ஜூலை 2024 இதழுக்கு ஆய்வுக்கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன

குறுமன்ஸ் பழங்குடிகளும் பெருங்கற்காலப் பண்பாட்டுப்பரவலும்.

முனைவர்.சி.சந்திரசேகர். உதவிப்பேராசிரியர். வரலாற்றுத்துறை. அரசு கலைக் கல்லூரி. தருமபுரி 30 Apr 2021 Read Full PDF

முனைவர்.சி.சந்திரசேகர்.

 உதவிப்பேராசிரியர்.

   வரலாற்றுத்துறை.

அரசு கலைக் கல்லூரி.

  தருமபுரி.

 

ஆய்வுச் சுருக்கம் :

     குறுமன்ஸ் இனப் பழங்குடிகள் சங்ககாலத்திற்கு முன்பே பெருங்கற்காலத்தில் கர்நாடகாவில் இருந்து சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன்பே கால்நடை மேய்ச்சல் இனக்குழுவாக இருந்த இவர்கள் தங்களின் கால்நடைகளுக்கு தேவையான புல்வெளிகளைத் தேடி இருவழிகளில் தமிழகத்தில் புலம்பெயர்ந்தனர் எனக் கருதப்படுகின்றது. ஒரு பிரிவினர் மைசூர், கொள்ளேகாள், தீர்த்தம் கணவாய் வழியாக நீலகிரி மலையிலும், மற்றொரு பிரிவினர் ஆந்திரம், திம்பம் கணவாய் வழியாக கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம் பகுதிகளிலும் குடியேரினர். தாங்கள் புலம்பெயர்ந்த பகுதிகளில் பெருங்கற்கால பண்பாட்டையும், வழிபாட்டு முறையினையும், பரவச்செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களின் புலம்பெயர்தலைப் பற்றிய நிகழ்வைப் பற்றி சங்க இலக்கியங்களிலும், வரலாற்று நினைவுச்சின்னங்களின் கூறுகளில் இருந்தும் அறியலாம்.  இவர்களின் பண்பாடு, கலாச்சாரம் எத்தகையது? பெருங்கற்காலப் பண்பாட்டிற்க்கும் இவர்களுக்குமான தொடர்பு பற்றியும் ஆய்வது முக்கியமானது ஆகும்.

திறவுச் சொற்கள்:

பெருங்கற்காலம், பண்பாடு, இனக்குழு, குறும்பு, ஆவிவழிபாடு, கல்வட்டம். உட்டிதக்கல்லு. பாண்டவர் வீடு

குறுமன்ஸ் பழங்குடிகள்:

     தமிழகத்தில் 36 பழங்குடிகள் பட்டியலிடப்பட்டுள்ளனர். குறுமன்ஸ் பழங்குடிகள்  கருநாடகத்தை பூர்வீகமாக கொண்டவர்களாகக் கருதப்படுகின்றனர். இவர்கள் கன்னடம் கலந்த தமிழைப் பேசுகின்றனர். இவர்களை மாநிலத்திற்கு மாநிலம் அவர்கள் பேசுகின்ற மொழிக்கேற்ப்ப அழைக்கப்படுகின்றனர். தமிழகத்தில் “குறுமன்” என்றும், கர்நாடகத்தில் “குருபர்” என்றும் ,ஆந்திரத்திலும், ராயலசீமாவிலும் “குருபா” என்றும், தெலுங்கானவில் “குருமா” என்றும், அழைக்கப்படுகின்றனர். இவர்களைப் பற்றிய பல்வேறு பண்பாட்டுக் கலாச்சார ஆய்வுகள் நடைபெற்றன என்றாலும் இன்றுவரை அவை முழுமைபெறவில்லை என்பதே உண்மையாகும்.

