ஜூலை 2024 இதழுக்கு ஆய்வுக்கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன

குறுந்தொகையில் உவமைச் சிறப்பு

முனைவர். மு. விஜய லெட்சுமி, உதவிப் பேராசிரியர், தனலெட்சுமி சீனிவாசன் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, பெரம்பலூர். 27 Jul 2021 Read Full PDF

 

முனைவர். மு. விஜய லெட்சுமி,

உதவிப் பேராசிரியர், தனலெட்சுமி சீனிவாசன் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, பெரம்பலூர்.

ஆய்வுச்சுருக்கம்

சங்க இலக்கிய எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று குறுந்தொகை. இந்நூல் நாடக வடிவிலான பாடல்களைக் கொண்டது. ஒருவர் வாய்ச்சொல்மொழி, அவர் யாரிடம் எதற்காக பேசுகின்றார் என்பன உய்த்துணரப்படுகின்றன. இவ்வகையில் பார்த்தால், தமிழ் அகப்பாடல்கள் தனித்தன்மையும், சிறப்பும் உடையவை. சங்க இலக்கியத்தில் வாழ்ந்த மனிதன் இயற்கையோடு இணைந்து வாழ்கிறான் என்பதை இந்நூல் அழகாக எடுத்தியம்புகிறது. அதோடு தலைவன் தலைவியின் காதலையும், பிரிவுத்துன்பத்தையும் கூறுகிறது. கருப்பொருட்களைக் கொண்டு உவமை கையாளப்பட்டுள்ளது. குறுந்தொகையில் உள்ள உவமை சிறப்புகளைப் பற்றி ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

திறவுச் சொற்கள்

இயற்கை வருணனை, கருப்பொருட்கள், பொழுதுகள், களவு வாழ்க்கை, அகத்தூது, பிரிவுத்துயர்.

முன்னுரை

சங்க இலக்கியத்தில் உவமைச் சிறப்பு மிகுந்த நூலாக விளங்குவது குறுந்தொகையே ஆகும். இத்தொகை நூலில் செய்யுள் இயற்றியவர் பெயர் தெரியாத இடத்தில் அச்செய்யுளில் இடம் பெற்றுள்ள உவமைகைளைப் பயன்படுத்திய காரணங்களினால் இந்நூல் நல்ல குறுந்தொகை என்றுபெயர் பெற்றிருக்கலாம். மேலும் இந்நூல் தலைவனைப் பிரிந்த தலைவி படும் துன்பத்தை இயற்கை நிகழ்ச்சிகள் வெளிப்படுத்துகின்றது. மனிதனை மிகவும் கவர்ந்த, அவனால் ஆக்க முடியாத இயற்கை,அவன் ஆக்கமான கலை இலக்கியத்தில் மிகுதியாக வெளிப்படுத்துகின்றது. அவனால் அனுபவிக்க முடிந்த இயற்கை, அவன் அனுபவ வெளியீடான இலக்கியத்தில் பல நிலைகளில், பல நேரங்களில் பயன்படுகின்றது.

இயற்கையோடு இயைந்த வாழ்வு 

மனிதன் இயற்கையை வெல்ல முடியாது. அதற்கு ஆட்பட்டே வாழ்கிறான். இயற்கையின் பயன் கொண்டு அதனுடன் இணைந்து வாழ்கிறான். இயற்கை மனிதனுக்குப் புகட்டிய அறிவு. புறவையைக் கண்டு விமானம் படைக்க வழி வகுக்கின்றது. அறிவியல் வாழ்வுக்கு மட்டுமன்றி கலை வாழ்வுக்கும் இயற்கை களனும் காரணமுமாகின்றது. எல்லா உயிரையும் உடன்பிறந்தவராகக் கொள்ளுதல், இயற்கையில் இறைமையைக் காணுதல் என மனிதனின் ஆன்மீக வாழ்விற்கும் அஃது அடிப்படையாகின்றது.

