ஜூலை 2024 இதழுக்கு ஆய்வுக்கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன

கம்பன் விருத்தங்களில் யாப்பு

முனைவர். ஜெ. கவிதா உதவிப்பேராசிரியர்,பூசகோஅர கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி, கோவை 27 Jul 2021 Read Full PDF

முனைவர். ஜெ. கவிதா

உதவிப்பேராசிரியர்,பூசகோஅர கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி, கோவை

ஆய்வுச் சுருக்கம்:

கம்பன் எழுதிய ஆசிரிய விருத்தங்கள், கலி விருத்தங்கள், வஞ்சி விருத்தப்பாடல்களில் யாப்பின் கட்டமைப்பை வெளிக்கொணர்வதே இக்கட்டுரையின் நோக்கம்.

திறவுச்சொற்கள்:

ஆசிரிய விருத்தங்கள், கலிவிருத்தங்கள்,வஞ்சி விருத்தங்கள் தாகுகு, தேமா, புளிமா, கூவிளம், கருவிளம், தேவாரம், சிந்தாமணி, சூளாமணி, கொச்சக் கலிப்பா, திருவாசகம், கம்பராமயணம்.

முன்னுரை:

கம்பன் இசைத்த கவியெல்லாம் நான்

- பாரதியார்

என்று தன் கவிதையுடன் கலந்து பாடினான் பாரதி

கம்பன் கவியின் கவியமுதம் உண்டிடமால்

அம்புவியில் வந்திங்கு அவதாரம் செய்தானோ?

- கவிமணி தேசிய விநாயகம்பிள்ளை

என்று காகுத்தனும் கம்பன் கவியமுதத்தின் மீது காதல் கொண்டுள்ளதாகப் பாடுகிறார் கவிமணியவர்கள்.

எண்ணியெண்ணித் திட்டம்போட்டு எழுதினானோ?

எண்ணம் எங்கிருந்தோ கொட்டினானோ?

  • நாமக்கல் கவிஞர்

பத்தாயிரம் கவிதை முத்தாக அள்ளி வைத்த

சத்தான கம்பனுக்கு ஈடு- இன்னும் 

விந்தாக வில்லையென்று பாடு

  • கவியரசு கண்ணதாசன்

என கவிஞன் பெருமையைக் கவிஞனே அறிவான், கற்றோரின் தகுதியைக் கற்றோரே அறிவர். மற்றோர் அறியார் அதனால் தான், கல்வியிற் பெரியன் கம்பனைக் கற்றாரெல்லாம் போற்றினார்கள். கவிஞர்கள் எல்லாம் புகழ்ந்து பாடினார்கள்.

மேலும் விருத்தங்கள் என்றும் ஒண்பாவில் உயிர் கம்பன் என்று புகழ்ந்து பாடுவது தனிப்பாடல்,விருத்தம் பாடுவதில் கம்பன் மற்ற எல்லாரையும் விட உயர்ந்து நிற்கிறான்.கம்பன் விருத்தத்தில் பெற்ற வெற்றிக்குக் காரணங்கள் அவனுடைய புலமை படைப்புத்திறன், கற்பனை, சொல்நயம்,பொருள்நயம், அணிநயம் யாப்பு அமைதி என பாடிய பாவகைகள் தான் எத்தனை, எத்தனை இருப்பினும் அவ்வகையில் இது ஒரு சிறிய முயற்சிக்காகக் கொண்டு கம்பன் பாடிய விருத்தங்கள் எனும் தலைப்பில் கம்பனின் ஆசிரிய விருத்தங்கள் கம்பனின் கலிவிருத்தங்கள், கம்பனின் வஞ்சி விருத்தங்கள் என விருத்தப்பாக்களில் யாப்பை கட்டமைத்து பாடலை எழுதியுள்ள கம்பன் விருத்தப்பாக்களைப் பற்றி இக்கட்டுரையில் காண்போம். 

