ஜூலை 2024 இதழுக்கு ஆய்வுக்கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன

சிலப்பதிகாரம் காட்டும் சமுகம்

முனைவர்.ரா.ராமேஸ்வரி தமிழ்த்துறை, இதயா மகளிர் கல்லூரி,சருகணி 27 Jul 2021 Read Full PDF

முனைவர்.ரா.ராமேஸ்வரி

தமிழ்த்துறை, இதயா மகளிர் கல்லூரி, சருகணி

ஆய்வுச் சுருக்கம்

சிலப்பதிகாரத்தில் காணலாகும் தனி மனித வாழ்வியல் தொடர்பான நம்பிக்கைகளை ஆராய்வது இவ்வாய்வின் நோக்கமாகும். முதலில் காரணத்தோடு கூடிய நம்பிக்கைகள்தான் பின்பு காரணம் அறியாமலே கடைபிடிக்கப்பட்டு மூடநம்பிக்கைகளாகவும் மாறின.நல்லநாள் பார்ப்பது, நல்லநேரம் பார்த்துக் கால்கோள் இடுவது, திருமணத்திற்கு உகந்த காலம் பார்ப்பதும், விரிச்சி, நற்சொல் கேட்பது, சகுனம் எனப் பறவை விலங்கினங்கள் மூலம் முன்குறி அறிவது, பல்லி சொல் பலன் பார்ப்பது இவைபோன்ற எத்தனையோ நம்பிக்கைகள் தமிழர் வாழ்வில் ஊடுருவி உள்ளன.  

சிலம்பில்; கூறப்படும் கண்ணகியின் திருமணம் மாமுது பார்ப்பான் மறைவழி காட்டிட நடந்தது (மங்கல.52-53). மணமக்கள் இருவரும் தீவலம் செய்வதனைக் காணக் கொடுத்துவைத்தவர்களை அடிகள் பாரட்டுகிறார். ஆனால் தாலி பூட்டியதாகக் கூறவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும். ‘மங்கலவணியிற் பறிதணி மகிழாள்’ என்றவிடத்தில் அடியார்க்கு நல்லார் இயற்கை அழகு என்று பொருள் கொண்டுள்ளார். மனிதனின் தன்னல உணர்வும் சமுதாய உணர்வுமே நம்பிக்கைகளை வளர்த்துவருகின்றன.இந்நம்பிக்கைகள் மனிதனின் அச்ச உணர்வினை அடிப்படையாகக் கொண்டு தோன்றியவை. இயற்கையின் புதிரை உணர இயலாதபோதும் மனித வாழ்வில் நிகழும் ஊறுகளுக்கு காரணம் கற்பிக்க இயலாத நிலையிலும் மனிதமனம் சிலவற்றைப் படைத்து காரணம் கற்பித்துக் கொள்கிறது.இதுபோன்ற நம்பிக்கைகள் சிலம்பில் காணப்படுகின்றன.இதன்மூலம் அக்கால மக்களின் சமூகநிலையை அறியமுடிகிறது.

திறவுச் சொற்கள்; இலக்கியம்,சிலப்பதிகாரம்,காப்பியம்,சமூகம்,கண்ணகி

 

முன்னுரை

           தழிழ் இலக்கிய வரலாற்றில் கிடைக்கும் முதற்காப்பிய நூல் சிலப்பதிகாரமாகும். காப்பிய இலக்கண வரையரைகள் என்று வரையறுத்துக் கூறும் அமைப்புகள் இல்லாத காலத்தில் எழுந்த நூல் சிலம்பு. இதனை எழுதிய அடிகளின் கூர்ந்த மதிநூட்பத்தைப் பல இடங்களில் காணமுடிகிறது. இதற்குப் பின்னர்ப் பல காப்பியங்கள் தோன்றியிருந்தாலும், சிலப்பதிகாரம் காட்டும் நிறைவு அவற்றுள் இல்லை. சிலப்பதிகாரமே ஓர் இலக்கண நூல் போன்று பிற்காலக் காப்பிய தோற்றத்திற்கு மூலமாய் விளங்குகிறது.

