ஜூலை 2024 இதழுக்கு ஆய்வுக்கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன

தமிழ் இலக்கியங்கள் முன்னெடுக்கும் பொதுமக்கள் நுகர்வுப் போக்கு 

முனைவர் ப.கிருஷ்ணமூர்த்தி உதவிப் பேராசிரியர் தமிழாய்வுத்துறை பிஷப் ஹீபர் கல்லூரி (தன்னாட்சி) திருச்சிராப்பள்ளி 27 Jul 2021 Read Full PDF

முனைவர் ப.கிருஷ்ணமூர்த்தி

உதவிப் பேராசிரியர்

தமிழாய்வுத்துறை

பிஷப் ஹீபர் கல்லூரி (தன்னாட்சி)

திருச்சிராப்பள்ளி – 620 017.

ஆய்வுச் சுருக்கம்

பழம்பெருமை வாய்ந்த தமிழ் இலக்கியம் அதன் தோற்றம் முதல் தற்காலம் வரையும் வாசகத் தன்மை, நுகர்வுப் போக்கு ஆகியவற்றில் பொதுமக்களை கவனத்திற் கொண்டு படைக்கப்படும் போக்கிற்கான காரண காரியங்களை ஆய்வு செய்யும் நோக்கில் இக்கட்டுரை அமைந்துள்ளது. 

பொதுவாக, மிகத் தீவிர இலக்கியப் படைப்பு முனைப்போடும், வாசகத் தன்மையோடும் தமிழ் இலக்கியத்தை அணுகும் இலக்கியச் சுவைஞர்கள், அதன் ‘உலகளாவிய’ தரத்தைக் கேள்விக்குட்படுத்தும் போக்கு தொடர்ந்து நடைபெற்ற வண்ணமே இருந்து வருகின்றது. அவற்றினும் தற்காலத்திய நவீனச் சிந்தனைப் போக்குகள் தமிழின் பாரம்பரியத்தின் மீது தொடுக்கும் தமிழ் கலை இலக்கியங்களின் ‘தரம்’ குறித்த வினாக்களுக்கு விடை காணும் நோக்கில் இவ்வாய்வு அமைகின்றது. 

திறவுச் சொற்கள்

தமிழ் இலக்கியம், பொதுமக்கள் நுகர்வு, பொதுமக்கள் இலக்கியச் சுவை, தமிழ் இலக்கிய மரபு, பாரதியார், அறிஞர் அண்ணா, இலக்கியத் தரம். 

முன்னுரை 

தமிழ்ப் படைப்பிலக்கியங்கள் அவற்றின் துவக்க காலந் தொட்டு நடப்புக் காலம் வரையிலும் பொதுமக்கள் அனைவரையும் கவனத்திற் கொண்டே – இலக்கியச் சுவை தருகின்ற ஈடற்ற இன்பம் எந்தவொரு தனிக் குழுவினருக்கும் உரியதாக அல்லாமல் அனைத்துத் தரப்பு மக்களுக்குமானது எனும் நோக்கில் – எழுந்துள்ளன என்பது இயல்பாகவே விளங்கக் கூடிய தாகும். தொல்காப்பியம் உள்ளிட்ட இலக்கியக் கொள்கை வகுப்பு நூல்களும் இதைச் சற்றும் பிறழாது, ‘நாடக வழக்கம் மற்றும் உலக வழக்கம்’ எனும் தலைப்புகளின் கீழ் பகுத்து ஆராய்ந்து ‘பொதுமக்கள்’ தரப்பையும் தம்முள் இணைத்து, பழந்தமிழ் இலக்கியத்தில் பொதுமக்களின் பங்கேற்புக்கு உரிய மதிப்பை வழங்குகின்றது. நடப்புக் காலத்திலும் பாரதியார், பாரதிதாசன் உள்ளிட்ட கவிஞர்கள் வகுத்தளித்த இக்கால இலக்கியப் போக்குகளும் பொதுமக்கள் தரப்பை முன்னிறுத்தியே இயங்குகின்றன. எனினும், இவ்வடிப்படையைக் கவனத்திற் கொள்ளாத, கலை இலக்கியங்களில் ‘நவீனச்’ சுவை காண்போரும், அக்கொள்கைகளைப் போற்றிப் பரவுவாரும் பொதுமக்கள் தரப்பை ‘வேண்டா வெறுப்புடன்’ நோக்குவது வருந்தத் தக்க நிகழ்வு.1 இவ்வடிப்படையில் தமிழகத்தின் கலை இலக்கியங்கள் பொதுமக்கள் அனைவருக்குமான சுவை உணர்வை முன்னிறுத்தியே எழுந்துள்ளன என்பதற்குத் தமிழ் இலக்கியக் கால எல்லையின் இரு முனைகளிலிருந்தும் சான்றுகள் தந்து விளக்குவதற்கு இவ்வாய்வுக் கட்டுரை விழைகின்றது. 

