ஜூலை 2024 இதழுக்கு ஆய்வுக்கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன

யாப்பிலக்கணத்தில் ‘சீர்’

முனைவர் க. முருகேசன் உதவிப்பேராசிரியர்  & ஆய்வுநெறியாளர், தமிழ்த்துறை தேசியக்கல்லூரி (தன்னாட்சி) திருச்சிராப்பள்ளி – 01 தமிழ்நாடு, இந்தியா 09 Nov 2021 Read Full PDF

ஆய்வுச்சுருக்கம்

            தமிழ்மொழி தொன்மை வாய்ந்த மொழியாகும். பல்லாயிரமாண்டுகளுக்கு முன்னரே இம்மொழியில் திருந்திய இலக்கியங்கள் பல தோன்றின. அவற்றை ஆய்ந்து சிறந்த இலக்கண நூல்களைச் சான்றோர் பலர் இயற்றினர். இவ்விலக்கணம் எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி என விரிந்து அறுவகை இலக்கணம், எழுவகை இலக்கணம் என வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் இயற்றியுள்ளார். எழுத்துக்களைச் செப்பமிட யாப்பியல் முக்கியச்கூறாக விளங்குகிறது. யாப்பியலின் கூறாக திகழ்கின்ற உறுப்பியலில் எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை என வகைப்படுத்தப்பட்டுள்ளன. இவற்றில் சீரின் பயன்பாட்டையே இவ்வாய்வு முதன்மையாகக் கொண்டு நிகழ்த்தப்படுகிறது.

கலைச்சொற்கள்

  1. யாப்பு – கட்டுதல்
  2. தொல் - தொல்காப்பியம்
  3. யாப்பதிகாரம் - புலவர் குழந்தையின் யாப்புநூல்
  4. மாத்திரை – எழுத்துகள் ஒலிக்கும் காலளவு
  5. முதுசொல் - பழமொழி
  6. மூவர் - சேரர், சோழர், பாண்டியர்

முன்னுரை

            இலக்கணம் என்ற பழந்தமிழ்ச் சொல்லாட்சியைத் தொல்காப்பியம் முதன்மையாகக் கையாள்கிறது. அது தொல்காப்பியத்தில்  பலவிடங்களில் கையாளப்படுகின்றது. புறத்திணை இலக்கணம் (தொல்:1002) இழைபின் இலக்கணம் (தொல்:1498) இலக்கு + அண் = அம் என்று இலக்கணம் என்ற சொல்லைப் பிரித்தல் வேண்டும். இலக்கை அண்மையில் உரைப்பதென்பது பொருளாகும். இலக்கு -  இலக்கணம் சிறந்த நடைக்கு எடுத்துக்காட்டாக அல்லது கற்றோர் பின்பற்றும் இலக்காகக் கூறப்பெறும் மொழியமைதி (Grammer) என்று மொழிஞாயிறு பாவாணர் சுட்டுகிறார். தமிழிலக்கணத்திலுள்ள யாப்பியலின் கூறான ‘சீர்’ பெறுமிடத்தை ஆய்வதே இவ்வாய்வுக் கட்டுரையின் நோக்கமாகும்.

யாப்பிலக்கண நூல்கள்

            யாப்பிலக்கண நூல்களில் தொல்காப்பியம் முதன்மை இடம்பெறுகிறது. பொருளதிகாரம் - செய்யுளியலில் யாப்பிலக்கணத்தை எடுத்துரைக்கின்றது. அவிநயம், காக்கைபாடினியம், அமுதசாகரம், யாப்பருங்கலம், யாப்பருங்கலக்காரிகை, வீரசோழியம் - யாப்பதிகாரம், இலக்கணவிளக்கம் - செய்யுளியல், முத்துவீரியம் - யாப்பதிகாரம், சுவாமிநாதம் - யாப்பதிகாரம், விருத்தப்பாவியல் போன்றவை யாப்பிலக்கணத்தைப் பேசுகின்றன.

