ஜூலை 2024 இதழுக்கு ஆய்வுக்கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன

டாக்டர் தா.ஏ.ஞா. அவர்களின் இலக்கியத்திறனாய்வியல் நூலின் ஒட்ப நுட்பங்கள்

டாக்டர் வே. விக்னேசு,  தமிழ் உதவிப்பேராசிரியர்,  பூ. சா. கோ. கலை அறிவியற் கல்லூரி, கோயம்புத்தூர் 27 Jul 2021 Read Full PDF

டாக்டர் வே. விக்னேசு, 

தமிழ் உதவிப்பேராசிரியர், 

பூ. சா. கோ. கலை அறிவியற் கல்லூரி,

கோயம்புத்தூர்

 

ஆய்வுச்சுருக்கம்

தமிழாய்வில் ‘டாக்டர்’ பட்டம் பெற்ற முதல் தலைமுறையைச் சார்ந்த முதல் பத்துப் பேராசிரியர்களுள் ஒருவராகப் புகழ்பூத்த பேராசிரியராய்த் திகழ்ந்தவர் டாக்டர் தா.ஏ.ஞானமூர்த்தியவர்களாவர். சிந்தாமணிக்காப்பியத்தின் நந்தாப்பெருமைகளையும் நயங்களையும் தம் ஆராய்ச்சித்திறத்தால் உலகிற்குணர்த்தியவர்.   தம்முடைய நுண்மாண் நுழைபுலத்தானும் ஆழ்ந்தகன்ற ஆராய்ச்சியறிவானும் இவரியற்றிய நூல்கள் தமிழாய்வில் தனியொளி பாய்ச்சின. இவ்வகையில், நூலறிபுலவர் டாக்டர் தா.ஏ.ஞா. அவர்களின் பேருழைப்பின் பயனாய்த் தமிழுலகிற்குக் கிட்டிய இலக்கியத்திறனாய்வியல் என்னும் ஆராய்ச்சிப்பெருநூலின் தன்னேரில்லாச் சிறப்புக்களை ஆய்ந்துணர்த்துவதே இக்கட்டுரை ஆராயக்கொண்ட ஆய்பொருளாம்.

திறவுச்சொற்கள் 

டாக்டர் தா.ஏ.ஞானமூர்த்தி, தா.ஏ.ஞா., இலக்கியத் திறனாய்வியல், சிந்தாமணி, தமிழாய்வு, ஆராய்ச்சி, மு.வ. பூ.சா.கோ. கல்லூரி

தோற்றுவாய்

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்

தெய்வத்துள் வைக்கப் படும்.  

டாக்டர் தா.ஏ.ஞானமூர்த்தியார்

என்னும் வள்ளுவப் பெருந்தகையின் கூற்றிற்கு இலக்கணமாக வாழ்வாங்கு வாழ்ந்தவர்  தமிழ்ப்பேரறிஞர் டாக்டர் தா.ஏ. ஞானமூர்த்தி அவர்களாவார். புகழுடை வாழ்வினராக; எடுத்துக்காட்டான வாழ்வினராக விழுமிய வாழ்வு வாழ்ந்தவர் அவர். அன்பு அருளாய்க் கனிந்த அவரின் வாழ்வு இளைஞர்கள் போற்றிப் பின்பற்றத்தக்க உயரிய வாழ்வாம். இத்தகு சிறப்பிற்குரிய சான்றோர் தமிழாய்வில் தனியிடம் பதித்தவர். படைப்பாற்றல் மிக்க தமிழறிஞர். சிந்தனைத்திறம் மிக்கவர். தம் சிந்தனைக்கு எழுத்துருவம் தந்து இலக்கிய ஆராய்ச்சி நூல்கள், நாடகங்கள், புதினங்கள், சிறுகதைகள் என்றின்னப் பல்துறை நூல்களைப் படைத்தவர். அவ்வகையில் டாக்டர் தா.ஏ.ஞா. அவர்கள் பல்லாற்றானும் ஆய்ந்து படைத்த இலக்கியத்திறனாய்வியல் என்னும் ஆராய்ச்சிப்பெருநூலின் ஒட்ப நுட்பங்களை வெளிக்கொணரும் முகத்தான் எழுந்ததே இக்கட்டுரை என்க.

 டாக்டர் தா.ஏ.ஞா. அவர்களின் கல்வித்திறத்தையும், தமிழாராய்ச்சிக்கான அவர்தம் பணிகளையும் அறிந்துகோடல் ஈண்டு வேண்டத்தக்கதாம். ஆகலின், முதற்கண் அதுபற்றிச் சிறிது கூறுவாம்.  

 கல்வி

டாக்டர் தா.ஏ.ஞா. அவர்கள் அருமை அன்னை இராசம்மாளுக்கும் அறத்திற் பற்றுடைய தந்தை ஏகாம்பரம் அவர்கட்கும் தலைமகவாய் 13.08.1912 ஆம் ஆண்டு சென்னை மாநகரில் ஆழ்வார்ப் பேட்டையில் பிறந்தார். ஞானத்தின் திருஉருவாய்த் தோன்றிய இவர் மயிலையிலுள்ள பெனாத்தூர் சுப்பிரமணியம் உயர்நிலைப் பள்ளியில் பயின்று, 1930-இல் பள்ளி இறுதி வகுப்பில் சிறப்புறத் தேர்ச்சி பெற்றார். தமிழாய்வில் தோய்ந்தவரும் சென்னை அரசாங்கத்தின் தலைமைப் பொறியாளருமாகவும் விளங்கிய பொறிஞர். பேரறிஞர். பா.வே. மாணிக்க நாயக்கரவர்களின் தொடர்பால் தா.ஏ.ஞா.விற்குத் தமிழார்வம் மிகுவதாயிற்று. குருதேவர் தெ.பொ.மீ. அவர்கள்பால் தமிழ் பயின்று, 1942-ஆம் ஆண்டு தமிழ்ப்புலவர் (வித்துவான்) தேர்வு எழுதிச் சிறப்புறத் தேர்ந்தார். 1946 - இல் பி.ஓ.எல். பட்டம் பெற்ற அவர், 1950-இல் எம்.ஏ. பட்டம் பெற்றார். 1955-ஆம் ஆண்டு குருதேவர் தெ.பொ.மீ. அவர்களின் நெறியாண்மையில் டாக்டர் பட்டத்திற்காக அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் பதிவு செய்து கொண்டு, சீவகசிந்தாமணியைப் புதியக் காப்பியக்கொள்கைகளுடன் ஒப்பிட்டாய்ந்து, 1962-ஆம் ஆண்டு ‘A CRITICAL STUDY OF CIVAKACINTAMANI’ என்னும் ஆய்விற்காகப் பி.எச்.டி. பட்டம் பெற்றார்கள்.

