ஜூலை 2024 இதழுக்கு ஆய்வுக்கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன

தமிழ் மொழி: கற்றலின் தேவையும் கற்பித்தலில் சிக்கலும் -  சில  விவாதங்களும்

முனைவர் அ.இலட்சுமி தத்தை உதவிப்பேராசிரியர், புதுவைப் பல்கலைக் கழகச் சமுதாயக் கல்லூரி, புதுச்சேரி, இந்தியா 27 Jul 2021 Read Full PDF

முனைவர் அ.இலட்சுமி தத்தை

உதவிப்பேராசிரியர், புதுவைப் பல்கலைக் கழகச் சமுதாயக் கல்லூரி, புதுச்சேரி, இந்தியா

ஆய்வுச் சுருக்கம்:

இந்திய மொழிகளுள் தமிழ்மொழி மிக தொன்மையும் முதன்மையயும் கொண்டது. தமிழகத்தைப் பொருத்தவரை இருமொழிக்கொள்கை இருந்தாலும், விருப்பமொழியாகப் பிற மொழிகளைப் பயிலும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.தேசியக் கல்விக் கொள்கை, பொதுக்கல்வி, தொழிற்கல்வி என இரண்டு நிலைகளில் செயல்படுகின்றது. இவ்விரு வகை கல்விக் காற்றலுக்கும் மொழிக் கல்வி அடிப்படையாக அமைகின்றது. அடுத்தத் தலை முறையினரிடமும் தாய் மொழியானத் தமிழ் மொழியின் பற்றினையும் ஈர்ப்பினையும் உருவாக்க என்ன செய்யவேண்டும். மொழிப் பாடமாகத் தமிழைப் பயிலும் 100 மாணவர்களிடம் தரவுகள் கள ஆய்வின் மூலம் சேகரிக்கப் பட்டு, அத்தரவுகளின் அடிப்படையிலும் ஊடகங்கள் எந்த அளவிற்கு மொழி வளர்ச்சியில் பங்கெடுக்கின்றன என்பதையும் இணைத்து இவ்வாய்வுக் கட்டுரை தன் ஆய்வுப்போக்கினைச் செலுத்துகின்றது.

திறவுச் சொற்கள்:

தாய்மொழிக்கல்வி, ஆளுமை, அறிவு வளர்ச்சி, ஆங்கிலக் கலப்பு, இளங்கலை, கற்றல் சூழல்கள், ஊடகங்கள், சிக்கல்கள், விவாதங்கள்.

முன்னுரை:

தொழில்நுட்பவியல் நூற்றாண்டாகப் போற்றப்படும் இருபத்தொன்றாம் நூற்றாண்டில் பொதுவாக உலகம் முழுவதும்  தாய்மொழியின் தேவையைக் குறித்துப் பல விவாதங்கள் நடந்தவண்ணம் உள்ளன. இந்திய மொழிகளுள் தமிழ்மொழி மிக தொன்மையும் முதன்மையயும் கொண்டது. தமிழகத்தைப் பொருத்தவரை இருமொழிக்கொள்கை இருந்தாலும், விருப்பமொழியாகப் பிற மொழிகளைப் பயிலும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மொழி அறிவில் அதிலும் தாய்மொழி அறிவில்  நிறைவாக இருக்கும் போதுதான் பிற மொழியையும் பிற முதன்மை பாடங்களையும் கசடற கற்க இயலும் என்பது இன்றையப் புதிய கல்விக்கொள்கையை வழங்கிய ஹர்லாக் அவர்களின் கருத்து.

தமிழ் இனி மெல்லச் சாகும் என்ற பாரதியின் கூற்று மிக விரைவில் தமிழகத்தில் நடைபெற்றுவிடுமோ என்ற எண்ணம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது திண்ணம். 

 

ஓர் இனத்தை அழிக்க நினைத்தால் அந்த இனத்தின் தாய் மொழியை அழித்து விட்டால் இனம் தானாக அழிந்து விடும் என்பது காலத்தின் உண்மை.

