ஜூலை 2024 இதழுக்கு ஆய்வுக்கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன

சிலப்பதிகாரம் கூறும் விலக்குறுப்பும் நடன வடிவமைப்பும்

முனைவர் கு. சகாயராணி உதவிப் பேராசிரியர் பரதநாட்டியத் துறை கலைக்காவிரி நுண்கலைக் கல்லூரி திருச்சிராப்பள்ளி 27 Jul 2021 Read Full PDF

முனைவர் கு. சகாயராணி, உதவிப் பேராசிரியர், பரதநாட்டியத் துறை, கலைக்காவிரி நுண்கலைக் கல்லூரி, திருச்சிராப்பள்ளி

ஆய்வுச் சுருக்கம்

நடன, இசைச் செய்திகளின் பெட்டகம் என்றால் அது சிலப்பதிகார அரங்கேற்றுக் காதையே. இக்காதையில் ஆசிரியர் பல நடனச் செய்திகளையும், நடனம் சார்ந்த பிற செய்திகளையும் முறைப்பட கூறியுள்ளார். நடன வடிவமைப்பு என்பது நடன இலக்கணத்தை அடியொற்றியே வடிவமைக்கப்பட வேண்டும். எந்த ஒரு உருவாக்கமும் அதன் மரபு மாறாமல் உருவாவதே சிறப்பு. அவ்வகையில் முன்பே நடன இலக்கணத்தை நமக்கு பொக்கிஷமாக வழங்கிய சிலப்பதிகார அரங்கேற்றுக் காதையில் ஒரு நாட்டிய நாடகம் எவ்வாறு உருவாக்கப்பட வேண்டும் என்பதற்கான விதிகளை வகுத்து விலக்குறுப்புகள் எனும் பதினான்கும் விளக்கமாக உரையாசிரியர்களால் கொடுக்கப்பட்டுள்ளது. அவ்விலக்குறுப்புகளை தற்கால நாட்டிய நாடக வடிவமைப்பில் எவ்வாறு பொருத்தி உருவாக்கப்பட வேண்டும் என்பதை இவ்வாய்வுக் கட்டுரை எடுத்துரைகிறது.

 

திறவுச் சொற்கள்

விலக்குறுப்பு – 14

நடன வடிவமைப்பு

வேந்து விலக்கு

படை விலக்கு

ஊர் விலக்கு

நாடகக் கதை விலக்கு

 

விலக்குறுப்பு

“பல வகைக் கூத்தும் விலக்கினிற் புணர்த்து” (அரங்: 13) என்னும் இளங்கோவடிகளின் வரிகளில் “விலக்கினிற் புணர்த்து” என்பதற்கு, வேந்து விலக்கு, படைவிலக்கு, ஊர் விலக்கு என்பது போன்று பாட்டுக்கு உறுப்பாய் வருவன (நாடக விலக்கு) என்று அரும்பதவுரையாசிரியரும் அடியார்க்கு நல்லாரும் கூறினாலும் அவை எவை எவை என்பதை அடியார்க்கு நல்லாரே விளக்குகிறார். அவரே ‘விலக்கு’ என்னும் சொல்லுக்கு வென்றிக்கூத்து முதலாகிய பலவகைப்பட்ட புறநடனங்களையும் வேந்து விலக்கு, படைவிலக்கு, ஊர் விலக்கு என்று சொல்லப்பட்ட விலக்குறுப்புகளாகிய பாட்டுகளுக்கு உறுப்பாய் வருவன என்ற செய்தியை குறிப்பிடுகின்றார்.

 

வேந்து விலக்கு

அரசர்கள் தேவைக்கருதி வேற்று அரசருடன் தங்கள் நட்பினை விலக்கியும், பின் வேண்டும் போது இணைந்தும் இருப்பது வேந்து விலக்கு.

 

படைவிலக்கு

பகை நாட்டு வீரர்களின் வலிமை கண்டு விலகியும் சரியான சந்தர்ப்பத்தில் போரிட்டு அவர்களை வெல்வதும் படைவிலக்கு.

