ஜூலை 2024 இதழுக்கு ஆய்வுக்கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன

ஜெயமோகனின் நாவற்கோட்பாட்டு விதிகளும், அவருடைய நாவல்களும் (ஜெயமோகனின் ‘நாவல்’ இலக்கியத்தினை அடிப்படையாகக் கொண்ட ஆய்வு)

முருகையா சதீஸ் தமிழ்த்துறை யாழ்ப்பாணப்பல்கலைக்கழகம் இலங்கை. 27 Jul 2021 Read Full PDF

முருகையா சதீஸ்

தமிழ்த்துறை

யாழ்ப்பாணப்பல்கலைக்கழகம்

இலங்கை.

 

ஆய்வுச்சுருக்கம்

உரைநடையில் எழுதப்படுகின்ற நீண்ட கதைகூறும் இலக்கியமாக நாவல் அமைகின்றது. நாவல் இலக்கியம் தொடர்பில் பல்வேறுபட்ட விளக்கங்களும், விவாதங்களும் இடம்பெறும் நிலையில், ஜெயமோகன் தனது அறிவு, திறமை, ஆற்றல், அனுபவம் என்பவற்றுக்கு ஏற்ப “நாவல்” எனும் இலக்கியத்தைப் படைத்து, ஒரு நாவல் எப்படி எழுத வேண்டும் என்பது பற்றியும், நாவலுக்கான சில கோட்பாடுகள், விதிகள், பண்புகள் என்பன குறித்தும் அந்நூலில் குறிப்பிட்டுள்ளார். ஆகவே அவர் நாவல்கோட்பாடு தொடர்பாகக் கூறிய வரையறைகளை அல்லது விதிகளைத் தன்னுடைய நாவல்களில் கையாண்டுள்ளாரா? என்பதை ஆராய்வததே இக்கட்டுரையின் நோக்காகும். அவ்வகையில், ஜெயமோகன் தன்னளவில் சரியெனப்பட்டவற்றை நாவலுக்குரிய விதிகளாகத் தந்துள்ளார். ஒரு நாவலாசிரியர் என்றவகையில் அவ்விதிகளைப் பின்பற்றி நாவல்களைப் படைப்பதில் வெற்றியும் கண்டுள்ளார் எனலாம். இவ்வாய்விற்கு, முதலாம் நிலைத்தரவுகளாக ஜெயமோகனின் “நாவல்” இலக்கியமும், “அவருடைய நாவல்களும்” பயன்படுத்தப்பட்டுள்ளதுடன், இரண்டாம் நிலைத்தரவுகளாக அவருடைய நாவல்கள் தொடர்பான கட்டுரை நூல்கள், இதழ்கள், மின்னூடகக் கருத்துக்கள் போன்றவையும் பயன்படுத்தப்பட்டுள்ளன. இவ்வாய்வானது, ஜெயமோகனின் நாவற்படைப்புசார் ஆய்வுகளை மேற்கொள்பவர்களுக்கு ஒரு திறவுகோலாக அமையும் என நம்பலாம்

திறவுச் சொற்கள்: ஜெயமோகன், நாவற்கோட்பாடு, விதிகள், நாவல்கள்.

அறிமுகம்

தமிழ் நாவல் உலகில் தனித்துவம் பெறும் ஒருவர் ஜெயமோகன். இவரை நீக்கிவிட்டுத் தமிழ்நாவல் வரலாற்றை முழுமையாக நாம் விளங்கிக் கொள்ள முடியாது. அத்தகைய அளவிற்கு வல்லமையும், படைப்பாளுமையும் கொண்டு திகழ்பவர். தமிழ் நாவல் உலகில் நாவல்கள் பலவற்றை எழுதியதோடு மட்டும் நின்றுவிடாமல் தன் திறமைக்கும், ஈடுபாட்டிற்கும், அனுபவத்திற்குமேற்ப ‘நாவற்கோட்பாடு’ சார்ந்த நூலொன்றையும் எழுதியுள்ளார். நாவல் இலக்கியம் தொடர்பில் பல்வேறுபட்ட விளக்கங்களும், விவாதங்களும் இடம்பெற்றவண்ணமுள்ளன. 

நாவலிற்கு இலக்கண ரீதியான விதிகள் என்று சொல்லத்தக்க வகையில் எதுவுமில்லை. ஆனாலும் தத்தம் அறிவு, அனுபவம், ஆளுமைகளுக்கு ஏற்ப ‘நாவற்கோட்பாடு’ குறித்த விவாதங்களையும், விளக்கங்களையும், காலத்திற்குக் காலம் மாறுதல்களுக்கு உட்பட்டு அறிஞர்கள் பலரும் நிறுவிவருகின்றனர். அவ்வகையில் ஜெயமோகனும் தன்சிந்தனைக்கு ஏற்ற வகையில் நாவல் இலக்கியம் குறித்த விதிகளை ‘நாவல்’ எனும் நூலில் எடுத்துக்காட்டியுள்ளார். ஒரு நாவல் எப்படி எழுத வேண்டும் என்பது பற்றியும், நாவலுக்கான சில கோட்பாடுகள், விதிகள், பண்புகள் என்பன குறித்தும் அந்நூலில் குறிப்பிட்டுள்ளார். ஆகவே அவர் நாவல்கோட்பாடு தொடர்பாகக் கூறிய வரையறைகளை அல்லது விதிகளைத் தனது நாவல்களில் கையாண்டுள்ளாரா? என்பதை ஆராய்வதாக இக்கட்டுரை அமைகின்றது.

