ஜூலை 2024 இதழுக்கு ஆய்வுக்கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன

ஏலாதி கூறும் வாழ்வியல் அறங்கள்

முனைவர் க.அலமேலுமங்கை, உதவிப் பேராசிரியை,தமிழ்த்துறை, அருள்மிகு கலசலிங்கம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கிருஷ்ணன்கோவில் 27 Jul 2021 Read Full PDF

முனைவர் க.அலமேலுமங்கை,

உதவிப் பேராசிரியை,தமிழ்த்துறை, அருள்மிகு கலசலிங்கம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கிருஷ்ணன்கோவில்.

ஆய்வுச் சுருக்கம்

இந்த ஆய்வுக்கட்டுரையானது ஏலாதி என்னும் அறநூலில் இடம் பெற்றுள்ள வாழ்வியல் அறங்கள் பற்றி கூறுகிறது.  மனிதன் வையத்துள் மாண்புற வாழ்வதற்கு சில நல்ல அறங்கள் செய்தல் வேண்டும் என்ற கருத்தை ஏலாதி சுட்டிக்காட்டுகின்றது.  அவ்வாறு  நல்ல அறங்களை செய்வதன் மூலம் அவன்  வாழ்வில் அடையும் பயன்களையும் அழகுற விளக்குகின்றது. ஏலாதியில் பல அறங்கள் கூறப்பட்டிருப்பினும் அனைவராலும் எளிதாக செய்ய முடியும், செய்ய வேண்டிய வாழ்வியல் அறங்களை பற்றி வெளிப்படுத்துவதாக இக்கட்டுரை அமைகின்றது.

இந்த ஆய்வுக்கட்டுரையானது ஏலாதி என்னும் அறநூலில் இடம் பெற்றுள்ள வாழ்வியல் அறங்கள் பற்றி கூறுகிறது.  மனிதன் வையத்துள் மாண்புற வாழ்வதற்கு சில நல்ல அறங்கள் செய்தல் வேண்டும் என்ற கருத்தை ஏலாதி சுட்டிக்காட்டுகின்றது.  அவ்வாறு  நல்ல அறங்களை செய்வதன் மூலம் அவன்  வாழ்வில் அடையும் பயன்களையும் அழகுற விளக்குகின்றது. ஏலாதியில் பல அறங்கள் கூறப்பட்டிருப்பினும் அனைவராலும் எளிதாக செய்ய முடியும், செய்ய வேண்டிய வாழ்வியல் அறங்களை பற்றி வெளிப்படுத்துவதாக இக்கட்டுரை அமைகின்றது.

திறவுச் சொற்கள்: ஏலாதி, நன்னெறிகள்,அறங்கள்,பதினெண்கிழ்க்கணக்கு நூல்கள்

முன்னுரை:

     தமிழர்கள் நல்லதொரு வாழ்வினை வாழாமல் ஒழுக்கக் கேடுகளான செயலில் வழிதவறி செல்லும்போது அவர்களை நல்வழியில் நடத்தி சென்றவை நீதி இலக்கியங்கள் எனலாம். நீதிஇலக்கியங்கள் மனிதர்களை இப்பூமியில் வாழ்வாங்கு வாழ்வதற்கு உற்றதுணையாக நின்றன. மனிதர்கள் மாண்புற விளங்க அறம் மனிதர்களுக்கு அவசியமாக கருதப்பட்டன. ஆகவே பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் அறத்தை வலியுறுத்தும் நூல்கள் சில தோன்றின.  அந்நூல்களில் ஏலாதி குறிப்பிடத் தகுந்த சிறப்புடைய நூல் எனலாம். இந்நூல் மனிதன் வையத்துள் சிறப்புற வாழ்விற்குரிய அறங்கள் பற்றி செய்திகளை அழகுற எடுத்து இயம்புகின்றன. அதனைப் பற்றி இக்கட்டுரையின் வாயிலாக அறிவோம்.

பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள்

“அம்மை தானே அடி நிமிர்ந்தின்றே”1 என்பது தொல்காப்பிய விதி. அந்நூல்களே பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் எனப்பட்டன. “கேடில் பதினெட்டுக்கீழ்க்கணக்கு”2 எனத்தமிழ்விடுதூது இதனைப் பாராட்டுகிறது. பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் அறம் சார்ந்த நூல்களான நீதிநூல்கள் மொத்தம் 11.

