ஜூலை 2024 இதழுக்கு ஆய்வுக்கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன

தமிழ் நாவல் இலக்கிய வரலாற்றில் கமலாம்பாள் சரித்திரத்தின் முக்கியத்துவம்

முருகையா சதீஸ் தமிழ்த்துறை யாழ்ப்பாணப்பல்கலைக்கழகம் இலங்கை 27 Jul 2021 Read Full PDF

முருகையா சதீஸ்

தமிழ்த்துறை

யாழ்ப்பாணப்பல்கலைக்கழகம்

இலங்கை

ஆய்வுச்சுருக்கம்

பி.ஆர்.ராஜமய்யர் அவர்களால் எழுதப்பட்ட கமலாம்பாள் சரித்திரம் தத்துவ வீச்சோடும், கச்சிதமான உருவ அமைப்போடும் அமைந்து, நாவல் என்ற இலக்கிய வடிவத்திலும், திறனாய்வு அடிப்படையிலும் தமிழின் முதல் நாவல் என்ற தகுதியைப் பெறுகிறது.  கதையமைப்பில் மிகுந்த தனித்தன்மை கொண்டது. இன்றுவரையும் கருவினால் இதற்கு இணையாகப் பேசக்கூடிய மற்றொரு நாவல் எழுதப்படவில்லை. எளிய நடையில் முற்றிலும் சமகால வாழ்வின் சிக்கல்களாலும், மெலிதான நகைச்சுவை மற்றும் கதைப்பின்னலாலும் அமைத்துள்ளார். அக்காலத்து நிலமானிய சமூக நடைமுறைகளையும், நிலமானிய சமூகத்தில் கூட்டுக்குடும்பங்கள் சிதைந்து போகின்ற நிலையையும் இந்நாவலில் பார்க்க முடியும். அதுமட்டுமன்றி அக்காலப் பெண்களின் மனப்போக்கு, அக்காலச் சமூகநிலை, குடும்பங்களின் பிரச்சினைகள், உறவுச் சிக்கல்கள், பிள்ளை வளர்ப்பு முதலான பல்வேறு விடயங்களை உணர்த்துவதற்கு யதார்த்த நெறி ராஜமய்யரால் கையாளப்பட்டுள்ளது. எனவே இத்தகைய சிறப்புக்களோடு கூடிய “கமலாம்பாள் சரித்திரம்”, தமிழ் நாவல் வரலாற்றில் எத்தகைய முக்கியத்துவத்தினைப் பெறுகிறது என்பதை ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும். இவ்வாய்விற்கு, முதலாம் நிலைத்தரவாகக் “கமலாம்பாள் சரித்திரம்” பயன்படுத்தப்பட்டுள்ளதுடன், இரண்டாம் நிலைத்தரவுகளாக இந்நாவல் சார்ந்த  கட்டுரை நூல்கள், சஞ்சிகைகள்  போன்றவையும் பயன்படுத்தப்பட்டுள்ளன.   எனவே தொடக்ககாலத்திலேயே உருவ, உள்ளடக்கத்தில் சிறப்புற்றுத்தோன்றிய நாவல் என்னும் பெருமையைக் “கமலாம்பாள் சரித்திரம்” பெறுகின்றது எனலாம்.

திறவுச் சொற்கள்: தமிழ்நாவல் வரலாறு, பி.ஆர்.ராஜமய்யர், கமலாம்பாள் சரித்திரம், முக்கியத்துவம்.

அறிமுகம்

உரைநடையில் எழுதப்படுகின்ற நீண்ட கதைகூறும் இலக்கியமாக நாவல் அமைகின்றது. வாழ்க்கையும், வாழ்க்கை பற்றிய நிகழ்வுகளும் உரைநடையில் எழுதப்படுமேயானால் அது நாவலாகும். ‘புதுமை’ என்ற பொருளைத் தரவல்லது நாவல் இச்சொல் ‘novela’ என்ற இத்தாலிய மொழிச்சொல்லில் இருந்து உருவாக்கப்பட்டது. இது மேற்குலகில் நிலமானிய சமுதாய அமைப்பின் சிதைவிற்குப் பின்னர் தோன்றிய முதலாளித்துவ சமுதாய அமைப்பின் தேவைகளுக்காக உருவாக்;கப்பட்ட இலக்கிய வடிவமாகும். பின்னர் ஐரோப்பியரின் கீழைத்தேய வருகையைத் தொடர்ந்து உரைநடையின் வளர்ச்சியாகத் தமிழிலும் நாவல் இலக்கியம் தோற்றம் பெற்றது. 

தமிழ் நாவல் வரலாற்றில் ‘பிரதாபமுதலியார் சரித்திரம்’ வேதநாயகம் பிள்ளையால் முதலில் எழதப்பட்டது. ஆனாலும் நாவல் என்ற இலக்கிய வடிவத்திலும், திறனாய்வு அடிப்படையிலும் முதல் நாவல் என்ற தகுதியைப் பெற வேண்டியது ராஜமய்யரின் “பிரதாபமுதலியார் சரித்திரம்” என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். எனவே இத்தகைய “கமலாம்பாள் சரித்திரம்” எனும் நாவல் தமிழ் நாவல் வரலாற்றில் பெறும் முக்கியத்துவத்தினை ஆராய்வதாக இக்கட்டுரை அமைகின்றது.

ஆய்வுநோக்கம்

நாவல் என்ற இலக்கிய வடிவத்திலும், திறனாய்வு அடிப்படையிலும் தமிழின் முதல் நாவல் என்ற திறனாய்வாளர்களின் கருத்தினை மெய்ப்பிக்கும் இந்நாவல்,  தமிழ் நாவல் இலக்கிய வரலாற்றில் பெறும் வகிபங்கு எத்தகையது? என்பதை ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்காகும்.

