ஜூலை 2024 இதழுக்கு ஆய்வுக்கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன

தமிழரின் கடல் எல்லை தாண்டுதலும், பெண் கடல் செலவு மறுப்பும்

முனைவர் இரா.ஜெயஸ்ரீ உதவிப் பேராசிரியர், கல்வியியல் துறை, சாஸ்த்ரா நிகர்நிலைப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர் 27 Jul 2021 Read Full PDF

முனைவர் இரா.ஜெயஸ்ரீ

உதவிப் பேராசிரியர், கல்வியியல் துறை, சாஸ்த்ரா நிகர்நிலைப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்

ஆய்வுச் சுருக்கம்: 

இவ்வுலகம் நீர்நிறைந்த கடல் பரப்பை எல்லையாகக் கொண்டிருக்கிறது. உயர்குடிப் பிறந்தோர் பொருள் தேடிப் போகப் பிரியும் பிரிவு அறநெறி பிறழாத ஒழுக்கமாகக் கருதப்பட்டது. அவ்வாறு பொருள் தேடிச் செல்லும்போது தலைவியை தலைவன் உடன் அழைத்துச் செல்லும் வழக்கம் இல்லை. அதற்கான காரணங்களை இக்கட்டுரை ஆராய்கிறது. 

திறவுச்சொற்கள்: பொருள்வயின் பிரிதல், முந்நீர் வழக்கம், கடற்செலவு, ஆண் பெண் ஒப்புமைகள்.

மல்குநீர் வரைப்பின் ஐந்திரம் நிறைந்த 

தொல்காப்பியன் எனத் தன்பெயர் தோற்றிப் 

பல்புகழ் நிறுத்த பழமையோனே1

என்ற தொல்காப்பியத்தின் சிறப்பப் பாயிரத்தில் நீர்நிறைந்த கடல்பரப்பை எல்லையாகக் கொண்டிருக்கும் இந்நிலவுலகு என்று குறிப்பிடுகிறார் பனம்பாரனார்.

பொருள்வயின் பிரிதலும்

அவர்வயின் உரித்தே2 

என்று பொருள்தேடிப் போகப்பிரியும் பிரிவு அவரவர்க்கு உரிய கடமையாகும் என்று குறிப்பிடும் தொல்காப்பியர், உயர்குடிப் பிறந்தோர் பொருள் தேடிப் போகப் பிரியும் அறநெறி பிறழாத ஒழுக்கநெறி உடையதாகும் என்கிறார்.

முந்நீர் வழக்கம்

மகடூ உவொடு இல்லை3

என்று பிரிவில் தலைவியை உடன் அழைத்துச் செல்லும் தலைமகன் கடல்கடந்து செல்லுதல் இல்லை.

முந்நீர் வழக்கம் என்பதற்கு இளம்பூரணர் கப்பல் வழியாகக் கடலில் செல்லும் பிரிவு என்று உரை கூறுவர்.

ஆனால் நச்சினார்க்கினியர் ஓதல், தூது, பொருள் ஆகிய மூன்று நீர்மையால் செல்லும் பிரிவு என்று பொருள் கூறுவார்.

இளம்பூரணர் கருத்துப்படி கடல்வழியாக மகளிரைக் கூட்டிச் செல்லும் வழக்கம் இல்லாவிடினும் தரைவழியாகச் செல்லும் பிரிவில் தலைவியைக் கூட்டிச் செல்லும் வழக்கம் உண்டு.

பண்டைய தமிழரும், கடலும்:

மாயோன் மேய காடுறை உலகமும்

சேயோன் மேய மைவரை உலகமும்

வேந்தன் மேய தீம்புனல் உலகமும்

வருணன் மேய பெருமணல் உலகமும்4

என்று பழந்தமிழர் நிலத்தைப் பிரித்து ஆராய்ந்து இருந்தனர். இதற்கான சான்றுகள் சங்க இலக்கியங்களில் காணப்படுகின்றன. ஒவ்வொரு இடத்திலும் காணப்பட்ட தரையின் தோற்றம், காலநிலை, தாவரங்கள், விலங்குகள், மனிதச் செயல்பாடுகள் இவற்றின் அடிப்படையில் நிலங்களைப் பிரித்திருந்தனர் இவை ஒவ்வொன்றும் தனித்தனி உலகங்களாகவே காட்சியளிக்கின்றன.