கம்பனின் ஆசிரிய விருத்தங்கள்

தாதுகு சோலை தோறும்

சண்பகக் காடு தோறும்

போதவிழ் பொய்கை தோறும்

புதுமணல் தடங்கள் தோறும்

மாதவி வேலிப் பூக

வனம்தொறும் வயல்கள் தோறும்

ஓதிய உடம்பு தோறும்

உயிர் என உலாய தன்றே

(பால. அற்று. 20)

இதில் தாதுகு. போதவிழ், மாதவி, ஓதிய என்று தொடங்கும் நான்கு அடிகள் உள்ளன.( ஆனால் அவை எட்டு வரிகளாக அச்சிடப்பட்டுள்ளன. நீளமான அடிகளை ஒரே வரியாக அச்சிட இடம் கொள்ளாது. ஆகையால் இப்படி ஒர் அடியை இரண்டாவது ஒடித்து அச்சிடுவது வழக்கம்) அவை து,த.த.தி என ஒரே எதுகையால் தொடுக்கப்பட்டிருக்கின்றன. ஒவ்வோர் அடியிலும் ஆறு சீர்கள் உள்ளன. எனவே இது அறுசீர்க்கழி நெடிலடி ஆசிரிய விருத்தம் எனப்படும். முன்னே விருத்தங்களில் இலக்கண வரலாறு என்ற இயலில் கூறப்பட்ட இலக்கணம் இவ்வளவு தான். இதற்கு மேலும் சில விளக்கங்களை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.  எனவே, இப்பாடலின் சீர்களைப் பின்வருமாறு அமைத்து வாய்பாடுகளை எழுதுவோம்.

1 2 3

தாகுது சோலை தோறும்

கூவிளம் தேமா தேமா

சண்பகக் காடு தோறும்

கூவிளம் தேமா தேமா

போதவிழ் பொய்கை தோறும்

கூவிளம் தேமா தோறும்

கூவிளம் தேமா தேமா

புதுமணல் தடங்கள் தோறும்

கருவிளம் புளிமா தேமா

மாதவி வேலிப் பூக

கூவிளம் தேமா தேமா

வனத்தொறும் வயல்கள் தோறும்

கருவிளம் புளிமா தேமா

ஓதிய உடம்பு தோறும்

கூவிளம் புளிமா தேமா

உயிரென உலாய தன்றே

கருவிளம் புளிமா தேமா

இனி 1,2,3 ஆம் இடங்களில் வரும் சீர்களில் வரும் சீர்களின் இயல்புகளைப் பார்ப்போம். முதல் இடத்தில் கூவிளம்,கருவிளம் இரண்டும் வருகின்றன. இவை இரண்டிற்கும் விளம் பொது வாய் இருப்பதால் இவற்றை விளச்சீர் எனலாம். இரண்டலாம் இடத்தில் தேமா, புளிமா, இரண்டும் வருகின்றன எனவே பொதுத்தன்மை நோக்கி அவற்றை மாச்சீர் எனலாம். மூன்றாம் இடத்தில் எல்லாமே தேமாச்சீர்களாக உள்ளன. இந்த அமைப்பைச் சுருக்கமாக விளம்,மா, தேமா என்று குறிக்கலாம். 

ஒவ்வோர் அரையடிக்கும் விளம், மா, தேமா என்ற அமைப்புடைய அறுசீர் விருத்தம் இது. இந்த விளக்கத்தை விருத்தப்பாவில் கூறுகின்றது.

சீர்விளம் மாச்சீர் தேமாச்

சீர்இணைந்திரட்டும் ஈங்கே

விருத்தப் பாவியல், முதற்படலம்- 1)

என்பது அது கூறும் இலக்கணம். இலக்கணம் கூறும் இந்த அடியே அந்த இலக்கணத்துடன் அமைந்திருப்பதை நோக்குக. விருத்தப்பாவியலின் இலக்கணப் பாக்கள் அனைத்தும் இம்முறையிலேயே ( இலக்கணமே இலக்கியமாக அமையும் முறையில்) இயற்றப்பட்டுள்ளன.

