ஜூலை 2024 இதழுக்கு ஆய்வுக்கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன

உள்ள வழிபாடுகளே உருவ வழிபாடுகள்

மு.பெருமாள், உதவிப் பேராசிரியர், பகுதி நேர முனைவர் பட்ட ஆய்வாளர், முதுகலை மற்றும் தமிழாய்வுத்துறை, அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி, செய்யாறு 03 Aug 2021 Read Full PDF

கட்டுரையாளர்

மு.பெருமாள்,  

உதவிப் பேராசிரியர், பகுதி நேர முனைவர் பட்ட ஆய்வாளர், முதுகலை மற்றும் தமிழாய்வுத்துறை, அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி, செய்யாறு. 

நெறியாளர்

 முனைவர். கு. சீனிவாசன்.,எம்.ஏ., எம்.ஏ.,(யோகா)எம்.பில்.,பிஎச்.டி.,

முதுகலை மற்றும் தமிழாய்வுத்துறை, அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி, செய்யாறு. 

மு.பெருமாள், உதவிப் பேராசிரியர், பகுதி நேர முனைவர் பட்ட ஆய்வாளர், முதுகலை மற்றும் தமிழாய்வுத்துறை, அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி, செய்யாறு. திருவண்ணாமலை மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா.

உள்ள வழிபாடுகளே உருவ வழிபாடுகள்

ஆய்வுச் சுருக்கம்

தொல்காப்பியர் காலம் தொடங்கி இக்கால இலக்கியங்கள் வரை இறைவனைப் பாடாத நூல்கள் இல்லை எனலாம். எனினும் ஒருசிலர் இறைசார் கொள்கைகளை வெறுத்தும் மறுத்தும் தங்கள் எண்ண கிடக்கைகளைச் சமகால இலக்கியங்களில் கவிதையாக,  கட்டுரையாக, செய்யுளாக, நாடகமாக பதிவு செய்து வருகின்றனர். அப்பதிவுகள் எதிரும். புதிருமாக, ஏற்றத் தாழ்வாக சமூகத்தில் பல்வேறு இன்னல்களைத் தந்த வண்ணம் உள்ளன. இதனை மாற்றி அமைக்கும் பொருட்டு பல்வேறு இலக்கியங்கள் தோன்றிய வண்ணம் உள்ளன. இதில் இறை வழிபாடு பக்தி இலக்கியங்கள் தொடங்கி இக்கால இலக்கியங்கள் வரை சமூகத்தில் எங்ஙனம் மாற்றம் அடைந்துள்ளது என்பதை ஆய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும். 

திறவுச் சொற்கள்

உள்ள வழிபாடு, உருவ வழிபாடு, மூர்த்தி, தலம், தீர்த்தம்.

சமூக மாற்றம் என்பது கடவுள் வழிபாடு தொடங்கி மனிதனின் வாழ்வியல் வரை காணக்கிடக்கின்றது. மரபு நிலை திரியாது மாற்றங்களை வரவேற்கும் தன்மை சமகால இலக்கியங்களில் குறைந்து வருகின்றது.  என்பது இன்றைய அறிஞர்கள் பலரால் அறிய வருகின்றது.

பழையன கழிதலும் புதியன புகுதலும்

வழுவல கால வகையினானே”1

என்ற நன்னூல் வரிகளால் பழையன கழிந்து புதியன தோற்றம் பெறுவது கால ஓட்டத்தில் குற்றம் ஆகாது என்பது அறிய முடிகிறது.

உலகத்தார் உண்டென்ப தில்லென்பான் வையத்து

                   அலகையா வைக்கப் படும்”2

என்ற குறள் உயர்ந்தோர் பலரும் உண்டென்று சொன்ன ஒரு பொருளை தன் சிற்றறிவில் இல்லை என்று சொல்வான் எனில் அவன் இவ்வுலகத்தில் காணப்படும் ஒரு பேய் என்று கருதப்படுவான் எனவே,

           குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள் 

               மிகைநாடி  மிக்க கொளல்”3 

என்று குறட்பாவிற்கு ஏற்ப உலகத்தார் பலரும் ஏற்றுக்கொண்ட இறை வழிபாடு கடவுளை அறியும் தன்மையை எடுத்துக்கூறி உள்ளது. தொல்காப்பியத்தில் மாயோன், சேயோன், இந்திரன், வருணன், கொற்றவை ஆகியன முறையே முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல், பாலை என்ற நிலத்துக்குரிய தெய்வங்களாகச் சுட்டப்பட்டுள்ளன.