            சான்றிலக்கணங்களாகப் பாப்பாவினம், சிதம்பரச் செய்யுட்கோவை, திருவலங்கற்றிரட்டு, பல்சந்தப்பரிமளம் போன்றவை உள்ளன. மேலும் பாட்டியல் நூல்களாக இந்திரகாளியம், பன்னிருபாட்டியல், வெண்பாப்பாட்டியல், வரையறுத்த பாட்டியல், சிதம்பரப்பாட்டியல், இலக்கண விளக்கப்பட்டியல் போன்றவை உள்ளன.

            பிரபந்தங்களைப் பற்றிய நூல்களாகப் பிரபந்த மரபியல், பிரபந்ததீபம், பிரபந்தத்திரட்டு, பிரபந்த தீபிகை போன்றவை தோன்றின.

            அறுவகை இலக்கணத்தில் யாப்பிலக்கணமும், ஏழாம் இலக்கணத்தில் யாப்பியல்பும், வண்ணத்தியல்பும், வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகளால் வளர்ந்தன. இவ்வாறு இருபத்தெட்டு நூற்களுக்கு மேல் யாப்பிலக்கணம் பேசுகின்றன.

செய்யுள் உறுப்புகள்

            செய்யுள் உறுப்புக்களாகத் தொல்காப்பியர் முப்பத்து நான்கினை வரையறுக்கிறார் அதனை,

                        “மாத்திரை எழுத்தியல் அசைவகை எனாஅ

                        யாத்த சீரே அடி, யாப்பு எனாஅ

                        ………………………………...

                        வல்லிதிற் கூறி வகுத்துரைத் தனரே”1

எனச்செய்யுள் உறுப்புக்களை வரையறுக்கிறார்.

            தொல்காப்பியர் எழுத்து முதலாக அசை, சீர், அடி என ஈட்டப்பெற்ற தான் குறித்த பொருளை முற்றுப்பெற நிறுத்துதல் யாப்பு என்று கூறுவர். இதனை,

                        “எழுத்து முதலா ஈண்டிய அடியில்

                        குறித்த பொருளை முடிய நாட்டல்

                        யாப்பென மொழிப யாப்பறிபுலவர்”2

என யாப்பினைத் தெளிவாக அறிந்தவர்கள் கூறுவார்கள் என எடுத்தியம்புகிறார். மேலும் யாப்பின் ஏழு பகுதிகளையும் கூறுகிறார். அதனை,

                        “பாட்டுரை நூலே வாய்மொழி பிசியே

                        அங்கத முதுசொ லவ்வேழ் நிலத்தும்

                        வண்புகழ் மூவர் தண்பொழில் வரைப்பின்

                        நாற்பே ரெல்லை யகத்தவர் வழங்கும்

                        யாப்பின் ;வழிய தென்மனார் புலவர்”3

என்று பாட்டு, உரை, நூல், வாய்மொழி, பிசி, அங்கதம், முதுசொல் என்ற ஏழுவகை இலக்கிய வகைகளும், சேரசோழபாண்டியர் என்ற மூவர் ஆளும் எல்லையும், வடக்குவேங்கடம், தெற்குகுமரி, கிழக்குமேற்குக் கடல்களாக உள்ள எல்லைக்கண் தமிழ்நாட்டவர் வழங்கும் யாப்பின் வகைகள் என்ற வகைபாடு அறிவடையோர் கூற்றாகும்.

            யாப்பு என்னும் தொழிற்பெயர் கட்டுதல் என்னும் பொருள்படும். எழுத்து, அசை, சீர், அடி, தொடை என்னும் உறுப்புக்களால் அமைவது செய்யுளாதலால், அதற்கு யாப்பு என்பது ஆகுபெயராகின்றது. எனவே, செய்யுள் இலக்கணத்தை, யாப்பிலக்கணம் என்று அழைக்கின்றனர். யாப்பு, பாட்டு, தூக்கு, தொடர்பு, செய்யுள் என்பவை ஒருபொருள் குறிக்கும் பல சொற்கள் இதனை,

                        “எழுத்தசை சீர்தளை அடிதொடை ஆறும்

                        செய்யுள் உறுப்பென செப்பினர் புலவர் “4    என்பர்.

