ஜூலை 2024 இதழுக்கு ஆய்வுக்கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன

அழகர் குறவஞ்சியில் இயல் இசைச் சிறப்புக்கள்

முனைவர் செ.லலிதாம்பாள் உதவிப் பேராசிரியர் மற்றும் தலைவர் இசைத்துறை சீதாலட்சுமி இராமஸ்வாமி கல்லூரி திருச்சிராப்பள்ளி  இந்தியா 27 Jul 2021 Read Full PDF

முனைவர் செ.லலிதாம்பாள்

உதவிப் பேராசிரியர் மற்றும் தலைவர்

இசைத்துறை

சீதாலட்சுமி இராமஸ்வாமி கல்லூரி

திருச்சிராப்பள்ளி 

இந்தியா

ஆய்வுச் சுருக்கம்

குறவஞ்சி நாடகமானது 96 வகை சிற்றிலக்கியங்களுள் ஒன்று. குறப்பெண்னை மையமாகக் கொண்ட இசை நாடகம். ஏராளமான குறவஞ்சி நாடகங்கள் காணப்படுகின்றன. அவற்றுள் கவிகுஞ்சர பாரதி அவர்கள் இயற்றிய அழகர் குறவஞ்சியானது இயல், இசை, சிறப்புக்களைப் பெற்று, கர்நாடக இசை, செவ்விசை, ஹிந்துஸ்தானி இசையின் கலவையாக இயற்றியுள்ளார். இக்குறவஞ்சியில் முன்னுரை முடிவுரை நீங்கலாக  குறவஞ்சி நாடகத்தின் தோற்றம் வளர்ச்சி, கவிகுஞ்சர பாரதியின் வாழ்கைக் குறிப்பு, எழுதிய நூல்கள், குறவஞ்சியின் பொதுவான அமைப்பு, அழகர் குறவஞ்சியின் கதை அமைப்பு, இதில் இடம்பெற்றுள்ள பாவகை, இயல் இயற் சிறப்புக்கள் எடுத்தியம்பப்பட்டுள்ளன. இந்த குறவஞ்சியில் தமிழர்களின் பாரம்பர்யம், கலாசாரம், அக்கால மக்களின் வாழ்வியல் முறைகள் அழகாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

திறவுச் சொற்கள்

குறவஞ்சி, செவ்விசை, பள்ளு, கீர்த்தனைகள், வீதிஉலா, சிந்து, கண்ணி, த்விபதை

முன்னுரை

அழகர் குறவஞ்சியானது கவிகுஞ்சர பாரதி அவர்களால் 19ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டது. 96 வகை சிற்றிலக்கியத்தில் இடம்பெறுவது குறத்திப்பாட்டு. இதில் குறத்தியை மையமாகக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளதால் குறவஞ்சி என்று அழைக்கப்படுகிறது. இக்கட்டுரையில் குறவஞ்சியின் தோற்றம், வளர்ச்சி, கவிகுஞ்சர பாரதி அவர்கள் இயற்றிய அழகர் குறவஞ்சியில் செவ்விசை மற்றும்  நாட்டுப்புற இசையின் பயன்பாடு, பல்வேறு இசை வடிவங்கள் பாடலின் தன்மைக்கேற்ப  கையாண்ட விதம், நாட்டு வளம், மக்களின் தன்மை, இசைச் சிறப்பு மற்றும் இலக்கியச் சிறப்பு ஆகியவை பற்றிய செய்திகள்  அழகாக கூறப்பட்டுள்ளன. இத்தகைய சிறப்புக்களை வெளிக்கொணருவதே இவ்வாய்வின் நோக்கமாகும்.

குறவஞ்சி நாடகத் தோற்றமும் வளர்ச்சியும்

குறவஞ்சி என்னும் இலக்கியம் முத்தமிழ் இலக்கியமாகும். செந்தமிழில் வழங்கி வரும் பிரபந்த வகைகளுள் ஒன்றாக விளங்கும் குறவஞ்சி, குறம், குறத்திப்பாட்டு, குளுவம் என்ற பெயர்களால் பழங்காலத்தில் வழங்கப் பெற்று வந்த இலக்கிய வகையாகும்.

