ஜூலை 2024 இதழுக்கு ஆய்வுக்கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன

பிடுங்கி நடப்பட்ட நிலத்தில் முளைக்கத் துடிக்கும் உயிர்ப்பின் பச்சை.. (புகலிடக் கவிதைகளின் செல்தடம் குறித்த ஆய்வு)

பேரா.தெ.வெற்றிச்செல்வன், அயலகத் தமிழியல் துறை, தமிழ்ப்பல்கலைக்கழகம், தஞ்சாவூர். 27 Jul 2021 Read Full PDF

பேரா.தெ.வெற்றிச்செல்வன், அயலகத் தமிழியல் துறை, தமிழ்ப்பல்கலைக்கழகம், தஞ்சாவூர்.

ஆய்வுச்சுருக்கம்

மனித சமூகம் ஆதிகால அலைகுடி வாழ்விலிருந்து, நிலைத்த நவநாகரிக வாழ்வுக்கு வந்து சேர பல்லாயிரமாண்டுகள் கடந்து சென்றிருக்கின்றன. இருப்பினும் மீண்டும் அலைகுடி வாழ்வுபோல இயற்கைப்பேரிடர், பஞ்சம், சமூக இழிவு, போர் இப்படிப் பலவற்றின் காரணமாக உயிர்தப்பி புகலிடம் தேடி ஓடுதல் அவ்வப்போது வாய்த்தபடியேதான் இருக்கிறது. தமிழர்களும் இத்தகைய துயர்மிகு அனுபவத்துக்கு விதிவிலக்கல்ல. 1983 கருப்பு ஜூலைக்குப் பின், தமிழகதிகள் எனும் சொல்லாடல் இனத்துவப் போரில் பிறந்தது. 

திறவுச்சொற்கள்

மரபுத் தொடர்ச்சி, அலைகுடி, படைப்பு மனது, மொழிபெயர்தேயம், நிறவாதம்

முகவுரை:

கால்நூற்றாண்டு வரலாற்றைக் கடந்து, புதிய வாழ்நிலைத் தாக்கத்தாலும் புதிய எதிர்கொள்ளல் நெருக்கடிகளாலும் புதிதாக புகலிடக்கவிதைகள் முகிழ்த்தன. புதிய குளிர்ப்பாலை சார்ந்த கால நிலை முறிவு, புதிய பண்பாட்டு முறிவு, நிறவெறி, போரின் வடு, இழப்பின்வலி, தாய்மண் ஏக்கம், அந்நியமாதல், உளவளங்குன்றல் போன்ற பாடுபொருள்கள்… புதிய உருவகம், உவமை, படிமம், தொன்மம் , குறியீடு என புலப்பாட்டு முறைகள் இவற்றால் முற்றிலும் புதிய இலக்கிய வகைமையாக உலகத் தமிழிலக்கிய வரலாற்றின் கனதியான பக்கங்களில் புகலிடக் கவிதைகள் வேர்விட்டிருக்கின்றன.

ஆய்வு எல்லை

உலகின் பல நாடுகளிலும் இன்று தஞ்சம் புகுந்துள்ள தமிழ்த் தலைமுறை புதிய நிலம், புதிய மொழி, புதிய கால நிலை, புதிய பண்பாடு இப்படி எதிர்கொண்ட புதிய அனுபவங்களை வலியோடும் புதிய நெருக்கடியோடும் படைப்பாக்கம் செய்து பரவலாக்கி வருகிறது. குறிப்பாக, 

மேற்குலகிலிருந்து பெருவாரியாக இப்படியான கவிதைப்படைப்புகள் வந்தவண்ணமுள்ளன. அவற்றின் தொடக்க காலப் பொருளும் துலக்கமும் குறித்தே சேரன், தமிழ்நதி, அரவிந்த் அப்பாதுரை, தில்லை ஆகியோரின் ஆக்கங்களையும் சித்திரலேகா மௌனகுரு, சு. குணேஸ்வரன், பெருமாள் சரவணக்குமார், செல்லதுரை சுதர்சன் ஆகியோரின் பார்வைகளையும் கணக்கில் கொண்டு இக்கட்டுரை ஆய்கிறது.

