ஜூலை 2024 இதழுக்கு ஆய்வுக்கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன

களவு வாழ்க்கையில் தலைவி

 இரா.முருகேஸ்வரி முழுநேர முனைவர் பட்ட ஆய்வாளர் ஸ்ரீ பராசக்தி மகளிர் கல்லூரி (தன்னாட்சி), குற்றாலம்-627 802 (மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்துடன் இணைவு பெற்றது) திருநெல்வேலி 08 May 2021 Read Full PDF

இரா.முருகேஸ்வரி

முழுநேர முனைவர் பட்ட ஆய்வாளர், ஸ்ரீ பராசக்தி மகளிர் கல்லூரி (தன்னாட்சி), குற்றாலம்-627 802, (மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்துடன் இணைவு பெற்றது), திருநெல்வேலி, தமிழ்நாடு,இந்தியா

*

நெறியாளர்

முனைவர்.ஹ.அல்தாஜ்பேகம்

உதவிப்பேராசிரியர்,ஸ்ரீ பராசக்தி மகளிர் கல்லூரி (தன்னாட்சி), குற்றாலம்-627 802,(மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்துடன் இணைவு பெற்றது),திருநெல்வேலி, தமிழ்நாடு,இந்தியா

*

ஆய்வுச்சுருக்கம்

“களவு வாழ்க்கையில் தலைவி” என்ற இக்கட்டுரையில் தொல்காப்பியம், நற்றிணை, குறுந்தொகை, கலித்தொகையில் குறியிடம் கூறுதல,; குறியிடம் தலைவி சுட்டியது, பகற்குறி, பகற்குறி இடையீடு, குறியிடம் பற்றிய நினைவு, தலைவன் பிரிவால் வருந்துதல், தலைவி கலங்கியது போன்றவை கொடுக்கப்பட்டுள்ளது. கட்டுரை முடிவில் தொகுப்புரையும்,  முடிவுரையும், கொடுக்கப்பட்டுள்ளன.

 

திறவுச்சொற்கள்

     களவு, குறியிடம், பகற்புணர், நீழல், புணரி, புன்னைமலர், பாங்கன், ஆரல்மீன், அணங்கு, சூளுறவு, ஏனல்.

முன்னுரை

     அக இலக்கியங்களில் தலைவியின் பங்கு மிக நுட்பமானதாகும்.  தலைவியின் வெளிப்பாடுகள் உரையாடல் திறன், ஒழுக்கமாண்புகள் அனைத்தும் தமிழ் மண்ணுக்கே உரியனவாக இருக்கின்றன.  தலைவனுக்கு அடுத்து முக்கியமாக விளங்குபவள் தலைவி ஆவாள்.  அகப்பொருள் நூல்களில் காணப்பெறும் தலைவி அழகும், அறிவும் சிறந்தவளாக காணப்படுகின்றாள்.  தலைவியை குறித்துத் தொல்காப்பியர் பல இடங்களில் சிறப்பாகக் குறிப்பிட்டுள்ளார்.

கற்பும் காமமும் நற்பால் ஒழுக்கமும்

    மெல்லியற் பொறையும் நிறையும் வல்லிதின்

    விருந்துபுறந் தருதலும் சுற்றம் ஓம்பலும் பிறவும்.1

என்ற நூற்பாவின் மூலம் தலைவியின் பண்புகள் குறிப்பிடப் பெற்றுள்ளதைக் காணலாம். தலைவியின் களவு வாழ்க்கை என்பதை தலைவியின் கூற்றுகள் வாயிலாக இந்த கட்டுரை ஆராயப்படுகிறது.

குறியிடம் கூறுதல்

     தலைவி குறியிடம் குறித்தல் என்பது இலக்கண மரபாகும்.  குறியிடம் நேர்ந்ததை தோழி மூலமாகவும், பாங்கன் மூலமாகவும் தலைவனுக்கு அறிவிக்கிறாள்.  அவ்வாறின்றி அவளே நேரடியாகத் தலைவனுக்குக் குறியிடம் கூறுதலும் நிகழ்கிறதை,

     பகற்புணர் களனே புறனென மொழிப

    அவனறி வுணர வருவழி யான"2    

என்ற நூற்பா தலைவி அறிந்தவிடத்தே குறியிடம் அமைதல் வேண்டும் என்று கூறுகிறது.  அதற்கிணங்க தலைவி பசு மேய்த்தவிடத்திற்குத் தலைவனை வரச் சொல்கிறாள்.