சங்க இலக்கியங்களில் அகவன் மகளிர் குறி கூறுதல் பற்றிய பாடல்கள் காணப்படுகின்றன. இவர்கள் ‘அகவுனர்’ (அகநா. 208) என்றும் ‘அகவன் மகளிர்’ (குறுந்.208)  என்றும் , ‘கட்டுவிச்சி’(குறுந்,23,26) என்றும் குறிக்கப்படுகின்றனர். இவர்கள் ‘சிறுகோல்’ கையில் வைத்திருப்பர் என்றும் (அகநா,208: குறுந்,298), தெய்வத்தைப் போற்றியபின் குறி சொல்லுவார்கள் என்றும் விளக்கப்பட்டுள்ளது. முக்காலமும் திறம்படக் குறத்தி உரைப்பதாகப் பத்துப்பாடல்கள் கொண்ட நூல் குறத்திப்பாட்டு என்று பெயர் பெற்றது. (தென்னூல் விளக்கம்.283). கலம்பக இலக்கியத்தில் ‘குறம்’ என்ற உறுப்பு உண்டு இதில் குறத்தி குறி சொல்லுவது கூறப்பட்டுள்ளது.

குறவஞ்சியானது, அகவன்மகளாக சங்க இலக்கியத்தில் தோன்றி, குறம் என்னும் சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்றாகி, குறி சொல்லுதலைக் முதன்மையாகக் கொண்டு, குறத்திப்பாட்டாகி, குளுவ நாடகமாகி பின் குறவஞ்சியாக வளர்ச்சி பெற்றுள்ளது.

குறவஞ்சி நாடகம் 16,17ஆம் நூற்றாண்டில் தமிழகத்தில் கீர்த்தனை நாடகங்களாக அமைக்கப்பட்டு, நடத்திக் காட்டப்பட்டன. குறத்தி தன் அழகாலும் குறி கூறும் திறத்தாலும் உள்ளம் கவரும் சிறப்பால் குறவஞ்சி நாடகம் பெயர் பெறுகிறது.

 கவிகுஞ்சர பாரதி (கி.பி.1810-1896)

இராமநாதபுரம் மாவட்டம் பெருங்கரை என்னும் சிற்றூரில் 1810இல் பிறந்தார். இவரின் இயற்பெயர் கோடீஸ்வரன் ஆகும். இவர் தமிழ், சமஸ்கிருதம், இசை ஆகிய மூன்றிலும் புலமை பெற்றுத் திகழ்ந்தார். முதலில் சிவகங்கை அரசவைப் புலவராகத் திகழ்ந்தார். பின் இராமநாதபுரம் அரசவைப் புலவராகத் திகழ்ந்தார். இவர் சிறந்த தமிழிசைப் புலவர். இவரின் இசைப் புலமையைக் கண்டு வியந்த சிவகங்கை சமஸ்தானாதிபதியாக இருந்த கௌரி வல்லப மகாராஜா, இவருக்கு “கவிகுஞ்சரம்” என்ற பட்டம் அளித்தார். 1886 இல் கவிகுஞ்சர பாரதியின் பதங்கள் வெளியிடப்பட்டது. கவிகுஞ்சர பாரதியின் முத்திரை ‘கவிகுஞ்சரம்” என்பதாகும். அழகர் குறவஞ்சி 1840 ஆம் வருடம் இயற்றப்பட்டது. 1896 இவர் இறைவனடி சேர்ந்தார்,

இயற்றிய நூல்கள்

இராஜநகர் பள்ளு, வேங்கைக் கும்மி, அழகர் குறவஞ்சி, பேரின்பக் கீர்த்தனைகள், குன்றை குகனந்தாதி வெண்பா, சிற்றின்பக் கீர்த்தனைகள் மற்றும் தனிப் பாடல்களையும்  இயற்றியுள்ளார்.

குறவஞ்சியின் நாடக அமைப்பு

குறவஞ்சியின் பொதுவான அமைப்பு கீழ்வருமாறு

1. தலைவன் உலா வரும்போது தலைவி கண்டு காதலித்தல்,
2. தலைவனையடைய வருந்தி முயலுதல், 3. குறத்தி வருகை, மலைவளம், நாட்டுவளம் கூறல் 4. குறத்தி தன் குறித்திறமைகளைத் தலைவியிடம் கூறுதல் 5. தலைவனை அடைவாய் எனக் குறி கூறுதல் மற்றும் பரிசுகள் பெறுதல்.6. குறவனையடைந்து தான் பெற்ற பரிசுகளைப் பற்றி விளக்கிக் கூறுதல் 7. குறவனும் குறத்தியும் இறைவனைப் பணிந்து போற்றுதல்

அழகர் குறவஞ்சியின் அமைப்பு

அழகர் குறவஞ்சியானது கவிகுஞ்சர பாரதியால் இயற்றப்பட்டது. வைணவத்தலங்களுள் ஒன்றான திருமாலிருஞ்சோலையின் அழகரைப் புகழ்ந்து இந்த குறவஞ்சி நாட்டிய நாடகம் இயற்றப்பட்டுள்ளது. இது 1840 ஆம் ஆண்டு இயற்றப்பட்டது. இந்த கேய நாடகத்தில் அழகர், சௌந்தரராஜ பெருமாள் மற்றும் மாலழகர் என்றும் குறிப்பிடப்படுகின்றார். இந்த கேய நாடகத்தின் கதாநாயகி மோஹனவல்லி ஆவார்.