 

ஊர் விலக்கு

பொதுவான சாலையிலிருந்து சிற்றூருக்குப் பிரிந்து செல்லும் பாதையும், பின் அச்சாலையை வேற்றுப் பாதையில் வந்தடைவதும் ஊர் விலக்கு.

இவ்வாறு பாட்டுகளுக்கு உறுப்பாய் வருவன என்பது இங்கு நாடகக் கதையையே குறிப்பதால் இதனை நாடகக் கதை விலக்கு எனக் கொள்வதே சிறந்தது. விலகிச் சென்று மீண்டும் இணைவதே விலக்கினில் புணர்த்தல் ஆகும்.

 

பதினான்கு விலக்குறுப்புகளையும்.

‘‘விலக்குறுப்பு என்பது விரிக்கும் காலை

பொருளும் யோனியும் விருத்தியும் சந்தியும்

சுவையும் சாதியும் குறிப்பும் சத்துவமும்

அவிநயஞ் சொல்லே சொல்வகை வண்ணமும்

வரியும் சேதமும் உளப்படத் தொகை,

இசைய எண்ணின் ஈர்ஏழ் உறுப்பே”

(சிலப். அடியார்க். (உ.ஆ) உ. வே.சா. (பதி. ஆ) ப.82.

என்பதன் விளக்கமாக

பொருள்: அறம், பொருள், இன்பம், வீடு

யோனி: உள்ளோன் தலைவன் உள்ளதொரு பொருள்

இல்லோன் தலைவன் உள்ளதொரு பொருள்

உள்ளோன் தலைவன் இல்லதொரு பொருள்

இல்லோன் தலைவன் இல்லதொரு பொருள்.

விருத்தி: சாத்துவதி, ஆரபடி, கைசிக, பாரதி.

சந்தி: முகம், பிரதிமுகம், கருப்பம், விளைவு, துய்த்தல்

சுவை: வீரம், பயம், இழிப்பு, அற்புதம், இன்பம் அவலம், நகை, நடுவுநிலை, உருத்திரம்.

சாதி: சாதி என்பதற்கு அடியார்க்கு நல்லார் உரை கிடைக்கவில்லை. ஆனால் இங்கு இருவகைக் கூத்தில் (வேத்தியல், பொதுவியல்) இது எவ்வகையைச் (சாதியைச்) சேர்ந்தது என்பதே பொருந்தும்.

குறிப்பு: குறிப்பு என்பது சுவையதன் கண் தோன்றுவது.

சத்துவம்: சத்துவம் என்பது அக்குறிப்பின் கண் நிகழ்கின்ற நிகழ்ச்சி

அவிநயம்: அவிநயம் என்பது பாவகம், அஃது இருபத்து நான்கு வகையுடையது.

சொல்: சொல் என்பது உட்சொல், புறச்சொல், ஆகாயச் சொல்.

சொல்வகை: சொல்வகை என்பது நான்கு வகைப்படும். சுண்ணம் சுரிதகம், வண்ணம், வரிதகம்.

வண்ணம்: வண்ணம் என்பது பெருவண்ணம் - ஆறாய் வரும் 

இடைவண்ணம் - 21ஆய் வரும்

வனப்பு வண்ணம் - 41ஆய் வரும்

வரி: வரி எட்டு வகைப்படும் அவை கண்கூடுவரி, காண்வரி, உள்வரி, புறவரி, கிளர்வரி, தேர்ச்சி வரி, காட்சிவரி, எடுத்துக்கோள்வரி 

சேதம்: விலக்குறுப்புகள் அனைத்தையும் சேதித்திடுவது சேதாரமாகும்.

 

நடனவடிவமைப்பு

இவ்விலக்குறுப்பு பதினான்கையும் எளிமையாக விளக்க இவ்வாய்வுக் கட்டுரையாளர் வடிவமைத்து ஆடிய நடனமே இங்கு எடுத்துரைக்கப்படுகிறது. 