1.

கடலலைகள் நினைவூட்டுகின்றன / சுற்றிவளைப் பொன்றில் / கொல்லப்பட்ட / என் பள்ளித் தோழர் நால்வரின் / கடைவாய் நுரையை” ….என்ற உருவகமோ, ”துண்டிக்கப்பட்ட தன் கையை / நாயிழுக்குமோ என்றஞ்சித் / தானெடுத்துப் போய்ப் புதைத்த மனிதனை” …என்ற படிமமோ தமிழ்க்கவிதையில் இதுகாறும் நம் முகத்திலறைந்து இப்படிப் பேசியதில்லை. போரும் வலிதரும் அனுபவமும் கவிஞர் தமிழ்நதியின் அதிர்வுதரும் சொல்லாடல்களைப் பிரசவிக்கின்றன..

குற்றவுணர்வுக்கும் மனசாட்சிக்கும் பதில் சொல்லவேண்டிய படைப்பு மனது அலைந்துழல்கிறது. “எந்தப் பாடையில் உலாபோக / இன்றிந்த மல்லிகை சொரிகிறதோ?” என்ற கேள்வி, ‘முல்லையும் பூத்தியோ ஒல்லையூர் நாட்டே’ என்கிற சங்கப் பனுவலின் அடியாக எழுந்த மரபுத்தொடர்ச்சியாக ஒக்கூர் மாசாத்தியாரின் வரிகளோடு தமிழ்நதி ஒருங்கிணைகிறார்.

படைப்பாளியின் மனிதம் உரத்துப் பேசவும் எழுத்தாயுதம் பிடிக்கவும் வேண்டி காட்சி பெறுகிறது. என்னதான் செய்வது. கள்ளங்கபடமற்ற குழந்தைமை ததும்பும் – மனிதம் ததும்பும் சிந்தனையும் சமநீதியும் - அமைதி வாழ்வும் திரும்பும் வரை ஓயமுடியாதல்லவா? இதைத்தான் வழிமொழிகிறார் தமிழ்நதி.

“மரணத்தின் மின்னஞ்சலை

ஒளித்துவைத்து வாசிக்கும்

இவ்வுடலின் வாதையெனை வெல்வதற்கிடையில்

முறைப்பாடுகளுடன்

வேண்டுகோள்களுடன்

கண்ணீருடன்

கதவு தட்டுவோரே 

இந்த நாளை எனக்கென விட்டுக்கொடுங்கள்

பொய்களின் கதகதப்பில்

கண்ணுறங்கிக் கொண்டிருந்த துரோகம்

சற்றுமுன்னர்தான் விழி திறந்தது

இன்றைக்கென்று இந்தச்சிறுமி

பாலகியாகி மடியமர அடம்பிடிக்கிறாள்

குழாயில் தண்ணிர் வரவில்லை

சமையல் வாயு தீர்ந்துபோயிற்று

தொலைபேசி வழியாகக்

கலவியை நோக்கி நகர்த்துகிறது

நண்பகலின் வெம்மை தகிக்குமொரு குரல்

என்னை எழுதவிடுங்கள்

வேம்பின் பச்சை விழி நிரப்பும்

இந்த யன்னலருகும்

கடல் விரிப்பும்

வாய்க்காது போகும் நாளை

இருப்பின் உன்னதங்கள் ஏதுமற்றவளிடம்

விட்டுச்செல்வதற்கு

என்னதான் இருக்கிறது

தான் கவிதையென நம்பும் ஒன்றைத்தவிர. 

2

எப்படிப் புணர்வது என்பதைப் பாம்புகளிடமும் / எப்படிப் புலர்வது என்பதைக் காலையிடமும் கேட்கலாம் / மொழியின் தனிமையிலிருந்து பிறப்பது என்ன என்பதை /  யாரிடம் கேட்கலாம்? என்று வினாஅடுக்குகளில் உறையும், கேள்விகள் அடுக்கி வரும் சேரனின் ‘கேள்’ கவிதையில் இந்தக் கேள்விக்கான விடையும் கிடைக்கிறது.