ஆய்வு நோக்கம்

நாவல் தொடர்பாக ஜெயமோகன் கூறியிருக்கும் விதிகளும், கோட்பாடுகளும் அவர் எழுதிய நாவல்களில் பயிலப்பட்டு வந்துள்ளனவா? என்பதை நிறுவுவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

 

ஆய்வு முறையியல்

இவ்வாய்வானது பண்புசார் முறை, விபரணப் பகுப்பாய்வு முறை மற்றும் மதிப்பீட்டு முறை ஆகிய அணுகுமுறைகளைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாய்விற்கு முதலாம் மற்றும் இரண்டாம் நிலைத் தரவுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. முதலாம் நிலைத்தரவுகளாக ஜெயமோகனின் “நாவல்” இலக்கியமும், “அவருடைய நாவல்களும்” பயன்படுத்தப்பட்டுள்ளதுடன், இரண்டாம் நிலைத்தரவுகளாக அவருடைய நாவல்கள் தொடர்பான கட்டுரை நூல்கள், இதழ்கள், மின்னூடகக் கருத்துக்கள் போன்றவையும் பயன்படுத்தப்பட்டுள்ளன.

ஜெயமோகன் குறித்த பார்வை

தமிழகத்தின் குறிப்பிடத்தக்க எழுத்தாளர்களுள் ஒருவர் ஜெயமோகன் ஆவார். இவர் மிகப்பரவலான கவனத்தை ஈர்த்த நாவல்களை எழுதியுள்ளார். தனது புனைவுகளின் மூலம் மனித மனத்தின் அசாதாரண ஆழங்களையும், நுட்பங்களையும் திறம்பட எடுத்துக்காட்டியுள்ளார். இவர் சிறுகதை, நாவல், கவிதை, விமர்சனம், சிறுவர் இலக்கியம், மொழிபெயர்ப்பு நூல்கள் எனப்பல்வேறு தளங்களில் நின்று தனது ஆளுமைகளை வெளிப்படுத்தியுள்ளார். இவருடைய நாவல்களாக, ரப்பர்(1990), விஸ்ணுபுரம்(1997), பின்தொடரும் நிழலின்குரல்(1999), காடு(2003), கன்னியாகுமரி(2000), ஏழாம் உலகம்(2003), பனிமனிதன்(சிறுவர் புதினம்), அனல்காற்று, இரவு, உலோகம், வெள்ளையானை, கன்னிநிலம், வெண்முரசு(மகாபாரதத்தின் தமிழ் நாவல் வடிவம்) முதலியவற்றைக் குறிப்பிடலாம். 

ஒரு குறிப்பிட்ட விவாதச்சூழலின் விளைவாக 1992 ஆம் ஆண்டில் ஜெயமோகனால் எழுதப்பட்ட நூலே “நாவல்” நூலாகும். பல்வேறுபட்ட தர்க்கங்களையும், விவாதங்களையும் முன்வைப்பதாக இந்நூல் அமைகின்றது. நாவல் என்ற வடிவத்தின் மீது அதிக கவனம் திரும்புவதற்கான பாதையை அமைத்துக்கொடுத்ததில் இந்நூலுக்கு அளப்பெரிய பங்குண்டு. இதனை ஒரு விமர்சன நூலாகப்பலரும் நோக்குவர். ஆனால் ஜெயமோகன் கூறுகையில் “இது ஒரு விமர்சன நூல் அல்ல. இது ஒரு படைப்பாளி, படைப்பு வடிவம் பற்றி முன்வைக்கும் திறந்த சிந்தனைகள் அன்றி வேறில்லை” என்கிறார்.

 இவர் 1988 ஆம் ஆண்டு எழுதிய ‘ரப்பர்’ எனும் புதினத்தை 1990 இல் அகிலன் நினைவுப் போட்டிக்காகச் சுருக்கி எழுதியனுப்பி அதற்கான விருதைப் பெற்றார். இதுமட்டுமன்றி 1992 ஆம் ஆண்டுக்குரிய ‘கதாவிருது’, 2008 ஆம் ஆண்டு பாவலர் விருது முதலியவற்றையும் பெற்றார். 2010 ஆம் ஆண்டு இவரது ‘விஸ்ணுபுரம்’ நாவலிற்கு விஸ்ணுபுரம் இலக்கிய வட்டம் விருது ஒன்றை வழங்கியதும் குறிப்பிடத்தக்கது.