ஆய்வு முறையியல்

இவ்வாய்வானது பண்புசார் முறை, விபரணப் பகுப்பாய்வு முறை ஆகிய அணுகுமுறைகளைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாய்விற்கு, முதலாம் நிலைத்தரவாகக் “கமலாம்பாள் சரித்திரம்” பயன்படுத்தப்பட்டுள்ளதுடன், இரண்டாம் நிலைத்தரவுகளாக இந்நாவல் சார்ந்த  கட்டுரை நூல்கள், சஞ்சிகைகள்  போன்றவையும் பயன்படுத்தப்பட்டுள்ளன.  

நாவலாசிரியர் பி. ஆர். ராஜமய்யர்

இவர் வத்தல குண்டில் 1872 ஆம் ஆண்டு பிறந்தவர். இவரின் நாவலின் கதையும் மதுரை ஜில்லாவைப் பற்றியதுதான். இவ் நாவலின் அட்டைச்சித்திரத்திலும் அஸ்தமன சமயத்தில் வானத்தை எட்டும் மதுரைக் கோபுரம் காணப்படுகின்றது. இவருடைய நவீனம் ஒன்றுதான். அதுதான் “கமலாம்பாள் சரித்திரம்” என்னும் நாவலாகும். இவர் விவேகானந்தர் மற்றும் பாரதியாரால் போற்றப்பட்டவர். விவேகானந்தர் சென்னையில் தொடங்கிய ‘பிரபுத்த பாரதா’ அல்லது ‘விழித்துக் கொண்ட இந்தியா’ எனும் ஆங்கிலப் பத்திரிகையின் முதல் ஆசிரியராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட கௌரவத்தினைப் பெற்றவர் பி. ஆர். ராஜமய்யர். இவருடைய காலத்தில் மத்தியதர வர்க்கத்தினர் ஆங்கிலம் கற்று அரசபதவிகளைப் பெறுவதில் ஆர்வம் காட்டினர். ராஜமய்யரும் சட்டம் பயின்று சட்டத்துறையில் முன்னேறுவதற்கே விரும்பினார். எனினும் சட்டப்பரீட்சையில் தவறிவிட்டார். இதனால் மனச்சோர்வடைந்து பின்னர் எழுத்துத் துறையில் ஆர்வம் காட்டினார். இதன் விளைவே “கமலாம்பாள் சரித்திரம்” ஆகும்.

தொடர்கதையாக வெளிவந்த நாவல்

பி.ஆர். ராஜமய்யர் அவர்களால் “விவேகசிந்தாமணி” என்ற மாத இதழில் 1893 ஆம் ஆண்டு தொடர்கதையாக எழுதத் தொடங்கினார். முதல் இரண்டு இதழ்களில் இப்புதினம் “அநியாய அபவாதம் அல்லது கமலாம்பாள் சரித்திரம்” என்ற தலைப்பிலும், மூன்றாவது இதழில் இருந்து “ஆபத்துக்கிடமான அபவாதம் அல்லது கமலாம்பாள் சரித்திரம்” என்னும் தலைப்பிலும் தொடர்ந்து 1895 வரை வெளிவந்தது. பின் 1896 ஆம் ஆண்டு இத்தொடர்கதை விவேகசிந்தாமணிப் பிரசுரத்தின் மூலம் தனி நூலாக வெளிவந்தது.

முன்மாதிரியாக அமைந்த நாவல்

“கமலாம்பாள் சரித்திரம்” இலக்கிய வடிவமும், நடையழகும், தீவிரமும் பாத்திரங்களின் அதீத மற்ற வண்ணங்களும் கூடிய முழுமையான நாவல். தமிழில் நாவல் இலக்கியத்தின் முன்மாதிரியாக அமைந்த இந்தநாவல் இத்தனை அழகோடும், தத்துவ வீச்சோடும் கச்சிதமான உருவ அமைப்போடும் அமைந்தமை சிறப்புக்குரியது. நாவல் என்ற இலக்கிய வடிவத்திலும், திறனாய்வு அடிப்படையிலும் தமிழின் முதல் நாவல் என்ற தகுதியைப் பெற வேண்டியது இந்நாவல் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

நாவலின் நோக்கம்

ராஜமய்யர் பொய் என உலகத்தை நம்புவதால் தனது கதையையும் பொய்யாகவே காண்கிறார். இவரின் தத்துவம் அகவயமானதாகும். சமூகச்சிக்கல்களுக்குச் சிந்தனை அளவிலேயே தீர்வு காண முயல்கிறார். கடவுளைக் காணும் அகவாழ்வே இவருக்கு முக்கியமாகப்படுகின்றது. “இவ்வுலகில் உளன்று தவிக்கும் ஒரு அமைதியற்ற ஆத்மா, கடைசியாக நிர்மலமான ஒரு இன்பநிலை அடைந்ததை விபரிப்பதே இந்த நவீனத்தின் முக்கிய நோக்காகும்.” என்று ராஜமய்யர் தன் சொந்த மொழிகளில் குறிப்பிடுகின்றார்.

நாவல் தரும் படிப்பினை

“கடவுள் எல்லாவற்றிற்கும் அந்தம். எல்லாம் கடைசியில் அவனையே அடைகின்றன. என்ன நேர்ந்தாலும் அவைகள் எல்லாம் நமது நன்மைக்கே என்பதையும், நாம் அனுபவிக்கும் தண்டனைகள் கடைசியாக நமக்கு நன்மையாகவே முடியுமென்பதனையும் உணர்ந்து கொண்டு கர்மாவில் ஈடுபடுவது அவனை அடையும்படியான சுருக்கு வழி” என்பதனை ராஜமய்யர் இந்நவீனத்தின் படிப்பினையாக உணர்த்துகிறார்.

