ஜூலை 2024 இதழுக்கு ஆய்வுக்கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன

கைவல்ய  நவநீதத்தில் பிரம்மம் பற்றிய கருத்தியல்கள்

முனைவர். சயனொளிபவன். முகுந்தன், சிரேஷ்ட விரிவுரையாளர், இந்து நாகரிகத்துறை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம். இலங்கை  27 Jul 2021 Read Full PDF

முனைவர். சயனொளிபவன். முகுந்தன், சிரேஷ்ட விரிவுரையாளர், இந்து நாகரிகத்துறை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம். இலங்கை 

 ஆய்வுச் சுருக்கம்

அத்வைத வேதாந்த சிந்தனைகளைத் தமிழில் பிரதிபலிக்கும் வகையில்  தோற்றம் பெற்ற பனுவல்களில் முக்கியத்துவம் பெற்றுத் திகழ்வது கைவல்ய நவநீதம் ஆகும்.விஜயநகர மன்னர் காலத்தில் வித்தியாரண்யரின் செல்வாக்குடன் தமிழகத்தில் நுழைந்த விவரணச் சிந்தனைப் பள்ளிக்குரிய முக்கியமான தமிழ் வேதாந்தப் பனுவலாக இது அடையாளப்படுத்தப்படுகிறது. இதை இயற்றியவர் கி.பி. 15ஆம் நூற்றாண்டின் முற்கூற்றில் வாழ்ந்த தாண்டவராய சுவாமிகளாகும்.இருநூற்றுத் தொண்ணூற்றுமூன்று விருத்தப்பாக்களில் அத்வைத வேதாந்தத்தின்  அத்துணை கருத்தியல்களையும் மிகுந்த தர்க்க இயைபோடு அழகு தமிழில் தாண்டவராயர் இப்பனுவலில் பதிவு செய்துள்ளார்.வேதாந்தக் கொள்கைகள் யாவற்றுக்கும் அடிநாதமாகத் திகழ்பவை உபநிடதங்களாகும். உபநிடதங்களில் உரையாடல் முறைமையே தத்துவ ஆராய்ச்சிக்குரிய எடுத்தியம்பல் வடிவமாக அமைந்திருந்தது.  கைவல்ய நவநீதத்தின் எடுத்தியம்பல் முறைiமையும் குரு – சீட உரையாடல் மூலமே கட்டமைக்கப்பட்டுள்ளது. அத்வைதம் அடிப்படையில் ஒருமைவாதத்தைச் சாதிப்பதாகும். பிரம்மத்தின் இருமையற்றநிலை, உலகத்தின் உண்மையற்றநிலை, பிரம்மத்திலிருந்து ஆன்மா வேறுபடாதநிலை என்பதே அத்வைதம் சாதிக்கமுயலும் அடிப்;படைக் கருத்தியல்களாகும்.சுத்த சைதன்யவஸ்தாகிய (அறிவே சொரூபமான) பிரம்மத்தின் இருமையற்ற நிலையைச் சாதிப்பதற்காக அத்வைதமரபில் பிரதிவிம்பவாதம், அவச்சேதவாதம், ஆகிய வாதங்கள் முன்வைக்கப்படுகின்றன. அதுபோன்று உலகத்தின் உண்மையற்ற தன்மையைச் சாதிப்பதற்காக விவர்த்தவாதத்தை அத்வைதிகள் முன்வைப்பர். இவற்றைக் கைவல்ய நவநீதத்திலும் மிகத் தெளிவாகத் தாண்டவராயர் கையாண்டுள்ளார்.

திறவுச்சொற்கள்: அத்வைதவேதாந்தம் , பிரம்மம் , பிரதிவிம்பவாதம் அவச்சேதவாதம் ,    

அறிமுகம்:

அத்வைத வேதாந்தம் என்பது ஆதிசங்கரரோடு தொடங்கி அவருடனே நிறைவுபெற்ற ஒரு தத்துவக்கோட்பாடு அன்று. அது உபநிடதங்களில் வித்தூன்றப்பட்டு பிரம்ம சூத்திரத்தில் வேரூன்றி மாண்டூக்யகாரிகையில் துளிர்விட்டு ஆதி சங்கரரின் ஆளுமையால் விருட்சமாகியது. 

ஆதிசங்கரருக்குப் பின்னர் அவரின் புகழ் பெற்ற சீடர்களான பத்மபாதர், சுரேஷ்வரர் மண்டன மிசிரர், வாசஸ்பதி மிஸ்ரா ஆகிய நான்கு அறிஞர்களால் அத்வைதம் தனது கிளைகளை அகல விரித்தது எனலாம். 

இவற்றுள் விவரணச் சிந்தனைப்பள்ளி, பாமதிச் சிந்தனைப்பள்ளி ஆகிய இரண்டு அத்வைதச் சிந்தனைப் பள்ளிகள் முதன்மையானவை எனலாம். ஆதிசங்கரரின் நேரடி மாணாக்கரான பத்ம பாதரால் எழுதப்பட்ட பஞ்ச பாதிகை என்ற நூலை அடியொற்றியது விவரணச் சிந்தனைப் பள்ளியாகும். 