தற்கால இலக்கியப் போக்கு

  • மகாகவி பாரதியார்

பழந்தமிழ் உள்ளிட்ட மரபான இலக்கியங்களில் இப்பார்வையைப் பொருத்திக் காண்பதற்கு முன்பாக, தற்கால இலக்கியங்களை முதலில் நோக்குவது பொருத்தமாக அமைந்திருக்கும். 19ஆம் நூற்றாண்டின் புதிய இலக்கிய வகைகளான சிறுகதை, நாவல், புதுக்கவிதை முதலானவற்றின் நோக்கமே, இலக்கியப் படைப்புகள் அடிப்படைக் கல்வியறிவு கொண்ட அனைவருக்கும் சென்று சேர வேண்டும் என்பதேயாம். ஆங்கிலேயர் வரவுக்கு முந்தைய காலங்களில் இருந்துவந்த செய்யுள் இலக்கிய முறைகள் கற்றறி மாந்தருக் கன்றி மற்றோருக்குப் புரியவில்லை என்பதுடன், அக்கால இலக்கியப் படைப்பும் நுகர்வும் குறிப்பிட்ட மக்கள் தொகையினரை மையமிட்டே இயங்கிவந்ததுவும் ஒரு காரணமாகும்.

புதிய இலக்கிய வகைகளின் வரவு தமிழ்ப் பொதுமக்கள் அனைவருக்குமானதாக இருக்க வேண்டும் என்பதைப் பாரதியார் தமது படைப்புகளின் வாயிலாக நினைவூட்டிக் கொண்டே இருப்பதைச் சான்றுகளின் வழியாக உறுதிப்படுத்தலாம்.

தமிழ் ஜாதிக்குப் புதிய வாழ்வளிக்க வந்த மகாகவி பாரதியார், இலக்கியப் படைப்புகள் எளிமையாக, பொதுமக்களின் சுவைப்புத் தன்மைக்கேற்ற வகையில் அமைந்திருக்க வேண்டும் என்னும் தனது நோக்கத்தை,  பாஞ்சாலி சபதம் காவியத்தில் முகவுரையாகவே தருகிறார். 

எளிய பதங்கள், எளிய நடை, எளிதில் அறிந்துகொள்ளக் கூடிய சந்தம், பொது ஜனங்கள் விரும்பும் மெட்டு இவற்றினையுடைய காவியமொன்று தற்காலத்திலே செய்து தருவோன் நமது தாய்மொழிக்குப் புதிய உயிர் தருவோனாகின்றான். ஓரிரண்டு வருஷத்து நூற் பழக்கமுள்ள தமிழ் மக்களெல்லாருக்கும் நன்கு பொருள் விளங்கும்படி எழுதுவதுடன், காவியத்துக்குள்ள நயங்கள் குறைவுபடாமலும் நடத்துதல் வேண்டும்2

நவயுகச் சிற்பியான பாரதியின் ‘இலக்கியச் சுவைப்பு’ குறித்த இக்கருத்து வெளிப் படையானது. ஒரு இலக்கியம், அது தருகின்ற பொருள், வெளிப்படுத்தும் சுவை ஆகியவற்றில் ஆனவரையில் மிக அதிகமான மக்களைச் சென்றடைய வேண்டும் என்பதே இம்முகவுரையின் பொருள். 

தமிழில் உரைநடை இலக்கியங்கள், அவற்றின் துவக்க காலத்தில் எளிமையாக யாவரும், எளிதில் பொருள் விளங்கிக் கொள்ளுமாறு அமைந்திருந்தன. தமிழின் முதல் நாவலான பிரதாப முதலியார் சரித்திரத்தின் கதை சொல்லும் போக்கு, ஒருவர் மற்றவருக்குக் கதை சொல்வது போன்ற ‘வாய்மொழி’ மரபையே பெரிதும் கொண்டிருப்பதைக் காணலாம்.  முதற் சிறுகதையான குளத்தங்களை அரசமரம் ஒரு நேர்க்கோட்டுத் தன்மையிலான கதை கூறும் போக்கைக் கொண்டுள்ளது. இக்கதைகள் பொதுமக்களுக்கான பொதுத் தமிழில் அமைந்ததுடன், கதைப் போக்கும் சீராகச் செல்வனவாக இருக்கின்றன. 