நாவற்கோட்பாட்டு விதிகளும், நாவல்களும்

  • வாழ்கையின் முழுமை

நாவல் என்பது வடிவக்கற்பனைகளை உருவாக்கியதில் ருசியப் பேரிலக்கியப் படைப்புகளுக்குப் பெரும் பங்குண்டு. ருசியப் பேரிலக்கியங்கள் மூலம் நாவலிற்கு உலகளாவிய தளத்தில் ஏற்பட்ட பொதுவான இலக்கணங்கள் மிகமுக்கியமானது என்கிறார் ஜெயமோகன். அவற்றுள் முதன்மையாகக் கூறவேண்டியது, நாவல் என்பது வாழ்வின் முழுமையைச் சித்திரிக்க முயல வேண்டிய ஒரு இலக்கிய வடிவம் என்ற கருத்தாகும்.1 (ஜெயமோகன், நாவல், பக்.3). இவரது “ஏழாம் உலகம்” என்னும் நாவலிலும் இவர் தனது “நாவல்” நூலில் கூறியது போல வாழ்வின் முழுமையினைச் சித்திரிக்கிறார். நாம் அறியாத இருண்மை உலகத்தில் இருந்து அள்ளிக்கொடுத்த கைப்பள்ளத்து நீர்தான் ஏழாம் உலகம். அதன் இயல்பே அந்த இருண்ட உலகத்தின் பிரதிநிதியாக இருப்பதாகும். மனிதனே மனிதனை விற்றுப் பணம் சம்பாதிக்கும் ஒரு கோரமான வாழ்க்கையை இந்நாவலில் எடுத்துக்காட்டுகின்றார்.

 “ரப்பர்” என்னும் நாவலில் கூலிவேலைக்கு வந்த ‘பொன்னு’ என்ற கதாபாத்திரம் மெல்ல மெல்ல காட்டை ஆக்கிரமித்து ரப்பர் வேளாண்மை செய்து பெருவட்டனாக மாறுவதும், அடுத்த தலைமுறையில் செல்வம் உருவாக்கும் சீரழிவுகளால் அக்குடும்பம் வீழ்ச்சி அடைவதுமாகக் காட்டியுள்ளார் ஜெயமோகன். “வெள்ளையானை” எனும் நாவலில் தென்னிந்தியாவில் 1877 இல் வந்த மாபெரும் பஞ்சத்தின் பின்னணியில் தலித்மக்கள் சரிபாதியாக இறந்தமையையும், ஒருபக்கம் வெள்ளையரும் மறுபக்கம் சாதிவெறியர்களும் அதற்குப்பொறுப்புக் காட்டுவதாகவும், முதல் தலித் எழுச்சியின் பிரதிபலிப்பையும் இந்நாவல் காட்டுகின்றது. எனவே ஜெயமோகனின் நாவல்கள் வாழ்வின் முழுமையைச் சித்திரிக்கும் வண்ணம் படைக்கப்பட்டுள்ளன எனலாம்.

  • அனுபவங்களின் தொகுப்பு

“எனது பெரும்பாலான நாவல்கள், அனுபவங்கள் அனைத்தையும் தொகுத்து வகைப்படுத்தி முழுமையை உண்டுபண்ண முயல்கிறது” என்கிறார் ஜெயமோகன். இதனையே நாவலுக்கு உரியது என்று ருசியப் பேரிலக்கியங்கள் நிறுவுகின்றன. “நாவல்” என்பது தத்துவத்தின் கலைவடிவம் என்ற பிரபலக் கோட்பாட்டின் அடித்தளம் இதுவே என்கிறார்.2 (ஜெயமோன், நாவல், பக்.4). இவர் வாழ்க்கையைப் பல கோணங்களில் இருந்து நன்கு கவனித்து “ஏழாம் உலகம்” என்னும் நாவலை எழுதியிருக்கிறார். வாழ்வின் அனுபவங்களைத் தான் கண்டு களித்ததாகவே இவர் கூறுகிறார். “எனது பெரும்பாலான நாவல்களைப் போலவே கரு, பதினெட்டு வயதிலிருந்து இருபத்து மூன்று வயது வரையான நிம்மதியற்ற அலைச்சலின் போதுகிடைத்த நேரடி அனுபவங்களின் அடுத்த கட்ட வளர்ச்சியே” என்கிறார். 

படைப்பொன்றின் முழுமை என்பது இருவகையில் சாத்திய மாகின்றது என்கிறார். ஒன்று அனுபவத்தைக் கூறுகளாகக் கொண்டு அக்கூறுகளில் ஒன்றின் சாராம்சத்தை முழுமையாகக் குறிப்பாலுணர்த்துவதாகும். இதையே கவிதைகள், காவியங்கள், சிறுகதைகள் செய்கின்றன என்கிறார். மற்றையது அனுபவங்கள் அனைத்தையும் தொகுத்து வகைப்படுத்தி முழுமையை உண்டுபண்ண முயல்வது. இவ்வகைச் செயற்பாடுதான் நாவலுக்குரியது என்கிறார்.