சீர்

            அசைகளால்  ஆவது சீராகும். ஒருசீரில் ஒன்று முதல் நான்கு அசைகள் வரை இருக்கலாம். எனவே, சீர்கள் ஒரசைச்சீர், ஈரசைச்சீர், மூவகைச்சீர், நான்கசைச்சீர் என்ற நான்கு பெரும்பிரி;வுகளில் அடங்கும்.

ஓரசைச்சீர்

            ஒரு நேரசை அல்லது ஒரு நிரையசை தனியே நின்று சீராகுங்கால் அதை ஓரசைச்சீர் என்பர். அதை அசைச்சீர் என்றும் பொதுச்சீர் என்றும் அழைப்பர். நாலசைச்சீருக்கும் பொதுச்சீர் என்ற பெயர் இருப்பதால், ஓரசைச்சீரை ‘அசைச்சீர்’ என்று அழைத்தலே மேலானதாக அமையும்.

            அசைச்சீர் நேரசையினாலும், நிரையசையினாலும் ஆகலாம். இவ்வசைச்சீர் செய்யுளின் முதலிலும் இடையிலும் வருவதற்கில்லை. ஆனால் வெண்பா என்னும் செய்யுளின் ஈற்றுச் சீராகவே அது பெரும்பாலும் வரும்,

                        “எதிரதாக் காக்கு மறிவினார்க் கில்லை

                        அதிர வருவதோர் நோய்.”5

என்று குறள் வெண்பாவின் ஈற்றுச்சீர் ‘நோய்’ என்னும் நேரசை ஒரு சீராய் நிற்கும் இயல்புடையதாகும்.

                        “பற்றற்ற கண்ணும் பழமைபா ராட்டுதல்

                        சுற்றத்தார் கண்னே யுள”6

என்று, யுள என்னும் நிரையசை ஈற்றில் ஒரு சீராய் நிற்கின்றது. நேரசையாலான அசைச்சீரை நாள் என்றும், நிரையசையாலான அசைச்சீரை மலர் என்று அழைப்பர்.

ஈரசைச்சீர்

            இரண்டு அசைகளால் அமைந்தசீர் ஈரசைச்சீர் இதை இயற்சீர் என்பர். இது ஆசிரியச்சீர், அல்லது ஆசிரிய உரிச்சீர் என்றும் அழைக்கப்படுகின்றது. இது நான்கு வகையாக அமைந்திருக்கும் இயல்புடையது.

  1. தேர்ந்த. வாய்ப்புண், கண்டாய், நின்றேன் என்பன போல் இரண்டு அசையும் நேரசையாகயிருத்தல்.
  2. விரிதிரை, கருங்கொடி, புதுமலர் என்ற சீர்கள் இரண்டு அசையும் நிரையசையாகயிருக்கும்.
  3. கண்பொழி, பண்படும் நற்கனா, பூந்துகில் என்பன போல் முதலசை நேரசையாகவும், இரண்டாவது நிரையசையாகவும் இருக்கும்.
  4. அதுவோ, கிழமை, கலாபம், ஒழுங்கு என்பன போல் முதலசை நிரையாகவும், இரண்டாவது அசை நேராகவும் இருத்தல்.

ஆதலின், இயற்சீர்,

நேர், நேர்      -           நிரை, நிரை

நேர் நிரை    –          நிரை, நேர்

என நான்கு வகையாக வகைப்படுத்துதல் இயல்பாகும்.

            யாப்பிலக்கணம், இந்நால்வகைச் சீர்களையும் தேமா, புளிமா, கருவிளம், கூவிளம் என்னும் வாய்பாடுகளால் குறிக்கலாம்.

                        நேர், நேர் - தேமா,                         -           நிரை, நேர் - புளிமா

                        நிரை, நிரை - கருவிளம்,              -          நேர், நிரை - கூவிளம்

இவை நான்கும் இயற்சீர்களாகும்.