விளம் வரும் இடங்களில் ஒரே வழி மாங்காய்ச் சீர் வருவதும் உண்டு.

முல்லையைக் குறிஞ்சி ஆக்கி

மருதத்தை முல்லை ஆக்கிப்

புல்லிய நெய்தல் தன்னைப்

பொருவரு மருதம் ஆக்கிப்

எல்லையில் பொருள்கள் எல்லாம்

இடைதடு மாறும் நீரால்

செல்லுறு கதியின் செல்லும்

வினை எனச் சென்ற தன்றே

(பால, ஆற்று.17)

இதில் ஓரிடத்தில் மட்டும் மருதத்தை என மாங்காய்ச் சீர் வருவது காண்க. (முல்லையை, எல்லையில் என்பனவற்றில் உள்ள ஐகராத்தைக் குறிலாகக் கொள்ள வேண்டும்)

சில பாடல்களில் நான்கடிகளிலும் மாங்காய்ச்சீர் வருவதும் உண்டு.

சொல் ஒக்கும் கடிய வேகச்

சுடுசரம் கரிய செம்மல்

அல் ஒக்கும் நிறத்தி னாள்மேல்

விடுதலும் வயிரக் குன்றக்

கல் ஒக்கும் நெஞ்சில் தங்கா

தப்புறம் கழன்று கல்லாப்

புல்லர்க்கு நல்லோர் சொன்ன

பொருளெனப் போயிற் றன்றே

(பால. தாடகை.50)

பருவத்தால் வாடை தந்த

பசும்பனி அனங்கன் வாளி

உருவிப்புக் கொளித்த புண்ணில்

குளித்தலும் உளைந்து விம்மி

இருதுத்தான் யாத டா என்

றியம் பினன் இயம்ப லோடும்

வெருவிப்போய்ச் சிசிரம் நீங்கி 

வேனில் வந் திறுத்த தன்றே

(ஆரணிய. சூர்ப்ப. சூழ்ச்சி.96)

இப்பாடல்களில் அடிகளின் தொடக்கத்தில் தேமாங்காய் புளிமாங்காய்ச் சீர்களும், இடையில் வேனில் வந் என்ற தேமாங்காய்ச்சீரும் வந்தமை காண்க. இவ்வகை விருத்தகளில் முதற்சீரிலும் நான்காஞ் சீரிலும் மோனை அமைந்துள்ளது.

இந்த அமைப்புடைய அறுசீர் விருத்தங்கள் அப்பர், சுந்தரர் தேவாரங்களிலும் தொண்டரடிப் பொடியாழ்வாரின் திருமாலையிலும் திருவாசகத்திலும் காணப்படுகின்றன. அப்பா தேவாரத்தில் இவை திருநேரிசை என்ற பெயரில் உள்ளன. சிலப்பதிகாரத்திலும் சம்பந்தர் தேவாரத்திலும் இவ்வகை காணப்படவில்லை. சமகாலத்தவர் என்று சொல்லப்படும் அப்பர் கையாண்ட இவ்வகையைச் சம்மந்தர் ஆளவில்லையா என்பது ஆராயத்தக்கது. சிந்தாமணி, சூளாமணி, வளையாபதி, குண்டலகேசி, நீலகேசி, பெரியபுராணம் முதலிய காப்பியங்களில் இவ்வகை விருத்தங்கள் மிகுதியாகப் பயின்றுள்ளன.

கம்பனின் கலி விருத்தங்கள்

நாற்சீர் அடி நான்னு ஓர் எதுகைபெற்று வருவது கலி விருத்தம் என்று மட்டுமே இலக்கண நூல்கள் கூறுகின்றன. அது எப்படியெல்லாம் அழகழகான அமைப்புகளில் வரும் என்பதைக் கம்பன் காட்டுகிறான். கம்பராமாயணத்தில் உள்ள பாவகைகளில் கலிவிருத்த வகைகளே மிகுதியாகும். 