அறநூல்கள்

1. நாலடியார் 7. முதுமொழிக்காஞ்சி

2. நான்மணிக்கடிகை 8. திருக்குறள்

3. இன்னா நாற்பது     9. ஆசாரக்கோவை

4. இனியவை நாற்பது           10. பழமொழிநானூறு

     5. திரிகடுகம்               11. சிறுபஞ்சமூலம்

6. ஏலாதி

அறம்

அறம் என்பது நாம் பிறருக்குச் செய்யப்படும் நன்மை, உதவுதல், வழி போன்ற பொருளைத்தருகிறது. மனிதனுக்கு நல்வழி காட்டும் செயல்கள் அனைத்தும் அறம் என்ற சொல்லை வைத்து அழைக்கின்றனர். அறம், பொருள், இன்பம், வீடுபேறு என்னும் நான்கு வகை உறுதிப்பொருட்களில் முதலில் இடம் பெறுவது அறமே ஆகும்.

அறம் அவ்வளவு வலிமையானது என்பதால் தான் தமிழ் மூதாட்டி ஒளவையும் “அறம் செய விரும்பு”3 என்கிறாள். எளிமையாக கூற வேண்டுமானால் பிறருக்குத் தீங்கு செய்யாத அனைத்து நற்செயல்களும் அறம் என்றே சொல்லலாம்.

“அறம் செய்து அருளுடையீர் ஆகுமின்” - நாலடியார்., 7 (3)

“அறம் செய்து அருள் உடையர் ஆதல்” - பழமொழி., 357 (2)

“ . . . . . . . . .மெல்லென

அருளில் பிறக்கும் அறநெறி” - நான்மணிக்கடிகை., 5 (3)

மேற்கண்ட நூல்கள் அறம் செய்து அருளை பெறுங்கள் என்கிறது.

வாழ்வியல் அறங்கள்

மனிதன் இப்பூமியில் பிறந்தது முதல் இறக்கும் வரை அவன் வாழ்வில் பல நிகழ்வுகள் நடைபெறுகின்றன. அவன் இப்பூமியில் வாழும் சில ஆண்டுகளில் அவன் வாழ்கின்ற வாழ்வில் உன்னால் இயன்ற அளவு அறங்களை செய்யுங்கள் என நம் முன்னோர்கள் நீதி இலக்கியங்கள் மூலம் நல்ல செய்திகளை உணர்த்தினர். அதில் ஏலாதியும் ஒன்று. அந்நூலில் கூறியுள்ள வாழ்வியல் அறங்கள் பற்றிய செய்திகளைக் காண்போம்.

ஈகையில் இரு

மனிதனின் உயிர் வாழ்வதே பிறர்க்கு கொடுக்க தான். பிறருக்கு ஏற்படும் துன்பத்தினை உணர்ந்து பிறர் கேட்காமலே அவரின் உள்ளக்குறிப்பினை உணர்ந்து கையால் ஈயை வேண்டும் என்பது, நாம் உணர வேண்டிய கடைப்பிடிக்க வேண்டிய ஒன்றாகும். மனிதன் வாழும் போது மனிதனாக மதிக்கப்படுவதும், இறந்த பிறகு தெய்வமாக தொழப்படுவதும் இந்த ஈகையால் தான். ஆகவே மனிதனின் வாழ்வியல் அறங்களில் முதலிடம் பிடிப்பது ஈகையே.

“தவம் எளிது தானம் அரிது” - ஏலாதி., 3(1)

“படர்தீர்த்தல் யார்க்கும் பழிப்பின்” - ஏலாதி., 4(2)

“நிறை உடைமை நீர் உடைமை கொடையே” – ஏலாதி., 6(1)

கொடைக்குணம் ஒருவரிடம் காணப்பெற்றால் அவர் உயிர்களுக்கு எல்லாம் தாயெனப் போற்றத்தகும் தகுதி உடையவராவர்.

“. . . . . .. . . . . அற்றார்கட்கு

உண்டி உறையுள் உடுக்கை இவைஈந்தார்

பண்டிதராய் வாழ்வார் பயின்று” – ஏலாதி., 9 (2-4)

பிறருக்குக் கொடுத்து உதவுபவர்கள் கற்றறிந்த சான்றோர்கள் மதிக்கப்படும் மேதைகளாய் வாழ்வில் சிறந்தோங்கி இருப்பார்கள்.

“. . . . . . . . . .  சிறிதெனினும்

இல்லார்க்கு இடர்தீர்த்தல் நன்று” - ஏலாதி., 15 (3-4)

அளவில் சிறியது என்றாலும் ஏதும் இல்லாதவர்களுக்கு இயன்றதைத்தந்து அவர் துன்பம் துடைத்தல் நன்று. 