தமிழாய்வில் ‘டாக்டர்’ பட்டம் பெற்ற முதல் தலைமுறையைச் சார்ந்த முதல் பத்துப் பேராசிரியர்களுள் ஒருவர் தா.ஏ.ஞா. அன்றியும், கோயம்புத்தூரில் தமிழாய்வில் முதன்முதலாக ‘டாக்டர்’ பட்டம் பெற்றவரும் இவரேயாவர்.

பணி

டாக்டர் தா.ஏ.ஞா. அவர்கள் செங்கற்பட்டு மாவட்டத் தலைமைக் காவற்பணிமனை, சென்னை உயர்நீதி மன்றத்தில் அதிகாரிகள் அறக்குழு அலுவலகம், கல்வி வெளியீட்டுக் கழகம், மயிலை இந்து நிரந்தர நிதி நிறுவனம், அஞ்சல் தணிக்கை அலுவலகம் போன்ற நிறுவனங்களில் பல்வேறு காலங்களில் எழுத்தராகப் பணியாற்றினார்கள். இவர்கள்; தாம் ஏற்ற பணியைச் சிறப்பாகவும் ஒழுங்காகவும் மேற்கொள்ளுந் தகைமையினராகலின் தாம் பணிபுரிந்த இடங்களிலெல்லாம் நேர்மையாகவும், செம்மையாகவும் பணிகளை மேற்கொண்டார்கள். பின்னர், கல்வித் தொண்டே கடவுட் தொண்டு எனும் ஆன்றோர் வாக்கினை மனங்கொண்டு தோற்றுவிக்கப்பட்ட பூ.சா.கோ. கலை அறிவியற் கல்லூரியின் முதல் தமிழ்த்துறைத் தலைவர் பணியை 1948-ஆம் ஆண்டு சனவரித் திங்கள் 17-ஆம் நாள் ஏற்றுக்கொண்ட டாக்டர் தா.ஏ.ஞா. அவர்கட்கு அக்கல்லூரித் தமிழ்த்துறையைப் பல்கலைக்கழகத்தை நிகர்த்த தமிழாய்வுத் துறையாக மாற்ற வேண்டுமென்ற பேரவா இருந்து வந்தது. அதற்காக ஒல்லும் வகையெல்லாம் முயன்று வந்தார். அம்முயற்சியின் விளைவாய் 1967-ஆம் ஆண்டு அக்கல்லூரியில் தமிழ் இளங்கலை மற்றும் முதுகலை வகுப்புகளைத் தோற்றுவித்தார். பல்கலைக் கழகங்களில் மட்டுமே தமிழ் எம்.ஏ. வகுப்புகள் நடத்தப்பெற்று வந்தக் காலத்தில், இக்கல்லூரியில் தமிழ். எம்.ஏ. வகுப்பு தோற்றுவிக்கப்பட்டமை ஈண்டுச் சிறப்பாகச் சுட்டத்தக்கதாம்.

அங்ஙனமே, அக்கல்லூரியில் தமிழில் எம்.லிட்., பிஎச்.டி., பட்டப்படிப்புகளும் தோற்றுவிக்கப்பட வேண்டுமென எண்ணி, சென்னைப் பல்கலைக்கழகத்தில் ஆவணஞ் செய்து வெற்றியுங் கண்டார். தமிழ்த்துறை தமிழாய்வுத் துறையாயிற்று! தொடர்ந்து 24 - ஆண்டு காலம் தமிழ்ப் பணியாற்றிய பின் 1972-ஆம் ஆண்டு மேத்திங்கள் நம் பேராசிரியர் ஓய்வு பெற்றார். அவ்வாண்டே, சூன் திங்கள் பல்கலைக்கழக மானியக்குழு இவரை ஆராய்ச்சிப் பேராசிரியராகத் (EMERITUS PROFESSOR) தேர்ந்தெடுத்து அக்கல்லூரியில் மீண்டும் பணியேற்கச் செய்தது. ஆராய்ச்சிப் பேராசிரியராகவிருந்து பத்தாண்டுகள் தமிழ்த் தொண்டாற்றிய நம் பேராசிரியரவர்கள் 1982-ஆம் ஆண்டு மேத் திங்கள் ஓய்வு பெற்றார்கள்.

தமிழாராய்ச்சிக்கான பணிகள்

ஆராய்ச்சிப் பேராசிரியராகத் தமிழ்ப் பணியாற்றிய நம் பேராசிரியர் பல்வேறு பல்கலைக் கழகங்களிலும், கல்லூரிகளிலும் தமிழாய்வுத் துறையைத் தொடங்க அரும்பாடுபட்டார். அவ்வகையில், அக்காலத்தில் தொடங்கப்பட்ட பாரதியார் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறையைத் தொடங்குதற்கு உரிய வழிவகை செய்து வெற்றியுங்கண்டார். இங்ஙனமே, கோழிக்கோடு பல்கலைக்கழகத் தமிழாய்வுத்துறை ஆசிரியர்களும் மாணாக்கரும் தகுதியான நெறியாளர் இன்மையால் எம்.லிட்., பிஎச்.டி., ஆய்வு செய்து பட்டம் பெற இயலாமல் தவித்தனர். இந்நிலையைக் கண்ணுற்ற நம் பேராசிரியர் 1972-ஆம் ஆண்டு பூ.சா.கோ. கல்லூரியை அப்பல்கலைக்கழகத்தின் ஆய்விருக்கையாக மாற்றி, அப்பல்கலைக்கழகத்தைச் சார்ந்த ஆசிரியர்களும் மாணாக்கரும் எம்.லிட்., பிஎச்.டி., பட்டங்கள் பெறுதற்கு வழிவகை செய்து தமிழாராய்ச்சிக்குத் தக்க தொண்டாற்றினார். அன்றியும், அகில இந்திய பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்றத்தைத் தோற்றுவித்தவருள் நம் பேராசிரியரும் ஒருவராவர். இம்மன்றம் தொடங்கப்படுவதில் நம் பேராசிரியரின் பங்கு மிகவும் குறிப்பிடற்பாலதாம்.