இந்துக் குடும்பத்தைச் சித்திரிக்கும் நாவல்

ஒரு இந்துக் குடும்பத்தைச் சித்திரிப்பது போல வேறெந்த நவீனமும்  சித்திரிக்கவில்லை எனும் அளவிற்கு ஸ்திரீகளின் பெருமைகளும், சிறுமைகளும் இதில் விபரிக்கப்பட்டுள்ளன. எனவே இந்நாவல் மூலம் 19ஆம் நூற்றாண்டு மக்களின் வாழ்க்கை நிலையை, மனோநிலையை இந்நாவலின் மூலம் ராஜமய்யர் வெளிப்படுத்துகின்றார்.

நாவல் தலைப்பின் பொருத்தப்பாடு

இந்நாவலின் கதைத்தொடர் தொடங்கும் போது “அநியாய அபவாதம் அல்லது கமலாம்பாள் சரித்திரம்” என்று பெயரிடப்பட்டது. இரண்டாவது மாதத்தில் “ஆபத்துக்கிடமான அபவாதம்” என்று மாற்றப்பட்டு பின்னர் “கமலாம்பாள் சரித்திரம்” என்றே அறியப்பட்டது. நாவலிற்கு இரண்டு தலைப்புக்கள் வைப்பதனை முதலில் ராஜமய்யரே அறிமுகம் செய்தார். “சரித்திரம்” என்ற பதம் நல்ல ஆழமும், வீச்சும், விசாலமும் கொண்டது. உண்மையின் எதிரொலியை உள்ளடக்கிய தொனி அதற்கு உண்டு. மேலும், தமக்கு முந்தைய நாவலான ‘பிரதாப முதலியார் சரித்திரத்தினைப்’ பார்த்து இத்தலைப்பு வைத்தாரா? என்பதும் யோசிக்க வேண்டிய விடயம். கதை முழுக்க முத்துஸ்வாமி ஐயரை மையமிட்டு ஓடினாலும் பெண்கள் மீதான அபிமானத்தாலும் இத்தலைப்பு அவர் வைத்திருக்கலாம். கோள்மூட்டுதலால் ஏற்பட்ட கமலாம்பாள் பற்றிய அபவாதத்தினை நம்பி முத்துஸ்வாமி ஐயரும் கமலாம்பாளை ஆபத்துக்கிடமாக்குகின்றார். இதன் விளைவாகப் பெண்ணின் மௌனத் துயரும், ஒன்றும் செய்ய இயலாத தன்மையும் கதையில் முதன்மை பெறுவதால் இது கமலாம்பாள் சரித்திரமாகின்றது.

கதைச்சுருக்கம்

மதுரைமாவட்டம் சிறுகுளம் என்ற கிராமத்தில் வசிப்பவர் முத்துஸ்வாமிஐயர். இவரின் மனைவி கமலாம்பாள். இவர்களுக்கு கல்யாணி என்ற மகள் உண்டு. முத்துஸ்வாமி ஐயரின் தம்பி சுப்பிரமணிய ஐயர். இவரின் மனைவி பொன்னம்மாள். இவர்களுக்குச் சுந்தரம் என்ற மகனுண்டு. அவன் அம்மாவை விடப் பெரியம்மா மீதே அதிக பாசம் கொண்டிருந்தான். கூட்டுக்குடும்பமாக இருந்த இவர்களின் குடும்பம் பெரும்பாலும் வெளியுலகத் தொடர்புகள் இல்லாமல் இருந்தது. நிலவுடைமை அமைப்பு மாறிவரும் காலத்தில் இவர்களின் கூட்டுக்குடும்பம் உள்முரண்பாடுகளால் சிதைவு அடைகின்றது. 

முத்துஸ்வாமி ஐயர் தனது மகள் கல்யாணியைச் சென்னையில் இருக்கும் ஸ்ரீநிவாசனுக்கு மணம் பேசி முடிக்கின்றார். பொன்னம்மாள் கலகத்தை உருவாக்கும் வம்பர்சபைத் தலைவி. இவள் கல்யாணியைத் தன் தம்பிமகன் வைத்தியநாதனுக்குத் திருமணம் செய்து வைக்க விரும்பிய நிலையில் திட்டம் கைநழுவிப் போனதில் ஆத்திரமடைந்து கணவனை நிச்சயதார்த்தத்திற்குப் போகவிடாமல் தடுக்கிறார். திருமணம் ஊரே புகழும்படியாக நடக்கிறது. சில நாட்களுக்குப் பிறகு கமலாம்பாள் ஒர் ஆண்குழந்தையைப் பெற்றெடுக்கிறாள். நடராஜன் என்று பெயர்வைக்கின்றனர்.

 இதற்கிடையில் பிரபலத்திருடனான பேயாண்டித்தேவன் சுப்பிரமணிய ஐயரின் வீட்டில் நுழைந்து நகைகளையும், ஜல்லிக்கட்டுக் காளையையும் களவாடிச்செல்கின்றான். சுப்பிரமணிய ஐயரின் மனைவி வசிய மருந்திற்குக் கட்டுப்பட்டுப் பேயாண்டித்தேவனுக்குச் சார்பாகச் சாட்சி சொல்கிறாள். இதனால் முத்துஸ்வாமி ஐயர் அவனைக் காவல்துறையிடம் பிடித்துக்கொடுத்தும் பலன் இல்லாமல், பேயாண்டித்தேவன் விடுதலை செய்யப்படுகின்றான். விடுதலையாகி வந்தவன் முத்துஸ்வாமி ஐயரின் இரண்டு வயதுக் குழந்தையைக் கடத்திக் கொண்டு போய் ராமசே~ ஐயருக்கு விற்றுவிடுகின்றான். இதனால் முத்துஸ்வாமி ஐயரின் குடும்பம் நிம்மதி இழக்கிறது.