“வறியவர்க்கொன்று ஈவதே ஈகை” - குறள்., 221

“தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக்

கொள்வர் பயன்தெரி வார்” - குறள்., 104

எனும் குறளில் நாம் சிறிய உதவி செய்தாலும் அதனை அடைபவர் பனையளவு கொள்வர் என்கிறது.

“. . . . . . . . . .  ஈத்துண்பான்

தேவாதி தேவனாம் தேறு” – ஏலாதி., 32 (3-4)

பிறருக்குக் கொடுத்து உதவித் தானும் செல்வப்பயனை அனுபவித்து வாழ்பவன் வானுலகத் தேவர்களுக்கு மேலான தேவனாய்த் திகழ்வான் என்கிறது. பிறருக்குக் கொடு என்று மட்டும் கூறாமல் நீயும் அதனை அனுபவி என்றும் பிறருக்கும் உனக்கும் செல்வம் பயன்படும்படி செய் என்ற கருத்தை வலியுறுத்துகிறது

 

“. . . . . . . . . . . நசை அவர்க்குக்

கூடுவது ஈவானைக் கொவ்வைபோல் செவ்வாயாய்

நாடுவர் விண்ணோர் நயந்து” – ஏலாதி., 34 (2-4)

தன்னை விரும்பித்தேடி வருபவர்களுக்கு இல்லை என்று சொல்லாமல் இயன்றதைத் தந்து உதவுபவனை வானவர்கள் விரும்பி ஏற்று மகிழ்வர்.

“ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது

ஊதியம் இல்லை உயிர்க்கு” – குறள்., 231

மற்றவருக்குக் கொடுப்பதே உயிருக்கு சிறப்பாகும் என்கிறது குறள்.

“நற்சித்தற் சென்றார் நசைகொல்லா மாண்பினிதே” - இனியவை நாற்பது., 26 (1)

“இட்டார் பெரியோர் இடாதோர் இழிகுலத்தோர்” - நல்வழி., 2 (3) இரப்போர்க்கு ஈதலின் எய்தும் சிறப்பில்லை – முதுமொழி., இ.ப 60

இவ்வாறு ஏலாதி உள்ளிட்ட பிற நூல்கள் அனைத்தும் உலகின் முதன்மையாக வாழ்வியல் அறமாக ஈகையே போற்றுகிறது.

விருந்தோம்பல் செய்

விருந்து என்றாலே புதுமை என்று பொருள்; புதிதாகத் தம் இல்லத்திற்கு வருகை தரும் விருந்தினர்களை இன்முகத்துடன் வரவேற்று உபசரித்தலே விருந்தோம்பல் ஆகும்.

மனிதன் வாழ்வில் மிகு முக்கிய இடத்தை விரும்பும் அறங்களில் சிறப்பானது. விருந்தோம்பல் மனிதன் உயிர்வாழ உணவே பிரதானம் அத்தகைய 

           உணவை விருந்தோம்பல் என்று பெயரிட்டு பல உயிர்களை இதன் மூலம் காத்து வந்தனர் நம் ஆன்றோர்.

“உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே”4

உணவினைக் கொடுத்தோர் உயிர் கொடுத்தோருக்கு சமமானவர்கள். விருந்தோம்பல் பற்றி ஏலாதி அதிகமான பாடல்களில் விருந்தோம்பல் செய்தால் அதனால் கிடைக்கும் பயன்களைப் பற்றி பேசுகிறது.

“. . . . .  ஈத்து உண்பானேல் ஏதம்இல் மண்ஆண்டு

கொள்வான் குடிவாழ்வான் கூர்ந்து” - ஏலாதி., 46 (3-4)

 

மற்றவர்க்கு உண்ணக்கொடுத்து தானும் உண்பவன் அரசுரிமை பெற்று ஆட்சி செய்வான்.

 

“. . . . . . . செயிர்இல் ஊண் ஈவான்அரசாண்டு” - ஏலாதி., 45 (3-4)

குற்றம் இல்லாத உணவை இல்லை என்பவர்க்கும், இல்லம் தேடி விருந்துண்ண வருபவர்களுக்கும் கொடுத்து உதவுபவன் அரசாள்வான்.

“. . . . . . தெளிந்தடிசில் ஈத்துண்பான்

மாறான் மண்ஆளுமாம் மற்று”- ஏலாதி., 47 (3-4)

 

விருந்தோம்பி வாழ்பவன் மண்ணாளும் அரசன் ஆவான்.

