ஜூலை 2024 இதழுக்கு ஆய்வுக்கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன

முகம் மலர்தலே விருந்தோம்பலின் முதன்மைப் பண்பு 

முனைவர்  க. மங்கையர்க்கரசி, உதவிப்பேராசிரியர், அகர்சந்த் மான்மல் ஜெயின் கல்லூரி, மீனம்பாக்கம், சென்னை 27 Jul 2021 Read Full PDF

முனைவர்  க. மங்கையர்க்கரசி, உதவிப்பேராசிரியர், அகர்சந்த் மான்மல் ஜெயின் கல்லூரி                    மீனம்பாக்கம், சென்னை 

ஆய்வுச்சுருக்கம்:-

                பண்டைத் தமிழர் இல்லங்களிலும், உள்ளங்களிலும் விருந்தோம்பல் பண்பாடு  சிறந்திருந்தது. விருந்தினரை அகமும், முகமும் மலர   வரவேற்று விருந்தளித்து சிறப்பித்தனர். திருமணம் செய்வதன் முக்கிய நோக்கமே விருந்தோம்பல் என்று தான் பழந்தமிழ் இலக்கியங்களில் கூறப்பட்டுள்ளது.

திறவுச்சொற்கள்:-

             விருந்து, விருந்தினர், விருந்தோம்பல், முகம் மலர்தல், இனிய சொற்கள்

முன்னுரை:-

பண்டையத் தமிழரின் பண்பாட்டில் தலையானது 'விருந்தோம்பல்' ஆகும். ஆனால் விருந்தோம்பலின்  தலையானது முகம் மலர்தலே ஆகும். விருந்தோம்பலின் சிறப்பைக் கூறாத தமிழ் இலக்கியங்களே இல்லை என்று கூறலாம். தமிழ் இலக்கியங்களில் விருந்தோம்பல் என்றால் ‘முகம் மலர்தலே’ என்று கூறும் இலக்கியங்களில் சிலவற்றைக் காண்போம். 

விருந்தினர்:-

தொல்காப்பியர் தொல்காப்பியத்தில் 

  "விருந்தே தானும் புதுவதுகிளர்ந்த

      யாப்பின் மேற்றே"                      

                                   (தொல்காப்பியம் -பொருளதிகாரம் 1495)

'விருந்து' என்பதற்குப் 'புதுமை' என்று பொருள். புதிதாய் வந்தோர்க்கு உணவு கொடுத்தல் என்று அகராதி கூறுகிறது..

 “அறிமுகமானவர்களும் விருந்தினர்களாக வருவர், அறியாதவர்களும் வருவர். ஆனாலும் விருந்து என்பதற்குப் ‘புதிது’ என்றும், ‘விருந்தினர்’ என்பதற்கு, ‘புதியவர்’ என்றுமே பொருள். எத்தனை முறை வந்தாலும் சரி, பழகி அவர்களையெல்லாம் புதியவராக எண்ணி போற்றவேண்டும் என்னும் விழுமிய எண்ணத்தால் எழும்பியதே இச்சொற்கள் போலும்” என்கிறார் இரா. இளங்குமரனார்.

விருந்தோம்பல்:- 

விருந்தோம்பல் என்பது தன் வீட்டிற்கு வரும் விருந்தினரை முகமலர்ச்சியோடு வரவேற்று, உண்ண உணவும், இடமும் கொடுத்தல், அவர்களிடம் அன்பு பாராட்டல் இவையே ‘விருந்தோம்பல்’ ஆகும்.

தமிழர் மரபில் உணவோடு உணர்வையும் குழைத்துச் செய்த சமையல் விருந்தாகிறது.   விருந்தினரைப் போற்றி வரவேற்று விருந்து செய்வதை எளியகுடும்பப் பெண்களும், தம்முடைய தலையாயக் கடமையாகவே கொண்டனர்.

இல்லறக் கடமைகளில் ஒன்றான திருமணம் நடைபெறுவதன் நோக்கமே விருந்தோம்பலாகும். கணவனுடன் கூடி வாழும் மங்கல மகளிர்க்குரிய தனி்உரிமையாக விருந்தோம்பல் கருதப்பட்டது. கணவனை இழந்தவர்களும், பிரிந்து வாழ்பவர்களும் விருந்தினரை வரவேற்கும் உரிமை கிடையாது.

“நச்சல்கூடாது பெரும்இச்செலவு ஒழிதல் வேண்டுவல் சூழின் பழி இன்று மன்னவன் புறந்தர வருவிருந்து ஓம்பித் தன்நகர் விழையக் கூட்டு” (கலித்தொகை 89-23). தோழியின் வாயிலாக விருந்து அறம் பேசப்பட்டுள்ளது. ”உம்மைநாடி வரும் விருந்தினரை உபசரித்து, இல்லறம் நடத்தி இவளோடு கூடி வாழ்” என்று கூறுகிறாள்.

விருந்து பற்றி எடுத்துரைக்கும் நூல்களில் சில:-    

தொல்காப்பியம், நற்றிணை, குறுந்தொகை, கலித்தொகை, புறநானூறு, பொருநராற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, நாலடியார், நான்மணிக்கடிகை ஏலாதி, திருக்குறள், கம்பராமாயணம், அறபளீசுரசதகம், தண்டலையார்சதகம், விவேகசிந்தாமணி, காசிக்காண்டம், ஒளவையார், குடும்பவிளக்கு, சிவஞான போதம்.

