ஜூலை 2024 இதழுக்கு ஆய்வுக்கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன

நெடுங்குருதி  நாவல்   காட்டும் களவும்  கள்வர்  வாழ்வும்

முனைவர்.அ.ரேவதி உதவிப்பேராசிரியை (தமிழ்த்துறை) சவீதா கலை மற்றும் அறிவியல் கல்லூரி சென்னை. 27 Jul 2021 Read Full PDF

முனைவர்.அ.ரேவதி

உதவிப்பேராசிரியை (தமிழ்த்துறை)

சவீதா கலை மற்றும் அறிவியல் கல்லூரி

சென்னை.

ஆய்வுச்சுருக்கம்

         நெடுங்குருதி நாவலில் வரும் கள்வர் மற்றும் அவர்தம் களவு வாழ்வு மிகவும் நுட்பமானதாகும். அக்கள்வர்கள் தமது களவு காலத்தில் தனித்துவமான  பல்வேறு உத்திகளைப் பயன்படுத்தி உச்சத்தில் இருந்தனர். காலசுழற்சி அவர்களைத் தோல்வியுறச் செய்து ஒடுக்கப்பட்டவர்களாக மாற்றியது. . அக்கள்வர் பற்றியும் அவர்தம் களவு வாழ்வு பற்றியும் ஆராய்ந்து கூறுவதே இக்கட்டுரையின் நோக்கமாக அமைகிறது. 

திறவுச்சொற்கள் 

கள்வர் ,களவு ,களவுஉத்திகள் , ஒடுக்கப்பட்ட நிலை

முன்னுரை

         தற்காலத் தமிழ்ப் படைப்புலக எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் ஆவார். புதினங்கள் சிறுகதைகள் கட்டுரைகள் நாடகங்கள் குழந்தைகளுக்கான ஆக்கங்கள் திரைக்கதை திரைப்பட உரையாடல்கள் உள்ளிட்டப் படைப்புச் செயல்பாடுகளில் ஈடுபட்டு வருகிறார். சஞ்சாரம் என்னும் இவரது நாவலுக்காக 2018 ஆம் ஆண்டுக்கான சாகித்திய அகாதமி விருது வழங்கப்பட்டுள்ளது. பழனி வாழிய உலகநல நற்பணி மன்றம் இவரது நெடுங்குருதி நாவலுக்கு 2003 ஆம் ஆண்டுக்கான ஞானவாணி விருதினை வழங்கியது. இவரது நெடுங்குருதி நாவல் வேம்பலை என்னும் ஊரில் வாழும் கள்வர்கள் பற்றியும் அவர்தம் களவுத் தொழில் பற்றியும் நுட்பமாகப் பேசுகிறது.

கள்வர்கள் அறிமுகம்

             பாலை நிலத்தில் பயணம் மேற்கொள்ளும் மக்களிடமிருந்து பொருள்களை எல்லாம் கவர்ந்து வாழ்ந்து வந்தவர்கள் கள்வர்கள் என்று பாலை நிலக் கள்வர்கள் பற்றி சங்க இலக்கியம் கூறுகிறது. 

      ஆறலைக் கள்வர் படைவிட அருளின்

      மாறுதலை பெயர்க்கு மருவுஇன் பாலை1

என்ற பொருநராற்றுப்படை வரிகள் ஆறலைக் கள்வர்கள் பற்றி எடுத்துரைக்கிறது.  

           வேம்பலை என்னும் ஊர் பனையும் செம்பாறைகள் வெடித்துக் கிடக்கும் பாதைகளுக்கும் நடுவில் தகைவு கொண்டிருந்தது. அவ்வூரில் கீகாட்டு கொள்ளைக்குப் பெயர்போன கள்வர்கள் இருந்தார்கள். அவர்கள் வீட்டில் பிறக்கும் ஆண் குழந்தைகள் யாவருக்கும் பிறக்கும் போதே குதிங்காலில் வெட்டுத் தழும்பிருக்கும். அவர்கள் வழிப்பறிக் கொள்ளைக்குப் போய்த் திரும்பும் போது பிடிபட்டு தப்பிச் செல்லும் வழியில் வேம்பலையில் இருந்த வேப்பமரம் தன் வயிறு திறந்து உள்வாங்கிக் கொண்டு காத்ததென்றும் அவர்களைத் தேடி உறவுக்காரர்கள் வேம்பலைக்கு வந்த போது வேம்பு தன்னைத் திறந்து அவர்களை வெளிவிட்டது என்றும் அவர்கள் நம்பினார்கள். அன்றிலிருந்து அவ்வூரையே தங்கள் களவுத் தொழிலுக்கு ஏற்றதாக எண்ணி அங்கு குடியேறினர்.