வழிபாடு என்பது வழிபடு என்ற சொல்லின் ஈற்றயல் திரிந்த சொல்லாகும் சமன்படு–சமன்பாடு, உடன்படு–உடன்பாடு இதைப் போல வழிபடு–வழிபாடு ஆயிற்று. இவ்வழிபாடு உருவ வழிபாடு, அருவ வழிபாடு, அருஉருவ வழிபாடு என்று மூன்று வகையாக பல்வேறு சமயத்தவரால் இவ்வுலகத்தில் பின்பற்றப்பட்டு வருகின்றன.

பக்தி இயக்கத்தின் முன்னோடிகளான ஞானசம்பந்தரும், நாவுக்கரசரும், வன்தொண்டராகிய சுந்தரரும், திருவாசகம் தந்த மாணிக்கவாசகரும் நான்கு வகை வழிபாட்டு மார்க்கங்களை இவ்வுலகிற்கு ஈந்துள்ளனர்.

அவை,

    சர்புத்திர மார்க்கம்(மகன்மைநெறி) – தாய்சேய் உறவு.

    தாசமார்க்கம் (தொண்டுநெறி) – தலைவன் தொண்டன் உறவு.

    சகமார்க்கம் (நட்பு நெறி)   – நண்பர் உறவு.

  சன்மார்க்கம் (பொதுமை நெறி) –பொது உறவு

ஆகிய நான்காகும். சமயக்குரவர் நால்வரும், சந்தானகுரவர் நால்வரும், அறுபத்து மூன்று நாயன்மார்களும். பன்னிரு ஆழ்வார்களும், பதினெண் சித்தர்களும், ஏனைய பக்தர்களும் இறைவனை பல்வேறு வகையில் வழிபட்டு வந்துள்ளனர் வழிபட்டும் வருகின்றனர்.

பக்தி இலக்கியச் சான்றோர்கள் உருவ வழிபாட்டை தேவாரம், திருவாசகம், திருப்புகழ், திருவருட்பா முதலான பல்வேறு நூல்களின் வழி வலியுறுத்தி உள்ளனர். அதற்கு சான்றுயாதெனில்

மூர்த்தி தலம் தீர்த்தம் முறையாய் தொடங்கினோற்கு

வார்த்தைச் சொல்ல குரு வாய்க்கும் பராபரமே”4

என்ற தாயுமானவருடைய இறை வடிவம், இறை உறைகின்ற இடம் மற்றும் அவ்விடத்தில் உள்ள தீர்த்தம் இம்மூன்றையும் வழிபட்டால் நல்ல குரு வாய்ப்பார் என்று பதிவு செய்கிறார். இதன் வழி உருவ வழிபாடு வலியறுத்தபட்டிருப்பது அறிய முடிகிறது.

திருநாவுக்கரசர் தனது நெஞ்கினைப் பார்த்து நீ இந்த உலகத்தில் நிலை பெற வேண்டுமாயின் நான் சொல்வதைக் கடைப்பிடிப்பாயாக என்கிறார்.

நாள்தோறும் கோயிலுக்குச் செல்ல வேண்டும் பொழுது விடிவதற்கு முன்பாக திருவரகு (பெருக்குதல்) செய்யவேண்டும் அதாவது குப்பைக் கூளங்களைக் கூட்ட வேண்டும், தண்ணீர் தெளித்து மெழுக வேண்டும், பூமாலை கட்ட வேண்டும்,அதனை இறைவன் திருமேனி மீது அணிவிக்க வேண்டும். அவனது திருப்புகழைப் பாடவேண்டும், தலை மீது கைவைத்து கும்பிட வேண்டும், பிறகு கூத்தாட வேண்டும் சங்கரனை சங்கரா! செய செய என்று போற்ற வேண்டும், கங்கையைச் சூடிய செஞ்சடை எம் ஆதியே என்று வணங்க வேண்டும். என்று திருவாரூரில் வீற்றிருக்கும் தியாகராசப் பெருமானை ஆறாம் திருமுறையில் வழிபாடு செய்கின்றார் அப்பர் பெருமான் இதனை,