“பின்தொடரும் நிழலின் குரல்” என்ற நாவல் அரசியல் நாவலாகப் படைக்கப்பட்டுள்ளது. சோவியத் ஒன்றியத்தில் கம்யூனிசம் வீழ்ச்சியடைந்து அந்த நாடு சிதறியதன் பின்னணியில் அரசியலுக்கும் அறத்திற்கும் இடையிலான அனுபவ வெளிப்பாடுகளாய் இந்நாவல் படைக்கப்பட்டுள்ளது. “அனல்காற்று” எனும் நாவலைப் பாலியல் உறவுச்சிக்கல்களைப் பேசும் தன்மையில் அமைத்துள்ளார். இந்த நாவலின் கதாநாயகன், அவனைவிட மூத்தவயதுடைய தன்தாய்க்குத் தோழியாக இருக்கும் ஒரு பெண்ணிடம் பாலியல் தொடர்பு கொள்கிறான். அவனுக்கு இன்னொரு பெண்ணைத் திருமணம் முடிக்க அவனது தாய் முயல்கிறாள். அப்போது அவ்வுறவு பலவகையான உளவியல் நெருக்கடிக்கு உள்ளாகின்றது. இவ்வாறு மனித மனத்தின் பலவகையான, நுட்பமான அறச்சிக்கல்களையும், தயக்கங்களையும், தான் சமூகத்தில் கண்ட அனுபவங்களையும் உள்வாங்கி ஜெயமோகன் நாவலைப் படைத்துள்ளார்.

  • வாழ்வின் சிக்கல்கள்

நாவல் ஒருமையும், குவிதலும் உள்ளதாக இருத்தலாகாது. நாவலின் நகர்வு ஒரேதிசை நோக்கியதாக இருக்கக் கூடாது. வலைபோல நாலாபுறமும் பின்னிப்பின்னி விரிவடைவதாக இருக்க வேண்டும். நாவலின் ஆகிருதி ஒரே பார்வையில் முழுமையாகப் பார்த்துவிடக் கூடியதாக இருக்கக் கூடாது என்கிறார் ஜெயமோன்.3 (ஜெயமோகன், நாவல், பக்.4). இவரின் “ஏழாம் உலகம்” நாவலில் வாழ்வின் சிக்கல்களைக் காட்டுவதாகவும், விரிவைத்தொட முயல்வதாகவும் உள்ளது. வாழ்க்கை என்பது எவ்வளவு பெரிய சிக்கலானது என்பதை இந்நாவல் தன்னளவில் முழுமையாக எடுத்துத் தருகிறது. நாவலின் மையக்கருவே குறைப்பிறவிகளை வைத்து அவர்களது உழைப்பில் வாழும் முதலாளிமாரைப் பற்றியதும், அக்குறைப்பிறவிகள் அனுபவிக்கும் கொடுமைகள் பற்றியதுமாகும். 

நாவலை இயக்கிச் செல்பவர் ‘போத்துவேலிப்பண்டாரம்’. அவரது செயற்பாடுகள் வாழ்க்கையின் சிக்கலை எடுத்துக் காட்டுவதாகவே உள்ளது. சமூகத்தில் எதற்கும் பயன்படாதவர்கள் என்று அடையானப்படுத்தப்பட்ட நோயுற்றவர்கள், குறைப்பிறவிகள் என்போரைத் தனது தொழிலுக்கான மூலதனமாகப்பயன்படுத்துகின்றார். தமது குடும்பத்தின் நிம்மதியான வாழ்க்கைக்காக அந்த ஜீவன்களுக்குக் கொடுமைகள் பலவற்றைச் செய்து அவர்களைத் துன்பக்குழிக்குள் தள்ளிவிடுகின்றார். இதனைப்பற்றி ஜெயமோகன் குறிப்பிடும் போது, “உருப்படிகள் அனுபவிக்கும் வலிகளும், வேதனைகளும் வாழ்க்கைச் சிக்கலின் முழுவடிவமாக விளங்குகின்றது” என்கிறார்.

“வெள்ளையானை” நாவல் ‘எய்டன்பைர்ன்’ என்ற அயர்லாந்து காவல்த்துறை அதிகாரியின் பார்வையில் சொல்லப்படுவதாக அமைகின்றது. ஐஸ்ஹவுஸ் தொழிலாளர் ஒருவர் தாக்கப்படுவதைக் கண்டு அதை விசாரிக்கச் செல்கிறார் எய்டன். அங்கே அந்தத் தொழிலாளர்கள் சுரண்டப்படுவதைக் காண்கிறான். காணாமல் போன அந்தத் தொழிலாளர்களைத் தேடிச் செல்பவன் கறுப்பர்சேரி எனப்படும் தலித்குடியிருப்பைக் காண்கிறான். அந்த மக்கள் அனைவரும் பெரும் பஞ்சத்தின் விளைவான அகதிகள் என்பதை அறிகிறான். 

அந்தப்பஞ்சத்தை நேரில் சென்று பார்த்து அதிர்ச்சி அடைகிறான். பஞ்சத்தை வெள்ளை அரசு செயற்கையாக உருவாக்கியது என்பதை அறிகிறான் எய்டன். அந்தப் பஞ்சத்தை அரசு நினைத்தால் தவிர்க்க முடியும் என நினைத்து அதற்கு முயல்கிறான். அரசு அவனைத் தன் ஊழலுக்குப் பயன்படுத்துகிறது. எய்டன் ஐஸ்ஹவுஸில் ஒரு போராட்டத்தை உருவாக்குகிறான். அது ஒடுக்கப்படுகிறது. இவ்வாறு வலைபோல நாலாபுறமும் பின்னிப்பிணைந்த வாழ்வியலின் சிக்கல்களை இந்நாவலில் ஜெயகாந்தன் வெளிப்படுத்தியுள்ளார்.

