ஜூலை 2024 இதழுக்கு ஆய்வுக்கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன

குறுந்தொகைக் காட்டும் தகையணங்குறுத்தல்

முனைவர்.த.தேவகி துறைத்தலைவர், தமிழாய்வுத்துறை, தனலட்சுமி சீனிவாசன் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி(தன்னாட்சி) பெரம்பலூர் 27 Jul 2021 Read Full PDF

முனைவர்.த.தேவகி

துறைத்தலைவர், தமிழாய்வுத்துறை, தனலட்சுமி சீனிவாசன் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி(தன்னாட்சி),பெரம்பலூர்

ஆய்வுச்சுருக்கம்: 

காலந்தோறும் ஆண் பெண் இருபாலரும் காதல் வயப்படுதல் என்பது இயல்பான ஒன்று. காதல்கொண்ட தலைவன் தலைவியின் அழகினை எண்ணி புலம்புவதும்,வருந்துவதும் இன்றுவரை நடைபெற்றுவருகிறது. இத்தகைய மனவருத்தம் குறுந்தொகையில் சித்தரிக்கப்பட்டுள்ள விதத்தினை அறியும்பொருட்டு இக்கட்டுரை அமைகிறது.

திறவுச்சொல் : 

தகையணங்குறுத்தல் விளக்கம், தலைவனின் மனநிலை, திருக்குறள் கருத்துக்கள், கருவி

முன்னுரை:

தமிழர்களின் வாழ்க்கை காதலும் வீரமும் நிறைந்தது. மறத்தமிழன் என்று சொல்லும் அளவிற்கு வீரம் மிகுந்திருந்த தமிழர்களிடம் அதே அளவு காதலும் மிகுந்திருந்தது என்பதற்கு நமது இலக்கியங்களும்;, இலக்கணங்களும்;  சான்று பகர்வதாய் உள்ளன

…செம்புலப் பெயல்நீர்போல

அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே 1

என சங்க இலக்கியமும்

நாட்டம் இரண்டும் அறிவுடம்படுத்தற்குக்

கூட்டியுரைக்கும் குறிப்புரையாகும் 2

அதாவது தலைமக்கள் இருவரின் நோக்கும் அவரவர் தம் கருத்துக்களை காதல்  உணர்வினைக்  கூட்டியுரைக்கும் குறிப்புரைகளாகும், என தொல்காப்பியம் எடுத்துரைக்கின்றன. காதல் வயப்பட்ட தலைவனின் வருத்தத்தைச் சொல்லுவதாக அமைந்த  தகையணங்குறுத்தல் செய்திகள் குறுந்தொகையில்; அமைந்துள்ளன.

 

தகையணங்குறுத்தல் - விளக்கம்

அணங்கு என்பது பெண்,தகை என்பது அழுகு,உறுத்தல் என்பது மனதை வறுத்துதல் எனும் பொருளில் வந்து .தான் விரும்பும் பெண்ணின் அழகு தன் மனதை வருத்துகின்ற துன்பத்தை எடுத்துச்சொல்லுவதாக அமைந்துள்ளது. இதில் அணங்கு என்ற சொல் நயம்கருதி இடையில் வைக்கப்பட்டுள்ளது. இதனை திருவள்ளுவர் திருக்குறளில் காமத்துப்பாலில் ஒரு அதிகாரமாகப் படைத்துள்ளார். அகக்கருத்துக்களை எடுத்துக்கூறும் தொல்காப்பிய பொருளதிகாரத்திலோ,நம்பியகப்பொருளிலோ இச்சொல் இடமபெறவில்லை. ஆனால் இத்தகைய நிகழ்வுகள் குறித்த செய்திகள் நூல்களில் இடம்பெற்றுள்ளன.