 இதையெல்லாம் தாண்டி, பூமியின் இயக்கத்தை ஒப்ப நில்லா இயக்கங்கொண்டது தமிழ்மொழியாகும். இந்த இயக்கம் தொடர்ந்து நிகழவேண்டும் என்றால் அடுத்தத் தலை முறையினரிடமும் தாய் மொழியானத் தமிழ் மொழியின் பற்றினையும் ஈர்ப்பினையும் உருவாக்கவேண்டும். 

இவ்வாய்வுக்கட்டுரை தாய் மொழியானத் தமிழைப் பேசும் மாணவர்களின், தாய் மொழியின் அடிப்படை மொழி அறிவை ஆராய்வதாக அமைகின்றது. இந்த ஆய்விற்காக மொழிப் பாடமாகத் தமிழைப் பயிலும் 100 மாணவர்களிடம் தரவுகள் கள ஆய்வின் மூலம் சேகரிக்கப் பட்டு, அத்தரவுகளின் அடிப்படையிலும் ஊடகங்கள் எந்த அளவிற்கு மொழி வளர்ச்சியில் பங்கெடுக்கின்றன என்பதையும் இணைத்து இவ்வாய்வுக் கட்டுரை தன் ஆய்வுப்போக்கினைச் செலுத்துகின்றது.

தாய்மொழியின் முதன்மை:

நுண்ணிய எண்ணங்களையும் தெளிவான கருத்தோட்டங்களையும் பெற வேண்டுமென்றால் தாய் மொழிக் கல்விதான் உகந்தது, சிறந்தது. எளிய முறையில் பொருளைப் பற்றிப் பேசவும் கேட்கவும் படிக்கவும் எழுதவுமான வல்லமையைத் தரக் கூடியதாகத் தாய் மொழிக் கல்வி அமைகின்றது.

கில்போர்ட் என்ற கல்வியியல் அறிஞர் நுண்ணறிவுச் செயல்களில் 5வகைப்பட்ட மனவியக்கங்கள் காணப்படுவதாகக் கூறுகின்றார். அறிதல், நினைவில் வைத்திருத்தல், விரிந்த சிந்தனை, குவிமுறைச் சிந்தனை, மதிப்பிடுதல் இவை ஐந்தும் வேற்றுமொழியில் பயிலும் போது உளவியலைப் பாதிக்கும் காரணிகளாக அமைகின்றன என்கின்றார். (மேற்கோள்.கெ.கவிதா.பக். 256)

 மொழிக் கல்வியின் நோக்கங்கள்:

தேசியக் கல்விக் கொள்கை, பொதுக்கல்வி, தொழிற்கல்வி என இரண்டு நிலைகளில் செயல்படுகின்றது. இவ்விரு வகை கல்விக் காற்றலுக்கும் மொழிக் கல்வி அடிப்படையாக அமைகின்றது. கூடுதலாக,

ஆளுமையை வளர்த்தல்,

படைப்பாற்றலை வளர்த்தல்,

கலைக்கல்வி மூலம் சிந்தனைத் திறனையும் கற்பனைத் திறனையும் வளர்த்தல்,

பண்பாட்டினை வளர்த்தல்,

போன்ற தனிமனித வளர்ச்சியையும் மொழிக் கல்வியால் தான் நிறைவேற்ற முடியும். பயிற்றுமொழி எதுவாக இருந்தாலும் தாய்மொழிப் புலமையே ஒருவரை ஆளுமைப் பண்புடன் திகழச்செய்யும்.

கற்றல் என்பது உடல்வளர்ச்சி, அறிவு வளர்ச்சி, ஒழுக்க – ஆன்மீக வளர்ச்சி, சமூக சிந்தனை வளர்ச்சி என்ற அனைத்தையும் உள்ளடக்கியது என்பது தாகூர் அவர்களின் கூற்று.

