ஜூலை 2024 இதழுக்கு ஆய்வுக்கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன

பத்துப்பாடல்கள் சுட்டும் இசைக்கருவிகள்

திருமதி. ஜனனி. செந்தூரன்  முதுநிலை விரிவுரையாளர்,இசைத்துறை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் 26 Jul 2021 Read Full PDF

திருமதி. ஜனனி. செந்தூரன் 
முதுநிலை விரிவுரையாளர்,இசைத்துறை
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்.

ஆய்வுச்சுருக்கம்: 
சங்ககாலத்திற்கு முன்பே தமிழிசையின் தோற்றத்தினை அறியமுடிகின்றது. கி.மு.இரண்டு நூற்றாண்டுகளிலும் கி.பி இரண்டு நூற்றாண்டுகளிலும் காணப்பட்ட இசைமுறைகளை சங்க இலக்கியங்கள் ஊடாக அறியமுடிகின்றது. உலகத்திற்கே பொதுவாக விளங்கும் இசையை அக்காலத்து மக்களின் வாழ்க்கை முறைகளுக்கும் சூழலுக்கும் ஏற்ப இசைமரபுகளை ஏற்படுத்தியுள்ளனர். மனிதவாழ்வின் வளர்ச்சியைக் காட்டும் கண்ணாடியாகக்கலை விளங்குகின்றது. இக்காலத்தில் எழுந்த நூல்கள் பெரும் தொகுதிகளாகத் தொகுக்கப்பட்டு எட்டுத்தொகை பத்துப்பாட்டு பதினெண்கீழ்க்கணக்கு நூல்களாகத் திகழ்கின்றன. 
திறவுச் சொற்கள்: 
சங்ககாலம் பத்துப்பாட்டு இசைக்கருவிகள் சங்கஇலக்கியங்கள். 
முன்னுரை: 
பண்டைய காலத்திலிருந்து இக்காலம் வரையில் ஏராளமான இசைக்கருவிகள் தமிழர்களால் பயன்படுத்தப்பட்டுவருகின்றன. சங்க காலத்தில் எழுந்த பல்வேறு இலக்கியங்களிலும் பல வகையான இசைக்கருவிகள் வேறு வேறு சந்தர்ப்பங்களில் பயன்படுத்தப்பட்டு வந்தன என்ற குறிப்புக்கள் காணப்படுகின்றன. அவற்றுள் அக்காலத்தில் எழுந்த பத்துப்பாட்டு இலக்கியங்களில் எவ்வாறான இசைக்கருவிகள் பயன்பட்டன என்பதையும் இவை இக்காலத்தில் உள்ளனவா அல்லது மருவி வேறு பெயர்களில் காணப்படுகின்றனவா என்பதை ஆராய்வதாக இக்கட்டுரை அமைகின்றது. 
சங்ககாலம்: 
கி.மு 500ஆம் நூற்றாண்டு தொடக்கம் கி.பி 200ஆம் நூற்றாண்டு வரையான காலப்பகுதி சங்ககாலம் எனக் கருதப்படுகின்றது. இக்காலத்தில் எழுந்த இலக்கியங்கள் நானூறுக்கு மேற்பட்ட புலவர்களால் பாடப்பெற்ற 2380 தனிப்பாடல்களைக் கொண்டுள்ள தொகுப்பாகும். இக்காலத்தில் பலதரப்பட்ட தொழில் நிலையிலுள்ளோரும் மன்னர்களும் பெண்களும் புலவர்களாகத் திகழ்ந்தனர். அச்சமுதாய வாழ்க்கை முறையைக் கருப்பொருளாகக் கொண்டு இலக்கியங்கள் எழுதப்பட்டது. அக்கால வாழ்க்கை காதல் வீரம் போர் வணிகம் ஆட்சியமைப்பு போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டமைந்துள்ளது. இக்காலத்தில் எழுந்த எட்டுத்தொகை பத்துப்பாட்டு பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் என்பன பெரும் தொகுதிகளாகத் தொகுக்கப்பட்டுள்ளன. சங்ககாலமாகிய அந்தப் பழங்காலத்தில் முதற்சங்கம் இடைச்சங்கம் கடைச்சங்கம் என்ற மூன்று நிலைகளிலும் எந்தச் சங்கத்தில் இசை இருந்ததென கூறமுடியாது விட்டாலும் சங்கத்தில் இசை இருந்தது என்பது அக்கால இலக்கியங்கள் மூலமாக அறியப்படுகின்றது. 
காலத்தால் முந்திய மிகவும் பழமையான தமிழ் நூலாகத் தொல்காப்பியம் விளங்குகின்றது. இது இரண்டாம் இடைச்சங்கத்து நூலாகும். இயல் இசை நாடகம் என்னும் முத்தமிழில் இயல் ஒன்றைப் பற்றியே பேசுகின்றது. இசைச் செய்திகள் மிகவும் அருமையாகவே காணப்படுகின்றது. இது ஓர் இலக்கண நூலாகக் கருதப்படுகின்றது தொல்காப்பியர் இலக்கணம் செய்யும் போது உலகவழக்கு செய்யுள் வழக்கு இரண்டையும் நன்கு ஆராய்ந்து செய்துள்ளார். உலக வழக்கின் மூலம் தான் இசைச் செய்திகள் இடம்பெறுகின்றன. அதாவது ஐவகை நிலங்களைக் குறிப்பிட்டு அவற்றிற்குரிய யாழ் பறை இசை என்பவற்றைக் குறிப்பிட்டுள்ளார். இதனை 
‘தெய்வ முணாவே மாமரம் புட்பறை 
செய்தி யாழின் பகுதியொடு தொகைஇ 
இவ்வகை பிறவும் கருவென மொழிப’ (111: அகத ;: 18) என்னும் பாடல் விளக்குகின்றது. 