வண்டே இழையே வள்ளி பூவே

கண்ணே அலமரல் இமைப்பே அச்சமென்று

அன்னவை பிறவும் ஆங்கண் நிகழ

நின்றவை களையும் கருவி என்ப 3

தலைவன் தலைவியைக் பார்த்தமாத்திரத்தில் அவளது அழகில் மயங்கி அவள் அணங்கோ என நினைத்துப் பின்னர் அவள் சூட்டியுள்ள பூவில் வண்டுகள் ரீங்காரம் செய்வதாலும், அணிகலன்கள் அணியப் பெற்றிருப்பதாலும், தோளின்கண் எழுதப்பெற்றுள்ள தொய்யிற்கொடியும் மூடித்திறக்கும் இமையாலும் அவள் அணங்கு அல்ல என்ற ஐயத்தைப் போக்கி மானிட மகளிர் என்ற தெளிவை தரும் என்கிறார் தொல்காப்பியர். அத்தகைய அழகைக் கண்டு தலைமகன் வருந்துவான் என்பதும் உணர்த்தப்பட்டுள்ளது.நம்பியகப்பொருளில் களவியலிலும் இத்தகைய செய்தி இடம்பெற்றுள்ளது.

எழுதிய வல்லியும் தொழில்புனை கலனும்

வாடிய மலரும் கூடிய வண்டும்

நடைபயில் அடியும் புடைபெயர் கண்ணும்

அச்சமும் பிறவும் அவன்பா னிகழும்

கச்சமில் ஐயங் கடிவனவாகும் 4

இக்கருத்தும் தொல்காப்பியத்தை அடியொற்றியதாக உள்ளது. இந்த ஐயத்திற்கு பின் தலைவனின் வருத்தம் பொதிந்துள்ளது என்பது நாம் உணந்து கொள்ளவேண்டிய ஒன்று.

தலைவனின் மனநிலை

இலக்கணங்களில் ஐயமாக இடம்பெற்றுள்ள செய்திகள் பின்னர் இலக்கியங்களில் துன்பமாக,வருத்தமாக மாறி தலைமகனின் மனநிலையைச் சித்தரிப்பதாக வரிவடைந்துள்ளதை பல்வேறு இலக்கியங்களில் காணமுடிகியது. திருவள்ளுவர் தலைமகளால் அவளது அழகினால் தலைவனுக்கு ஏற்படும் மன வருத்தத்தை தகையணங்குறுத்தல் என்று தனி ஒரு அதிகாரமாகப் படைத்துள்ளார்.

அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை

மாதர்கொல் மாலும்என் நெஞ்சு 5

என தொல்காப்பியரின் இலக்கணத்திற்கு இலக்கியம் படைத்திருப்பது போன்ற கருத்துக்களை யாத்துள்ளார். ஆண்களின் மனதை வருத்தும் பெண்களின் அழகினை எடுத்துச் சொல்லும் வரிகள் நாலடியாரிலும் இடம்பெற்றுள்ளன.

 

கண்கயல் என்னும் கருத்தினால் காதலி

பின்சென்றது அம்ம சிறுசிறல்- பின் சென்றும்

ஊக்கி யெழுந்தும் எறிகல்லா ஒண்புருவம்

கோட்டிய வில்வாக் கறிந்து 6

மீன்கொத்திப் பறவைகளையும் மயங்க வைத்து பயமுறுத்தும் கண்களாக வருணித்துள்ளனர்

அறநூல்கள் என்றழைக்கப்படும் கீழ்க்கணக்கு நூலகள் பெண்ணின் அழகினையும் அதனால் ஏற்படும் மன அவத்தைகளையும் எடுத்துரைக்கும்போது அக இலக்கியங்கள் என்று அழைக்கப்படும் குறுந்தொகையில் இத்தகைய கருத்துக்கள் நிறைந்திருத்தல் திண்ணம்.

குறுந்தொகையில் தகையணங்குறுத்தல்:

தகையணங்குறுத்தல் என்ற சொல் குறுந்தொகையில் இடம்பெறவில்லை என்றாலும் பெண்களின் அழகினைக் கண்டு மனம் மயங்கி வருந்தும் தலைவனின் மனநிலை பற்றி புலவர்கள் பாடியுள்ள பாடல்கள் குறுந்தொகையில் வெகுவாக இடம்பெற்றுள்ளன.