“கேள்…………………………………. 

முழுநிலவின் பாலத்தின் கீழ் உறைந்த பாற்கடலின்

பாடும் மீன்கள் எங்கே போய்விட்டன

என்பதைக் கார் காலத்திடம் 

மொழியின்தனிமையிலிருந்து பிறப்பது 

என்ன என்பதைத்

திசை தொலையப் புலம் பெயர்த்தவர்களிடம்”

(சேரன், நீ இப்பொழுது இரங்கும் ஆறு)

இப்படி ஈழத்துக்கவி சேரன் மொழிவழித் தனிமையின் கொடுந்துயர் பதிகிறார்.

இந்த மொழிவழித் தனிமையை உடைத்துக்கொண்டு புகலிடவாழ்வில் போராடி இளந்தலைமுறைக்குக் கல்வி கொடுக்கவேண்டியிருக்கிறது. மிகுந்த கவித்துவமும், தனித்துவமான சொல்லல் முறையும், சொற்களுக்கிடையேயான மௌனிப்புகளும், மௌனங்களைப் பிளக்கும் வெடிப்புறப் பேசல்களும், அரசியலும் அழகியலும் கூடி முயங்கப் பிறந்த உயிர்ப்பின் மலர்ச்சியுமாக உலகத்தமிழால் எல்லைகள் தாண்டியும் உச்சரிக்கப்பட்டவை சேரனது கவிதைகள் எனலாம்.

நீரற்றது கடல்

நிலமற்றது தமிழ்

பேரற்றது உறவு என்றும்

சிரித்தால் தெறிப்பது அவலம்

விழித்தால் விளைவது துயரம்

நடந்தால் கிடைப்பது நரகம் என்றும்

எல்லோரும் போய்விட்டோம் 

கதைசொல்ல யாரும் இல்லை

இப்பொழுது இருக்கிறது 

காயம்பட்ட ஒரு பெருநிலம் 

அதற்கு மேலாகப் பறந்து செல்ல 

எந்தப் பறவையாலும் முடியவில்லை 

நாங்கள் திரும்பி வரும் வரை (சேரன், காடாற்று, ப.13)      என்றும்

காட்சிப்படுத்தும் சேரனது கொலைக்காட்சி கவிதையும் இப்படியான போர்க்களக் காட்சியை வலிமையாக முகத்திலறைந்து பேசுகிறது.

பொய்மையும் வன்மம் சூழ் மாயக்காட்சிகளும் 

அவர்களுடைய படையெடுப்பில் 

புகையுடன் சோ்ந்து மேலெழுந்தபோது 

சொல் பிறழ்ந்து 

படிமங்கள் உடைந்தன 

வாழ்க்கை குருதி இழந்தது 

எறிகணை பட்டுத் தெறிக்கக் 

காயம்பட்ட 

இரண்டரை வயதுக் குழந்தையின் கைகளை 

மயக்க மருந்தின்றி அறுக்கின்ற மருத்துவன் 

இக்கணம் கடவுள் 

நீரற்ற விழிகளுடன் அலறும் தாய் 

ஒரு பிசாசு.

(சேரன்,காடாற்று, ப.15)

என, வலிதரும் அனுபவம் அதிர்வூட்டுகிறது. இதுதான் போரின் எதார்த்தம். 

வருங்காலத் தலைமுறைகள் மொழிபெயர்தேய வாழ்வில் அலைப்புறும் போது, மொழி வீழ்ந்துபடுமே எனும் கவலையை முன்வைக்கிறது இக்கவிதை.