மகாகவி பாரதியின் உரைநடை இலக்கியங்களையும் இத்துடன் சேர்த்துக் கொள்ளலாம். அவருடைய சமூகம் என்னும் தலைப்பில் அமைந்து, ‘அம்மாக்கண்ணு பாட்டு’, ‘வண்டிக்காரன் பாட்டு’,3 ‘புதிய கோணங்கி’5 முதலான பெரும்பான்மைப் பாடல்களும், பாஞ்சாலி சபதத்தில் கையாண்ட எளிமையான மெட்டுகளும், அக்காலத்தில் பொதுச் செல்வாக்குப் பெற்றிருந்த கோபாலகிருஷ்ண பாரதியின் நந்தனார் சரித்திரக் கீர்த்தனை மெட்டுகளைத் தமது பாடல்களில் பாரதியார் பயன்படுத்திக் கொண்டதும் இலக்கியத்தை அனைவருக்குமாகப் பொதுமைப் படுத்தும் முயற்சியாகக் கொள்ளலாம். 

பொதுமக்களுக்கான கலைச்சுவை குறித்துப் பாரதியார் தமது கட்டுரையான ‘சங்கீத விஷயத்தில்’ எடுத்துரைக்கின்றார். இசை குறித்துப் பேசுகின்ற அக்கட்டுரையில், கலை இலக்கிய நுகர்வில் பொதுமக்களுக்கான இடத்தைக் குறித்துப் பரக்கப் பேசுகின்றார்.

முத்துசாமி தீக்ஷிதர், தியாகையர், பட்டணம் சுப்பிரமணிய அய்யர் முதலியவர்களின் கீர்த்தனங்களிலே சிலவற்றை அதிக சங்கதிகளுடன் பாடுவோரே ‘முதல்தர வித்வான்கள்’. இந்தக் கீர்த்தனங்களெல்லாம் சம்ஸ்கிருதம் அல்லது தெலுங்கு பாஷையில் இருக்கின்றன. ஆகவே, முக்காலே மும்மாகாணி வித்வான்களுக்கு இந்தக் கீர்த்தனங்களின் அர்த்தம் தெரியாது. எழுத்துக்களையும் பதங்களையும் கொலை செய்தும், விழுங்கியும் பாடுகிறார்கள். அர்த்தமே தெரியாதவனுக்கு ‘ரசம்’ தெரிய நியாயம் இல்லை5 

இம்மேற்கோளில் தடித்த எழுத்துகளில் அமைந்துள்ள ‘முதல்தர வித்வான்கள்’ என்னும் சொற்றொடர் குறிப்பிடத் தகுந்தது.

இச்சொற்றொடரில் உள்ள தரம் என்பது கலை இலக்கியங்களின் ஆகச் சிறந்த செய்ந்நேர்த்தியைக் குறிப்பிடுவதைக் காட்டிலும், அவற்றைச் சுவைக்கின்ற மக்களில் குறிப்பிட்ட தொகுதியினருக்கானது என்பதையே பெரிதும் முதன்மைப்படுத்தி நிற்கின்றது. 

கலை இலக்கியங்களில் அனுபவம், அறிவு, தேர்ச்சி போன்ற எவையும் இல்லாது, எனினும் அளவற்ற சுவையுணர்வைத் தமக்குள்ளே கொண்டு, தாம் சுவைக்கின்ற கலை இலக்கியத்தின் தரம் குறித்து எதுவும் அறியாமல் இருப்பது இலக்கியச் சுவைப்பின் ஒரு முக்கியமான நிலை. கலை இலக்கியச் சுவையின் துவக்க நிலை என்று இதனைக் கூறலாம். அடிப்படைச் சுவை உணர்விலிருந்து அதற்கடுத்த நிலையை நோக்கி நகராமல், தமக்கு அருகில் கிடைக்கின்ற சுவையுடன், பெரும்பாலும் அங்கேயே தேங்கி நின்று விடுவோர் துவக்க நிலையினர் ஆவர். கலை இலக்கிய விமர்சகர்களின் தாக்குதலுக்கு ஆளாவோர் இந்நிலையினரே. இவ்விமர்சகர்கள் குறிப்பிடுகின்ற ‘தரம்’ என்பதும் இங்கிருந்தே துவங்குவதாகக் கொள்ளலாம். துவக்க நிலையிலிருக்கும் இச்சுவைஞர்களால் எட்ட முடியாத அல்லது இவர்களை நோக்கி வந்து சேராத சுவையுணர்வே ‘முதல் தர’ சுவை உணர்வாகும். இந்நிலையில் இலக்கியப் படைப்புகள் இவர்களை நோக்கி நகர்வதுடன், இத்துவக்க நிலையினரை இலக்கியச் சுவையின் அடுத்தடுத்த நிலைகளுக்கு இட்டுச் செல்வதற்கு உரிய வழிவகுப்பதும் பொதுமக்களை நோக்கிய இலக்கியப் படைப்புகள் என்று ஒருவாறு வரையறை செய்யலாம். 