இவற்றைவிட நிலங்களுக்குரிய பண்கள் பற்றியும் குறிப்பிட்டுள்ளார். தொல்காப்பியத்திற்குப் பின் எழுந்த நூல்களில் ஒன்றாகப் பத்துப்பாட்டு நூல்கள் விளங்குகின்றது. இவற்றிலே கூறப்பட்டுள்ள இசைக்கருவிகள் பற்றிய செய்திகளை நோக்குவோம். 
பத்துப்பட்டு: 
பாடல்களில் அடிகளின் எண்ணிக்கை குறைந்த அளவில் கொண்டது எட்டுத்தொகை என்றும் பாடல்களின் அடிகள் நீண்ட அளவில் அமைந்த பாடல் தொகுதிகள் பத்துப்பாட்டுக்கள் எனவும் அழைக்கப்பட்டது. பத்துப்பாட்டு தொகுப்பினுள் பத்துப்பாட்டிற்கும் தனித்தனிப் பெயர்கள் உண்டு. இப்பத்துக்கும் நச்சினார்க்கினியரால் சிறப்பான உரை எழுதப்பட்டது. மூலமும் உரையும் டாக்டர். உ.வே. சாமிநாதையரவர்களால் பதிப்பிக்கப்பட்டுள்ளது. பத்துப்பாட்டுக்களாவன திருமுருகாற்றுப்படை பொருநராற்றுப்படை சிறுபாணாற்றுப்படை பெரும்பாணாற்றுப்படை முல்லைப்பாட்டு மதுரைக்காஞ்சி நெடுநல்வாடை குறிஞ்சிப்பாட்டு பட்டினப்பாலை மலைபடுகடாம் என்பனவாகும். 
திருமுருகாற்றுப்படை:
மதுரைக் கணக்காயனார் மகன் நக்கீரனால் பாடப்பெற்றது திருமுருகாற்றுப்படை ஆகும். வீடுபேறு பெறுவதற்காக சமைந்தானோர் இரவலனை வீடுபெற்றான் ஒருவன் முருகனிடத்தே வழிப்படுத்துதல் என்பது இதன் பொருளாகும். திருவேரகத்தில் முறையறிந்து அடக்கத்துடன் வாழும் மறையறிவு பெற்ற மறையவர் நாவினால் முருகனின் புகழை நாவினால் புகழ்ந்து பாடிப் பரவுவதை இங்கு காணமுடிகிறது. (பெருமாள். ஏ.என் பக்.58 1984) 
‘தாறெழுந் தடக்கிய அருமறைக் 
கேள்வி நாவியன் மருங்கின் நவிலப் பாடி’ (திருமு: 186-187) 
இக்காலம் போர் மிகுந்த காலமாகையால் இக்காலத்தில் போருக்குச் சென்ற மன்னரைப் புலவர்களும் பாணரும் பாவலர்களும் மன்னரைப் புகழ்ந்து பாடிப் பொன் பொருள் பெறுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். போர்க்களத்தில் நடந்த வீரப்போரைச் சிறப்பித்து வெற்றிவாகை சூடிய மன்னரைப் பாணர்கள் புகழ்ந்து பாடும் பாடலை விறற்களப் பாடல் என அழைத்தனர். மன்னரைப் போன்று முருகப்பெருமானையும் சிறப்பித்துப் பாடும் பாடல்கள் திருமுருகாற்றுப்படைப் பாடலில் இடம்பெற்றுள்ளது. சூரனைக் களத்தில் வென்று வெற்றியீட்டிய முருகப்பெருமானைச் சிறப்பித்து சூரமகளிர் விறற்களப்பாடல் பாடியதை
‘சீர்திகழ் சிலம்பகஞ் சிலம்பப் பாடிச் 
சூரர மகளிர் ஆடும் சோலை’ (திருமு: 40-41) என்னும் பாடல் மூலம் அறியப்படுகின்றது. (பெருமாள். ஏ.என் பக்.60 1984) 
முருகனுக்காகக் குழலை ஊதி கொம்பைக் குறித்துச் சிறிய பல்லியங்களை இசைக்கிறார்கள். சங்கநூலில் நெடும்பல்லியத்தனார் என்னும் புலவர் பாடியிருப்பதால் நெடும்பல்லியம் என்றும் மற்றும் குறும்பல்லியம் எனவும் இருவகைகள் இருந்தன என்பதை அறிய முடிகின்றது. (அருணாசலம்.மு பக்.36 2009) 
குறிஞ்சிநில மக்கள் வேலனுக்கு வெறியாட்டு நிகழ்த்துவது வழக்கமாயிருந்தது. யாருக்காவது தீரா நோய்கள் ஏற்பட்டால் அந்நோய்தீர வேலனை அழைத்து வெறியாட்டு நடத்துவர். இதற்குப் பாடப்படும் பாடல் அச்ச உணர்வையும் அவல உணர்வையும் தருவதாக அமைகிறது. இதற்குப் பலவிதமான இசைக் கருவிகள் பெருமுழக்கத்துடன் பயன்படுத்தப்படுகின்றன. இதனை 
‘நளிமலைச் சிலம்பின் நன்னகர் வாழ்த்தி 
நறும்புகை எடுத்துக் குறிஞ்சி பாடி’ 
‘இமிழிசை அருவியோ டின்னியங் கறங்க 
உருவப் பல்பூத் தூஉய் வெருவர’ (திருமு: 238-241) என்னும் பாடல் மூலம் அறியப்படுகின்றது. 