அன்றிலிருந்து தங்கள் ஒளிவு வாழ்க்கைக்கு அந்த ஊரே சரியானது என        குடும்பத்தோடு  வேம்பலை வந்து சேர்ந்து விட்டார்கள் 2

என நெடுங்குருதி நாவல் கள்வர்களின் இருப்பிடம் பற்றி அறிமுகம் செய்கிறது. 

களவு வாழ்வு மற்றும் களவு உத்திகள்

         கண்முன்னே மானுட வாழ்க்கை பிரவாகமாகச் சுழித்துப் பெருகிச் சென்று கொண்டிருக்கிறது. அதிலிருந்து அள்ளி எடுக்கப்படுவதே கலை.வாழ்க்கையைப் பற்றிப் பேசுவதற்கே கலை3 

          என்ற கூற்றின்படி வேம்பர்களின் களவு வாழ்வு பற்றி இந்நாவல் பேசுகிறது. மழைகாலத்தில் கூட ஊர் தங்காமல் கள்வர்கள் தொலைதூர கிராமங்களை நோக்கிச் செல்வார்கள். திரும்பி வரும் நாட்களில் பண்டபாத்திரங்களும் தானிய மூடைகளும் கல் அட்டிகைகளும் ஆடு கோழிகளுமாக வீடு வந்து சேர்வார்கள். அது தீர்ந்து போகும் நாள் வரையே ஊரில் இருப்பார்கள். களவையே தங்கள் தொழிலாகக் கொண்டிருந்தாலும் அவர்களுக்கென சில கொள்கைகள் இருந்தன. அக்கொள்கைகள் மனிதநேயத்தை அடிப்படையாகக் கொண்டவையாக இருந்தன. 

 பெண்கள் வயசாளிகள் குழந்தைகள் புதுமணமானவர்களைக் கொள்ளையடிப்பதில்லை4

என்ற வரிகள் அவர்களின் மனிதநேயத்தை எடுத்துக் காட்டுவதாக அமைகிறது. தங்களது களவு காலத்தில் பிடிபட நேர்ந்தால் தங்களைக் காத்துக் கொள்ள பல்வேறு உத்திகளைக் கையாண்டனர். இதனை 

    குத்தீட்டி முனையில் வீரர்கள் சுற்றி வளைக்கவே வேம்பர்களில் ஒருவன் தனது வாயில் வெற்றிலை போன்ற பச்சையிலையை மென்று குதப்பித் துப்பினான். ஸர்ப்பங்களின் நாவு போல அவன் வாயிலிருந்து நெருப்பு சீறி எதிராளி முகத்தில் அடித்தது. மற்றவன் இதற்குள்ளாகக் கையில் வைத்துள்ள பிடிசாம்பலைக் காற்றில் ஊதி விட்டான். பார்த்துக் கொண்டிருந்த வீரர்களின் கண்கள் சுருங்கிக் கொள்ளப் பாக்கு மெல்லும் நேரத்தில் அவர்கள் மயங்கிச் சரிந்தனர். வீரர்கள் விழிப்பு வந்து எழுந்து கொள்வதற்கு இரண்டு நாட்களுக்கு மேலானது5 

என்ற வரிகள் விளக்கி நிற்கின்றன. மேலும் களவு காலத்தில் தாங்கள் பிடிபடாமல் இருக்க எச்செயலையும் ஆற்றக் கூடிய  உடல்வலிமையும் மனவலிமையும் அவர்களுக்கு உண்டு  என்பது, 

  ஒருவர் இருவரல்ல நாற்பத்தியிரண்டு வேம்பர்கள் ஒரே கிணற்றினுள் மழையில் இரவெல்லாம் மூழ்கிக் கிடந்திருக்கிறார்கள்6 

என்ற வரிகளில் புலனாகிறது. 