வயிரவான் பூணணி மடங்கல் மொய்ம்பினான்

உயிரெல்லாம் தன்னுயிர் ஒக்க ஓம்பலால்

செயிரிலா உலகினில் சென்று நின்று வாழ்

உயிரெல்லாம் உறைவதோர் உடம்பும் ஆயினான்

(பால. அரசியல்-10)

விளம் விளம் மா கூவிளம் என்ற அமைப்புடைய வகை இது. ஆனால் மாச்சீர் இறுதியில் குறிலோ குறில் ஒற்றோ தான் வரும். நெடிலும் நெடில் ஒற்றும் வாரா, ஒக்க, சென்ற என்பவற்றில் இறுதியில் குறில் ஒற்று வந்தன. 

இதில் 1, 3 ஆம் சீர்களில் மோனை அமையும்

இதற்கு விருத்தப்பாவில் கூறும் இலக்கணம்:

 

முதல் இரு சீர்வளம் மூன்று மாவிளம்

பதமது கடையினில் பசிய கூவிளம்

(விருத்தப்பாவில் 5 ஆம் படலம்-2)

அப்பா தேவாரம், சிந்தாமணி, குளாமணி, நீலகேசி, பெரியபுராணம் ஆகியவற்றில் இவ்வகை விருத்தங்கள் உள்ளன. கம்பன் பாடிய கலிவிருத்தங்களிலேயே மிகுதியான பாடல்களை உடைய வகை இது தான். கம்பராமாயணத்தில 96 இடங்களில் மொத்தம் 2275 கலிவிருத்தங்கள் இவ்வகையில் உள்ளன.

உலகம் யாவையும் தாமுள வாக்கலும்

நிலைபெறுத்தலும் நீக்கலும் நீங்கலா

அலகி லாவிளை யாட்டுடை யாரவர்

தலைவரன்னவர்க் கேசரண் நாங்களே

(பால. பாயிரம்- 1)

மா கூவிளம் கூவிளம் கூவிளம்

என்ற அமைப்பில் வரும் கலிவிருத்தம் இது. முதற்சீர் குறில் ஈற்று மாவாக இருத்தல் வேண்டும். இதில் நேரசையால் தொடங்கும் பாடலில் ஓர் அடியில் 11 எழுத்தும், நிரையசையால் தொடங்கும் பாடலில் ஓர் அடியில் 12 எழுத்தும் இருக்கும். முதலிரண்டு சீர்களுக்கிடையில் மாமுன் நேர் என்ற நேர் ஒன்று ஆசிரியத்தளை அமையும். மற்ற இடங்களில் விள முன் நேர் என்ற வெண்டளை அமையும். சிறுபான்மை வேறு அமைப்புடைய அடிகளும் கலந்து வரும்.

ஆசை   பற்றி அறையலுற் றேன்மற்றிக்

தேமா தேமா கருவிளம் தேமாங்காய்

காசில் கொற்றத் திராமன் கதையரோ

தேமா தேமா புளிமா கருவிளம்

செய்த செய்தவன் சொல்நின்ற தேய்த்தே

தேமா கூவிளம் தேமாங்காய் தேமாங்காய்

தெய்வ மாக்கவி மாட்சி தெரிக்கவே

தேமா கூவிளம் தேமா கருவிளம்

சடையன்  வெண்ணெய் நல்லூர்வயின் தந்ததே

புளிமா தேமாங்காய் கூவிளம் கூவிளம்

இவ்வடிகளை நோக்கினால்  2 ஆம் சீராகத் தேமா, தேமாங்காய் ஆகியனவும் வரும் என்றும்,

3 ஆம் சீராகத் தேமா, புளிமா, கருவிளம், தேமாங்காய் ஆகியனனவும் வரும் என்றும்,

4 ஆம் சீராகத் தேமாங்காயும் வரும் என்றும், ஓரடியில் இரண்டு தேமாங்காய் வரும் என்றும், மாமுன் நிரை, காய்முன் நேர் என்ற வெண்டளைகளும் வரும் என்றும் தெரிந்து கொள்ளலாம். 