விருந்தோம்பல் பண்பு குறித்து தொல்காப்பியம்:-

விருந்தோம்பல் என்பது பெண்ணிற்குரிய கடமையாக இலக்கண, இலக்கியங்கள் கூறுகிறது 

தொல்காப்பியர் பெண்ணிற்கு இலக்கணம் கூறுகையில் விருந்தோம்பல் பண்பாட்டையும் கூறியுள்ளார்,

‘விருந்து புறந்தருதலும் சுற்றம் ஓம்பலும்

பிறவும் அன்ன கிழவோன் மாண்புகள்’

                                   (தொல்காப்பியம்-பொருளதிகாரம் கற்பியல் 150:3-4)

 

விருந்தினரைப் பாதுகாத்தலும்,சுற்றத்தாரைப் பாதுகாத்தலும் தலைவியின் பண்புகளாக தொல்காப்பியர் குறிப்பிட்டுள்ளார்.

என்பதனை   அறியமுடிகிறது.

இலக்கியங்களில் விருந்தோம்பல் பண்பு:-                                     

சங்க காலத்தில் அரசனாயினும், வறியோராயினும் விருந்தினர்களைப் போற்றினர்.    

வரகு, தினையுமாகிய உணவுப் பொருட்களை இரவலர் உண்டதனாலும், கொண்டதனாலும் தீர்ந்து விட, விதைக்கு வைத்திருந்த தினைக்கதிரைக் குற்றிக் குறிஞ்சி நில மகளிர் விருந்தினர்க்கு உணவிட்டனர். ஒரு குடிமகன் வீட்டிற்கு விருந்தினர் வந்தனர். தன்னிடம்வேறு பொருள் இன்மையால் பழமையானது என்று போற்றப்பட்ட வாளை அடமானம் வைத்து உணவு படைத்தான்.  மறுநாளும் விருந்தினர் வரவே, அப்போது தன் யாழை பணயமாக்கினான் என்று  (புறநானூறு 316, புறநானூறு 333) கூறுகிறது.

விருந்தை, விருந்தினர் மனம் மகிழும் படிசெய்வது சிறப்பு. மலர்கள் வெம்மையால் வாடும். அனிச்சம் பூ மிகவும் மென்மையானது. அதை முகர்ந்தாலே அது வாடி விடும். அதுபோல விருந்தினரும் மிகவும் மென்மையானவர்கள், முகம் திரிந்து நோக்கினாலே, வாடிவிடுவர் என்றே பழந்தமிழ் இலக்கியங்கள் விருந்தினர் குறித்து கூறுகின்றன.

நற்றிணை காட்டும் விருந்தோம்பல் பண்பு:-

விருந்தோம்பலில் மிக முக்கியமான பண்பு குறுமுறுவல் கொண்ட முகத்தோடு விருந்தினர்க்கு உணவு படைத்தாள் தலைவி என்பதனை

"முறுவல் கொண்ட முகங்காண் அம்மே" (நற்றிணை 120)

"விருந்து அயர் விருப்பொடு வருந்தினள்

முறுவல் இன்நகை காண்கம்"

(நற்றிணை 81: 8 - 9)

“அல்லி லாரினும் விருந்துவரின் உவக்கும்

          முல்லை சான்ற கற்பின் மெல்லியற் குறுமகள்”.   

(நற்றிணை 142:9-11)

இரவு நேரத்தில் விருந்தினர் வந்தாலும் முகம் சுழிக்காமல், இன்முகத்துடன் விருந்து கொடுக்கும் தலைவி என்று இலக்கியங்களில் கூறப்பட்டுள்ளது.

கலித்தொகையில்  விருந்தோம்பல் பண்பு:- 

கலித்தொகையில் தலைவி, தலைவனிடத்தில்.  

“பெரும விருந்தொடு கைத்தாவா எம்மையும் உள்ளாய்”.     (கலித்தொகை 81:11).    என்று கூறுவதிலிருந்து வந்த விருந்தினரை கை ஓயாது உபசரித்த கடமை நிலை தெரிகிறது.

“பெருந்திரு நிலைஇய வீங்கு சற்று அகன்மனை”  

(கலித்தொகை 83:1) 

பெருஞ்செல்வம் நிலைபெற்றப் பலருக்கும் விருந்து செய்வதற்காகப் பெருக சமைத்து வைத்துள்ள சோற்றை உடைய பெரியவீடு என்று கூறுகிறது.

அமிழ்தத்தைச் சுவையால் வென்று உண்ண உண்ண அடங்காத மணம் மிகுந்த தாளிப்பினை உடைய உணவினை வரும் விருந்தினருக்கு அளவிறந்து அளித்து மகிழும். குற்றமற்ற வாழ்க்கையையுடைய குலமகளிர் என்று கூறப்பட்டுள்ளது.

வருவோருடைய மன விருப்பத்தை இல்லறத்தார் அறியாமல்போயினும் தம்மால் இயன்ற அளவு அவர்களுக்கு உணவளித்துத் தன் இல்லின்கண் தங்கிச் செல்லுமாறு கூறும் இயல்பான பண்புள்ளம் கொண்டவர்களாக இருந்தார்கள்.

புறநானூற்றில் முகம் மலர விருந்தோம்பல்:-

சிறப்பு மிக்க அரசனாயினும் தம்மை நாடி வந்த புலவர்களை முகம் கோணாமல் விருந்தோம்புவது ஒரு சிறந்த பண்பாடாகப் போற்றப்பட்டுள்ளது. முகம்மாறி வரவேற்பின் கிடைத்தற்கரிய பொருள் கிடைப்பின் அதனைப் பெறமாட்டார்கள். 

களிறு முதலான பெறுதற்கரிய பரிசில்களை நீ எனக்குக் கொடுத்தாலும், தானாக உன் அகமும் மலர, குளிர, உவந்து மகிழ்வோடு கொடுக்கும் பொருளைத் தான் பெற்றுக்கொள்வேன். சற்றே முகம் மாறினாலும், நீ கொடுக்கும் பரிசு குன்றிமணியளவேனும் பெறமாட்டேன் என்று உறுதிபடத் தெரிவிப்பதை புறநானூற்றில் பெருஞ்சித்திரனார் குமணனுக்கு உணர்த்துகிறார். 