ஆதிசங்கரரின் பிரம்ம சூத்திரபாடியத்திற்கு வாசஸ்பதி மிஸ்ரா ஒரு விவரணத்தை எழுதினார். அதுவே “பாமதி” என்கிற புகழ்பெற்ற பனுவலாகும். இப்பனுவலை அடியொற்றி வளர்ந்த சிந்தனாகூடமே பாமதிச் சிந்தனைப் பள்ளியாகும்.

தென்னாட்டில் குறிப்பாகத் தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் விவரணச் சிந்தனைப் பள்ளியின் செல்வாக்கே பெரிதும் நிலைபெற்றிருந்தது. தமிழில் கி.பி. 14ம் நூற்றாண்டிற்குப் பின்னர் தோற்றம் பெற்ற வேதாந்திகளில் தத்துவராயர், தாண்டவராயர், பாம்பன் சுவாமிகள் வீரையாளவந்தார், ரமணமகரிஷி போன்றோர் முக்கியமானவர்களாவர். இவர்களாலும் இவர்களை அடியொற்றிய இன்னபிறராலும் தமிழில் அநேக வேதாந்த பனுவல்கள் இயற்றப்பட்டன.

 

தத்துவராயரின் வேதாந்த அடங்கன் முறை எனப்படும் 18 நூல்களும் தாண்டவராயரின் கைவல்ய நவநீதமும், வீரை ஆளவந்தாரின் ஞானாவசிட்டமும் ரமணமகரிசியின் ஏகான்மவாதம் பஞ்சகம், உபதேச உந்தியார், ஆத்தும போதம் போன்ற நூல்களும் தமிழ் வேதாந்தப் பனுவல்களுக்குச் சிறந்த எடுத்துக்காட்டுகளாகும்.  

கைவல்ய  நவநீதம்

அத்வைதவேதாந்தத்தின் அடிப்படைகளை விளக்கும்வகையில் தமிழில் எழுச்சி பெற்ற பனுவல்களில் மிகப் பிரதானமாக மூலமாக கைவல்ய நவநீதத்தின் வகிபங்கு பிரதானமாதாகும்.  திகழ்கின்றது. கைவல்யம் என்பது பிரம்மத்தின் உண்மையைத் தெளிவாக விளங்கவைத்தல் எனப் பொருள்விளக்கமுறும்.

நவநீதம் என்றால் வெண்ணெய் ஆகவே வேதாந்த மெய்ப்பொருளை வெண்ணெய்போலத் திரட்டி வழங்குவது என்பதே இதன் விளக்கமாகும். 

“படர்ந்த வேதாந்தம் என்னும்  பாற்கடல் மொண்டு முன்னூல்

குடங்களில் நிறைத்து வைத்தார்  குரவர்கள், எல்லாம் காய்ச்சிக்  

             கடைந்தெடுத்து அளித்தேன் இந்தக்கைவல்யநவநீ  

             தத்தை......................”       (கைவல்யநவநீதம், பாயிரச் செய்யுள் 06.)

என்ற பாயிரப் பாடலில் இந்நூற் பெயருக்கான விளக்கத்தையும் நூற்பொருளின் சாரத்தையும் அது எழுச்சி பெற்றமைக்கான பின்புலத்தையும் இந்நூலின் ஆசிரியரான தாணடவராய சுவாமிகள் சூசகமாகப் புலப்படுத்தியுள்ளமை கவனிக்கற்பாலது.

பரந்து விரிந்த உபநிடதங்களின் ஆராய்சிக்குரிய ~~வேதாந்தம் என்னும் பாற்கடல்” என்றும் அப்பொருள் மரபை அடியொற்றிக் கௌடபாதர், ஆதிசங்கரரர் சுரேசுவர் உட்பட்ட வேதாந்திகளின் கருத்துருவாக்கங்களை அப்பாற்கடலில் இருந்து முகந்து குடங்களில் நிறைக்கப்பட்ட பாலாகவும் அப்பாற்குடங்களில் இருந்த பாலைக் காய்ச்சிக்  கடைந்தெடுத்துப் பெறப்பட்ட வெண்ணெயே  (நவநீதம்) தனது நூலென்றும் தாண்டவராய சுவாமிகள் சுட்டியுள்ளார்.

நூலின் ஆசிரியரும் நூற்கட்டமைப்பும்

கி.பி.1409இல் சோழ நாட்டிலுள்ள நன்னிலம் என்ற ஊரில் பிறந்த தாணடவராயர் என்பவரே  கைவல்;ய நவநீதத்தின் ஆசிரியராவார். இவர் தனது ஊரில் வேதாந்த விற்பன்னராகத் திகழ்ந்த “நாராயண குரு” என்பவரிடம் உபதேசம் பெற்றார். தென்னாட்டில் வேதாந்த மரபினைச் செழிப்புறச் செய்த விவரணச் சிந்தனைப்பள்ளிக்குரியவரான வித்தியாரண்யரின் பிரதம சீடரே “நாராயணகுரு” என்பது குறிப்பிடத்தக்கது.

