ஜூலை 2024 இதழுக்கு ஆய்வுக்கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன

காத்தவராயன் கதைப்பாடல் காட்டும் வாழ்வியல் - “FOLKLORE IN KATHAVARAYAN’S BALLADS”

திருமதி அ.கீதா, முனைவர்பட்ட ஆய்வாளர்(பகுதி நேரம்), தமிழ்த்துறை, பெரியார் அரசு கலைக்கல்லூரி, கடலூர்-01 30 Apr 2021 Read Full PDF

கட்டுரையாளர் :

திருமதி அ.கீதா,

முனைவர்பட்ட ஆய்வாளர்(பகுதி நேரம்),

தமிழ்த்துறை,

பெரியார் அரசு கலைக்கல்லூரி, கடலூர்-01,

நெறியாளர்:

முனைவர் இரா.மனோகரன்,

உதவிப் பேராசிரியர்

பெரியார் அரசு கலைக்கல்லூரி, கடலூர்-01,

 

                                                 

Abstract:

            Literature is a reflection of life. Folk literature and depicts the lifestyle of rural people and their backgrounds. Ballads is a genre among the folk literature. Ballad is a form of narrative verse along with music. Unique and distinguished focus on love, charity, truth, justice, types of education systems, music, and art forms in kathavarayan’s Ballads are given in this research paper. This paper also vividly explains kathavarayan’s Ballads aspects on rural people’s lifestyle including food , hospitality, dress and ornaments, women empowerment, faith and beliefs, sports and other rich cultural norms and traditions.

ஆய்வுச்சுருக்கம்:

            வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் கண்ணாடி இலக்கியம் என்பர். அந்த வகையில் நாட்டுப்புற இலக்கியங்கள் நாட்டுப்புற மக்களின் வாழ்க்கையைச் சித்தரித்து காட்டுகின்றது. நாட்டுப்புற இலக்கியங்களுள் கதைப்பாடலும் ஒன்றாகும். கதையைப் பாடலாகப் பாடுவது கதைப்பாடல் ஆகும்.  காத்தவராயன் கதைப்பாடலில் காணப்படும் அன்பும் கொடையும், உதவியும் தானம் செய்தலும், வாய்மையும் நீதியும், கல்வி, இசை, ஓவியம், உணவும் விருந்தோம்பலும், மஞ்சள் தேய்த்து நீராடலும் ஆடை ஆபரணங்களும், மகளிர் வீரம், விளையாட்டு, நிலையாமை ஆகிய வாழ்வியல் செய்திகளை இவ்வாய்வு ஆராய்ந்து கூறுகின்றது.

முக்கிய சொற்கள்: (Important Words)

கதைப்பாடல் - Ballads

காத்தவராயன் - Kathavarayan

கல்வி - Education

இசை - Music

ஓவியம்- Art

மஞ்சள்- Manjal

நம்பிக்கைகள் - Beliefs

விளையாட்டு- Sports

நிலையாமை- Transience

முன்னுரை: (Introduction)

              வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் கண்ணாடி இலக்கியம் என்பர். அந்த வகையில் நாட்டுப்புற இலக்கியங்கள் நாட்டுப்புற மக்களின் வாழ்க்கையைச் சித்தரித்து காட்டுகின்றது. நாட்டுப்புற இலக்கியங்களுள் கதைப்பாடலும் ஒன்றாகும். கதையைப் பாடலாகப் பாடுவது கதைப்பாடல் ஆகும். கடந்த நூற்றாண்டுகளைப் பொறுத்தவரை கதைப்பாடல்கள் ஒரு நல்ல முறையான மக்கள் தொடர்புச் சாதனமாக விளங்கி வந்துள்ளன. கதைப்பாடல்கள் மக்களின் சிறந்த பொழுதுபோக்காக இருந்துவந்துள்ளன. 16 –ஆம் நூற்றாண்டு முதல் 19-ஆம் நூற்றாண்டு வரை உள்ள காலகட்டத்தைக் கதைப்பாடல்கள் தோற்றம் பெற்றக் காலமாக அறிஞர்கள் கூறுவர். காலம் காலமாக மாறிவரும் பண்பாட்டு இயல்புகளைக் காலமாற்றத்திற்கு தக்கவாறு அறிவிக்கும் கருவி கதைப்பாடல் என்றும் கொள்ளலாம். பாமர மக்களின் வாழ்க்கை முறைகளையும் இயல்புகளையும் பதிவு செய்து வைத்துள்ள சாதனம் கதைப்பாடல் எனலாம். கதைப்பாடல்களைப் பொதுவாக மூன்று பிரிவுகளுக்குள் அடக்கலாம். அவை 1.வரலாற்றுக் கதைப்பாடல், 2.புராண, இதிகாச, தெய்வீகக் கதைப்பாடல், 3.சமூகக் கதைப்பாடல் என்பனவாகும். 500 க்கும் மேற்பட்ட கதைப்பாடல்கள் உள்ளன. சமூகக் கதைப்பாடல்களாகத் தோன்றி புராணக் கதைப்பாடலாக நிலைபெற்றுள்ள  கதைப்பாடல் காத்தவராயன் கதைப்பாடலாகும். இங்கு நா.வானமாமலை அவர்கள் பதிப்பித்த ”காத்தவராயன் கதைப்பாடல்” மற்றும்  ஆர்.ஜி.பதி. கம்பெனி பதிப்பித்துள்ள ”புகழேந்திப்புலவர் இயற்றிய காத்தவராய சுவாமி கதை” என்னும் இரண்டு கதைப்பாடல் நூல்களில் இடம்பெற்றுள்ள வாழ்வியல் சிந்தனைகளை இவ்வாய்வு ஆராய்ந்து கூறுகின்றது.