இந்த கேய நாடகமானது கணபதி, முருகன், திருமால், சரஸ்வதி மற்றும் ஆஞ்சநேயரை துதித்து பாடும் கடவுள் வாழ்த்துப் பாடலுடன் ஆரம்பமாகின்றது. இந்த கேய நாடகத்தின் கதை கட்டியக்காரன் வருகைப் பாடலுடன் தொடங்குகிறது.  “ கோலமிகு செங்கன் மாலழகர்” என்ற சாரங்கா இராக பாடலில் சிவகங்கை வீதியில் இறைவன் உலா வரும் அழகு குறிப்பிடப்படுகின்றது. இந்த நாடகத்தில் கதாநாயகன் மற்றும் கதாநாயகி, சகி (கதாநாயகியின் தோழி), குறவன் மற்றும் குறத்தி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்கள் ஆவர்.

“செங்கண்மால் அழகர்”   என்ற திவிபதையில் சௌந்தர்ராஜ பெருமாளின் வீதி உலாவும், சிவகங்கை நகரின் அன்பு கொண்ட பெண்களின் நிலையும் அழகாக விளக்கப்பட்டுள்ளது. இந்த நாடகத்தின் கதாநாயகியான மோகனவல்லியின் அழகானது “மோஹன மாமயில் மாதுவந்தாள்” ஹமீர் கல்யாணி இராகப் பாடலில் விளக்கப்பட்டுள்ளது. “மோஹனவல்லி பந்தடித்தனள்”என்ற கமாஸ் இராகப் பாடல் பந்தடிக்கும் விதத்தில் பாடலின் மெட்டு அமைக்கப்பட்டுள்ளது. கும்மிக் கண்ணியான “மங்களம் சேர்சோலை” என்ற பாடல் பெண்கள் கும்மியடிக்கும் விதத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

இறைவனின் பேரழகினைக் கண்ட மோஹனவல்லி தனது தோழியிடம் அவரைப் பற்றி விசாரிக்கும் பாடலானது காம்போஜி இராத்தில் அமைந்த “இவன் யாரோ அறியேன் என் ஸகியே”  என்ற பாடலாகும். பின்னர் தலைவனைப் பற்றி அறிந்தவுடன் தலைவி ஸ்ரீ இராகத்தில் அமைந்த “மதியை மயக்குதினி என்ன செய்வேன்” என்ற பாடலைப் பாடுகின்றாள்.  மகளின் வேறுபாட்டை அறிந்த தாய், அவளின் தோழியிடம் வேறுபாட்டிற்கான காரணத்தை அறிந்து “மாதே அங்கு ஏதற்கு சென்றாய்” கல்யாணி இராகப் பாடலில் வீதிஉலாவிற்கு தலைவியை ஏன் அழைத்துச் சென்றாய் என்று கோபித்துக்கொள்கிறாள். பின்னர் இக்கேள்விக்கு “மோஹமிஞ்சுதென் செய்வேன்” என்று மோஹனவல்லி பதில் கூறுகின்றாள். பரஸ் இராகத்தில் அமைந்த “மங்கையே நீ தூது போடி” என்ற பாடலைப் பாடிக்கொண்டு தனது தோழியை தலைவனிடம் தூது அனுப்புகின்றாள்.

சகி தலைவனை அணுகி தலைவியின் பரிதாப நிலையை எடுத்துக்கூறியும் அவளால் தலைவனை அழைத்து வர இயலவில்லை. இந்நிலையில் “சேட சயனம்” என்ற அடிமடக்கு திபதையை வருத்தத்துடன் பாடுகின்றாள். தலைவியை சமாதானம் செய்த தோழி கேதார கௌளை இராகத்தில் “பாவையேசாமி” பாடலைப் பாடுகின்றாள். இப்பாடலில் உவமை அழகாக கூறப்பட்டுள்ளது. எனினும் தலைவி தன்னை தானே ஆற்றிக்கொள்ளாமல் சில பாடல்களில் கடல், நிலவு மற்றும் மன்மதனை சாடுகின்றாள்.