குறுமன்ஸ் பழங்குடிகள் இடப்பெயர்வும், கோட்பாடுகளும் :

     கால்நடைமேய்ச்சல் தொழிலை அடிப்படையாக கொண்ட மேய்ச்சல் சமூகமான இவர்கள் தங்களின் கால்நடைகளுக்குத் தேவையான புல்வெளியைத் தேடி அடிக்கடி புலம்பெயர்ந்தனர் சங்ககாலத்திற்கு முன்பு பெருங்கற்காலத்தில் சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன்பே இடம்பெயரும் போது இரண்டு வழிகளில், இரு பிரிவினராக இடம்பெயர்தனர். ஒரு பிரிவினர் மைசூர், கொள்ளேகால், தீர்த்தம் கணவாய் வழியாக நீலகிரி மலைத்தொடர்களில் குடியேறினர், மற்றொரு பிரிவினர் ஆந்திரா, திம்பம் கணவாய் வழியாக கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், வேலூர் ஆகிய மாவட்டங்களில் குடிபெயர்ந்தனர். 

     H. ஸ்டுவர்ட் என்பவர் இவர்கள் “குறி” எனும் ஆடுகளை மேய்த்ததால் குறும்பர் என அழைக்கப்பட்டிருக்கலாம் என்கின்றார். அதே போல கே.எஸ். சிங், தன்னுடைய நூலான “The Scheduled caste” இல் இவர்கள் ஆடு மேய்க்கின்ற இனக்குழுவினர் என்று குறிப்பிடுகின்றார்.  சங்க இலக்கியமான புறநானூற்றில் “விரவு மொழித் தகடூர்” என்று பேசுகிறது. இக் கூற்று பல்வேறு மொழிபேசும் பகுதி எனவும், பல்வேறு பகுதியிலிருந்து தகடூருக்கு மக்கள் புலம்பெயர்ந்தனர் என்பதையும் சுட்டிக்காட்டுகிறது.

     இவர்களின் தோற்றம் பற்றி பல்வேறு புராணக்கதைகள் கூறுகின்றன. இவர்கள் தங்களைக் குண்டக்கால் சித்தப்பா, கசுவம்மாவின் வாரிசுகள். என்று கூறிக்கொள்கின்றனர். சங்க இலக்கியங்களில் ஏராளமான குறிப்புகள் குறுமன் பழங்குடிகளைப் பற்றி வருகின்றன. குறும்பர் எனும் சொல்லினைக் குறித்து ஆய்வு செய்த இரா. பூங்குன்றன் அவர்கள், சங்க இலக்கியங்களில் “குறும்பு” எனும் சொல் 13 இடங்களில் பயின்று வருவதாகவும், அச்சொல்லுக்கு “வலிமை”, “அரண்”; போன்ற விளக்கம் கொள்ளலாம் எனவும் குறிப்பிடுகிறார்.

     அகநானுற்றுப் பாடல் “அருங்குறும்பு எறிந்த ஆற்றலோடு” (அகம் : 342) என்றும், மற்றொரு அகப்பாடலில் “ஓம்பினார் கவர்ந்து கூழ்கெழு குறும்பில்”(அகம் :113) என்றும், அகப்பாடல் 31 இல் “கல்லுடைக் குறும்பின் வயவர் விழ்இய” எனவும் குறும்பர் பற்றிய செய்திகள் பயின்றுவருகின்றன. சங்கஇலக்கிய நூல்களில் ஒன்றான பெரும்பாணாற்றுப்படை ”வில்லை உடைய வீடுகள் நிறைந்த குறும்பு” (பாடல் வரி; : 121-124) என்று குறிப்பிடுகின்றது. சீவக சிந்தாமணியில் “கொண்டேரு குறும்பர் வெம்போர்” என்று சுட்டுகின்றது. மேலும் பெருங்கதையில் “குறும்பருங் குழிஇய” என்று குறும்பர்களைப் குறிப்பிடுகின்றது.

     இவ்வாறு பல்வேறு இலக்கியங்கள் குறுமன்களைப் பற்றிய செய்திகளைப் பதிவுச்செய்கின்றன. அதியமான் காலத்தில் “குறும்பு” எனும் கால்நடை அரண்கள் இருந்தற்கான ஆதாரங்கள் காணப்படுகின்றன.

பெருங்கற்கால பண்பாடும் குறுமன் பழங்குடிகளும்.