கைவல்ய நவநீதம் விருத்தப்பாக்களால் ஆக்கப்பட்டது. எல்லாமாக இருநூற்றுத்தொண்ணூற்று மூன்று விருத்தங்கள் உள்ளன. இவற்றுள் எழுசீர் விருத்தங்கள் பத்தும், எண்சீர் விருத்தங்கள் பதினொன்றும் நீங்கலாக ஏனையவை யாவும் அறுசீர் விருத்தங்கள் ஆகும். இந்நூல் மூன்று பிரிவுகளை உடையது. அவையாவன பாயிரம் (ஏழு பாடல்கள்) தத்துவ விளக்கப்படலம் (நூற்றொரு பாடல்கள்,) சந்தேகம் தெளிபடலம் (நூற்று எண்பத்தைந்து பாடல்கள்) என்பனவாகும்.

பொருள்மரபில் மட்டுமன்றி அமைப்பு முறையிலும் உபநிடதமரபினைத் தழுவியதாகக் குரு சீட உரையாடல் வடிவத்தில் இந்நூல் கட்டமைக்கப்பட்டுள்ளது. ஒரு விருத்தத்தின் முதல் இரண்டு அடிகள் சீடனின் ஐயவினாவாக அமையப் பின்வரும் அடிகள் குருவின் விளக்கமாக அமைகின்றன. பல சந்தர்ப்பங்களில் ஒரு விருத்தப்பா முழுமையும் சீடனின் வினாவாகவும் அதனைத் தொடர்ந்து வருகின்ற ஒன்றுக்கு மேற்பட்ட விருத்தங்கள் ஞானகுருவின் விளக்கங்களாகவும் அமைகின்றன. 

 

கடவுள் வாழ்த்திலும் அத்வைதப் பிரம்மம்:

அத்வைதிகள் குணம் குறிகளோடு கூடிய ஈஸ்வர நிலையை அதி உன்னதாமானதாகக் கருதுவது கிடையாது. சுத்தசைதன்யம் எனப்படுகின்ற பரிபூரண அறிவாகிய பிரம்மம் நாமரூபங்களையும் காலதேசங்களையும் கடந்தது. அந்தவகையில் நிர்க்குணமே பிரம்மத்தின் இயல்பு என்பதே ஆதிசங்கரரர் உள்ளிட்ட அத்வைதிகளின் முடிவாகும். சகுண நிலை என்பது ( சக – குணம்) மாயையின் சேர்க்கையால் விளைவதாகையால் அதனை அத்வைதிகள் உயர்வாகக் கருதுவதில்லை.

தாண்டவராயர் நூற்பாயிரத்தின் முதல் ஐந்து பாடல்களில் சுத்த சைதன்ய வஸ்தாகிய பரப்பிரம்மத்தையே போற்றியிருப்பது கண்கூடு. குறிப்பாக இரண்டாம் பாடலில் மும்மூர்த்திகளுக்கும் மேலான பரம்பொருளாகிய சுத்தசைதன்யத்தை பணிகின்றேன் எனப் போற்றுவதும் இதுபோலவே நான்காவது பாடலில் தன்னைப் பிரமத்திலிருந்து வேறு படுத்தி உணர வைக்கின்ற அந்தக்கரணங்கள், ஞான, கன்மேந்திரியங்களின் தன்மையை உரைத்து அவற்றைத் தவிடு பொடியாக்கித் தானே பிரமம் என உணர வைக்கவல்ல. ஞானாசிரியனைப் போற்றுவதும் கவனிக்கத்தக்கது. 

“என்னுடைய மனது புத்திஇந்திரிய சரீரம் எல்லாம்    

                          என்னுடைய அறிவினாலேஇரவிமுன் இமமே யாக்கி

என்னுடை நீயும் நானும்ஏகமென்(று) ஐக்கியஞ் செய்ய

என்னுடைக் குருவாய்………………”    

                                                                                        ( கைவல்யநவநீதம் செய்யுள்.05.)

உள்பொருள் ஒன்றே என்பது:

அத்வைதம் எப்பொழுதும் இருப்பு நிலையில் ஒரு பொருள் மட்டுமே உண்மை என்பதை சாதித்துள்ளது. ஒருமை வாதம், கேவலாத்வைதம், ஏகான்மவாதம் முதலிய காரணச் சிறப்புப் பெயர்களால் அத்வைதம் சுட்டப்பட்டதற்கான அடிப்படையும் இதுவேயாகும். 

“குணப்பொருளாம் பிரம்மம் ஏகம்    அன்ன பொருள் ஒருமையறிந்து….”                                                                                                     

                                                                                                (கைவல்யநவநீதம் செய்யுள்.246.)               

“தானன்றி வேறொன்றுமில்லாத பூரணம்” (கைவல்யநவநீதம் செய்யுள் 215)

 

  “எல்லையின் ஆம் எப்போதும்  ஏகம் என்று இருந்திடாயே”       

                                                                                                                  (கைவல்யநவநீதம் செய்யுள் 107)

 

“நித்தமும் அது நீயாகும் நீயதுவாகும் என்னும் 

  அர்த்தமும் அகண்டம் என்றே அசிபத ஐக்கியம் காட்டும்” 81

                                                                                                 (கைவல்யநவநீதம் செய்யுள்.81.)