இதிலிருந்து இன்னியம் முழங்கப்பட்டதையும் அறிய முடிகின்றது. மேலும் முருகியம் என்ற ஓர் சிறப்பான இசைக்கருவியும் இக்காலத்தில் பயன்படுத்தப்பட்டதாக அறிய முடிகின்றது. இது முருகனுக்கு வெறியாட்டு எடுப்பதற்குரிய சிறப்புப் பறை என அறியப்படுகின்றது. (அருணாசலம்.மு 2009 பக். 36) 
மேலும் குறிஞ்சி நிலத்தில் விளைந்த தினைப் பயிரைக் காப்பதற்காக இரவில் தொண்டகச் சிறுபறை அடிக்கப்படும். தொண்டகமாகிய சிறுபறையினது தாளத்திற்கு மக்கள் குரவையாடுகிறார்கள். இதன் ஒலி பெண்கள் மகிழ்ச்சியில் ஆடுவதற்கும் விலங்குகளை அச்சமூட்டி விரட்டுவதற்கும் அடிக்கப்படுகின்றது. இவ்வாறு குரவையாடும் போது தொண்டகச்சிறுபறை முழக்கப்படும் செய்தியை ‘குன்றகச் சிறுகுடி கிளையுடன் மகிழ்ந்து 
தொண்டகச் சிறுபறைக் குரவை யயர’ (திருமு: 196-197) என்னும் பாடலின் மூலம் அறியப்படுகின்றது. (அருணாசலம்.மு 2009 பக். 130) 
மேலும் யாழ் பற்றிய செய்தி திருவாவினன்குடியில் இறைவனை யாழ் மீட்டித் துதிசெய்ததிலிருந்து அறியமுடிகிறது. 
‘செவிநேர்பு வைத்த செய்வுறு திவவின் 
நல்லியாழ் நவின்ற நயனுடை நெஞ்சின்….’ (திருமு: 140 -141) என்னும் பாடலிலிருந்து யாழிசையோடு இணைந்து இறைவனைத் துதித்துப் பரவும் நிலை காணப்படுகின்றது. (பெருமாள். ஏ.என் பக்.98 1984) 
துளைக்கருவிகளில் ஒன்றான சங்கு முருகனை சங்கொலித்து வணக்கம் செலுத்துவதிலிருந்து அறிய முடிகின்றது. அத்துடன் பல இசைக்கருவிகள் சேர்த்து இசைக்கப்படும் முறையும் இருந்ததைப் பின்வரும் பாடலிலிருந்து உணரமுடிகின்றது. 
‘அந்தரப் பல்லியங் கறங்கத் திண்காழ்
வயிரெழுந் திசைப்ப வால்வளை ஞரல 
உரந்தலை கொண்ட வுருமிடி முரசமொடு 
பல்பொறி மஞ்ஞை வெல்கொடி அகவ’ (திருமு: 119-122) இதில் வயிர் வளை முரசம் போன்ற கருவிகள் குறிப்பிடப்பட்டுள்ளதையும் சங்கொலி ஏனைய வாத்திய ஒலிகளிலிருந்து மாறுபட்டுள்ளதைக் குறிக்க ‘ஞரல’ என்ற சொல்லைப் பயன்படுத்திக் கூறப்பட்டுள்ளதையும் அவதானிக்க முடிகின்றது. (பெருமாள் ஏ.என் பக் 109 1984) 
இவ்வாறாகத் திருமுருகாற்றுப்படையில் தொண்டகச்சிறுபறை இன்னியம் முருகியம் யாழ் சங்கு வயிர் வளை முரசம் போன்ற இசைக்கருவிகள் குறிப்பிடப்பட்டுள்ளதை அறிய முடிகின்றது. 
பொருநராற்றுப்படை:
முடத்தாமக் கண்ணியார் சோழன் கரிகாற்பெருவளத்தானைப் புகழ்ந்து பாடியது. அதாவது கரிகாலனிடத்துப் பெரும் பரிசில் பெற்ற பொருநர் ஒருவர் மற்றொரு பொருநருக்கு கரிகாலனிடத்தில் சென்று பாடிப் பரிசு பெறுமாறு ஆற்றுப்படுத்திய 248 அடிகளைக் கொண்ட பாடலாகும். யாழின் பாகங்களை முறையாகவும் விரிவாகவும் விளக்குகின்ற நூலாகப் பொருநராற்றுப்படை விளங்குகின்றது. நெடும் பாட்டுக்களைக் கொண்ட பத்துப்பாட்டினுள் திருமுருகாற்றுப்படை தவிர்ந்த ஏனைய நான்கு ஆற்றுப்படை நூல்களும் யாழ் பற்றி விரிவாகப் பேசுகின்றது. ஆனால் யாழின் உறுப்புக்களைத் திருத்தமாக உவமையுடன் விளக்கும் நூலாக இது அமைகின்றது. 