            நம்பிக்கைகள் மக்களால் உருவாக்கப்பட்டு சமுதாயத்தால் பின்பற்றப்படுகின்றன. அவை சமுதாயத் தேவைகள் மற்றும் குறிக்கோள்களின் அடிப்படையில் தோன்றியன. மனிதனின் தன்னல உணர்வும் சமுதாய உணர்வுமே நம்பிக்கைகளை வளர்த்துவருகின்றன.இந்நம்பிக்கைகள் மனிதனின் அச்ச உணர்வினை அடிப்படையாகக் கொண்டு தோன்றியவை. இயற்கையின் புதிரை உணர இயலாதபோதும் மனித வாழ்வில் நிகழும் ஊறுகளுக்கு காரணம் கற்பிக்க இயலாத நிலையிலும் மனிதமனம் சிலவற்றைப் படைத்து காரணம் கற்பித்துக் கொள்கிறது. அவை நம்பிக்கைகளாக உருப்பெருகின்றன. இவ்வாய்வின் வழி சிலப்பதிகாரத் தமிழகத்தை அறியமுடிகிறது.              

நாளும் கோளும் 

 பண்டைத் தமிழர்களிடம் நல்லநாள் பார்க்கும் பழக்கம் இருந்தது.

               “மறைந்த ஒழுக்கத்து ஓரையும் நாளும்

               துறந்த ஓழுக்கம் கிழவோர்க்கு இல்லை”   (களவு.133)    

என்பது தொல்காப்பியக் களவியல் சூத்திரம். களவு மணம் நிகழும் காலத்தில் தீய ராசியிலும், தீய நாளிலும், காதலியுடன் சேராமல் இருக்கும். வழக்கம் தலைவனிடம் இல்லை என்பது இதன் பொருள்.

            “நாளும் புள்ளும் பிறவற்றின் நிமித்தமும்” (தொல்.புறத்.88)

           தொல்காப்பியப் புறத்திணைச் சூத்திரம் நாளாலும், பறவைகளாலும் வேறு பொருள்களாலும் தோன்றும் காரணங்கள் என்பது இதன் பொருள். இவையாவும் தமிழர்களின் பழைய நாகரிகத்தை  உணர்த்துகின்றன. நல்லராசி, கெட்டராசி பார்த்தல் தமிழர்களின் பழைய வழக்கம். பறவைச் சகுனம் பார்த்தலும், வேறு பல அடையாளங்களைக் கொண்டு நன்மை, தீமைகளைத் தீர்மானிப்பதும் தமிழர்களின் பழக்கம் என்பதை அறியமுடிகிறது.

நாள் பார்ககும் பழக்கமும், பறவைச் சகுனம் பார்ப்பதும் தமிழர்களின் பழக்கம் என்பதைப் புறநானூற்றுப் பாடல் ஒன்று தெளிவுறுத்துகின்றது.

               “நாள் அன்று போகிப் புள்இடை தட்பப்

               பதன் அன்று புக்குத் திறன்அன்று மொழியினும்

              வறிது பெயர்குநர் அல்லர் நெறிகொளப்

            பீடுகெழு மலையன் பாடியோரே”     (புறம்.124)

                                        ஓசை நிறைந்து  விழுகின்ற  அருவியை   உடைய பொருமை நிறைந்த  மலையின்  தலைவனாகிய  மலையமான்.  திருமுடிக்காரியைப் புகழ்ந்து  பாடிச்  சென்ற  புலவர்கள் பரிசு பெறுவது  உறுதி. நல்ல நாள் அல்லாதகெட்டநாளிலேஅவனிடம்சென்றாலும்சரி,போகாதேஎன்றுபறவைதடுக்கின்றபோது சென்றாலும் சரி, காலம் அல்லாக் காலத்திலே போனாலும் சரி, தகுதியற்ற சொற்களை அவனிடம் கூறினாலும்சரி, வெறுங்கையுடன் திரும்பமாட்டார்கள் பரிசில் பெற்றுத்தான் திரும்புவார்கள். இந்தப் புறநானூற்றுப் பாட்டும் நாள் பார்க்கும் பழக்கமும் சகுனம் பார்க்;கும் வழக்கமும் தமிழரிடம் இருந்தன என்பதைத் தெரிவிக்கின்றது.     சிலப்பதிகாரத்தில் கண்ணகி – கோவலன் திருமணத்தின்போது ‘மாமுது பார்ப்பான் மறைவழி காட்டிட நடந்தது’ மணமக்கள் இருவரும் தீவலம் செய்வதனைக் காணக் கொடுத்துவைத்தவர்களை அடிகள் பாரட்டுகிறார் (மங்கள.52:53). இவற்றின் மூலம் சிலப்பதிகாரத்தில் நல்லநேரம் பார்க்கும் வழக்கம் இருந்தமையை அறியமுடிகிறது. 