மகளுடன் சென்னையில் வசிப்பதற்கு முத்துஸ்வாமி ஐயரும், கமலாம்பாளும் குடிபெயர்கின்றனர். சுப்பிர மணிய ஐயரின் உடல்நலம் பாதிக்கப்படுகின்றது. இதனால் ஊர்திரும்பிய அண்ணனிடம் மன்னிப்புக்கேட்டபடி சுப்பிரமணிய ஐயர் இறந்துவிடுகின்றார். இதற்கிடையில் பம்பாய் வியாபாரத்தில் முதலிட்டு முத்துஸ்வாமி ஐயர் ஏமாற்றமடைந்தார். இதனால் உலக வாழ்க்கையை வெறுத்தார். நிம்மதியைத் தேடி அலைகின்றார். பொன்னம்மாள் தன் வம்பர்சபையுடன் சேர்ந்து கமலாம்பாள் மீது பழியைக்கூறி முத்துஸ்வாமி ஐயரைப் பிரிக்கிறாள். முத்துஸ்வாமி ஐயர் தற்கொலை செய்துகொள்ள முயற்சி செய்யும் போது இறையனுபவத்தைப் பெறுகின்றார். சச்சிதானந்த ஸ்வாமிகள் இவருக்குக் குருவாக வந்து சேருகின்றார். இவர்கள் இருவரும் காசிக்குச் செல்லுகின்றனர்.

 சுப்பிரமணிய ஐயரின் இறப்பு பொன்னம்மாளைச் சித்தம் கலங்க வைக்கிறது. தான் செய்த துரோகத்தை வைத்தியநாத ஐயரிடம் கூறி , முத்துஸ்வாமி ஐயரிடம் மன்னிப்புக் கேட்கக் காசிக்குச் செல்லுகின்றனர். இறுதில் மனம்திருந்திய பேயாண்டித்தேவனும், நடராஜனுடன் காசிக்கு வந்தடைகின்றான். அனைவரும் ஒன்றுசேருகின்றனர். பல்வேறு துன்பங்களுக்கிடையில் முத்துஸ்வாமி ஐயர் சிற்றின்பத்திலிருந்து பிரமானந்தத்தை அடைந்த வரலாறுதான் கமலாம்பாள் சரித்திரம். இவரின் ஞானமார்க்க சிந்தனையின் ஆத்மீகநாட்டம் நாவலின் பிற்பகுதியைக் கனவு போல மாற்றிவிட்டது.

கதையமைப்பில் சிறப்புத்தன்மை

கமலாம்பாள் சரித்திரம் கதையமைப்பில் மிகுந்த தனித்தன்மை கொண்டது. இன்றுவரையும் கருவினால் இதனோடு பேசக்கூடிய மற்றொரு நாவல் எழுதப்படவில்லை. மானுட வாழ்வில் நிலையற்ற, அமைதியற்ற ஆன்மா அலைந்து திரிந்து இறைவனை அடைந்து அடங்குகின்றது. பொறுமையும், அமைதியும் பிரமானந்தத்தினைத் தருகின்றன. இதை எளிய நடையில் முற்றிலும் சமகால வாழ்வின் சிக்கல்களாலும் மெலிதான நகைச்சுவை மற்றும் கதைப்பின்னலாலும் தந்துள்ளார்.

நிகழ்ச்சிப் போக்குகளை முன்பே கோடிட்டுக்காட்டுதல்

கமலாம்பாள் சரித்திரத்தில் பல நிகழ்ச்சிப் போக்குகளை முன்பே ராஜமய்யர் கோடிட்டுக்காட்டுகிறார். “ஆருத்ரா தரிசன” நாளை, குழந்தையை முத்துஸ்வாமி ஐயர் பறிகொடுத்த நாளாகவும், பின் அவர் தான் தற்கொலை செய்ய முயலும் நாளாகவும் காட்டுதல் இங்கு முக்கியமானதாகும். இதில் பழைய ஆருத்ரா தரிசன நாளின் நினைவே மீண்டும் வருகிறது. இவ்வாறு பல நயமான பகுதிகளால் நாவலை அமைத்துள்ளார். புதுமைப்பித்தன் சொல்வதுபோல் “கமலாம்பாள் சரித்திரம்” முற்பகுதி – நாவல், பிற்பகுதி – கனவு என்ற பெரும் அமைப்பில் அமைந்துள்ளது.

பாத்திரப்படைப்புக்கள் மூலம் அக்காலச் சமூகத்தைக் காட்டுதல்

“நல்ல நாவல்களின் அடிப்படையே பாத்திரப்படைப்புத்தான்” என்ற கூற்றினை இந்நாவலில் வரும் பாத்திரப்படைப்புக்கள் உறுதி செய்கின்றன. கதை எழுந்த காலத்தில் தமிழ்நாட்டில் நற்குணம் பொருந்திய குடும்பப் பெண்கள் எவ்வாறு இருந்தார்கள் என்பதற்கான சிறந்த எடுத்துக்காட்டு “கமலாம்பாள்” என்னும் பாத்திரமாகும். முத்துஸ்வாமி ஐயரின் வாழ்க்கைச்சரித்திரத்தினூடாக அக்காலத்தில் நிலவிய பிராமணிய சமூக நடைமுறைகளை விளக்கிச் சொல்வதற்கு இவள் உற்ற துணையாகிறாள். 

நிலமானிய சமூகத்தில் கூட்டுக்குடும்பப் பெண்கள் அந்த உறவு நிலையைத் தக்க வைத்துக்கொள்ளப் பாடுபட்டமையை கமலாம்பாடாக ராஜமய்யர் காட்சிப்படுத்துகின்றார். நிலச்சுவாந்தார்களின் குடும்ப அமைப்பு, நிலமானிய சமூக வீழ்ச்சி, கூட்டுக்குடும்பச் சிதைவு, நிலச்சுவான்தார்களுக்கு சமூகத்தில் இருந்த மதிப்பு முதலியவற்றை விளக்குவதில் முத்துஸ்வாமி ஐயர் செல்வாக்குச் செலுத்துகின்றார். “பெண்களுக்கே கலகம்தான் தொழில்… இப்படித்தான் கோளும் புரலியும் சொல்லிக்கொண்டு திரிகிறார்கள்” என்று கூறுவதன் மூலம் அக்காலப் பெண்களின் நிலையை இப்பாத்திரம் மூலம் ராஜமய்யர் நிரூபிக்கின்றார்.