நடன வடிவமைத்து ஆடியவர் : முனைவர் கு. சகாயராணி

பாடியவர் : வாணி ஜெயராம்

ராகம் : கீரவாணி

தாளம் : திஸ்ர சாப்பு.

பாடல் எழுதியவர் : தில்லை சரவணன்

 

காணாமல் போன காசு

பல்லவி

என்ன சொல்லி முறையிடுவேன் நில்லடி பொன்னி!

எவரிடத்தில் போய் உரைப்பேன் சொல்லடி பொன்னி!

என் குறையைக் கேட்பதற்கு யாருமில்லையே! – 2

என் நிலையைச் சொல்வதற்கு வார்த்தையில்லையே! – 2

சரணம் - 1

நெற்றி வேர்வை நிலத்தில் சிந்த பாடுபட்டேனே – அதில்

பத்து வெள்ளி காசுகளைச் சேர்த்து வைத்தேனே!

சேர்த்து வைத்த காசுகளில் ஒன்றை இழந்தேன்!

என் சித்தமெல்லாம் ஓயும்வரை தேடுகின்றேனே!

செல்வமென்று என்னிடத்தில் எதுவுமே இல்லை – நான்

சேர்த்ததையும் அனுபவிக்கப் பாக்கியமில்லை.

என்னையே நான் இழந்தது போல் துடிக்கிறேனடி - இதற்கு

ஈடு செய்ய வழியில்லாமல் தவிக்கிறேனடி!

 

காசு கிடைத்ததும் கும்மி

சரணம் - 2

பொன்னம்மா பாரம்மா என்னம்மா?

இது போயி மறைஞ்ச காசம்மா

சின்னம்மா கண்ணாம்மா எல்லோர்க்கும் 

நல்ல செய்தியைச் சொல்லனும் இப்போதே

என்னம்மா சின்னம்மா… ஏய் - கண்ணம்மா.

அடியாத்தி செல்லம்மா.

காணாமல் போனதைக் கண்டெடுத்தேன் - இன்று

களித்துக் கும்மியடியுங்கடி

தேனாகத் தித்திக்கும் இன்பத்தை – நீங்க

பகிர்ந்து கும்மியடியுங்கடி.

சரணம் - 3

தெய்வத்துக்கு நாம வெள்ளிப்பணம் - ஒண்ணு

காணாமல் போனாலும் தேடுவாராம்

தேடிக் கண்டால் பெரும் சந்தோஷமாம் - அப்ப

தேற வழியண்டு கும்மியடி

சரணம் - 4

கடவுள் சொன்ன நல்ல காசு கதை - இது

சத்தியம் சத்தியம் கும்மியடி

பூமிக்கு(ம்) வானுக்கு(ம்) பாலங்கட்டிவச்ச

புண்ணியனுக்கோரு கும்மியடி

கும்மியடி… கும்மியடி… டும்மியடி… அடி கும்மியடி

 

நாடகக் கதை விலக்கு

‘விலக்கினிற் புணர்த்து’ (அரங். 13)

‘தலைவன் செலுத்துகின்ற கதையை விலக்கியும், அக்கதையை நடத்தியும் முன்பு செய்த கதைக்கே உறுப்பாவதென்க’ என்னும் அடியார்க்கு நல்லாரின் கூற்றின்படியே இயேசுவின் வாழ்க்கை வரலாற்றில் இடம் பெறும் ஒரு சிறிய பகுதியையே நாட்டிய நாடகமாக நடத்தப்படும் வேளையில் அவர் தம் சீடர்களுக்கு அறத்தை வழியுறுத்திக் கதை ஒன்று கூறுவார். அக்கதையைக் காட்சிப்படுத்த இயேசுவின் கதையை விட்டு விலகி வேறொரு புதிய களத்தில் அவர் கூறிய அக்கதை நடனமாகக் காட்டப்பட்டு பின் மீண்டும் இயேசுவின் கதைக்கே திரும்புவது போல் அமைக்கப்பட்டிருக்கும். இவ்வாறு மூலக் கதையை விலக்கியும் பாட்டும் கூத்தும் எனப் பல்வேறு சுவைகளைச் சேர்த்து முற்சொன்ன கதைக்கு வந்து பொருத்தியும் நாடகக் கதையைச் சுவையாக நடத்த உதவும் நாடக உறுப்புகளே விலக்குறுப்புகள் ஆகும். இனி இந்நடன உருவாக்கத்தில் அமைந்த பதினான்கு விலக்குறுப்புகளையும் விளக்குவோம்.  