நிலைபெறுமா றெண்ணுதியேல் நெஞ்சே நீவா

நித்தலும் எம்பிரானுடைய கோயில் புக்கு

புலவர் தன்முன் அலகிட்டு மெழுக்குமிட்டுப் பூமாலை

புனைந்தேத்திப் புகழ்ந்து பாடித்

தலையாரக் கும்பிட்டுக் கூத்து மாடி சங்கரா

சயபோற்றி போற்றி யென்றும்

அலைபுனல் சேர் செஞ்சடையெம் ஆதியென்றும்

ஆரூரா என்றென்றே அலரா நில்லை” 5

என்று பதிவு செய்துள்ளார்.

திருஞானசம்பந்தரும்  இறை வழிபாட்டில் உருவ வழிபாட்டை பல்வேறு பாடல்களில் வலியுறுத்தி உள்ளார். அவர் வழிபட செல்லும் தலத்தின் இயற்கைச் சிறப்பினையும், ஆலயத்தில் அமைந்துள்ள கோபுரம் சிறப்பினையும், இறைவனது பெருமையையும் பதிவு செய்வது சம்பந்தரின் சிறப்பாகும்.

வேதம் வெண்ணூல் பூண்டு

வெள்ளை எருதேறி

பூதம் சூழப் பொலி வருவார்

புலியின் உரியதோலார் 

நாதா எனவும் நக்கா எனவும்

நம்பா என நின்று

பாதந் தொழுவார் பாவம் தீர்பார்

பழன நக ராரே” 6

என்ற பாடலில் இறைவனது உருவத்தைச் சொல்லி, அவனது பாதத்தை தொழுவார் பாவத்தினை நீக்குவார் திருப்பழனத்தில் உள்ளான் என்று தனது உருவ வழிபாட்டை விளக்குகிறார் சம்பந்தர் மேலும்,

தேடிச் சென்று திருந்தடி யேத்துமின்

                 நாடி வந்தவர் நம்மையு மாட்கொள்வர்

ஆடிப்பாடியண் ணாமலை கைதொழ

ஓடிப் போம்நம துள்ள வினைகளே” 7

என்ற திருவண்ணாமலை பதிகத்தில் இறைவனைத் தேடிச் சென்று அவனடியை வணங்கும்போது நம்மைத் தேடி வந்து ஆட்கொள்வான் என்று உருவ வழிபாட்டினை உளமாற உணர்த்துகிறார் சம்பந்தர்  மேலும்,

இறைவன் வேதத்தை உடைவன், புலித்தோல் போர்த்தியவன் சடையில்  பிறை அணிந்தவன் இந்தச் செய்தியினை இதனை,

              மறையுடையாய் தோலுடையாய் வார்சடைமேல் வளரும் 

பிறையுடையாய் பிஞ்ஞகனே யென்றுனைப் பேசினல்லால்

குறையுடையார் குற்றம் ஓராய் கொள்கையினால் உயர்ந்த 

                 நிறையுடையார் இடர்களையாய் நெடுங்களம் மேயவனே” 8

என்று பதிவு செய்துள்ளார். 

இங்ஙனம் சைவ அடியார்கள் இருநூற்று எழுபத்து நான்கு சிவத்தலங்களையும் வழிபாடு செய்து பாமாலை சூட்டி உருவ வழிபாட்டை உலகிற்கு உணர்த்தி உள்ளனர்.

பன்னிரு ஆழ்வார்களும் நூற்றி எட்டு வைணவத் தலங்களுக்குச் சென்று வழிபட்டு ‘மங்களாசாசனம’செய்துள்ளார்கள் இதன்வழி அக்காலம் உருவ வழிபாட்டை வாழ்வியலில் ஒரு உள்ளீடாக கொண்டிருந்தனர்.அத்தகைய உருவ வழிபாடு எனும் உள்ளீடு சமகால இலக்கியங்களில் மாற்றம் பெற்றிருக்கிறது.

பாரதியார் தொடங்கி இற்றைக்கால புதுக் கவிஞர்கள் வரை உருவ வழிபாட்டைக் கடந்து உள்ள வழிபாடாக மாற்றி உள்ளனர் என்பது அவர்தம் படைப்புகளால் தெரிய வருகிறது.