ஒரு தலைமுறைக்கு முன்   

நாடு கடந்தார்கள்      

அடுத்த தலைமுறை      

மெல்ல மெல்ல மொழி இழக்கும்   

தருணத்தில்      

தீராப்பெருவலி எழுந்து எம்மை இணைக்கிறது 

பனி உதிர்ந்து காற்றுரையும் 

இரவுப் பெரும்பொழுதிலும் 

சினத்துடன் எழுந்து தெருவை நிறைத்த 

பல்லாயிரம் மக்களிடையே 

குரல்வற்றிய ஒரு பெண்ணைக் கண்டேன் 

கண்ணீரின் சுவடுகளால் 

முகக் கோலம் அழிந்தாலும்  

இன்னொரு முகம்       

பன்முகமாக விரியக் கண்டேன். (சேரன் , காடாற்று, ப.17)

காடாற்றுவது என்பது தமிழ்ச்சமூகத்தில் பேணப்படும் நீத்தார் நினைவுச் சடங்குகளில் ஒன்று. மாண்டவரை எரியூட்டிய அடுத்தநாள் சாந்தி செய்விக்கும் சடங்கே காடாற்றுதல் எனப்படும். எந்த நிமிடத்திலும் மரணம், பழகிய மரணமாகி உள் நுழைகிற, புதைப்பதும் எரிப்பதும் கூட வாய்ப்பற்ற சூழலில் காடாற்றுவதும் சடங்குகளும் எங்கே எனும் கேள்வி மனதைக்குடைவதைப் பதிவு செய்கிறார் சேரன் இக்கவிதையில்.

காலற்றவள் கனவு 

ஓடுவதைப் பற்றி 

கைகளிழந்தவள் கனவு 

குழந்தைகளை அணைப்பதைப் பற்றி 

தனது மூன்று குழந்தைகளையும் 

கடலுக்கும் 

கானகத்துக்கும் 

களத்துக்கும் 

காவு கொடுத்தவளுக்குக் 

கனவு இல்லை 

தூக்கமிழந்தவர்களுக்கு 

நினைவும் இல்லை ( சேரன், காடாற்று, ப.25 ).

இன்னொருபுறம், ஐரோப்பிய , அமெரிக்க நாடுகளுக்குப் புலம்பெயர்ந்து வாழும் பெண்கள் பல்வேறு வகையாகத் தம்மை அடையாளம் காண்கின்றனர். புதிதாகக் குடியேறியவர். கறுப்பினத்தவரின் அங்கத்தவர், தொழிலாளி, என்கிற பல்வேறு அடையாளங்களுடன், பெண் என்கிற பால்நிலையும் இந்த அடையாளம் காணலில் சேர்ந்துள்ளது. இத்தகைய பன்முகப்பட்ட அடையாளம்  ( multiple Identity ) ஒரு செழுமையை அளித்தாலும் சிக்கலையும் குழப்பத்தையும் தருவதுமாகும். 

3

இத்துடன் புலம்பெயர்ந்து வாழும் நாட்டில் தமிழ்க்கலாசாரத்தையும் மரபுகளையும் காப்பாற்ற வேண்டியவள் என்ற வற்புறுத்தல் ஏற்படுத்தும் சுமையும் பெண்களுக்குப் பல சவால்களையும், சமூகஉளவியல் பிரச்சினைகளையும் உருவாக்குகின்றன என்கிறார், சித்திரலேகா மௌனகுரு. பெண் எழுத்தாளர்களின் இத்தகைய குறியாக்கத்தில் (encoding) ஈடுபடுவதன் சிக்கல்கள் பற்றிய கூர்மையான பகுப்பாய்விற்கு எம்மை இட்டுச்செல்லும் என்பதோடு நூற்றாண்டுகாலப் பழமைவாய்ந்த மரபுகளைப் புறம்தள்ளல், விலக்கப்பட்டமை மறுக்கப்பட்டமை ஆகியவற்றின் தடைகளை உடைத்தல் பற்றிய சிக்கலான பல்பரிமாணத்தனமை வாய்ந்த ஆழமான விளங்குதலை ஏற்படுத்தும் என்றும் நம்புகிறார் இவ்வாறாக புகலிடப் பெண்படைப்பாக்கம் முற்றிலும் தமிழ்ப்படைப்புலகில் ஒரு பாய்ச்சலை ஏற்படுத்தியுள்ளதைப் பார்க்கிறோம். 