நெய்தல் நிலம்:

தமிழகத்தைச் சுற்றியுள்ள கடற்கரை நிலப்பரப்பு நெய்தல் நிலமாகும். இங்கு வாழ்ந்த மக்கள் பரதவர், நுளையர், வலைஞர் என அழைக்கப்பட்டனர்.

மீன்பிடித்தல், உப்பு விளைவித்தல், முத்துக்குளித்தல் போன்றவை இங்கு வாழ்ந்த மக்களின் தொழில்களாக அமைந்திருந்தன.

கடற்கரைப் பகுதியான இந்நிலத்தில் கடல் வழியாக அயல்நாடுகளுடன் வாணிபம் நடைபெற்றது. தமிழகத்து மிளகு முதலிய நறுமணப் பொருள்களுக்கும் முது;துக்களுக்கும் ஈடாகப் பொன்னையும், மதுவையும் பண்டமாற்றாகப் பெற்றுச்செல்ல கிரேக்கரும், உரோமானியரும் மரக்கலங்களில் வந்து சென்றதைப் பழந்தமிழ் இலக்கியங்கள் கூறுகின்றன. எளிய மக்கள் குடிசைகளில் வாழ்ந்து வந்தாலும் செல்வச் செழிப்பாக வாழ்வைக் கழித்தனர். வாணிபம் வளர்ச்சியுற்றதால் துறைமுகப் பட்டினங்கள், நகரங்கள், வளர்ச்சி பெற்றன. சேரரின் துறைமுகங்களான முசிறி, தொண்டி, மாந்தை, நறவு ஆகியன விளங்கின. சோழரின் துறைமுகப் பட்டினங்களாகக் காவிரிப்பூம்பட்டினம், நாகப்பட்டினம், பொதுகை அல்லது அரிக்கமேடு ஆகியன விளங்கின. கொற்கை, சாலியூர், சாயல் ஆகியன பாண்டியரின் துறைமுகங்களாகும்”5

தமிழ் இலக்கியங்களில் மரக்கலங்களைக் குறி;க்கும் சொற்கள் ஏராளமாகக் காணப்படுகின்றன.

தமிழர் பழங்காலம் முதலே கடற்செலவு மேற்கொண்டுள்ளனர். சங்ககாலத் தமிழர் நாவாய், வங்கம், என்னும் கப்பல்களைப் பயன்படுத்தி வெளிநாடுகளுக்குச் சென்று வாணிகம் செய்து தமக்கு வேண்டிய போர்க்குதிரை முதலான பொருள்களை வாங்கி வந்து இறக்குமதி செய்து கொண்டனர். நாவாய் என்பது கடல் வாணிபம் செய்யப் பயன்படுத்தப்பட்ட மரக்கலம். வாயில் இருக்கும் நாக்குப் போன்ற அடியமைப்பினைக் கொண்டு விளங்குவதால் இதனை நாவாய் என்றனர். அக்காலத்தமிழர் பயன்படுத்திய நாவாய், வங்கம் ஆகியவை பற்றிய குறிப்புகள் சங்க இலக்கியங்களில் உள்ளன.

தமிழ் இலக்கியங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட சொற்கள் மரக்கலங்களைக் குறித்துச் சொல்லப்பட்டுள்ளன. அவை மரக்கலத்தோடு தொடர்புடையவையாக அகர முதலிகளிலும், நிகண்டுகளிலும் விளக்கப்பட்டுள்ளன.

அம்பி, புணை, திமில், நாவாய், வங்கம், கலம், தோணி, ஓடம், படகு, மதலை, மிதவை, தெப்பம், கப்பல் போன்ற சொற்கள் மரக்கலங்களைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளன.