இவரின் நெறியாண்மையில் மூவர் எம்.லிட்., பட்டமும் இருபத்தி ஒன்பதின்மர் பிஎச்.டி. பட்டமும் பெற்றுள்ளனர். குறிப்பாக, சென்னைப் பல்கலைக்கழகத்தின் ஆற்றல்சார் தமிழ்ப் பேராசிரியராக வீற்றிருந்து பணியாற்றிய உயர்திரு. டாக்டர் மு. வரதராசனாரவர்கள் மதுரைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகப் பதவியேற்ற பின்னர், சென்னைப் பல்கலைக்கழகத்தின் சார்பில் எம்.லிட்., பிஎச்.டி., ஆராய்ச்சிக்கு நம் பேராசிரியர் ஒருவரே வழிகாட்டியாக இருந்தார் என்பது இவரின் தனிப்பெருஞ்சிறப்பாம். இனி தா.ஏ.ஞா. அவர்கள் அரிதின் முயன்று படைத்த இலக்கியத் திறனாய்வியல் என்னும் ஆராய்ச்சிப் பெருநூலின் ஒட்ப நுட்பங்களைக் காண்குவம். வம்மின்!

இலக்கியத் திறனாய்வியல்

இலக்கியத் திறனாய்வு விதிகளை விளக்கும் இலக்கியத் திறனாய்வியல் – PRINCIPLES OF LITERARY CRITICISM நூலின் முதற்பதிப்பு 1976 – ஆம் ஆண்டில் வெளிப்போந்தது. இந்நூல் திறனாய்வுக் கலையை மாணாக்கர்கள் அறிந்துகொண்டு பயன்படுத்தும் நோக்கோடு தா.ஏ.ஞா. அவர்களான் இயற்றப்பட்டது.  இலக்கிய ஆய்வு முதலாக இலக்கிய இயக்கங்கள் ஈறாகப் பத்தொன்பது தலைப்புக்களால் இயன்றது இப்பெருநூல்.

நூலெழுந்த சூழல்

மேனாடுகளில் பழங்காலந்தொட்டே திறனாய்வு நூல்கள் எழுதப்பெற்று வருகின்றன. அவ்வக் காலங்களில் தோன்றிய இலக்கியங்களுக்குப் பல திறனாய்வுகள் எழுதப்பட்டுள்ளன. காலந்தோறும் தன் வடிவத்தில் மாற்றம் எய்துவது இலக்கியத்தின் இயல்பு. அந்தந்தக்காலச் சமுதாய நிலைக்கேற்பவும் சூழ்நிலைக்கேற்பவும் இலக்கிய வடிவங்கள் மாறி அமைவனவாகும். அவற்றை நுணுகி ஆய்ந்து விளக்கி மதிப்பீடு செய்வனவே திறனாய்வுகள். இதனால் திறனாய்வு விதிகளும் இலக்கிய வகைகளுக்கேற்ப மாறிவந்துள்ளன. இதன் விளைவாக மேனாடுகளில் பல திறனாய்வு நூல்களேயன்றித் திறனாய்வு வரலாற்று நூல்களும் பல்கியுள்ளன. இந்நூல்கள் மாற்றம் எய்தி வந்துள்ள இலக்கிய இயல்புகளையும் திறனாய்வு விதிகளையும் வரலாற்று முறையில் விளக்குகின்றன (இலக்கியத் திறனாய்வியல், முன்னுரை) என்று திறனாய்வு என்பது பற்றியும் திறனாய்வு நூல்கள் பற்றியும் விளக்கும் தா.ஏ.ஞா. அவர்கள், இக்காலத்தில் இலக்கிய ஆய்வுகள் பெருகிவரினும் இலக்கியத் திறனாய்வு விதிகளை விளக்கும் நூல்கள் தமிழில், மூன்று நான்கு என்ற அளவிலேதான் தோன்றியுள்ளன. எனவே குறிப்பிடத்தக்க தமிழ் இலக்கிய வகைகள் ஒவ்வொன்றிற்கும் பொதுவான திறனாய்வு விதிகளை முழுமையாகவும், சுருக்கமாகவும் கொண்ட ஒரு நூலினை எழுதவேண்டும் என்ற விருப்பம் எனக்குப் பத்தாண்டுகளுக்கு முன்பு எழுந்தது (இலக்கியத் திறனாய்வியல், முன்னுரை) என்று வரையும் எழுத்தால் இந்நூலெழுந்த சூழலைப் புலப்படுத்துகிறார். மேனாட்டாரின் இலக்கியத் திறனாய்வு விதிகளை அடிப்படையாகக் கொண்டும் பொருந்திய இடங்களில் தொல்காப்பியம், அணி இலக்கண நூல்கள், பாட்டியல் நூல்கள் இன்னோரன்னவற்றில் காணப்படும் இலக்கிய விதிகளைப் பயன்படுத்தியும் யாக்கப்பட்டது இந்நூல்.

நூலின் உள்ளடக்கம்

‘இலக்கிய ஆய்வு’ என்னும் முதலியலில், இலக்கியத்துறையில் முத்திறன்களாக படைக்குந்திறன், சுவைக்குந்திறன், திறனாயுந்திறன் என்பனவற்றைக் கூறி, 1. இயற்கை அறிவியல் விதிமுறைகளை மேற்கொள்வதனால் இலக்கியத்தை அறிவியல் முறையிலும் வரலாற்று முறையிலும் ஆய்வு செய்ய இயலுகிறது. இத்தகைய ஆய்வு கருத்துக்களைத் திரட்டுதற்கோ பொதுவான இலக்கிய வரலாற்று விதிகளை நிறுவுவதற்கோ பயன்படுகிறது.   2. அறிவியல் ஆய்வு முறை இலக்கிய ஆய்வுக்குப் பொருந்தாதென்பதும் ஒவ்வொரு இலக்கியத்தையும் புரிந்து கொள்வதற்குத் தனிப்பட்ட பண்பு வேண்டுமென்பதும் இலக்கியம் ஒவ்வொன்றும் தனித்தன்மை வாய்ந்ததென்பதும் வலியுறுத்தப்படுவதாகும். ஆனால் இலக்கிய ஆய்வுக்கு அறிவியல் முறையினைத் தீவிரமாக எதிர்ப்பது ஊறுபயப்பதாகும் (இலக்கியத் திறனாய்வியல், ப.5) என்னும் இரண்டனையும் இலக்கிய ஆய்வு பற்றிய இரண்டு உண்மைகளாகக் குறிப்பார் தா.ஏ.ஞா.