இந்நிலையில் குறவஞ்சியின் முக்கியமான கதாபாத்திரமான குறத்தியானவள் மேடையில் தோன்றுகின்றாள் “மலைக்குறவஞ்சி வந்தாளே” பாடலில் குறவஞ்சியின் வருகையும், “ஆவின் கன்றை மடிமிசைவைத்து” பாடலில் குறத்தி தனது மலைவளம், குலவளம், செல்வவளம் போன்றவற்றை விளக்குகின்றாள். மேலும் தங்களது தெய்வம், ஆலயம் போன்ற பலவற்றை கூறுகின்றாள். தனது குறி கூறும் திறமையை பைரவி இராக “அம்மையென் குறித்திறமை” என்ற பாடலில் விளக்குகின்றாள். இப்பாடலை கேட்ட தலைவி மோஹனவல்லி தனது அதிஷ்டத்தைக் கூறுமாறு கேட்கின்றாள். குறத்தி தலைவியின் கையை காண்பிக்கச்சொல்லி “அங்குலியாம் இட்டகரம்” என்ற திவிபதையை பாடி “முக்கியமாய் இக்குறியைக் கேளடியம்மே” என்று தனது பதிலைக் கூறுகின்றாள். மோனவல்லி தனது சந்தேகத்தை கேட்க குறத்தி ஸஹானா இராகத்தில் அமைந்த “வந்து சேருவார் மானே” என்ற பதிலைக் கூறுகின்றாள். இதற்குப் பின்னர் இறைவன் மாலழகர் அங்கு வர இருவருக்கும் திருமணம் நடைபெறுகின்றது.

பின்னர் குளுவன் தோன்றி தனது மனைவியை தேடுகின்றான். தனது மனைவியைப் பற்றி கூறி அவளை பல இடங்களில் தேடுகின்றான். இறுதியில் இருவரும் இணைகின்றனர். இந்த குறவஞ்சி நாடகமானது “திருமாலழகருக்கு திவ்ய ஜய மங்களம்” என்ற மங்களப் பாடலுடன் நிறைவுபெறுகின்றது. 

அழகர் குறவஞ்சி பற்றிய ஆய்வு

பொதுவாக குறவஞ்சியில் செவ்விசையானது பாட்டுடைத்தலைவர், தலைவி போன்ற செல்வந்தர்களுக்கும், நாட்டுப்புற இசையானது குறத்தி, குறவன் முதலான நாட்டுப்புற மக்களுக்கும் அமைக்கபடுவது குறவஞ்சி இசை மரபாகும்.

அழகர் குறவஞ்சியில் செவ்விசை, நாட்டுப்புற இசை ஆசிய இரு நிலைகளில் இசை அமைந்துள்ளது. இக்குறவஞ்சியில் குறவஞ்சி மரபினின்றும் வேறுபட்டு குறவன் குறத்தி வரும் பகுதிகளிலும் செவ்விசை கையாளப்பட்டுள்ளது. இக்குறவஞ்சியின் தனிச் சிறப்பாகும்.

பழந்தமிழிசைப் பாவகைகள்

அழகர் குறவஞ்சியில் பழந்தமிழிசைப் பாவகைகளான வெண்பா -7, விருத்தம் -40 , ஆசிரியப்பா – 1,நிலைமண்டில ஆசிரியப்பா -2 , கட்டளைக் கலித்துறை-1 , கொச்சகக் கலிப்பா-9 , சிந்து-2 ஆகியவை இடம்பெற்றுள்ளன.

அழகர் குறவஞ்சியில் இயற்சிறப்புக்கள்

அழகர்குறவஞ்சியல் எதுகைத் தொடை, வழி எதுகைத்தொடை,ஈற்றியைபுத் தொடை, உவமை நயம்,பழமொழி, சொல் நயம் ஆகியவை அழகாக அமைந்துள்ளது.

அழகர் குறவஞ்சியல் இசை வடிவங்கள்

அழகர் குறவஞ்சியில் கீர்த்தனைகள், தரு மற்றும் அதன் வகைகள் ஆகிய கர்நாடக இசை வடிவங்கள் இடம்பெற்றுள்ளன மேலும்  நாட்டுப்புற இசை மெட்டுக்களான திபதை, சிந்து, ஆனந்தகளிப்பு, கும்மிக்கண்ணி ஆகியவையும் இடம்பெற்றுள்ளன.

அழகர் குறவஞ்சியில் இடம்பெறும் ராகங்கள் மற்றும் தாளங்கள்

இக்குறவஞ்சியில் இடமபெறும் இராகங்களாவன தோடி, சகானா, காம்போதி, கமாசு, கல்யாணி போன்ற இராகங்களும், அமீர்கல்யாணி, காபி, பியாக் முதலான இந்துஸ்தானி இசை கலப்பிலான இராகத்திலும் அமையக் காணலாம். 