பல்லி சொல்லும் பலன்

ஒரு செயலுக்குப் புறப்படும்போது பல்லி சொன்னால் தயக்கம் தோன்றும். தான் செல்லும் செயலைக் குறித்துதான் அந்த பல்லி ஏதோசொல்லியதாக எண்ணப்படுகிறது. பல்லி சொன்னால் தரையில் மூன்று முறை விரலால் தட்டும் பழக்கம் இன்றும் சிலரிடம் இருக்கின்றது. பல்லி சொல்லை நம்புவது மக்களின் பரம்பரை நம்பிக்கையாக உள்ளது.

               “முதைச்சுவல் கலித்த மூரிச் செயந்தினை

                 ஓங்கு வணர்ப் பெரும்குரல் உணீஇய பாங்கர்ப்

                 பகுவாய்ப் பல்லிப் பாடுஒர்த்துக் குறுகும்

                  புருவைப் பன்றி”         (அகம்.88)

உச்சியிலே செழித்து முற்றியிருக்கும் நல்ல தினையின் உயர்ந்த வளைந்த பெரிய கதிரை உண்ணும் பொருட்டு பிளந்த வாயுடைய பல்லியின் சொல்லை அறிந்து நல்ல நிமித்தம் என்று எண்ணி இளம்பன்றி வருகின்றது. 

          “மையல் கொண்ட மதன்அழிஇருக்கையன்

      பகுவாய்ப் பல்லி படுதொறும் பரவி

      நல்ல கூறுஎன நடுங்கி”    (அகம்.289)

காதல் மிகுதியால் வலிமையற்றிருப்பவள் பிறந்த வாயையுடைய பல்லி சொல்லும் போதெல்லாம் வணங்கி அதனை நல்லது சொல் என்று நடுங்கி வேண்டினாள் இந்த அகநானூற்றுப் பாடல்கள் பல்லி சொல்வதற்குப் பலன் உண்டென்று தமிழ் மக்கள் நம்பி வந்தனர் என்பதை உணர்த்துகின்றன.

         “பல்லியும் பாங்கு ஒத்து இசைத்தன

         “ நுல் எழில் உண்கணும் ஆடுமால் இடனே”   (கலி. 11)

பல்லியும் நல்ல இடத்திலே அவர் வருகைக்கு ஏற்றவாறு கூறின என்பதால் பல்லி சொல்வதற்கு பலன் உண்டு என்பதை உணர்த்துகின்றது கலித்தொகை. இந்நம்பிக்கை சிலம்பில் காணமுடியவில்லை. சங்க காலத்தில் கண்துடித்தல், தோள் துடித்தல் நம்பிக்கையும் இருந்துள்ளது. அவை

              “நல் எழில் உண்கணும் ஆடுமால் இடனே”

         என்பதனால் மக்களிடம் இருந்த மற்றொரு நம்பிக்கையையும் அறியமுடிகிறது. பெண்களுக்கு இடது கண் இடது தோள் துடித்தால் நன்மை உண்டு. வலது கண், வலது தோள் துடித்தால் தீமை வரும். ஆண்களுக்கு வலது கண், வலது தோள் துடித்தால் நன்மையும், வெற்றியும் வரும். இடது கண், இடது தோள் துடித்தால் தீமையுண்டாகும். இத்தகைய நம்பிக்கையும் தமிழரிடம் இருந்தது என்ற உண்மையை இக்கலித்தொகை காட்டுகின்றது.