அவ்வகையிற்றானே, ஒவ்வொரு இலக்கியமும் பொதுத்தன்மையும் தனித்தன்மையும் ஆகிய இரண்டையும் கொண்டுள்ளது என்று நாம் உணர்தல் வேண்டும். ஒவ்வொரு மனிதனிடத்தும் அவனுக்கே உரிய தனித்தன்மைகளும் மனிதனுக்குரிய பொதுத்தன்மைகளும் பொருந்தியிருத்தலைக் காண்கிறோம். இதுபோலவே ஓர் இலக்கியத்திலும் அதற்கேவுரிய தனித்தன்மைகளும்  இலக்கியத்திற்குரிய பொதுத்தன்மைகளும் உள்ளன. இலக்கியத்திற்குரிய பொதுத்தன்மைகளை இலக்கியக் கொள்கைகள் என்பர். இப்பொதுத் தன்மைகளை அடிப்படையாகக் கொண்டு ஓர் இலக்கியத்தின் தனித்தன்மைகளை ஆய்ந்துணர்தல் வேண்டும். ஓரிலக்கியத்தின் தனித்தன்மைகளை ஆய்ந்தறிவதையே இலக்கியத்திறனாய்வு என்பர் (இலக்கியத் திறனாய்வியல், ப.6) என்று தா.ஏ.ஞா. கிளந்து கூறுவது, இலக்கியக்கொள்கை பற்றியும் இலக்கியத்திறனாய்வு பற்றியும் அறிந்துகொள்வதற்கும் இரண்டன் வேற்றுமைகளை உணர்தற்கும் பயன்படுவதாம்.

திறனாய்வு

‘திறனாய்வு’ என்னும் இயலில், திறனாய்வு என்பது யாது? எனும் வினாவையெழுப்பிக் கொண்டு, மேத்தியூ அர்னால்டு, அட்சன், வின்செசுடர் போன்ற ஆங்கில அறிஞர்களின் கருத்துக்களின் துணைகொண்டு விளக்குகிறார் தா.ஏ.ஞா. கலைகள் மனித மதிப்புகளின் களஞ்சியமாகும். தனித்திறமை வாய்ந்தவர்களின் சிறந்த அனுபவங்கள் தம் கட்டுக்குள் அடங்கி உச்சி நிலையை அடையும்பொழுது இக்கலைகள் தோன்றுகின்றன. அனுபவங்களின் மதிப்புகளைப் பற்றிய முக்கிய சிறப்புக்கள் அக்கலைகளின்கண் அமைந்துள்ளன. கலைகளைத் தக்கமுறையில் ஆய்ந்து நோக்கும் போது, அனுபவர்களுக்குள்ளே எவை மிக்க மதிப்புடையவை என்பதை நமக்குத் தெளிவுபடுத்துகின்றன (இலக்கியத் திறனாய்வியல், ப.11) என்று தா.ஏ.ஞா. கலைகளைப் பற்றி நமக்குத் தெளிவுபடுத்துகிறார்.

படைப்பிலக்கியம், திறனாய்வு இரண்டனுக்குமுள்ள வேற்றுமையைக் கூறும் தா.ஏ.ஞா., கவிதை, நாடகம், புதினம் போன்ற இலக்கியங்கள் நேர்முகமாக வாழ்க்கையை விளக்குகின்றன. திறனாய்வு கவிதை, நாடகம், புதினம் ஆகியவைகளைப் பற்றி விளக்குகின்றது. படைப்பிலக்கியம் வாழ்க்கையின் விளக்கமாகும். திறனாய்வு வாழ்க்கை விளக்கமாகிய அப்படைப்பிலக்கியத்தின் விளக்கமாகும் (இலக்கியத் திறனாய்வியல், ப.11) என்று விதந்துரைக்கும் பகுதி. படைப்பிலக்கியம், திறனாய்வு இரண்டன் வேற்றுமையைத் தெள்ளிதிற் புலப்படுத்துவதாம். 

திறனாய்வு வேண்டத்தக்கதே!

திறனாய்வு தேவையற்றது என்று ஒருசிலர் குறை கூறுவதையும், தலைசிறந்த ஒரு கவிஞன் அல்லது இலக்கிய ஆசிரியனின் படைப்பினை நாம் நன்குணரவேண்டுமானால் நாமே அதைக் கற்றுணர வேண்டும். அதைப்பற்றிய திறனாய்வுகள் தேவையற்றவையாம் என்பதையும் நினைவூட்டும் தா.ஏ.ஞா. திறனாய்வின் பயன்களைக் கூறி, திறனாய்வின் உண்மையான பயனை நாம் மறக்க இயலாது. திறனாய்வின் பணியினை மறுப்பதென்பது மற்றவருடைய ஆழ்ந்த அனுபவமும், உயர்ந்த அறிவும் நமக்குப் பயன்படாது என்று கொள்வதற்கு ஒப்பாகும். ஓர் இலக்கியத்தைப் பற்றி அறிவினை ஒட்டி உணர்ச்சிவயமாக்குவது திறனாய்வின் தலைசிறந்த பணியாகும். உண்மையான திறனாய்வாளன் தான் திறனாயும் இலக்கியத்தைப் பற்றிய ஆழ்ந்து அகன்ற அறிவு சான்றவன். அவனுடைய அறிவும் அனுபவமும் நம்மைவிடப் பன்மடங்கு மிகுதியானவை ஆகும். அவன் இலக்கியத்தை ஊடுருவி நோக்கும் திறனும் அவ்விலக்கியத்தின் நுட்பமான பொருளை ஓர்ந்துணரும் பான்மையும் உடையவன். இத்தகைய திறனாய்வாளன் தம்மைவிட மிகுதியாக ஒருசிறந்த இலக்கியத்தின் நுட்பத்தை விளக்க இயலாது, என்று நாம் நினைப்பது பெரிதும் தவறுடையதாகும் (இலக்கியத் திறனாய்வியல், ப.14) என்று, திறனாய்வு தேவையற்றது எனக் கூறுவோர்க்குக் காரணகாரிய முறையுடன் தக்க விடையிறுக்கிறார் தா.ஏ.ஞா.

திறனாய்வாளருக்குறிய திறன்

‘திறனாய்வு இலக்கியம்’ என்னும் இயலில், திறனாய்வின் இலக்கியப்பண்புகளைக் கூறி, திறனாய்வாளருக்குரிய திறன்களாக, விழிப்புடன் படித்தல், முயன்று பெறுதற்குரிய தகுதிகள், பலநூற் புலமை, மனப்பக்குவம் என்பவற்றைக் கூறி, ஓர் உண்மைத்திறனாய்வாளரின் உள்ளம் விழிப்பாகவும் நெகிழ்ச்சியுடையதாகவும் ஊடுருவி நோக்கும் திறமையுடையதாகவும் எல்லாக் கருத்துக்களையும் விரைவில் உணர்ந்து தெளியும் ஆற்றல் உடையதாகவும் சிறப்பானவற்றை நன்கு தன்கண் பதியவைத்துக்கொள்ளும் திறமுடையதாகவும் இருத்தல் வேண்டும். அவர் இலக்கியத்தில் உள்ளவற்றை உள்ளபடிக் காணும் திறமுடையவராதல் வேண்டும் (இலக்கியத் திறனாய்வியல், ப.23) என்று தா.ஏ.ஞா கூறும் கருத்துத் திறனாய்வாளர்கள் பொன்னேபோற் போற்றிப் பின்பற்றத்தக்கதாம்.