மேலும் நாட்டுப்புற மக்களான குறவன், குறத்திக்குரிய பாடல்களும் பேகடா, தன்யாசி போன்ற கருநாடக இராகங்களில் அமைந்திருப்பது இக்குறவஞ்சியின் சிறப்பாகும்.

இக்குறவஞ்சியில் ஆதி, ரூபகம், மிச்ரசாபு முதலான தாளங்கள் இடம்பெற்றிருந்தாலும், ஆதி தாளமும், ரூபக தாளமும், திஸ்ரநடை லகுவும் அதிகமாக இடம்பெறுகின்றன.

முடிவுரை

அழகர் குறவஞ்சியின் பாடல்களை ஆராயும்போது, கதையின் தன்மைக்கேற்ற இராகங்களைத் தெரிவு செய்து, கதையமைந்த சுவைகளுக்கு மிகவும் பொருத்தமாக அமைக்கப்பட்டுள்ன. பல பாடல்களில் முடுகு நடையில் அமைந்து அந்த பாடலின் தன்மையை மேலும் மெருகூட்டுகின்றது. சுந்தரராஜ பெருமாள் வீதி உலா வரும் பாடலானது சாரங்கா இராகத்தில் அமைக்கப்பட்டுள்ளது அந்த நிகழ்ச்சியை நம் கண் முன் நிறுத்துகின்றது. மோகனவல்லி பந்தடிக்கும் கமாஸ் இராகப் பாடலானது பந்து வீசுவது போன்றே இசையமைக்கப்பட்டு அழகாக அமைக்கப்பட்டுள்ளது. இப்பாடலில் ஜதி பொருத்தமாக அமைந்திருப்பது சிறப்பானது.  

மேலும் இந்த குறவஞ்சியில் நவரசங்களும் இடம்பெற்றுள்ளன. குறத்தி  தன் குறித்திறமை கூறும் பாடலான ‘அம்மை என்’ பைரவி இராகத்தில் அமைக்கபட்டுள்ளது. பொதுவாக பைரவி இராகமானது செவ்விசையில் கன இராகம் என்றழைக்கப்படுகின்றது. ஆனால் இக்குறவஞ்சியில் இந்த இராகமானது குறத்தி பாடுதல் போன்று அமைந்திருப்பது வித்யாசமான அமைப்பாகும். கோலாட்ட தருவான ‘மங்களம் சேர்’ பாடலானது பெண்கள் கும்மியடிக்க ஏற்ற பாடலாகத்திகழ்கிறது. மேலும் குறவஞ்சியானவள்; தங்களது குலப்பெருமையை காப்பவராக இருப்பது பாராட்டுதற்குரியது.

அழகர் குறவஞ்சியானது செவ்விசை, நாட்டுப்புற இசை, ஹிந்துஸ்தானி இசை, அனைத்தையும் கொண்ட சிறந்த தொகுப்பாக அமைந்துள்ளது. இவற்றில் ஏராளமான இசையணிகளும், இயல் அணிகளும் மிகுந்து காணப்படுகின்றன. கவிகுஞ்சர பாரதி அவர்கள் இக்குறவஞ்சியின்  ஒவ்வொரு வரியுள்ளும்  ஒன்றி இசை இயல் அழகு மிளர செய்துள்ளது சிறப்பான ஒன்றாகும்.

 

சான்றெண் விளக்கம்

  • கவிகுஞ்சர பாரதி இயற்றிய அழகர் குறவஞ்சி, பதிப்பாசிரியர் சங்கீத ஸாஹித்ய வித்வான் என்.கோடீஸ்வரய்யர் குமாரர் கே.நாகமணி. ஸ்வரதாள குறிப்பு எழுதி உதவியவர் சங்கீத பூஷணம் ஸ்ரீ எஸ் இராமநாதன், 1963
  • தமிழிசைக் கலைக் களஞ்சியம் தொகுதி 1 முனைவர் வீ.ப.கா.சுந்தரம், பாரதிதாசன் பல்கலைக்கழகம், திருச்சிராப்பள்ளி.1992
  • தமிழிசைக் கலைக் களஞ்சியம் தொகுதி 2 முனைவர் வீ.ப.கா.சுந்தரம், பாரதிதாசன் பல்கலைக்கழகம், திருச்சிராப்பள்ளி.1994
  • Carnatic Music and the Tamils,T.V.Kuppuswami, Kalinga Publications, Delhi 1992
  • தென்னக இசையியல், பி.டி. செல்லத்துரை, வைகறைப் பதிப்பகம்,1995