  • நாவலின் மௌனம் 

நாவலின் மௌனம் அதன் இடைவெளிகளிலேயே இருக்கமுடியும். அனுபவங்களைத் தொகுப்பதன் மூலம்தான் நாவல் தன் இலக்கை அடைய முயல்கிறது. அவ்வனுபவங்களின் பிணைப்பு, விலக்கம் ஆகியவற்றின் மூலம்அது ஒரு விதத்தில் முழுமையை அல்லது முடிவின்மையைத் தொட முயல்கிறது எனலாம். எனவே நாவலில் விடப்படும் அல்லது உருவாகும் இடைவெளிகள் மிக முக்கியமானவை. அவை ஒவ்வொன்றிலும் எழுதப்படாத இன்னொரு நாவல் ஒளிந்துள்ளது.4 (ஜெயமோகன், நாவல், பக்.6). 

இலக்கியப் படைப்பின் வடிவம் பற்றிய பேச்சு இன்னொரு கோணத்தில்அதன் மௌனத்தை எங்கு அமைப்பது பற்றியதாகும். கவிதையில் அதன் மௌனம் சொற்களுக்கிடையில் இருக்கிறது என்றும், நாவலின் மௌனம் அதன் முடிவிற்குப் பிறகு இருக்கிறது என்றும், அது இடைவெளிகளிலே உள்ளது என்றும் கூறுகிறார். எனவே நாவலின் அத்தியாயங்களுக்கிடையே அம்மௌனம் இருக்கிறது எனலாம். வாசகன் மௌன இடைவெளிகளைத் தன்னுடைய கற்பனையால் நிரப்பும் போதுதான் அவனுக்கு நாவலின் பிரமாண்டத் தோற்றம் கிடைக்கின்றது.

“ஏழாம் உலகம்” நாவலின் மௌனத்தை அத்தியாயங்களின் இடைவெளிகளில் காட்டுகிறார். சொல்ல விளைவதல்ல மௌனம். ஆசிரியர் சொல்லுவதைவிடச் சொல்லாமல் இருப்பதே ஆகும். ஜெயமோகன் நாம் அறிந்திராத இருண்ட பகுதியை எடுத்துக்காட்டுகின்றார். ஆனால் அவ்வுலகம் நாம்வாழும் உலகம்தான் என்பதை நாம் உணர வேண்டும். “ஏழாம் உலகம்” என்பது வேறு எங்கயோ அல்ல என்பது இங்கு முக்கியமானது. 

போர்த்துவேலிப்பண்டாரம் கூறும் வார்த்தைகள் ஏழு உலகமும் நாம் வாழும் இந்த உலகத்தில்தான் உள்ளன என்பதைக்காட்டுகின்றன. உதாரணமாக, “ஏழாம் உலகம் பாதாளம். அங்கே இருக்குததெல்லாம் வேதாளங்கள். சும்மா ஒரு கோபுரத்த நிமிந்து பாரு தெரியும். எல்லாப் பயங்hர வடிவங்களையும் செதுக்கி வைச்சிருக்கான். பழனிக்குப் படியேறிப் போறவன் ஏழு பாதாளலோகத்தையும் பார்த்துட்டுத்தான் பழனியாண்டியைப் பார்க்குதான்” என்ற கூற்று இதனை எடுத்துக்காட்டுகின்றது.

 “கன்னிநிலம்” எனும் நாவல் மணிப்பூர் ஆயுதக்கலவரத்தின் பின்னணியில் எழுதப்பட்டது. நெல்லையப்பன் என்ற இந்திய இராணுவ அதிகாரி மணிப்பூர் போராளியான ஜ்வாலா என்ற இளம் பெண்ணைக் கைது செய்கிறான். அவள் தப்பி ஓடுகையில் அவளைப்பிடிக்கிறான். அந்தப் பயணம் வழியாக அவர்களுக்குள் காதல் உருவாகிறது. நாடு எல்லைகளைக் கடந்து அது காதலாக மலர்கிறது. இவ் நாவலின் மௌனம் அரசியலையும் பேசிச் செல்வதாகப் படைக்கப்பட்டுள்ளது.

  • வடிவமற்ற வடிவம்

ஒரு நாவல் எங்கும் தொடங்காது. எங்கும் முடியவும் முடியாது. அதன் தொடக்கத்திற்கு முன்னும், முடிவிற்குப் பின்னும் முடிவின்மை உள்ளது. இதன் மூலம் உருவாகும் பிரமிப்பு நாவலின் அடிப்படை இயல்பாகும். காலதரிசனம் இல்லாமல் நாவல் இருக்க முடியாது. காலம், தொடக்கமும் முடிவும் அற்றது. இதன் மூலம் “வடிவமற்ற வடிவம்” நாவலிற்கு உருவாகிறது என்கிறார் ஜெயமோகன்.5 (ஜெயமோகன், நாவல், பக்.6). “ஏழாம் உலகம்” நாவலின் தொடக்கம் இருள் கலையாத அதிகாலை வேளையில் நாவலின் முதன்மைப்பாத்திரமாகிய பண்டாரம் அவரது மனைவியுடன் பேசுவதிலிருந்து சாதாரணமாகவே ஆரம்பிக்கின்றது. 