என்றவாறு கைவல்ய நவநீத ஆசிரியரும் தனது பனுவலில் பல்வேறு சந்தர்ப்பங்களில் அத்வைதத்தின் ஒருமைவாத நிலைப்பாட்டினை வலியுறுத்தத் தவறவில்லை. 

பிரம்மத்தை வர்ணிக்க இயலுமா?

உபநிடதங்களில் எழுப்பப்பட்ட இக்கேள்விக்கு முடியாது, இயலாது (நேதி நேதி) என்ற புகழ்பெற்ற பதிலே ஞானாசாரியார்களால் தரப்பட்டுள்ளது. அத்வைத வேதாந்த மரபும் இதனையே பின்பற்றி எதிர்நிலை யுக்தி மூலம் பிரம்மத்தின் இயல்பைச் சித்திரித்துள்ளது. கைவல்ய நவநீதமும் இதற்கு விதிவிலக்கன்று. 

  சலனம் இன்மையும் அஞ்சனம் இன்மையும்   பிரமேயம் இன்மையும், ரூபம் இன்மையும்அணு இன்மையும், குணம் இன்மையும்,  பிறப்பின்மையும், முடிவின்மையும் அவயவம்      இன்மையும், சரீரம் இன்மையும் விகாரம் இன்மையும் இருமை இன்மையும் என்று      சொல்லப்பட விலக்கு நாமங்களும் அனேகம்  உள்ளனவாம்.

                                                                                          என்ற பொருள்தருகின்ற

    “அசலம் நிரஞ்சனம் அமிர்தம் அப்பிரமேயம் விமலம்

     வசனாதீதம்,  அசடம் அநாமய அசங்கம்;………..

     அசரீரம் அவிகாரம் அத்துவிதம் எனவிலக்கும் அநேகம் உண்டே”  

                                                                                                (கைவல்யநவநீதம் செய்யுள்.12)         

 

                            மேற்படி பாடல் இதற்குத் தக்கசான்றாகும்.

 

பிரம்மத்தின் ஏகத்துவத்தைச் சாதிப்பதற்கான அடிப்படை விவாதங்கள்:

பிரம்மம் மட்டுமே உண்மைப் பொருள் என்பதை நிறுவுவதே கைவல்ய நவநீதத்தின் முக்கிய நோக்கமாகும். அந்தவகையில் ஜீவத்மன் என்பது பிரமத்திலிருந்து வேறான ஒன்றல்ல என்பதனை வலியுறுத்துகின்ற தாண்டவராயர் அதற்காகப் பிரதிவிம்பவாதம் அவச்சேத வாதம் ஆகிய அத்வைத வாதங்களைத் தனது கைவல்ய நவநீதத்தில் தெளிவாக முன்வைத்துள்ளார்.

பிரதி விம்பவாதம்:

மூலப்பொருள், அதன்பிரதிபலிப்பால் தோன்றுகின்ற மூலப்பொருளின் நகல் (அூது பிரதிவிம்பம்), பிரதிபலிப்பு நிகழ்வதற்கான ஓர் ஊடகம் (மேற்பரப்பு) ஆகிய மூன்று கூறுகள் இவ்வாதத்திலே சம்பந்தமுறுகின்றன.

மூலப்பொருளின் நகலாகத் தோன்றுகின்ற பிரதிவிம்பத்தில் மூலப்பொருளின் இயல்பொற்று காணப்படினும் அது பிரதிபலிக்கின்ற ஊடகத்தின் பண்புக்கேற்றவகையில் சில புதிய தன்மைகளையும் அப்பிரதிவிம்பம் கொண்டிருக்கும்.

எடுத்துக்காட்டாக சமுத்திர அலைகளில் தெரியும் சந்திரவிம்பத்திற்கும், கலங்கிய சிறு குட்டையில் தெரிகின்ற சந்திரவிம்பத்திற்கும், கிணற்றுக்குள் தெரிகின்ற சந்திரவிம்பத்திற்கும் இடையில் உள்ள வேறுபாடுகளைக் குறிப்பிடலாம். அலைகின்ற நீரில் தெரியும் சந்திரன் அலைவதுபோல் காட்சிதரும். சேற்றுக்குட்டையில் தெரியும் சந்திரனின் பிரதிவிம்பமானது கலங்கியது போல் தெரியும். இங்கே பிரதிவிம்பங்களின் இந்த வேறுபட்ட காட்சி புலப்பாட்டிற்கு ஊடகத்தின் செல்வாக்கே காரணமாயமைந்துள்ளது. 