நேர்நேர், நிரைநிரை, நேர்நிரை, நிரைநேர் என, இரண்டு அசைகள் (நேர், நிரை) நான்கு விதமாக சேர்ந்து ஈரசைச்சீராகும். அவைமுறையே தேமா, புளிமா, கருவிளம், கூவிளம் என்ற வாய்பாட்டால் குறிக்கப்படும். இவ்வீரசைச்சீர்கள் இயற்சீர் என்ற பெயரால் அழைக்கப்படும். மேலும்,

            “ஈரசைச்சீரை ஆசிரியச்சீர் என்றும் அழைப்பதுண்டு. ஏனெனில் இச்சீர் ஆசிரியப்பாவிற்கு உரியதாகும். தேமா, புளிமாச்சீர்களை மாச்சீர் என்றும், கருவிளம் கூவிளச் சீர்களை விளச்சீர் என்றும் கூறுவர்”7

மூவசைச்சீர்

            ஈரசைச்சீரை இயற்சீர் என்பதுபோல், மூவசைச்சீரை உரிச்சீர் என்று பெயரிட்டு அழைக்கின்றனர். மூன்று அசைகளைக் கொண்டு நடக்கும் சீர் மூவசைச்சீர் தேமா, புளிமா, கருவிளம், கூவிளம் என்றும் அசைச்சீர்களோடு நேர்,நிரை என்ற அசைகளைத் தனித்தனி சேர்ப்பின் மூவசைச்சீர் எட்டு வகையாக வகுக்கப்பட்டுள்ளன.

  1. சீரின் மூன்று அசைகளும் நேரசையாய் இருத்தல்

மண்ணாலே மண் - ணா - லே – நேர்,நேர்,நேர் - தேமாங்காய்.

  1. மூன்று அசைகளும் நிரை அசைகளாய் இருத்தல்.

புனற்குறுவிடாய் - புனற் - குறு - விடாய் - நிரை,நிரை,நிரை – கருவிளங்கனி

  1. முதலிரண்டும் நேரசைகளாகவும், ஈற்றசை நிரையசையாகவும் இருக்கும்.

நீள்வான்சுடர் - நீள் - வான் - சுடர் - நேர்,நேர்,நிரை – தேமாங்கனி

  1. முதலலிரண்டு அசைகள் நிரையசையாகவும் ஈற்றசை நேரசையாகவும் இருக்கலாம்.

மணங்கமழ்பூ, மணங் - கமழ்  - பூ - நிரை,நிரை,நேர் - கருவிளங்காய்.

  1. முதலசை நேராகவும் மற்ற இரண்டும் நிரையாகவும் வருவது

ஆயிழையொளிர், ஆ – யிழை - யொளிர் - நேர்,நிரை,நிரை - கூவிளங்கனி

  1. முதலசை நேராகவும் மற்ற இரண்டும் நிரையாகவும் வருவது

மகனேகாண், மக – னே - காண் - நிரை,நேர்,நேர் – புளிமாங்காய்

  1. முதலசையும் ஈற்றசையும் நிரை, இடையசை நேராக வருவதை,

கலைவெண்மதி  கலை - வெண் - மதி – புளிமாங்கனி என வகைப்படுத்தப்படுகிறது.

  1. முதலசையும் ஈற்றசையும் நேரசையாகவும் இடையசை மட்டும் நிரையசையாக அமைவதை, கண்படுமோ, கண் - படு - மோ – நேர்,நிரை,நேர் - கூவிளங்கனியாகும்.

