ஜூலை 2024 இதழுக்கு ஆய்வுக்கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன

அணி இலக்கண நோக்கில் மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்

திருமதி.பா.தீபா, உதவிப்பேராசிரியர், தமிழாய்வுத்துறை, தனலட்சுமி சீனிவாசன் மகளிர் கலை &  அறிவியல் கல்லூரி,(தன்னாட்சி) பெரம்பலூர் 27 Jul 2021 Read Full PDF

திருமதி.பா.தீபா, உதவிப்பேராசிரியர், தமிழாய்வுத்துறை, தனலட்சுமி சீனிவாசன் மகளிர் கலை &  அறிவியல் கல்லூரி,(தன்னாட்சி) பெரம்பலூர்

ஆய்வுச்சுருக்கம்

சிற்றிலக்கிய வகையைச் சார்ந்த மீனாட்சியம்மைப்பிள்ளைத்தமிழில் அணியிலக்கண வகையை ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கம். அணி என்பதற்கு அழகு என்று பொருள், சொல்லழகு,பொருளழகு முதலியவற்றை வரையறுத்துக் கூறும் அணி இலக்கணம், மீனாட்சி அம்மைப்பிள்ளைத்தமிழில்  எவ்வாறு பயின்று வந்துள்ளது,அணி இலக்கணத்தின் சிறப்புகளையும் ,பிள்ளைத்தமிழின் சிறப்புகளையும் ஒருங்கே எடுத்துரைக்கும் விதமாக “அணி இலக்கண நோக்கில் மீனாட்சி அம்மைப்பிள்ளைத்தமிழ்"  என்னும் தலைப்பிலான இக்கட்டுரை அமைந்துள்ளது.

திறவுச்சொற்கள்:

தண்டியலங்காரம் ,தொல்காப்பியம் ,மீனாட்சி அம்மை பிள்ளைத்தமிழ்,  அணி இலக்கணம், 

முன்னுரை:-

அணிகலன்கள்  மாந்தர் தம் அழகுக்கு அழகு சேர்ப்பது போல அணிகள்  செய்யுளை அழகு செய்கின்றன.சொல்பற்றி நிகழ்வன, பொருள்பற்றி நிகழ்வன என முறையே சொல்லணி பொருளணி எனும் இருவகையின. இவ்விரு வகை மேலும் பிரிந்து பலவகையாகியுள்ளன.தமிழில் அணி குறித்து முதலில் அறிவித்தவர் தொல்காப்பியர் எனலாம்.தொல்காப்பியர் உவமையை அணியாகக் கூறினார். இவருக்குப் பின் வந்தவர்கள் அணியை அலங்காரம் என்று கூறினர்.சங்க  இலக்கியங்களில் பொருள் தெளிவிற்கும், பிற்காலத்தில் பொருள் அழகிற்கும்  பயன்படுத்தப்பட்டன. மீனாட்சி அம்மை பிள்ளைத்தமிழில் இவ்விருவகைச் சிறப்பும் அழகுற அமைந்துள்ளது.

உவமையணி:-

ஒரு பொருளைக் கூற்றான் உணர்த்துவோர் கேட்பவர்க்கு அதனுடன் ஒப்புமை உடைய பொருளை உவமை கூறி உணர்த்துவதை உலகில் காணலாம்.

“பண்பும் தொழிலும் பயனுமென்றிவற்றின் 

           ஓன்றும் பலவும் பொருளொடு பொருள்புணர்த்

           தொப்புவமை தோன்றச் செப்புவதுமை”     (தண்டியலங்காரம் : 31)

எனத் தண்டி உவமைக்கு இலக்கணம் உரைக்கின்றது.

                                “வினைபயன் மெய் உரு என்ற நான்கே

            வுகைபெற வந்த உவமத்தோற்றம்”

                                                                                               (தொல்- பொருள் உவமையியல்-272)

எனத் தொல்காப்பியமும் எடுத்துரைத்துள்ளது.

உவமையும் உவமை உருபுகளும்:-

தண்டியாசிரியர் பண்பு,தொழில், பயன் எனும் மூன்றனையும்,தொல்காப்பியர் வினை,பயன், மெய்,உரு  என்ற நான்கினையும் உவமையாகக் கூறுவர்.மேலும் “தண்டியலங்காரம் 36 உவமை உருபுகளையும், மாறனலங்காரம் 18 உவமை உருபுகளையும், இலக்கண விளக்கம் 58 உவமை உருபுகளையும் கூறுகின்றன்.” இவற்றுள்,மிகுதியான  உவமைகளும், உருபுகளும் மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழில்  பயின்று வந்துள்ளன.