துவக்க நிலையினரை நோக்கி இலக்கியப் படைப்புகளை நகர்த்தாமல், சுவையுணர்வின் துவக்க நிலையிலிருக்கும் இத்தகைய பெரும்பான்மையோரைப் புறக்கணித்து அவர்களை மனத்துட் கொள்ளாமல் புனையப்படுகின்ற கலை இலக்கியங்களே, ‘தரமான’, ‘செய்ந்நேர்த்தி’ உடையனவாகக் கொள்ளப்படுகின்றன. இத்தகு போக்குக் குறித்துப் பாரதியார் கூறுவதாவது:

…இவற்றுள்ளே தீக்ஷிதரின் கீர்த்தனைகள் பச்சை சம்ஸ்கிருத பாஷையிலே எழுதப்பட்டவை. இவை கங்கா நதியைப்போல் கம்பீர நடையும் பெருந்தன்மையும் உடையன. வேறு பல நல்ல லக்ஷணங்களும் இருந்த போதிலும், சம்ஸ்கிருத பாஷையில் எழுதப்பட்டிருப்பதால் இவை நமது நாட்டுப் பொது ஜனங்கள் ரசானுபாவத்துடன் பாடுவதற்குப் பயன்பட மாட்டா6 

என்கிறார்.

படைப்புத் திறன்கள் அனைத்தும் முழுமை பெற்ற, ‘உன்னதமான’ கலையே யாயினும், பொதுமக்களுக்குப் புரியாத மொழியில் அமைந்திருப்பதால், அக்கலை பயன்படுதலை நோக்கிச் செல்லாது அனுபவ மட்டத்திலேயே தேங்கி நின்று விடுவதைப் பாரதியார் எடுத்துக்காட்டுகிறார். 

  • அறிஞர் அண்ணா

ஒரு குறிப்பிட்ட கலை அல்லது இலக்கியம் பொதுமக்களை நோக்கி நகருகின்ற அதன் உட்கூறுகளுக்காக, ‘தர’ ஆய்வாளர்களால், அது பிரச்சாரத் தன்மை உடையதாக நோக்கப் படுகின்றது. கலை இலக்கியப் படைப்புகளில் காணப்படும் பிரச்சாரத் தன்மை என்பது, அப்படைப்பு எவ்வகையில் மக்கள் பயன்கொள்ளக் கிடக்கின்றது என்பதை அடிப்படையாகக் கொண்டது ஆகும். மக்களுக்கான அறிவுரைகள், வழிகாட்டுதல்கள் போன்றவற்றை ஒரு இலக்கியம் வெளிப்படுத்தும்போது அது பிரச்சாரத் தன்மை கொண்டாதாக கருதப்படுகின்றது. 

பொதுமக்களுக்கான இலக்கியப் படைப்புகளின் மீது முன்வைக்கப்படும் இப்பிரச்சாரத் தன்மை குறித்து அறிஞர் அண்ணாவும் சிறுகதை ஒன்றைத் தக்க முறையில் எடுத்துக்காட்டி, நன்கு விளக்கிச் செல்கின்றார்.

மேட்டிமையான பாரம்பரியத்தைச் சேர்ந்தவர் ஒருவர், தனது வீட்டுக்கு வெளியே வெறும் செங்கல்லை வைத்துப் பூஜை கொண்டாடும் ரிக்ஷாக்காரர்களை நோக்கி, ‘அவர்களுடைய உள்ளத்தில் தெய்வம் இருக்கிறது; வழிபடு பொருள் எதுவாக இருந்தா லென்ன?’ என்று கருதுகிறார். ஆனால், அடுத்த நாளே அவ்வாறு வழிபட்ட ரிக்ஷாக்காரர்கள் தாம் வழிபட்ட செங்கல், பந்தல் போன்றவற்றைக் குடிபோதையில் பிய்த்தெறிந்து ஒருவருக்கொருவர் கைகலப்பில் ஈடுபடுகின்றனர். இக்காட்சிகளைக் கண்ணுறும் மேட்டிமைக்காரர் கார்ல்மார்க்ஸின் போதை சித்தாந்தம் கொஞ்சமும் உண்மையில்லை என்று அக்கதாசிரியர் தனது கதையை முடிப்பதாகக் கூறும் அண்ணா, ‘போதை சித்தாந்தம்’ என்பதை விவாதத்துக்கு எடுத்துக்கொள்கிறார்.7 