 

பொருள்: இந்நடனத்தில் நாயகி தான் சேர்த்து வைத்த காசுகளில் ஒரு காசு தொலைந்தவுடன் எப்படிக் கவலையுடன் அதைத் தேடினாலோ அதைப்போல, படைத்த கடவுளும் தன் நெறியை விட்டு ஒரு மனிதன் விலகிச் செல்லும் போது அவரைத் தேடி ஏக்கத்தோடு அலைவார். அதே போன்று காணாமல் போன காசு கிடைத்தவுடன் அந்நாயகி எப்படி மகிழ்ச்சியில் கூத்தாடுவாளோ அது போல் கடவுளும் தன்னிடம் திருந்தி வரும் மனிதருக்காக மகிழ்வார் என்பதை இந்நடனம் அறமாகவும் இன்பமாகவும் எடுத்துரைக்கிறது. எனவே முதல் விலக்குறுப்பான பொருள் கூறும், அறம், இன்பம் இரண்டும் இடம்பெற்றுள்ளது.

 

யோனி: இந்நடனம் உலகில் வாழ்ந்த இக்கதைத் தலைவான இயேசு கிறிஸ்து கூறிய நிகழாத ஒரு கற்பனைக் கதையைக் கொண்டு அமைந்துள்ளது. விலக்குறுப்பான யோனி வகுக்கும் முறையில் இது மூன்றாவது கூறான ~உள்ளோன் தலைவன் இல்லதொரு பொருள்| என்பதை உணர்த்துகிறது. 

 

விருத்தி: இந்நடனத்தில் கதை கூறும் தெய்வ மானிடராக இயேசு கிறிஸ்து தோன்றும் இடத்தில் சாத்வதி விருத்தியாகவும் மற்றும் கற்பனைக் கதையின் நாயகி பாரதி விருத்தியாகவும் நாடகப் பாத்திரத்தின் தலைமைப் பண்பினைப் படிப்படியாக வளர்த்து விரித்துச் செல்லும் திறன் விளங்குகிறது.

 

சந்தி: இதனை முகம் முதல் துய்த்தல் வரை நிகழும் வித்திட்டுப் பருவம் செய்து இலை தோன்றி, கருப்பமுற்றி கதிர் திரண்டு முளைத்து அவ்வாறு விளைந்த பொருளின் பயன் அடைவது என்பது கதை நிகழ்வுகளுக்கேற்ப பொருந்தச் (சந்திக்கும்) சேர்க்கும் திறன் எனலாம்.

 

முகம்: கதை நாயகி தன் சேமித்து வைத்த காசுகளை எண்ணிப் பெருமையுடன் மகிழ்ந்தாடுவது.

 

பிரதிமுகம்: தான் எண்ணியதில் ஒரு காசு குறைந்ததைக் கண்டு அதிர்ச்சியுறும் போது இலை தோன்றுவது போல் புது துணைபாத்திரம் தோழி உள் நுழைதல்.

 

கருப்பம்: காணாமல் போன அந்தத் காசைத் தான் சேர்த்த விதம் பற்றித் தோழியிடம் கூறிக் கண்ணீர் விடுதல் (புலம்புதல்).

 

விளைவு: புலம்பியபடியே தான் தேடிய அந்தக் காசைக் கண்டெடுத்து (கதிர் முற்றிக் காய் விளைந்து பெருத்து நிற்பது போல்) மகிழ்வது.