பண்டிகைகள்

         குறிப்பிட்ட சில நாட்களைப் பண்டிகைகளாக பெருநாட்களாக, சிறந்த நாட்களாகக் கொண்டாடும் வழக்கம் எல்லா நாட்டிலும் உண்டு. எல்லா இன மக்களிடமும் உண்டு. எல்லா மதத்தினரிடமும் உண்டு, இத்தகைய நாட்களை மகிழ்ச்சியுடன் மக்கள் கொண்டாடுகின்றனர்.   இப்பண்டிகைகளை மூடநம்பிக்கை என்று சிலர் கூறினாலும் அவை அழியவில்லை. பழங்காலத்துப் பண்டிகைகள் பலவற்றை மக்கள் இன்னும் கொண்டாடிக் கொண்டுதான் வருகின்றனர்.;

            பழங்காலத்துத் தமிழ் மக்கள் கார்த்திகைத் திருநாளைக் கொண்டாடினார். கார்த்திகை நாளிலே வீதியிலே விளக்கேற்றி வைப்பார்கள். மலர்மாலைகளைத் தொங்கவிடுவார்கள் பவரும் கூடிப் பார்த்து மகிழ்ச்சியடைவார்கள். 

       “குறுமுயல் மறுநிறம கிளர மதிநிறைந்து

        அறுமீன் சேரும் அகல்இருள் நடுநாள்

        மறுகுவிளக்கு உறுத்து மாலை தூக்கிப்

        பழவிறல் மூதூர்ப் பலருடன் துவன்றிய விழவு”  (அகம்.141)

        என்பதுஅகநானூற்றுப் பாட்டு. இதில் கார்த்திகைத் திருநாளைக் கொண்டாடிய முறை காணப்படுகின்றது. “சிறிய முயலாகிய களங்கம் தன் மார்பிலே விளங்கும்படி முழுமதி தோன்றும் உரோகிணி சந்திரனுடன் சேர்ந்திருக்கும். இத்தகைய கார்த்திகை நாள் இரவில் வீதியிலே விளக்கேற்றிவைப்பர். மலர்மாலைகளைத் தொங்கவிடுவர். புழமையான சிறந்த ஊர்களிளே மக்கள்  பலரும் கூடிவிழாக் கொண்டாடுவர் என்பதே இவ்வரிகளில் அமைந்திருக்கும் பொருளாகும். இதனால் பண்டைத் தமிழ் மக்கள் கார்த்திகை விழாக் கொண்டாடியதை அறியலாம்.   தைந்நீராடுதல் என்னும் பண்டிகையும் பண்டைத் தமிழ் மக்கள் கொண்டாடிவந்தனர். பெண்கள் நோன்பிருந்து தை மாதம் முதலில் நீராடுவர் இதற்குத்தான் தைநீராடல் என்று பெயர். 

          “தைஇத் திங்கள் தண்கயம் படியும்

            பெரும்தோள் குறுமகள்”     (நற் .80)

“தை மாதத்தின் முதல் நாளிலே குளிர்ந்த நீர் நிறைந்த குளத்திலே நோன்புடன் நீராடும் பெரிய தோள்களையுடைய இளம் பெண்” என்பதே இதன் பொருள்.

“தையின் நீராடிய தவந்தலைப் படுவாயோ”          (கலி.59)

        தைநீராடும் வழக்கம் கலித்தொகையிலும் காணப்படுகிறது. பெண்கள் தாம் விரும்பும் நல்ல கணவனைப் பெறுவதற்காக மன்மதனை வேண்டிக்கொள்வதே தைம்மாத நோன்பாகும் என்று திவ்விய பிரபந்தம், நாச்சியார்திருமொழியில் காணப்படுகிறது. 

       சிலப்பதிகாரத்தில் புகார் நகர மக்கள் இந்திரவிழாக் கொண்டடிய சிறப்பை அறியமுடிகிறது. வழிபாடுகளும் விழாக்களும் எங்கணும் நிகழ்ந்தன. இந்திரனுக்கு முப்பது நாட்கள் விழா எடுத்துள்ளனர் என்பதை அறியமுடிகிறது (இந்திரவிழா.65-68). இவ்வளவு சிறப்புடையதாக இருந்த இவ்விழா காலப்போக்கில் வழக்கிலந்ததற்குக் காரணம் அறியமுடியாததாக உள்ளது.

