ஜூலை 2024 இதழுக்கு ஆய்வுக்கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன

விவிலியமும் சித்தர் இலக்கியமும் கூறும் மனித படைப்பு | Portrayal of Creation of Man in Bible and Siddhar Literaturek

ச. சு. அருள்பிரகாஷ், முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் 27 Jul 2021 Read Full PDF

கட்டுரையாளர்

ச. சு. அருள்பிரகாஷ், முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர். 

நெறியாளர் 

முனைவர். பொ. சுரேஷ், உதவிப் பேராசிரியர், தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர். 

Abstract

        Bible says that God created Humanbeaings from the soil of the ground and gave His life to him. Similarly sidhars like pambatty, kudambai and many others also says the same way.  Human birth is a noble one asserts both the bible and sidhars my essay emphasis this topic. 

Key words ; Bible, sidhars, creation, man, God.

முன்னுரை:

      இறை நம்பிக்கையானது அனைத்து சமயங்களுக்கும் அடித்தளமாக உள்ளது. இறைவன் அனைத்தையும் படைத்துப் பாதுகாப்பவராக பல்வேறு சமயங்கள் கூறுகின்றன. இக்கருத்தை அறிவியல் நோக்கில் குரங்கிலிருந்து மனிதன் தோன்றினான் என்ற பரிணாமக் கொள்கையை முன்னிறுத்துகின்றன. இப்படியிருக்க விவிலியமானது மனிதனை படைப்பின் மணிமகுடமாக இறைவன் படைத்துள்ளார் என்று ஆணித்தரமாகக் கற்பிக்கின்றது. அவ்வண்ணமாக தமிழ் இலக்கியங்களில் தனிச் சிறப்பு பெற்று விளங்கும் சித்தர் பாடல்களில் இக்கருத்து எதிரொலிப்பதைக் காணலாம். இங்கே மனிதப் படைப்பை பற்றிய சிந்தனையை விவிலியம் மற்றும் சித்தர் பாடல்களின் வழி ஒப்பு நோக்கி காண்பதே இக்கட்டுரையின் நோக்கம்.

விவிலியப் பார்வையில் மனிதப் படைப்பு

    மனிதன் இறைவனால் படைக்கப்பட்ட ஓர் உயிரி. ‘ஆதாம்‘ என்றாலே ‘மண்’ என்று தான் பொருள்படுகின்றது. ‘மண்’ என்பதற்கு தமிழில் ‘நிலைத்த’ என்று பொருள்படும். சமற்கிருதத்தில் இதே பொருளில் ‘மனுஷ்’ என்று மனித இனத்தைச் சுட்டுகிறது. ‘எபிரேய மொழியில் ‘அதாமா’ , ‘ஆதாம்’ , ‘ஈஷ்’ ,‘எனோஸ்’  ‘கெவர்’ என்றும் கிரேக்க மொழியில் ‘அந்ரோப்போஸ்’,‘அனீர்’ ஆகிய சொற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.’ (வி.வி.இ.செ.க.கோ, ப.265) ‘எல்லாப் பொருள்களையும் கையாளும்படிப் பகுத்தறிவு ஆத்தும தேகியாகிய மநுமக்களை இறைவன் படைத்தார்.’ (எ.ஆ. கிருட்டிணபிள்ளை, இரட்சணிய சமய நிருணயம், ப. 27) மனிதர் பூமியை ஆளப்பிறந்தவர்கள் என்பது பின் நாட்களில் இது விளக்கம் பெற்றது என்பர். மனிதன் இறைவனையே சார்ந்து வாழ வேண்டியவன். தரையிலிருந்து எடுத்த மண்ணினாலே இறைவன் மனிதரைப் படைத்து உயிர் மூச்சை அவன் நாசியில் ஊதினார், மனிதன் உயிருள்ளவனானான் (தொநூ 2:7). மண்ணில் 96 மூலப்பொருட்கள் அடங்கியுள்ளனவாக ஆராயப்பட்டுள்ளது. அதுபோலவே மனிதனுடைய உடலிலும் 96 மூலப்பொருட்கள் அடங்கியுள்ளன. அவைகள் மண்ணிலுள்ள மூலப்பொருட்களுக்கு ஒப்பான அதே மூலப்பொருள்கள்தான். இது படைப்பின் அதிசயமான மெய்ப்பித்துக் காட்டலாகும்.