பொருநாற்றுப்படை காட்டும் விருந்தோம்பல் பண்பு:-

விருந்தினரிடம் நண்பனைப் போல உறவு கொண்டு, இனிய சொற்களைக் கூறி, கண்ணில் காணும்படி தனக்கு நெருக்கமாக இருக்கச் செய்து, விருந்தினரிடம் அன்பு காட்டி எலும்பே குளிரும்படி அன்பால் நெகிழச் செய்ய வேண்டும் என்பதனை.

"கேளிர் போலக் கேள் கொளல் வேண்டி

வேளாண் வாயில் வேட்டக் கூறிக் 

கண்ணார் காண நண்ணு வழி இரீஇப்

பருகு வன்ன பெருகா நோக்கமொடு

உருகு பவைபோ லென்புகுளிர் கொளீஇ" 

(பொருநாற்றுப்படை 74 - 78)

என்று பொருநாற்றுப்படை குறிப்பிடுகின்றது. 

விருந்தினர்கள் விடைபெற்றுச்செல்லும் போது, அவர்கள் பின்னே ஏழடி நடந்து சென்று வழியனுப்பி வைப்பார்கள். கரிகாலன் தன்னை நாடி வந்த பொருநர்களை வரவேற்று உபசரித்து, அவர்கள் விடைபெறும்போது ஏழடி தூரம் நடந்துசென்று வழியனுப்பினான் என்று பொருநாற்றுப்படை கூறுகிறது.

விருந்தினர்க்கு கொடுக்கும் போது 

"மகமுறை மகமுறை நோக்கி முகன் அமர்ந்து

ஆனா விருப்பின் தான் நின்று ஊட்டி" 

    (பெரும்பாணாற்றுப்படை 478 - 479)

எனும் வரிகளால் தன் அரண்மனைக்கு வந்த மக்களுக்கு அரசன் குழந்தைகளுக்கு ஊட்டுவது போல, பார்த்துப் பார்த்து முன்னிருந்து விருப்பத்துடன் உணவளித்த உயர்ந்த உள்ளம் பேசப்படுகிறது.

இதனையே மலைபடுகடாம் 

"மகமுறை தடுப்ப மனைதொறும் பெறுகுவீர்"              

                                                                     (மலைபடுகடாம் 185)

என்று கூறுகிறது. 

சிறுபாணாற்றுப்படை  கூறும் விருந்தோம்பல் பண்பு:-

நல்லியகோடன் தன்னிடம் பரிசில் வேண்டும் வறியவர்க்கு மெல்லிய ஆடைகளையும்,களிப்பைத் தரும் கள்ளையும், வீமனின் மடைநூல்நெறியில் தப்பாதபடி சமைத்த பல்வேறு உணவையும், பொன்னாலான உண்கலத்தில் நீ உண்ணும் சுவையறிந்து விருப்பத்துடன் தானே அண்மையில் நின்று உண்ணச் செய்வான் என்பதை,   

              “ இளங்கதிர் ஞாயிறு எல்லாம் தோற்றத்து 

                    விளங்கு பிற்காலத்தில் விரும்புவன்பேணி

                   ஆரை விருப்பின் தான் நின்று ஊட்டி”.      

  (சிறுபாணாற்றுப்படை(243-245)

என்ற பாடலடி மூலம் அறிய முடிகிறது

நாலடியார் கூறும் விருந்தோம்பல் பண்பு:-

பதினெண்கீழ்க்கணக்கு அற நூல்களில் முதல் நூலான நாலடியார் விருந்தோம்பல் குறித்து 

"குடநீர் அட்டு உண்ணும் இடுக்கண் பொழுதும்

கடல்நீர் உற உண்ணும் கேளீர் வரினும்

கடன் நீர்மை கையாறாக் கொள்ளும் மடமொழி

 மாதர் மனைமாட்சியாள்"                                                             (நாலடியார் 382)

குடத்து நீரைக் காய்ச்சி உண்ணும் வறுமைத்துன்பம் வாட்டிய போதும், கடல் நீரையே கொடுத்தாலும் போதாத அளவு சுற்றத்தார் வந்த போதும், அவர் தம் முகம் கோணாதவாறு விருந்தோம்புதலைக் கடமையாகச் செய்யும் பெண்ணே மாட்சிக்கு உரியவள் ஆவாள். மேலும் இன்முகத்துடன் வரவேற்று பரிமாறப்படும் எந்த உணவும் அமிழ்தமாகத் திகழும். 

"கழுநீரும் கார் அடகேனும் ஒருவன் 

விழுமிதாக் கொள்ளின் அமிழ்து ஆம் விழுமிய

குய்த்துவை ஆர் வெண் சோறே ஆயினும் மேவாதார்

கைத்தூண்டல் காஞ்சிரங் காய்"       (நாலடியார் 217)

கழுநீருள் வைக்கப்பட்ட கீரை உணவு உள்ளன்பு உடையவரால் பரிமாறப்படின், அமிழ்தத்திற்கு நிகரானது. உள்ளன்பு இல்லாதவர் நறும் வகை ஊட்டிச் சமைத்த புளிங்கறி கலந்த வெண் சோறாக இருந்த போதிலும், எட்டிக்காய் போலக் கசக்கும் என வலியுறுத்துகிறது. 

இவ்வாறு உணவின் சுவை உணவுக்கு உள்ளே இருப்பதைக் காட்டிலும், உணவை வழங்குவோர் உள்ளத்தின் உள்ளே இருக்கிறது என்பது தெளிவாக உணர்த்தப்படுகிறது. 

நான் மணிக்கடிகை கூறும் விருந்தோம்பல் பண்பு:-

விருந்தோம்பலுக்கு அடிப்படை அன்புணர்ச்சியாகும். அன்பற்றவர்கள் வீட்டிற்குச் சென்ற விருந்தினர்கள் முகம்வாடி வருவர் என்று குறிப்பிடுகிறது. 