பாரதியார் இறைவனை காக்கை சிறகினிலும், பார்க்கும் மரங்களிலும் கேட்கும் மொழியினிலும் நெருப்பின் உள்ளும் காணுகின்றார் இதனை,

             காக்கைச் சிறகினிலே நந்த லாலா!- நின்றன்

கரிய நிறந் தோன்று தையே நந்த லாலா!

பார்க்கும் மரங்க ளெல்லாம் நந்த லாலா! – நின்றன் 

பச்சை நிறந் தோன்று தையே, நந்த லாலா

               கேட்கும் மொழியி லெல்லாம் நந்த லாலாநின்றன்

கீத மிசைக்குதடா, நந்த லாலா!

தீக்குள் விரலை வைத்தால் நந்த லாலா- நின்னை

தீண்டு மின்பந்  தோன்றுதடா  நந்த லாலா!”9   

என்று பதிவு செய்துள்ளார்.

இவரே,

உள்ளத்தில் உண்மையொளி உண்டாயின்

 வாக்குனிலே ஒளி உண்டாகும்

  வெள்ளத்தின் பெருக்கைப் போல் கலைப் பெருக்கம்

                  கவிப்பெருக்கம் மேவுமாயின் பள்ளத்தில் வீழ்ந்திருக்கும் 

  குருடரெல்லாம் விழிபெற்று பதவி கொள்வார்”10

என்று குறிப்பிடுகிறார் இதன் வழி பாரதியார் வழிபாட்டிற்கு உள்ளம் தூய்மையாக இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்துகின்றார். இவருடைய சீடரான பாரதிதாசனும்,

எங்கெங்கு காணினும் சக்தியடாதம்பி 

ஏழுகடல் அவள் வண்ணமடா”11

என்று இறைத்தன்மை எல்லா இடத்திலும் காணுகிறார். பிற்காலத்தில் சுயமரியாதை இயக்கத்தைச் சார்ந்து ஒழுகினார் என்பது குறிப்பிடத்தக்கது.

பதினெண்சித்தர்களில் ஒருவராகிய சிவவாக்கியர் இறைவன் உள்ளத்தில் உணருகிறான் என்பதை பின்வருமாறு சுட்டுகிறார்.

              “நட்ட கல்லைச் சுற்றி வந்து நாலு புஷ்பம் சாற்றியே

சுற்றி சுற்றி வந்து முணு முணுக்க சொல்லும் மந்திரம் ஏதடா!

சுட்ட சட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ!

நட்டகல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்”12

 திருவள்ளுவரும், 

உள்ளத்தால் பொய்யாது ஒழுகின் உலகத்தார்

உள்ளத்துள் எல்லாம் உளன்”13

என்றும் மேலும்,

 

உள்ளம் முடைமை உடைமை பொருளுடைமை

நில்லாது நீங்கி விடும்”14

ஆகிய குறட்பாக்களில் உள்ளத்  தூய்மையை உணர்த்துவதை அறிய முடிகிறது. 

இவ்வுள்ள வழிபாட்டினையே,

உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம் 

வள்ளற் பிரானார்க்கு வாய் கோபுரவாசல்

தெள்ளத் தெளிந்தோர்க்குச் சீவன் சிவலிங்கம்

கள்ளப் புலனைந்தும் காளாமணி விளக்கே”15

என்று திருமூலர் அறிவுறுத்துகிறார்.

“மாசிலா மனமே” ஈசன் கோயில் என்பது ஆன்றோர்வாக்கு மேலும்,

 

மனமது செம்மையானால் மந்திரம் ஜெபிக்க வேண்டா

மனமது செம்மையானால் வாயுவை உயர்த்த வேண்டா

மனமது செம்மையானால் வாசியை நிறுத்த  வேண்டா

மனமது செம்மையானால் மந்திரம் செம்மையாமே”.16

 என்பதும் திருமூலர் கூற்று.