   ‘இறைவன் மனிதனை மட்டுமல்ல மிருகங்கள் பறவைகள் ஆகியவற்றை மண்ணிலிருந்து உருவாக்கினார், இதோ உம்மைப் போல நானும் இறைவனால் உண்டானவன். நானும் மண்ணினால் உருவாக்கப்பட்டவன், என் சுவாசம் என்னிலும் தேவன் தந்த ஆவி என் நாசியிலும் இருக்கு மட்டும், என்றும் மனிதனுடைய இறுதி நிலையைப் பற்றி விவிலியம், நீ மண்ணாய் இருக்கிறாய் மண்ணுக்கே திரும்புவாய், மண்ணினின்று வந்த உடல் மண்ணுக்கே திரும்பு முன்னும், கடவுள் தந்த உயிர் அவரிடமே திரும்பு முன்னும்..., மானிடர்களின் ஆவி பிரியும் போது தாங்கள் தோன்றிய மண்ணுக்கே அவர்கள் திரும்புவார்கள்  என்ற விவிலியத் தொடர்கள் மனிதனைக் குறித்து வரையறுக்கிறது.’  (திருவிவிலியம், ப.ஏ, பக். 5,7,617,622,789,744)

       மனிதன் பார்த்தல், கேட்டல், சுவைத்தல், உணர்தல், நுகர்தல் என்ற ஐம்புலன்களையும் கொண்டு படைக்கப்பட்டான். விவிலியம் மனித இன இயல் பற்றிய கருத்துக்களை ஆன்மா, இருதயம், ஊன், உடல், ஆவி என்ற பொருளின் கீழ்க் விளக்குகிறது. எனினும் மனிதனை உடல், ஆன்மா என்ற இரு பகுதிகள் இணைந்த ஒன்றாகவே கருதுகிறது. மேலும் அவன் அழிந்து போகின்ற படைப்பு எனச் சுட்டுகிறது. ஆவி இறைவனை நோக்கிய அவனது சிறந்த தன்மையைக் குறிக்கிறது. உடல் அவனது வெளி அடையாளமாக விளங்குகிறது. கிரேக்க மெய்யியல் மனிதனை ஆவி பருப்பொருள் தன்மையுடைய இரு உலகை இணைக்கும் சிறு அண்டமாகக் கருதுகிறது. மறுபுறம் விவிலிய இறையியல் மனிதனை இறைவனோடு தொடர்புபடுத்தி இறைவனின் சாயலாக காண்கிறது. 

    ‘இறைவன் மண்ணையும் விண்ணையும் படைத்தார். மனிதனின் வாழ்க்கைக்குத் தேவையானதையும் படைத்தார். மண்ணில் ஒரு பிடி எடுத்து அதற்கு உயிர்ப்பூட்டி மனிதனைப் படைத்தார். அவனுக்குத் துணையாக ஒரு பெண்ணையும் படைத்தார். அனைத்து உயிரினங்களையும் இறைவனே படைத்தார். எனினும் அவருடைய மாபெரும் பிரபஞ்சத் திட்டத்தில் மனிதனே மையப்புள்ளி. மனித குலத்தின் மூலமே தன் திட்டங்களை நிறைவேற்றிக் கொள்ள விரும்பி உலகத்தையும் மனித வாழ்க்கையையும் வடிவமைத்தார். இறைவன் தன் பிம்பமாக மனிதனைப் படைத்தார். எனினும் மனித இயல்பிலே பாவத்தின் சாயல் ஆழப் பதிந்துள்ளது.’ (க. நாராயணன், சித்தர் சிவவாக்கியர், ப.172). இவ்வாறு இறைவன் தம் சிந்தனை, உணர்வு, சித்தம் என்ற தம் பிம்பத்தை மனிதனுக்கு கொடுத்து அன்போடும் அறத்தோடும் வாழப் பணித்தார் என விவிலியம் கற்பிக்கிறது.