இதில் மோனை 1,3 ஆம் சீர்களில் அமையும்.  இதற்கு விருத்தப்பாவில் கூறும் இலக்கணம் வருமாறு:

காதலிக்கும் கலிவிருத் தத்தொரு

பாத மாவரும் கூவிளம் பற்றிடின்

ஆதலால் நிரை நேர்க்கெழுத் தாறிரண்

டோதி னார் ஒரு பஃதுடன் ஒன்றரோ

(விருத்தப் பாவியல்,5 ஆம் படலம்-1)

இவ்வகை விருத்தங்கள், சிலப்பதிகாரம், அப்பர், தேவாரம், பெரியாழ்வார் பாடல்கள், திருவாசகம், சிந்தமாணி, சூளாமணி, வளையாபதி , குண்டலகேசி, நீலகேசி , பெரிய புராணம் ஆகிய நூல்களில் உள்ளன.

கம்பன் மிகுதியாகப் பாடிய கலிவிருத்த வகைகளில் இதுவும் ஒன்று. கமபராமாணத்தில் 56 இடங்களில் 1350 விருத்தங்கள் காணப்படுகின்றன.

கங்ககையிரு கரையுடையான் கணக்கிறந்த நாவாயான்

உங்கள் குலத் தனிதாதற் குயிர்த்துணைவன் உயர்தோளான்

வெங்கரியின் ஏறனையான் விற்பிடித்த வேலையினான்

கொங்கலரும் நறுந்தண்டார்க்கு கனென்றும் குறியுடையான்

(அயோத்தியா.கங்கைகாண்-25)

ஓரடியில் நான்கு காய்ச்சீர் பெற்றுப் பெரும்பாலும் காய் முன் நிரையாக வரும் கலித்தளை அதைந்துவரும் வகை இது. 

தேமாங்காய், புளிமாங்காய், கருவிளங்காய், கூவிளங்காய் ஆகிய எந்தச் சீரும் இதில் எவ்விடத்திலும் வரலாம். நெடில் ஈறாக வரும் விளச்சீர்களும் சிறுபான்மை வரக்கூடும். 

பொருதுறைசேர் வேலினாய் புலிப்போத்தும் புல்வாயும்.

(பால. குலமுறை கிளத்து.5)

இதில் வேலினாய் என அத்தகைய கூவிளம் வருதல் காண்க பெரும்பாலும் கலித்தளை பெற்று வருதலின் இதனைத் தரவு கொச்சகக் கலிப்பா என்பதும் உண்டு.

அளவடி நான்கின் கலிவிருத் தம்மே

(யாப்பருங்கலம்-89)

என்பதால் இது இங்குக் கலிவிருத்தத்துள் அடக்கப்பட்டது. மோனை இதில் 1,3 ஆம் இடங்களில் அமையும். 

சிலம்பு, சம்பந்தர் தேவாரம், அப்பர் தேவாரம், சுந்தரர் தேவாரம், பெரியாழ்வார் பாடல்கள், ஆண்டாள் பாடல்கள்,திருவாசகம், சிந்தாமணி, சூளாமணி, நீலகேசி, பெரியபுராணம் ஆகியவற்றில் இவ்வகைப் பாடல்கள் காணப்படுகின்றன. கம்பனில் 8 இடங்களில் 120 பாடல்கள் உள்ளன.

 

கிள்ளையொடு பூவை அழுத கிளர்மாடத்

துள்ளுறையும் பூசை அழுத உருவறியாப்

பிள்ளை அழுத பெரியோரை என்சொல்ல?

வள்ளல் வனம் புகுவான் என்றுரைத்த மாற்றத்தால்

(அயோத்தியா.நகர் நீங்கு.96)

வெண்டளை தவறாமல், மா, விளம், காய் ஆகிய சீர்கள் இதில் எந்த இடத்திலும் வரலாம் வெண்டளையால் வந்த கலிவிருத்தம் என்றும் இதனைச் சொல்வர். இதில் 1,3 இல்  மோனை அமையும். 