"நன்றிசாம் நன்று அறியாதார் முன்னர்இ

 விருந்தும் விரும்பிலால் முன்சாம் சென்ற"

  (நான்மணிக்கடிகை 44)

கணவனும் மனைவியும் ஒருங்கே இருந்து இன் முகத்துடன் விருந்தினர்களை உபசரிக்க வேண்டும். அங்ஙனம் விருந்து உபசரிக்கும் பொழுது விருந்தினர் முகம் மலரும் என்று குறிப்பிடுகிறது.

ஆசாரக்கோவை கூறும் விருந்தோம்பல் பண்பு:-

ஆசாரக்கோவையும் விருந்தினரை உபசரிக்கும் போது குறுமுறுவல், இனிமையாகப் பேசுதல், கால் கழுவ நீர் தந்து, மனையினுள் வந்தஉடன் பாய் விரித்து அமர வைத்து என்று இவ்வைந்தும் முக்கியம் என்பதை 

"முறுவல், இனிதுரை, கால்நீர், மணைபாய்

 கிடைக்கையோடு இவ்வைந்தும்"

       (ஆசாரக்கோவை 54: 1 - 2)

என்ற பாடலடி மூலம் அறிய முடிகிறது. 

திருக்குறள் கூறும் விருந்தோம்பல் பண்பு:-

விருந்து கொடுப்பவரின் முகமானது மிக மலர்ச்சியுடன் எதிர் கொண்டு அழைத்து விருந்து கொடுக்க வேண்டும். எதிர் கொண்டு அழைப்பவர்களின் முகமானது சிறிது வாட்டத்துடன் இருந்தாலும் விருந்தினர் முகம் சட்டென்று அனிச்ச மலரைப் போல் வாடும் தன்மையுடையதாக மாறிவிடும். 

"மோப்பக்குழையும் அனிச்சம் முகம்திரிந்து

நோக்கக் குழையும் விருந்து"                        (குறள் 86)

என்று குறள் கூறுகிறது. 

பரிமேலழகர் உரை:- 

இந்தக் குறளுக்கு பரிமேலழகர் சொல்லும் உரை தொலைவில் வரும் போதே விருந்தினை வரவேற்கிறோம் என்ற பொருளில் இன்முகம் காட்ட வேண்டும். அருகில் வந்த போது, அவர்கள் மனம் குளிர இன்சொல் சொல்லி வரவேற்க வேண்டும். பின் அவர்களுக்கு  அன்போடு விருந்து உபச்சாரம் செய்ய வேண்டும் என்கிறார். (சேய்மைக் கண் கண்டுழி இன்முகமும், அது பற்றி நண்ணிய வழி இன்சொல்லும் அது பற்றி உடன்பட்ட வழி நன்று ஆற்றலும்). 

வீட்டிற்கு வரும் விருந்தினரை வாயில் வரை சென்று இன்முகத்துடன் அழைத்து வந்து உபசரிப்பது தமிழரின் தலைப் பண்புகளில் ஒன்று. 

"அகன் அமர்ந்து செய்யாள் உறையும் முகம் அமர்ந்து

 நல்விருந்து ஓம்புவான் இல்" 

                (குறள் (84)

 

முகமலர்ந்து நல்விருந்து பேணி இல்லறம் நடத்துபவன் இல்லத்தில் அகம் விரும்பித் திருமகள் நிலையாகத் தங்கி அனைத்துச் செல்வமும் வழங்குவாள். 

"முகன் அமர்ந்து நல்விருந்தோம்புவான் இல் அகனமர்ந்து செய்யாள் உறையும்" என்று கொண்டு கூட்டிப் பொருள் கொள்ள வேண்டும். 

அனிச்சம்:-

"அனிச்சத்தம் போது போலத் தொடுப்பவே குழைந்து மாழ்கி"

(சீவகசிந்தாமணி 2939)

"அககை வாரா முகனழி பரிசில்"

                                                                                                                    (புறநானூறு 207: 4)

என்றும் கூறுகிறது. 

          “அகனமர்ந்து ஈதலின் நன்றே முகனமர்ந்து

     இன்சொல னாகப் பெறின்”

                                                                                                       ( திருக்குறள்-92)

மனம் மகிழ்ந்து ஒன்றை ஒருவருக்குக் கொடுப்பதைவிட, முகம் மலர்ந்து இனிய வார்த்தைகள் பேசுவது சிறந்ததாகும்  என்றும்  குறள் கூறுகிறது.

ஏலாதி கூறும் விருந்தோம்பல் பண்பு:-

நம்மைத் தேடி வரும் விருந்தினரை மென்மையான சொல்லைக் கூறியும், உள்ளம் கலந்து உறவாடியும், தங்குவதற்கு வசதியான இடமளித்தும், ஆடை அணிகலன்கள் அளிக்க வேண்டும். இவ்வாறு விருந்தினரை உபசரிப்பவர்களைத் தேவர்கள் தம்விருந்தினராக ஏற்றுக் கொள்வார்கள் என, 'ஏலாதி' பண்டையத் தமிழரின் விருந்தோம்பும் முறையைத் தெரிவிக்கிறது. 

"இன்சோல், அளவல், இடம், இனிது ஊண் யாவர்க்கும்

வன் சொல் களைந்து வகுப்பானேல்- மென் சொல்

முருந்து ஏய்க்கும் மட்போல் ஏயிற்றினாய் நாளும்

விருந்து ஏற்போர் விண்ணோர் விரைந்து" 

             (ஏலாதி -7)

என்று ஏலாதி குறிப்பிடுகின்றது. 

கம்பராமாயணத்தில் விருந்தோம்பும் பண்பு:-

கம்பராமாயணத்தில்     முகம் மலர்ந்தே விருந்தினரை வரவேற்க வேண்டும் என்று கம்பர் கூறுகிறார்.

கம்பராமாயணத்தில் விருந்தோம்பும் பண்பு குறித்து.