சித்தர் பாடல்களில் மனிதப் படைப்பு

   மானிடப்பிறவி கிடைத்தற்கரியது. ஆகவே அரிதாகப்பெற்ற மனுடத்தை வீணாக்காமல் முக்தியைத்தேடு என்று சித்தர்கள் கூறுவர். ‘தான் படைத்த படைப்புகளிலே மிக உயர்ந்த படைப்பாக ஆறறிவு கொண்ட மனிதனைப் படைத்து அம்மனிதனின் உடலையே தனக்குரிய இருப்பிடமாகக் கொண்டு குடியேறி இருக்கிறார்.’ (அரங்க. இராமலிங்கம், சித்தர் இறைநெறி,ப.28)  ‘மனிதப் பிறவியே இறைவனை அடைவதற்கு அவருடன் கலப்பதற்கு ஏற்றதாயிருக்கிறது. மனிதப்பிறவியில் மட்டுமே சிந்திக்கின்ற உணர்ச்சியும் இறைவணை வழிபடும் சிந்தையும் கொண்டுள்ளது. ஆதலால்  இந்த மனிதப் பிறவி கிடைத்தற்கரியது. உயர்வான இந்தப் பிறவியில் இந்த உடலின் துணையோடு இறைவனை அடைய வேண்டுமென சித்தர்கள் கூறுகின்றனர்.’ (சி.எஸ். முருகேசன், சித்தர்களின் சாகாக்கலை, ப.111) நால்வகைத் தோற்றம் , ஏழுவகைப் பிறப்பு, என்பத்து நான்கு இலட்சம் உருவ வேற்றுமைகளோடு விளங்கும் உயிரினங்களுள் மனிதப்பிறவியே சிறந்தது அரியது. தன்னையே உணரும் தன்மையும் எண்ணிச் செயல்படுதிறனும் மனிதனுக்கு மட்டுமே உண்டு.

மனிதப் படைப்பை பற்றிய கோட்பாடுகளில் பிற சித்தர்களின் சிந்தனைகளிலிருந்து  பாம்பாட்டியார்  சற்று மாறுபட்டு நிற்கிறார்,

               ‘மரப்பாவை போலவொரு மண்ணுருச் செய்து

                வளமான சீவனென்னுஞ்ச் சூத்திரம் மாட்டித்

                திரைக்குள்ளி ருந்தசைப்போன் தீர்ந்தெழுந்த பொழுதே

                தேகம்விழு மென் றுதெளிந் தாடாய் பாம்பே’ (வா.சரவணமுத்துபிள்ளை, பெரிய ஞானக்கோவை, ப.209)      

இப்பாடலில் மரத்தால் ஆன பொம்மையைப்போல் மண்ணினால் செய்த உருவம் இந்த மனித உடம்பு. உயிர் என்னும் கயிற்றில் மாட்டித் திரைக்குள் இருந்து ஆட்டுவிக்கிற இறைவன் தன் இயக்கத்தினை நிறுத்திய உடனே உயிர் நீங்கிப் பிணமாக கீழே விழுந்துவிடும் என்ற உணர்வைத் தெளிந்து ஆடுவாய் பாம்பே என்று விளக்கம் பெறுகிறது. மேலும் இறைவன் பெருங்காற்றை உயிர் வளியைப் புகுத்தி வைத்துப் படைத்ததால் தான் வாய் வழியே மனிதனுக்கு பேச்சு உண்டானது. என்பதைப் பாம்பாட்டிச் சித்தரின் வரிகளில்,

                          ‘பேசரிய நவவாயிற் பீற்றல் துருத்தி

                          பெருங்காற்றுள் புகுந்ததால் பேச்சுண் டாச்சே...’ (மேலது, ப.208)  

உலகமும் இந்த உடலும் இறைவனால் படைக்கப்பட்டதே என்பதை குதம்பைச் சித்தர் தம் வரிகளில்,

                         ‘அண்டமும் பிண்டமும் ஆக்கிய தேவனைத்

                            தெண்டனிட்டு ஏத்தடியே குதம்பாய்’                            (த.குப்புசாமிநாயுடு, ஞானசாஸ்திரத்திரட்டு, ப.214)         

சிவவாக்கியரும் உயிர் உடலுக்குமான தொடர்பை விளக்கி உடலையும் உயிரையும் ஒன்ற வைப்பது சிவனே என்று குறிப்பிடுகிறார்.