 மேலும், கதை எழுந்த காலத்தக் கல்விநிலை, மாணவர்களின் மனநிலை, பால்ய விவாகம், திருமணம், களியாட்டங்கள் முதலிய நிகழ்வுகளுக்குச் சமூகத்தில் நிலவிய செல்வாக்கு, ஆசிரிய – மாணவ உறவுநிலை முதலிய பல விடயங்கள் ஸ்ரீநிவாசன் எனும் பாத்திரம் மூலம் ராஜமய்யர் வெளிக்காட்டுகின்றார். “பெண்களே கெட்டவர்கள்” என்ற முத்துஸ்வாமி ஐயரின் கருத்தை உறுதிப்படுத்துபவளாகப் பொன்னம்மாள் படைக்கப்பட்டுள்ளாள். அக்காலத் தமிழ்ப் பண்டிதர்களின் நிலைமை அம்மையப்பிள்ளை எனும் பாத்திரம் மூலம் வெளிப்படுத்தப்படுகின்றது. மேலும், சுப்பு எனும் பாத்திரத்தின் மூலம் அக்காலச் சமூகப் பெண்களின் முக்கிய செயலான “வம்பளத்தல்”, “கோள்மூட்டுதல்” முதலிய செயற்பாடுகள் இவ;டாக விபரிக்கப்படுகின்றன. எனவே ராஜமய்யர் தான் வாழ்ந்த காலத்தில், தான் கண்ட அனுபவங்களை, அக்காலச் சமூகநடைமுறைகளைக்காட்ட அதற்கேற்ற வகைமாதிரியான பாத்திரங்களைப் படைத்து அக்காலச் சமூகத்தைக் காட்டுவதில் வெற்றிபெற்றுள்ளார்.

நாவலின் தொடக்கம்

அவசரமில்லாத நிதானத்துடன் “கமலாம்பாள் சரித்திரம்” ஆரம்பிக்கின்றது. “மதுரை ஜில்லாவில் சிறுகுளம் என்ற ஒரு கிராமம் உண்டு. அந்தக் கிராமத்தின் நடுத்தெருவின் மத்தியில் ‘பெரிய வீடு’ என்ற பெயருள்ள ஒரு வீடு இருந்தது.” என்று ஆரம்பிக்கின்றது. முத்துஸ்வாமிஐயர் தன் மனைவியுடன் உரையாடுவதும், தன்பிள்ளை கல்யாணியின் திருமணப் பேச்சை எடுக்க, அவரது தம்பியின் பையன் மூலம் வாத்தியார் அழைத்துவரப் படுவதுடன் முதல் அத்தியாயம் முடிகின்றது. சற்றுப் பெரிய பரந்த விஸ்தாரத்தைக் காட்டி மெதுவாய்க் கதைக்குள் புகுவது ராஜமய்யரின் இயல்பாக உள்ளது.நாவலின் முடிவு

அடுக்கடுக்கான துயரச் சம்பவங்கள் பிற்பகுதியில், கதைத்தன்மையுடன் திருப்பங்களாய் நிகழ்ந்தாலும் முடிவென்ற தெளிவை நெருங்குகின்ற ஆசிரியரின் பரவசமும், ஞானமும், தீவிரமும், எழுத்து வன்மையும் பிரமிக்கத் தக்க அளவில் காணப்படுகின்றன. அந்த உணர்வு சாதாரண யதார்த்த வட்டத்திலிருந்து கூரிய ஓர் ஆன்மீக வட்டதிற்குள் வாசகனை இழுக்கிறது. நாவலின் முடிவிலே வேதாந்தப் பக்திச் சிந்தனைகள் சற்று அதிகமாகவே இருப்பது போலக்காணப்பட்டாலும், அந்தச் சிந்தனைகளும், விபரங்களும் கமலாம்பாள் சரித்திரத்திற்கு ஓர் ஆழத்தைத் தருகின்றன. எனவே நாவலின் பிற்பகுதி இவரது வேதாந்தக் கருத்துக்களின் பிரதிபலிப்பாகவே உள்ளது. இதனால் இந்நாவலின் பிற்பகுதியைக் கனவு எனக் கூறுவோரும் உளர். இவரின் ஞான மார்க்கச் சிந்தனையும், ஆத்மீக நாட்டமும் நாவலின் பிற்பகுதியைக் கனவுபோல மாற்றிவிட்டன எனலாம்.

கதைப்பின்னல்

நாவலில் பிரச்சாரத் தொனியின்றிக் கருத்துக்களை முன்வைப்பதை ராஜமய்யர் அறிந்திருக்கிறார். கல்யாணியின் திருமணம், நடராஜனின் பிறப்பு, பேயாண்டித் தேவனின் திருட்டு, முத்துஸ்வாமி ஐயரின் குடும்பச்சிதைவு, சுப்பிரமணிய ஐயரின் இறப்பு எனக் கதையோட்டம் விறுவிறுப்படைகின்றது. இறுதியில் பிரிந்த குடும்பம் காசியில் ஒன்று சேர்வதும், தவறான வழியில் சென்றவர்கள் திருந்துவதும் காட்டப்பட்டுள்ளன. இவ்வாறு கதைப்பின்னல் இறுக்கமாகவும், யதார்த்தபூர்வமாகவும், தருக்கமுறைப்படியும் அமைந்திருக்கின்றது.