      "விருந்தினர் முகம் கண்டன்ன

        விழா அணி விரும்புவாகும்"    

                                                                        (பாலகாண்டம்- நாட்டுப்படலம் 47)

கோசலநாட்டு வளம் குறித்தும், மக்களின் பழக்கவழக்கங்கள், பொழுதுபோக்குகள் குறித்தும் கூறியுள்ளார்.அதில் சிலர் விருந்தினர்களின் முகங்களைப் பார்த்து, அவர்களுக்கு அன்னம் அளிக்கும் விழாவை விரும்பினார்கள் என்று கூறுகிறார்.

விருந்தினர் வருகை கண்டு உள்ளம் களிக்கும் மகளிரின் முகம் போல என்று கம்பர் கோசல நாட்டு மக்களின் விருந்தோம்பலை குறிப்பிட்டுள்ளார். 

தாமரை மலர்ந்தது என்று 

“                     ..................... விருந்து கண்டு உள்ளம்

களிக்கும் மங்கையர் முகம் எனப் பொலிந்த கமலம்" 

                                              (கிட்கிந்தா காண்டம்- கார்காலப்படலம் 476) என்று கம்பர் கூறுகிறார்.                                             

வானில் வந்த மேகங்களை விருந்தினர் எனக் கருதி, தாம் வீட்டில் இருந்தபடியே அவரது வருகையை நோக்கி உள்ளம் களிக்கின்ற பெண்கள் முகம் மலர்தல் போலத் தாமரைக் கொடிகள் நீரில் எழுச்சியுடன் விளங்கின.

அறபளீசுரசதகம் கூறும் விருந்தோம்பல் பண்பு:-

விருந்தினர் பால் உள்ளத்தெழும் அன்பு மிக மிக முக்கியம். இல்லையெனில் விருந்தின் பயன் அற்றுப்போய்விடும் என்பதை, 

            "உள்ளன்பு இலாதவர் தித்திக்கவே பேசி

            உறவாடும் உறவும் உறவோ?

            உபசரித்து அன்புடன் பரிமாறிடாத

            சோறு உண்டவர்க்கு கன்னம் ஆமோ"

(அறபளீசுரசதகம் 26)

விருந்தாக வந்தவர்களும், வறியவர்களும் உணவு கொள்ள முகமலர்ச்சி பெறுவர் மேலோர் என்கிறார் .,

"விருந்தினரும் வறியவரும் நெருங்கி உண்ண

மேன்மேலும் முகம் மலரும் மேலோர்"

  (கலிங்கத்துப்பரணி 47)

என்பது வீரர்கள் முகமலர்ச்சியுடன் இறந்து கிடக்கும் காட்சி செல்விருந்தோம்பி வருவிருந்து பார்த்திருக்கும் இல்லறத்தார் போல் தாம் இறந்த பின்னரும் தம் உடல்களைப் பருந்துகளும்,கழுகுகளும் உண்பதைக் கண்டு முகமலர்ச்சியுடன் வீரர்கள் கிடக்கின்றனர்

என்று குறிப்பிடுகின்றது. 

தண்டலையார்சதகம் காட்டும் விருந்தோம்பல் பண்பு:-

விருந்தோம்பல் குறித்து   சிற்றிலக்கியங்களில் ஒன்றான தண்டலையார்சதகமும் பேசுகிறது.     

              “திரு இருந்த தண்டலையார் வளநாட்டில்

                      இல்வாழ்க்கை செலுத்தும் நல்லோர் 

              ஒரு விருந்தாயினும் இன்றி உண்ட பகல்

                     பகலாமோ? உறவாய் வந்தது

              பெரு விருந்து உபசாரம் செய்து அனுப்பி 

                     இன்னும் எங்கே பெரியோர் என்று 

              வரு விருந்தொடு உண்பது அல்லாமல் விருந்து 

                    உண் ணும் சோறு மருந்து  தானே-இல்லாது.    

 

                                                                                       (தண்டலையார்சதகம் 7)

தினமும் ஒரு விருந்தினராவது வந்து அவர்களுக்கு உணவு அளித்த பின்பு தான் வீட்டில் உள்ளவர்கள் உண்ணுவார்கள்.அவ்வாறு ஒரு விருந்தினராவது இல்லாமல் உணவு உட்கொண்டால் அந்தநாள் ஒரு நாளாகுமோ?  விருந்தினர் இல்லாமல் உண்பது மருந்து போல கசப்பாக இருக்கும் என்று படிக்காசு புலவர் கூறுகிறார்.

தங்கத்தினால் செய்யப்பட்ட குடையும், ஆடையும்,அணிகலன்களும் யாருக்காவது கொடுத்தாலும் அதை அன்பு கொண்ட இனிமையான முகத்துடன் உதவி செய்யவேண்டும்.மனநிறைவுடன் கொடுக்கவேண்டும் என்பதை,  

                பொற்குடையும் பொற்றுகிலும் பொற்பணியும் 

                  கொடுப்பதென்ன பொருளே என்று 

                     நற்கமல முகம் மலர்ந்தே உபசாரம்.  

  (தண்டலையார் சதகம்10)

கூறுகிறது.

விவேகசிந்தாமணி கூறும் விருந்திடும்முறை:-

விருந்தோம்பும் பண்பு சமுதாய அமைப்பில் வாழ்வியலோடு இணைந்த பாங்கினை நெறியாகப் புலப்படுத் து   ம் பாடல். 