சிலப்பதிகாரம், அப்பர் தேவராம், ஆண்டாள் பாடல்கள் சிந்தாமணி, சூளாமணி, வளையாபதி, நீலகேசி ஆகிய நூல்களில் இவ்வகைப் பாடல்கள் காணப்படுகின்றன.

கம்பராமாயணத்தில் இவ்வகையில் 7 இடங்களில் 96 பாடல்கள் உள்ளன. 

வண்மை இல்லையோர் வறுமை இன்மையால்

திண்மை இல்லை ஓர் செறுநர் இன்மையால்

உண்மை இல்லை பொய் உரையிலாமையால்

வெண்மை இல்லைபல் கேள்வி மேவலால்

(பால.நாட்டு.53)

மா விளம் மா விளம்

என்ற அமைப்பில் வரும் கலிவிருத்தம் இது. மாச்சீர்கள் குறில் இறுதியனவாக இருத்தல் வேண்டும். மோனை 1,3 இல் இருக்கும். 

சூளாமணியில் இவ்வகை விருத்தம் காணப்படுகிறது. கம்பனில் 4 இடங்களில் 46 விருத்தங்கள் உள்ளன.

மத்தச்சின மால்களிறென்ன மலைந்தார்

பத்துத்திசையும் செவி டெய்தின பல்கால்

தத்தித்தழு வித்திரள் தோள்கொடு தள்ளி

குத்தித்தனிக் குத்தென மார்பு கொடுத்தார்.

(யுத்த. அதிகாயன் வதை.244)

மாங்கனி கூவிளம் கூவிளம் தேமா அல்லது

மாங்கனி கூவிளம் தேமா புளிமா

என்ற அமைப்பில் வரும் அடிகளை உடையது இவ்வகை. இது நேரசையால் தொடங்கும் அடியில் 12 எழுத்தையும், நிரையசையால் தொடங்கும் அடியில் 13 எழுத்தையும் பெற்று வரும்.

இது கம்பனுக்கு முன்னையோர் பாடல்களில் இருப்பதாகத் தெரியவில்லை. எனவே இதனைக் கம்பன் படைப்பாகக் கருத இடமுண்டு. கம்பராமாணத்தில் ஓர் இடத்தில் மட்டும் இவ்வகையில் 21 பாடல்கள் காணப்படுகின்றன.

எறிந்தன எய்தன இடியுரு மெனமேல்

செறிந்தன படைக்கலம் இடக்கையின் சிதைத்தான்

முறிந்தன தெறுங்கரி முடிந்தன தடந்தேர்

மறிந்தன பரிநிரை வலக்கையின் மலைந்தான்

(சுந்தர.சம்புமாலிவதை.25)

மூன்று விளம் ஒரு மா என்ற அமைப்புடைய கலி விருத்தம் இது. இதில் கருவிளச் சீர்களச் சீர்களே மிகுதியால் வருகின்றன. கூவிளமும் தேமாச் சீரும் மிகவும் அருகியே காணப்படுகின்றன. மோனை 1,3 ஆம் சீர்களில் வருகின்றது. 

கம்பனின் வஞ்சி விருத்தங்கள்

மூன்று சீர் அடிகள் நான்கு ஒரே எதுகையில் வருவது வஞ்சி விருத்தம் என்று இலக்கண நூல்கள் கூறுகின்றன, ஆனால் அச்சீர்கள் எப்படி இருக்க வேண்டும் என்பது பற்றிய விளக்கம் ஏதும் தரப்படவில்லை. மனம் போனவாறு மூன்று சீர்களை அடிதோறும் அடுக்கிவிட்டால் அது வஞ்சி விருத்தம் ஆகாது.வஞ்சி விருத்தங்களின் அமைப்பைக் கம்பனின் வஞ்சி விருத்தங்களின் அமைப்பைக் கம்பனின் வஞ்சி விருத்தங்கள் நமக்கு உணர்ந்துகின்றன. கம்பன் இயற்றிய வஞ்சி விருத்தங்கள் யாவும் சந்த முள்ளவை யாகவே உள்ளன. இனி அவற்றை ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.