பண்டைத் தமிழ்ச் சான்றோர்கள் இயற்கையைத் தனியொரு பொருளாகக் கருதிப் பாடவில்லை. காதல், வீரம் என்பனவற்றைத் தலைமைக் கூறுகளாகக் கொண்டு இயற்கைக் கூறுகளையும் துணையாகப் பெற்றுள்ளது. மனித வாழ்க்கை. அத்தகைய மனித வாழ்க்கையின் பல்வேறு கூறுகளையும் வர்ணித்துத் தெளிவுபடுத்துவதற்காகவே பண்டைத் தமிழ்ச் சான்றோர் இயற்கையைப் பயன்படுத்தினர். சுருங்கச் சொன்னால், மனித இதயத்தின் உணர்வுகளையும் இயற்கையின் கவர்ச்சி நிறைந்த எழிலையும், நெருங்கறிய பிணைப்பு உடையனவாய் இனிய உறவுடையனவாய் இணைத்தனர் எனலாம். குறுந்தொகையில் தலைவன் இல்லாத காலத்தில் தலைவி அவன் மாலையைக் கண்டு ஆறுதல் அடைந்ததை,

இனமயில் அகவும் மரம்பயில் கானத்து

நரைமுக ஊகம் பார்ப்பொடு பனிப்ப

படுமழை பொழிந்த சாரல் அவர்நாட்டுக்

குன்றம் நோக்கினென் தோழி

பண்டையற்றோ கண்டிசின் நுதலே         (குறுந்தொகை பாடல்.249:1-5)

என்ற பாடல் விளக்குகிறது. தலைவனைப் பிரிந்த தலைவியின் நிலையைத் தோழி கேட்க, தலைவி தலைவன் இல்லாத காலத்தில் அவனுடைய மலையை அடிக்கடி கண்டு துயராற்றிக் கொள்வேன் என்றாள். இப்பாடலில் தலைவியின் ஆழ்ந்த காதலைப் புலப்படுத்துவதோடு மயில்களின் அகவலோசை பரவிக் கருங்குரங்குகள் நடுங்குமாறு மழை பொழிந்து விளங்கும் ஒரு மலையின் காட்சியைப் ப்றியும் அறிய முடிகிறது.

இயல்பாக அமைவதும் இயல்பாகச் செயல்படுவதம் ஐம்பூதங்களினாலும் ஆனது இயற்கை. அவற்றின் சேர்க்கையான உலகமும் இயற்கையால் அமைந்ததே ஆகும். ஓரறிவுயிரான அனைத்தும் இயற்கை எனினும் ஆரறிவினனான மனிதன் தன் அறிவாலும் செய்கையாலும் இயற்கையின் இயல்பு நிலையிலிருந்து மாறி அமைவதால் மனிதன் நீங்கலாகப் பிற இயற்கையாக எண்ணப்படுகின்றன. 

வேங்கை மரமும் நட்பும்

இறைவனுக்கும் அண்டங்களுக்கும் இடையேயுள்ள பிணைப்பினைப் புலப்படுத்தி உறவாடச் செய்வது இயற்கை என்று பலர் கூறுவர். எனவே இறைமையை நாடும் தமிழர் அனைவரும் இயற்கையோடு இயைந்த வாழ்வு வாழ்ந்தனர்.

தலைவனின் பிரிவைத் தாங்காத தலைவி மிகவும் துன்பம் அடைந்தாள். துலைவி தோழியிடம், போனவர் நமக்குத் தர செய்தி ஒன்றும் சொல்லிப் போகவில்லை என்றாலும் பல இரவுகளில் இங்கே வந்திருந்து தனிமைத் துயரில் வாடிய தலைவனுக்குத் துணையாக இருந்த வேங்கை மரத்திற்கேனும் செய்தி சொல்லி அனுப்ப ஏன் மறநதார். நம்மை மறக்கும் வலிமை கொண்டஅவர் பறவைகள் மூலம் இநத வேங்கைக்காவது தூதப்பக் கூடாதா என்று தன் கவலையைக் கூறினாள்.

நமக்கு ஒன்று உரையார் ஆயினும் தமக்கு ஒன்று

இன்னா இரவின் இன்துணை ஆகிய

படப்பை வேங்கைக்கு மறந்தனர் கொல்லோ

மறப்புஅரும் பணைத்தோள் மரீஇத்

துறத்தல் வல்லியோர் புள்வாய்த் தூதே           (குறுந்தொகை பாடல்: 266)

காதலரின் வாழ்விலே வேங்கை மரம் பெற்றிருந்த தோழமையும் தொடர்பும் எத்தகையன என்பதை இந்தப் பாடலின் மூலம் அறியலாம்.