ரிக்ஷாக்காரர்களின் வழிபாட்டைக் கண்ணுறும் அந்த மேட்டிமைக்காரர், வழிபாட்டுக்குப் பிந்தைய கைகலப்பைத் தடுத்தாரில்லை; ‘இவ்வாறு குடித்துக்கொண்டு கைகலப்பில் ஈடுபடுவது தவறு என்று அவர்களுக்கு அறவுரையும் பகன்றாரில்லை. மாறாக, ‘மதம் மக்களுக்கு அபின்’ என்னும் கார்ல்மார்க்ஸ் சித்தாந்தத்தைத் தவறு என்னும் கருத்தை வலிந்து திணிக்கும் முயற்சி இக்கதையில் இடம்பெற்றிருப்பதை அறிஞர் அண்ணா எடுத்துக் காட்டுகிறார். கைகலப்பில் ஈடுபடுகின்ற எளிய பாமர மக்களுக்கு அந்த மேட்டிமைக்காரர் அறவுரை எதுவும் கூறவில்லை; அவ்வாறு அறவுரை எதுவும் அவர்களுக்குக் கதையில் வழங்கப்படுமாயின் அக்கதை ‘பிரச்சார இலக்கியமாக’ ஆகிவிடும் எனும் படைப்பாளியின் நோக்கமே காரணம் என்கிறார் அண்ணா. ‘அறவுரை வழங்குவது பிரச்சாரம் என்றால் கார்ல்மார்க்ஸ் சித்தாந்தத்தை, தவறு என்னும் கருத்தை வலிந்து திணிக்க முயல்வது பிரச்சாரமாகாதா?’ என்னும் வினாவையும் அண்ணா எழுப்புகிறார்.

பாரதியார், அண்ணா விவாதங்கள் - முடிவு

ஒரு சாரார் கருத்தின்படி, இலக்கியப் படைப்புகளில் இத்தகைய அறவுரை / அறிவுரைசார் கருத்துகள் வெளிப்படையாக இடம்பெறுவதே ‘பிரச்சாரம்’ ஆகின்றது; மறைமுகமாக இடம்பெறுவது பிரச்சாரம் ஆவதில்லை என்பதை அண்ணாவின் கருத்துகள் எடுத்துக் காட்டுகின்றன. கலை இலக்கியம், அதனுடைய பயனை எதிர்நோக்கி இருக்கும்போது, அதனை நுகர்வோருக்கு அது எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்துகின்றது என்னும் வினா எழுகின்றது. ‘இதைச் செய், இதைச் செய்யாதே!’ என வெளிப்படையாகத் தெரிவித்தா லன்றி, கலை இலக்கியங்களின் துவக்க நிலை சுவைஞர்களுக்கு, அதனால் ஆய பயன் சென்று சேராது. எனவே, அவர்தமக்கு ஏற்றவாறு பயனை எடுத்துச் சொல்லும்போது அது பிரச்சார முறையாகி விடுகின்றது. மேற்கண்ட கதையில் இருக்குமாறு மறைமுகமாக ஒரு கருத்தை வலியுறுத்தும்போது அது சுவைஞர்களைச் சென்று சேராமல் ‘புரியாத நிலைக்குள்’ அடைந்துவிடுகின்றது.

தமிழ் இலக்கியப் படைப்புகள் தோன்றிய காலம் முதலே பொதுமக்களின் சுவைக்கே முதன்மை அளித்துப் பாடப்பட்டு வருகின்றன என்பதற்குப் போதுமான சான்றுகளை எடுத்துக்காட்ட இயலும். ‘மழைக்குக் குடை’, ‘பசிக்கு உணவு’ போன்ற உவமைகள் எளிமையாக இருப்பினும், அவை முன்வைக்கும் கருத்துகளை எளிதாக எடுத்துக் கொள்ள இயலாது. ஒரு படைப்பாளன், படைப்பின் உச்ச நிலையிலிருந்து எளிமை நிலைக்குத் தன்னை இறக்கிக் கொண்டு பாடியதாகவே அவற்றைக் கருதுதல் வேண்டும். 

பாரதியிடமிருந்தே இதற்கான மற்றுமொரு சான்றையும் பெற்றுக்கொள்ள முடியும். ரவீந்திரநாத் தாகூர் இலக்கியத்துக்கான நோபல் பரிசைப் பெற்று உலகறிந்த படைப்பாளராகப் புகழ் பெற்றபோது, தன்னாலும் அத்தகைய புகழைப்  பெற முடியும் என்னும் எண்ணத்தில் பாரதி கூறிய குறிப்பொன்றை ஆய்வறிஞர்கள் எடுத்துக் காட்டுகின்றனர்.8 தாமும் தாகூரும் பொதுமக்களின் முன்னிலையில் தமது கவிதைகளை எடுத்துக் கூறும்போது, யாருடைய கவிதைக்குக் கேட்குநரின் ‘கைதட்டல்கள்’ அதாவது மிகுதியான பாராட்டுக் கிடைக்கின்றதோ அவருடைய கவிதையே வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட வேண்டும் என்னும் தனது எதிர்பார்ப்பைப் பாரதியார் பதிவு செய்கின்றார். 