‘குளப்புவழி அன்ன கவடுபடு பத்தல்
விளக்குஅழல் உருவின் விசியுறு பச்சை…… 
அணங்கு மெய்ந்நின்ற அமைவரு காட்சி (பொருந: 4-20) 
இதில் பாலையாழ் பற்றிக் குறிப்படப்பட்டுள்ளது. யாழின் உறுப்புக்களான பத்தல் போர்வை ஆணி வறுவாய் மருப்பு வார்க்கட்டு நரம்பு ஆகியவற்றை அழகுடன் உவமையுடன் கூறியுள்ளதை அறிய முடிகின்றது. (அருணாசலம்.மு பக் 37 2009) 
பாணர்கள் யாழ் இசைப்பது போன்று பொருநர் தடாரி என்னும் பறையை இசைக்கின்றனர். கொம்பு ஊதி இசை எழுப்புவோர் கோடியர் என அழைக்கப்படுகின்றனர். பாணர் விடியலில் தடாரியைக் கொட்டிப் பாடுங்காட்சியைப் பின்வரும் பாடலின் மூலம் அறியப்படுகின்றது. 
‘கைகச டிருந்தவென் கண்ணகன் தடாரி 
இருசீர்ப் பாணிக் கேற்ப விரிகதிர் 
வெள்ளி முளைத்த நள்ளிருள் விடியல் 
ஒன்றியான் பெட்டா வளவையின்’ (பொருந: 70-73) 
அதாவது தடாரியின் கண் அகன்று விரிந்தது. அதை அடிக்கும் போது கைவிரலின் தழும்பு கசடாகக் காட்சி தருகின்றது. மேலும் இரு சீர்ப்பாணியாகிய இரட்டைத்தாளத்திற்கு ஏற்றவாறு தட்டும்போது தாளவிசை சிறக்கின்றது. இதனைப் பரிசுபெறும் நோக்கில் விடியற்காலையில் இசைக்கப்படுகின்றது. (பெருமாள் ஏ.என் பக் 140 1984) 
மேலும் துடி என்ற இசைக்கருவியை யானையின் பாதத்திற்கு உவமையாகக் கூறியுள்ளதைப் பின்வரும் பாடலின் மூலம் அறியப்படுகின்றது. 
‘துடியடி யன்ன தூங்குநடை குழவியொடு 
பிடிபுணர் வேழம் பெட்டவை கொள்கென’ (பொருந: 125-126) துடி என்னும் இக்கருவி உடுக்கினையே குறிக்கின்றது. (பெருமாள். ஏ.என் பக்.138 1984) 
இவ்வாறாகப் பொருநராற்றுப்படையில் யாழ் தடாரி துடி போன்ற இசைக்கருவிகள் பற்றிய குறிப்புக்கள் காணப்படுகின்றன. 
சிறுபாணாற்றுப்படை:
ஒய்மானாட்டுக் குறிஞ்சிக் கோமான் நல்லியக்கோடனை இடைக்கழிநாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது சிறுபாணாற்றுப்படை ஆகும். சீறியாழ்ப்பாணர் ஒருவர் மற்றொரு சீறியாழ்ப்பாணரைப் பரிசு பெறும் பொருட்டு ஆற்றுப்படுத்திய 269 அடிகளைக் கொண்ட பாடலாக அமைகிறது. ‘சிறுபாண்’ என்பதற்கு இரு காரணங்கள் உண்டு. ஒன்று இப்பாடல்களின் அடிகள் அளவால் குறுகியது. மற்றையது இங்கு கூறப்படும் பாணர்கள் சீறியாழ் இசைப்பவர்கள். இக்காரணங்களால் இது சிறுபாணாற்றுப்படை என அழைக்கப்படுகின்றது. பொற்கம்பியினை ஒத்த முறுக்கடங்கிய நரம்பின் இனிய ஓசையையுடைய சீறியாழை இடப்பக்கத்தே தழுவி நைவளம் பண்ணினை இனிமையாகப் பாலை யாழில் இசைக்கின்றனர். (அருணாசலம்.மு பக்.38 2009) 
சிறுபாணாற்றுப்படையிலும் யாழின் பாகங்களை பொருநராற்றுப்படைக்கு மாறுபடாமல் அதே கருத்தை வேறு உவமைகளைக் கொண்டு விளக்குகின்றது. அதாவது 
‘பைங்கண் ஊகம் பாம்புபிடித்தன்ன’ (சிறுபா: 221) என்பதிலிருந்து கருமைநிறமுடைய குடம் போன்ற பொல்லம் பகுதியிலிருந்து நீண்டுள்ள தண்டுப்பகுதியில் வார் சுற்றப்பட்டுள்ள முறையை விளக்கிநிற்கின்றது. 
மேலும் ‘அங்கோட்டுச் செறிந்த அவிழ்ந்துவீங்கு திவவின்
மணிநிரைத் தன்ன அமைப்பின் வாயமைத்து….. 
பாடுதுறை முற்றிய பயன்தெரி கேள்வி’ (சிறுபா: 222-228) 
என்னும் பாடலிலிருந்து மணிகளை நிரைத்தது போன்று அமையப்பெற்ற நரம்பின் தொகுதியைக் குறித்துக் காட்டுகிறது. யாழின் சில பகுதிகளையும் சுட்டி நிற்கின்றது. (பெருமாள். ஏ.என் பக்.101 1984) 
இதில் இசைக்கருவிகளில் யாழ் பற்றிய செய்திகள் மட்டுமே காணப்படுகின்றது. 