வாழ்க்கையில் ஏற்படும நெருக்கடிகள், இயந்திரத்தனமான உலகில் மனித உறவுகள் இரண்டாம்பட்சமாகி யுத்தங்கள், அவை ஏற்படுத்துகின்ற அகதி வாழ்க்கை இவ்வாறானவை அந்நியமாதல் உணர்வுநிலையை ஏற்படத்துவனவாக கருத முடிகிறது. இவை சர்ரியலிசப் படைப்புகளுடன் மிக நெருக்கமாக வருவதனையும் படைப்புகளின் ஊடாகக் கண்டுகொள்ள முடியும். 

சு.குணேஸ்வரன் சொல்வதைப்போல, இருத்தலியவாதம் (Existentiolism) அந்நியமாதல்  (Allienation)  மிகை யதார்த்தவாதம் (Surrealism) எனப் புலம்பெயர் படைப்புகள் தொழிற்படும் கோட்பாட்டுப் பின்னணிகளிலிருந்து  மேலும் விவாதிக்க வேண்டும். நாசிசவாதிகளின் துன்புறுத்தல், நிறவாதம், சர்வதேசியக் கணணோட்டம் என உள்ளீடுகள் புலம்பெயர் கவிதைகளுக்கு ஊடாக உறைந்துள்ளன.

திணைப்பரப்புகள் அகலித்ததன் அடியாகவெழுந்த, பலமொழி-பலபண்பாட்டு-பலஇன- பந்நிற – பலபருவக் காலநிலைச் சுற்றாடல்களினால் தமிழிலக்கியத்தை விசாலித்த பெரும் பரப்புக்குள் புலம்பெயர்-புகலிட ஆக்கங்கள் உட்படுத்தி இருக்கின்றன. “புகலிடப் புனைகதைகளின் உள்ளடக்கப் பண்புகளாக, பயண அனுபவம், அகதிஅனுபவம் , புதிய வாழ்வனுபவம், பிறநாட்டாருடன் ஏற்படும் முரண், வாழ்விடப் பிரச்சினைகள், நிர்வாக நெருக்கீடுகள், தொழிற்தள அனுபவம், எதையும் போட்டு அலட்டிக்கொள்ளாத மேலைத்தேய வாழ்வு, சந்தேகத்திற்கு அப்பாற்பட்ட வாழ்வு, ஏஜென்சிகளின் பாடுகள், நாடுகளுக்குள் நுழைய எடுக்கும் பிரயத்தனங்கள், நாடுகளுக்கிடையிலான எல்லையில் பெண்கள் படும் அவலம், அகதி அந்தஸ்து பெறப்படும் பாடுகள், நாடுமாறுதல், நாடற்றவராக அலைதல், தெருவும் மனிதர்களும், அசிங்கங்களும், மொழிப்பிரச்சினை, புதியதலைமுறைகளின் குழப்பங்கள், பண்பாட்டு முரண்பாடு, பண்பாட்டுக் கலப்பு, மரபைப்பேணுவதில் உள்ள சிக்கல்கள், குடும்பத்திலும் சூழலிலும் வன்முறைகள், இயந்திர வாழ்வு, உறவுகள் அர்த்தமிழந்துபோதல், குடும்பப்பிணக்குகள், ஆண்பெண் உறவுநிலை, விவாகரத்து, குடும்பங்களிலிருந்து தனித்து வாழ்தல்,பாலியல் சுதந்திரம், முறையற்ற பாலியல் நடத்தைகள், முதியோர்நிலை, பெண்கள் பிரச்சினைகள், பெண்ணிய நோக்கு, கலப்புத் திருமணம், மனக்குரோதமான செயல்பாடுகள், பிரபலந்தேடல், பகட்டுவாழ்வு, குருட்டுநம்பிக்கை, போதைப்பொருள் பாவனைகள், புதிய நிலவமைப்பு, தனிமையுணர்வு, அந்நிய மனப்பான்மை, யாருக்கும் தெரியவராதுபோன சாவுகள்” ( ஞானம்,புலம்பெயர் இலக்கியச்சிறப்பிதழ், இலங்கை) என, ஒருபெரும் பட்டியலே தருகிறார் குணேஸ்வரன்.