பாரதியாரின் இத்தகைய எதிர்பார்ப்பு எடுத்துக்காட்டுகின்ற பொருள், ‘ஒரு இலக்கியப் படைப்பு பொதுமக்களின் மனங்கொள்ளத்தக்க வகையில் அமைந்திருக்க வேண்டும் என்பதே ஆகும். தமக்குக் கிடைக்காத விருதுகளைக் குறித்துப் பாரதியார் கவலை கொண்டிருந்தாரா என்பது தனி ஆய்வுக்குரியது. மக்கள் தமது பாடல்களை / கவிதைகளைச் சுவைக்கின்றனர் என்பது பாரதிக்குப் பெருமகிழ்ச்சியை அளித்திருக்கக் கூடும். அந்த அடிப்படையில் ஒருவேளை பொதுமக்கள் முன்னிலையில் பரிசுக்கான கவிஞர் தேர்வு நடைபெற்றிருக்குமே யானால், ‘பொதுமக்கள் சுவைக்கின்ற படைப்புகளைப் படைத்தளித்த’ தமக்கே பரிசு கிடைத்திருக்கும் என்பதை மறைமுகமாகத் தெரிவிக்கின்றார் பாரதியார். படைப்புகளைச் சுவைப்பதுவே யன்றி, பரிசுக்கான படைப்புகளைத் தேர்ந்தெடுப்பதிலும் பொதுமக்களின் பங்காற்றுதல் குறித்த புதியதொரு சிந்தனையையும் பாரதியார் விதைக்கிறார் எனலாம்.

பழந்தமிழ் இலக்கியங்களின் பொதுமக்கள் சுவைப்போக்கு

இனி, தமிழ் இலக்கியத்தின் துவக்க முனையான பழம்பாடல்களை நோக்கினால், அவற்றிலும் இத்தகைய பொதுமக்கள் போக்கு இருப்பதைக் காண முடியும். பழந்தமிழ் இலக்கியத்தின் அடிப்படைப் பாடுபொருள்களான காதல் வீரம் என்பவை பொதுமக்களின் உணர்விலிருந்து எடுத்துக்கொள்ளப்பட்டதே யாகும். தனது இணையை விழைதலும், சினத்தை வெளிக்காட்டுதலும் மானிடர்க்கு மட்டுமே யன்றி அனைத்து உயிர்களுக்கும் அடிப்படையாக அமைந்துள்ள உணர்விழைகளாகும். எந்தவொரு மனித உயிரினமும் இவ்வுணர்விழை யின்றி இருக்க முடியாது என்னும் அடிப்படையிலேயே பழங்கால இலக்கிய விற்பன்னர்கள் நிலையான பாடுபொருள்களாகக் காதல் வீரம் ஆகியவற்றைத் தேர்ந்து அவற்றை அகமாகவும் புறமாகவும் வகுத்தளித்தனர். இதுவே, பொதுமக்களை நோக்கிய பெரும் இலக்கியச் செல்நெறியாகக் கொள்ளத்தக்கது. இச்செல்நெறியையே அகத்திணையில், புறத்திணையியல்களாகத் தொல்காப்பியம் கட்டமைத்துக் காட்டுகின்றது.

தொல்காப்பியம் பொருளதிகாரம் மெய்ப்பாட்டியலில், மெய்ப்பாடுகளின் எண்ணிக்கை குறித்துக் கூறுகின்ற நூற்பாவுக்குரிய விளக்கப் பகுதிகள், இலக்கியத்தில் பொதுமக்களுக்கான பங்களிப்பை எடுத்துக்காட்டும் தக்க சான்றுகளாகின்றன. இந்நூற்பா, பழந்தமிழ் இலக்கியத்தின் எளிமையான நிலையை எடுத்துக்காட்டுவதாகவும் அமைந்திருக்கின்றது.

பண்ணைத் தோன்றிய எண்ணான்கு பொருளும்

கண்ணிய புறனே நானான் கென்ப (தொல்.மெய்ப்.1)9

என்னும் நூற்பாவில் உள்ள ‘பண்ணை’ என்னும் சொல்லுக்கு விளையாடுமிடம் எனப் பொருள் கூறப்படுகின்றது. அதாவது, நாடகமாடுமிடம் எனப் பொருள்படும்.  நாடகம் என்பது இங்கு ஒன்றைப் பொய்யாகப் புனைந்து விளையாடுவது ஆகும். பெரியோர்தம் வாழ்வு முறையைக் கண்ணுறும் சிறார்கள், அவ்வாழ்வைத் தங்களுக்குள்ளேயே விளையாட்டாக வாழ்ந்து பார்க்கும் ‘போலச் செய்யும்’ முயற்சியாகவே நாடகமாடும் இடத்தையும், அதைக் குறிக்கின்ற பண்ணை என்னும் சொல்லையும் கொள்ள வேண்டும். எனவே, பொதுமக்களின் வாழ்வோடு இடையறாது ஒன்றிணைந்து இயங்கும் அன்றாட நிகழ்வுகளே பழந்தமிழ்ப் பாடல்களுக்கான இன்றியமையாத பாடு பொருள்களாக இருந்துள்ளன என்பதை அறிய முடிகின்றது. 