பெரும்பாணாற்றுப்படை:
 தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங்கண்ணனார் பாடியது பெரும்பாணாற்றுப்படை ஆகும். இது 500 அடிகளைக் கொண்டமைந்தது. ஆற்றுப்படைகளில் நீண்ட பாடலைக் கொண்டது இதுவாகும். பேரியாழ் தாங்கி இசைஎழுப்பிப் பரிசுபெற்ற பாணர் ஒருவர் மற்றொரு பாணரை ஆற்றுப்படுத்திப் பாடப்பெற்றது. பாண் ஆற்றுப்படை ஆகையினால் பாணருக்குரிய யாழைப் பற்றிய செய்திகள் மிகவும் விரிவாகக் கூறப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் பெரும்பாணர் யாழை இடவயின் தழுவிச் செல்கிறார்கள் எனத் தொடங்கி யாழையும் அதன் பாகங்களையும் விவரிக்கின்றார். மேலும் யாழைப் பொதிந்துள்ள போர்வையின் விளக்கம் கூறப்பட்டுள்ளதுடன் ஆணிமுறிக்கப்பட்டுள்ள இடங்கள் மேடிட்டுத் தோன்றுவது மிகச் சிறப்பாகச் சொல்லப்படுகிறது. இதனைப் பின்வரும் பாடலடிகளின் மூலம் அறியலாம். 
‘பாசிலை ஒழித்த பராஅரைப் பாதிரி 
வள்ளிதழ் மாமலர் வயிற்றிடை வகுத்ததன்…. 
தொடையமை கேள்வி இடவயின் தழீஇ (பெரும ;: 4-16) (அருணாசலம்.மு பக்.38 2009)
 மேலும் நெய்தல் நாரினால் யாழின் நரம்பைச் செய்வது போன்று மரல் செடியின் நாரால் வில் யாழுக்கு நரம்பு செய்து முறுக்கிக் கட்டும் முறை பெரும்பாணாற்றுப்படையில் பின்வரும் பாடலடிகளில் கூறப்பட்டுள்ளது. (பெருமாள். ஏ.என் பக்.96 1984) 
‘இன்றீம் பாலை முனையிற் குமிழின் 
புறங்கோட்டுத் தொடுத்த மரல்புரி நரம்பின் 
வில்யாழ் இசைக்கும் விரலெறி குறிஞ்சிப் 
பல்காற் பறவை கிளைசெத் தோர்க்கும்’ (பெரும்: 180- 183) 
இதனைவிட கின்னரம் என்ற கருவி பற்றிய செய்தியும் காணப்படுகின்றது. 
‘………………………………இன்சீர்க் 
கின்னரம் முரலும் மணங்குடைச் சாரல்’ (பெரும்: 493- 494) என்பதில் கின்னரம் என்பது பறவையா அல்லது இசைக்கருவியா என்ற ஐயப்பாடு இருந்தாலும் இன்சீர்க்கின்னரம் என்ற தொடரிலிருந்து இனிமையான ஓசையை எழுப்பக்கூடிய இசைக்கருவி என்ற முடிவிற்கு வரக்கூடியதாகவுள்ளது. (பெருமாள். ஏ.என் பக்.104 1984) 
குழல் பற்றிய செய்தியும் பெரும்பாணாற்றுப்படையில் காணப்படுகின்றது. இரும்புக் கோலை நெருப்பிலிட்டுப் பழுக்கக் காய்ச்சி மூங்கில் குழலின் அளவிற்கேற்ப துளையுண்டாக்கும் போது அது கருமை நிறம் கொண்டதாக அமையும் என்ற முறை விளக்கப்பட்டுள்ளது. 
‘அந்நு ணர்விர்புகை கமழக் கைமுயன்று 
ஞெலிகோற் கொண்ட பெருவிறல் ஞெகிழச் 
செந்தீத் தொட்ட கருந்துளைக் குழலின்’ (பெரும்: 177 -179) (பெருமாள். ஏ.என் பக்.108 1984)
 ‘கடுந்துடி தூங்கும் கணைக்காற் பந்தர்’ (பெரும ;: 124) என்னும் பாடலடியிலிருந்து துடியின் குரலைப் பற்றி அறியமுடிகிறது. கடுந்துடி எனக் கூறியதிலிருந்து அதன் குரலின் கடுமைத்தன்மையை உணரமுடிகின்றது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. (பெருமாள். ஏ.என் பக்.138 1984) 
இவ்வாறாக யாழ் கின்னரம் குழல் துடி ஆகிய இசைக்கருவிகள் பற்றிய செய்திகள் பெரும்பாணாற்றுப்படையில் குறிப்பிடப்பட்டுள்ளதை அவதானிக்க முடிகின்றது. 
முல்லைப்பாட்டு:
காவிரிப்பூம்பட்டினத்துப் பொன்வணிகனார் மகன் நப்பூதனார் பாடிய அகத்திணை சார்ந்த பாடல் முல்லைப்பாட்டாகும். பிரிந்து சென்ற கணவன் திரும்பி வரும்வரையும் தலைவியை ஆற்றுப்படுத்தி 103 அடிகளால் அமைந்துள்ளது. பத்துப் பாட்டுக்களில் அளவால் சிறியது இதுவே ஆகும். இதில் பெரும்பாலான இசைச் செய்திகள் இல்லையென்றே சொல்லலாம்.
‘வயிரும் வளையும் ஆர்ப்ப’ (முல்லை: 92) என்பதிலிருந்து வயிரும் வளையும் ஒன்றாக இசைத்ததை அறியமுடிகிறது. ஆடுகளத்தில் வயிர் என்ற இசைக்கருவி செய்தி பரப்பப் பயன்பட்டதாக அறியமுடிகின்றது. (பெருமாள். ஏ.என் பக்.113 1984) 
ஆகவே வயிர் வளை ஆகிய இரு இசைக்கருவிகள் மட்டும் முல்லைப்பாட்டில் சுட்டப்படுகின்றதை அவதானிக்க முடிகின்றது.