உவமைகள் பயின்று வரும் பாடலடிகள்:-

மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழில் மீனாட்சியம்மையின் அழகையும் சிறப்பையும்  வர்ணிக்கும் இடத்தில் மிகுதியான உவமைகள் எடுத்தாளப்பட்டுள்ளன.அவை,

1. “அம்கயல்கண் அமுதை”(2;;:7)

2. “சிகரவடவரை குனியநிமிர்தரு

செருவில் ஒரு பொருவில் எனக் கோத்தனர்

……  …..    …..    …….

தெரிவும் அவர் முது சொல் எனச் சூட்டினர்”(3:1-12)

3. “முத்தமிழ்த் தேர் தரு மதுரைத் தலத்து உறை

     முத்தன மேவு பெண் அரசைப்” (4:15-16)

4. “அழகிய சொக்கற்போல்  செயத் தோட்டு 

அமர் செங் கயல் கண்கள் குமாரியைக் காக்கவே”(5:3-4)

  5. “ஆகத்து அமைத்துப்பின் ஒருமுடி தன் முடிவைத்து 

    அணங்கு அரசு விற்று இருக்கும் 

    அபிடேக வல்லியை அளிக்குலம் முழக்கு குழல்

    அங்கயல் கண் அமுதையே” (6:13-16) 

இவ்வாறு ஒன்றிற்கு மேற்பட்ட உவமைகள் வந்து பாடல்களை அணி செய்கின்றன ஒரே பாடலில் பல உவமைகள் வருவதும் உண்டு.

உருவக அணி:-

“உவமையும் பொருளும் வேற்றுமை யொழிவித்

      தோன்றென மாட்டினஃதுருவகமாகும்”(தண்டி- 36)

உவமைப்பொருள் உவமிக்கப்படுபொருள் ஆகிய இரண்டையும் உள்ளுணர்வு தோன்ற  மொழிதல் உருவகம் எனக் கூறுவர்.

மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழில் உருவகங்கள் பல அமைந்து பாடல்கள்  இனிமையூட்டுகின்றன.எடுத்துக்காட்டாக,

  1.“அணங்கே வெங்கோபக்

  கங்குல் மதம் கயம்  மங்குல் அடங்கவி” (20;: 4-5) 

  2.“அம்கண்விசும்பில் நின் குழல்காட்டு

   அறுகால் சுரும்பர் எழுந்து ஆர்ப்பது”(88: 5-6)

  3.“ஊற்றும் செழும் தண்நிலாக்கால் விழுந்தனைய”(93:3)

இவ்வாறு முகமாகிய நிலவு,அடிகளாகிய தாமரை, கைகளாகிய தாமரை, கூந்தலாகிய காடு,புருவங்களாகிய வில்,இருளாகிய ஆண்யானை, முகமாகிய மதி போன்ற பல உருவங்கள் அமைந்து காணப்படுகின்றன.

தற்குறிப்பேற்ற அணி:-

“பெயர் பொருளல் பொருளென விரு பொருளினும்

இயல்பின் வினைதிறனன்றி யயலொன்று

      தான் குறித்தேற்றுதல் தற்குறிப்பேற்றம்”  (தண்டி- 56)

பெயர் பொருள்,பெயராத பொருள் ஆகிய இருபொருள் கண்ணும் இயல்பாக நிகழும் தன்மையொழியக் கவிஞர் தான் கருதிய வேறொன்றின் மேல் ஏற்றிக் கூறுவது தற்குறிப்பேற்றவணியாகும். சான்றாக,

    1. “அழகிய சொக்கற்கு மால் தோட்டு இகல்

      ஆமர் செய் கயல்கண் குமரியைக் காக்கவே” (5:15-16)

    2. “வெள்ளித்தகட்டு நெட்டுட்டு அவிழ்த்து இன்னிசை

விரும்பும் சுரும்பர் பாட”             (9:11-12)

    3. “பிடபட்ட மடநடைக்கு ஏக்கற்ற கூந்தல் 

       பிடிக்குழாம் சுற்ற ஒற்றைப்”          (10:9-10)

    4.“குதிகொள் நடம் இடும் ஆடலுக்கு ஏற்பஓர்

 குழலிசை பழகளி பாடிடக் கேட்டு உடை

      மடல் அவிழ் துளப நறா எடுத்து ஊற்றிட” (11:11-13)

இவண் இயல்பாக நிகழும் நிகழ்ச்சியின் தன்மையில் தான் கருதிய வேறொன்றினை ஏற்றிக் கூறும் அடிகள் தம் புலமைத் திறன் படித்து மகிழ்தற்குரியது.