தும்பியும் தூதும்

தொலைவிலே இருக்கும் தலைவனின் மலைநாடு நோக்கிப் பறக்கும் பனிநிறச் சிறகு படைத்த தும்பியின் வாயிலாகத் தலைவி படும் வருத்தத்தை சொல்லி அனுப்புகிறாள் தோழி.

இத்தகைய செய்தியைக் கொண்டு செல்வதற்கு அஞச வேண்டியதில்லை எனத் தும்பிக்கு உறுதியும் கூறி அனுப்புகிறாள்.

மணிச்சிறைத் தும்பி

நன்மொழிக்கு அச்சமில்லை அவர்நாட்டு

அண்ணல் நெடுவரைச் சேரி யாயின்

-----------------------

தமரின் தீராள் என்மோ                   (குறுந்தொகை பாடல்: 392:1-6)

என்று தோழி தும்பியைத் தூதாக அனுப்புகிறாள். மற்றொரு பாடலில் தலைவியின் நலனைப் பாராட்டி திளைக்கும் தலைவன் எல்லா மலரையும் பற்றி அறிந்த தும்பியைப் பார்த்து, என் தலைவியின் கூந்தலை விட மணக்கும் மலர் நீ அறிந்த வரையில் எதாவது உள்ளதாய் இருந்தால் கூறு என்றான். அதை 

கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி

காமம் செப்பாது கண்டது மொழிமோ

பயிலியது கெழிஇய நட்பின் மயிலியல்

செறி எயிற்று அரிவை கூந்தலின்

நரியவும் உளவோ, நீ அறியம் பூவே          (குறுந்தொகை பாடல் :2)

இவ்வாறாக தலைவியின் கூந்தல் இயற்கையிலேயே மணம் உடையது என்றும் தலைவியின் நலனைப் பாராட்டுகிறாள்.

காந்தள் கிழங்கு

ஒரு நாள் மாலை வேளையில் தலைவன் இருக்கின்ற மலையிலே பெருமழை பெய்தது. ஆதனால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கிய ஒரு காந்தள் கிழங்கு வேறுடன் நம் ஊருக்கு வந்தது. அந்தக் காந்தளின் அருமையை பாராட்டி வீட்டிற்குக் கொண்டு வந்து நட்டு வைததேன். அந்தக் காந்தளைக் காணும் போதெல்லாம் தலைவனை நினைத்து மகிழ்கிறேன். காந்தள் கிழங்கை நடுவதற்கு எந்தவித தடையும் செய்யாமல் இருந்த அன்னையை பாராட்டிகின்றாள் தலைவி என்பதை,

அம்ம வாழி தோழி அன்னைக்கு

உயர்நிலை உலகமும் சிரித்தால் அவர் மலை 

மாலை பெய்த மணம் கமழ் உந்தியொடு 

காலை வந்த முதற் காந்தள்

மெல்லிலை குழைய முயங்கலும்

இல்உய்த்து நடுதலும் கடியா தோலெ            (குறுந்தொகை பாடல் 361)

என்ற வரிகளின் மூலம் அறியலாம்.

மாலையும் முல்லையும்

தலைவனின் பிரிவுத் துன்பத்தை தலைவியால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. மாலை வேளையில் அவளை தனிமை பெரிதும் வாட்டுகின்றது. தம் கூடு நோக்கி பறக்கும் பறவைகளும் இதழ் குவிக்கும் பூவினங்களும், வெறிச்சோடும் கடற்கரை சோலையும், இவளைப் போலவே மயக்கமுற்று பொலிவிழக்கும். வானமும் இவையெல்லாம் தனிமையில் இருக்கும் தலைவியன் துன்பத்தை பெரிதாக்குகிறது. 

புல்லும் புலம்பின பூவும் கூம்பின

----------------------------------------------------

தண்ணம் துறைவற்கு உரைக்குநர் பெறினே        (குறுந்தொகை 310)

என்ற பாடலின் மூலம் தலைவியின் பிரிவுத் துன்பத்தை இயற்கை வெளிப்படுத்துகின்றது.