பேய்கள் பற்றிய நம்பிக்கை

            பேய்களைப் பற்றியும் பேய் மகளிரைப் பற்றியம் சங்க இலக்கியங்களில் காணமுடிகின்றது. இந்த குறிப்புகள் எல்லாம் இறந்த மக்களின் புலாலைச் சுடுகாட்டிலும், போர்களத்திலும், பேய் மகளிர் உண்ணுவதைப் பற்றியே கூறுகின்றன. சிலப்பதிகாரத்தில் ‘பேய்மகளிர்’ வருகின்றனர்.

           சங்க இலக்கியங்களில் காண்பது போலவே இவர்களும் போர்க்களங்களில் மறவர்களின் வாளுக்கு இரையாகும் வீரர்களின் பிணத்தை உண்பவர்களாகவே காட்சியளிக்கின்றனர். இக்குறிப்புகளிலிருந்து மனிதர்களின் புலாலை உண்ணும் ஒரு மக்கள் கூட்டத்தினர் சங்க காலத்திலோ சிலப்பதிகாரக் காலத்திலோ அல்லது அதற்கு முன்போ வாழ்ந்துவந்திருக்கவேண்டும் என அவர்கள் நம்பியதாகத் தெரிகின்றது. 

      “இடுபிணம் தின்னும் இடாகினிப்பேய் வாங்கி

      மடிஅகத்து இட்டாள் மகவை”       (கனாத்.21-22)

இதன்மூலம் சிலப்பதிகாரத்திலும் பேய் பற்றிய நம்பிக்கை இருந்துள்ளமையை அறியமுடிகிறது. இக்கருத்திற்கு அரண்சேர்ப்பது போல்

“டாக்டர் க.கைலாசபதி அவர்கள் உலகில் பல இடங்களில் நரமாமிசம் உண்ணும் வழக்கத்தை எடுத்துக்காட்டி, பேய்மகளிர் உண்மையான மகளிரே என்ற முடிவுக்கு வருகிறார் என்று போ.அழகுகிருஷ்ணன் சுட்டுவார்.” 

திருமணச் சடங்குகள்

            சங்ககாலம் முதல் இன்றுவரை திருமணம் செய்வதில் பல்வேறு சடங்குகள் இடம்பெறுகின்றன. பொருத்தம் பார்த்தல், பரிசமளித்தல், சிலம்புகழித்தல். அம்மி மிதித்தல், அருந்ததிபார்த்தல் போன்ற சடங்குகள் யாவும் நம்பிக்கை சார்ந்தவையாக உள்ளன.

                “பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர்

                  ஐயர் யாத்தனர் கரணம் என்ப” (தொல்.கற்.4) 

       காதலில் ஈடுபட்டவர்கள் பின்னர் அதனை இல்லையென்று மறுதலித்த நிலை ஏற்பட்டபோது சான்றோர் இக்காரண நிகழ்ச்சியை ஏற்படுத்தினர் என்பது பொருள். டாக்டர் வ.சுப.மாணிக்கனார் அவர்கள் ‘தமிழ் காதல்’ என்னும் நூலில் சுட்டியுள்ளார்.

“கரணம் என்பதற்கு மணக்குறி என்று பொருள்கொண்டு திருமணமானவட்கும் கன்னிக்கும் வேறுபாடு தோன்றுதற் பொருட்டு மலர் அணிதலையும், இளமைதொட்டு அணிந்திருந்த சிலம்பினை அகற்றிவிடுதலுமாகிய அடையாளங்களை எற்படுத்தினர் என்பர்.”