4.

 புலம்பெயர் கவிதைகளின் தனித்துவமான ஏழு பண்புகளாக,  குணேஸ்வரனது பகுப்பை மேற்கோள் காட்டி செல்லத்துரை சுதர்சன்,

1.வித்தியாசமான இயற்கை அம்சங்களைப் பாடுதல்

2.பிறமொழிகளின் செல்வாக்கு ,கவிதைகளில் இடம்பெறுதல்

3.அந்நிய உணர்வுநிலை கவிதைகளில் செல்வாக்கு செலுத்துதல்

4.தொழில்தளத்தை மையப்படுத்திய அனுபவங்கள்

5.அகதிநிலை, தாயகநிலை கவிதைகளில் இழையோடுதல்

6அந்நியக் கலாச்சாரத் தாக்கம் புலப்படல்

7.சுதந்திரமும் எதிர்ப்புணர்வும் மேலோங்குதல்

 போல்வனவற்றைக் குறிப்பிடுகிறார் ( ஞானம்,புலம்பெயர் இலக்கியச்சிறப்பிதழ், இலங்கை)

ஓயாமல் இலை உதிர்க்கும் உயிர்ப்பிழந்த முதுமரமாய் தாய்நாடு ஆகிவிட்டால், வாழ்வை இழந்து வசதிபொறுக்குகின்ற மனிதச்சருகுகளாய் , பாட்டனார் பண்படுத்தி பழமரங்கள் நாட்டிவைத்த தோப்பை அழியவிட்டு தொலைதூரம் வந்தவன் நான் என்னுடைய பேரனுக்காய் எவன் வைப்பான் பழத்தோட்டம் எனக் கேட்டலையும் அவலம் , ஈழத்தமிழர் தமக்குள்ளே பேச்சுச் சுதந்திரமின்மை, யாவும் இலையுதிர்கால நினைவுகளில் தளும்புகின்றன.

சுவிசிலிருந்து எழுதும் தில்லையின் கவிதை இப்படி அமைகிறது: வாழ்தலின் மையம் தொலைத்ததாய் அடையாளப்படுத்திக்கொண்ட, இரு பலஸ்தீன அகதிகளைக்கண்டேன் என்று தொடங்கும் கவிதை,

ஓட்ட வெட்டப்பட்ட

அவர்களுடைய புன்னகை போன்றே

என்னுடைய புன்னகையும் இருந்தது

இரவல் முகங்கள் இரண்டை

அவர்களும் அணிந்திருந்தனர்

………………………………

……………………………....

நாங்களும் இருக்கிறோம் 

இருதேசங்களின் கருப்பு சரித்திரமாக

என்று முடிகிறது. இது வெறும் சரித்திரம் அல்ல சரித்திரத்தின் ஆகுபெயரான துயரம் என்கிறார் அரவிந்த் அப்பாதுரை; ஊழி என்கிறார் சேரன்.

புகலிடப்பண்பாட்டு மாற்றங்கள் பழமைவாதிகளால் ஏற்பிசைவு பெற முடியாமை ஒருபுறமும், பண்பாட்டு மாற்றங்களை, உணவாகவும் உடையாகவும் புற மாற்றங்களைமட்டும் பார்த்து புரட்சிகரமானதாகக் கருதிக்கொள்வதம் விமர்சனத்துக்கு உள்ளாகிறது, மைத்ரேயி கவிதையில். உடைநீளமும், தடிப்பும் மாறும் / ஸ்காண்டிநேவிய நாகரிகத்துக்கெற்ற / அவற்றின் நிறமும் மாறும் / கைபோய் கரண்டி வரும் / உதட்டில் தமிழுடன் நோர்வீஜியன் கொஞ்சம் / சிலவேளை பீசாவுடன் ஒல்லும்கூட. இப்படியெல்லாம் மாறிய தோழியின் மாற்றத்தின் வேகம் பார்த்து அயர்கிறார். பின் அவளுடைய பேச்சில் மாற்றத்தின் முகம் கிழிகிறது. தெளிவுடன் நகர்கிறது கவிதை