முல்லை மலரும் பொழுது தான் மாலை என்று பிறர் சொல்வது தலைவிக்கு விளங்கவில்லை. துணையின்றி பிரிந்திருக்கும் காதலர்க்குச் சேவல் கூவும் காலையாயினும், கதிரவன் காயும் கடும் பகலாயினும், எல்லாம் ஒரே மாலை நேரம் தான் என்கிறாள்.

ஏல்லுறு பொழுதின் முல்லை மலரும்

மாலை என்மனார் மயங்கி யோரே

குடுமிக் கோழி நெடுநகர் இயம்பும்

பெரும்புலர் விடியலும் மாலை

பகலும் மாலை துணையி லோக்கே              (குறுந்தொகை பாடல் 234:2-5)

என்ற பாடலின் மூலம் முல்லை மலர்ந்தால் மாலைப் பொழுது வந்துவிட்டது என்பதை உணர்ந்ததாக விளக்கிப் பாடுவது, இயற்கையைப் பார்த்து நேரம் அறிந்தது விளக்கமுடிகிறது.

அன்றில் பறவையும் வாடைக் காற்றும்

துணையோடு கலந்துள்ள அன்றில் பறவை தன் கூட்டில் இருந்து எழுப்பும் குரல் என் வேதனையைப் பெருக்குகிறது என்கிறாள் தலைவி. முழைக் காலத்தில் நள்ளிரவின் கொடுமையை பெருக்க வாடைக் காற்றே போதும். இந்தக் கொடுமைக்கும் கொடுமையாகிய தனிமை போதாதென்று அன்றில் பறவையின் குரலும் சேருகிறது என்பதை,

நெருப்பின் அன்ன செய்தலை அன்றில்

இரவின் அன்ன கொடுவாய்ப் பெடையோடு

தடவின் ஓங்கு சினை கட்சியில் பிரிந்தோர்

கையற நறலும் நல்லென் யாமம்              (குறுந்தொகை பாடல் 160:1-4)

நெருப்பைப் போன்ற செந்தலை உடைய அன்றிலின் குரலைக் கேட்டாலே பிரிவினால் வாடும் காதலர்கள் செயலற்றுப் போவார்கள் என்கிறாள். 

வினை முடித்து வரும் தலைவனை வாடைக் காற்று வருத்துகின்றது. தன்னுடைய துன்பத்தைப் பற்றிக் கவலைப்படாமல் இதே வாடைக்காற்று தலைவி இருக்கும் இடத்தில் வீசினால் அவள் மிகவும் வருந்துவாள் என்று நினைத்து தலைவன் தலைவி இருக்கும் ஊர் பக்கம் வீசாமலிருக்குமாறு வாடைக் காற்றை வேண்டுகிறான். 

ஓம்புமதி வாழியோ – வாடை

முரையினம் ஆரும் முன்றிற்

புல்வேய் குரம்பை நல்லோள் ஊரே           (குறுந்தொகை பாடல் 235)

என்ற பாடலின் மூலம் அறியலாம்.

முடிவுரை

மக்கள் இயற்கையோடு இயைந்த வாழ்க்கையை வாழ்ந்து வந்தனர் என்ற கருத்து தெளிவாக்கப்பட்டுள்ளது. மாலைப் பொழுதின் வருத்தத்தை பிரிந்திருக்கும் தலைவிக்கு அதிகப்படுத்துவதாக அன்றில் பறவை இடம் பெற்றுள்ளது. வேங்கை மரத்திற்காவது தலைவன் தூது அனுப்பியிருக்கலாமெ என்று கூறுவதால் தூது அனுப்பும் பழக்கம் அன்றே  இருந்திருக்கலாம் என உணரமுடிகிறது.  முல்லை மலர் மலர்வதைக் கொண்டு கார்ப்பருவம் வந்து விட்டது என்பதை அறிந்தனர். இவ்வாறு இயற்கையோடு இயைந்த வாழ்க்கையைக் குறுந்தொகையில் தலைவனும் தலைவியும் வாழ்ந்து வந்தனர் என்பதை அறியலாம்.

துணை நூற்பட்டியல்

மூல நூல்  : குறுந்தொகை, முனைவர் தமிழண்ணல்,கோவிலூர் மடாலயம், கோவிலூர் (காரைக்குடி அருகில்)