காத்தவராயன் கதைச்சுருக்கம்: (Kaathavarayan synopsis)

            காத்தவராயன் வரலாறு கதை வடிவம் பெற்றது விசயநகரக் காலத்திற்கு முன்பேயாகும். திருச்சிராப்பள்ளியை ஆண்ட மன்னனிடத்தில் ஊர்க்காவல் அலுவலராகப் பணியாற்றியவர் சேப்பிள்ளை என்பவர். இவருக்கு குழந்தைச் செல்வம் இல்லாமையினால் தாழ்ந்த குலமாகக் கருதப்பெற்ற பறையர் குலத்தில் பிறந்த ஆண்குழந்தையைத் தத்து எடுத்துக்கொண்டார். பரிமணம் என்ற பெயர் சூட்டி வளர்த்தார். பரிமணம் அழகும் வீரமும் இசைப்புலமையும் மிக்கவனாக வளர்ந்தான். கிண்ணாரம் என்னும் இசைக்கருவியை மீட்டுவதில் மிகச்சிறந்தவனாகத் திகழ்ந்தான். இவனது கிண்ணார இன்னொலியின் வயப்பட்டு மறையவர் குலமகள் ஆரியமாலை இவன் மீது மையல் கொண்டாள். இருவரும் ஊரைவிட்டு வெளியேறி வாய்த்தலை எனுமிடத்தில் உள்ள முதலைப்பாருவில் மணம் புரிந்து கொண்டனர். இதையறிந்த மறையவர்கள் வருணாசிரமதர்மம் சீர்குலைந்துவிடக்கூடாது என்று மன்னனிடம் முறையிட்டனர். மேலும் இதுபோன்ற செயல் எதிர்காலத்தில் நிகழ்ந்துவிடக்கூடாது என்பதில் மறையவர்கள் மிகவும் கவனமாக இருந்தனர். ஆகவே காத்தவராயனுக்குக் கொடுக்கும் தண்டனை அனைவருக்கும் பாடமாக அமைய வேண்டும் என்று எண்ணி அதற்கு மன்னனையும் உடன்பட வைத்தனர். அவர்களின் கருத்தின்படி ஆரியமாலையை மணந்த காத்தவராயனைத் தேடிப்பிடித்து வன்கழுவேற்ற ஆணையிடுகிறான். மன்னனின் ஆணையையேற்று நாடு காவல் அலுவலர் தலைவரான சேப்பிள்ளையார் தன் வளர்ப்பு மகன்  காத்தவராயனைத் தேடி அழைத்து வந்து மன்னர் முன் கொண்டு நிறுத்துகிறார். விசாரணையில் காத்தவராயன் தன் குடிப்பிறப்பு முதல் சாபம் பெற்றது வரையில் தெரிவிக்கின்றான். அதனைக் கேட்டு மன்னன் விடுதலை செய்தான். எனினும் தான் அரனிட்ட சாபத்திற்காக கழுவேறிக் கைலாயம் மீளவிருப்பதாகவும் கூறி காத்தவராயன் கழுவேறுகிறான்.

           ஆனால் கடுமையான சாதிக்கட்டுப்பாடு நிலவிய அந்நாளில் பரிமணம் என்ற தாழ்ந்த சாதியைச் சார்ந்தவன் ஆரியமாலை என்ற பிராமணப் பெண்ணைக் காதலித்து மணந்த குற்றத்திற்காக அந்நாளில் மன்னனால் கழுவேற்றப்பட்டான் என்பதே உண்மை வரலாறாகும்.

            பின்னர் இம்மாவட்டத்து மக்கள் காத்தவராயனைக் காவல் தெய்வமாகக் கொண்டு வழிபட்டு வருகின்றனர். காமாட்சி அம்மனின் புதல்வனாக காத்தவராயன் மக்களால் கருதப்பெறுகிறான். ஆகவே ஒவ்வொரு அம்மன் கோயிலிலும் காத்தவராயனுக்குத் தனியிடம் கோவிலினுள் உள்ளது. காத்தவராயன் கழுவேற்றப்பட்ட நிகழ்ச்சியை ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதம் ஒருநாள் விழாவாக நினைவு கூர்கின்றனர்.

         காத்தவராயனைக் கழுவேற்றிய இடம் உப்பங்கழி கழுமேடை என்ற பகுதி திருச்சிராப்பள்ளி மாவட்டம் பாச்சூர் எனும் ஊரின் புறத்தே உள்ளது. அங்கு காத்தவராயன் நினைவிடம் உள்ளது. அதன் முன்பு ஆண்டுதோறும் கழுவேற்ற விழா மக்களால் நடத்தப்பெறுகின்றது.

         ”புகழேந்திப்புலவர் இயற்றிய காத்தவராய சுவாமி கதை” என்னும் நூலில் காத்தவராயனின் ஆறு பிறப்பு, காத்தவராயன் கயிலாயத்தில் ஏழு கன்னிகளுள் இளையக் கன்னியால் சாபம் பெறுதல், மலையாள தேசத்து சின்னானுடன் நட்பு, காத்தவராயன் ஏழாம் பிறப்பில் 12 வனங்களாக அமைத்து பாடப்பட்டுள்ள காட்சிகளில் ஆரியமாலையை மணக்க முயலுதல், 13 –ஆவது வனத்தில் காத்தவராயன் கழுவேறி மீளுதல் , இறுதியில் ஆரியமாலை, கருப்பழகி, உகந்தழகி, அன்னமுத்து ஆகிய நான்கு பெண்களையும் காத்தவராயன் மணத்தல் என்னும் பொருண்மையில் காத்தவராயன் கதை பாடப்பட்டுள்ளது.