மதுரைக்காஞ்சி: 
தலையாலங்கானத்து செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனுக்கு வீடுபேறு நிமித்தம் பலவகை நிலையாமைகளை அறிவுறுத்துவதற்காக மாங்குடி மருதனார் பாடியது மதுரைக்காஞ்சி ஆகும். அளவால் மிக நீண்டதாகும். 782அடிகளைக் கொண்டது. இதில் வயிர் இசைக்கருவி பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளதைக் காணமுடிகின்றது. 
‘காமர் வளைநரல வயிரார்ப்ப’ (மதுரை: 185) என்னும் பாடலிலிருந்தும் 
‘பாணர் வருக பாட்டியர் வருக 
யாணர்ப் புலவரொடு வயிரியர் வருக’(மதுரை: 749- 750) என்பதிலிருந்தும் வயிரிசைக் கருவி இசைக்கப்பட்டதை அறிய முடிகின்றது. (அருணாசலம்.மு பக்.40 2009) 
மேலும் முரசு பற்றிய செய்தியும் காணப்படுகின்றது. முரசின் தோல் கொல்லும் தன்மையுடைய காளையைக் கொன்று உரிக்கப்பட்டது. அதனை முடி சீவாது முரசுக்குப் போர்த்திக் கட்டுவர். இதனை
 ‘கொல்லேற்றுப் பைந்தோல் சீவாது போர்த்த 
மாக்கண் முரசம் ஓவில கறங்க’ (மதுரை: 732-733) என்னும் பாடல் மூலம் தெளிவாகின்றது. (பெருமாள். ஏ.என் பக். 123 1984) 
மேலும் அரசர்கள் எதிரியின் போர் முரசைக் கவர்ந்து வருவதாகச் சூளுரைப்பதை 
‘அரசுபட அமருழக்கி 
முரசு கொண்டு களம்வேட்ட’ (மதுரை: 128-129) பாடலின் மூலம் அறியப்படுகின்றது. 
காலையில் முரசு முழக்கப்படுவது அக்கால வழக்கம் என்றும் அரண்மனையில் வைகறையில் முரசறைவதை 
‘இமிழ்முர சிரங்க ஏறுமாறு சிலைப்ப 
பொறிமயிர் வாரணம் வைகறை இயம்ப’ (மதுரை: 670-671) என்ற பாடல் மூலம் அறிய முடிகிறது. (பெருமாள். ஏ.என் பக். 124 1984) 
மரக்கலங்கள் கடலில் செல்லும் போதும் முரசு முழக்கப்படுவதை 
‘இன்னிசைய முரசுமுழங்கப் 
பொன்மலிந்த விழுப்பண்டம் 
நாடார நன்கிழிதரும் 
ஆடியற் பெருநாவாய்’ (மதுரை: 80-83) என்னும் பாடல் சுட்டுகிறது. 
யாழுக்குத் துணைக்கருவியாக விளங்கும் முழவுடன் இணைந்து ஆகுளி என்ற தாள இசைக்கருவி இசைக்கப்படுகிறது. இதன் இசையொலி நுட்பமுறையாக அமைவதால் நுண்ணீராகுளி என்று புலவர் குறிப்பிட்டுள்ளதைக் கீழ்வரும் பாடல் முலம் அறியலாம். 
‘குரல்புணர் நல்யாழ் முழவோ டொன்றி 
நுண்ணீர் ஆகுளி இரட்டப் பலவுடன் 
ஓண்சுடர் விளக்கம் முந்துற’ (மதுரை: 605-607) (பெருமாள். ஏ.என் பக்.144 1984) 
மதுரைக்காஞ்சியில் வயிர் முரசு யாழ் ஆகுளி போன்ற இசைக்கருவிகள் குறிப்பிடப்பட்டிருப்பதை அறியமுடிகின்றது. 
நெடுநல்வாடை: 
நக்கீரரால் போருக்குச் சென்ற பாண்டியன் நெடுஞ்செழியனைப் பிரிந்து வருந்தும் தலைவியின் நிலையைக் கண்டு பாடியது நெடுநல்வாடை ஆகும். இது 188 அடிகளைக் கொண்டது. இதில் வயிர் இசைக்கருவி பற்றிய குறிப்புக் காணப்படுகின்றது. மயில் அகவுவது போன்று வயிரிசை அமைந்துள்ளதை
 ‘கலிமயில் அகவும் வயிர்மருள் இன்னிசை’ (நெடுநல்- 99) பாடலடி மூலம் அறியமுடிகின்றது. இதில் வயிர் இசைக்கருவி பற்றிய செய்தி மாத்திரம் ஓரிடத்தல் காணப்பட்டுள்ளதை அவதானிக்க முடிகின்றது. 
குறிஞ்சிப்பாட்டு: 
கபிலரால் ஆரிய அரசன் பிரகதத்தனுக்குத் தமிழ் அறிவை ஊட்டும் பொருட்டு 261 அடிகளைக் கொண்டு விளங்கும் அகப்பாட்டு குறிஞ்சிப்பாட்டு ஆகும். இவர் 100 மலர்களைத் தொடர்ந்த அடிகளில் சுருக்கிக் கூறுவது சிறப்புடையதாகும். ஆம்பலந் தீங்குழல் பற்றிய குறிப்பு இதிலே காணப்படுகின்றது.