இவையன்றியும் அம்படலம், ஆன் செல்கை, ஆட்டு, ஆணம், உடுப்பம், ஈடல், ஒட்டியாற்படவு, ஓங்கல், கட்டுத்தோணி, கட்டுப்படகு, கட்டுப்பானை, கட்டுப்புணை, கட்டுமரம், மரம், கடத்து, கடவுமரம், கள்ளக்கப்பல், கரைவலை தோணி, கலப்புறுத்தோணி, கூட்டுப்பட்டு, கைப்பரிசு, கொடிக்கப்பல், கோடிக் கரையாந்தோணி, கோல், கோலம், சங்கடம், சட்டித்தோணி, சிறகுவட்டி, 

சுறுப்பு, தந்தாரம், தள்ளை, தண்ணுத்தோணி, தண்ணுவட்டை, தாவடித்தோணி, துறைத்தோணி, தைலமரம், தொடுவை வள்ளம், தொள்ளம், தொள்ளை, நடைச்சலங்கு, நீர்ம்புனை, நாவுகா, பங்கிலம், பட்டிமாரி, பள்ளவோடம், பள்ளியோடம், பாசாங்கம், பெரியமரம், மரக்கோவை, மள்ளு, யாடணம், வள்ளம் என்றவாறும் சொல்லப்படும்.6 ((Maritime History of South India, G.Victor Rajamanickam, V.S.Arulraj, Tamil University, Thanjavur). 

கப்பல்கட்டுவது, பராமரிப்பது, கப்பல் செலுத்துவது ஆகிய செயல்பாடுகளில் தமிழர்கள் தொழில்நுட்பத்தோடும், ஈடுபாட்டோடும் விளங்கினர் என்பது பண்டைய இலக்கியங்கள் வழி அறியப்படுகின்றது.

எனவே கடற்பயணம் என்பதில் பழந்தமிழர் தேர்ச்சி பெற்றிருந்தனர் என்பது அறியப்படுகின்றது.

தொல்காப்பியம் சுட்டும் ஆண், பெண் இயல்புகள்:

ஆணுக்கும், பெண்ணுக்கும் பிறப்பு, குடிமை, ஆண்மை, வயது, உருவு, நிறுத்தகாம வாயில், நிறை, அருள், உணர்வு, திரு என்னும் பத்து ஒப்புமைகளைக் கூறுகிறது தொல்காப்பியம்.

“பெருமையும் உரனும் ஆடுஉ மேன”7 என்று ஆணுக்கு பெருமை, உரன் என்று இரண்டு மட்டும் கூறி பெண்ணுக்கான இயல்புகளாக மிகப்பல வரையறுக்கப்படுகின்றன. 

செறிவு, நிறைவு, செம்மை, அறிவு, அருமை, அச்சம், மடம், நாணம், உயிரினும் நாணினும் சிறந்த கற்பு என்பன பெண்ணுக்குக் கூறப்படும் இயல்புகளாகின்றன.

 “கடிமனை நீத்த பாலாக ஆண் பிற பெண்டிருடன் செல்கிறான். இங்ஙனம் சென்று மீ;ம் ஆடவனின் சோர்வு காத்தல் கடன் என்று சமூக நடைமுறை விதிக்குப் பெண் உட்படுகிறாள். பெண் ஊடல் கொண்டாலும் தொடரும் இல்லற மாசு நீங்க பரத்தமை தோய்ந்தவருடன் வாழத் துணிகிறாள்.

பெண்ணுக்குக் கிட்டாத சமத்துவமாக ஆண் இறந்த பின்னும் தொடர்கிறது சில சூழல். ஆணையிழந்த பெண் தனிமை வருத்தமாக தாபதநிலை, முதுபாலை, என்பதோடு தற்கொண்டானின் பிணத் தலையைத் தன் முகம் சேர்த்து முட்டி மோதி உடன் இறக்கும் நிலையும் நிகழ்வனவாயின.” என்கிறார் ஆய்வாளர்.பு.பாலாஜி.8

ஒரு சமுதாயத்தில் மக்களிடையே காணப்பெறும் நம்பிக்கைகள் கருதத்தக்கன. சமூகத்தின் பண்பாட்டு மரபினை அறிவிக்க வல்லன. ஒவ்வொரு சமுதாயத்திற்கும் இவை தனித்தன்மை உடையனவாக விளங்குகின்றன.

பெண்கள் கடல் பயணத்திலிருந்து விலக்கப்பட்டமைக்கு கீழ்க்கண்ட காரணங்களைக் கூறலாம்.