காத்தவராயன் கதைப்பாடல் காட்டும் வாழ்வியல்:

(Folklore in Kaathavarayan’s Ballads)

        1.அன்பும் கொடையும்

        2.உதவியும் தானம் செய்தலும்

        3.வாய்மையும் நீதியும்

        4.கல்வி, இசை, ஓவியம்

        5.உணவும் விருந்தோம்பலும்

        6.மஞ்சள் தேய்த்து நீராடலும் ஆடை ஆபரணங்களும்

        7.மகளிர் வீரம்

        8.நம்பிக்கைகள்

        9.விளையாட்டு

       10.நிலையாமை

ஆகிய தலைப்புகளின் கீழ் காத்தவராயன் கதைப்பாடல் காட்டும் வாழ்வியல் தகவல்களைக் காண்போம்.

1.அன்பும் கொடையும்: (Love)

              அருமையான உயிருக்கு உடம்போடு பொருந்திய தொடர்பானது அன்போடு பொருந்தி வாழும் வாழ்க்கைக்காகவே என்பார் வள்ளுவர்.

            அன்போடு இயைந்த வழக்கென்ப ஆருயிர்க்கு

             என்போடு இயைந்த தொடர்பு. (குறள்-7Ӡ )

உள்ளத்தில் அன்பு உள்ளவர்களே உயிரோடு வாழ்பவராகக் கருதப்படுவர்.  காத்தவராயன் கதையில் வரும் ஆரியப்புர்ராசன் தன்னுடைய குடிமக்கள் மீதும், நாடு காவல் அதிகார் சேப்பிள்ளையானின் மீதும் அதிக அன்பு காட்டினான் என்பதையும் , சேப்பிள்ளையானின் மீது இருந்த நம்பிக்கையால் அரசுக்காவலை முழுமையாகவே அவனுக்கு கொடுத்து அவன் குலம் தழைக்க உதவினான் என்பதையும்,

          அருமையுடன் எங்களுக்கு அரசு காவல் கொடுத்தீர்

           பெருமையுடன் எங்களுக்குப் பேரரசும் கொடுத்தீர்

           கொப்புடனே எங்கள் குடி குலமெல்லாம் தழைக்கவே

           சேப்பிள்ளையான் காவலென்றால் சீமையெல்லாம் கொண்டாட

           பேரும் கொடுத்தீர் பெரிய தனமும் கொடுத்தீர்.

                                                                    –(காத்.கதை.பாடல்.பக.-14)  

என்னும் சேப்பிள்ளையானின் கூற்றின் மூலம் அறியலாம்.

            மன்னன் மக்கள் மீது அன்பு காட்டினான்  என்பதை,

     ”கீர்த்திப் பிரதாபமுள்ள கிருபா சமுத்திரரே –(காத்.கதை.பாடல்.பக்.-14)

என்னும் அடியால் அறியலாம்.

        இரக்க குணத்துடன் வேண்டுபவர்க்கு பணம், பொருள் முதலியன கொடுத்தல் கொடை ஆகும். ஆரியப்புர்ராசன் கர்ணன் போல் கொடை அளிக்கும் குணம் கொண்டவன் என்பதை,

   வேதப் பிரதாபம் மிகுமறைனுல் வல்லவர்க்கு

     நீதிப் பிரதாபமுடன் நீயே கொடைக்கர்ணன்.–                                                                  

(காத்.கதை.பாடல்.பக்.-14) என்னும் அடிகள் உணர்த்துகின்றன.

          மன்னன் கைமாறு கருதாது பெய்யும் மழை மேகம் போன்று வாரி வழங்கி மக்களின் வறுமையைப் போக்கியவன் என்பதை, அடியார்களுக்கென்று அதிககலி தானோட

  மிடிதீர்க்க வந்த முகிலையொத்த கையோனே. –(காத்.கதை.பாடல்.பக்.-14)

என்று சேப்பிள்ளையான் கூறுவதிலிருந்து அறியமுடிகின்றது.

2.உதவியும் தானம் செய்தலும்: (Charity)

               ஒருவருக்கு உதவி செய்யும்போது அதற்கு உரிய பிரதிபலனும் நன்றியும் எப்போது கிடைக்கும் என்று கருதி செய்யக்கூடாது. தென்னை மரம் எப்படிப்பட்ட நீரை வேர் மூலமாக உண்டாலும் அதனைச் சுவையான இளநீராக மாற்றித் தந்துவிடும். அதுபோல ஒருவர்க்கு செய்த சிறு உதவியும் பெரிய விதத்தில் நமக்கு ஒரு காலம் நிச்சயம் நன்மை பயக்கும் என்பதை,

            நன்றி ஒருவர்க்குச் செய்தக்கால் அந்நன்றி

             என்று தருங்கொல்? என வேண்டாம் – நின்று

             தளரா வளர்தெங்கு தாளுண்ட நீரைத்

             தலையாலே தான்தருத லால். –(மூதுரை-பாடல்-1)

என்னும் ஔவையாரின் வரிகளின் மூலம் அறியமுடிகின்றது.