                ‘உயிரினால் உடம்பெடுத்த உண்மை ஞானி சொல்லடா’                 

                ‘உயிரையும் உடம்பையும் ஒன்றுவிப்பது அச்சிவம்

                 உயிரினால் உடம்புதான் எடுத்தவாறு உரைக்கினேன்’                              

                (வா. சரவணமுத்துப்பிள்ள, ப.35)    

  மேற்கண்ட சிவவாக்கியரின் பாடல்கள் தெளிவற்ற நிலையில் காணப்படுகிறது. இரண்டு பாடல்களில் சிலவற்றை நீக்கி விட்டு ஒரே பாடலாக அமைத்துள்ளது யாரோ சாமானியனின் செயல் என்பது புலனாகிறது. இந்தப் பாடலில் உடலையும் உயிரையும் ஒன்ற வைப்பது சிவன் என்றால் இறுதியில் உடலை விட்டுப் பிரியும் எல்லா உயிர்களும் சிவனை அடைகின்றன என்பதே சிவவாக்கியரின் கருத்தாகும். இக்கருத்து விவிலியத்தோடு ஒத்துள்ளது. மனிதனுடைய இறுதி நிலையை “ஊத்தைக் குழிதனிலே மண்ணை எடுத்தே ... வறையோட்டுக்கும் ஆகாதென்று ஆடாய் பாம்பே” (பா.60) என்று பாம்பாட்டிச் சித்தரும் மனித உடலைப் பற்றி பாடியுள்ளார்.

நிறைவாக

          மனிதன் இறைவனால் படைக்கப்பட்டவன் என்றும் பிறப்புக்கும் இறப்புக்கும் நடுவில் பரம்பொருளாகிய இறை ஞானத்தைப் பெற்று முக்தி பெற வேண்டும் என விவிலியமும் சித்தர் பாடல்களும் விளக்குகின்றன. மேலும் மண்ணிலிருந்து எடுக்கப்பட்ட மனிதன் இறுதியில் மண், நீர், தீ, வளி என்னும் அடிப்படைகளில் பிரிந்துவிடுகிறான். மேற்காணும் கருத்தியலில் இவ்விரு நூல்களும் ஒத்துள்ளதாகவே தெரிகின்றன.

துணை நின்ற நூல்கள்

  • திருவிவிலியம், தமிழ்நாடு விவிலிய மறைக் கல்வி நடுநிலையம், திண்டிவனம். 2013
  • சரவணமுத்துப்பிள்ளை வா, பெரிய ஞானக்கோவை, பி. இரத்தின நாயக்கர் சன்ஸ், சென்னை. 2016 
  • கிருட்டிண பிள்ளை எ.ஆ, ஞானசிகாமணி வீ. முனைவர், ப. ஆ, இரட்சணிய சமய நிருணயம், மோரியா ஊழியங்கள், சென்னை. 2019 
  • குப்புசாமிநாயுடு த, ஞானசாஸ்திரத் திரட்டு தொகுதி 2, இராம. குருசாமிக் கோனார் சன் புஸ்தக ஷாப், புதுமண்டபம், மதுரை. 1938 
  • இராமலிங்கம் அரங்க.முனைவர், சித்தர் இறைநெறி, கலைஞன் பதிப்பகம், தி. நகர், சென்னை. 2007
  • நாராயணன் க, சித்தர் தத்துவம், தமிழ்ப் புத்தகாலயம், சென்னை. 1990 
  • முருகேசன், சித்தர்களின் சாகாக் கலை, சங்கர் பதிப்பகம், சென்னை. 2002 
  • செல்வநாயகம் இசுரேல். முனைவர், விவிலிய இறையியல் செஞ்சொல் கட்டுரைக் கோவை, தமிழ் இறையியல் நூலோர் குழு, மதுரை. 1993