கைத்தோடுஞ்சிறை கற்போயை

வைத்தோ னின்னுயிர் வாழ்வானாம்

பொய்த்தோர் வில்லிகள் போவாராம்

இத்தோ டொப்பதி யாதுண்டே

(சுந்தர. சூடாமணி.41)

தந்தா தந்தன தந்தானா

என்ற சந்த அமைப்புள்ளது இப்பாடல். முதல் இரண்டும் 4 மாத்திரைச்சீர்கள். மூன்றாவது 6 மாத்திரைச்சீர். முதல் இடத்தில் தாந்தா, தானா, தனனம் ஆகியனவும் வருகின்றன. இரண்டாமிடத்தில் தானன என்பதும் வருகின்றன. மூன்றாம் இடத்தில் தானானா, தானானா, கந்தானா, தன்னன்ன என்பனவும் வருகின்றன. மோனை 1,3  ஆம் சீர்களில் உள்ளது.

இதனை ஓரளவுக்கு ஒத்த வஞ்சி விருத்தம் சம்பந்தர் தேவாரத்தில் காணப்படுகிறது. நம்மாழ்வார் பாடல்கள், சூளாமணி, நீலகேசி, பெரியபுராணம் ஆகியவற்றில் வஞ்சி விருத்தங்கள் இருந்தாலும், இந்தச் சந்தத்தில் எங்கும் இல்லை. எனவே இது கம்பன் படைப்பென்று கருதலாம். இவ்வகையில் ஒரே இடத்தில் 14 வஞ்சி விருத்தங்கள் கம்பராமாயாணத்தில் காணப்படுகின்றன.

பற்றுதிர் பற்றுதி ரென்பார்

எற்றதி ரெற்றுதி ரென்பார்

முற்றினர் முற்று முனிந்தார்

கற்றுணர் மாருதி கண்டான்

(சுந்தர. இலங்கை எரியூட்டு.53)

தந்தன தந்தன தந்தாம்

என்ற அமைப்பை இதில் காண்கிறோம். மூன்றுமே நான்கு மாத்திரைச் சீர்கள். முதலிடத்தில் தாந்தன, தானன என்பனவும், இரண்டாம் இடத்தில் தானன என்பதும், மூன்றாம் இடத்தில்  தந்தா, தானா, தானம், தந்த ஆகியனவும் வருகின்றன. மோனை 1,3 இல் உள்ளது.

இவ்வகைச் சந்த விருத்தம் கம்பனுக்கு முன்னையோர் நூல்களில் காணப்படவில்லை. இதுவும் கம்பன் கடைப்பே. இவ்வகையில் கம்பராமாயணத்தில் ஒரே இடத்தில் 14 விருத்தங்கள் காணப்படுகின்றன.

ஊனு யர்ந்தவு ரத்தினான்

மேனி மிர்ந்தமி டுக்கினான்

தானு யாந்தத வத்தினான்

வானு யர்ந்தவ ரத்தினான்

(யுத்த. கும்பகருணன் வதை. 120)

தான தந்தன தந்தனாம்

என்ற சந்த அமைப்புள்ளது இது. முதற்சீர் 3 மாத்திரை ; இரண்டாம் சீர் மாத்திரை ; மூன்றாம் சீர் 5 மாத்திரை.

முதலில் தாந்த, தந்த, தனன என்பனவும் வருகின்றன. இரண்டு பாடல்களில் மட்டும் முதல் இடத்தில் தனந்த என்னும்  4 மாத்திரைச் சீர்கள் வருகின்றன. இரண்டாம் இடத்தில் தானன என்பதும் வருகிறது. மூன்றாம் இடத்தில் தானனா, தந்தனா, தாந்தனா என்பனவும் இவற்றில் இறுதியில் மெய் பெற்றனவும் வருகின்றன. மோனை 1, 3 இல் உள்ளது. 