                மன்னன் காத்தவராயனைக் கழுவில் ஏற்றி மூன்று நாட்கள் கழிந்த பிறகு இடையர்குலப் பெண் நல்லதங்காள் அவ்வழியாகச் சென்றாள். அப்பொழுது காத்தவராயனுக்கு நாவறண்டதால் கழுமரத்தின் மீது ஏறிச் சென்று காத்தவராயனுக்கு மோர் கொடுத்து உதவினாள். தன்னுடைய தாகத்தைத் தீர்த்த அவளுக்கு செல்வங்களும் முக்தியும் கிடைக்க வேண்டும் என்று கூறி வாழ்த்தினான்.

            மோர் கொடுத்த நல்லதங்காள் முத்தியது பெற்றிருக்க

              பால் கொடுத்த நல்லதங்காள் பாக்கியங்கள் பெற்றிருக்க

              தாகம் தணிந்தது போல் அவர்கள் மிகவாழ்க!

              மாடு பெருகி வர மனைவி மக்களுண்டாக

             ஆடு பெருகிவர அழிவில்லாச் செல்வம் பெருகிவர

             வாக்கு பலிக்குமென்று வாழ்த்தியார் காத்தவனார்.-

                                                                (காத்.கதை. பாடல்.பக்.-60)

இது பிறர் ஆபத்தில் இருக்கின்ற பொழுது அவர்களுக்கு உதவி செய்தால் பலன் கிடைக்கும் என்பதை உணர்த்துகிறது. மோர் கொடுத்து உதவிய நல்லதங்காள வம்சம் மிகச் செழுமையாக வாழ்ந்ததாக கதைப்பாடல் உணர்த்துகின்றது.

               மன்னன் ஆலோசனைப்படி அப்பாபட்டரும் அன்னதுளசியும் குழந்தை வரம் வேண்டி திருவரங்க நாதரை நினைத்து புசை செய்கின்றனர். அப்பொழுது இறைவனின் அருளால் அவர்களுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. அதற்கு ஆரியமாலை என்று பெயர் சூட்டினர். குழந்தை பிறந்ததை அறிந்த ஆரியமன்னன் நாடெல்லாம் சர்க்கரை வழங்கியும் பல தானங்கள் கொடுத்தும் கொண்டாடி மகிழ்ந்தான். இதனை,

            நாட்டு நல்ல சர்க்கரையை நாடெல்லாம் வழங்கினார்கள்

             அன்னதானம் சொர்ணதானம் அழகான மகாதானம்

             கோதானம் புதானம் கொடுத்தான் மகாராசன். –

                                                                  (காத்.கதை. பாடல்.பக்.-15)

என்னும் அடிகளின் மூலம் அறியலாம். இதன் மூலம் சர்க்கரை, அன்னம், சொர்ணம், கோ, பு முதலானவற்றைத் தானமாக கொடுத்தனர் என்பதை அறியமுடிகின்றது.

3.வாய்மையும் நீதியும்: (Truth and justice)

            வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும்

             தீமை யிலாத சொலல். –(குறள் – 291)

என்று வாய்மை குறித்து கூறுகின்றார் வள்ளுவர்.

           மன்னன் பொய் பேசாதவன். சொன்ன சொல்லைக் காப்பாற்றக் கூடியவன். உண்மையைக் கடைபிடிப்பவன். தேசத்து மக்களை வாழவைக்க வந்த சீமான் அவன் என்ற சேப்பிள்ளையானின் கூற்று இதனை உணர்த்துகின்றது.

பொய்யாத வாசகனே! புண்ணிய சிரோன்மணியே!

 மெய்யாகத் தேசம் விளங்க வந்த சீமானே!. –  (காத்.கதை. பாடல்.பக்.-14)

      தான் பெற்ற பிள்ளையாகவே இருந்தாலும் அந்தப்பிள்ளை தவறு செய்துவிட்டால் அவனைக் கொன்றுவிட வேண்டும். தன்டைய மகன் என்று தண்டனை கொடுக்காமல் விட்டுவிடுவது நியாயமில்லை என்று மன்னன் பேசுவதிலிருந்து அவனது நீதி புலப்படுகின்றது.

            பெற்ற பிள்ளையானாலும் யின்னொருவன் ஆனாலும்

              குற்றமதைக் கண்டளவில் கொன்றுவிட வேண்டாமோ?. –    

                                                                          (காத்.கதை. பாடல்.பக்.-18)

என்னும் அடிகள் உணர்த்துகின்றன.

4.கல்வி, இசை, ஓவியம்: (Education, music, art)

              காத்தவராயன் கதைப்பாடலில் காத்தவராயன் தன் காதலை ஆரியமாலைக்கு கடிதத்தின் மூலம் தெரியப்படுத்துகிறான். கடிதம் எழுதுமளவுக்கு காத்தவராயனும் கடிதத்தைப் படிக்குமளவுக்கு ஆரியமாலையும் கல்வி கற்றவர்களாக இருந்துள்ளனர். இதன் மூலம் அந்தக் காலக்கட்டத்தில் தகவல் பரிமாற்றம் கடிதத்தின் மூலம் நிகழ்ந்துள்ளதை அறியமுடிகின்றது. இதனை,

            விக்கினரைத் தானினைந்து எழுத்தாணி கைப்பிடித்து

             முத்து பதித்தது போல் மூன்றுவரி தானெழுதி

              பவளம் பதித்ததுபோல் பத்துவரி தானெழுதி

              ஆச்சாலழகு பெண்ணே ஐயன் மகள் மாலை கண்டேன்

              கோட்டையிலே நீயிருக்க கொத்தளத்தில் நானிருக்க

              ஆசையெல்லாம் உன்மேலே அலையுதடி என்மனது

              ஓலைகண்ட நாழிகைக்கு உத்தமியே இங்கே வாடி. –

                                                                       (காத்.சுவாமிகதை.பக்.-45)

என்னும் அடிகளால் அறியலாம்.