அது போலவே பிரம்மத்தின் பிரதிபலிப்பாகத் தோன்றினும் ஜீவன்களில் உபாதிகள் காரணமாக வியவகார நடைமுறை வாழ்வில் பல அம்சங்கள் தொற்றிக்கொள்கின்றன. இவற்றின் காரணமாக ஜீவன்கள் பல்வேறு செயல்களில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டது போலத் தோன்றும். ஆனால் உண்மையில் அவையாவும் உபாதிகளால் நேர்ந்ததாகையால் அவற்றின் பயன்கள் யாவும் உபாதிகளைச் சேருமேயன்றிப் பிரம்ம சொரூபமான சீவனைப் பாதிப்பதில்லை. 

நீர் நிலைகளில் அல்லது நீர் நிரம்பிய பாத்திரத்தில் நீர் வற்றியவுடன் சந்திரனின் பிரதிவிம்பங்கள் மறைவதுபோல பிரம்மத்தின் பிரதிபலிப்பிற்கு ஊடகமாக விளங்கும் ஜீவன்களின் உபாதிகள் நீங்குகின்ற பொழுது அவையாவும் ஏகத்துவமான பிரம்மமே உண்மையானது என்ற யதார்த்தம் உணரப்படும். இதுவே அத்வைதம் கூறுகின்ற விம்பப் பிரதிவிம்ப வாதத்தின் அடிப்படை விளக்கமாகும். அத்வைத மரபினைப் பொறுத்தவரையில் சூரியன், சந்திரன் இரண்டும் இவ்வாதத்தினை விளக்கும் வகையில் எடுத்தாளப்பட்டன. 

“சட்டிக் குடங்களில் ஒன்று நசித்திட அதனுள் சல சந்திரன்

ஒட்டு முதற் சந்திரனோடு கூடும் ஒழிந்தவை கூடாவே

கட்டும் உபாதி நசித்திடு சீவன் காரண ஆண்மாவில்

 கிட்டும் ஐக்கியம், உபாதி கெடாதவர் கேவலம் ஆகாரே” 

                                                                       (கைவல்யநவநீதம் செய்யுள்.147.)         

சட்டி, குடம் முதலியவைகளில் ஒன்று உடைக்கப்படும் போது அதனுள் தெரிந்துகொண்டிருந்த பிரதிவிமபச் சந்திரனானது தான் பொருந்துததற்குரிய மூல சந்திரனைச் சாரும். ஏனைய பாத்திர்ங்களில் தெரிகின்ற பிரதி விம்ப சந்திரர்கள் அங்ஙனம் ஏகாமாகக் கூடாவாம். அதுபோலவே பந்தித்திருக்கும் அறியாமை நீங்கப்பெற்ற சீவனே தனக்கு ஆதாரமான பிரம்ம சொருபத்தில் ஐக்கியப்படும் உபாதி நீங்காத ஜீவன்கள் கைவல்யமாகிய ஏகத்துவ நிலையை உணரமாட்டார்கள் என்பதே இப்பாடலின் விளக்கமாகும்.

“அகம் எனும் ஆன்மா பூரணம் ஏகம்  அநேக விதஞ் சீவன்

     அகமெனும் அந்தக் கரண உபாதிகள்”        146

                                                                  (கைவல்யநவநீதம் செய்யுள்.146.)         

அவச்சேத வாதம்:

பூரணத்தை கூறிட முனைந்தால் அக்கூறும் பூரணமே என்கிற தர்க்கத்தின் வெளிப்படுகையே அவச்சேதவாதமாகும். வரம்பற்ற வெளியை தடுப்புக்களையிட்டு சேதப்படுத்திச் சிறைப்படுத்த முனையும் போது அத்தடுப்புக்களால் அடைக்கப்பட்ட “வெளி” யானது சூழ்ந்துள்ள பெருவெளியின் கூறேயன்றி வேறல்ல. தடுப்புக்கள் நீங்கும் போது ஏகத்துவமானது பரவெளியே என்ற உண்மை புலனாகிறது. 

இதுபோலவே ஏகப் பொருளாகிய பிரம்மமாகிய ஏகாத்துமாவே உடல், மனம் முதலிய வரம்பிற்குட்பட்ட உபாதிகளால் தானும் எல்லைக்குட்பட்டதாக எண்ணத்தோன்றுகிறது.பிரம்ம ஞானம் ஏற்படுகின்ற கணத்தில் பிரம்மத்தின் ஏகத்துவம் உணரப்படுகிறது. இதனையே அத்வைதிகள் அவச்சேதவாதத்தில் வெளி / ஆகாயம் என்ற எடுத்துக்காட்டின் மூலம் விபரிக்க முற்படுகின்றனர். 

வெளி/ஆகாயம் அளப்பரியது. வரம்பிகந்தது. எங்கும் வியாபகமானது எனவே அது மகாகாயம் (மகா ஆகாயம்) எனப்படுகின்றது. குடம், பானை, முதலிய உருவத்தடுப்புக்களில் உள்ளடங்கியுள்ள வெளி ஃ ஆகாயத்தினை குடாகாயம் என்பர். அடிப்படையில் மகாகாயமும் குடா காயமும் வேறல்ல. பானை, முதலிய தடுப்புக்கள் உடைக்கப்படும் போது இந்த உண்மை  தெளிவாகிறது. அதுபோலவே அவித்தையினால் ஏற்படும் உபாதிகள் நீங்கும் போது சீவன் பிரம்மம் என்ற வேறுபாடு நீங்கிய அத்வைத உண்மை உணரப்படுகின்றது. 