நாவலின் முடிவில் ஜெயமோகன் எந்தவொரு முடிவையும் வாசகர்களுக்குச் சொல்லிவிட்டுச் செல்லவில்லை. வாசகர்களே ஊகித்து முடிவைக் கண்டுகொள்ளுமாறு நாவலின் முடிவை அமைத்திருக்கிறார். அம்முடிவு என்பதுதான் நாவலின் முடிவு என்று நினைத்துவிட முடியாது. குறைப்பிறவிகளுக்குத் துன்பம் செய்யும் பண்டாரம் இறுதியில் தக்க பலனை அனுபவிப்பது நாவலில் காட்டப்படவில்லை. அந்தச் சிந்தனை வாசக மனங்களில் பதியவிட்டு நாவலை முடித்திக்கிறார். எனவே தொடக்கத்திற்கும். முடிவிற்கும் அப்பால் வாசக மனங்களில் முடிவில்லாத தன்மை தொடர்வதைக் காணலாம்.

“வெள்ளையானை” என்ற நாவலிலும் தலித் மக்கள் பஞ்சத்தால் இறந்த செய்தியைக் கண்டு எய்டன் அந்தப்பஞ்சத்தை நேரில் சென்று பார்த்து அதிர்ச்சி அடைகின்றான். பஞ்சத்தை வெள்ளை அரசு செயற்கையாக உருவாக்கியது என்பதை அறிந்தான். அந்தப் பஞ்சத்தை அரசு நினைத்தால் தவிர்க்க முடியும் என்று நினைத்து அதற்கு முயல்கின்றான். அரசு அவனைத் தன் ஊழலுக்குப் பயன்படுத்துகின்றது. எய்டன் ஐஸ்ஹவுஸில் ஒரு போராட்டத்தை உருவாக்குகின்றான். அது ஒடுக்கப்படுகின்றது. என நாவலை முடிக்கின்றார் ஜெயமோகன். ஆனாலும் இம்முடிவிற்கு அப்பால் முடிவில்லாத பயணமாய் நாவல் வாசக மனங்களில் தொடருகின்றது என்பதே உண்மை. எனவே ஜெயமோகன், ஒரு நாவல் எங்கும் தொடங்காது. எங்கும் முடியாது. அதன் தொடக்கத்திற்கு முன்னும், முடிவிற்குப் பின்னும் முடிவின்மை உள்ளது என்பதைத் தன்னுடைய நாவல்கள் மூலம் வெளிப்படுத்தியுள்ளார்.

  • தரிசனங்கள்

நாவல் என்பது கலை ரீதியான ஒரு மாபெரும் விவாதம் எனப்படுகிறது. தத்துவமின்றி விவாதம் இல்லை. எனவே தத்துவமின்றி நாவலுமில்லை. காவியத்தில் தத்துவம் தரிசனங்களை உண்டுபண்ண உதவுகிறது என்றால் நாவலில் அது தரிசனங்களை உடைத்து ஆராய்கிறது. நாவல் தரிசனங்களை முறுக்குவதில்லை. அவிழ்க்கிறது. மையமான தரிசனத்தை வலியுறுத்துவதற்குப் பதில் அவற்றை அவிழ்த்துப்பார்க்கும் தன்மை நாவலின் பண்பாகிறது என்கிறார் ஜெயமோகன்.

 “ஏழாம் உலகம்” எனும் நாவலில் கற்பு கேள்விக்குள்ளாக்கப்படுகின்றது. ‘முத்தம்மை’ குறைப்பிறவி ஆண்களால் பதினெட்டுத் தடவைகள் கற்பழிக்கப்படுகின்றாள். அவளிற்குக் கற்பு இல்லையா? அவளது விருப்பமின்றி அவளது கற்பு பறிக்கப்படுகின்றது. இதனால் அவள் கற்பை இழந்தவளா? கற்பு என்பது என்ன? என்ற கருத்துக்களை இந்நாவல் தோற்றுவிக்கிறது. இதைப்போல ‘எருக்கு’ என்பவளும் காவல்துறையினரால் சீரழிக்கப்படுகின்றாள். சட்டத்தினைப் பாதுகாக்க வேண்டியவர்களே அநீதி இழைக்கின்றனர். இவர்களுக்குத் தண்டனை இல்லையா? அவளிற்குக் கற்பு இல்லையா? என்ற விவாதங்களை இந்நாவல் மூலம் ஜெயமோகன் எழுப்புகின்றார்.

“அனல்காற்று” என்ற நாவலிலும் பாலுறவைக் கேள்விக்குள்ளாக்குகின்றார். நாவலின் கதாநாயகன், அவனைவிட மூத்த வயதுடைய தன்தாய்க்குத் தோழியாக இருக்கும் ஒரு பெண்ணிடம் பாலியல் தொடர்பு கொள்கிறான். அவனுக்கு இன்னொரு பெண்ணைத் திருமணம் முடிக்க அவனது தாய் முயல்கிறாள். அப்போது அவ்வுறவு பலவகையான உளவியல் நெருக்கடிகளுக்கு உள்ளாகின்றது. இங்கு தாய்க்கு நிகரான பெண்ணுடன் உறவு கொள்வது தகுமா?, அதனைச் சமூகம் ஏற்றுக்கொள்ளுமா?, ஆண்கள் வயது வேறுபாடின்றி பாலியல் தொடர்பைப் பேணலாமா?, பெண்களின் கற்பு இங்கே மீறப்படாதா? என்ற கேள்விகளையும், விவாதங்களையும் இந்நாவல் எழுப்புகின்றது.