“. . . . . . விருந்தொளியான் தன்இல்உள்

சோற்றரவம் சொல்லி உண்பான்  . . . . . 

. . . . . . . . . . . அரசனாய்” - ஏலாதி., 48 (1-4)

விருந்துண்ண வருபவர்களை மகிழ்வித்து விருந்தளித்துத்தானும் உண்பவன் மண்ணாளும் ஆட்சி பெறலாம்.

“. . . . . . .கொள்ளென

அன்புற்று அசனம் கொடுத்தான் துணையினோடு

இன்புற்று வாழ்வான் இயைந்து” - ஏலாதி., 50 (2-4)

“. . . . . . ஊண் ஈய்ந்தவர் பலயானை மன்னராய்

எண்ணி ஊண்ஆர்வார் இயைந்து” – ஏலாதி., 52 (3-4)

“கடம்பட்டார் காப்பு இல்லார் கைத்துஇல்லார் தம்கால்

முடம்பட்டார் மூத்தார் மூப்புஇல்லார்க்கு - உடம்பட்டு

உடையராய் இல்உள் ஊண்ஈத்து உண்பார் மண்மேல்

படையராய் வாழ்வார் பயின்று” - ஏலாதி., 53

மேற்கண்டவர்களுக்கு உள்ளன்போடு மனம் விரும்பி வீட்டில் அழைத்து அவர்களுக்கு உணவு படைத்துப்பின் தானும் உண்பவர்கள் இவ்வுலகில் மன்னர்களாக மகிழ்ச்சியோடு வாழ்வர்.

“தளையாளர் தாப்பாளர் தாழ்ந்தவர் பெண்டீர்

உளையாளர் ஊண் ஒன்றும்இல்லார் கிளைஞராய்

மாஅலந்த நோக்கினாய் ஊண் ஈய்ந்தார் மாக்கடல்சூழ்

நாவலந்தீவு ஆள்வரே நன்கு” - ஏலாதி., 56

“. . . . . . . . . . .

  ஆற்றி ஊண்ஈத்து அவைதீர்த்தார் அரசராய்ப்

போற்றி ஊண்உண்பார் புரந்து” – ஏலாதி., 57 (3-4)

“ . . . . . . . . . உடல்சார்ந்த

வானகத்தார்க்கு ஊணே மறுதலையார்க்கு ஊண் அமைத்தான்

தான் அகத்தே வாழ்வான்தக” - ஏலாதி., 71 (2-4)  

“. . . . . . . . . . அவர்க்கு ஈய்ந்தார்

வைத்து வழங்கி வாழ்வார் – ஏலாதி., 78 (3-4)

“ஊண்கொடுத்து ஊற்றுஆய் உதவினார் மன்னராய்க்

காண் கொடுத்து வாழ்வார் கலந்து - ஏலாதி., 80 (3-4)

இவ்வாறு ஏலாதியானது யாருக்கெல்லாம் உணவு கொடுத்து உபசரிக்க வேண்டும்; அவ்வாறு செய்தால் எத்தகைய சிறப்புமிக்க வாழ்வை வாழமுடியும் என்பதை பல பாடல்களில் அழுத்தமாக கூறியுள்ளது.

நட்பு விரும்பு

உலகில் வாழும் மனிதன் உறவு இன்றி வாழலாம்; ஆனால் நட்பின்றி வாழ்தல் இயலாது; ஆனால் நாம் கொண்டுள்ள நட்பானது எவ்வாறு இருக்க வேண்டும் என ஏலாதி வரையறுக்கிறது.

“சாதல் பொருள்கொடுத்தல் இன்சொல் புணர்வுவத்தல்

நோதல் பிரிவில் கவறலே - ஓதலின்

அன்புடையார்க்கு உள்ளன ஆறுகுணமாக

மென்புடையார் வைத்தார் விரித்து” - ஏலாதி., 68

நண்பன் இறந்தான் தானும் இறத்தல்; நண்பன் துன்பம் தீரப்பொருள் கொடுத்தல்; நண்பன் கவலையைப்போக்கி இனிமையாக பேசி ஆறுதல் அளித்தல்; நண்பனை எச்சூழலிலும் பிரியாதிருத்தல்; நண்பன் துக்கத்தில் பங்கு கொள்ளுதல்; நண்பன் பிரிவை எண்ணி மனம் கலங்குதல், இவை ஆறும் நல்ல நண்பர்களுக்குரிய குணநலன்களாகும். வாழ்வானது நல்ல பாதையில் செல்ல நல்ல நண்பர்கள் அவசியம். ஆதலால் மனிதனின் வாழ்வியல் அறங்களுக்கு நல்ல நட்பு தேவை என்பதை ஏலாதி கூறுகிறது.