யதார்த்த நெறி

கதையோட்டத்தின் படி ஆரம்பத்தில் யதார்த்த பூர்வமான சமூக அமைப்பு முத்துஸ்வாமி ஐயரின் இல்லற வாழ்வினூடாகக் காட்சிப்படுத்தப்படுகின்றது. குறிப்பாக, அக்காலத்து நிலமானிய சமூக நடைமுறைகளையும், நிலமானிய சமூகத்தில் கூட்டுக்குடும்பங்கள் சிதைந்து போகின்ற நிலையையும் இந்நாவலில் பார்க்க முடியும். அதுமட்டுமன்றி அக்காலப் பெண்களின் மனப்போக்கு, அக்காலச் சமூகநிலை, குடும்பங்களின் பிரச்சினைகள், உறவுச் சிக்கல்கள், பிள்ளை வளர்ப்பு முதலான பல்வேறு விடயங்களை உணர்த்துவதற்கு யதார்த்த நெறி ராஜமய்யரால் கையாளப்பட்டுள்ளது. 

மேலும், யதார்த்த வாதத்தின் மையக்கூறாக உள்ளதும், அதன் அடித்தளமாக உள்ளதும் வகைமாதிரியான பாத்திரங்களே ஆகும். குறிப்பிட்ட சமூகத்தை பெருமளவிற்குப் பிரதிபலிக்கத்தக்க வகையில் பொதுப்பண்புகளுடன் காணப்படுவதே வகைமாதிரியான பாத்திரமாகும். அம்மையப்பிள்ளை ஆங்கில ஆட்சிச் சூழலில் செல்வாக்கு இழந்து போன தமிழாசிரியர்களின் வகைமாதிரியான பாத்திரம். அம்மையப்பிள்ளையின் தனித்துவம் அவர்காலத்துப் பொதுப்பண்புகளுடன் கலக்கும் போது அப்பாத்திரம் யதார்த்தமாக மாறுகிறது. ‘கமலாம்பாள் சரித்திரத்தில்’ வரும் மாயாண்டித் தேவனையும், கல்கியின் ‘கள்வனின் காதலியில்’ வருகின்ற கள்வனையும் ஒப்பிடும் போது ராஜமய்யர் யதார்த்த வாதி. ஆனால் கல்கி புனைவியல் வாதி. மாயாண்டித்தேவன் அக்காலத்து நிலப்பிரபுத்துவ சமூகத்தில் உள்ள வழிப்பறிக் கொள்ளைக்காரர்களின் வகைமாதிரியான பாத்திரமாக உள்ளான். 

ஒரு படைப்பாளி வெகு இயல்பாக சமூகமாறுதல்களையும், முரண்பாடுகளையும், சித்திரிப்பது சுபாவ யதார்த்த வாதமாகும். ராஜமய்யர், மாதவையா முதலான ஆரம்பகாலப் படைப்பாளிகளிடம் இத்தன்மையைக் காணக்கூடியதாக உள்ளது. இவர்கள் முரண்பாடுகளைச் சுட்டிக் காட்டுவதுடன் நின்றுவிடுகின்றனர். பாத்திரங்களின் இயக்கம் படைப்பாளிகள் வாழ்ந்த காலத்து சமூக இயக்கங்களின் பிரதிபலிப்பாகும்.

ராஜமய்யர் குறைந்த வயதில், உருவம் சிறப்பாக அமைய எழுதிய நாவல்

தன் பிரதாப முதலியார் சரித்திரத்தை வசனகாவியம் என்று வேதநாயகம் பிள்ளை கூறினார். “கமலாம்பாள் சரித்திரமும்” ஒரு மகோன்னதமான வசனகாவியம் என்றுதான் சொல்ல வேண்டும். வேதநாயகம்பிள்ளையின் பிரதாபமுதலியார் சரித்திர நாவலின் கட்டுக்கோப்பு ஒருவிதத்திலும் அடங்கவில்லை. கமலாம்பாள் சரித்திரத்திலே  ‘நாவல் உருவம்’ அற்புதமாக அமைந்து விட்டது. இருபத்தாறே வருடங்கள் உயிர் வாழ்ந்த ராஜமய்யர் எழுதிய இந்த நாவல் இப்படி ஒரு நாவலாக அமைந்து விட்டதைத் தமிழர்களின் அதிஸ்டம் என்றே கூறலாம். நாவல் இலக்கியத்தின் வரலாற்று வளத்திற்கு ராஜமய்யர் அத்திவாரம் போட்டுத்தந்துவிட்டார் என்றுதான் சொல்லத் தோன்றுகிறது.

முன்வந்த நாவலைக் கடந்தும், பின்வந்த நாவலைப் பாதிக்கும் தன்மையில் அமைதல்

வேதநாயகம் பிள்ளையும், மாதவையாவும் “சரித்திரம்” என்று கூறி முன்னவர் சுயவரலாறு போலவும், பின்னவர் வாழ்க்கை வரலாறு போலவும் தம் நாவலைப் படைக்கலாயினர். மாதவையா அது நடந்தகதை என நிறுவவும் பிரயத்தணிக்கிறார். ஆனால் ராஜமய்யர் இது கதை என்று தம்முடைய பிற்கூற்றில் தாமே கூறிவிடுகின்றார். “இப்பொய்க்கதையை இதுகாறும் பொறுத்தருளிய…” என்றும் “இச் சரித்திரமெழுதுவதில் எனக்குக் கதையே முக்கியக் கருத்தன்று…” என்றும் பிற்கூற்றில் சொல்கின்றார். சமய ஒற்றுமையை வலியுறுத்துவதில் ராஜமய்யர் வெற்றி பெற்றுள்ளார் எனலாம். இதில் கமலாம்பாள் இராமனை அடைவதையும், முத்துஸ்வாமி ஐயர் சிவனைச் சென்றடைவதும் சைவர் - வைணவர்களின் தேவையற்ற விரோதம் நீக்கி ஒற்றுமையை வலியுறுத்த ஆசிரியர் முயன்றதாகவும் கொள்ளலாம். 