சுயவெளிப்பாட்டிற்கும் தனித்தமைகளை வளர்த்துக் கொள்ளவும் மனித இனம் மேம்பாடடையவும் வாழ்க்கைப் போராட்டத்தில் வெற்றிப் பெறவும் தாய்மொழிக் கல்வி உதவும் என்பது உலகக் கல்வியாளர் ரூசோவின் கருத்து.

 தாய்மொழியின் முதன்மைத்துவம் உலகளாவிய நிலையிலும் தேசிய அளவிலும் பன்முகப் பார்வையில் எடுத்துக்காட்டியுள்ளனர்.

 

II

மேற்கூறப்பட்ட கருத்துக்களை அடிப்படையாக வைத்துக்கொண்டு தமிழைத் தாய்மொழியாகக் கொண்டு தமிழகத்திலும் புதுச்சேரியிலும் தமிழ்ப்பயிலும் மாணவர்களின் அடிப்படைத் தமிழ்மொழிப் புலமை ஆய்வுசெய்யப்படுகின்றது. 

 

இவ்வாய்வினை மேற்கொள்ள வேண்டிய அடிப்படைக் காரணம்:

  • தனித்து இயங்கும் தன்மை கொண்ட தமிழ்மொழியில் ஆங்கிலக் கலப்பு அதிகரித்து வருதலும்
  • தமிழ்மொழிச் சார்ந்த, தொன்மை, இனம், பண்பாடு போன்றன பற்றிய அறிதல், இன்றைய இளையத் தலைமுறையினரிடம் குறைந்து வருதலும்
  • இந்தி எதிர்ப்பும் இந்திய அரசின் மத்திய  பொதுக் கல்விக் கொள்கையை எதிர்ப்பதும்
  • இருமொழிக்கல்விக் கொள்கையில் பயிலும் மாணவர்களின் தமிழ்ப் புலமையும் தரமும்

தரவுகளின் தரவு:

புதுவைப் பல்கலைக்கழகச் சமுதாயக் கல்லூரியில் தமிழை மொழிப்பாடமாகப் பயிலும் 100 மாணவர்களிடம் 2020ல் தரவுகள் சேகரிக்கப்பட்டன. 

  • தனியார் பள்ளியில் படித்த மாணவர்கள்

1.1.தமிழ்மொழி வழிப் படித்தவர்கள்

1.2.ஆங்கில மொழி வழிப் படித்தவர்கள்.

   2.  அரசுப் பள்ளியில் படித்த மாணவர்கள்

2.1.தமிழ்மொழி வழிப் படித்தவர்கள்

2.2.ஆங்கில மொழி வழிப் படித்தவர்கள்.

இதன் அடிப்படையில் தரவுகள் பிரித்து ஆராயப்பட்டன. 

1.எழுத்துப் பிழை, 2.திருக்குறள் அறிவு. 3.தமிழ்வரலாற்றுப் பொது அறிவு, 3.இலக்கிய அறிவு, 4.மொழிப் பெயர்ப்பு அறிவு போன்ற பொருணமையில் அடிப்படை கேள்விகள் மட்டுமே கேட்கப்பட்டன. இந்தத் தரவுகள் தரும் முடிவுகள்  நம் முன் பல கேள்விகளை முன்வைக்கின்றன.