     தமிழகப் பகுதிகளில் பெருங்கற்கால நினைவுச்சின்னங்கள் பற்றி அதிகமான ஆய்வுகளைச் செய்துள்ள திரு.B.. நரசிம்மய்யா அவர்கள், குறுமன்ஸ் பழங்குடிகள் கர்நாடகப் பகுதிகளில் இருந்து புலம்பெயர்ந்த கால்நடை மேய்ச்சல் சமூகமான குறுமன்ஸ்கள் கர்நாடகத்திலிருந்து புலம்பெயரும் போது பெருங்கற்கால பண்பாட்டையும் தங்களுடன் கடத்தி வந்ததாக தன்னுடைய ;  நூலான “தமிழகத்தில் புதிய கற்கால மக்களும் பெருங்கற்கால மக்களின் பண்பாடும்” எனும் நூலில் குறிப்பிடுகின்றார்.

                 தென்னிந்தியாவில் நாகரிகத்தின் தொடக்ககாலமாக பெருங்கற்காலமும், இரும்புக்காலமும் கருதப்படுகின்றது. நாடோடிகளாக இருந்த மக்கள் முன்னேறி பண்பாடு, கலாச்சாரம் என வாழ்க்கை முறையை உருவாக்கிக்கொண்டனர் நாடோடிகளான குறுமன்ஸ்களும் பெருங்கற்கால நாகரிக வாழ்க்கையை கர்நாடகத்தில் இருந்து தமிழக பகுதியில் புலம்பெயரும்போது பெருங்கற்கால பண்பாட்டை பரப்பினர்.

 

 

     

 ஊர்வாழ்க்கைமுறை, கால்நடை வளர்ப்பு, மேட்டுநில விவசாயம், போன்றன இக்காலகட்டத்தில் வளர்ச்சி பெற்றன. கால்நடை மேய்ச்சல் சமுகமான குறுமன்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் கால்நடைகளுக்கு தேவையான மேய்சல் நிலங்களைத்தேடி இடம் விட்டு இடம்பெயர்ந்தனர். இத்தகைய சூழல்களில் தாங்கள் தங்கியிருந்த இடங்களில் மீண்டும் வருகின்ற சூழலில் குடியிருப்பை அடையாளம் காணவும், தங்களைத் தொடர்ந்து வருகின்ற தங்களின் இனக்குழுக்களுக்கு இது வாழத்தகுதியான இடம்தான் என அடையாளப்படுத்தவும், சில நினைவுச் சின்னங்களை ஏற்படுத்திச்சென்றனர். அவையே பெருங்கற்கால நினைவிடங்களாகும். இச்சின்னங்களைக் கொண்டு இவர்களுடைய வாழ்க்கை முறையையும், சமுதாய அமைப்பையும், வழிபாட்டுமுறையையும் அறிந்துகொள்ள முடிகின்றது,

ஆவி வழிபாடும் கல்வட்டங்களின் அமைப்பும்:

ஆவிவழிபாட்டில் நம்பிக்கை கொண்டிருந்த இவர்கள் வேட்டையாடுதலின் போதும், இனவிருத்திக்காகவும் ஆவிவழிபாடு உறுதுணையாக இருக்கும் என்ற நம்பிக்கையில் இறந்தவர்களுக்கு பெரிய அளவிலான கல்லறைகளை உருவாக்கினர்; தரையில் பெரிய குழியைத் தோண்டி அந்த குழியில் நான்கு திசைகளிலும் நான்கு பலகைக் கற்களை ஓன்றுடன் ஓன்று இணைத்து நிறுத்தப்பட்டன. பலகைக் கற்கள் சாய்ந்துவிடாமல் இருக்க ஸ்வஸ்திக் சின்னம் போல ஓன்றை ஒன்று தாங்கிபிடித்தவாறு அமைக்கப்பட்டுள்ளன. இதன் மேல் சிறிய கற்களைக் கொண்டு வந்து கொட்டி மண் கல்; கலந்த மேடாக மாற்றப்பட்டன. இத்தகைய மேடு தரையிலிருந்து 1 முதல் 2 மீட்டர் உயரம் வரை வட்டமாக அமைக்கப்பட்டன. இந்த மண்மேடு மழைநீரால கரைந்து விடாமல் இருக்க இதைச்சுற்றிலும் வட்ட வடிவில் பெரிய கற்கள் வைக்கப்பட்டன. இதற்கு கல்வட்டம் என்று பெயர். இதைப்போன்று பரந்த பாறையின் மேல் உருவாக்கப்பட்ட கல்லறைகளுக்கு கல்திட்டைகள் என்று பெயரிடப்பட்டது. இக்கல்லறைகளுக்குள் படையல் பொருட்களாக உணவுப்பொருட்கள், இரும்புக்கருவிகள், மணிகள் ,போன்றவை வைக்கப்பட்டன. 