 

துய்த்தல்: தான் கண்டெடுத்து விட்டதைத் தன் தோழிகளிடம் கூறிக் கூத்தாடுவது (விளைந்ததை உண்டு மகிழ்வது போல) இவ்வாறாக இந்நடனமானது மேற்கண்ட முறையான ஐந்து சந்திகளினால் அமைக்கப்பட்டுள்ளன. 

 

சுவை: அடியார்க்கு நல்லார் கூறும் ஒன்பான் சுவைகளை கீழ்வரும் மூன்று சுவைகள் இந்நடனத்தில் இடம் பெற்றுள்ளன. 

 

இன்பச்சுவை (உவகை): தான் சம்பாதித்த காசுகளை எண்ணி மகிழ்ந்தாடுதல், காணாமல் போன காசு கிடைத்தவுடன் கூத்தாடுதல்.

 

அவலச்சுவை (அழுகை): காசு ஒன்று தொலைந்ததை எண்ணிக் கவலையுற்றுக் கண்ணீர் விட்டு அழுதல்.

 

அற்புதச் சுவை (மருட்கை): காணாமல் போன காசு கிடைத்தவுடன் ஏற்படும் இன்ப அதிர்வு (வியப்பு). 

 

சாதி: இந்நடனம் இருவகைக் கூத்தில் ஒன்றா அல்லது பல்வகைக் கூத்தினில் ஒன்றா அல்லது வரிக்கூத்தில் ஒன்றா என்றால் இது பலவரிக் கூத்திலே (நாட்டுப்புற நடனத்தில்) அடங்கும்.

 

குறிப்பு: ‘குறிப்பாவது சுவையதன் கண் தோன்றுவது’ என்னும் கூற்றுக்கிணங்க இப்பாடல் அவலச்சுவையைத் தோற்றுவிக்கும் வரிகளையும் அதேபோல் இன்பச் சுவையைத் தோற்றுவிக்கும் வரிகளையும் குறிப்பாகக் கொண்டுள்ளது.

 

சத்துவம்: சத்துவமாவது ‘அக்குறிப்பின் கண் நிகழ்கின்ற நிகழ்ச்சி எனும் கூற்றின்படி இந்நடனத்தின் நாயகி அவலச் சுவயை வெளிப்படுத்த அதிர்ச்சியுற்று அழுது கண்ணீர்விட்டு, தன்னை இர்ந்து தரையில் வீழ்ந்து, தலையில் அடித்துப் புலம்புவதுமு;, இன்பச் சுவையை வெளிப்படுத்த, இன்ப அதிர்ச்சியில் மகிழ்ச்சியோடு தோழிகளை அழைத்துக் குதூகலித்துக் கைகளைத் தட்டி கூத்தாடிப் பார்வையாளர்கள் புரிந்து கொள்ளும் வண்ணம் உடலின் செயல்பாடுகளை வெளிப்படுத்துவாள்.

 

அவிநயம்: இந்நடனத்தில் 24 அவிநயத்தில் இன்பமுற்றோனவிநயம் (மகிழ்ச்சி), ஐயமுற்றோனவிநயம் (அச்சம்) ஞஞ்ஙையுற்றோனவிநயம் (தன்னிலை உணராமை), தலை நோவுற்றோனவிநயம் (தலை சுற்றி விழுதல்) ஆகிய அவிநயங்கள் இடம் பெற்றுள்ளன.

 

சொல்: சொல் வகையான உட்சொல், புறச்சொல், ஆகாயச்சொல் ஆகியவற்றுள் இந்நடனத்தில் புறச்சொல் (நாயகி பிறருக்கு உரைத்தல்) எனம் சொல்வகையே இடம்பெற்றுள்ளது.

 

சொல்வகை: சுண்ணம், சுரிதகம், வண்ணம், வரிதகம் முறையே நான்கு, எட்டு, பதினாறு, முப்பத்திரண்டடி கொண்டட பாடல் வகையில் இந்நடனத்தின் பாடலின் சொல்வகை நான்குஅடி கொண்ட சுண்ணமே ஆகும்.