ஸ்காண்டிநேவிய பெண்களிடமிருந்து

புறநாகரிகத்தை மட்டுமல்ல

உன்னை நீயே இழிவுபடுத்தாதிருப்பதையும்

இழிவுபடுத்துவோரைப் புழுவென

ஒதுக்குவதையும்

உன் உரிமைகளைப் பூரணமாக

உணருவதையும்

அவற்றை மறுப்பவர்களுடன்

போராடுவதையும் கற்றுக்கொள்

ஏந்த நவநாகரிக ஆடையும் உனை

வெப்பமூட்டி மனிதராக்கா

என அகமாற்றங்களைக் கோரிநிற்கிறது இக்கவிதை. 

திணைப்பரப்பு கூடியதன் விளைவாகவும், பண்பாடு, காலநிலை, பல்லின, பன்மொழி என பன்மைத்துவ வாழ்வியல் தளமும் உடலியல், உளவியல், உலைவுகளும் காரணமாக, இதுவரையான தமிழ்க்கவிதைகளுக்குள் அடங்காத பல எண்ணக்கருக்கள் புதிதாக இடம் பெற்றுள்ளதை முதன்மையாகக் குறிப்பிடவேண்டும். 

5.

புலம்பெயர் / புகலிட ஆக்கங்கள் தமிழில் புதிய திணைப்பின்புலங்களில் போர்க்கள -கால நினைவுப்பதியன்களை, மறதியின் புதைசேற்றிலிருந்து மேற்கிளம்பல்களை, அந்நியமாதல், இருத்தலிய அடையாளச் சிக்கல்களை, சாதிஇழிவு மற்றும் நிறவெறி அம்பலப்படுத்தல்களை, மொழி, கல்வி, காலநிலை, பண்பாட்டு இடர்ப்பாடுகளை, பாலைத் திணையின் அழுத்தமான பிரிதல், பிரிவால் நேர்ந்த பாலுறவு ஏக்கங்களை, போதைப்பொருள் கடத்தல் மற்றும் அடிமையாதலை, பொருளாதார நெருக்கடிகளை, மனப்பிறழ்வு நோக்கி நெட்டித்தள்ளும் நினைவு வடுக்களைச் சுமந்து பிரசவமாகியுள்ளன. மூடுண்ட பண்பாட்டு வழமைகள், கீழைத்தேயப் பிற்போக்குச் சடங்காச்சாரங்கள், ஆணாதிக்க அவலங்கள் எனப்பல பொருண்மைகளில் பல ஆழமான விவாதங்களையும் உரையாடல்களையும் நிகழ்த்தியுள்ளன. பேரதிகமான கவிதைகள், சிறுகதைகள், கட்டுரைகள், நாடகங்கள் , திரை மற்றும் குறுந்திரை முயற்சிகள், பிறமொழி ஆக்கங்களின் குறிப்பாக பாலஸ்தீனஇலக்கியம், கறுப்புஇலக்கியம், பின்னைக்காலனியஇலக்கியம் இவற்றின் தாக்கம், என புதிய பாய்ச்சல்களைத் தமிழ்ப்பரப்பில் நிகழ்த்தியுள்ளன.