அ.மாதவையா பெண்கல்வியை அநேகமாகத் தமது எல்லாப் படைப்புகளிலும் வலியுறுத்தி வருகிறார். ‘பத்மாவதி சரித்திரத்தின்’ சிறப்பான பகுதிகளில் ஒன்று, பத்மாவதி நாராயணனுக்குக் குறைக்கல்வியுடன் தப்பும் தவறுமாய்க் கடிதம் எழுதும் பகுதியாகும். ரசனைக்குரிய இதேமுறை கடிதத்தை ராஜமய்யர், மாதவையாவிற்கு முன்பே கையாளுகின்றார். ஸ்ரீநிவாசனின் மூன்றாம் நாள் கலியாணத்தன்று லட்சுமி எழுதியதாய் ஒரு குறும்புப்பெண் தானே எழுதி ஸ்ரீநிவாசனிடம் கொடுக்கிறாள். இப்படித் தமக்கு முன்வந்த நாவலைக் கடந்தும், தமக்கு அடுத்து வந்த நாவலைப் பாதிக்கும் முறையிலும் ராஜமய்யரின் நாவல் அமைந்துள்ளதை அறியலாம். 

மேலும், அளமைப்பருவ விளையாட்டுக்கள்பற்றியும், கதைப்போக்கிலான ஒரு சம்பவமாய்த் ‘தீ விபத்து’ ஒன்றினையும் விரிவாய் “குருஸ்வாமி சர்மா” எழுதுகிறார். ராஜமய்யரின் நாவலிலும் ஸ்ரீநிவாசன் “பலீன் சடுகுடு” விளையாடுவதும், வைக்கோர்ப்போர் தீப்பற்றி எரிவதும் இடம்பெறுகின்றன. இதேபோல மாதவையாவும் தம் நாவலில் போகிறபோக்கில் நாடகக்கொட்டகை எரிந்ததாய்ச் சொல்கிறார். அத்துடன், குருஸ்வாமி சர்மாவின் “பிரேமகலாவதியத்தில்” ராஜமய்யரைப் பெரிதும் பாதித்தது நரபலியாவே தோன்றுகிறது. ராஜமய்யரின் நாவலிலும் நரபலியின் களமான காளி கோவில் பற்றியும் விபரங்கள் இடம்பெறுகின்றன.

ராஜமய்யரின் கவிதை உள்ளம்

ராஜமய்யர் வாழ்வியலின் கூறுகளைச் சற்று உயர்த்தி, தம் சிந்தனையின் கவர்ச்சியை ஏற்றியே அவர் கூறுகின்றார். முதல் பகுதியில் கமலாம்பாள்- முத்துஸ்வாமி ஐயர் தம்பதியின் உரையாடலில் இருந்து, வம்பர் மகாசபை, வித்துவான் அம்மையப்பிள்ளை, பேயாண்டித்தேவன், கடலைப்பார்த்து கவிதையாய் நெகிழ்தல் என்று கதையினை, தம் பார்வை எல்லைக்குள்ளே இயக்கிச்செல்கின்றார். அதனாலேயே பாத்திரங்கள் அழியாத்தன்மையும் வாசகனிடம் ஆசிரியரின் எழுத்துப் பற்றிய பிரமிப்பும் ஏற்படுகின்றன. பின் பகுதியில் வரும் அடுக்கடுக்கான திருப்பங்களும் அவரது எழுத்தின் கவர்ச்சியை நம்பியே வரையப்பட்டவையாக அறியலாம்.

பாடநூற்கல்விக்குத் தகுதியுடைய நாவல்

‘பிரதாபமுதலியார் சரித்திரம்’ எனும் நாவல் வெளிவந்து பதினாறு வருடங்களில் நாவலுக்குரிய அமைப்போடு கமலாம்பாள் சரித்திரம் வெளிவந்தது. நாவலின் அமைப்பின் சிறப்பினால், நிலமானியச் சமூகத்தைப் பேசும் தன்மையாலும் தமிழில் முதல் நாவல் என்று இதனையே கூறுவர். இந்தியாவில் 1932 ஆம் ஆண்டு இது பாடப்புத்தகமாக அங்கீகரிக்கப்பட்டது. ஆசிரியர் சான்றிதழுக்காக முதல்நிலைத் தேர்விற்கு உரிய பாடநூலாக தமிழக அரசால் இந்நூல் பரிந்துரைக்கப்பட்டது. எனவே பாடநூற் தகுதிக்குரிய முதல் ஆரம்ப நாவல் என்ற பெருமையையும் பெறுகிறது.

பிராமணப் பேச்சுத்தமிழ்

ஆரம்பகால நாவல்களில் பிரதேச, சமூகப்பேச்சு வழக்கினைக் கொண்டுவந்து பேசுவது சற்று கடினமான விடயமாகும். ஆனாலும் ராஜமய்யர் கமலாம்பாள் சரித்திரத்தில் மதுரைப்பிராமணப் பேச்சுவழக்கினைக் கையாண்டுள்ளார். “எங்களாத்தில் தீர்த்தம் கொடுக்கிற வழக்கமில்லை” என்பதன் மூலமும் வடமொழிச் சொல்லாட்சி பரவலாகக் கையாளப்பட்ட தன்மையினையும் அவதானிக்கலாம். உதாரணமாக, “புஸ்தகம் ஹஸ்த பூஸணம்”, “ஸரபோஜீ” முதலான சொற்களைக் கூறலாம்.