          ஆவிபாட்டில் நம்பிக்கையுடைய இவர்கள் இறந்தவர்கள், தங்களின் உலகத்தில் கொள்ளத் தேவையான பொருட்களாக கருதப்பட்டன. தாங்கள் புலம்பெயர்ந்தாலும் தங்களி;ன் முன்னோர்களைப் புதைத்த இடங்களில் சென்று வழிபாடு நடத்தினர். மூதாதையர் வழிபாட்டுமுறைக்கு இதுவே முன்னோடியாகும். இத்தகைய வழிபாட்டு முறை தமிழகம் மற்றுமின்றி உலகம் முழுவதும் ஆங்காங்கே தோற்றுவிக்கப்பட்டதாக மானுடவியல் அறிஞர்கள் கருதுகின்றனர்.

 

குறுமன்களின் வழிபாட்டிடங்கள்

     தென்னிந்தியாவில் பெருங்கற்கால நினைவுச் சின்னங்களைப் பற்றி ஆய்வினை மேற்கொண்ட A. சுந்தரா என்பவர் கர்நாடகாவில் தான் முதன்முதலில் பெருங்கற்கால நினைவிடங்களை உருவாக்கும் வழக்கம் இருந்தது என்றும், இங்கிருந்துதான் பிறமாநிலங்களான ஆந்திரம், தமிழ்நாடு ஆகிய இடங்களுக்;கு குறுமன்கள் மூலமாகத்தான் பரவியது என்கிறார். இவரது கருத்தை மைசூர் பல்கலைக்கழக பேராசிரியர் பி. குருராஜராவ் அவர்களும் ஆதரிக்கின்றார்.

     கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், வேலூர், திருப்பத்தூர், ஆகிய மாவட்டங்களில் பரவிஉள்ளனர்.

 

 

பெருங்கற்க்கால கல்வட்டம் -- சென்னசந்திரம். கிருஷ்ணகிரி மாவட்டம்

     கிருஷ்ணகிரி மாவட்டம், சென்னசந்திரம், கரியசந்திரம், ஆகிய இடங்களில் உள்ள கல்வட்டங்களை தங்களின் மூதாதயர் வழிபாட்டுத் தலங்களாக குறிப்பிடுகின்றனர். ஒன்று “முத்தப்பன் சந்து” எனவும்,  மற்றொன்று “சித்தப்பன் இறந்த குட்டை” அல்லது “கல்லுக்குட்டை சித்தப்பா” எனவும், அழைக்கின்றனர். சித்தப்பா இவர்களுடைய குடும்பங்களின் ஆதிதெய்வமாகும்.  குறுமன்களின் மூதாதையரான சித்தப்பன் இனக்குழுவின் தலைவராகவோ, குழுவின் மூத்தவராகவோ, இருந்திருக்கலாம். அவர் இறந்த பிறகு அவரைப் புதைத்த இடத்தில் கற்குவியல் உருவாக்கப்பட்டு வழிபட்டு வருகின்றனர் என இவ்வின மூத்தோர்கள் குறிப்பிடுகின்றனர்.

     உட்டிதக்கல்லு (மூத்தோர் கல்லு) என்பது, குறுமன் பழங்குடிகள் தமிழ் மாதமான ஆடி மாதத்தில் 18 நாள் ஆடிப்பெருக்கு அன்று காவேரியில் அல்லது எதாவது நீரோடையில் சாமியுடன் சென்று தலைமுழுகிவிட்டு வரும்போது ஒரு சிறிய கல்லை மூத்தோர் நினைவாக எடுத்துவந்து அவர்களின் காட்டுக்கோயிலில் வைக்கும் பழக்கம் இன்றும் பின்பற்றப்படுவது குறிப்பிடத்தக்கது. அதாவது மலைமேல் உள்ள சித்தப்பன் கோயிலுக்கு செல்வது சிரமம் என்பதால் அதற்க்கு எதிர்திசையில் கல்கட்டடத்தில் கோயில் அமைத்து நடுகல்லை எழுப்பி வழிபடுகின்றனர். இக்கோயிலில்தான் உட்டிதகல்லை கொண்டுவந்து வைப்பர். பண்டைய காலத்தில் சித்தப்பன் கோயிலில் இடுவர், அதுவே பெரிய கல்வட்டமாக உருவெடுத்திருக்கும். மேலும் பென்னாகரம், டி. காணிகரஹள்ளி, குருபரப்பள்ளி, ஆகிய இடங்களில் ஏராளமான கல்வட்டங்கள் காணப்படுவது குறிப்பிடப்தக்கது. இது பெருங்கற்கால பண்பாட்டை குறுமன் பழங்குடிகள் தமிழகத்தில் கொண்டுவந்தார்கள் எனும் கூற்றுக்கு வலுசேர்க்கின்றது.