குறியிடம் தலைவி சுட்டியது

     தலைவி தலைவனை வழியில் கண்டு பேசிய பின் மறுநாள் தலைவனை சந்திப்பதற்கான குறியிடம் தலைவி சுட்டியதை,

     பாங்கு அரும் பாட்டங்கால் கன்றொடு செல்வேம்; எம்

    தாம்பின் ஒருதலை பற்றினை, ஈங்கு எம்மை

    ................................

    கலத் தொடு யாம் செல்வுழி நாடி, புலத்தும்

    வருவையால் - நாண்இலி! நீ3     

தலைவி பசுக்களை மேய்க்கும் ஆயர் குலத்துப் பெண்ணாக இருக்கிறாள்.  அவளது குறியிடம் பசு மேய்த்த இடம் குறியிடமாகும். தலைவி தலைவனுக்கு குறியிடம் கூறுவதை அறிய முடிகிறது.

பகற்குறி  

கடற்கரைச் சோலையின் புன்னைமலர் வீழ்ந்துள்ள மணல்மேடு நீழல் பகற்குறிக்கு உரிய இடமாகச் சுட்டப்பட்டுள்ளதை,

இதுமற்று எவனோ – தோழி! – முதுநீர்ப்

புணரி திளைக்கும் புள்இமிழ் கானல்,

இணர்வீழ் புன்னை எக்கர் நீழல்,

புணர்குறி வாய்த்த ஞான்றைக் கொண்கற்

கண்டனமன், எம்கண்ணே; அவன் சொல்

கேட்டனமன் எம்செவியே; மற்று – அவன்

மணப்பின் மாண்நலம் எய்தி,

தணப்பின் ஞெகிழ்ப, எம்தடமென் தோளே?4       

கடலின் அலைகள் தழுவுகின்ற, பறவைகள் ஒலிக்கும் கடற்கரைச் சோலையில் கொத்துக்களாய்ப் பூத்துள்ள புன்னையின் மலர்கள் வீழ்ந்து காணப்படும் மணல்மேட்டில் புணர்வதற்குரிய குறி வாய்க்கப்பெற்ற காலத்தில் தலைவியின் கண்கள் தலைவனை பார்த்தன. செவிகள் தலைவன் உரைத்த மொழிகளை கேட்டன. காட்சிக் கலப்பினால் கண்களும், கேள்விக் கலப்;பினால் செவிகளும் நலம் பெற்றன. பார்த்தலும், கேட்டலும் இல்லாத தோள்கள் மெலிவுறுதல் வியப்பாக உள்ளது என்று தலைவி தோழியிடம் கூறுவதைக் காண முடிகிறது.

பகற்குறி இடையீடு

தலைவன் இருகுறியிடத்தும் வந்து செல்லுதல் தடைப்பட்டது.  தலைவனைக் காணுதல் வேண்டும் என்ற வேட்கை மிகுந்த தலைவி,

கொடுங் குரற் குறைத்த செவ் வாய்ப் பைங் கிளி!

அஞ்சல் ஓம்பி, ஆர் பதம் கொண்டு,

....................................

கானக் குறவர் மட மகள்

ஏனல் காவல் ஆயினள் எனவே.5  

தலைவன் வந்து திருமணம் செய்து கொள்ளாமையால் மீண்டும் தினைப்புனம்; காக்க நேர்ந்தது என்னும் குறிப்புத் தோன்றக் கிளியிடம் தன் குறை கூற தலைவனைப் பிரிந்திருக்கும் தலைவி தன்னைக் காண வருமாறு பறவைகளிடம் தூது சொல்வதையும், தோழி, பாங்கன் ஆகியோர் தவிர பிறவற்றின் மூலமாகவும் தூது சொல்லும்போது தலைவியின் பிரிவுத் துயர் அளவுகடந்து காணப்படுகிறது என்பதையும் அறிய முடிகிறது.

குறியிடம் பற்றிய நினைவு

     குறியிடத்தில் நினைவு அகலாத தலைவியின் தன்மையை,

     நாள் மழை தலைஇய நல் நெடுங் குன்றத்து

    மால் கடல் திரையில் இழிதரும் அருவி

    ..........................................