உபாதிகளால் சூழப்பட்டிருப்பினும் சீவனின் தன்னியல்பு நிலையில் எத்தகைய கேடும் ஏற்படுவதில்லை. அதன் விகாரப்படாத தன்னியல்பு நிலை தொடர்ந்தும் பேணப்படுகிறது. இதனை குடத்தினுள் உள்ள வெளி ஃ ஆகாயத்துக்கும் எந்த விகாரமும் ஏற்படாத தன்மையினை எடுத்துக்காட்டி அத்வைதிகள் விளக்குகின்றனர். குடத்தினால் சூழப்பட்டிருப்பினும் குடாகாயத்தின் தன்னியல்பில் எத்தகைய மாற்றமும் நிகழ்வதில்லை. அது உண்மையில் மகா காயத்தின் தன்னியல்பையே கொண்டுள்ளது. குடத்தின் சுவர்களால் ஏற்பட்ட தடுப்பு புறவயமானது, தற்காலிகமானது. அவித்தையால் தோன்றும் உபாதிகளால் ஆன்மாவிற்கு ஏற்படுவதும் இத்தகைய ஓர் தற்காலிக மறைப்பேயாகும், இதுவே சாஸ்வதமானதன்று. 

இவ்வாறாக அவச்சேதவாதத்தினை கட்டமைத்துள்ள அத்வைதிகள் இதன் மூலமும் ஏகான்மைவாதத்தை தெளிவாக வலியுறுத்த முற்பட்டுள்ளனர். 

கைவல்ய நவநீதத்திலும் அவச்சேதவாதத்தின் பயில் நிலையை சில பாடல்களில் அவதானிக்க முடிகிறது. 

“கடமென்னும் உபாதி போனால் ககனம் ஒன்றானார் போல 

உடலெனும் உபாதி போன உத்தரம் சீவன் முக்தர்”

                                                          (கைவல்யநவநீதம் செய்யுள்.106.)         

 

“விண் ஒன்றே மகாவிண் என்றும்  மேகவிண் என்றும் பாரில்

மண் என்ற கடவிண் என்றும் மருவிய சலவிண் என்றும்

எண்ணு கற்பனை போல் ஒன்றே எங்குமாம் பிரம்மம் ஈசன்

நண்ணும் கூடஸ்தன், சீவன் நான்கு சைதன்யமாமே.”  

 

                                                                                               (கைவல்யநவநீதம் செய்யுள்.65.)         

 

மேற்குறிப்பிட்ட அறுபத்தைந்தாம் பாடலில் தாண்டவராய சுவாமிகள் அவச்சேத வாதத்தினை சற்று அகலித்த பரிமாணத்தில் கையாண்டுள்ளார். பொதுவாகப் பிரம்மம் – ஜீவனின் வேறுபாடற்ற தன்மையினை விளக்குவதற்காகவே அத்வைத மரபில் அவச்சேதவாதம் கையாளப்பட்டது. ஆனால் பிரம்மம், ஈஸ்வரன், கூடஸ்தன், ஜீவன் என நான்கு கருத்தாக்கங்களை ஒரே தளத்தில் வைத்து விளக்குவதற்காக கைவல்ய நவநீதம் இதனைப் பயன்படுத்தியுள்ளது.

 

இவற்றுக்கிடையிலான வேறுபாடென்பது சற்றுச் சிக்கலானதும் நுண்ணியதுமாகும். உலகிற்கான காரணமாக ஈஸ்வரன் பார்க்கப்படுகிறது. அதாவது மாயையோடு தொடர்புபடுத்தி பிரம்மம் அறியப்படுகின்ற போது அது ஈஸ்வரன் எனப்படுகின்றது

இடம் போன்ற புற உலகப்பரிமாணங்களுக்கு ஈஸ்வரனே காரணமாவதாயும் சில அத்வைதப் பிரிவினர் வாதிடுவர். மாயையில் பிரம்மம் பிரதி பிம்பிக்கின்ற பொழுது அது ஈஸ்வரனாகின்றது. அவித்தையில் பிரதிபிம்பிக்கின்ற பொழுது அது ஜீவனாகின்றது. இது பதார்த்த விவரணம் எனும் அத்வைதப் பனுவலின் கருத்தாகும். எவ்வாறாயினும் இதற்கு முரண்பட்ட சிந்தனைகளும் அத்வைதிகளிடையே உள்ளன. எடுத்துக்காட்டாக சம்ஷேப சாரீரத்தை எழுதிய அத்வைத ஆசான் ஒருவர் அவித்தையில் பிரம்மம் பிரதிபிம்பிக்கின்ற பொழுது ஈஸ்வரனாகும் என்றும் அந்தக் கரணத்தில் பிரம்மம் பிரதிபிம்பிக்கின்ற பொழுது ஜீவனாகும் என்றும் குறிப்பிட்டுள்ளார். அத்வைதத்தின் விவரணச் சிந்தனைப் பள்ளியைச் சேர்ந்த முக்கிய சிந்தனையாளர்களின் நிலைப்பாடு வேறொரு வகையில் அமைந்துள்ளது. இவர்கள் ஈஸ்வரனையும் ஜீவனையும் பிரம்மத்தின் பிரதிவிம்பம் “மூலமாதிரி” என்றும் கருதுவர்.