அறையும் ஆடரங்கும் மடப் பிள்ளைகள்

தறையிற் கீறிடின் தச்சரும் காய்வரோ (கம்ப. பாயிரம், 9 )10

என்னும் கம்பராமாயணப் பாடலையும் இத்தோடு வைத்து நோக்குதல் வேண்டும். விளையாட்டுப் பருவச் சிறுபிள்ளைகள், தமக்கு அருகில் கிடைக்கின்ற எளிமையான எந்தவொரு பொருளின் மீதும் உண்மையான பொருளுக்குரிய பாவனையைக் கற்பித்துக்கொள்ளும் மனப்பாங்கைப் பெற்றுக்கொண்டு விளையாட்டில் ஈடுபடும். அத்தகைய மனப்பாங்கு பெற்றுள்ள சிறு பிள்ளைகளிடம் உண்மையான பொருள் குறித்துக் கூறி, தமது அறிவை பெரியோர்கள் வெளிக்காட்டக் கூடாது என்பது இவ் அவையடக்கப் பாடல் தெரிவிக்கும் கருத்து. இலக்கியச் சுவையில் தோய்ந்து அனுபவம் பெற்றிருக்கும் ‘முதல் தரத்தினர்’ இவ்விளையாட்டுப் பாவனையைக் காய முனையாமல் இருக்க வேண்டும் என்பது கம்பரின் வேண்டுகோளாகக் கொள்ளக் கிடக்கின்றது.

கம்பர் மட்டுமன்றி, தமிழ் இலக்கியப் படைப்பாளர்கள் அனைவருமே தமது படைப்புகள் எளிமையாக, பொதுமக்களுக்கு அணுக்கமான நிலையிலேயே இருக்க வேண்டும் என்ற தமது விருப்பத்தை வெளிப்படுத்திய வண்ணமே இருந்துள்ளனர். அதனாலேயே இச்சிறுபிள்ளைகளின் பாவனை விளையாட்டு மரபை அறியாமல், ‘தேர்ந்த நிபுணத்துவம்’ பெற்றவர்கள், அம்மரபைக் காய முனையக் கூடாது எனக் கவிஞர்கள் கூறுவதாகவே அவையடக்கம் இடம்பெறுகின்றது. 

எனவே, அவையடக்கம் என்பதை வெறும் மரபான, சடங்கு முறையான ஒன்றாகக் கருதாமல், தகுந்த காரணத்துடனேயே படைப்பாளர்கள் அதை இட்டு வைத்துள்ளனர் என்றும் பொருள்கொள்ளவும் போதுமான காரணங்கள் இருக்கின்றன என்பது தெளிவு படுத்தப்படுகின்றது. 

தமிழ் இலக்கியப் படைப்பாளர்கள் எப்போதும் பொதுமக்களின் ஏற்பு நோக்கிலேயே தமது படைப்புகளைப் படைத்தளிக்கின்றனர் என்பதை ஆய்வாளர்களும் எடுத்துக் காட்டியுள்ளனர். The  Smile of Murugan on Tamil literature of South India என்னும் தமது பழந்தமிழ் இலக்கியங்கள் குறித்த ஆய்வு நூலில் கமில் சுவலபில் அவர்கள் இப்போக்கை நன்கு விளக்குகின்றார்.

It seems to me responsible to assume that the earliest poetry began first to be fixed in writing, and later anthologized, as soon as it ceased to be part of a living tradition, in other words, as soon as it ceased to be a living, orally transmitted poetry for audience appreciation.11

இம்மேற்கோளின் மொழிபெயர்ப்பு இவ்வாறு அமைகின்றது: 

மனித வாழ்வியல் நிகழ்வுகளை உடனடியாகப் படம்பிடித்து, அவ்வாழ்வின் ஒரு பகுதியாக, இன்னும் சொல்லப் போனால் மனித வாழ்வாகவே விளங்கிய பழந்தமிழ்ப் பாடல்கள், வாய்மொழியாக, கேட்குநரின் பாராட்டைப் பெறுவதற்காகவே பாடப்பட்டுள்ளன

வாழ்வின் நிலைத்த பேருண்மைகள் உணர்த்தப்படுதலைவிட, அன்றாட வாழ்வின் அருமையான நிகழ்வுகள், அனுபவங்கள் ஒவ்வொன்றையும் பதிவு செய்யும் முயற்சியையே தமிழ் இலக்கியங்கள் பின்பற்றுகின்றன. அவ்வாறான நிகழ்வுகளைக் கொண்ட கற்பனைகளே எளிமையான சுவையுணர்வு கொண்ட பொதுமக்களைக் கவரும் இலக்கியத்தைப் படைக்கத் துணையாக இருப்பதுடன், அவர்களைப் பண்பட்ட மானிடச் சமுதாயத்தின் ஓர் அங்கமாக்கத் தன்னாலியன்ற பேருதவியையும் ஆற்றும் என்பதைத் தமிழ் இலக்கியங்கள் நமக்குக் கற்குந்தோறும் உணர்த்திக் கொண்டுள்ளன.