  • இளங்கலையில் மொழிப்பாடம் பயிலும் மாணவர்களின் தரவுகளில் எழுத்துப் பிழைகள் கூடுதல். இதில் அரசு, தனியார் பள்ளி  என்றோ தமிழ்வழி ஆங்கிலம் வழி என்றோ வேறு பாடு இல்லை.
  • குறிப்பிட்ட சில கேள்விகளுக்கு ஆங்கில வழிப் பயின்ற தனியார் பள்ளி மாணவர்கள் சரியாக விடை அளித்துள்ளனர்.
  • சில கேள்விகளுக்குத் தமிழ்வழி அரசுப்பள்ளி மாணவர்களின் விடைகள் சிறப்பு.
  • திருக்குறள் எழுதியவர், அதன் பொருள் எழுத வில்லை. பொருள் எழுதிக் குறள் எழுதாமல் விட்டிருக்கின்றனர்.
  • வாழ்க்கையில் பயன்பாட்டில் உள்ள பழமொழிகள் குறைந்த பட்சம் மூன்றினை  எழுதுவதில் மயக்கம், அதன் மொழிப்பெயர்ப்பு  எழுதுவதில் சிக்கல்.
  • தமிழ் மொழிப்பாடம் நீக்கி, தான் பயிலும் ஏதாவது ஒரு பாடத்தின் மூன்று கருத்துக்களைத் தமிழில் எழுத்துவதில்  தயக்கம்
  • பொது நிகழ்வுகள், திரைப்படங்கள், தலைவர்கள் பற்றியப் பதிவுகளில் வார்த்தைகள் வாராமை.
  • இறுதியாகத் தமிழ் இலக்கியங்களின்  பெயர்களைப் பற்றியப் புரிதலிலும் சிக்கலே நீடிக்கின்றது.
  • சிறப்புகளாகச் சில பதிவுகளும் உண்டு. தலைவர்களைப் பற்றியக் கருத்துரையில்  “ சேகுவாரா, ஹிட்லர், அம்பேத்கார், தன்னைப் பெற்றத் தாய் தந்தையர் என அசரவைத்துள்ளனர்.

 

மாணவர்களின் மேற்கண்ட பதிலகளின் மொத்த சதவிகிதத்தை  நோக்கும் போது, இக்கட்டுரையின் முதல் பகுதியில் கூறப்பட்டுள்ள மொழிக்கல்வியின் நோக்கம்  நிறைவேற வில்லையோ என்று எண்ணத்தோன்றுகின்றது.

 

 

 

 

மொழிப்பாடங்களைக் கற்பித்தல்:

விருந்தே தானும்

புதுவது கிளந்த யாப்பின் மேற்றே என்று பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே தொல்காப்பியர் பதிவுசெய்துள்ளமை இங்கு எண்ணத்தக்கது. பாடத்திட்டங்களைப் பன்முறை மாற்றி அமைத்தாலும் கற்பித்தலும் கற்றலும் மாறா வரையில் மொழிஅறிவும் மொழி ஆளுமையும் வளராது. மாணவர்களின்  வேலைவாய்ப்பு வரை மொழிக்கற்றலில் சிக்கல் நீள்கின்றது.

 புதுச்சேரி மாநிலத்தில் எட்டாம் வகுப்பு வரை பள்ளிகளில் காட்டாயத் தேர்ச்சி என்று அரசு நிர்ணயத்துள்ளது. இப்படிப்பட்ட நிலையில் மாணவர்களின் மொழிஅறிவைச் செம்மையாக வளர்க்கப் பல திட்டங்களைச் செயல்படுத்த இயலும். இன்று தமிழர்கள் ஈடுபட்டிருக்கும் அனைத்து வேலைகளுள் சுமார் 10 சதவிகிதப் பணிகளுக்குத் தான் ஆங்கில மொழியறிவு தேவைப் படுகின்றது. மீதமுள்ள 90 சதவிகிதப் பணிகளுக்குத் தமிழ் மொழி அறிவே தேவைப் படுகின்றது. (இரா.பரஞ்சோதி.பக்:93) இதையறியாத இளைஞர்களும் பெற்றோர்களும் தாய் மொழியானத் தமிழ் மொழியின் முதன்மைத்துவத்தை இழக்கின்றனர்.