எடுத்துரைப்பு முறையில் புதுமை

நகைச்சுவை கலந்த நடையை ராஜமய்யர் தம் தேவைப்படி கையாண்டுள்ளார். முத்துஸ்வாமி ஐயரையும், கமலாம்பாளையும் ஆரம்பத்தில் காட்டும்போதே நகைச்சுவை கலந்த அன்னியோன்யத்துடன் அறிமுகம் செய்கிறார். தான் அடுத்துக்கொண்டுவரவுள்ள கதைச்சிக்கல்களாலும், அவலச்சுவை மிக்க சம்பவங்களாலும் வாசகனை இம்முறையில் அதிகம் கவரலாம் என அவர் முன்பே கணித்து விட்டார். ‘அம்மையப்பிள்ளையை’ முற்றிலும் நகைச்சுவை கலந்த பாத்திரமாகப் படைக்கின்றார். நகைச்சுவை அம்சமாய் ராஜமய்யர் எள்ளல் தொனியில் பட்டப்பெயர்கள் வைக்கிறார். “பாப்பா பட்டியகத்து வெட்டரிவாள்”, “வம்பர்மஹாசபை அக்கிராசனாதிபதி”, “சமாசார ஸ்திரீகள்”, “தெனாலிராமன்”, “லேடி”, “பெரும் தீனி வைத்தி”, “மாம்பழம்”, “சோக் சங்கரன்” முதலிய பெயர்களைக் குறிப்பிடலாம். இதனால் பாத்திரங்கள் வாசகர்களால் ஒரு நெருக்கத்துடன் அடையாளங்காணப்படுகின்றார்கள்.

நாவலின் வர்ணனை மரபைத் தொடக்கி வைத்தவர் ராஜமய்யர்தான். வர்ணனைகளின்வழி வெளிப்படும் இவரின் கூர்ந்த சமூக அவதானிப்பு ஆச்சரியமாக உள்ளது. வர்ணனைகளில் நகைச்சுவை உணர்வு நிரம்பி வழிகிறது. ஆனாலும் நாவலின் பிற்பகுதியில் ராஜமய்யர் வேதாந்த விசாரணையில் ஈடுபடும் போது வெளிப்படும் வர்ணனைகள் சலிப்படையச் செய்கின்றன. பிற இலக்கிய ரசனைகளை நாவலுக்குள் வெளிப்படுத்துவதில் ராஜமய்யர் வெற்றி கண்டுள்ளார் எனலாம். குறிப்பாகக் கம்பனிடத்தில் மனதைப் பறிகொடுத்தவர் ராஜமய்யர். அவர் தமது மிகப்பிரியமான லட்சுமி என்ற பாத்திரத்தைக் காம்பராமாயணப் பாடல்களை அபாரமாய்ப் பாடுவதாக அமைத்துக் கொள்கிறார். கம்பரையும், மாணிக்கவாசகரையும் மிகுந்த விருப்பமுடன் பல விதங்களில் பல இடங்களில் அவர் பயன்படுத்திக் கொள்கிறார். இந்த ரசனை, அடிப்படையில் நாவலின் பெரிய பலமாக அவருக்குக் கைகொடுத்தது.

 இந்நாவலில் பாத்திரங்களின் குணச்சித்திர வர்ணனைகளும், சம்பவங்களின் யதார்த்தச் சித்திரிப்புக்களும் ராஜமய்யரின் தனி ஆளுமை கொண்டவை. இவ்விதத்தில் பாத்திரங்களின் வாழ்வியல் கவர்ச்சி வாசகனைப் பெரிதும் ஈர்த்து மறக்க முடியாதபடி கட்டிப்போட்டு விடுகின்றது. இந்துப்பண்பாட்டோடு கூடிய வாழ்வியல் செயற்பாடுகளை இந்நாவலில் காட்சிப்படுத்துகின்றார். நிலமானிய சமூகத்தின் கூட்டுக்குடும்ப அமைப்பையும், அது படிப்படியாக சிதைவுற்றுச் செல்வதையும் யதார்த்த நெறியில் படைத்துள்ளார்.

முடிவுரை

“கமலாம்பாள் சரித்திரம்”, நாவல் எனும் இலக்கிய வடிவத்தின் தன்மைகள் முழுமையாகப் பொருந்தி வெளிவந்த முதல் நாவல் என்பதால் தமிழ்நாவல் வரலாற்றில் இதற்கென்று தனியான இடமுண்டு. ஏனெனில் 19 ஆம் நூற்றாண்டு மக்களின் மனோநிலையையும், குறிப்பாகப் பிராமண சமூகத்தவர்களின் வாழ்வியலை மையமாகக்கொண்டு, ஒட்டுமொத்தமாக நிலமானிய சமூகத்தின் கூட்டுக்குடும்ப அமைப்பையும் பின்னர் அது படிப்படியாக சிதைவுற்றுச் செல்கின்றமையையும் யாதார்த்த பூர்வமாகக் கூறுகின்றது. எனவே தொடக்ககாலத்திலேயே உருவ, உள்ளடக்கத்தில் சிறப்புற்றுத்தோன்றிய நாவல் என்னும் பெருமையை “கமலாம்பாள் சரித்திரம்” பெறுகின்றது.

 

உசாத்துணை நூல்கள்

• சுப்பிரமணியம். க. நா, (1957), முதல் ஐந்து தமிழ் நாவல்கள், அமுத நிலையம், சென்னை.

• மோகன். இரா, (1989), நாவல் வளர்ச்சி, மணிவாசகர் பதிப்பகம், சென்னை.

• ஞானி, (2008), தமிழ் நாவல், காவ்யா வெளியீடு, சென்னை.

• கைலாசபதி. க, (1968), தமிழ் நாவல் இலக்கியம், குமரன் பப்பிளிசர்ஸ், சென்னை.

• பாலசுப்பிரமணியன். இரா, (2004), நாவல் கலையியல், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை.

• சீனிச்சாமி. துரை, (1977), நாவல் வளம், தமிழ்ப் புத்தகாலய வெளியீடு, சென்னை.

• ராஜமய்யர். பி. ஆர், (1957), கமலாம்பாள் சரித்திரம், ராமநாத் பப்பிளிகேசன்ஸ், சென்னை.