            கட்டடம், சிற்பம், ஓவியம், நாடகம் , இசை ஆகிய கலைகளில் மனதை உருக்குவது, அலை பாய்கின்ற மனதை ஒருநிலைப்படுத்துவது, ஆன்மீக நிலைக்கு இட்டுச் செல்வது இசை. மற்ற கலைகளுக்கும் இசைக் கலைக்கும் உள்ள வேறுபாடு மனித நாகரிகத்தின் கூறுகளுள் முதல் வரிசையில் வைத்து எண்ணப்படுவது இசை.1 காத்தவராயன் கதைப்பாடலில் காத்தவராயன் கின்னாரம் என்னும் இசைக்கருவியை மீட்டி இசைப்பாடுவதில் வல்லவனாக இருந்துள்ளான் என்பதை,

          முழங்கை நரம்பெடுத்து மூன்று பிகுவாக்கி

            வாசித்தார் கிண்ணாரியை வானுலகந்தானதிர

            அப்போது பேசுதுபார் ஆண்டவனார் கிண்ணாரம். –

                                                                   (காத்.சுவாமிகதை.பக்.-39)

என்னும் அடிகளின் மூலம் அறியலாம்.

              ஓவியம் என்ற சொல்லின் அடிச்சொல்  ஓவு. இதற்கு அழகு பொருந்த எழுதுதல் எனப்பொருள்படும்.2 காத்தவராயன் தன்னுடைய உருவத்தையும் ஆரியமாலையின் உருவத்தையும் ஒரு மெல்லிய துணியில் அழகாக வரைந்து அதனை வண்ணாரவல்லியிடம் கொடுத்து, ஆரியமாலையிடம் கொடுக்கும்படி கூறியுள்ளான். இதிலிருந்து ஓவியம் வரைவதில் வல்லவனாக இருந்துள்ளான் என்பதை அறியமுடிகின்றது. இதனை,

               இரண்டு துகிலாடை யிதமாகத் தானெடுத்து

                மாலையைப் போலுருவு மாரிப்பிள்ளை யெழுதுகிறார்

                உச்சி தொடங்கியல்லோ உள்ளங்கால் தான் வரைக்கும்

                தொடையெழுதி வரும்போது மயங்கி விழுவாராம்

                மறுநல்ல வஸ்திரத்தை மன்னரவர் ஏது செய்தார்

                தன்னைப்போல் வஸ்திரத்தில் சுவாமியவர் எழுதலுற்றார்.

                                                                            (காத்.சுவாமிகதை.பக்.-80)

என்னும் அடிகள் உணர்த்துகின்றன.

5.உணவும் விருந்தோம்பலும்: (Food and hospitality)

               காத்தவராயன் கதைப்பாடலில் பலவித உணவுகள் சமைத்து உண்ட செய்தி இடம்பெற்றுள்ளது. சின்னான் காமாட்சியிடம் உணவு கேட்கின்றான். அப்பொழுது காமாட்சி தன் கூந்தலை உலுக்கி ஏழு கன்னிகளை உண்டு பண்ணி அவர்களை சமைக்க அனுப்புகிறாள். அந்த ஏழு கன்னிகளும் அறுசுவை உணவு சமைத்து சின்னானுக்கு விருந்து கொடுக்கின்றனர். இதனை,

            ஏழுசூளை வண்டியரிசி இன்பமுடன் பிண்ணாக்கு

             எட்டு தோட்டக்கீரை ஏத்தமுள்ள பிண்ணாக்கு

             இதமாகத் தான் சமைத்து இன்பமுடன் வைத்தார்கள். –

                                                                      (காத்.சுவாமிகதை.பக்.-27)

என்னும் அடிகளால் அறியலாம்.

            அரண்மனையில் ஆரியமாலைக்கு உணவு பரிமாறப்பட்டதை,

         வாழை இலைபோட்டு மணிச்சொம்பு நீர் தெளித்தார்

           பத்துவிதக்கறியும் பதினெட்டுப் பச்சடியும்

           எட்டுவிதக்கறியும் இருபத்தியோர் பச்சடியும்

           சுற்றிக்கறியை வைத்துப் புத்துருக்கு நெய்வார்த்தார்

           அந்த அடிசில் அமுதுண்ட பிற்பாடு.

           காய்ச்சிய பாலும் திருத்திய முப்பழமும்

             வாழைப்பழமும் மதுரையின் மாம்பழமும்

             வேரில் புறத்தில் வெடித்த பலாச்சுளையும்

             கொம்பில் சிறு தேனும் கோதுபடா சர்க்கரையும்

             மலையில் சிறுதேனும் பாங்கான சர்க்கரையும்

             அந்த அடிசில் அமுதுண்ட பிற்பாடு.

            பாலடிசிலுண்டு பன்னீரால் கையலம்பி

             உருவு கொண்டு வாய் துடைத்து உத்தமியாள் வீற்றிருந்தாள்

                                                                           (காத்.சுவாமிகதை.பக்.-44)

என்னும் அடிகளின் மூலம் வாழை இலை போட்டு பலவிதமான உணவுகள் பரிமாறப்பட்டதை அறியமுடிகின்றது.