  • பரந்து விரிந்த கடல் தரும் அச்சம்.
  • கடல் பயணத்தின்போது நேரும் ஆபத்துக்கள், துயரங்கள்.
  • பகை காரணமாக பிரிவு நேரும்போது அதில் ஏற்படும் ஆபத்துக்களைக் கருதியிருக்கலாம்.
  • கடல் என்றாலே துன்பந்தரும் இரங்கலுக்கு உரியது என்ற கருத்து முன்னோர் நெஞ்சில் இருந்திருக்கலாம்.

கடல் பேரழிவால் ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகள், உயிர்கள் இழந்தமை, கடல்கோள்கள் போன்றவற்றால் அவல நிலை எய்தியிருக்கலாம்.

ஆய்வு  முடிவுகள்:

  • சங்ககால மக்கள் கடல் வாணிகத்தில் சிறந்திருந்தமை சுட்டப்பட்டுகிறது.
  • பெண்ணுக்குக் கடல் கடத்தல், மடலேறுதல் கூடாது என்பதால் பெண் குறிப்பிட்ட எல்லைக்குள் மட்டும் வாழ்ந்தாள் என அறியப்படுகிறது.
  • பால் ஏற்றத்தாழ்வு என்பது அக்காலச் சமுதாயத்தில் நீக்கமுடியாது இருந்தது.
  • பெண்ணுக்கான கட்டற்ற சுதந்திரம் மறுக்கப்பட்டிருக்கிறது.
  • அவர்களுக்கான எல்லைகள் வகுக்கப்பட்டிருக்கின்றன.
  • தொல்காப்பியம் தவிர வேறு அக இலக்கணங்களில் இக்குறிப்பு காணப்படவில்லை.
  • சங்க இலக்கியங்கள் தவிர பிற்கால இலக்கியங்களும் இதுகுறித்துப் பேசவில்லை.
  • கடந்த நூற்றாண்டுகளில் பெண்கள் முதல்முதலாக தங்கள் கணவருடன் செல்லும்போதுகூட பல்வேறு குறுக்கீடுகள் இருந்திருக்கலாம்.
  • தற்கால வாழ்வியல் சூழலில் பெண்களுக்கான முழு உரிமை, கல்வி, பொருளாதாரம், சமூகக் காரணங்களால் இவ்வாய்ப்பு கிடைத்துள்ளது.

ஆய்வுக்குப் பயன்பட்ட நூல்கள்:

  • பி.டி.சீனிவாச அய்யங்காரின் தமிழர் வரலாறு, தமிழாக்கமும், திறனாய்வும்: புலவர்.கா.கோவிந்தன், திருநெல்வேலி சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை-18. முதல் பதிப்பு, 2000.
  • தொல்காப்பியச் சிந்தனைகள், ம.கோ.விக்டர், ழகரம், நூல்வெளியீட்டு நிறுவனம், அரியலூர், இரண்டாம் பதிப்பு, 2007.
  • தொல்காப்பியப் பொருளதிகார ஆய்வு நாவலர் சோமசுந்தர பாரதியார் நினைவுச் சொற்பொழிவு, சொற்பொழிவாளர்: பேராசிரியர் க.வெள்ளைவாரணர், தமிழ்ப்பல்கலைக்கழகம்,  தஞ்சாவூர், 1987.
  • தமிழியல் ஆய்வு, முனைவர் இரா.காசிராசன், முனைவர் தூ.சேதுபாண்டியன், முனைவர் மு.மணிவேல் (ப.ஆ), பு.பாலாஜி (க.ஆ). ஞாலத்தமிழ்ப் பண்பாட்டு ஆய்வு மன்றம், மதுரை, மு.ப.1996.

அடிக்குறிப்புகள்:

1. தொல்காப்பியம், சிறப்புப்பாயிரம், (12-15)

2. தொல். அகத். 35.

3. தொல். அகத். 37.

4. தொல்.பொருள் 5

5. தமிழர் வரலாறு, புலவர்கள். கோவிந்தன், ப.52.

6. தொல். பொருள்.95.

7. தமிழியல் ஆய்வு, ப.55.