  • யதார்த்த மரபு 

யதார்த்த வாதம் பௌதீகவாதத்தின் கலைரீதியான எதிர்வினை. யதார்த்தமரபுதான் நாவலின் தனித்த கலைவடிவத்தினை உருவாக்கியது.6 (ஜெயமோகன், நாவல், பக்.22). யதார்த்த வாத மரபின் முதல்சாதனை நாவல் என்கிறார். “பின்தொடரும் நிழலின் குரல்” எனும் நாவல் ஒர் அரசியல் நாவலாகப் படைக்கப்பட்டுள்ளது. சோவியத் ஒன்றியத்தில் கம்யூனிசம் வீழ்ச்சி அடைந்து அந்த நாடு சிதறியதன் பின்னணியில் அரசியலுக்கும் அறத்திற்கும் இடையேயான உறவுச்சிக்கல்கள் யதார்த்தமாக வெளிப்படுத்தப்படுகின்றன. இந்நாவலில் படைத்திருக்கின்ற பாத்திரங்களையும், நிகழ்ச்சிகளையும் கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக நாமும் அறிந்திருக்கின்றோம். இத்தகைய யதார்த்தத் தன்மையை நாவலில் வெளிப்படுத்தியுள்ளார் ஜெயமோகன்.

“ஏழாம் உலகம்” நாவலில் பாலியல் வன்முறைகளுக்கு உள்ளாக்கப்படும் மனிதர்களை இன்றும் நாளிதழ்கள்  மூலம் அறிகிறோம். இந்நாவலில் உலவும் கதைமாந்தர்களும் நிஜ உலகில் நடமாடும் மாந்தர்களே என்பது புலனாகின்றது. “குட்டி சுப்பம்மா… உன்ன நான் பெத்த மூனாம் நாள் கைல எடுத்திட்டுண்டு… உனக்குச் சகல சடங்கும் செய்து வச்சது நானாக்கும்… எந்தவொரு விசயம் வந்தாலும் ஒரு காரியம் நினைச்சுக்கோ. அந்த நிமிசத்தில, அந்த நேரத்தில அது பெரிய காரியமா இருக்கும்.” என ‘உண்ணியம்மை ஆச்சி’ என்ற பாத்திரம் கூறுகிறது. இது உலகில் நடமாடித்திரியும் பாத்திரங்களை இந்நாவலில் யதார்த்தமாகப் படைத்துள்ளமையைக் காட்டுகின்றது. 

“அனல்காற்று” எனும் நாவலும் இன்றைய உலகில் நடக்கும் பாலுறவுச்சிக்கலைப் பேசுகிறது. தன்வயதிற்கு மூத்த தன் தாயின் தோழியோடு பாலுறவு வைத்துக்கொள்ளும் ஆடவனின் செயற்பாடுகளையும், அவனுக்குத் தாய் இன்னொரு பெண்ணைத் திருமணம் செய்துவைக்க முனையும் போது உளவியல் ரீதியாகப் பிரச்சினைகளுக்கு முகம் கொடுப்பதும் யதார்த்தமாகக் கூறப்பட்டுள்ளது.

 

 

  • கரு சார்ந்த பிரச்சினைகள்

சிறிய அனுபவத்தைக் கருவாக எடுத்துக்கொண்டாலும், அதுசார்ந்த பிரச்சினைகளையும் அதனோடு நாவலாசிரியன் இணைத்துக்கொள்வான். “ஏழாம் உலகம்” நாவலில் குறைப்பிறவிகளாகிய பிச்சைக்காரர்களின் உலகத்தையும், அவர்களைச்சுரண்டி வாழும் முதலாளிமார்களின் உலகத்தையும் எடுத்துக்காட்டுகின்றார். அத்தோடு முதலாளி பண்டாரத்தின் குடும்பம், அன்பு, துரோகம் முதலியன செய்தாலும், கொடுமைகள் செய்தாலும் முதலாளியை மதிக்கும் பிச்சைக்காரர்கள், குழந்தைகளை அமிலம் ஊற்றி மாற்றி விற்கும் மனித மனங்கள், அன்புடன் நடந்து கொள்ளும் தந்தையை மதிக்காத வடிவம்மை, வயது முதிர்ந்த உண்ணியம்மை ஆச்சியின் செயற்பாடு, பிச்சைக்காரர்களது உலகத்தில் இருக்கும் காதல், நையாண்டி, நகைச்சுவை முதலியவை கருவோடு தொடர்புடையனவாக நாவலிற்குள் கொண்டுவந்து ஜெயமோகன் படைக்கின்றார். தான் கூற எடுத்துக் கொண்ட அனுபவத்தின் மீது தன்வழியாகப் பாயும் தன்மரபின் பார்வைகளை ஒவ்வொன்றாக அடையாளம் கண்டு மையக்கருவோடு மோதவிட்டு நாவலைப் படைத்துள்ளார்.