        உணவு அருந்திய பிறகு வெற்றிலைப்பாக்கு  போடும் வழக்கம் இருந்துள்ளது. இதனை,

                  வாயகல பேழையது வலுகுலுக்கு தான் திறந்து

                   வாடாயிலைச் சுருளும் வண்ணத்துவர் பாக்கும்

                   கோவை யிலைச் சுருளும் கொச்சை களிப்பாக்கும்

                    ஆரங்கிப்பாக்குகளும் அதற்கேற்ற வெற்றிலையும்

                    ஏலம் இலவங்கமும்  இசைந்த பரிமளமும்

                    சுருளைச் சுருள் மாத்தி சுண்ணாம்பை சூட்சமிட்டு

                    வைத்துக்கொடுத்தாளே மதிக்குமந்த வாசத்தை. –

                                                                  (காத்.சுவாமிகதை. பக்.-47)

என்னும் அடிகள் உணர்த்துகின்றன.

           விருந்தோம்பல் தமிழரின் பண்பாடாகும். காத்தவராயன் கதையில் காத்தவராயன் கழுமரத்தில் ஏறி இறங்கியவுடன் ஆரியமாலையைத் திருமணம் செய்கிறான். அப்பொழுது தாலி அணிவித்து திருமணம் செய்துள்ளனர். அதன் பிறகு  ஊர் மக்கள் அனைவருக்கும் விருந்து அளித்துள்ளனர் என்பதை,

          மாதாக்கள் நால்வருக்கும் மங்கிலியந்தான் தரித்தார்

            கன்னியர்கள் நால்வருக்கு கட்டினார் மங்கிலியம்

            அம்மி மிதித்தார்கள் அருந்ததியும் கண்டார்கள்

             அங்கிருந்த மன்னரெல்லாம் அட்சதையள்ளி யிட்டார்கள்

             அரசாணி சுற்றி வந்து அரண்மனையினுட் புகுந்து

             பாலும் பழமும் புசித்து பாவையரும் ஆண்டவரும்.

                                                                       (காத்.சுவாமிகதை.பக்.-198)

          அனைவருக்கும் பந்தி வைத்து அன்னமும் வழங்கலுற்றார்

           வாழையிலை போட்டு மணிச்செம்பில் நீர்வார்த்து

           பத்துவிதக்கறியும் பதினெட்டு பச்சடியும்

           அறிபிளவு வெற்றிலையும் அள்ளியவர் தான் கொடுத்தார்.  

                                                                            (காத்.சுவாமிகதை.பக்.-199)

என்னும் அடிகளால் அறியலாம்.

6.மஞ்சள் தேய்த்து நீராடலும் ஆடை ஆபரணங்களும்:

(Dress, ornaments and other cultural traditions)

              காத்தவராய சுவாமி கதையில் மஞ்சள், பச்சிலை, கிச்சிலிக்கிழங்கு ஆகியவற்றை அறைத்துப் புசிப் பெண்கள் நீராடுவது வழக்கம் என்னும் முறை இடம்பெற்றுள்ளது. இதனை,

               காஞ்சி மஞ்சள் குடமஞ்சள் கொல்லத்தரக்கு மஞ்சள்

                 சீரங்க மஞ்சள் திருநெல்வேலிருக்கு மஞ்சள்

                பச்சிலை கிச்சிலிக் கிழங்கு பாவையரும் தான் குளிப்பார்.

                                                                (காத்.கதை.பாடல்.பக்.-51)

                 ஆரியமாலை அவள் குளிக்கும்  மஞ்சள் ஓடையிலே

                  கொச்சி மஞ்சள் குடமஞ்சள் கொல்லத்தரக்கு மஞ்சள்

                  எழுமஞ்சள் தான் குளித்தாள் இளங்கொடியாள் மாதுகன்னி

                  அவள் குளித்த மஞ்சள் ஓடை  ஆறாய்ப்பெருகுதுபார்.   

                                                                         (காத்.சுவாமிகதை.பக்.-30)

என்னும் அடிகளின் மூலம் அறியலாம்.

ஆரியப்புர்ராஜன் ஆரியமாலைக்கு பலவிதமான ஆபரணங்கள் அணிவித்தான் என்பதை,

                 ஆரியமாலைக்கு ஆபரணந்தான் கொடுத்தான்

                  சந்திரகண்டி சுரியக்கண்டி தையலாருக்குத்தான் கொடுத்தார்

                  நவரத்தினத்தோடு நாயகிக்கலங்கரித்தார்

                  வங்கியிருகைக்கும் மயிலணைக்குத்தானளித்தார்

                  ரத்தினசடைபில்லை நலமாயலங்கரித்தார்

                  மூக்குத்திசிந்தாக்கு முன்னெற்றிச்சுட்டிகளும்

                  காலாழி பீலி கண்டசரப்பதக்கம்

                  மார்பிலுருட்டுவடம் மார்நிறைந்த கட்டுவடம்

                  முத்துக்கெண்டி மாலை மெல்லியர்க்கு அலங்கரித்தார்

                  இத்தனையாபரணம் ஏந்திழைக்குத்தான் கொடுத்தார். –  

                                                                         (காத்.சுவாமிகதை.பக்.-18)

என்னும் அடிகளால் அறியலாம்.

              காத்தவராயன் தான் அணிந்திருந்த ஆபரணங்களையும் ஆடைகளையும் நீக்கிவிட்டு மூன்றுமுழத் துண்டினை மட்டும் உடுத்திக் கொண்டு தாயை நோக்கிச் சென்றார் என்பதை,

           மூன்று முழத்துண்டுமதை முடியின் மேல் சுற்றிக்கொண்டார்

             நான்கு முழத் துண்டுமதை நன்றாய் யிடுப்பில் கட்டி

             தாற்றுக்கோல் கைப்பிடித்து சுவாமியவர் வாறாரே

             தாயாரைத் தேடிக்கொண்டு. – (காத்.சுவாமிகதை.பக்.-21)

என்னும் அடிகளால் அறியலாம்.