பின்வருநிலையணி:-

“முன்வரும் சொல்லும் பொருளும் பலவயிற்

      பின் வருமென்னிற் பின்வருநிலையே” (தண்டி-42)

செய்யுளில் முன்னர் வந்த சொல்லாவது பொருளாவது பின்வருநிலையாகும்,சான்றாக

    1. “கண்டு படுகுதலைப் பசுங்கிளி இவட்டு ஒரு 

      காலபேதம் என்ன நின்னைக்

      கலைமறைகள் முறை இடுவதுகண்டோ அலாது ஒண்

      கலாநிதி எனத் தெரிந்தோ” (63:1-4)

இங்கு கலை என்ற சொல் பலமுறை வந்து மெருகு சேர்க்கின்றது.

    2. “உருகி உருகி நெக்கு நெக்கு உள்

       உடைந்து கசிந்திட்டு அசும்பு ஊரும்”(44:1-2)

    3. “இகல் விழி மகரமும் அம்மகரம் பொரும் 

       இரு மகரமும் ஆட”  (18:5-6)

இவண் மகரம் என்ற சொல் பலமுறை வந்து பொருட்செறிவைத் தருகின்றது.

முரண் அணி:-

சொல்லும் பொருளும் தம்முள் முரண்படி அமைவதனை முரண் அணி என்பர். சான்றாக,

                “சென்றிடுவாளிகள் கூளிகள் காளிகள் ஞாளியில் ஆளி எனச்”

  ஆளிகள் 

  கூளிகள்

  காளிகள்         பொருள் முரண் (40:1-2)

  ஞாளியில்

 

  காலபேதம்

  கலைமறைகள்      சொல் முரண் (63;:1-4) 

  கலாநிதி

தன்மையணி:-

“எவ்வகைப் பொருளும் மெய்வகை விளக்கும்

      சொன்முறை தொடுப்பது தம்மையாகும்”     (தண்டி- 29)

அதாவது எல்லா வகைப் பொருளும் மெய்மைக் கூறுபாட்டால் விளக்குஞ் சொன்முறையால் பாடப்படுவது என்பர்.சான்றாக,

1.“கோடும் குவடும் பொருதரங்கக்

      குமரித் துறையில் படுமுத்தும்

      கொற்கைத் துறையில் துறைவணர்

      குளிக்கும் சலாக் குவான் முத்தும்

      ஆடும் பெருந்தன் துவரப் பொருறை

      ஆற்றில் பருதென் நிலாமுத்தும்”        (61:1-6)

இப்பாடல் முத்துக்களின் சிறப்பை அத்தன்மையுடன் எடுத்தியம்புகின்றது.

     “விண் அறா மதி முயல்கலை கிழிந்து இழி அமுத 

     ……  …..  ….. ….  …..  …..  …..   ……

     தௌ;நறா  அருவிபாய் மரகத வல்லி”     (17:9-13)

இங்ஙனம் மதுரை வளம் ,நகர்ச்சிறப்பு,ஊர் சிறப்பு எனப் பல நிலையில் அத்தன்மைக்கே சிறப்பாகப் பாடப்பட்டுள்ளது.

ஏதுவணி:-

இதனால் இது நிகழ்ந்ததென்று  காரணம்  விதந்து சொல்வது ஏதுவென்னும் அணியாம்.

  “மழைக் கொந்தளக் கோதை வம்மின் என்ற அளவில் நீ

       வந்திலை எனக் கடுகலும்

  வாள் முகச் செவ்விக்கு உடைந்து ஒதுங்கினவன் எதிர்

       வர ஒல்கியோ பணிகள் கோள்

இழைக்கும் கொல்பின் தொடர்ந்து என அஞ்சியோ தாழ்ந்து

        இருந்தனம் போலும்”           (71:1-5)

இங்கு மீனாட்சியம்மை வருக என்று அழைத்தபோது நீ வராதது ஒளிபொருந்திய முக அழகிற்குத் தளர்ந்து ஒதுங்கியவன் எதிரில் வரச் சோர்ந்தோ,பாம்புகள் பின் தொடர்ந்து துன்பம் செய்யும் என்று அஞ்சியோ எனக் கூறுமிடத்து வராததற்குக் காரணம் காட்டப்படுகிறது.