  • வாசகர்களின் சிந்தனை 

எங்களை நாங்களே கேள்வி கேட்க வேண்டும். அது சமூகத்தை நோக்கி கேட்கப்படுவதாக அமையும் என்கிறார் ஜெயமோகன். “ஏழாம் உலகம்” நாவலை வாசிக்கும் போது எமது சிந்தனை வளர்ந்து, உணர்வுகள் தூண்டப்பட்டு அந்நாவலை நோக்கிப் பல கேள்விகள் எழுகின்றன. மனிதனை மனிதனே வைத்துச் சம்பாதிக்கும் பணத்தினால் என்ன செய்யப் போகிறார்கள்?, போத்துவேலிப்பண்டாரம் போன்ற முதலாளிகள் இருக்கிறார்களா?, அவர்களுக்குத் தண்டனை இல்லையா? என்ற கேள்விகள் சாதாரணமாகவே எழுகின்றன. “கன்னி நிலம்” என்ற நாவலில் மணிப்பூர் ஆயுதக்கரவரத்தின் பிரச்சினையுடன் அரசியலும் பேசப்படுகின்றது. 

‘நல்லையப்பன்’ என்ற இந்திய இராணுவ அதிகாரி மணிப்பூர் போராளியான ‘ஜ்வாலா’ என்ற பெண்ணைக்கைது செய்கிறான். பின் அவள் தப்பி ஓடுகையில் அவள் மீண்டும் பிடிபடுகிறாள். அந்தப்பயணம் வழியாக அவர்களுக்குள் காதல் உருவாகிறது. நாடு எல்லைகளைக் கடந்த காதலாக அது மலர்கிறது. ஆனாலும் அந்தக்காதல் யதர்த்தமாக தற்போதய சூழலில் வெற்றிபெற்றிருக்குமா?, நாட்டின் அமைதிக்கு இது வழி சமைக்குமா?, என்ற கேள்விகள் தோன்றுகின்றன. எனவே ஜெயமோகனின் நாவல்களை வாசிக்கும் போது எம்முடைய சிந்தனைகள் வளர்ந்து, அந்நாவலை நோக்கி பல்வேறுபட்ட ஐயங்களையும், வினாக்களையும் எழுப்பத்தூண்டும் வண்ணம் அமைந்துள்ளமை அவரது “நாவற்கோட்பாட்டு” விதிகளைப் பின்பற்றியுள்ளமையைக் காட்டுகின்றன.

  • முடிவுரை

ஜெயமோகன் நாவல் இலக்கியம் தொடர்பாகப் பல விதிகளையும், பண்புகளையும் தனது “நாவல்” நூலில் குறிப்பிட்டுள்ளார். ஆனாலும் அவற்றையெல்லாம் எல்லோரும் ஏற்றுக்கொள்ள வேண்டுமென்றோ அல்லது அவைதான் நாவல்களுக்குரிய விதிகளென்றோ சொல்லிவிட முடியாது. ஒவ்வொரு படைப்பாளியும் தான் கேட்டு அறிந்த விடயங்களையும், அனுபவங்களையும், வாசித்தறிந்த கருத்துக்களையும், தமது சிந்தனைக்கெட்டிய நுட்பமான விடயங்களையும் கொண்டு தமது படைப்புக்களைப் படைப்பர். இந்தவகையில்தான் ஜெயமோகனும் தனது அனுபவம், அறிவு, ஆராய்ச்சி, சிந்தனை போன்றவற்றுக்கேற்ப தன்னளவில் சரியெனப்பட்டவற்றை நாவலுக்குரிய விதிகளாகத் தந்துள்ளார். எனவே ஒரு நாவலாசிரியர் என்றவகையில் அவ்விதிகளைப் பின்பற்றி நாவல்களைப் படைப்பதில் வெற்றி கண்டுள்ளார் எனலாம்.

அடிக்குறிப்புக்கள்

1. ஜெயமோகன், (1995), நாவல், மடல் வெளியீடு, சென்னை, பக்.03.

2. ஜெயமோகன், (1995), நாவல், மடல் வெளியீடு, சென்னை, பக்.04.

3. ஜெயமோகன், (1995), நாவல், மடல் வெளியீடு, சென்னை, பக்.04.

4. ஜெயமோகன், (1995), நாவல், மடல் வெளியீடு, சென்னை, பக்.06.

5. ஜெயமோகன், (1995), நாவல், மடல் வெளியீடு, சென்னை, பக்.06.

6. ஜெயமோகன், (1995), நாவல், மடல் வெளியீடு, சென்னை, பக்.22.

உசாத்துணை நூல்கள்

• ஜெயமோகன், (1995), நாவல், மடல் வெளியீடு, சென்னை.

• ஞானி, (2004), தமிழ் நாவல்களில் தேடலும் திரட்டலும், மெய்யப்பன் பதிப்பகம், சென்னை.

• ஞானி, (2008), தமிழ் நாவல், காவ்யா வெளியீடு, சென்னை.

• ஜெயமோகன், (2003), ஏழாம் உலகம், யுனைட்டட் ரைட்ட்ஸ், சென்னை.

• ஜெயமோகன், (2009), பின்தொடரும் நிழல், தமிழினி பதிப்பகம், சென்னை.