கவிஞனின் ஒப்பு நோக்கும் முயற்சி கவிதையைச் சிறப்புடையதாக்குகின்றது. 18

என்ற பேராசிரியர் ந.சுப்புரெட்டியாரின் கருத்து உவமையின் பெருமைக்கு அணி சேர்க்கும் வண்ணமாக அமைந்து மிளிர்கின்றது.

சான்றெண் விளக்கம்:

  1.  வெற்றியழகன், (தொகுப்பாசிரியர்), பாரதியார் கவிதைகள், பக்கம் - 30
  2. கி. வா. ஜகந்நாதன், தமிழ்க் காப்பியங்கள், பக்கம் - 40, 41
  3. கொ. இராமலிங்கத் தம்பிரான், தண்டி நூற்பா 31, தண்டியலங்காரம் உரையுடன், பக்கம் - 38
  4. அ. அழகிரிசாமி, காலந்தோறும் தமிழ், பக்கம் - 53
  5. சா. கிருட்டிண மூர்த்தி, இளம்பூரணர் உரை, பக்கம்- 134
  6. கி. வா. ஜகந்நாதன், தமிழ்க் காப்பியங்கள், பக்கம் - 41
  7. ச. வே. சுப்பிரமணியன், தொல்காப்பிய நூற்பா 1222, தொல்காப்பியம் விளக்கவுரை, பக்கம்- 350
  8. ச. வே. சுப்பிரமணியன், தொல்காப்பிய நூற்பா 1224, தொல்காப்பியம் விளக்கவுரை, பக்கம்- 350
  9. ச. வே. சுப்பிரமணியன், தொல்காப்பிய நூற்பா 1225, தொல்காப்பியம் விளக்கவுரை, பக்கம் -350
  10. ச. வே. சுப்பிரமணியன், தொல்காப்பிய நூற்பா 1228, தொல்காப்பியம் விளக்கவுரை, பக்கம் -351
  11. ச. வே. சுப்பிரமணியன், தொல்காப்பிய நூற்பா 1229, தொல்காப்பியம் விளக்கவுரை, பக்கம் -351
  12. ச. வே. சுப்பிரமணியன், தொல்காப்பிய நூற்பா 1230, தொல்காப்பியம் விளக்கவுரை, பக்கம் -351
  13. ச. வே. சுப்பிரமணியன், தொல்காப்பிய நூற்பா 1232, தொல்காப்பியம் விளக்கவுரை, பக்கம் - 351, 352
  14. சா. கிருட்டிண மூர்த்தி, இளம்பூரணர் உரை, பக்கம் -135
  15. ச. வே. சுப்பிரமணியன், தொல்காப்பிய நூற்பா 1232, தொல்காப்பியம் விளக்கவுரை, பக்கம் - 352
  16. இரா. கு. நாகு, கோதை தமிழ், பக்கம் – 63
  17. ரா. சீனிவாசன், சங்க இலக்கியத்தில் உவமைகள், பக்கம் - 2
  1. ந. சுப்புரெட்டியார், பாட்டுத் திறன், பக்கம் - 241

துணை நூற்பட்டியல்:

  1. அழகிரி சாமி. அ.  காலந்தோறும் தமிழ், எழில் பதிப்பகம், விருத்தாசலம், முதற்பதிப்பு – 1999.
  2. இராமலிங்கத் தம்பிரான். கொ. (பதிப்பசிரியர்), தண்டியலங்காரம் உரையுடன் (சுப்பிரமணிய தேசிகர் உரை), சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை – 18, 21ம் பதிப்பு – 2004.
  3. கிருட்டிண மூர்த்தி. சா. இளம்பூரணர் உரை, பாண்டியன் பதிப்பகம், தஞ்சாவூர், முதற்பதிப்பு – 2002.
  4. சீனிவாசன் ரா. சங்க இலக்கியத்தில் உவமைகள், அணியகம், சென்னை, இரண்டாம் பதிப்பு – 1979.
  5. சுப்பிரமணியன் ச. வே. தொல்காப்பிய விளக்கவுரை, மெய்யப்பன் பதிப்பகம், சிதம்பரம் – 608001, மூன்றாம் பதிப்பு – 2018.
  6. சுப்புரெட்டியார். ந. பாட்டுத்திறன், ஸ்டார் பிரசுரம், சென்னை, முதற்பதிப்பு – 1992.
  7. நாகு. இரா. கு. கோதை தமிழ், திருவேங்கடம் வெளியீடு, சென்னை, முதற்பதிப்பு – 2002.
  8. வெற்றியழகன் (தொகுப்பாசிரியர்), பாரதியார் கவிதைகள், ராமையா பதிப்பகம், சென்னை – 14, முதற்பதிப்பு – 2008.
  9. ஜகந்நாதன் கி. வா. தமிழ்க் காப்பியங்கள், அமுத நிலையம் லிமிடெட், சென்னை, முதற்பதிப்பு – 1955.