  இந்தியாவிலிருந்து பெயர்ந்துவாழும் தமிழ்த் தலைமுறையினர் பெரும்பாலும் மேற்குலகில் திரைப்பட நடிக/நடிகையரின் ஸ்டார்நைட் குத்தாட்டங்களையும், அரை நூற்றாண்டுக்கு முந்தைய அறுந்த பழையதுணுக்குகளை உமிழ்தல், அரைத்தமாவை அரைத்தல், இவற்றுடனான பட்டிமண்டபக் கூத்தடிப்புகளையும் கொண்டு,கோடிக்கணக்கில்செலவழித்துத் தமிழடையாளத்தைக் குறுக்கியும், திரித்தும், கொச்சைப்படுத்தியும் வரும் வேளையில், அகதிமையோடு அலைந்துழன்று, வாழ்க்கைப்பாட்டை எதிர்கொள்ளவே போராடிவரும் ஈழத்தமிழ்ப் படைப்பாளிகள் கொடுஞ்சூறைக் காற்றில் எற்றுண்டு போகாமல், தமிழின் காத்திரமான விரிவாக்கச் செயன்மைகளாகப் புதிய நகர்வுகளைக் கலை இலக்கியத் தளங்களில் கொணர்ந்திங்கு சேர்த்துள்ளனர். 

புதிய படைப்புவெளிகளைக் கொண்டுவரவும், பன்னாட்டு இலக்கியப் பரிச்சயம் பரந்துபட்ட அளவில் விரிவடையக்கூடிய சூழ்நிலை ஏற்படவும் வாய்ப்புண்டு. பிறமொழி ஆக்க இலக்கிய உத்திமுறைகள் உடனுக்குடன், கையாளக்கூடிய சந்தர்ப்பமும், ஏற்படும். பிறமொழிகளில் உள்ள சிறந்தபடைப்புகளை தமிழ்ப்படைப்பு வெளிக்குள் கொண்டு வருவதற்கான வாய்ப்புகளும் நிறைய உண்டு. இவ்வாறு காத்திரமான முயற்சிகள் நிகழுமாயின், 21-ஆம் நூற்றாண்டுத் தமிழ் இலக்கியப் பரப்பில் பெரும்பரப்பினை புலம்பெயர்இலக்கியம் பெற்றுக்கொள்ளும் என நம்பிக்கையும், எதிர்கால விழைவும் கொண்டு எழுதுகிறார் பெருமாள் சரவணக்குமார். ( ஞானம்,புலம்பெயர் இலக்கியச்சிறப்பிதழ், இலங்கை)

பூமிப்பந்தின் கீழ்ப்புறத்துள்ள பற்பல தீவினும் பரவியிவ் வெளிய தமிழ்ச்சாதி தடியுதையுண்டும், காலுதையுண்டும், கயிற்றடியுண்டும், வருந்திடும் செய்தியும், மாய்ந்திடும் செய்தியும், பெண்டிரை மிலேச்சர் பிரித்திடல் பொறாது செத்திடும் செய்தியும், பசியால் சாதலும், பிணிகளாற் சாதலும், பெருந்தொலையுள்ளதும், நாட்டினைப் பிரிந்த நலிவினாற் சாதலும் இஃதெல்லாம் கேட்டும் எனதுளம் அழிந்திலேன்’’ எனும் பாரதி வரிகளோடு, முற்றிலும் பொருத்தப்பாடுகொண்டும் மிகு நம்பிக்கை கொண்டும் படைப்புத்தளத்தில் இயங்கிவருகிற புகலிடப் படைப்பாளிகளின் கவிதைகள் பிடுங்கி நடப்பட்ட நிலத்தில் முளைக்கத் துடிக்கும் உயிர்ப்பின் பச்சையாய்த் தடம்பதித்து உலகளாவிய கவனிப்பைப் பெற்றுள்ளன எனலாம். 

உசாத்துணை : 

  • சேரன், நீ இப்பொழுது இரங்கும் ஆறு , காலச்சுவடு, 2000
  • தமிழ் நதி, சூரியன் தனித்தலையும் பகல், பனிக்குடம் வெளியீடு, சென்னை, 2007
  • சேரன், காடாற்று, தமிழியல் வெளியீடு, 2016
  • ஞானம், புலம்பெயர் இலக்கியச் சிறப்பிதழ், ஞானம் பதிப்பகம், இலங்கை, 2014