மொழிப்பயன்பாட்டுத் தடைதான் ஒரு மனிதனின் வளர்ச்சியைப் பாதிக்கும். மொழிப்பாடமாகத் தமிழைப் பயிலும் மாணவர்களுக்கு எட்டாம் வகுப்பிற்குள்ளாக மொழியைத் தவறின்றி எழுதக் கற்றுத் தந்துவிட்டால் எழுதுவதில் ஈர்ப்பு, படிப்பதில் ஆர்வம்,  பேசுவதில் திறமை அனைத்தும் வந்துவிடும். பாடத்திட்டப் பாடத்தை முடித்துவிடவேண்டும் என்பதற்காக மொழிஅறிவின் செம்மையைக் கற்றுத்தர தவறிவிடுகின்றோம். எழுதுவதில் ஆர்வம் வந்துவிட்டாலே மொழிக்கல்வி மட்டுமல்லாது பிற பாடங்களின் மீதும் ஈடுபாடு மிகுந்துவிடும். கூடவே கல்விக் கற்றலின் நோக்கங்களும் நிறைவேறும்.

 

III

கற்றல் சூழல்களும் சிக்கல்களும்:

கற்றல் கற்பித்தல் என்றவுடன் இந்தச் செயல் ஆசிரியர் மாணவர்களுக்கு மட்டும் உள்ள தொடர்பு என்று முடிவு செய்துகொள்கின்றனர். தாயின் வயிற்றுக்குள் வளர்கின்ற போதே குழந்தை கற்கத் தொடங்கிவிடுகின்றது. மனிதனின் வளர்ச்சியையும் நடத்தையும் கட்டுப்படுத்தும் காரணியாகப் புறச்சூழல் செயல்படும். ஒருவரது மரபியல் பண்புகளைத் தவிர மற்ற அனைத்தையும் மாற்றக் கூடியதும் வளர்க்கக் கூடியதுமாகச் சுற்றுச்சூழல் அமைகின்றது. குடும்பம், சுற்றுப் புறச் சமூகம், பள்ளி, அரசு இவற்றை அடிப்படையாக வைத்து கற்றல்,  வளர்ச்சி நிலையை எட்டும்.

சமூகச்சூழலில், தகவல் தொடர்பு ஊடகங்கள் கற்றலுக்கு  அதிமுக்கியப் பங்கினை வகிக்கின்றன என்பது திண்ணம். நேர்மறை , எதிர்மறை என இரண்டு விளைவுகளையும் தரவல்லது  ஊடகங்கள். அறிவியல், வராலாறு, சமூகவியல் போன்ற செய்திகளை இளம் மாணவர்களுக்குக் கொண்டு சேர்ப்பதில்  ஊடகங்கள் செம்மைப் பணியாற்றுகின்றன.

காட்சி ஊடகங்கள்:

இன்றையக் கல்வித் திட்டத்தில் ஒலி ஒளி வழிக் கற்றல் முறையைப் பயன்படுத்தவேண்டும் என்பதற்காகப் பல வழிமுறைகளைக் கல்வித்துறை எடுத்து வருகின்றது. மாணவர்களின் கவனத்தை அதிகம் ஈர்ப்பதற்கும் கருத்தை மனதில் ஆழமாகப் பதியவைக்கவும் எளிதில் நினைவுப்படுத்துவதற்கும் காட்சிப் படுத்திக் கற்றல் முறை உதவியாக இருப்பதாகக் கல்விசார் அறிவியல் ஆராய்ச்சிகள் கூறுகின்றன.

வானொலி, தொலைக்காட்சி, திரைப்படங்கள் போன்றவையும் மொழிக் கற்பித்தல் பணியினை மேற்கொள்கின்றன என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்காது. அரசியல் நிகழ்வுகள், நாட்டு நடப்புகள், கலை, விளையாட்டுச் செய்திகள், அறிவியல் உண்மைகள், சமயம் போன்ற பலதரப்பட்ட செய்திகளையும் உடனுக்கு உடன் அறிய வாய்ப்பாய் அமைவன ஊடகங்கள். அரிய பெரிய கருத்துக்களையும் தமிழ் மொழியில் கேட்டுக் கற்கும் போது மொழி வளர்ச்சியும் தொடர்பும் அதிகரிக்கின்றது. இவற்றை நேர்மறை விளைவுகள் என்று எடுத்துக்கொள்ளலாம்.