 கவியோகி ஸ்ரீ. சுத்தானந்த பாரதியாரும்,

            “கண்ணில் இருந்துலகைக் காண்பதெது வென்றே

              நாவிலிருந்து சுவை நயப்பவன் யாரென்றே

              உள்ளத்தி லேயொளிந்த உண்மை எது வென்றே 

              இதயத்தில் துடித்திடும் இன்பம் எது வென்றே

              அறிவும் அறிபொருளும் அறிவோனும் யாரென்றே

               உயிர்க்குயி ராய்க்கலந்த உத்தமன் எவனென்றே”.17

என்ற பாடலில் உள்ளத்திலே ஒளிந்த உண்மையாக இறைவன் இருக்கின்றான் என்பதை சுட்டி உள்ளார்.

மேலும்,

உண்டென நம்பிடுவாய்-மனமே இந்த

உலகெலாம் பரவிய உயர்பரம் பொருளை நீ

தொண்டரைக் காத்திடுந்

தோன்றாத் துணையதுவாய்

சொல்லைக் கடந்ததுவாய்

எல்லார்க்குமே பொதுவாய்

சாந்த நிறைவாம் அது தியானத்தில் வருவது,

சந்ததம் ஆனந்த சக்தியைத் தருவது

காந்தத்தில் ஊசிபோற் கலந்தது ஜீவனில்

கண்ணுங் கதிரொளியுங்

 காட்டும் அறிவு மாகி”.18

என்ற பாடலில் உலகமெல்லாம் இறைவன் உறைந்து இருப்பதாகவும், அமைதியிலும், ஆனந்தத்திலும், சீவனிலும், கண்ணும் கருத்துமாகி, அறிவுமாகி விளங்குகிறான் என்பதை பதிவு செய்துள்ளார். வேதமும் அகம் பிரம்மாஸ்மி” (நான் கடவுள்) என்று இயம்புகிறது.

கவிமணி தேசிய வினாயகம் பிள்ளையும் தனது மலரும் மாலையும் என்ற நூலில் இறைவன் உள்ளத்தில் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

தலைவி தோழியிடம் இறைவனை, தேவாதி தேவனை, கோவிலில், கோபுரத்தில், தெப்பகுளத்தில், தேரோடும் வீதியில் சிற்பச் சிலைகளில், ஓவிய வேலையில், பொன்னும் மணியில், பூமாலையில், தூபம் இடுதலில், தீபம் சுற்றி எடுத்தலில், இறைவனை காண முடியவில்லையாம். மேலும்,

               தில்லைப் பதியுங்கண்டேன்-அங்குச்

  சிற்றம் பலமுங் கண்டேன்,

  கல்லை கனிசெய் வோனைத்-தோழி!

  கண்களாற் கண்டிலனே,

  கண்ணுக் கினியகண்டுமனத்தைக்

  காட்டில் அலையவிட்டு,

  பண்ணிடும் பூசையாலேதோழி

  பயனொன் றில்லை, அடி!

  உள்ளத்தில் உள்ளானடிஅது

  உணர வேண்டுமடி,

  உள்ளத்தில் காண்பாயெனில்-கோவில்

  உள்ளத்தில் காண்பாயடி”.19 

 

என்று இவர் பதிவு செய்திருப்பதின் வழி இறைவன் ஒவ்வொருவர் உள்ளத்திலும் உறைகின்றான் என்பதை அறிய முடிகிறது.

தொகுப்புரை

மாசில்லா உள்ளத்தை மனிதன் பெற்றிருப்பானாயின் மகேசனை எளிதில் அடையலாம் என்பது உண்மை எனவே தான் வள்ளலார் புண்படா உடம்பையும் குறைபடா மனத்தையும், பொய்படா  ஒழுக்கத்தையும் வலியுறுத்துகிறார்.

கொரோனா என்னும் தீநுண்கிருமி பரவியுள்ள இக்கால கட்டத்தில் உருவ வழிபாடு உகந்ததன்று எனவே தான் அரசு, முதல் பொது முடக்கத்தில் அனைத்து ஆலயங்களையும் மூடச் செய்திருந்தது. நெஞ்சகமே கோயிலாய், நினைவே சுகந்தமாய், அன்பே மஞ்சன நீராய் கொண்டு வீட்டில் இருந்தபடியே பூசை (வழிபாடு) செய்வோமாயின் இறைவனது அருள் கிட்டும் என்பது எள்ளளவும் ஐயமில்லை.