‘பாம்புமணி யுமிழ்ப் பல்வயிற் கோவலர் 
ஆம்பலந் தீங்குழல் தௌ;விளி பயிற்ற’ (குறிஞ்: 221-222) 
பாம்புமணி உமிழும் நேரம் என்பதிலிருந்து மாலை நேரத்தைக் குறிக்கின்றது. இந்நேரத்தில் ஆம்பல் தீங்குழலை ஆயர்கள் ஊதுகின்றனர். அது தெளிந்த இனிய ஒலியாக அமைகின்றது. மேலும் ஆம்பல் செடியின் தண்டு துளையுடையது. ஆகவே அதனை ஊதுகுழலாகப் பயன்படுத்தினரா அல்லது ஆம்பல் பண்ணைக் குழலில் இசைத்தனரா என்பது ஆராய வேண்டியதாக உள்ளது. (பெருமாள். ஏ.என் பக்.107 1984) 
குறிஞ்சிப்பாட்டிலும் வயிர் இசைக்கருவி பற்றிய செய்தி இடம்பெற்றிருக்கின்றது. அன்றில் பறவையின் ஒலியை ஒத்ததாக வயிரின் ஒலி அமைகின்றது என்பதை 
‘ஏங்குவயி ரிசைய கொடுவா யன்றில் 
ஓங்கிரும் பெண்ணை அகமடல் அகவ’ (குறிஞ்: 219-220) என்ற பாடலடிகள் சுட்டி நிற்கின்றது. இங்கு ஏக்கத்தைக் காட்டும் ஒலியுடன் அமையப்பெற்றிருப்பதை அவதானிக்க முடிகின்றது. (பெருமாள். ஏ.என் பக்.112 1984) 
பழமையான ஊர்களின் வாயிலில் முழவம் முழக்கப்படுவதாகக் கூறப்படுவதிலிருந்து முழவம் பற்றிய செய்தி குறிப்பிடப்பட்டுள்ளதை
 ‘துஞ்சா முழவின் மூதூர் வாயில்’ (குறிஞ்: 236) என்ற பாடலடியின் மூலம் அறியமுடிகிறது. (பெருமாள். ஏ.என் பக்.122 1984) 
அரசனிடம் போர் முரசு இருப்பதைப்போல் கலைஞனிடம் இசை முரசு இருக்கும் என்று முரசின் இனிமையான ஓசையை 
‘இன்னிசை முரசிற் சுடர்பூட் சேய்’ (குறிஞ்: 51) என்னும் பாடல் மூலம் கூறப்பட்டுள்ளது. மேலும் மேகத்தின் குரல் முரசு அதிர்வது போன்றது என்பதை 
‘முரசதிர்ந் தன்ன இன்குரல் ஏற்றொடு 
திரைசெலல் நிவப்பில் கொண்மூ மயங்கி’ (குறிஞ்:49-50) பாடல் மூலம் அறியமுடிகிறது. 
பறவைகளைத் துரத்துவதற்கு தழல் தட்டை குளிர் ஆகிய மூன்று கருவிகளையும் பயன்படுத்தியதை 
‘தழலும் தட்டையும் குளிரும் பிறவும் 
கிளிகடி மரபின வூழூழ் வாங்கி;’ (குறிஞ்: 43-44) என்னும் பாடலடிகள் விளக்குகின்றது.
 தட்டை என்பது அடித்து ஒலி எழுப்பும் கருவியாகும். குளிர் என்பது மண்ணினாலான குடத்தின் வாய்ப்பகுதியில் தோலால் இறுகக் கட்டி அடித்து ஒலி எழுப்புவது ஆகும். (பெருமாள். ஏ.என் பக்.148 1984) 
இவ்வாறாகக் குழல் வயிர் முழவு முரசு தழல் தட்டை குளிர் போன்ற துளைக்கருவியும்ää தாளவிசைக்கருவிகளும் இருந்ததை உணர முடிகின்றது. 
பட்டினப்பாலை: 
சோழன் கரிகாற் பெருவளத்தானைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் 301 அடிகளில் பாடிய அகப்பாட்டாகும். வஞ்சியடிகள் பெருமளவாகக் காணப்படுகின்றது. மன்னர்கள் இசைக்கலையையும்ää கலைஞர்களையும் சிறப்பாக ஆதரித்தனர் என்பதை 
‘பாட லோர்ந்தும் நாடகம் நயந்தும்’ (பட்டி: 113) என்னும் பாடலடி விளக்குகின்றது. 
மேலும் ‘குழலகவ யாழ்முரல முழவதிர முரசியம்ப விழாவறா வியலாவணத்து’ (பட்டி: 156-158) என்னும் பாடலடிகளிலிருந்து குழல்ää யாழ்ää முழவுää முரசு ஆகிய இசைக்கருவிகள் கூறப்பட்டுள்ளதை அவதானிக்க முடிகின்றது. (பெருமாள். ஏ.என் பக்.152 1984) 
மலைபடுகடாம்: 
இரணியமுட்டத்துப் பெருங்குன்றூர்ப் பெருங்கௌசிகனார் செங்கண்மாத்துவேள் நன்னன் சேய் நன்னனைப் பாடியது மலைபடுகடாம் ஆகும். இதனைக் கூத்தராற்றுப்படை என்றும் அழைப்பர். இது 583 அடிகளைக் கொண்டுள்ளது. 