எதிர்மறை விளைவுகள் இக்கட்டுரையின் போக்கினை வடிவமைக்கின்றன. 

மேற்கண்ட நிகழ்ச்சிகள் தமிழ்மொழியில் ஒலிபரப்பப் படும் போது தமிழ் மொழியின் தரம் என்பது மிகப் பெரிய கேள்விக்குரியை நோக்கி நகர்கின்றது. தொலைக்காட்சிகளில் இடம்பெறும் செய்திகள், விளம்பரங்கள், நிகழ்ச்சிகள்  போன்றன மறைமுகமான மொழிக் கற்பித்தலைச் செய்கின்றன என்பது யாவரும் அறிந்ததே.

ஆனால் தமிழகத் தொலைக்காட்சிகள் மொழிக் கற்பித்தலையோ மொழி வளர்ச்சியையோ கவனத்தில் வைப்பதில்லை.

  • ஆங்கில மொழியில் நிகழ்ச்சிப் பெயர்களை வைத்தல்
  • விளம்பங்களில் ஆங்கிலச் சொற்களை அதிகம் பயன்படுத்துதல்.
  • செய்திவாசித்தலில் கூட குறிப்பிட்ட சில ஆங்கிலச் சொற்களை அப்படியே பயன்படுத்துதல்
  • I P S அதிகாரிகள் இடமாற்றம்.
  • டப்பிங் சுடியோ
  • பி.எட் விண்ணப்பம் விற்பனை
  • போலிசார் விசாரனை
  • பஸ்கள் ஓடவில்லை, 
  • எலக்ட்ரிகல் கடை சூரையாடல்
  • கண்ணில் லென்ஸ் பொருத்தப்பட்டது.

இது போன்ற மொழிப் பயன்பாட்டினால் ஏற்படும் அடிப்படை பாதிப்புகளாக இரண்டினைக் கூறலாம். 

1.தமிழ் மொழியைத் தாய்மொழியாகக் கொண்டவர்களின் சொற்களஞ்சியம் குறையும் 

2. தமிழகத்தில் வாழும் பிற மொழிக்காரர்களுக்கு இயல்பு தமிழ்ச் சொற்களின்  அறிமுகமே இல்லாமல் போய்விடும்.

பொதுவாக  நிகழ்ச்சிகள் குழந்தைகளையும் இளைஞர்களையும் பெண்களையும் மையப்படுத்தியே ஒலி பரப்படுகின்றன. 

ஒரு சானல் என்று இருந்த காலம் மாறி இன்று பல சானல்கள் உருவாகி வளர்ந்துள்ளன. யாரும்  எளிதில் எந்த சானலையும் பார்க்கும் வசதியும் வாய்ப்பும் உருவாகியுள்ளது…………………. அவை இன்னும் உச்சம் பெற்றுப் பலவித கால்செண்டர்கள் தோன்ற வாய்ப்பாக அமைந்தது.(ரா.புகழ்ச்செல்வி. பக்.257) .

 ஒருவனின் மொழியறிவை  வளர்க்கும் முக்கியக் காரணிகளில் சமூகச்சூழலும் ஒன்று. அந்த வகையில் சமூகத்தின் மிகப்பெரிய சக்தியாக விளங்கும் ஊடகத்தின் மொழியைச் சீர்மைபடுத்தும் போது தமிழ்மொழியின் வாழ்வியல் தன்மை மேன்மையுரும்.