இலங்கையைச் சார்ந்த புரட்சிக் கவிஞர் காசி ஆனந்தன் கோவில் எனும் தலைப்பில் எழுதிய கவிதையில் மனிதன் மன அழுக்கோடு வழிபாடு செய்யச் செல்வதை வன்மையாக கண்டிக்கிறார்.

செறுப்பை வெளியே விட்டுவிட்டு

உள்ளே செல்கிறது அழுக்கு”20

இக்கவிதையில் மனிதன் மனம் மாசடைந்து இருப்பதை நறுக்குத் தறித்தார் போல கண்டித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பக்தி இலக்கிய காலத்தில் உருவ வழிபாடாக இருந்தது உள்ள வழிபாடாக சமகால இலக்கியங்களில் மாறி இருப்பது சமூகத்தில் ஏற்பட்ட மாற்றங்களில் தலையாயது ஆகும்.

மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன் 

ஆகுள நீற பிற”.21

அறத்தான் வகுவதே இன்பம் அறமெனப் பட்டதே  இவ்வாழ்க்கை, ஒழுக்கத்தில் எய்துவர் மேன்மை இது போன்ற வள்ளுவ வரிகள் எல்லாம் உள்ளத் தூய்மையோடு விளங்கி மனிதன் மாண்படைய வேண்டும் என்பதையே வலியுறுத்துகின்றன.

உள்ள வழிபாடுகளே உருவ வழிபாடுகள் ஆகும்.

அடிக்குறிப்புகள்

1. பவணந்தி முனிவர், நன்னூல், நூற்பா எண்:426.

2. திருவள்ளுவர், திருக்குறள்,குறள் :850.

3. மேலது, பாடல்:504.

4. தாயுமானவர், பராபரக்கண்ணி, பாடல் எண்:62

5. திருநாவுக்கரசர், ஆறாம் திருமுறை, பாடல்:2397, பக்கம்:693.

6. திருஞானசம்பந்தர், முதல் திருமுறை, பாடல்:722, பக்கம்:774.

7. திருநாவுக்கரசர் ஐந்தாம் திருமுறை, திருவண்ணாமாலை பதிகம்: பாடல்:5.

8. திருஞானசம்பந்தர், முதல் திருமுறை, பாடல்:293, பக்கம்:520

9. பாரதியார், பாரதியார் கவிதைகள், பக்கம்:140, பாடல்:48.

10. மேலது, பக்கம்:162, பாடல்:65.

11. பாரதிதாசன், பாரதிதாசன் கவிதைகள், பாடல்:1.

12. சிவவாக்கியர், பாடல் எண்:520

13. திருவள்ளுவர், திருக்குறள், குறள்:294

14. மேலது, குறள்:592

15. திருமூலர், திருமந்திரம், பாடல்:1823.

16. மேலது, பாடல்:17, பக்கம்293

17. சுத்தானந்த பாரதியார், கீர்த்தானஞ்ஜலி, புதுயுக நிலையம், புதுச்சேரி,1947.

18. மேலது, பாடல்:60.

19. கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை, மலரும் மாலையும், பாடல்:140.

 20.        காசி ஆனந்தன், காசி ஆனந்தன் கவிதைகள், கோவில், பாடல்:15.

 21          திருவள்ளுவர், திருக்குறள், பாடல்:34

துணைநூற்பட்டியல் 

  • நன்னூல், பவணந்தி முனிவர், ஆறுமுக நாவலர் உரை, ஆறுமுக நாவலர் அச்சகம்,சென்னை.1966.
  • பன்னிருதிருமுறைகள், ஞானசம்பந்தம் பதிப்பகம்,தருமை ஆதீனம், மயிலாடுதுறை. 2014.
  • பாரதியார் பாடல்கள்,மணிவாசகர் பதிப்பகம்,சிதம்பரம், 1997.
  • பாரதிதாசன் பாடல்கள்,மணிவாசகர் பதிப்பகம்,சிதம்பரம், 1997.
  • கீர்த்தானஞ்ஜலி, புதுயுக நிலையம், புதுச்சேரி,1947.
  • திருக்குறள் மூலமும் உரையும், ஞானசம்பந்தம் பதிப்பகம்,தருமை ஆதீனம், மயிலாடுதுறை. 2014.
  • மலரும் மாலையும்,கௌரா பதிப்பகம், திருவல்லிக்கேணி, சென்னை,2018.