           சிலம்பில்; கூறப்படும் கண்ணகியின் திருமணம் மாமுது பார்ப்பான் மறைவழி காட்டிட நடந்தது (மங்கல.52-53). மணமக்கள் இருவரும் தீவலம் செய்வதனைக் காணக் கொடுத்துவைத்தவர்களை அடிகள் பாரட்டுகிறார். ஆனால் தாலி பூட்டியதாகக் கூறவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும். ‘மங்கலவணியிற் பறிதணி மகிழாள்’ என்றவிடத்தில் அடியார்க்கு நல்லார் இயற்கை அழகு என்று பொருள் கொண்டுள்ளார். 

மறுஉலகம்

           இறந்தபின் செல்லக்கூடிய உலகம் ஒன்று உண்டு இவ்வுலகில் நன்மை செய்தவர்கள் மறு உலகிலே இன்பம் துய்ப்பார்கள். இவ்வுலகிலே தீமை செய்தவர்கள் மறுவுலகிலே துன்பத்தை அடைவார்கள். இத்தகைய நம்பிக்கையும் சங்க காலத்துக்கு முற்பட்ட தமிழர்களிடம் குடிகொண்டிருந்தது.

              “இம்மைச் செய்தது மறுமைக்கும் ஆம்பினும்

                ஆறவிலை வணிகன் ஆஅய் அல்லன”;

         இப்பிறப்பிலே செய்த ஒன்று, மறு பிறப்பிற்கும் உதவும் என்று எண்ணி, ஒரு பொருளைக் கொடுத்து, அறத்தை விலைக்கு வாங்கும் வணிகன் அல்லது ஆய் என்பவன். இப்புறநானூற்று அடிகள் மறுவுலக வாழ்வைச் சுட்டிக்காட்டுகின்றன. மறுமையில் இன்பம் அடையும் உலகத்தைத் துறக்கம் சுவர்க்கம் என்று கூறவர்.

           “பெறற்கு அரும் தொல்சீர்த் துறக்கம்”   (பெரும்பா.388) 

என்று பெரும்பாணற்றுப்படையும், பட்டினப் பாலையும் கூறுகின்றன. என்று பெரும்பாணற்றுப்படையும், பட்டினப் பாலையும் கூறுகின்றன. பெறுவதற்கு அரிய இன்பங்கள் நிறைந்த பழமையான பெருமையுள்ள சொர்க்கம்.

துன்பம்தரும் உலகத்தை நகரம் என்று கூறுவர். இத்தகைய உலகம் உண்டென்றும் தமிழர்கள் நம்பிவந்தனர்.

          “நிரயம் கொள்பரொடு ஒன்றாது”     (புறம்.5)

நுகரத்தையே தமக்கு இடமாகக் கொள்கின்றவருடன் சேராமல் என்ற புறநானூற்று அடி நகரம் ஒன்று உன்டென்பதை விளக்குகிறது. சிலப்பதிகாரத்திலும் மண்ணுலகம், விண்ணுலகம் என்ற நம்பிக்கை இருந்துள்ளது. அவை,

        “விண்ணோர் உருவின் எய்திய நல்லுயிர்

        மண்ணோ உருவின் மறிக்கினும் மறிக்கும்”  (நடுகல்.159-160)

என்பதில் இருந்து மறுஉலகம் பற்றிய நம்பிக்கை சிலப்பதிகாரத்து மக்களிடம் இருந்தது என்பதை அறிந்துகொள்ள முடிகின்றது.

தீய குறிப்புகள்

                        இயற்கைக்கு மாறாக ஒரு செயல் நடக்கும்போது அதைத் தீய செயலுக்கான அறிகுறி என்று மக்கள் நம்புகின்றனர்.

               கம்பராமாயணத்தில் மண்டோதரி கண்ட கனவில் தோன்றியவை வாழைமரம் சாயகண்டால், பகலில் விண்மீன் விழாக்கண்டால், பெண்களின் மங்கல்யம் அறுந்துவிழக்கண்டால் இது போன்ற தீய குறிப்புகள் யாவும் இராவணன் அழிவிற்கும், இலங்கை அழிவிற்கும் அறிகுறியாக இருந்ததை அறியலாம், இதுபோன்றே, சிலப்பதிகாரத்திலும் கோவலன் மறையப்போகிறான் என்பதை அறிவுறுத்துவதாகச் சில தீய குறிப்புகள் நிகழ்ந்தன. அவை,