நிறைவுரை

  • பண்டைக்காலந் தொட்டுத் தற்காலம் வரையிலான தமிழ் இலக்கியப் படைப்புகள் பொதுமக்களையே தமது வாசக இலக்காகக் கொண்டு படைக்கப் பெற்று வெற்றி பெற்றுள்ளன. பாரதியாரின் கருத்துப்படி, இலக்கியப் படைப்புகள் பொதுமக்களுக்குப் புரியாத மொழியில், விளங்கிக் கொள்ளவியலாத நடையில் இருத்தல் கூடாது. அத்தகைய இலக்கியங்கள் மக்களுக்குப் பயன்படாது.
  • பொதுமக்கள் பயன்கொள்ளத்தக்க வகையில் இலக்கியங்கள் இருத்தல் வேண்டும். அத்தகு பயனைத் தருகின்ற இலக்கியங்கள் பிரச்சாரத் தன்மையை உடையன வெனில், பிரச்சாரத் தன்மையிலாத இலக்கியங்கள் என்று எவையும் இல.
  • உன்னதமான கலைப்படைப்புகள் பொதுமக்களைச் சென்று சேர்வதிலும், அத்தகைய கலைப் படைப்புகளை நோக்கி, இலக்கியச் சுவையில் துவக்க நிலையினராக இருப்பவர்கள் இயங்குவதிலும் பெரும் இடையூறுகள் நிகழ்ந்தவண்ணம் இருக்கின்றன.
  • தமிழின் கலை இலக்கியங்கள் கேட்குநரின் பாராட்டைப் பெறும் நோக்கத்தில் அமைவன.

அடிக்குறிப்புகள்

  • உலக சினிமா சில திரைப்பட அறிமுகங்கள், சுரேஷ் கண்ணன், கிழக்கு பதிப்பகம், சென்னை, 2016.
  • பாஞ்சாலி சபதம், டி.வி.எஸ். மணி., சீனி. விசுவநாதன் (ப.ஆ)., வானவில் பிரசுரம், சென்னை, 1997. ப. 357.
  • மேலது., ப. 494.
  • மேலது., ப. 505
  • மகாகவி பாரதியார் கட்டுரைகள், சி.சுப்பிரமணிய பாரதியார், பழனியப்பா பிரதர்ஸ், சென்னை, 2000. ப. 251.
  • மேலது., ப. 253.
  • அண்ணா அறிவுக்கொடை தொகுதி – 1, செந்தலை ந.கவுதமன் (தொ.ஆ), தமிழ்மண் பதிப்பகம், சென்னை, 2019. பக். 74-80.
  • கங்கையும் காவிரியும், ரகுநாதன், மீனாட்சி புத்தக நிலையம், மதுரை, 1980. ப. 24.
  • தொல்காப்பியம் பொருளதிகாரம் பேராசிரியம், ச.பவானந்தம்பிள்ளை, லாங்மென்ஸ் கிரீன் அண்ட் கம்பெனியார், சென்னை, 1917.
  • கம்பராமாயணம், …………, கம்பன் கழகம், சென்னை, 1976. பாயிரம், 9.
  • The Smile of Murugan on Tamil literature of South India, kamil zvelebil, LEIDEN E.J.BRILL, 1973. ப. 29.

துணைநூற் பட்டியல்

  • சுரேஷ் கண்ணன்., 2016, உலக சினிமா சில திரைப்பட அறிமுகங்கள், கிழக்கு பதிப்பகம், சென்னை.
  • மணி, டி.வி.எஸ், விசுவநாதன், சீனி (ப.ஆ)., 1977, பாரதியார் கவிதைகள், வானவில் பிரசுரம், சென்னை.
  • சுப்பிரமணிய பாரதியார், சி., 2000, பாரதியார் கட்டுரைகள், பழனியப்பா பிரதர்ஸ், சென்னை.
  • செந்தலை கவுதமன், ந (தொ.ஆ)., 2019, அண்ணா அறிவுக்கொடை தொகுதி – 1, தமிழ்மண் பதிப்பகம், சென்னை.
  • ரகுநாதன்., 1980, கங்கையும் காவிரியும், மீனாட்சி புத்தக நிலையம், மதுரை.
  • பவானந்தம் பிள்ளை, ச., 1917,  தொல்காப்பியம் பொருளதிகாரம் பேராசிரியம், லாங்மென்ஸ் கிரீன் அண்ட் கம்பெனியார், சென்னை.
  • ---------------., 1976, கம்பராமாயணம், கம்பன் கழகம், சென்னை.
  • Zvelebil kamil., 1973, The Smile of Murugan on Tamil literature of South India, LEIDEN E.J.BRILL.