    தீம் தொடை நரம்பின் இமிரும்

    வான் தோய் வெற்பன் மார்பு அணங்கு எனவே6

      பகற்குறியில் வந்து சென்ற தலைவனின் பிரிவினால் வருத்தமுற்று இருந்த தலைவி, ஒருநாள் தலைவன் வந்து சிறைப்புறத்தானாக நிற்க தலைவன் கேட்குமாறு தோழியிடம் ‘நானும் எனது தாயும் அருவி இறங்கும் மலைப்பாதையில் நடந்து சென்ற போது தலைவனுடன் நான் இருந்து இன்பம் நுகர்ந்த இடத்திற்கு வந்ததும் என்னையும் அறியாமல் கண்கள் கலங்கின.  அதைக் கண்ட என் தாய் என்னைத் தேற்றும் விதமாக என்ன காரணத்திற்காக அழுகிறாய் எனக் கேட்டாள்.  நான் இம்மலையிடத்தே தலைவனது மார்பைத் தழுவியிருந்தேன்.  தலைவன் பிரிவினால் இவ்விடம் வந்ததும் அந்நினைவு கருதி கண்கள் நீர் சொரிகின்றன என்று சொல்ல வாயெடுத்தேன்.  ஆனால் சுய நினைவு ஏற்பட நிறுத்திக் கொண்டேன் என்று தலைவி தோழியிடம் கூறுவதை அறிய முடிகிறது.

தலைவன் பிரிவால் வருந்துதல்

     குறியிடத்து இன்பம் நுகர்ந்த தலைவி தலைவனின் பிரிவால் வருந்துவதுண்டு.  குறியிடத்து மீளும் தலைவனது பிரிவை ஆற்றாதவளாய் தலைவி தன் நெஞ்சிற்குக் கூறியதை,

     தேரும் செல் புறம் மறையும்; ஊரொடு

    யாங்கு ஆவதுகொல் தானே – தேம் பட

    ஊது வண்டு இமிரும் கோதை மார்பின்,

    மின் இவர் கொடும் பூண், கொண்கனொடு

    இன் நகை மேவி, நாம் ஆடிய பொழிலே?7           

உடம்பின்கண் மிக்குத் தோன்றிய காம உணர்வு, அக்காம உணர்வைத் தணிக்கும் வகையறியாது பின்னே நின்று தொழுது நீங்குமாறு மாலைப் பொழுதும் மறைந்தது.  மணிகள் பலவும் ஒலிப்பக் குதிரைகள் பூட்டப்பட்ட தலைவனின் தேரும் கண்ணில் படாதவாறு தான் செல்லுகின்ற புறப்பகுதியும் தெரியாதவாறு மறையும்.  ஆதலால் இந்த ஊரும், தேனை விரும்பி மலர்களிற் படுகின்ற வண்டுகள் ஒலிக்கும்.  இனிய மகிழ்ச்சி பெருக விளையாடிய சோலையும், இனி எப்படி காணப்படுமோ? என்ற ஏக்கத்துடன் தலைவி தனக்குள்ளே சொல்லிக் கொள்வதை அறிய முடிகிறது.

தலைவி கலங்கியது

     தலைவி தோழியை நோக்கி தலைவன் என்னைக் களவுப் புணர்ச்சியில் கூடிய பொழுது அவ்விடத்தில் சாட்சியாகக் கூடியவர் ஒருவரும் இல்லை. அது நிகழ்ந்த களத்தில் (இடத்தில்) இருந்தவர் தலைவன் ஒருவரே என்பதை,   

யாரும் இல்லைத் தானே கள்வன்

    தானது பொய்ப்பின் யானெவன் செய்கோ8

     ஓடை நீரில் ஆரல்மீன் வருகிறதா என்று கூர்ந்துப் பார்த்துக் கொண்டிருந்த தினைத்தாள் போன்ற சிறிய கால்களுடைய கொக்கு மட்டும் அவ்விடத்தில் சாட்சிக்குப் பயன்படாத நாரை கூட தன் உணவின் பொருட்டு ஆரல் மீனை நோக்கிய வண்ணம் இருந்தது அது தலைவனுடைய சூளுறவினைக் கேட்டிராது நான் என்ன செய்வேன் எனத் தலைவி கலங்கி தோழியிடம் கூறுகிறாள் தலைவன் விரைவில் மணந்து கொள்வேன் என்ற உறுதிமொழியைப் பொய் ஆக்கிவிட்டால் என் நிலை என்னவாகும்? எனக் கலக்கமடைந்து தனக்கு சாட்சி இல்லாத ஆதரவில்லாத நிலையை தலைவி தோழியிடம் கூறியதை அறிய முடிகிறது.

இயல் முடிபுகள்

    தலைவி பெண்மைக்குரிய பண்பாடுகளைப் பேணிக்காப்பவளாக விளங்கியுள்ளாள்.  தலைவனைக் கண்டவுடன் தனது மனதைப் பறிகொடுத்து காதல் கொள்கிறாள்.  அதை முதலில் தனது தோழியிடம் கூட மறைத்துள்ளாள் என்பதனை அறியமுடிகிறது.