குறுந்தொகையில் கடவுள் பாடியதாகச் சொல்லப்படும்  இரண்டாவதாக அமைந்துள்ள பாடலில்

…. செறியெயிற்று அறிவை கூந்தலின்

நறியவும் உளவோ நீயறியும் பூவே 7

என்ற வரிகள் தலைவியின் கூந்தல் மணத்தில் மயங்கிய தலைவனின் புலம்பலைச் சொல்லுவதாகப் படைக்கப்பட்டுள்ளது. கடவுளும் மனம் மயங்கிய செய்தி காதலின் அவத்தையைச் சொல்லுவதாகவும், தொல்காப்பியர் சுட்டியள்ள ஐயத்தை உணர்த்துவதாகவும் அமைந்துள்ளது.

 

தகையணங்குறுத்தும் கருவி

பெரும்பான்மையான இலக்கியங்கள் பெண்களின் கண்கள் தான் ஆண்மக்களுக்கு அதிக வருத்தத்தைத்  தருகின்ற கருவியாக  இருக்கின்றன என சித்திரிக்கின்றன. குறுந்தொகையிலும் குறிஞ்சித் திணையில் அமைந்த பாடலொன்றில் தலைவனின் மாறுபாட்டை அறிந்த பாங்கன் வினாவ தலைமகன் சொல்லுவதாக அமைந்த பாடலொன்றில் 

பூவொத் தலமரும் தகைய ஏவொத்து

எல்லாரு மறிய நோய்செய் தனவே

தேமொழித் திரண்ட மென்றோள் மாமலை

பரீஇ வித்திய ஏனல்

குரீஇ ஒப்புவாள் பெருமழைக் கண்ணே 8

அதாவது  தாமரைப்பூப் போல சுழலுந் தகையவாய் மகிழ்ந்து பின்னர் அம்பினை நிகர்த்து நோவினைச் செய்தன தேன் போன்ற மொழியினையும், திரண்ட மெல்லிய தோளையுமுடையாளாய் பெரிய மலையிடத்து விரும்பி விதைத்த தினையிடத்துக் குருவிகளை ஓட்டுவாளது பெரிய குளிர்ந்த கண்கள் என தலைவன் தனது மனநிலையை முன்வைப்பதாகவும் அதற்குக் காரணம் தலைவியின் கண்கள் என்பதும் 

பண்டறியேன் கூற்றென் பதனை இனியறிந்தேன்

பெண்தகையால் பேமர்க் கட்டு 9

என்ற வள்ளுவரின் குறளோடு ஒப்பு நோக்கத் தக்கது. மேலும் இயற்கைப் புணர்ச்சி புணர்ந்து மீளும் தலைவன் 

சிறுவெள் அரவின் அவ்வரிக்குருளை

கான யானை அணங்கி யாஅங்கு

இளையன் முளைவாள் எயிற்றுள்

வளையுடைக் கையௌம் அணங்கி யோளே.10

சிறிய மெல்லிய கீற்றக்களை உடைய அரவினது குட்டி காட்டிலுள்ள யானையை வருத்தினாற்போல சிறிய பற்களையுடைய வளையினையடைய கையினவளுமான ஓர் சிறுமகள் எம்மை வருத்தியவள் என்று கூறுவதாக சத்திநாதனார் குறிஞ்சித்தினைப் பாடல் மூலம் தரும் விளக்கமானது  தகையணங்குறுத்தலுக்குத் தக்க  சான்றாய் அமைந்தள்ளது.

கண்டார் உயிருண்ணும் தோற்றத்தால் பெண்டகைப்

பேதைக்கு அமர்த்தன கண் 11

பார்த்தவரின் உயிர்க்குடிக்கும் கவர்ச்சி கொண்டவை பெண்களின் கண்கள் அவை பார்ப்போரிடம் போர்செய்கின்றன என்று பெண்களின் விழிகனால் பெறும் வலியினை வலியுறுத்தியுள்ளார் வள்ளுவர். அத்தகைய வலிகளுக்கு மருந்துகள் இல்லை என்ற பொருள்படும்படி அமைந்துள்ளது பாண்டியன் ஏனாதி நெடுங்கண்ணன் பாடல் வரிகள்

…படிய உண்டிப் பார்ப்பன மகனே

எழுதாக் கற்பின் நின்செய லுள்ளும்

பிரிந்தோர்ப் புணர்க்கும் பண்பின்

மருந்தும் உண்டோ மயலோ இதுவே 12

பிரிந்தாரை சேர்க்கும் மருந்தும் இருக்கிறதா? என  வருத்தத்தின் ஆழத்தை உணர்த்துவதாக இப்பாடல் அமைந்துள்ளது.