அறிவும் உணர்ச்சியும்

அறிவிற்கும், உணர்ச்சிக்கும் உள்ள வேறுபாட்டை விளக்க முனைந்த தா.ஏ.ஞா. அறிவு நிலையாக மனதில் தங்கும் தன்மையுடையது. உணர்ச்சி நிலையாக மனதில் தங்குவதில்லை. இது அறிவிக்கும் உணர்ச்சிக்கும் உள்ள முதன்மையான வேறுபாடு ஆகும் (இலக்கியத் திறனாய்வியல், ப.50) என்றுரைக்கும் பகுதி அவரின் புதுவது கிளக்கும் நுட்பத்திற்குச் சான்றாம்.

'ஒரு பொருளைப் பற்றிய எண்ணம் அனைவருக்கும் ஒன்றாகவே இருக்கிறது. ஆனால் அதைப் பற்றிய உணர்ச்சி இருவருக்கும் ஒன்றாக இருக்காது. சான்றாக ஒரு நீர்நிலையில் மலர்ந்திருக்கும் தாமரைமலர், மலர் என்ற அளவில் அனைவருக்கும் எண்ணம் ஒன்றாகவே இருக்கும். ஆனால் அதனுடைய அழகில் ஈடுபட்டு உணர்கின்ற இருவரின் உணர்ச்சிகளும் ஒன்றாக இருப்பதில்லை. அண்மையில் திருமணமான இளைஞன் ஒருவன் அம்மலரின் அழகைச் சுவைத்து இன்புறுவதைத் தான் காதலியோடு சேர்ந்திருக்கும் இன்பத்திற்கு ஒப்பாக உணரலாம். அதே மலரின் அழகில் ஈடுபடும் முதுமைப் பருவம் எய்திய ஒருவர் காலையிலே உள்ளம் கவரும் வகையில் அழகு பொலிய மலர்ந்திருக்கும் அம்மலர் மாலை நேரத்திற்குள் வாடி விடுமே என்ற உணர்வுமிக்க எண்ணம் அவர் உள்ளத்தில் தோன்றி அவருக்கு இரக்கவுணர்ச்சியை நல்கக்கூடும். இளைஞனுக்கு இன்பவுணர்ச்சியை ஊட்டிய அம்மலரின் அழகு முதியவருக்கு நிலையாமை உணர்வை ஊட்டுவதாகிறது. இவ்விருவர் உணர்ச்சிகளின்கண் அவர்களுடைய ஆளுமை புலனாவதை உணரலாம்’ என்றுரைக்கும் பகுதியில் ஒரு உளவியல் வல்லுநர் போல பேசுகிறார் தா.ஏ.ஞா.

இங்ஙனமே, மக்களின் உணர்ச்சிகளே அவர்தம் பண்புகளை வெளிப்படுத்துவதைப்போல, இலக்கியத்திற்கு நம்முள் உணர்வினைப் பெருக்கெடுக்கச் செய்யும் ஆற்றல் அமைந்திருக்கும் தன்மையினாலேயே அவ்விலக்கியம் அதன் ஆசிரியரின் ஆளுமையைப் புலப்படுத்தும் பெற்றியினைப் பெறுகிறது என்பதையும் தெளிவுறுத்துகிறார் தா.ஏ.ஞா.

இலக்கியங்களில் மொழி பயன்படுத்தப்பட்டுள்ள திறத்தில், உணர்த்தும் பொருளை மொழியினின்றும் பிரிக்க இயலாதவண்ணம் மொழியும் உணர்த்தப்படும் பொருளும் இயைந்திருக்கும் தன்மையினை,

கருமணியிற் பாவாய் நீபோதாய் யாம்வீழும்

திருநுதற் கில்லை யிடம்

என்னும் குறட்பா, தலைவனின் உள்ளத்தில் தன் தலைவியின்பால் பொங்கி யெழும் காதற்பெருக்கினை உணர்த்துகிறது. என் கண்ணுள்ளிருக்கும் பாவையே, என் அன்புக் காதலிக்கு மிகச் சிறந்த இடத்தினைத் தர விரும்புகிறேன். நீ இருக்கும் இடமே அச்சீரிய இடமாகும். ஆதலின் நீ அவ்விடத்தை விட்டுப் போவாயாக என்பது இக்குறளின் பொருள். இப்பாவில் சொல்லும் கருத்தும் ஒன்றினின்றும் ஒன்று பிரிக்க இயலாதவண்ணம் இயைந்திருக்கின்றன. குறட்பாவில் அமைந்துள்ள சொற்களும் அவற்றின் ஒலிநயமும் கருத்தும் ஒருங்கியைந்து காதலனின் காதற்பெருக்காகிய உணர்ச்சியினை நமக்கு முழுமையாக உணர்த்துகின்றன. இதனை வேறு வகையில் மாற்றிக் கூறின் இத்துணை உணர்ச்சிப்பெருக்கு அதன்கண் அமைந்திராது என்று கூறலாம் (இலக்கியத் திறனாய்வியல், பக் 57,58) என்று செந்நாப்போதரின் குறட்பாவின் துணைகொண்டு விளக்குகிறார் தா.ஏ.ஞா.

இலக்கியத்தின் கூறுகள்

இலக்கியங்களுக்கு உணர்ச்சி, கற்பனை, அறிவுக்கூறு, வடிவம் ஆகிய நான்கு கூறுகளும் மிகச் சிறப்புடையனவாக அமைவதால் இலக்கியத்திறனாய்வுகளுக்கு இந்நான்கு கூறுகள் பற்றிய ஆய்வு மிக இன்றியமையாததாகும் என்பதால், உணர்ச்சி, கற்பனை, வடிவம் போன்றவற்றைத் தனித்தனி இயல்களில் மிக விரிவாகப் பேசுகிறார் தா.ஏ.ஞா. உணர்ச்சியை விளக்கும்போது, தொல்காப்பியனார் கூறும் எண்வகை மெய்ப்பாடுகளையும் அவை தோன்றுதற்குரிய உணர்ச்சிகளையும் விளக்கி, வடமொழியாளரின் ரசக்கொள்கையை, இலக்கியத்தைப் படிக்குங்கால் உண்டாகும் உணர்ச்சியை வடமொழியாளர் ரசம் என்பர். ரசம் என்பது தமிழில் சுவை எனும் பொருளுடையதாகும். ரசம் பல பாவங்களால் உண்டாகிறது. மக்கள் உள்ளத்தில் ஒவ்வொரு நேரத்தில் ஏற்படும் உளவேறுபாடு பாவம் எனப்படும் ரசத்திற்குக் காரணமாய் அமைவது விபாவம்; காரியம் அனுபாவம் எனப்படும். துணைக்காரணம் சஞ்சாரிபாவம் ஆகும். இம்மூன்றைக் கொண்டு வெளிப்படுவது ஸ்தாயி பாவம் ஆகும். இந்த ஸ்தாயிபாவமே ரசம் (இலக்கியத் திறனாய்வியல், ப. 79) என்று விளக்குவது தா.ஏ.ஞா.வின் பரந்துபட்ட புலமைக்கு நற்சான்று பகர்வதாம்.