கம்பனுக்கு முந்தையோர் நூல்களில் சூளாமணியிலும், பெரியபுராணத்திலும் இவ்வகை வஞ்சி விருத்தங்கள் உள்ளன.

கம்பராமாயண்த்தில் இவ்வகையில் ஒரே இடத்தில் 11 விருத்தங்கள் காணப்படுகின்றன. 

தந்த தான  தானனா

என்ற அமைப்பு இதில் உள்ளது. முதலிரண்டும் 3 மாதத்திரைச் சீர்கள். மூன்றாவது 5 மாத்திரைச் சீர்.

முதல் இரண்டு இடங்களில் தந்த, தான இரண்டும் வருகின்றன. முதலில் (2 பாடல்ளில் மட்டும்) தனந்த என்ற 4 மாத்திரைச் சீர்கள் வருகின்றன. இறுதிச் சீராகத் தானனாம். தந்தனாம் என்பனவும் வருகின்றன. மோனை 1 ,3 ஆம் சீர்கள் உள்ளது. 

கம்பனுக்கு முன் இவ்வகை விருத்தம் நீலகேசியில் காணப்படுகிறது. கம்பராமாயணத்தில் ஒரே இடத்தில் இவ்வகை விருத்தங்கள் 10 காக காணப்படுகின்றன.

முடிவுரை:

கம்பன் விருத்தங்களில் யாப்பு என்ற தலைப்பில் கம்பன் எழுதிய கம்பராமயாணத்தில் விருத்தப்பாவை ஆய்வாக கொண்டு அதில் யாப்பின் செயல்பாடுகளை  எந்த அளவிற்கு பயன்படுத்தியுள்ளார். என்பதையும் , விருத்தம் என்ற ஒண்பாவிற்கு இலக்கணத்தையும் கொடுத்துள்ளார். 

மேலும் பாடல் வரிகளில் சீர் பிரித்து அவற்றில் மாச்சீர், விளச்சீர், தேடமாங்காய், புளிமாங்காய் விளமுன் நேர் வெண்டளையும் மாமுன் நேர் ஒன்றிய ஆசிரியத்தளையும், கலிவிருத்தத்தில் தரவு கொச்சகக் கலிப்பாவையும், மாத்திரை, சீர்கள், எதுகை, மோனை என கம்பனின் விருத்தப்பாக்களில் யாப்பை வைத்து அதில் வரும் ஒவ்வொருப் பாடல்களிலும் யாப்பின்  செயல்பாடுகளை அழகாக கம்பன் விளக்கியுள்ளர். ஒவ்வொரு பாடலிலும் ஒவ்வொரு வரியிலும் கம்பனின் கவித்தத்துவத்தையும், அவ்வரியின் பொருட்நுட்பத்தையும், இலக்கண அறிவையையும் காணலாம். 

கம்பர்   நாட்டின் செல்வமெலாம்

எய்தி அரசான் டிருந்தாலும்

உம்பர் நாட்டின் கற்பகக்கா

ஓங்கும் நீழல் இருந்தாலும்

செம்பொன் மேரு அனையபுயத்

திறல் சேர்இராமன் திருக்கதையில்

கம்பநாடன் கவிதையிற் போல்

கற்றோர்க்கு இதயம் கனியாதே

 என கம்பனி பாடல்வரியெல்லாம் படிக்கும் ஒவ்வொரு மனிதனின் இதயமெல்லாம் மகிழ்வு தரும். அதனால் தான் காலம் கடந்தும் அனைவராலும் போற்றப்படுகின்ற காப்பியமாகவும், இதிகாசமாகவும் விளங்குகின்றது.

துணைநூற்பட்டியல்

1. கம்பராமாயணம்

சென்னைக் கம்பன் கழகப்பதிப்பு

2. விருத்தப்பாவியல்

3. இராமாயணம் – உத்தரகாண்டம்

4. கம்பராமாயணம்-  வை.மு. கோபால கிருட்டினமா சாரியார் பதிப்பு

5. கம்பராமாயணம்- அண்ணாமலைப் பல்கலைக்கழகப் பதிப்பு.