முடிவுரை:

பெண்களின் அழகினை வருணித்தல் என்பது சங்க காலம் தொட்டு இக்காலம் வரையிலும் கவிஞர்களிடையே நிறைந்து கிடக்கும் ஒரு கலை. அந்த அழகு ஆண்களை காதல் வயப்படுத்துகிறது, காமத்தின் வயப்படுத்துகிறது என்பதும், அது மிகுந்த துன்பத்தைத் தருகிறது என்பதும் தகையணங்குறத்தல் என்ற அதிகாரத்தில் சொல்லப்பட்டுள்ளது. ஆனால் இச்சொல்லின் பயன்பாடு இன்றி இத்தகைய நிகழ்வுகள் ஆரம்ப காலம்தொட்டு இருந்துவந்திருக்கின்றன. அக இலக்கியமாக போற்றப்பட்டு வரும் குறுந்தொகையில் நெஞ்சொடு கிளத்தல்,பாங்கர்க்கு சொல்லியது,பாகனுக்குச் சொல்லியது, தோழிக்குச் சொல்லியது என பல்வேறு துறைகளில் குறிஞ்சித்திணையில் தலைவியின் அழகும் அதனைக் கண்ட தலைவனின் மனநிலையும் எடுத்துரைக்கப்பட்டுள்ளது தகையணங்குறுத்தும் செய்திகள் குறுந்தொகையில் பரவிக்கிடப்பதை காணமுடிகிறது. 

சான்றெண் விளக்கம்:

1.திருக்கண்ண பரத்தலத்தான்  -குறுந்தொகை மூலமும் உரையும் -பா.எ-40 ப.67

2. ச.பாலசுந்திரம் உரை  -தொல்காப்பியம் பொருள் அதிகாரம் -சூ.96

3. மேலது -தொல்காப்பியம் பொருள் அதிகாரம் -சூ.92

4. கழக வெளியீடு  -நம்பியகப்பொருள் விளக்கம் - சூ.121-ப.62

5. வ.சுப.மாணிக்கம் தெளிவுரை - திருக்குறள்அதி.109 ப.225 

6. ஞா.மாணிக்கவாசகன் உரை  -நாலடியார் பா.எ.395- ப.158

7. திருக்கண்ண பரத்தலத்தான்  -குறுந்தொகை மூலமும் உரையும் பா.எ.2 –ப.9

8. மேலது -  பா.எ 72 –ப.107

9. .வ.சுப.மாணிக்கம் தெளிவுரை      -திருக்குறள்அதி.109 ப.225 

10. திருக்கண்ண பரத்தலத்தான்   - குறுந்தொகை மூலமும்உரையும்பா.எ.119 –ப.155

11. வ.சுப.மாணிக்கம் தெளிவுரை      -திருக்குறள்அதி.109 ப.225 

12. திருக்கண்ண பரத்தலத்தான் -   குறுந்தொகை மூலமும்உரையும் பா.எ.158 –ப.187

துணைநூற்பட்டியல்

1.திருக்கண்ண பரத்தலத்தான்  -குறுந்தொகை மூலமும் உரையும் 

-முல்லை நிலையம் ,தி.நகர்,சென்னை-17

2. ச.பாலசுந்திரம் உரை  -தொல்காப்பியம் பொருள் அதிகாரம் 

3. கழக வெளியீடு  -நம்பியகப்பொருள் விளக்கம் 

அப்பர் அச்சகம் சென்னை 

4. வ.சுப.மாணிக்கம் தெளிவுரை - திருக்குறள்

-தென்றல் நிலையம், மேல சன்னதி, சிதம்பரம்  

5. ஞா.மாணிக்கவாசகன் உரை  -நாலடியார் 

உமா பதிப்பபம்,58,ஐயப்ப செட்டித் தெருசென்னை-600001