அடுத்து ஜீவன் கூடஸ்தன் என்ற இரண்டு கருத்தாக்கங்களிடையிலான வேறுபாட்டை நோக்கலாம். கூடஸ்தன் என்னும் சொல்லிற்கு கூடம் அல்லது உச்சியில் விளங்குவது அல்லது உயரத்தில் இருப்பது என்பது நேரடியான பொருள் விளக்கமாகும். சங்கரரிற்குப் பிற்பட்டகால அத்வைதச் சிந்தனை மரபில்”கூடஸ்தன்”பற்றிய பல்வேறு நிலைப்பட்ட கருத்து விளக்கங்கள் உள்ளன. இவற்றுள் பல ஒன்றிலிருந்து ஒன்று கடுமையான முரண்நிலை உடையன. எவ்வாறாயினும் கூடஸ்தன் தொடர்பான ஒரு மேலோட்டமான விளக்கத்தைப் பின்வருமாறு குறிப்பிடமுடியும். 

கூடஸ்தன் என்பது ஜீவனின் ஒரு நிலையேயாகும் உண்மையில் இது “சித்” என்கிற உணர்வு நிலையாகும். இவ்வுணர்வு ஜீவனைவிட மேம்பட்டது. இதனை சாக்ஷி என்பர். இது ஜீவனுக்குள்ளேயே அமையினும் ஜீவனைவிட உன்னதமான நிலையாகும். இதனைப் பிரக்ஞை எனவும் வழங்குவர். இதுகாரண ஆற்றல் அற்றதாகும்.

எனவே பிரம்மம், ஈஸ்வரன், கூடஸ்தன் ஜீவன் என்கிற நான்கு பொதுமையான கருத்தமைவுகளையும் அத்வைத மரபு ஆழமாகச் சிறப்பி;த்து ஆராய்ந்துள்ளது. கைவல்ய நவநீத ஆசிரியரும் முற்குறிப்பிட்ட பாடலில் (பாடல் 65) இவை நான்கையும் அவச்சேதவாதத்தில் வைத்து ஒரு பாடலிலே விளக்கியுள்ளமை நயக்கற்பாலது. 

ஆகாசம் ஒன்றாய் இருந்தும் அது உபாதியினால் மகாவிண் என்றும் மேகவிண் என்றும் கடஆகாசம் என்றும் அக்கடத்துள் வார்க்கப்படும் ஜல ஆகாசம் என்றும், நால் வகையாக வர்ணிக்கப்படுவது போல ஏகமான சுத்தசைதன்யமே பிரம்மம் ஈஸ்வரன், கூடஸ்தன், ஜீவன் என நால்வகையாக அறியப்படுகிறது என்பதே அப்பாடலின் விளக்கமாகும்.

அவச்சேதவாதத்தினை அத்வைத மரபுக்கு அறிமுகஞ்செய்தவர் வாசஸ்பதிமிஸ்ரா ஆவார். (கி.பி. 840 – 900) இவர் நீங்கலாக ஏனைய அத்வைத சிந்தனையாளர்கள் அனேகர் பிரம்மம், ஈஸ்வரன் கூடஸ்தன் ஜீவன் ஆகிய நான்கையும் விளக்குவதற்கு பிரதிவிம்பவாதத்தையே எடுத்தாண்டுள்ளனர். ஆனால் கைவல்ய நவநீத ஆசிரியரான தாண்டவராயரோ தனது தனித்தன்மையை நிரூபிக்கும் விதத்தில் அவச்சேதவாதத்தில் வைத்து இந்நான்கு விடயங்களையும் விளக்கியுள்ளார். குறிப்பாக அவர் கையாண்ட எடுத்துக்காட்டுக்கள் கருத்தூன்றி நோக்கப்படவேண்டியவையாகும். 

(மகாவிண் – பிரம்மம்)(மேகவிண் – ஈஸ்வரன்)(குடவிண் – கூடஸ்தன)

(குடத்துள் உள்ள ஆகாசம் / வெளி)

குடத்துள் ஊற்றப்பட்ட நீர்மூலக்கூறுகளிடையே உள்ள வெளி / விண் ஜீவன்

இங்கே எடுத்தாளப்பட்டுள்ள உவமைகளில் வெளியின் சுயாதீனப்பண்பு இறங்குவரிசையில் அமையும் வண்ணம் ஆசிரியர் செய்யுளமைத்துள்ளமை அவதானிக்கப்பட வேண்டியதாகும். இதன்மூலம் தாணடவராயர் தான் விளக்கமுற்பட்ட நான்கு விடயங்கள் தொடர்பான நுட்பமான புரிதலுக்கு வழிதிறந்துள்ளார். 