சுவையணி:-    

“உண்ணிகழ் தன்மை புறத்துத் தோன்ற 

      எண்வகை மெய்ப்பாட்டினியல்லது சுவையே” (தண்டி-69)

உள்ளத்தின் உள்ளே நிகழ்பவற்றை எண் வகை மெய்ப்பாட்டால் விளக்குவது சுவையணி. சான்றாக,

     “தாய் வருக என்பவர் பேதமை கண்டு 

          ததும்பு புன்நகை ஆடப்

     பசைந்திடு ஞாலம் மலர்ந்தசாம வெளிறி ஓர்

          பச்சுடல் சொல்லவும் ஓர்”    (19:3-6)

அன்னிய வருக என்பவரின் அறியாமையைக் கண்டு வழியும் புன்னகை ஆடவும் , அன்பான உலகம் தோன்றியமையை வெளுத்த ஒரு பச்சை உடல் புலப்படுத்தவும் என்று மெய்ப்பாடு தோன்றுமாறு ஆசிரியர் குமரகுருபரர் பாடல்களை அமைத்துள்ளார்.

அதிசய அணி:-

“மனப்படுமொரு பொருள் வனப்பு வந்துரைப்புழி

உலகுவரம் பிறவா நிலமைத்தாகி, 

ஆன்றோர் வியப்பத் தோன்றுலததிசயம்”   (தண்டி-54)

அதிசயம் தோன்ற எடுத்துரைப்பது அதிசய அணி என்பர். சான்றாக,

          “புத்தமுதோ அருள் தழையத் தழைத்தது ஓர்

          பொற்கொடியோ என மதுரித்து உவட்டு எழு

          முத்தமிழ் தேர்தரு மதுரை தலத்து உறை”  (4:5-8)

இங்ஙனம் ஆச்சரியத்துடன் அனைவரும் வியக்குமாறு மதுரைத் தலத்து வீற்றிருக்கும் மீனாட்சியம்மையைப் பாடுகிறார் குமரகுருபரர் அடிகள்.

உயர்வு நவிற்சி அணி:-

ஓர் பொருளிடத்துள்ள மிகுதியான தன்மையை உயர்த்தி கூறுவது உயர்வு நவிற்சியணி.சான்றாக,

       “மேகத்தின் ஆகத்து விடுசுடர்ப் படலைமணி

       மென்பால் உறுத்த நொந்து

      பஞ்சுஉளட்டு சிறு அடி பதைத்தும் அதன் வெங்கதிர்

      படும் இள வெயிற்கு உடைந்தும்”   (8:3-6)

பரல்கள் அழுந்துதலால் வருந்திப் பதைத்தன எனும் கருத்து உயர்வாகக் கூறப்பட்டுள்ளது.

இலக்கணை:-

ஒரு பொருளுக்கு இருபெயர் ஒட்டி நின்று பெயராக அமைவது இலக்கணை. இது ஆகுபெயர் வடிவில் அமைவது எனக் கூறுவதுண்டு.இருபெயர்கள் சேர்ந்து ஒன்றாகவும் நிற்கும்.சான்றாக,

     “பஞ்சு உளட்டு சிறு அடி”(8:3) 

     “தௌ; அமுது கூட்டு உணும்”(9:7)

     “கருணை உவட்டெழு வைத்த அருள் பார்வைக்கு”(41:1-2)

தொகுப்புரை:-

குமரகுருபரர் அடிகள் மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழில் பல அணிவகைகளுடன் பாக்களை அமைத்துள்ள திறன் படித்து பாராட்டற்குரியது.உருவக அணி,தற்குறிப்பேற்ற அணி,பின்வருநிலை அணி,முரண் அணி,தன்மையணி, ஏதுவணி,அவை அணி, அதிசய அணி, உயர்வு நவிற்சி அணி,இலக்கணை முதலிய பாடல் மெருகூட்டுவதுடன்,இனிமையும் சேர்க்கின்றன. கவின்மிகு பாடல்கள் அணிவகைகளுடன் சிறந்து அமையும் போது அவரது கவித்துவச்சிறப்பும், தமிழ் ஞானமும், ஆழ்ந்த புலமையும் இன்னும் உயர்வடைகின்றது.