அவலச்சுவையை அரிஸ்டாட்டில் கொள்கையின் துணை கொண்டும், துன்பியல் நாடகங்களின் துணை கொண்டும் விரிவாக விளக்குகிறார் தா.ஏ.ஞா. ‘அவலவீரர்கள்’ எனும் நூலைத் தா.ஏ.ஞா. அவர்கள் இயற்றியுள்ளமையும் ஈண்டு நினையத்தக்கதாம்.

கலைக்கு இன்றியமையாத உறுப்பான உணர்ச்சி, இலக்கியத்தில் பொருந்தியுள்ளது என்பதனை வின்செசுடர் கூறும் ஐவகை உணர்ச்சிகளைக் கூறி சீவகசிந்தாமணி, சங்க இலக்கியங்களின் துணைகொண்டு தெளிவுபடுத்துகிறார். வாழ்க்கையின் ஒழுக்கத்தையொட்டி உணர்ச்சிகள் ஏனைய உணர்ச்சிகளை விட தரத்தில் உயர்ந்தவை என முடிவாகக் கூறலாம். மானுட வாழ்க்கையின் மிக ஆழ்ந்த தன்மைகளை ஓர் இலக்கியம் நம் இதயத்தை நெகிழ்விக்கும் வண்ணம் உணர்த்துமாயின் அவ்விலக்கியம் நிலைபேருடைய மதிப்பு வாய்ந்ததாகும். ஓர் இலக்கியத்தின் தரத்தை மதிப்பிட இதனை மிகச் சிறந்த அளவுகோலாகக் கொள்ளலாம்... இலக்கியம் ஊட்டும் இத்தகைய நல்லுணர்ச்சியால் நமக்குப் புத்துணர்ச்சி நல்கி, நம் நல்லியல்புகளை நன்கு வளறுமாறு செய்யும் (இலக்கியத் திறனாய்வியல், பக். 104,105) என இலக்கியத்தின் பெருமையையும் தனித்தன்மையையும் அதில் உணர்ச்சி பெறுமிடத்தையும் நன்கு தெளிவுறுத்துகிறார் தா.ஏ.ஞா. அவர்கள்.

உணர்ச்சியைத் தூண்டும் உத்தி

‘கற்பனை’ என்னும் இயலில் கற்பனையைப் பற்றிய பொதுவான விளக்கங்களையும், மேனாட்டறிஞர்களின் விளக்கங்களையும் விளக்கும் தா.ஏ.ஞா., நம் அன்றாட வாழ்வினையும், சங்க இலக்கியம், சிலப்பதிகாரம், கம்பராமாயணம், சீவகசிந்தாமணி இன்னோரன்ன இலக்கியங்களின் துணைகொண்டு மிகச் சிறப்பாக விளக்குகிறார். கற்பனைக்கும் மனப்படைப்புக்குமுள்ள வேறுபாட்டை நவிலும் தா.ஏ.ஞா., ‘பதினெட்டாம் நூற்றாண்டில் முன் கண்ட காட்சியினை அல்லது அனுபவத்தினைச் சிறிதும் மாற்றமின்றி நினைவுக்குக் கொண்டுவந்து படைக்கும் திறன் கற்பனை என்றும், அதில் மாற்றம் செய்து விளையாட்டாகவும், வேடிக்கையாகவும் புதுமைகளைப் புகுத்திப் படைப்பது மனப்படைப்பு என்றும் கொள்ளப்பட்டு வந்தன’ என்கிறார். கற்பனையை முதனிலைக்கற்பனை, இரண்டாம்நிலைக் கற்பனை என இருவகைப்படுத்தும் தா.ஏ.ஞா., அவ்விருவகைக்கும் கம்பராமாயணம், சிலப்பதிகாரப் பாடல்களைச் சான்று காட்டி விளக்கி, ஐ.ஏ. ரிச்சர்ட்சு கற்பனையை ஆறு நிலைகளாகக் கூறுவதையும் சுட்டுகிறார்.

‘கவிஞரால் புதுமையாகப் படைக்கப்படும் உவமை உருவகங்கள் கற்பனையின் பாற்படும் என்று கொள்ளலாம். முன்னோர் இலக்கியங்களில் தொன்றுதொட்டு மரபாகப் பயின்று வரும் உருவகமும் உவமையும் கற்பனையாகக் கொள்ளுதல் பொருந்தாது. அத்தகைய உவமை உருவகங்கள் இலக்கியங்களில் காணப்பெறுமாயின் அவைகளைப் பொருள் விளக்க வந்தவை என்றே கொள்ளுதல் வேண்டும்’ என்று தா.ஏ.ஞா. இயம்புவது எண்ணத்தக்கதாம்.

இவ்வியலின் நிறைவாகக் கற்பனைப் பற்றி, இலக்கியத்தில் பயன்படுத்தும் கற்பனை கவிஞனின் செறிவான உணர்ச்சியினால் உருவாகின்றமையால் ஒரு கற்பனை எவ்வளவுக்கு எவ்வளவு உயர்தரமாக உள்ளதோ அவ்வளவுக்கவ்வளவு அது உணர்ச்சி செறிவுடையது என்பதை நாம் உணர்தல் வேண்டும். உணர்ச்சி செறிவற்றதாயும் மேற்போக்கானதாகவும் இருக்குமாயின் கற்பனை மிகவும் ஆற்றல்பொருந்தியதாக அமையாது. எனவே கற்பனையும் உணர்ச்சியும் ஒன்றையொன்று சார்ந்ததாய் வளர்ச்சியுறுதல் வேண்டும். இவ்விரண்டில் ஒன்று ஆற்றலற்றதும் முறையற்றதுமாக இருக்குமாயின் மற்றொன்றின் தரம் குறைந்துவிடும். இளங்கோவடிகள், திருத்தக்கதேவர், கம்பர் ஆகியோர்களுடைய கற்பனைகளை நாம் படிக்கும்போது அவர்தம் உணர்ச்சிகள் எத்துணைத் தரமுடையவை என்பதையும் அழகும் வன்மையும் வாய்ந்தவை என்பதையும் எத்துணைப் பொருத்தமும் கலையழகும் நிறைந்தவை என்பதையும் உணரலாம் (இலக்கியத் திறனாய்வியல், ப. 137) என்று தா.ஏ.ஞா. கூறுவது உன்னி உணரத்தக்கதாம்.