     குறுமன் எனும் சொல் பற்றிய இலக்கிய ஆய்வை மேற்கொண்ட திரு. இரா. பூங்குன்றன், குறுமன்களைப் பற்றிய நீண்ட நெடிய ஆய்வை மேற்கொண்ட திரு. தி. சுப்பிரமணியன், ஆகிய தொல்லியலாளர்கள் கல்வட்டங்களும், கல்திட்டைகளும், குறுமன் பழங்குடிகளால் பெருங்கற்கால பண்பாட்டைப் பரவலாக்கியிருக்கலாம் எனும் கருத்தை ஏற்றுக்கொண்டாலும், பொதுவாக வரலாற்றாளர்களாலும், மானுடவியலாளர்களாலும் அந்தந்த பகுதியில் வாழ்ந்த மக்களால் சுயமாக பெருங்கற்கால நினைவிடங்கள் ஏற்படுத்தப்பட்டன என்றும் குறிப்பிடுகின்றனர்.

     மேற்கண்ட கருத்திற்க்கு சான்றாக குறுமன் பழங்குடி மக்களைப் பற்றியும், அவர்களது பண்பாடு, கலாச்சாரம் பற்றியும், தொல்லியல் நோக்கில் நீண்ட, நெடிய ஆய்வை மேற்கொண்டுவரும் வரலாற்றாளர் பேரா. முனைவர் சி.சந்திரசேகர், அவர்கள் கண்டறிந்த தமிழகத்திலேயே அதிகமான கல்வட்டங்கள் கொண்ட இராசிமணல் பகுதியும், தமிழகத்திலேயே மிகப்பெரிய கல்வட்டத்தை கொண்ட நத்தஹள்ளியும், குறுமன் மக்களுடன் தொடர்பில்லாத பகுதிகள் என்பதைச் சுட்டிக்காட்டுகின்றனர். 

சித்தேரி மலைப்பகுதியிலும் “பாண்டவர் வீடு” “பாண்டவர் குழி” என்று உள்ளுர் மக்களால் அழைக்கப்படும் கல்வட்டங்களைப் பேரா. முனைவர் சி.சந்திரசேகர் கண்டறிந்தது குறிப்பிடத்தக்கது. இது திரு. தி. சுப்பிரமணியனின் கருத்துக்கு வலுஊட்டுகிறது.

நடுகல் வழிபாடும் குறுமன்ஸ் பழங்குடிகளும்

 

பெருங்கற்கால பண்பாட்டின் மற்றொரு கூறான நடுகல், குறுமன்களின் வாழ்க்கை பயணத்தின் அடையளமாக விளங்குகின்றன. பொதுவாக நடுகற்கள் இறந்தவர்களின் வீரத்தை போற்றும் முகமாக எடுப்பிக்கப்பட்டன. ஆனால் இவர்கள் தங்களின் கலாச்சாரத்தை, பண்பாட்டை வெளிப்படுத்தும் விதமாக நடுகற்களை எடுப்பித்து அக்கல்லில் கலாச்சாரக் கூறுகளான உடை, ஆயுதங்கள், பயன்பாட்டுப்பொருட்கள், நடனம், இசைக்கருவிகள், போன்ற அனைத்துக்கூறுகளையும் செதுக்கிவைத்துள்ளனர். பேரா. முனைவர் சி.சந்திரசேகர் அவர்கள் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சூளகிரி அருகேயுள்ள செம்பரசனஹள்ளி எனுமிடத்தில் 80க்கும் மேற்பட்ட நடுகற்களைக் கண்டறிந்தார் இது குறுமன்களின் வழிபாட்டுத்தலமாகும். வேறு எந்ந பழங்குடிகளோ, சமூகமோ இவ்வளவு நடுகற்களை உருவாக்கவி;ல்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு நாடோடிச் சமூகம் இவ்வளவு நடுகற்களை உருவாக்கியது வியப்பளிக்கிறது.