7.மகளிர் வீரம்: (Women valour and Courage)

                காத்தவராயன் கதையில் கறுப்பழகி வீரம் மிகுந்த பெண்ணாகக் காட்சியளிக்கின்றாள். காத்தவராயனைச் சின்னான் மோடி வைத்து வீழ்த்துவதற்கு சின்னானின் தந்தை இராமத்தோட்டி கடுமையான தவம் செய்கின்றார். அப்பொழுது கறுப்பழகி தன் மந்திர சக்தியினால் இராமத்தோட்டியின் தலையை அறுத்து காத்தவராயனின் காலிலே கட்டி அவனைக் காப்பாற்றுகின்றாள். இதனை,

             இராமத் தோட்டியின் சிரசை நலமாகத்தானறுத்து

               அத்தை மகன் காலிலே ஆரணங்கு கட்டிவிட்டாள்.

                                                                   (காத்.சுவாமி.கதை.பக்.-26)

என்னும் அடிகளால் அறியலாம்.

             காத்தவராயனுக்கும் கறுப்பழகிக்கும் பந்தயம் நடைபெறுகின்றது. அப்பொழுது இருவரும் ஆட்டை வைத்து மோதுகின்றனர். பிறகு சேவல் மோதுகின்றது. இந்த இரண்டிலும் கறுப்பழகியே வெற்றி பெற்றாள். பிறகு காடையை விட்டு மோதுகின்ற பொழுது காத்தவராயன் தன் மந்திரவித்தையால் தன் காடையை வெற்றி பெறச் செய்கின்றான். இதனை அறிந்த கறுப்பழகி அருவாளுடன் அவனைத் துரத்திக்கொண்டு ஓடினாள் என்பதை,  சீறி யெழுந்திருந்தாள் சிங்கத்தின் குட்டியைப்போல்

                 ஆக்கரித்துப் பற்கடித்து அதட்டி யெழுந்திருந்தாள்

                  காத்தவனார் முன்னோட கறுப்பழகி பின்துரத்த.-

(காத்.சுவாமிகதை.பக்.-108) என்னும் அடிகளால் அறியலாம்.

8.நம்பிக்கைகள்: (Faith and Beliefs)

           மனித வாழ்க்கை நம்பிக்கையின் துணை கொண்டே பயணம் மேற்கொள்கிறது. காத்தவராயன் கதைப்பாடலில் சோதிடம், கண்ணேறு கழித்தல், சகுனங்கள், குறி சொல்லுதல் முதலான நம்பிக்கைகள் இடம்பெற்றுள்ளன. சோதிடம் எதிர்கால நடப்புகளை முன்னறிவிப்பு செய்யும் கலையாகும். குழந்தை பிறந்ததும் சோதிடரை அழைத்து சாதகம் எழுதிப் பார்ப்பது தமிழ்ச்சமுதாய வழக்கம். சோதிடப்பலனாக வரவிருக்கும் நிகழ்ச்சிகளை வகைளாகக் குறித்துக் காட்டுகின்றனர். காத்தவராயன் கதைப்பாடலில் ஆரியமாலை பிறந்தவுடன் சோதிடரை அழைத்து அவளுக்கு சாதகம் கணித்த பொழுது அவள் 15 வயது வரை நலமுடன் வாழ்வாள். அவளது 16 ஆம் வயதில் தேவன் அவளைச் சிறை எடுப்பான் என்று சோதிடர்கள் கூறியதை,

            சோதிடரைத் தானழைத்து  சோதிடங்கள் பாருமென்றார்

             அப்போது சோதிடர்கள் அன்பாக ஏது செய்தார்

              சோதிடத்தை ஆராய்ந்து சுருக்காக எடுத்துரைப்பார்

              பிறந்தநாள்தான் தொடங்கி பேதையிந்த மாலையற்கு

               பதினைந்து வயதளவும் பாக்கியங்கள் பெற்றிடுவாள்

               பதினாறுதன் வயதில் தேவன் சிறையெடுப்பான்

               சிறையெடுத்த பிற்பாடு சிலநாளில் சென்றிடுவாள்.   

                                                                        (காத்.சுவாமிகதை.பக்.-15)

என்னும் அடிகளால் அறியலாம்.

9.விளையாட்டு: (Sports)

            நாட்டுப்புற மக்களின் நாகரிகத்தோடும் பண்பாட்டோடும் விளையாட்டு இணைந்ததாகும். விளையாட்டு என்பது வெளித்தூண்டல்களின்றி மகிழ்ச்சியுட்டும் செயல்களில் இயற்கையாக ஈடுபடுவதாகும். விளையாட்டை மனமகிழ்ச்சி ஊட்டும் செயல் என்பர். அவ்விளையாட்டு பொழுதுபோக்காக மட்டுமின்றி உடல் நலம், மனநலம் பேணுபவையாகவும் உள்ளது. விளையாட்டில் உடல் செயல்களின்றி உள்ளச் செயல்களும் இடம்பெறுகின்றன. காத்தவராயன் கதைப்பாடலில் சோழி போட்டு ஆடும் சொக்கட்டான் ஆட்டம், பந்து ஆட்டம், பகடை ஆட்டம், கடா சாவல் காடை ஆகியவற்றை வைத்து பந்தயம் விடுதல் முதலான விளையாட்டுக்கள் பற்றிய தகவல்கள் இடம்பெற்றுள்ளதை அறியமுடிகின்றது.