 

வண்ணம்: வண்ணம் என்பது பாடும் (இசைக்கும்) முறையைக் குறிக்கிறது. இந்நடனத்தின் பாடலில் அமைந்த வரிகளுக்கேற்ப அவலச்சுவையில் அடக்கியும், இன்பச் சுவையில் அதிர்ந்தும் உணர்வுகளுக்கேற்ப பாடப்பட்டுள்ளது. 

 

வரி: பிறந்த நிலத்திற்கும், அவரவர் செய்யும் குலத்தொழிலுக்கு ஏற்ற வகையில் நடிப்பது என்பதற்கேற்ப வரி என்பதை வரிக்கூத்து எனக் கொள்வதே சிறந்தது. ஒரு கதையை அல்லது நிகழ்ச்சியைப் பலர் கூடியுள்ள மேடையில் தோன்றி ஆடல், பாடல், அவிநயங்களுடன் செய்திகளை விளக்குதல். அதாவது ஒருவரே பல பாத்திரங்களை கொண்டு நடிப்பது. அவ்வகையில் இந்நடனத்தின் நாயகி மனித அவதாரக் கடவுள் சொன்ன கதையையே தான் ஏற்று நடித்துப் பின் இவ்வாறான அறம், இன்பத்தை இறைவன் உரைக்கிறார் என விளக்குகிறாள்.

 

சேதம்: நகை செய்யும் பொற்கொல்லர்கள் அந்நகையை வடிவுப்படுத்தக் கூட்டி, குறைப்பது சேதாரம் என்பது போல மேற்சொன்ன அனைத்து விலக்குறுப்புகளையும் கூட்டி ஒன்றிணைத்து இந்நடனத்தின் கதை, பாடல், பாத்திரப்படைப்பு அனைத்துமே பொருத்தமுற செதுக்கப்பட்டுள்ளது.

 

முடிவுரை

பழமையின் வடிவமான நடனக்கலை தற்காலத்தில் புதுமையும், வளர்ச்சியும் கண்டிருக்கலாம். எனினும் பழமையை அடியொற்றியே அனைத்துப் புதுமைகளும் படைக்கப்பட்டிருகின்றன என்பதே உண்மை. தற்கால கலைப்படைப்புகள் புதுமையானவை என்பதை விடப் பழமையின் மறு உருவங்களே இப்புதியன எனக்கொள்ளவேண்டும். அவ்வகையில் ஒரு நடன உருவாக்கத்தின் அடிப்படை இலக்கணம் என்பதை நம் முன்னோர்கள் முன்பே வகுத்து கொடுத்துள்ளனர். அவர்கள் காட்டிய அந்த விதிகளுக்குட்பட்டு ஒரு படைப்பு உருவாகும் போது அது எந்நாளும் நீடித்திருக்கும் நிலைத்திருக்கும்.

 

சான்று நூல்கள்

  • அரவிந்தன், மு. வை., உரையாசிரியர்கள், மணி வாசகர் பதிப்பகம், சென்னை, 1968.
  • இரகுராமன், சே., தமிழர் நடன வரலாறு, நந்தினி பதிப்பகம், முதல்பதிப்பு, சென்னை, 2006.
  • சண்முக வேல், கோ., சிலம்பில் அரங்கேற்று காதையின் இசைப்பகுதிகள், மலர்ப்பதிப்பகம், தஞ்சாவூர், 2000.
  • ஷாஜகான் கனி, வெ.மு., அரங்கேற்றுகாதை ஆராய்ச்சி, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், முதற்பதிப்பு, சென்னை, 2009.
  • சாமிநாதையர், உ.வே., (பதி. ஆ) சிலப்பதிகார மூலமும் அரும்பதவுரையும் அடியார்க்கு நல்லாருரையும், டாக்டர் உ.வே.சா. நூல் நிலையம், 11ஆம் பதிப்பு, சென்னை, 2008.