இருபதாம் நூற்றாண்டை இதழ்களின் எழுச்சி நூற்றாண்டு எனக் குறிப்பிடுவது போல, 21ஆம் நூற்றாண்டைஒலி ஒளி ஊடகங்களின் எழுச்சி நூற்றாண்டு என்பதில் தவறில்லை. 2000 ஆம் ஆண்டிற்குப் பிறகு புற்றீசலாகத் தனியார் நிறுவனத் தொலைக்காட்சிகளின் வருகை பெருகி உள்ளது. இவைகள் தமிழ்ப் பேசும் மக்களுக்காகத் தான், நிகழ்ச்சிகளை ஒளிப்பரப்புகின்றன. ஆனால் பிற மொழியின் ஆதிக்கம் மிகுந்துள்ளது. இத்துறையில் பணியாற்றும் பெறும்பான்மை யோருக்குத் தமிழ் மொழியில் சிறிதளவு அறிவும் ஆங்கில மொழியில் நல்ல பயிற்சியும் இருந்தால் போதுமானதாகக் கருதப்படுகின்றது. 

முதன்மை மிக்க அல்லது அறிவியல் சொற்கள், ஆட்சி மொழிச் சொற்களைப் பயன்படுத்த நேரும் போது தமிழ் மொழியாக்கம் அவர்களுக்குத் தெரிவதில்லை. ஊடகத் துறையின் நேர வேகத்திற்கு இடையில் அவர்கள் மொழியாக்கம் செய்து வெளியிட தயாரகவும் இல்லை என்பதுதான் உணமை. சரியான மொழிப் பெயர்ப்புக் கிடைப்பதில்லை என்று காரணம் கூறிவிடுவதும் உண்டு.

தமிழ் மொழியில் மொழியாக்கம் செய்து வெளியிடப்பட்டுப் பழக்கத்தில் இருக்கும் இயல்பு சொற்களைக் கூட விளம்பரங்களிளோ நிகழ்ச்சிப் பெயரீடுகளிளோ பயன் படுதுவதில்லை என்பது தான் உள்ளங்கை நெல்லிக்கனி உண்மை. தமிழ்மொழி வளர்ச்சியில் அக்கறைக் கொண்ட ஒருசில தொலைக்காட்சி ஊடகங்கள் அவர்களால் முடிந்தவரை மொழிப்பெயர்ப்புகளைப் பயன்படுத்துகின்றன. ஒவ்வொரு நாளும் தகவல் ஊடகங்கள் பலவகையானச் செய்திகளை உலகின் பல்வேறு இடங்களில் இருந்து பெருகின்றன. அவ்வாறு பெரும்பொழுது மொழிப்பெயர்ப்பதில் சிக்கல்களை எதிர்கொள்ளுதல் இயல்பே.

சிக்கல்களும் விவாதங்களும்:

தவறுகளை ஞாயப்படுத்திக் கொள்வதற்கு வேண்டுமானால் சில காரணங்களைப் பதிவு செய்து கொள்ளலாம். சிக்கல்களைக் களைவதற்கு உலகத் தமிழ்ச் சமூகமே இணைந்து முன்னெடுப்புகளை அவதானிக்க வேண்டும். 

சிக்கல்கள்: 

  • தமிழகத்திலுள்ள இதழ்களில் கூட சொல்லாக்கத்தைப்  பயன்படுத்துவதில்  உடன்பாட்டு ஒற்றுமையில்லை.
  • அச்சு ஊடகங்கள் மொழிப்பயன்பாட்டில் ஒரு நிலையையும் காட்சி ஊடகங்கள் வேறு நிலையிலும் செயல்படுகின்றன.
  • தமிழகம், இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளிடையே வழங்கும் பத்திரிகைத் துறைச் சொற்களில் ஒருமைப்பாடு இல்லாத நிலையையும் சுட்டிக்காட்ட வேண்டிய நிலை உள்ளது.
  • தெளிந்த மொழியறிவும் மொழிப் பெயர்ப்பு அறிவும் கொண்டவர்கள் ஊடங்களில் பணியாற்றாததையும் இங்கு ஆணித்தரமாகக் குறித்தாக வேண்டும்.