         காத்தவராயன் ஆரியமாலையுடன் சொக்கட்டான் ஆடிய பொழுது ஆரியமாலை தோற்றுவிடுகின்றாள். காத்தவராயன் வெற்றி பெற்றான் என்பதை,

            பகடைகளாடினார் பாங்காக ஆண்டவனார்

             இருக்காலுமெட்டுதுகை பன்னிரண்டு விழுகுதங்கே

            பகடையது புரளப் பாங்கா விழுகுதங்கே

            ஆரியமாலையவள் ஆரணங்குதான் தோற்றாள். –

                                                                   (காத்.சுவாமி கதை.பக்.-70)

என்னும் அடிகளால் அறியலாம்.

10.நிலையாமை: (Transience)

                  உலகில் வாழ்வு நிலையில்லாதது என்பதைக் குறிக்கும் சொல் நிலையாமை என்பதாகும். செல்வம் , இளமை, யாக்கை ஆகியன நிலைத்த தன்மை உடையன அல்ல.

           நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்

             பெருமை உடைத்து இவ்வுலகு. (குறள்-6)

என்கிறார் வள்ளுவர்.

          இந்தப் புமியில் பிறந்த அனைவரும் என்றோ ஒருநாள் இறப்பது உறுதி. நீர்க்குமிழி போன்றது இந்த வாழ்க்கை என்று காத்தவராயன் வாழ்வின் நிலையாமை குறித்து கழுமரத்தில் ஏறும் பொழுது கூறுகின்றான். இதனை,

           நீர்க்குமிழி ஏது நிலைத்த காயமேது

            பார்மேல் பிறந்தவர்கள் பரலோகம் சேர்வதல்லால்

            எந்நாளும் புலோகம் இருப்பார் ஒருவரில்லை. –

                                                                (காத்.கதை.பாடல்.பக்.-57)

என்னும் அடிகள் உணர்த்துகின்றன.

            ஒருவன் இப்போதுான் இங்கு நின்றான், இருந்தான், படுத்தான், உடனே தன் சுற்றத்தினர் அழுமாறு இறந்துவிட்டான் என்று உலகத்தில் சொல்லப்படுகிறது. ஆதலால் இவ்வுடலானது புல்லின் நுனியில் உள்ள நீர்த்துளி போன்று நிலையாமையுடையது என்று எண்ணி இப்போதே அறச்செயலைச் செய்ய வேண்டும். இதனை,

             புல்நுனி மேல் நீர்போல் நிலையாமை என்றெண்ணி

              இன்னிலையே செய்க அறவினை. –(நாலடியார்-29)

என்னும் நாலடியார் பாடலால் அறியாலாம்.

முடிவுரை: (Conclusion)

     ஆரியப்புர்ராஜன் குடிமக்களிடம் அன்புகாட்டியதோடு பல பொருட்களை தானமாக வழங்கினான் என்பதை அறியமுடிகின்றது. நாடுகாவல் அதிகாரியாகிய சேப்பிள்ளையானின் காவல் சிறப்பினை அறியமுடிகின்றது. பிறருக்கு ஆபத்தில் உதவி செய்தால் அதற்குரிய பலன் கிட்டும் என்பதை நல்லதங்காளைக் காத்தவராயன் வாழ்த்தும் பகுதி எடுத்துரைக்கின்றது. காத்தவராயன் அன்பு மிக்கவனாகவும் கல்வி, இசை, ஓவியம், வீரம், விளையாட்டு ஆகியவற்றில் வல்லவனாகவும் இருந்துள்ளான் என்பதை அறியமுடிகின்றது. பல வகையான உணவு சமைக்கப்பட்டதையும் திருமணத்தின் போது விருந்தோம்பல் செய்ததையும் அறிய முடிகின்றது. பெண்கள் மஞ்சள் தேய்த்து நீராடும் வழக்கம் கொண்டவர்கள் என்பதையும் பலவிதமான அணிகலன்களை தலை முதல் பாதம் வரை அணிந்துகொண்டனர் என்பதையும் அறியமுடிகின்றது. கறுப்பழகியை வீரத்தில் சிறந்த பெண்ணாக சித்தரிக்கப்பட்டுள்ளதைக் காணமுடிகின்றது. இதில் பலவகையான நம்பிக்கைகள் மற்றும் விளையாட்டுக்கள் பற்றிய தகவல்கள் இடம்பெற்றுள்ளதை அறியமுடிகின்றது.  வாழ்விற்கு தேவையான நிலையாமை பற்றிய செய்தியும் இடம்பெற்றுள்ளது. இவ்வவாறு இக்கட்டுரையின் மூலமாக காத்தவராயன் கதைப்பாடலில் உள்ள வாழ்வியல் தகவல்களை அறிந்துகொள்ளமுடிகின்றது.

 

பார்வை நூல்கள்: (Referens Books)

1.அ.கா.பெருமாள் – “தமிழர் கலையும் பண்பாடும்”

2.நா.வானமாமலை (பதிப்பு) – “காத்தவராயன் கதைப்பாடல்” –

    (காத்.கதை.பாடல்.பக்.)

 3.ஆர்.ஜி.பதி.கம்பெனி (பதிப்பு) – “புகழேந்திப் புலவர் இயற்றிய    

    காத்தவராய சுவாமி கதை” – (காத்.சுவாமிகதை.பக்.)

4.டாக்டர் மு.வ. (உரை) – “திருக்குறள் தெளிவுரை”

5.டாக்டர் பி.ஏ.சத்தியநாராயணன் (உரை) – “நீதிநூல்கள் ஏழு”

6.பேரா.அ.மாணிக்கம் (உரை) – “நாலடியார் தெளிவுரை”