எதிர்பாராத நேரங்களில் திடீரென விருந்தினர் வருதல் கூடும். அத்தகைய நேரங்களில் முகத்தைக் கடுகடுவென வைத்திருத்தல் கூடாது. முகமலர்ச்சியுடன் உப்பில்லாத கூழ் இட்டாலும் அது அமிர்தம் போல இருக்கும். கடுத்த முகத்துடன் பழமே அளித்தாலும் அது மேலும் பசியை அதிகரிக்குமே தவிர பசியைத் தீர்க்காது. இதனை 

"ஒப்புடன் முக மலர்ந்த உபசரித் துண்மைப் பேசி

 உப்பில்லாதக் கூழ் இட்டாலும் உண்பதே அமிர்தமாகும்  

 முப்பழமொடுபா லன்னம்முகங்கடுத் திடுவா ராயின் 

 கப்பிய பசியா னோடுகடும்பசி ஆகுந் தானே" 

                                (விவேகசிந்தாமணி 4)

என்ற பாடலடி உணர்த்துகிறது

உள்ளன்பு இல்லாதவர்கள் இனிக்க, இனிக்கப் பேசி உறவாடுவார்கள் அப்படிப்பட்ட உறவு உறவாகுமா அன்புடன் உபசரித்து பரிமாறிடாத சோறு உண்டவர்களுக்கு மன நிறைவு ஏற்படுத்தாது என்று கூறுகிறார்.

  ஒருவன் பரிமாறுகின்ற உணவானது புளித்துப் போன குழம்பு, தவிடு, கூழ், புழுக்கள் பற்றிய மாவு, அரைக்கீரையின் வேர், கெட்டியாய் இல்லாத தயிர், பக்குவம் தவறிய சர்க்கரைப்பாகு, கிளறிய களி, நன்றாகத் தீட்டப்படாத அரிசியில் பொங்கி இடப்பட்ட சோறு, உப்புப் போடப்படாத நீராகாரம், ஆகிய இவையே ஆயினும், இவ்வுணவானது அன்புடன் பரிமாறப்பட்டதாக இருக்க, அப்படிப்பட்ட உணவைச் சாப்பிட்டால் எவ்விடத்திலும் அது அருஞ்சுவை உடையதாய் இருக்கும். மாறாக பக்குவப்பட்ட தேன்பாகு, பசு நெய், பருப்பு வகைகள், முப்பழ வர்க்கங்கள், பால் சாத வகைகள், தாளிக்கப்பட்ட கறி வகைகள், பலகார விதங்கள், போன்றவற்றுடன் சுண்டக் காய்ச்சப்பட்ட திரட்டுப் பால், சர்க்கரைப் பொங்கல் முதலியவற்றுடன் உணவு படைத்தாலும் அன்போடு இடப்படாத அந்த உணவால் திருப்தி உண்டாவதில்லை என்பதை, 

"கெட்டசாறு தவிடு கஞ்சி

கிருமி உண்ட மாஅரைக்

கீரைவேர் தெளிந்த மோர்மு

றிந்த பாகு கிண்டுமா

இட்ட சோறு கொழியல் உப்பி

டாத புற்கை ஆயினும்

எங்கும் அன்ப தாக நுங்க

இன்ப மாயிருக்குமே

பட்டபாகு பசுவின் நெய்ய

ருப்பு முக்க னிக்குழாம்

பானி தங்கள் தாளி தங்கள் 

பண்ணி கார வகையுடன்

அட்ட பால்கு ழம்பு கன்னல்

அமுத மோடும் உதவினும்

அன்பினோ டளித் திடாத

அசனம் என்ன அசனமே"        

                                                                                            (விவேகசிந்தாமணி 58)

என்னும் பாடலடி உணர்த்துகிது. 

எனவே, எத்தகைய உணவினை இட்டாலும் அதனை அன்பினோடு முகம் மலர்ந்தே இடுதல் வேண்டும் என்பதே பழந்தமிழரின் விருந்தோம்பல் பண்பு முறையாகும். 

ஔவையார் கூறும் விருந்தோம்பல் பண்பு:-

 `மருந்தேயாயினும் விருந்தொடு உண்’ என்பார் ஒளவையார்.விழுப்புண்படாதநாளெல்லாம் வீழ்நாள் என்று மறவன் கருதுவது போல ,விருந்தினர் வாரா நாளெல்லாம் வீண்நாளாகப் பண்டையோர் கருதினர் சுயமரியாதையைக் காத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் கடைபிடிக்க வேண்டிய நிலைகளை ஔவையார் தனது தனிப்பாடலில் கோடி பெறும் என்று குறிப்பிடுகிறார். 

"மதியாதார் முற்றம் மதித்தொடு காற்சென்று

மிதியாமை கோடிபெறும்

உண்ணீர் உண்ணீரென்று உபசரியார்தம் மனையில்

உண்ணாமை கோடி பெறும்

கோடி கொடுத்தும் குடிப்பிறந்தார் தம்மோடு

கூடுவதே கோடி பெறும்

கோடானு கோடி கொடுப்பினும் தன்னுடைய நாக் 

    கோடாமை கோடி பெறும்"                                        

                                                                                                             (தனிப்பாடல்)

என்ற பாடலில் வரவேற்காதவர் வீட்டை மிதியாமையும், உபசாரம் செய்யாதவர்கள் வீட்டில் உண்ணாமையும் நல்ல குடும்பத்தாரின் நட்பும், சொன்ன சொல் தவறாமை ஆகிய நான்கும் கோடிக்குச் சமமாகும் என்கிறார். 

அன்பில்லாமல் இட்ட அமுதினை உண்ணும் போது ஏற்பட்ட வலியினை

"காணக்கண்கூசுதே, கையெடுக்க நாணுதே

மாணொக்க வாய் திறக்க மாட்டாதே - வீணுக்கென்

என்பெல் லாம்பற்றி எரிகிறது ஐயையோ

அன்பிலாள் இட்ட அமுது"                                                              

                                                                                           (ஔவை தனிப்பாடல்)

அன்பில்லாத மனையாள் இட்ட அமுது ,அதனைக் காணவும் கண்கள் கூசுகின்றன.கையால் எடுக்கவும் வெட்கமாகின்றது.பெருமை நிறைந்த என் வயிறும் திறக்க மாட்டேன் என்கிறது. பயனின்றி என் எலும்பெல்லாம் பற்றி எரிகின்றது என்று கூறுகிறார்.