 

 விவாதங்கள்:

  • பள்ளிகளில் எட்டாம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சி என்ற நிலையில் ஆசிரியர்கள் தமிழ் மொழியில் ஏன் சிறப்புக் கவனம் செலுத்துதல் கூடாது.
  • பாடத்திட்டத்தில் மிக முக்கிய இடத்தை மொழிப் பெயர்ப்பிற்கு வழங்குதல்.
  • அந்த அந்தத் துறைக்கான மொழிப் பெயர்ப்புகளைத் தான் பயன்படுத்த வேண்டும் என்ற அரசு ஆணைப் பிறப்பிக்க வேண்டும்.
  • மொழிப்பெயர்ப்புத் துறைக்கான இளங்கலை, முதுகலை பட்டங்களைத் தஞ்சைப் பல்கலைக்கழம் நடத்துதல் போன்று  தமிழகப் பல்கலைக் கழகங்கள் அனைத்திலும் மேற்கொள்ள வேண்டும்.
  • மாணவர்களும்  தாய் மொழியின் தனித்தன்மைகளை உணர்ந்து பயிலுதல் வேண்டும்.
  • தகவல் ஊடகங்களுக்குச் சொற்களஞ்சியத்தின் வளர்ச்சி ஒவ்வொரு நாளும் கூடிக்கொண்டே செல்கின்றது. அவர்களது தேவையை நிறைவு செய்தல் தமிழர்களின் கடைமையாகும். சிறப்புச் சொற்களின் உருவாக்கங்களைத் தகவல் ஊடகங்களுக்கிடையே அடிக்கடிப் பரிமாற்றம்  செய்து கொள்ளுதலுக்கு ஒரு நிலையான ஏற்பாட்டினைச் செய்தல் வேண்டும்.
  • தகவல் ஊடகங்களின் தேவைக்கேற்ற கலைச் சொல்லாக்கத்தினைச் செய்துகொள்ள அனைவரும்  இணைந்து, முனைப்பான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
  • ஊடகங்களில்  முறையான தமிழ்ப் பயிற்சி உள்ளவர்களுக்கு  மட்டுமே முதன்மை அளித்தல் வேண்டும்.
  • தமிழைப் பாதுகாக்க வேண்டுமென்றால்  தமிழ் மொழி அறிவுடன் பிற மொழியையும் அணுகினால் வெற்றி நிச்சயம்.

துணை நின்ற நூல்கள்:

  • தமிழ் வழிக் கற்றல் – கற்பித்தல் புதிய உத்திகள். 2007 1.2.3.4.தொகுதிகள். கலைஞன் பதிப்பகம். சென்னை.
  • உலகத் தமிழியல் ஆய்வு வளர்ச்சிக் கருத்தரங்க ஆய்வு மாலை.(தொ.1) 2003. ஆத.முத்தையா.(ப.ஆ).ஏவிவி கல்லூரி. பூண்டி.
  • தமிழிலக்கிய வகைமையியல். (தொ.2). 2005. உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம். சென்னை. 
  • மாணவர்களின் படித்துணர்திறன்; சிக்கல்களும் தீர்வுகளும். ஆய்வேடு. 2015. தமிழரசி சுப்பிரமணியம். தமிழ் இலக்கியத்துறை. சென்னை.
  • தமிழ் வழிக் கற்றல் – கற்பித்தல் புதிய உத்திகள்.(மொழி) (க)(தொ.4)2007. முனைவர் கெள. கவிதா. கலைஞன் பதிப்பகம். சென்னை.
  • தமிழ் வழிக் கற்றல் – கற்பித்தல் வளர அரசின் பங்கு. (க)(தொ.3)2007. முனைவர் இரா.பரஞ்சோதி. கலைஞன் பதிப்பகம். சென்னை.
  • தமிழ் வழிக் கற்றல் – கற்பித்தலில் புதிய உத்திகள் -ஊடகம் (க)(தொ.3)2007. முனைவர் இரா.புகழ்ச்செல்வி. கலைஞன் பதிப்பகம். சென்னை.