ஒடுக்கப்பட்ட நிலை

      களவு காலத்தில் பிடிபட நேர்ந்தால் கூட கள்வர்களின் உடல் வலியும் மனவலியும் சொல்லில் அடங்காத தன்மையுடன் விளங்குவதாகவே இருந்தது. பிடிபட்ட கள்வர்கள் துப்பாக்கியால் சுடப்பட்ட போதும் கூட எவரும் வேதனையில் அழவோ சிறிய முனங்கல் சப்தமிடவோ கூட இல்லை. மேலும், 

    அவன் படுத்திருந்த பாயில் காய்ச்சலின் சூடு பரவி நாணல் நிறம் 

    வெளிறிய போதும்   அவன் சப்தமிடவே யில்லை7 

  என்ற வரிகள் மூலம் பிடிபட்ட போதும் கள்வர்கள் நெஞ்சுரம் கொண்டு விளங்கிய தன்மையைக் காணமுடிகிறது. எவராலும் வேம்பலைக் கள்வர்களை அடக்க முடியாது என்ற நிலையினை வெல்சி துரை என்னும் கம்பெனி அதிகாரி மாற்றி அமைத்தான். துப்புக் கூலி கொடுத்து கள்வர்கள் வாழும் வேம்பலை ஊரைக் கண்டறிந்து வந்தான். எந்த கேள்விகளுக்கும் பதில் பேசாமல் இருந்த வேம்பர்களுக்கு இனிமேல் பேச்சு எதற்கு என ஊரிலிருந்த வயதானவர்கள் பெண்கள் குழந்தைகள் என அனைவருக்கும் தனது வளை கத்தியால் குரல் நரம்பையும் இந்த ஊரை விட்டு எவரும் இனி வெளியே செல்லவே கூடாது என குதிங்கால் நரம்பையும் அறுத்து எறிந்தான். இரத்தம் பீறிட்டுத் தெருவில் ஓடியது. கண்களில் கோபமும் வன்மமுமாக அவர்கள் வீழ்ந்து கிடந்தார்கள். பெண்கள் வயதானவர்கள் மற்றும் குழந்தைகள் என அவர்கள் களவு காலத்தில் காட்டிய மனிதநேயம் பிடிபட்ட காலத்தில் அவர்களுக்கு வழங்கப்படவே இல்லை. களவிற்காகத் தென்திசை போய் திரும்பிய மற்ற கள்வர்கள் குரல் அறுபட்டுப் போன மனைவி மக்களைக் காணும் போது நடுக்கம் கொண்டனர். 

   ஒரு குடும்பத்தின் வீழ்ச்சி என்பது எண்ணிக்கையற்ற நினைவுகளின் சிதறடிப்பு. அது வெறும் நிகழ்வல்ல. மாறாக புயலால் முறிந்த மரம் இல்லாததை அறியாமல் தூரத்துப் பறவைகள் அதே இடத்திற்கு வந்து வானில் தத்தளித்தபடியே வட்டமிடுவதைப் போல சொல்ல முடியாதவை8

என்ற வரிகளுக்கு இணங்க,  ஊனமுற்றவர்களாக ஆக்கப்பட்ட தனது குடும்ப உறுப்பினர்களின் நிலையைக் கண்ட கள்வர்கள் துயரத்தில் தத்தளித்த நிலையைக் காண முடிகிறது. மேலும், 

  இருப்பிடத்தையும் சொந்த மனிதர்களையும் வாழ்வாதாரங்களையும் இழந்த மனிதன் காற்றில் அடித்துச் செல்லப்படும் காகிதத்தைப் போல தன்னை ஊழின் கைகளில் ஒப்படைத்துக் கொள்கிறான்9  

 வெற்றி பெற்றவர்களை மட்டுமே வாழ்க்கை கொண்டாடுகிறது. தோல்வியுற்றவர்கள் மறக்கடிக்கப்பட்டு விடுகிறார்கள்10

    என்ற கூற்றுகள்,  அனைத்தையும் இழந்து தங்கள் வாழ்வாதாரமான குலத் தொழிலையும் இழந்து நிற்கும் கள்வர்களின் கையறுநிலையையும் வீழ்ச்சியையும் எடுத்துக் காட்டுவதாக அமைகிறது. 

தொகுப்புரை

  • நெடுங்குருதி நாவல் வேம்பலை எனும் ஊரில் வாழும் வேம்பர்களாகிய கள்வர்களின் களவு வாழ்வு பற்றி பேசுகிறது.
  • கள்வர்களாக இருந்தாலும் அவர்களுக்கென சில கொள்கைகள் கோட்பாடுகள் இருந்தன. அவை மனிதநேயத்தை அடியொற்றியதாக இருந்தன. 
  • பெண்கள் வயதானவர்கள் குழந்தைகள் புதுமணமானவர்களைக் கொள்ளையடிப்பதில்லை என்ற அக்கள்வர்களின் கொள்கை மூலம் அவர்கள் மனதின் அடியாழத்திலுள்ள ஈரத்தன்மை புலப்படுகிறது.
  • களவு காலத்தில் தங்களுக்கெனத் தனித்துவமான களவு உத்திகளைக் கையாண்டனர் அக்கள்வர்கள்.
  • களவு செய்யும் காலத்தில்  பிடிபட நேர்ந்தால் கூட அவர்களின் உடல்வலியும் மனவலியும் சொல்லில் அடங்காததாக இருந்தது.
  • இருப்பிடத்தையும் சொந்த மனிதர்களையும் வாழ்வாதாரங்களையும் இழந்த அக்கள்வர்கள் நாவல் முழுவதும் தோல்வியுற்றவர்களாகவே அடையாளம் காணப்படுகின்றனர்.