கூடஸ்தன் என்ற சொல்லுக்குப் பதிலாகச் “சாட்சி” என்ற கலைச்சொல்லாடலும் கைவல்ய நவநீதத்தில் இடம்பெற்றுள்ளது. இது அத்வைத மரபில் “தத்துவசுத்தி” என்ற நூலில் மட்டும் இடம்பெற்ற ஒரு பதப்பிரயோகம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

“குடவானும் பெரியவானும்  கூடி ஒன்றாம் எப்போதும் 

இடமான பிரமம், சாட்சி  இரண்டும் எப்போதும்………………”

 

                                                   (கைவல்யநவநீதம் செய்யுள்.82.)         

 

பிரம்மமென உணர்தலே விடுதலை:

அத்வைதம் கூறும் விடுதலையென்பது எங்கேயோ சென்று அடையப்படுவதன்று. அது ஒவ்வொரு கூடஸ்தனிடமும் உள்ளது. ஆனால் அவன் அதனை உணர்ந்துகொள்ள முடியாதுள்ளது. 

அதாவது தானும் பிரம்மமும் வேறில்லை என்றுணரும் ஒருமை நிலையே அத்வைத ஞானமாகும். இதுவே விடுதலையாகும்.

 

அத்வைதஞானம் எய்தப்படுகின்ற நிலையில் அறிபவன்இ அறியப்படுபவன்இ அறிவு என்கிற மூன்றும் (திரிசிய வஸ்துக்கள்) ஒன்றாகிவிடுகின்ற யதார்த்தம் ஏற்படும். தத்துவஆராய்ச்சியில் அதிக முதன்மை அளிக்கபடுகின்ற மேற்படி மூன்று கூறுகளும் திரிபுடி நிலை கடந்து ஒரு புள்ளியில் சந்திக்கும் ஏனெனில் அத்வைத அனுபவம் என்பது ஆத்மா தானே பிரம்மம் என்று உணர்வதாகும். அத்வைத விளக்கப்படி பிரம்மம் என்பது பரிபூரணமான சுத்தசைதன்யம் அதாவது அறிவுமயமானது. 

எனவே இதன் பிரகாரம் 

(அறிபவன்) (அறியப்படுவது)

  

    ஆன்மா       பிரம்மம்

அறியப்பட உதவும் கருவி (அறிவு)

இங்கே அறியப்படுபொருளாகிய பிரம்மமே அறிவாக அமைவதானாலும் தானே பிரம்மம் என்று (அதாவது அறிவென்று) உணர்வதே அத்வைத அனுபவம். ஆதலாலும் இம்மூன்று கூறுகளின் இருப்பும் ஒரு புள்ளியில் அமைகிறது. 

“பிரக்ஞானம் பிரம்மம்” தத்  துவம் அஸி, அகம் பிரம்மாஸ்மி” ஆகிய மகாவாக்கியங்களின் உள்ளார்ந்த பொருண்மையும் இதுவேயாகும். இத்திரிபுடி ஞானத்தையே கைவல்யம் என்பர். இதனை கைவல்ய நவநீதம்

“அத்துவித ஆனந்தம் வரும் திரிபுடி போம்” என்றும்

                                  (கைவல்யநவநீதம் செய்யுள்.259.)            

“அறிபடும் பொருள் நீ அல்லை. அறிபடாப் பொருள் நீ அல்லை.

அறிபொருள் ஆகும் உன்னை  அனுபவித்து அறிவாய் நீயே”

                                                                               (கைவல்யநவநீதம் செய்யுள்.74.)

 

என்று குறிப்பிட்டுள்ளது.

தன்னைப் பிரம்மாக உணர்கின்ற நிலை அல்லது பிரம்ம வேறு தான் வேறு என்கிற இருமைப்பாடு நீங்கிய நிலையே அத்வைத அனுபவமாகும். 

  “நித்தமும் அது நீயாகும்   நீயது வாகும் என்னும்

அர்த்தமும் அகண்டம் என்றே  அசிபத ஐக்கியம் காட்டும்.”

                                                                                   (கைவல்யநவநீதம் செய்யுள்.81.)

என்ற பாடலில் தத்துவம் அஸி என்ற மகா வாக்கியப் பொருள் விளக்கமாக அத்வைத அனுபவத்தினை தாண்டவராய சுவாமிகள் எடுத்தாள்வது நோக்கற்பாலது.

 

இவ்வாறாக அத்வைதவேதாந்தம் கூறும் பிரம்மம் பற்றிய கருத்தியல்களின்  அடிப்படைகளைத் தெளிவாகப் பிரதிபலிக்கின்ற பனுவலாகக் கைவல்ய நவநீதம் விளங்குகிறது.

அடிக்குறிப்புகள்

1.வேலுப்பிள்ளை(உரை)(2002),தாண்டவராய சுவாமிகள், கைவல்யநவநீதம்  

     மூலமும் தெளிவுரையும்,சென்னை, பாரிநிலையம்.