என்று குறிப்பிடுகிறார். 

விருந்தினர் ஒரு வீட்டிக்கு வருவதும் உபசரிப்பதும் முக்கியம் என்பதை, 

"மாடில்லான் வாழ்வு மதியில்லான் வாணிபநன்

  நாடில்லான் செங்கோல் நடாத்துவதும் - சூடும்

  குருவில்லா வித்தை குணமில்லாப் பெண்டு

  விருந்தில்லா வீடு விழல்"                                                                                                                                                        (தனிப்பாடல்)

செல்வமில்லாதவனுடைய வாழ்க்கையும், மதிநுட்பமில்லாத வனுடைய வாணியமும், நல்ல நாடில்லாதவனுடைய செங்கோலும், நல்ல ஆசிரியனில்லாத கல்வியும், நல்ல குணமில்லாத பெண்களும் விருந்தினரில்லாத வீடும் வீண் பயனற்றது என்கிறார்.

 காசிக்காண்டம் -  கூறும் விருந்தோம்பல் பண்பு:-

காசிக்காண்டமும் விருந்தோம்பல் குறித்து கூறுகிறது

                              விருந்தினனாக ஒருவன் வந்து எதிரின் 

                                           வியத்தல் நன்மொழி இனிது உரைத்தல் 

                              திருந்துற நோக்கில் வருக என உரைத்தல் 

                                          எழுதல் முன் மகிழ்வன செப்பல்

                             பொருந்து மற்றஅவன் தன் அருகுற இருத்தல்

                                         போமெனில் பின் செல்வதாதல் 

                            பரிந்துநன்முகமன் வழங்கல் இவ்வொன்பான்

                                        ஒழுக்கமும் வழிபடும் பண்பே.              

                                                          (காசிக்காண்டம் -   இல்லொழுக்கம் 17)

விருந்தினராக ஒருவன் வந்தால் அவரை எதிர் கொண்டு வியந்து உரைத்தல்    வேண்டும்.    நல்ல சொற்களை    இனிமையாகப்      பேசுதல்,    முகமலர்ச்சியுடன் அவரை நோக்கி வீட்டிற்குள் வருக என்று வரவேற்று, அவர் எதிரிலேயே நின்று அவர்முன் மனம் மகிழும்படி பேசுதல்,அவர் அருகிலேயே அமர்ந்து கொண்டு அவர்விடைபெற்றுச் செல்லும் போது, வாசல்வரை பின் தொடர்ந்து செல்லல் ,வந்தவரிடம் புகழ்ச்சியாக முகமன் கூறி வழியனுப்புதல் வேண்டும் என்று கூறுகிறது.

 சிவஞானபோதம்:-    

சைவசித்தாந்த நூலாகிய சிவஞானபோதத்திற்கு பேருரை விரித்தவர் திரிவாவடுதுறை ஆதினத்தைச் சேர்ந்த மாதவ சிவஞானயோகிகள். விருந்தினர் வந்தபோது சமையலாளியிடம் இட்ட கட்டளையாக.  

                  “சற்றே துவையல் அரை தம்பி ஒரு பச்சடி வை 

                   வற்றல் ஏதேனும் வருத்து வை குற்றம். இலை                  

                         கா யம் இட்டுக் கீரை கடை கம்மெனவே மிளகுக்

                         காய் அரைத்துவைப்பாய் கறி.  

என்றார்

மற்றொரு வேளையில் சிவஞானமுனிவர் வந்தாரை வரவேற்று விருந்துக்கு அழைக்கிறார்.    அன்னம், சாம்பார், இரசம் பூசணிக்கூட்டு, பாயாசம்  கொண்ட பெருவிருந்தே படைக்கிறார்

 “அரன்சீரம் காணாப்புள்ளும்

  அத்துடன் இறக்கும் பூமி 

  வரன்முறையாக வந்த

  வடசொலில் சுவையாம் ஒன்றும் 

  கரம்தனில் அள்ளிஉண்ணக்

  களிதரு பாயாடொடு

  உடமலர் மந்தன் கூட்டும்

  உண்ணவருவீரே.

என்றும் கூறுகிறார்.

பாரதிதாசன் கூறும் விருந்தோம்பல் பண்பு:-

பாரதிதாசனும் விருந்தோம்பும் பண்பு குறித்து தனது நூலில் குறிப்பிட்டுள்ளார். 

"வாழை இலையின் அடி உண்பார் வலப்புறத்தில்

வீழ விரித்துக் கறி வகைகள் - சூழ வைத்துத் 

தண்ணீர் வெந்நீரைத் தனித்தனியே செம்பிலிட்டு

வெண் சோறிடுமுன் மிக இனிக்கும் - பண்ணியமும்

முக்கனியும் தேனில் நலநெய்யில் மூழ்கு வித்தே

ஒக்க நின்றே - உண்பின் - பால் சோறிட்டுத் தக்கபடி

கேட்டும் குறிப்பறிந்தும் கெஞ்சியும் மிஞ்சுமன் பால்

ஊட்டுதல் வேண்டும் தாய்போல் ஒண்தொடியே கேட்டுப்போ"

                                                                     (குடும்பவிளக்கு- விருந்தோம்பல்)

என்கிறார். விருந்தோம்பலில் தாய் தன் பிள்ளைக்கு உணவிடுவது போல கவனிக்க வேண்டுவது சிறப்பு.