கூத்தர் பல வகை வாத்தியங்களைப் பையிலிட்டு எடுத்துச் செல்வதை வழக்கமாகக் கொண்டனர். பேரியாழின் மருப்புப் பகுதியைப் பற்றி பின்வரும் பாடலின் மூலம் செவ்வனே விளக்கியுள்ளது. (பெருமாள். ஏ.என் பக்.101 1984) 
‘வதுவை நாறும் வண்டுகமழ் ஐம்பால்……… 
வளர்ந்தேந்து மருப்பின் வள்ளுயிர்ப் பேரியாழ்’ (மலை: 30-37) 
தூம்பு இசைக்கருவி பற்றிக் குறிப்புக்கள் காணப்படுகின்றன. குழலை ஒத்த கருவியாக இருந்தாலும் அதன் ஓசை குழலிசை போன்றல்லாது சற்றுக் கடுமையான ஒலியை உடையதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை ‘இளிப்பயிர் இமிரும் குறும்பரந் தூம்பு’ (மலை:7) என்ற பாடலடியின் மூலம் உணரமுடிகின்றது. (பெருமாள். ஏ.என் பக்.111 1984) 
உழவர் வெண்நெல்லை அரியும் போது தண்ணுமை வாசிக்கப்படுகின்ற செய்தி 
‘வெண்ணெல் அரியுநர் தண்ணுமை வெரீஇச் 
செங்கண் எருமை இனம்பரி எருத்தல்’ (மலை: 471-472) பாடலில் கூறப்பட்டுள்ளது. இதனால் அரிவோருக்கு எழுச்சி ஏற்படுத்துவதற்காகவும் விளைவு கிடைப்பதில் உள்ள மகிழ்ச்சியிலும் தண்ணுமையை முழக்கி இருக்கலாம். (பெருமாள். ஏ.என் பக்.116 1984)
 மேலும் பலாப்பழத்துக்கு முழவு உவமையாக்கப்பட்டுள்ளதை 
‘கானப் பலவின் முழவுமருள் பெரும்பழம் (மலை: 511) என்னும் அடியில் காணமுடிகின்றது. இரவு முழுவதும் காவலுக்காகவும்ää அச்சமகற்றும் பொருட்டும் மகளிர் முழவத்தை ஓயாது ஒலித்துக்கொண்டிருப்பதை 
‘……….மகளிர் 
முழவுத்துயில் அறியா வியலுள் ஆங்கண்’ (மலை: 349-350) பாடலின் மூலம் அறியமுடிகிறது. (பெருமாள். ஏ.என் பக்.122 1984)
 மேலும் ஆகுளி என்ற இசைக்கருவியை கைவிரல் கொண்டு தட்டி இசையொலி எழுப்புவதை 
‘விரலூன்று படுகண் ஆகுளி கடுப்பக் 
குடிஞை இரட்டும் நெடுமலை அடுக்கத்து’ (மலை: 140-141) பாடல் மூலம் அறியலாம். (பெருமாள். ஏ.என் பக்.143 1984) 
முழா ஆகுளி போன்ற தாள இசைக்கருவிகளுக்குத் தாளம் அமைத்துக்காட்டுவது பாண்டிலாக இருக்க வேண்டும் என்பதை 
‘நுண்ணுருக் குற்ற விளங்கடர்ப் பாண்டில்’ (மலை: 4) எனக் குறிப்பிடுகின்றது. (பெருமாள். ஏ.என் பக்.147 1984) 
இவ்வாறாக யாழ் தண்ணுமை முழவு ஆகுளி பாண்டில் போன்ற இசைக்கருவிகளைப் பற்றிய செய்திகள் மலைபடுகடாமில் குறிப்பிடப்பட்டுள்ளதை அறியமுடிகின்றது. 
முடிவுரை: 
தமிழிலக்கியங்களில் சிறப்பாகப் போற்றப்படும் சங்க இலக்கிய நூல்களில் ஒன்றாகிய பத்துப்பாட்டில் ஏராளமான இசைக்கருவிகள் பற்றிய செய்திகள் பொதிந்துள்ளதை மேற்குறிப்பிட்ட ஆதாரங்களின் ஊடாக ஓரளவிற்கு அறிந்துகொள்ள முடிகின்றது. இவற்றிலிருந்து நோக்குகின்ற பொழுது பத்துப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ள இசைக்கருவிகளில் பல தற்காலத்திலும் பயன்பாட்டில் உள்ளதையும் ேறு சில உருமாற்றம் செய்யப்பட்டுப் பயன்படுத்தப்படுவதையும் இன்னும் சில இல்லாது அழிந்ததையும் உணர முடிகின்றது. எனவே தொன்று தொட்டு இன்று வரை தமிழர்கள் இசையில் மட்டுமல்லாது இசைக்கருவிகள் இசைப்பதிலும் வல்லவர்களாக இருந்துள்ளதை உணர முடிகின்றது. இதிலிருந்து பத்துப்பாட்டு இலக்கியங்களைத் தனித்தனியாக ஆய்வு செய்வதன் ஊடாக இன்னும் இசைக்கருவிகள் பலவற்றின் பயன்பாட்டினை நாம் உணர்ந்து கொள்ளமுடியும் என்பதில் ஐயம் இல்லை.
உசாத்துணை நூல்கள்:
அருணாசலம்.மு தமிழ் இசை இலக்கிய வரலாறு 2009 
பெருமாள்.ஏ.என் தமிழர் இசை 1984 
ராஜூ. மா தென்னிந்திய மரபு இசை இயல் 2012 
ஜெகதீசன்.இரா.சுரேஷ்.தி தமிழிசை ஆய்வு மாலை 2004