சீரிய கருத்துடையதே உயர்ந்த இலக்கியம் 

‘மானிட உண்மைகள்’ எனும் இயலில், 'மிகவுயர்ந்த கவிஞர்கள் பரந்துபட்ட வாழ்க்கை அனுபவமும், நடுநிலையுணர்வும், சிறந்தபொருள்களைப் பற்றி ஆழ்ந்த அறிவும் வாய்ந்தவர்களாவர். அவர்களால் படைக்கப்பெறும் இலக்கியங்களில் அவர்கள் காலத்தில் நிலவும் சூழ்நிலை, எண்ணங்கள் ஆகியவையும் நிலைபேறுடைய உண்மைகளும் நிறைந்திருக்கும். இளங்கோவடிகளும் திருத்தக்கதேவரும் கம்பரும் தத்தம் காப்பியங்களில் மானிட வாழ்க்கையை விளக்கியுள்ள அத்துணையளவு தத்துவ அறிஞர்கள் எவரும் விளக்கவில்லை எனலாம். தத்தம் காலத்தில் மேலோங்கி விளங்கிய சூழ்நிலைப் பண்பினை அவர்கள் விளக்கியுள்ளமை போல எந்த வரலாற்றாசிரியனும் விளக்கவில்லையென்று கொள்ளலாம். எனவே உயர்ந்த இலக்கியங்களில் சீரிய கருத்துக்கள் நிறைந்திருத்தல் வேண்டும் என்பது இதனின்றும் நன்கு புலனாகிறது. முன்பே குறிப்பிட்டது போல எவ்வளவுக்கெவ்வளவு ஒர் இலக்கியத்தில் உயர்ந்த கருத்துக்கள் ஆழ்ந்தகன்று நிறைந்துள்ளனவோ அவ்வளவுக்கவ்வளவு அதன் மதிப்பு உயர்வதாகும்’ என்பதனான், உயர்ந்த இலக்கியம் என்பது ஆழ்ந்தகன்ற; சீரிய கருத்துக்களையுடையதாகும் எனத் தெளிவுறுத்துகிறார்.

சிலப்பதிகாரம் உணர்த்தும் உண்மைகளையும், இலக்கியங்கள் என்பவை பழைய உண்மைகளை உணரச் செய்யும் தன்மையுடையது என்பதையும், தமிழ்க்காப்பியங்களில் இயற்கையிகந்த நிகழ்ச்சிகளையும், தன்னுணர்ச்சிப் பாடல்களின் தன்மை பற்றியும் விளக்கி, இலக்கியம் வாழ்க்கை உண்மைக்கும் பொருந்தியதாக இருத்தல் வேண்டும். அதன்கண் அமைந்துள்ள வாழ்க்கை உண்மையை ஒட்டியே அதன் மதிப்பு அளவிடப்பெறும். இலக்கியத்தின் சிறப்பு அதன் புறச் செய்திகளிலோ வியப்பார்ந்த செய்திகளிலோ அமைவதாக இல்லாமல் மானிட வாழ்க்கையின் உள்ளீடான உண்மையை ஒட்டியதாக இருத்தல் வேண்டும் (இலக்கியத் திறனாய்வியல், ப. 159) என்று வரையறுப்பார் தா.ஏ.ஞா.

‘கலை கலைக்காகவே’ என்னும் இயலில், 'கவிதை வெறும் முருகியல் இன்பத்திற்காகவும், சுவைக்காகவும் ஒலிநய இன்பத்திற்காகவும் படைக்கப்படுவதும் படிக்கப்படுவதும் பொருத்தமாகா என்பதும் அறவுணர்வையும் நீதிக் கருத்தையும் ஒழுக்கநெறி உண்மைகளையும் உணர்ச்சியோடு உணர்த்தவல்லதே சிறந்த கவிதை என்பதும் நமக்கு நன்கு விளங்குகின்றன’ என்று கலை என்பது மானிட உண்மைகளையும், அறநெறிகளையும் உணர்த்துவதாகவும் இருத்தல் வேண்டும் என்கிறார்.

உணர்ச்சியும் கற்பனையும் செறிந்த பொருள், யாப்போடு ஒருங்கிணைந்து பாட்டு உருவாகிறது. உரைநடையிலக்கியத்தினின்றும் பாட்டினை வேறுபடுத்துவது யாப்பேயாகும் என்று கூறும் தா.ஏ.ஞா., ஐ.ஏ. ரிச்சர்ட்சு பாட்டைப் பாகுபடுத்தும் ஆறு முறைகளையும் தெளிவாக்குகிறார்.

கலை வடிவங்கள்

‘காப்பியம்’ என்னும் இயலில், காப்பியம் பற்றியும், ஐம்பெருங்காப்பியங்கள். ஐஞ்சிறு காப்பியங்கள் பற்றியும், தண்டியின் காப்பிய விதிகள் பற்றியும் விளக்கித் தமிழ்க்காப்பியங்களின் அருமை பெருமைகளைப் பரக்கப்பேசுகிறார். காப்பியங்கள் மனித இனத்தை விழுமிய ஆன்மீக நிலைக்கு உயர்த்துதற்குரிய அறங்களை உணர்த்துகின்றன. அவற்றின் நிகழ்ச்சிகள் மனித சாதனைகளாகிய செயல்களின் நம்பிக்கைகொள்ளுமாறு செய்கின்றன. கதை மாந்தர்கள் மனிதனின் பெருந்தகவிலும் விழுமிய பண்பிலும் நம் நம்பிக்கையை மிகுவிக்கின்றனர் (இலக்கியத் திறனாய்வியல், ப. 266) என்று காப்பியங்களின் சிறப்பினை நமக்கறிவிக்கிறார்.

‘நாடகம்’ எனும் இயலில், நாடகத்தின் விளக்கத்தைக் கூறி, நாடகத்தின் கூறுகளான கதைக்கோப்பு, பாத்திரம், உரையாடல், பின்னணி, வாழ்க்கையின் பேருண்மைகள் இன்னோரன்னவற்றை விரிவாகவும் தக்க சான்றாதாரங்களோடும் விளக்கி மொழி, மேடைநெறிக் குறிப்பு, உரையாடல், சிக்கனம், பொருத்தம், ஓட்டம், தனிமொழி என்பவை நாடகத்தில் அமையும் முறை பற்றி விளக்கி, நாடகத்தின் அறிமுகம் அல்லது தொடக்கம், வளர்;ச்சி, உச்சம், வீழ்ச்சி, முடிவு என்பன பற்றியும் அவற்றின் இலக்கணங்களையும் தெளிவுற இயம்புகிறார் தா.ஏ.ஞா.