"எக்கறியில் நாட்டம் இவர்க்கென்று நீயுணர்ந்தே

அக்கறியை மென்மேலும் அள்ளி வை-விக்குவதை

நீ முன் நினைந்து நினைப்பூட்டி நீர் அருந்து

ஈமுன்கால் சோற்றிலையில் இட்டாலும்- தீமையம்மா

பாய்ச்சும் பசும் பயிற்றுப் பாகுக்கும் நெய்யளித்துக் 

காய்ச்சும் கடி மிளகு தொன்னை பல வைத்திடுவாய்

ஆயுணவு திரிந்தே அவர் எழுமுன் - தாயே

அவ்வகைக்கு நீரேந்தி நெய்ப்பசை அகற்ற

வெர்கட்டி தந்து உதவு - துவைத்ததுகில்

ஈரம் துடைக்க என ஈந்து மலர்ச்சந்தனமும்

ஓரிடத்தே நல்கிய ஒளி இலைகாய் சேர வைத்து

மேல் விசிறி வீசுவிப்பாய் மெல்லியலே"

                                                            (குடும்பவிளக்கு- விருந்தோம்பல்)

என்ற பாடல்வரிகளில் இலையை எப்படிப் போட வேண்டும் எப்படியெல்லாம் பரிமாற வேண்டும் என்று விளக்கமாகக் கூறுகிறார்.    தண்ணீரையும், வெண்ணீரையும் தனித்தனியே வைத்துக் கொள்ளவேண்டும். சாப்பாடு போடும் முன் மிக இனிப்பு வகைகளை இலையிலிட்டு,முக்கனியை தேனிலும் நறுநெய்யிலும் மூழ்கிஎடுத்து வைத்து வேண்டும்.        வீட்டிற்கு வந்துள்ள விருந்தினருக்கு சாப்பிடும் போது உணவுப் பொருட்களைக் கேட்பதற்குக் கூச்சமாக இருக்கும் அதனால் பரிமாறும் போது உணவைப் பரிமாறிவிட்டு அங்கேயே நின்று உணவிட வேண்டும்.விருந்தோம்பலின் முக்கியப்பண்பு உணவைப் பரிமாறுதலாகும்.    கெஞ்சியும், மிஞ்சியும் அவர்களைச் செல்லமாக மிரட்டியும் விருந்தினருக்கு பிடித்தவற்றையே பரிமாறவேண்டும்.

உணவு உண்டபின் அவர்கள் கைக்கு தண்ணீர் எடுத்துக் கொடுக்கவேண்டும்.கையில் உள்ள நெய் பசைஅகற்ற சோப்பும்,ஈரத்தைத் துடைக்க  துவைத்தத் துணியும் கொடுக்கவேண்டும்  என்று இவையாவும் விருந்தோம்பலின் இலக்கணமாக பாரதிதாசன் குறிப்பிடுகிறார்

முடிவுரை:-

தமிழர்கள் உலகிற்கு பல பண்பாடுகளை அறிமுகம் செய்து வைத்தார்கள். அவற்றில் ஒன்று விருந்து. முன்பின் அறியாதவர்களாகிய விருந்தினர்களின் முகம் மலர்வதைக் கண்டு அகம் மகிழ்ந்தவர்கள் தமிழர்கள்.

விருந்து உபசாரத்தின் பெருமை தரப்படும் பொருளைப் பொறுத்ததல்ல. தருகிறவர் மனதைப் பொறுத்தது. கொடுப்பது எதுவானாலும் மனம் குளிர்ந்து, முகம் மலர்ந்து தருதல் வேண்டும் என்பதே விருந்தோம்பலின் தலையாய பண்பாகும். 

தமிழகத்தில் விருந்தோம்பும் பண்பு பன்னெடுங்காலமாக இருந்து வருகிறது. தமிழ் மக்கள் தங்கள் வீட்டிற்கு வரும் விருந்தினர்களை இன்முகத்துடன் வரவேற்று உபசரிப்பதில் அவர்களுக்கு நிகர் வேறுயாரும் இல்லை.

துணை நூற்பட்டியல்:-

1. அரசு (உரை.ஆ),படிக்காசு புலவர்,தண்டலையார்சதகம், திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் லிமிடெட், சென்னை

2. இளம்பூரணர் உரை, தொல்காப்பியம் பொருளதிகாரம் ,திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் லிமிடெட், சென்னை,1953.

3. சீவகசிந்தாமணி இரண்டாம் தொகுதி,வர்த்தமானன் வெளியீடு, சென்னை,  2016.

4. நாகராசன்.வி. (உரை.ஆ) பத்துப்பாட்டு மூலமும் உரையும், முதல், இரண்டு தொகுதி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பிரைவேட்) லிமிடேட் சென்னை, 2004

5. பாலசுப்பிரமணியன்.கு.வை (உரை.ஆ) நற்றிணை மூலமும் உரையும் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பிரைவேட்) லிமிடேட் சென்னை, 2004

6. பாலசுப்பிரமணியன்.கு.வை (உரை.ஆ) புறநானூறு மூலமும் உரையும், நியூ செஞ்சுரி   புக் ஹவுஸ் (பிரைவேட்) லிமிடேட் சென்னை, 2004.

7. பாவேந்தர் பாரதிதாசன்,   குடும்பவிளக்கு, முல்லைப்பதிப்பகம், சென்னை.

8. புலியூர் கேசிகன் தெளிவுரை, கலிங்கத்துப்பரணி, பாரிநிலையம், சென்னை, 2004.

9. பூவண்ணன், கம்பராமாயணம் மூலமும் தெளிவுரையும் தொகுதி 1, 2,3,4,5,6,7,8. வர்த்தமானன் வெளியீடு, சென்னை, 2011.

10. மாணிக்கம்.அ. விவேகசிந்தாமணி, மணிவாசகர் பதிப்பகம், சென்னை,   2006.

11. விசுவநாதன்.அ,(உரை.ஆ) கலித்தொகை மூலமும் உரையும், நியூசெஞ்சுரி புக் ௳றவுஸ் (பி) லிட், சென்னை,2004

12. ஸ்ரீசந்திரன்.ஜெ. பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் தொகுதி 1,2,3,  தமிழ் நிலையம், சென்னை,2007.