 

குறுமன்ஸ் நடுகல் - எரம்பாடி.

           ஒரு நடுகல்லை உருவாக்க ஏராளமான காலமும், பொருளும், பொறுமையும் தேவை, எனில் 80க்கும் மேற்பட்ட நடுகற்களை உருவாக்க வேண்டுமெனில் நிச்சயமாக நிலைத்த வாழ்க்கையையும், வளமான பொருளாதரத்தையும், அமைதியான சமூகத்தையும், திறமையான தொழில்வல்லுநர்களையும் கொண்ட சமூகத்தாலேயே முடியும். அதுமட்டுமல்ல இந்நடுகற்களில் காட்டப்படும் கலாச்சாரக் கூறுகளை இன்றளவும் பின்பற்றுகின்ற சமூகமாக குறுமன்கள் விளங்குகின்றனர் என்பதிலிருந்தும், இவர்களின் புலம்பெயர் கோட்பாட்னை மறுக்கின்றார், பேரா. முனைவர் சி.சந்திரசேகர். இவர்களது பூர்வீகம் தமிழகமே என்றும், அதற்கு சங்க இலக்கியங்களில் பயின்றுவரும் சொல்லாடல்களேச் சான்றாகும். மேலும் கர்நாடக வரலாற்றாளர்களே புலம்பெயர் கோட்பாட்டினை வலியுறுத்துகின்றனர் எனக் குறிப்பிடுகின்றார்.

முடிவுரை 

     இனங்கலப்பைப் பற்றி ஆராயும் க்வார்டரிப்பேர் (Quaertaages) பின்வருமாறு குறிப்பிடுகின்றார், பெரும்பாலும் முழுக்க முழுக்கப் பாதுகாக்கப்பட்ட நிலையில் தங்களின், இனக்கூறுகள் அனைத்தையும் கொண்டு விளங்கும் பழங்குடிகளில் குறுமன்ஸ் இன மக்களும் ஒருவராவர் என்கின்றார். இக்கருத்தைதான்  பேரா. முனைவர் சி.சந்திரசேகர் வலியுறுத்துகின்றார். குறுமன்ஸ் தமிழகத்தை பூர்வீகமாக கொண்டவர்களோ, கர்நாடகத்தைப் பூர்வீகமாக கொண்டவர்களோ பெருங்கற்கால பண்பாட்டை பரப்பியவர்கள் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

துணை நூட்கள்:

1. முனைவர். தி. சுப்பிரமணியன், “தமிழகத்தில் பெருங்கற்காலப் பண்பாடு” நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை. 2011.

2. முனைவர். தி. சுப்பிரமணியன், “தமிழகத்தில் தொல்லியல் வராலாறு” நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை. 2009.

3.  A. Sundra, “Early chamber tombs of South India”, Delhi, 1975.

4. B. Narashimaiya, “Neolithic and Megalithic Culture of Tamilnadu”, Sandeep Prakasan, Delhi. 1980.

5. B.R. GuruRaja Rao,”Megalithic culture of South India”, University of Mysore, 1972.

6. L.S. Leshunik,”South Indian Megalithic Burials”, Framz steiner vettiggmb, Weisbanders, 1974.

7.K.G.Krishnan, “Kurumbas in Southeast Asia”, In Archaeological Studies, Vol.III.Mysore.1978.

8. Prof.C.Chandrasekar, invention- “Megalithic graves dating back 3000 years- Near Hogenakkal”- Indian Express, April,3rd ,2013.

9.  Prof.C.Chandrasekar, invention- “Kurumans have Indus Valley connection”- Indian Express, Dec. 18th ,2014.

10. பேரா.சி. சந்திரசேகர், 13-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த குறுமள்ஸ் இன மக்களின் முதல் கல்வெட்டு கண்டுபிடிப்பு – கெலமங்கலம் , தினகரன் நாழிதழ், தேதி. 25;.08.2016.