  முடிவுரை

         நெடுங்குருதி என்னும் நாவலில் காட்டப்படும் கள்வர்களின் களவு வாழ்வு எண்ணற்ற துயரங்களையும் பாடுகளையும் உள்ளடக்கியதாகவே உள்ளது. தேர்ந்த கள்வர்களாக இருந்த அவர்கள் வாழ்வு உச்சத்தில் இருந்த நிலை பற்றியும் ஒடுக்கப்பட்ட போது அவர்கள் உள்ள உணர்வு பற்றியும் இக்கட்டுரை எடுத்துரைக்கிறது. நெடுங்குருதி நாவல் கள்வர்களின் வாழ்வையும் களவுத் தொழிலின் நுட்பங்களையும் மட்டும் சுட்டவில்லை மாறாக இருண்ட வாழ்வின் ஊடாக அலைவுறும் மனிதர்களின் துயரையும் அழுத்தமாகப் பதிவு செய்துள்ள இந்நாவலை மேலாய்வு செய்ய வேண்டிய அவசியத்தையும் இக்கட்டுரை வலியுறுத்துகிறது. 

 

அடிக்குறிப்புகள்

1.  பத்துப்பாட்டு பொருநராற்றுப்படை அடிகள் 21 – 22 -  இணைய வழிக் கல்விக்கழகம்   (நூலகம்) 

2.  நெடுங்குருதி எஸ்.ராமகிருஷ்ணன் பக்க எண் - 32 இரண்டாம் பதிப்பு டிசம்பர் 2005  உயிர்மை பதிப்பகம் 11ஃ 29  சுப்பிரமணியம் தெரு அபிராமபுரம் சென்னை – 600018.

3.  புதிய காலம் ஜெயமோகன் முதல் பதிப்பு டிசம்பர் 2009 உயிர்மை பதிப்பகம் 11\ 29  சுப்பிரமணியம் தெரு அபிராமபுரம் சென்னை – 600018.

4.  நெடுங்குருதி எஸ்.ராமகிருஷ்ணன் பக்க எண் - 34 இரண்டாம் பதிப்பு டிசம்பர் 2005     உயிர்மை பதிப்பகம் 11ஃ 29  சுப்பிரமணியம் தெரு அபிராமபுரம் சென்னை – 600018.

5.  மேலது பக்க எண் 34

6.  மேலது பக்க எண் 39

7.  மேலது பக்க எண் 36

8.  குறத்தி முடுக்கின் கனவுகள் எஸ்.ராமகிருஷ்ணன் பக்க எண் 75 முதல் பதிப்பு 2010 

    உயிர்மை பதிப்பகம் 11ஃ 29  சுப்பிரமணியம் தெரு அபிராமபுரம் சென்னை – 600018.

9.   மேலது பக்க எண் 152

10. மேலது பக்க எண் 56

 

துணைநுாற்பட்டியல்

  • பத்துப்பாட்டு, பொருநராற்றுப்படை -  இணைய வழிக் கல்விக்கழகம்   (நூலகம்) 
  • நெடுங்குருதி, எஸ்.ராமகிருஷ்ணன், இரண்டாம் பதிப்பு, டிசம்பர் 2005,  உயிர்மை பதிப்பகம், 11\29  சுப்பிரமணியம் தெரு, அபிராமபுரம், சென்னை – 600018.
  • புதிய காலம், ஜெயமோகன், முதல் பதிப்பு, டிசம்பர் 2009 ,உயிர்மை பதிப்பகம் 

11\ 29  சுப்பிரமணியம் தெரு , அபிராமபுரம், சென்னை – 600018.

  • குறத்தி முடுக்கின் கனவுகள், எஸ்.ராமகிருஷ்ணன், முதல் பதிப்பு 2010,

உயிர்மை பதிப்பகம், 11\ 29  சுப்பிரமணியம் தெரு ,அபிராமபுரம், சென்னை – 600018.