‘புதினம்’ எனும் இயலில், மேனாடுகளில் புதினம் பற்றியும், தமிழ்ப் புதினத்தின் தொடக்கநிலை, இருபதாம் நூற்றாண்டின் புதினங்கள் என்பவற்றை விளக்கி, நாடகத்திற்கும் புதினத்திற்கும் இடையேயான வேறுபாடுகளை உரைக்கின்றார். அவ்வாறே, புதினத்தின் இன்றியமையாத கூறுகளையும் விளக்கி, சிறந்த புதினத்தின் இயல்புகளையும் கூறி விளக்குகிறார். புதினத்தில் பாத்திரப்படைப்பு முறைகளையும் சான்றுகளோடு கூறுகிறார். அங்ஙனமே, வாழ்க்கையினின்று புதினம் தோன்றுகிறது. அதனால் அது வளர்கிறது. வாழ்க்கையில் அது எதிர்விளைவையும் உண்டாக்குகிறது. எனவே வாழ்க்கைக்கு அதற்குரிய பொறுப்பினைப் புறக்கணிக்கக்கூடாது. வாழ்க்கையில் எங்கும் ஒழுக்கநெறி உண்மைகளும் அவை பற்றிய சிக்கல்களும் நிறைந்துள்ளன. புதினம் வாழ்க்கைக்குரிய ஒழுக்கம் பற்றியவைகளையும் அது விளக்குவது இன்றியமையாததாகும் (இலக்கியத் திறனாய்வியல், ப. 318) என்று கூறும் பகுதி அறிஞர் தா.ஏ.ஞா. அவர்களின் ஆழ்ந்த சிந்தனையில் உதித்ததாம்.

‘சிறுகதை’ என்னும் இயலில் சிறுகதையின் இலக்கணம், கரு, முரண், எதிர்பார்ப்பு நிலை, சூழ்நிலை என்பவற்றின் இலக்கணங்களைத் தக்க சான்றாதாரங்களோடு நயம்பட விளக்குகிறார்.

‘கட்டுரை’ என்ற இயலில், கட்டுரையின் இலக்கணம், கட்டுரைக்குரிய பண்புகள், கட்டுரை ஆய்வில் கருத்திற்கொள்ள வேண்டிய உண்மைகள், இக்காலக் கட்டுரைகள் என்பவற்றைச் சுட்டுகிறார்.

‘இலக்கிய இயக்கங்கள்’ எனும் இயலில், மாறிவரும் நிலைகளைத் தக்க முறையில் உருவாக்கிக்காட்டும் பொருட்டு இலக்கியமும் அதற்கேற்ற வகையில் மாற்றமடைகிறது எனக் கூறி, நடப்பியல், இயற்கையியல், மார்க்சியமும் இலக்கியக்கொள்கையும், மனச்சாயலியல், வெளிப்பாட்டியல், படிமவியல், குறியீட்டியல், அடிமன இயல்பியல் என்னும் இலக்கிய இயக்கங்களை மிகத் தெளிவாக மொழிகிறார் தா.ஏ.ஞா.

நூலின் பெற்றி

தா.ஏ.ஞா. அவர்கள் தம் கருத்துக்களுக்குத் துணை நல்கும்படியான மொத்தம் முப்பத்தியிரண்டு அறிஞர்களின் கருத்துக்களை மேற்கோள்களாகக் காட்டி அவ்ஆங்கில அறிஞர்களின் நூல்களைத் தமிழ் மாணாக்கரும், இலக்கிய ஆர்வலர்களும் அறிந்து கொள்ளும் வகையில் செய்துள்ளார். (கருத்துடையோர் காண்பாராக) இத்துணை அறிஞர்களின் நூல்களை மாணாக்கர் கற்றறிதல் என்பது இயலாதாம். இச்சூழலில் மாணாக்கரிடம் இத்துணை அறிஞர்களை அறிமுகஞ்செய்து வைத்தமை பெரிதும் வியந்து போற்றற்பாலதாம். இதுவே இந்நூலின் தனிச்சிறப்பியல்பு என்பது இந்நூலை ஆழ்ந்து பயில்வார்க்குப் புலனாகும்.

இறுவாய்

மேற்கண்டவகையான் நோக்கின், தா.ஏ.ஞா. அவர்களின் ‘இலக்கியத்திறனாய்வியல்’ என்னும் ஆராய்ச்சிப்பெருநூல் தமிழிலக்கியம் பயில்வோரும், இலக்கிய ஆய்வு மேற்கொள்வோரும் திறனாய்வுக் கருத்துக்களை எளிமையாகப் புரிந்துகொள்ளவேண்டும் என்ற பெருநோக்கத்தோடும், மாணாக்கர் திறனாய்வுக்கலையை அறிந்து, இலக்கிய ஆய்வில் ஈடுபடுதற்கும் ஏற்ற வகையில் இயற்றப்பட்டதாகும். இந்நூல் அரைநூற்றாண்டுகளுக்கும் மேலாகத் தமிழிலக்கிய மாணாக்கரால் பயிலப்பட்டு வருகிறதென்பது இந்நூலின் தன்னேரில்லாச் சிறப்பாம். தவிர, தமிழ் முதுகலை மாணாக்கருக்கும், ஆய்வு மாணாக்கருக்கும் பல்லாண்டுகளாகத் திறனாய்வியலைப் பயிற்றுவித்த பேராசிரியர் தா.ஏ.ஞா. அவர்கள் தம் நுண்மாண் நுழைபுலத்தினாலும், தம் அறிவுணர்ச்சி முதிர்வினாலும் இந்நூலை இயற்றியளித்தார்கள் என்பதே இந்நூலின் தகுதிக்கும் உயரிய சிறப்பிற்கும் ஏதுவாம்.

துணை நின்ற நூல்கள்:

  • ஞானமூர்த்தி, டாக்டர் தா.ஏ. – ’இலக்கியத்திறனாய்வியல்’

                                                        ஐந்திணைப்பதிப்பகம், சென்னை -5, 

                                                         மூன்றாம் பதிப்பு - மார்ச்சு- 1990

            

2. விக்னேசு, முனைவர் வே. - ‘டாக்டர் தா.ஏ.ஞானமூர்த்தி அல்லது வாழ்வியல் வழிகாட்டி’    

                                            மணிவாசகர் பதிப்பகம், பாரிமுனை, சென்னை -8, 

                                            முதற்பதிப்பு – பிப்ரவரி- 2016