                “ குடம்பால் உறையா, குவிஇமில் ஏற்றின்

                   மடக்கண் நீர்சோரும வருவது ஒன்று உண்டு

                   உறிநறு வெண்ணெய் உருகா உருகும்

                   மறிதெறிந்து ஆடா: வருவது ஒன்று உண்டு

                    நான்முலை ஆயம் நடுங்குபு நின்றிரங்கும்

                   மான்மணி விழும் வருவது ஒன்று உண்டு”    (ஆய்ச்சி.2-4)

                         குடங்களிலே உறையிட்டிருந்தபால்  உறையாருக்கின்றது திரண்டதிமில்களையுடைய  ஆனேற்றின் அழகிய  கண்களினின்றும்  நீர் வழிந்து கொண்டிருக்கின்றது. அதனால்  நமக்கு வருவதோர்  தீமை  ஒன்று உண்டு.  முதல்நாள்  உறியிலே  எடுத்துவைத்திருந்த மணமுள்ள  வெண்ணெய் உருகவைத்தும்  உருகாதிருக்கின்றது.  துள்ளி விளையாடும் ஆட்டுக்குட்டிகள் ஆடாவாய் அசையாவாய்ச் சோர்ந்து கிடக்கின்றன. அதனால்  நமக்கு வருவதோர் தீமை ஒன்று உண்டு. நான்கு முலைக்காம்புகளையுடைய பசுநிரைகள்,  தம்  உடல் நடுங்க  நின்று  கதறுகின்றன.  அவற்றின் கழுத்திலே கட்டியிருந்த  மணிகள் அன்று  நிலத்திலே வீழ்கின்றன. அதனால்  நமக்கு வருவதோர்  தீமை  ஒன்று  உண்டு.

இவ்வாறு  தீய நிமித்தங்கள் தோற்றக் கண்ட மாதரி, தன் மகளுடன் சொல்லிக் கவலைப்பட்டாள்.

                  “குடத்துப்பால் உறையாமையும் 

                   குவி இமில் ஏற்றன்

                    மடக்கண் நீர்சோர்தலும்

                    உறியில் வெண்ணெய் உருகாமையும்

                     மறி முடங்கி ஆடாமையும்”                   (ஆய்ச்சி.5)

          குடத்திலிட்டு வைத்த பாலோ உறையவில்லை.  குவிந்ததிமிலினை உடை ஏற்றின் அழகிய கண்களோ நீர் சொரிகின்றன. உறியில் வைத்திருந்த வெண்ணெயோ உருக்கவும் உருகாது போயிற்று. ஆட்டுக்குட்டிகள் துள்ளியாடாவாய் முடங்கிக் கிடக்கின்றன. ஆநிரைகளின் கழுத்து மணிகள் நிலத்திலே அறுத்து வீழ்கின்றன. அதனால் நமக்கு வருவதோர் துன்பம் உண்டு. என மக்கள் நம்பினர். 

முடிவுரை

                      இவ்வாய்வின் விளக்கப்பெற்ற கருத்துகள்வழி, சிலப்பதிகாரக் காலச் சமூக மக்களின் பழக்கவழக்கம், நம்பிக்கைகளை அறிந்துகொள்ள முடிகிறது.

                “நாளும் புள்ளும் பிறவற்றின் நிமித்தமும்”     (தொல்.புறத்.88)

                                        தொல்காப்பியப் புறத்திணைச் சூத்திரம் நாளாலும், பறவைகளாலும் வேறு பொருள்களாலும் தோன்றும் காரணங்கள் என்பது இதன் பொருள். இவையாவும் தமிழர்களின் பழைய நாகரிகத்தை  உணர்த்துகின்றன. நல்லராசி, கெட்டராசி பார்த்தல் தமிழர்களின் பழைய வழக்கம். பறவைச் சகுனம் பார்த்தலும், வேறு பல அடையாளங்களைக் கொண்டு நன்மை, தீமைகளைத் தீர்மானிப்பதும் தமிழர்களின் பழக்கம் என்பதை அறியமுடிகிறது.