    தலைவி கல்விப் புலமையும், ஆளுமைப் பண்பும் உடையவளாக அமைந்துள்ளாள்.  தலைவன் மீது அசையாத நம்பிக்கை உடையவளாகவும், தலைவனை அடைய எவ்வித துன்பங்களையும் எதிர்கொள்ளும் மனவலிமையும் உடையவளாகக் காணப்படுகிறாள்.

    தலைவிக் கூற்றுகளில் உள்ளுறை, இறைச்சி, உவமம், குறிப்புமொழி போன்றவை நயமாகக் கையாளப்பட்டுள்ளன.

    இயற்கையும் அஃறிணையும் தங்களில் ஒருவராகவே கருதப்பட்டுள்ளன.  தமிழ்ப் புலவர் இயற்கைக்கு அஃறிணைக்கு முன்னுரிமை கொடுத்துப் படைத்துள்ளனர். 

முடிவுரை

      அகப்பொருள் நூல்களில் காணப்பெறும் தலைவி அழகும், அறிவும் சிறந்தவளாக காணப்படுகிறாள். தலைவி குறியிடம் குறித்தல் என்பது இலக்கண மரபாகும்.  குறியிடம் நேர்ந்ததை தோழி மூலமாகவும், பாங்கன் மூலமாகவும் தலைவனுக்கு அறிவிக்கிறாள்.  அவ்வாறின்றி  தலைவி நேரடியாகத் தலைவனுக்குக் குறியிடம் கூறுதலும் நிகழ்கிறதை, குறியிடத்தில் நினைவு அகலாத தலைவியின் தன்மை குறியிடத்தில் இன்பம் நுகர்ந்த தலைவி தலைவனின் பிரிவால் வருந்துவதுண்டு,

அடிக்குறிப்புகள்

1.    தொல்., கற்பு. 1098

2.   தொல்., களவு. 1078

3.   கலி., பா.எ, 116 அடிகள் 1-17

4.   குறுந்., பா.எ, 299

5.   நற் பா.எ, 102

6.   நற் பா.எ, 17 அடிகள் 1-12

7.    நற் பா.எ, 187 அடிகள் 6-10

8.   குறுந்., பா.எ, 25 அடிகள் 1-2

 

துணைநூற்பட்டியல்

    முனைவர் கு.வெ.பாலசுப்பிரமணியன், சங்க இலக்கியம் நற்றிணை, முதற்பதிப்பு : ஏப்ரல், 2004, ஐந்தாம் பதிப்பு : அக்N;டாபர், 2014, ஆறாம் பதிப்பு : அக்டோபர், 2017, பதிப்பக முகவரி : பாவை பிரிண்டர்ஸ் (பி) லிட்., 16-142, ஜானி ஜான் கான் சாலை, இராயப்பேட்டை, சென்னை-14

    முனைவர் வி.நாகராசன், சங்க இலக்கியம் குறுந்தொகை தொகுதி–1, முதற்பதிப்பு - ஏப்ரல் 2004, ஐந்தாம் பதிப்பு - அக்டோபர் 2014, ஆறாம் பதிப்பு - அக்டோபர் 2017, பதிப்பக முகவரி : பாவை பிரிண்டர்ஸ் (பி) லிட்., 16-142, ஜானி ஜான் கான் சாலை, இராயப்பேட்டை, சென்னை-14

    முனைவர் வி.நாகராசன், சங்க இலக்கியம் குறுந்தொகை தொகுதி–2, முதற்பதிப்பு - ஏப்ரல் 2004, ஐந்தாம் பதிப்பு - அக்டோபர் 2014, ஆறாம் பதிப்பு - அக்டோபர் 2017, பதிப்பக முகவரி : பாவை பிரிண்டர்ஸ் (பி) லிட்., 16-142, ஜானி ஜான் கான் சாலை, இராயப்பேட்டை, சென்னை-14

    முனைவர். ச.வே. சுப்பிரமணியன், தொல்காப்பியம் தெளிவுரை, முதல் பதிப்பு: 23 மே 1998, பதினொன்றாம் பதிப்பு: அக்டோபர் 2010, திருவள்ளுவர் ஆண்டு: 2041, பதிப்பக முகவரி: மணிவாசகர் பதிப்பகம், 31, சிங்கர் தெரு, பாரிமுனை, சென்னை – 600108.

    முனைவர் அ.விசுவநாதன் சங்க இலக்கியம் கலித்தொகை முதற்பதிப்பு - ஏப்ரல் 2004, ஐந்தாம் பதிப்பு - அக்டோபர் 2014, ஆறாம் பதிப்பு - அக்டோபர் 2017, பதிப்பக முகவரி : பாவை பிரிண்டர்ஸ் (பி) லிட்., 16-142, ஜானி ஜான் கான் சாலை, இராயப்பேட்டை, சென்னை-14