கல்வி கல்

ஈகை விருந்தோம்பல், நல்ல நட்பு பெறுதல் என அனைத்தும் மிக எளிதாக நடைபெறும் என்றால் அதற்கு கல்வியே காரணமாகும். கல்வி என்பது எல்லோர்க்கும் எளிதில் கிட்டுவதல்ல.

“சாவது எளிது அரிது சான்றாண்மை நல்லது” – ஏலாதி., 39 (1)

உயிரை விட்டுவிடுவது எளிதான செயல்; ஒரு நொடியில் முடிந்துவிடும். ஆனால் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்குவது எல்லார்க்கும் எளிய செயலன்று.

“இடைவனப்பும் தோள்வனப்பும் ஈடின்வனப்பும்

நடைவனப்பும் நாணின்வனப்பும் - புடைசால்

கழுத்தின் வனப்பும் வனப்பல்ல எண்ணோடு

எழுத்தின் வனப்பே வனப்பு - ஏலாதி., 74

எண்ணும் எழுத்துமாகிய கல்வி வனப்பே உண்மையான அழகாகும்.

“கல்வி அழகே அழகு” - நாலடி., 131 (4)

என்று நாலடியாரும் இதே கருத்தைக் கூறுகிறது. ஆகையால் தான்

“கற்கை நன்றே கற்கை நன்றே

பிச்சை புகினும் கற்கை நன்றே” - வெ.வே., 35

“அறிவுடையார் எல்லாம் உடையார்”- குறள்., 430

“ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம் - உலக நீதி., 1

“இளமையில் கல்” என்றும், கல்வி கற்றறிருந்தால் கல்வி  கற்றோருக்குச் செல்லும் இடமெல்லாம் சிறப்பு என்றும் ஒளவையார் கூறுகிறார். இப்படி பல நீதிநூல்களும் ஏலாதி கூறியதைப் போல கல்வியை சிறப்பிக்கிறது. ஆகையால் மனிதனுக்கு உண்மையான அழகை கொடுக்கும் கல்வியைக் கற்க வலியுறுத்துகிறது.

நிறைவுரை

வாழ்வதற்குரிய அறங்கள் பல இருப்பினும் மிகவும் முக்கியமானதாகவும் ஒவ்வொரு மனிதனும் கடைப்பிடிக்க அறங்களாக ஏலாதி ஈகை, விருந்தோம்பல், கல்வி பற்றி பேசுகிறது. ஏலாதி கூறிய வாழ்வியல் அறங்களைப்  பின்பற்றி நாமும் வையகத்துள் சீர்பெற்று வாழ்வோம்!

அடிக்குறிப்புகள்:

  • தொல்காப்பியம், செய்யுளியல், 227
  • தமிழ்விடுதூது, 56
  • ஒவ்வையார், ஆத்திச்சூடி வரி, 1
  • மணிமேகலை, பாத்திரம் பெற்ற காதை, 96

துணைநூற்பட்டியல்

  • ஏலாதி மூலமும் உ ரையும், ஞா. மாணிக்கவாசகன், 

உமா பதிப்பகம், 18, பவளக்காரத் தெரு, மண்ணடி, சென்னை-600001 

  • நாலடியார் மூலமும் உ ரையும், ஞா. மாணிக்கவாசகன், 

உமா பதிப்பகம், 18, பவளக்காரத் தெரு, மண்ணடி, சென்னை-600001

  • பழமொழி நானூறு மூலமும் உ ரையும், ஞா. மாணிக்கவாசகன், 

உமா பதிப்பகம், 18, பவளக்காரத் தெரு, மண்ணடி, சென்னை-600001

  • நான்மணிக்கடிகை மூலமும் உ ரையும், ஞா. மாணிக்கவாசகன், 

உமா பதிப்பகம், 18, பவளக்காரத் தெரு, மண்ணடி, சென்னை-600001

  • திருக்குறள் மூலமும் உ ரையும், ஞா. மாணிக்கவாசகன், உமா பதிப்பகம், 18, பவளக்காரத் தெரு, மண்ணடி, சென்னை-600001
  • இனியவை நாற்பது மூலமும் உ ரையும், துரை. தண்டபாணி, 

உமா பதிப்பகம், 18, பவளக்காரத் தெரு, மண்ணடி, சென்னை-600001