                                   பெண்களுக்கு இடது கண் இடது தோள் துடித்தால் நன்மை உண்டு. வலது கண், வலது தோள் துடித்தால் தீமை வரும். ஆண்களுக்கு வலது கண், வலது தோள் துடித்தால் நன்மையும், வெற்றியும் வரும். இடது கண், இடது தோள் துடித்தால் தீமையுண்டாகும். இத்தகைய நம்பிக்கையும் தமிழரிடம் இருந்தது என்ற உண்மையை இக்கலித்தொகை காட்டுகின்றது. 

                                    சிலப்பதிகாரத்தில் புகார் நகர மக்கள் இந்திரவிழாக் கொண்டடிய சிறப்பை அறியமுடிகிறது. வழிபாடுகளும் விழாக்களும் எங்கணும் நிகழ்ந்தன. இந்திரனுக்கு முப்பது நாட்கள் விழா எடுத்துள்ளனர் என்பதை அறியமுடிகிறது (இந்திரவிழா.65-68). இவ்வளவு சிறப்புடையதாக இருந்த இவ்விழா காலப்போக்கில் வழக்கிலந்ததற்குக் காரணம் அறியமுடியாததாக உள்ளது. இவ்வகையான நம்பிக்கைகள் மூலமாக சிலப்பதிகாரச் சமுதாயத்தை அறியமுடிகிறது.

 

 சான்றெண் விளக்கம்

1.  தொல்.களவு. 133

2.  தொல்.புறத்.88

3.  புறம்.124

4.  அகம்.88

5.  கலி.11

6.  அகம்.141

7.  நற். 80

8.  பொ.அழகுகிருஷ்ணன், சிலப்பதிகாரம் காட்டும் பண்பாடு சமுதாய வரலாறு,ப.222

9.  தமிழ்க்காதல், வ.சுப.மாணிக்கம், ப.123. 

  

துணைநூற்பட்டியல்

  

1. டாக்டர்.உ.வே.சாமிநாதய்யர்   -               சிலப்பதிகார மூலமும் 

                                                                                                    அரும்பதவுரையும், 

                                                                               அடியார்க்கு நல்லாருரையும்,

                                                         டாக்டர் உ.வே.சாமிநாதையர் நூல்   நிலையம், 

                                                                                                     சென்னை,

                                                                                            பதினொன்றாம் பதிப்பு - 2008 

 

   2.  டாக்டர் ப.சரவணன்         -                         சிலப்பதிகாரம் 

                                                                                    சந்தியா பதிப்பகம அசோக்நகர் 

                                                                                              சென்னை. 600 083

                                                                                                    பதிப்பு – 2008.

  

3.  சண்முகம்பிள்ளை .மு (ப.ஆ   -              தொல்காப்பியம்(பொருள்.3)

                                                                                            திருநெல்வேலி சைவசித்தாந்த

                                                                                  நூற்பதிப்புக்கழகம்  சென்னை – 18.

                                                                                                    முதற்பதிப்பு- 2001.

 

 4. சு ஒளவை  துரைசாமிபிள்ளை (உ.ஆ.)  -           புறநானூறு,

                                                                               திருநெல்வேலி தென்னிந்திய சைவ

                                                                                    சித்தாந்த நூற்பதிப்புக்கழகம் லிட்,

                                                                                         522, டி.டி.கே. சாலை,

                                                                                  ஆள்வார் பேட்டை, சென்னை – 18,

                                                                                                  முதற்பதிப்பு, 1947

  

5. செயபால் .இரா (உ.ஆ.)            -             அகநானூறு (இரண்டு பகுதிகள்),

                                                                                            நியூ செஞ்சுரி புக் கவுஸ்,

                                                                                         41 – பி, சிட்கோ இண்டஸ்டிரியல்,

                                                                                             அம்பத்தூர், சென்னை – 98.    

  

6. அழகுகிஷ்ணன் .பொ         -           

சிலப்பதிகாரம் காட்டும் பண்பாட்டுச் சமதாய வரலாறு, ஐந்திணைப் பதிப்பகம், 279, பாரதி சாலை, சென்னை – 600 005, முதற்பதிப்பு, 1988