இயற்சீர் நான்கினுடன் நேரசை தனித்தனியாக சேர்வதால் நான்கும், நிரையசை தனித்தனியாக சேர்வதால் நான்குமாக மூவசைச்சீர் எட்டு வகைகளாக வகைமைப்படுத்தப்பட்டுள்ளன. மேலும்,

தேமா, புளிமா, கூவிளம், கருவிளம் என்னும் இயற்சீர் வாய்பாடுகளுடன், காய்,கனி என்ற சொற்களைச் சேர்த்துக் கொள்வதே உரிச்சீர் என்னும் மூவசைச்சீருக்கான வாய்ப்பாடு,

இயற்சீர்                                                                               உரிச்சீர்

நேர்,நேர்       -          தேமா                                    நேர்,நேர்,நேர்          -           தேமாங்காய்

நிரை,நிரை  -          கருவிளம்                             நிரை,நிரை,நேர்    -             கருவிளங்காய்

நிரை,நேர்    -          புளிமா                                  நிரை,நேர்,நிரை     -             புளிமாங்காய்

நேர்,நிரை    -           கூவிளம்                                நேர்,நிரை,நேர்        -             கூவிளங்காய்

நேர், நேர்      -           தேமா                                    நேர்,நேர்,நிரை       -           தேமாங்கனி

நிரை,நிரை  -          கருவிளம்                            நிரை,நிரை,நிரை -            கருவிளங்கனி

நிரை,நேர்    -           புளிமா                                  நிரை,நேர்,நிரை     -             புளிமாங்கனி

நேர், நிரை   -           கூவிளம்                                நேர். நிரை,நிரை   -           கூவிளங்கனி

கீழக்;காணும் மாணிக்கவாசகர் பாடிய திருச்சிற்றம்பலக் கோவை செய்யுளொன்றை உதாரணமாக எடுத்துக்கொண்டு அவை எவ்வாறு சீர்பிரிக்கப்பட்டுள்ளன என்று அறிவதால் யாப்பிலக்கணப்பயிற்சி எளிமையாகவும் பிழையில்லாமலும் அமைவதற்குப் பயன்படுவதை அறியலாம்.

பனித்துண்டஞ்       -           சீர் முதல் ‘ப’ என்பது குறில். தனிக்குறில் சீரின் முதலில்

ஓரசையாகாது. அதை அடுத்துள்ள ‘னித்’ என்ற எழுத்துக்களைச் சேர்த்துக்கொண்டு ‘பனித்’ என்பதை முதலசையாகக் கொள்ளவேண்டும். இது நிரையசை. பிறகு ‘து’ என்ற எழுத்துடன் ‘ண்’ என்ற மெய்யைச்  சேர்த்து ‘துண்’ என்பது இரண்டாவது அசையாகும். அது நேரசை. அதை  அடுத்து நிற்கும் ‘டஞ்’ நேரசையாகும். இச்சீர் ஒரு நிரையசையும் இரண்டு நேரசைகளையும் கொண்டது பணித், தண்,டஞ் (நிரை,நேர்,நேர்) புளிமாங்காய் மூவசைச்சீராகம்.

சூடும்                        -           சீர்முதல் ‘சூ’ என்பது நெடில் தனிநெடில் ஓரசையாகும்.

அதை அடுத்து நிற்கும் ‘டும்’ ஓரசை சூடும் (நேர்,நேர்) தேமா - ஈரசைச்சீர்.

படர்சடை                 -           படர் - சடை (நிரை,நிரை) கருவிளம் - ஈரசைச்சீர்

யம்பல                      -           யம் - பல (நேர்,நிரை) கூவிளம் - ஈரசைச்சீர்

வன்னுலகந்              -           வன்-னுல-கந் (நேர்,நிரை,நேர்) கூவிளங்காய் –

மூவசைச்சீர்

தனித்தூண்             -           தணித் - துண் (நிரை,நேர்) புளிமா      - ஈரசைச்சீர்

டவன்றெழுந்           -           டவன்-றெழுந்- (நிரை,நிரை) கருவிளம் - ஈரசைச்சீர்

தாளோன்                 -           தா-ளோன் (நேர்,நேர்) தேமா - ஈரசைச்சீர்

கயிலைப்                 -           கயி – லைப் (நிரை, நேர்) புளிமா -  ஈரசைச்சீர்

பயில் சிலம்பா       -           பயில்-சிலம்-பா (நிரை,நிரை,நேர்) கருவிளங்காய்  –

மூவசைச்சீர்

கனித்தொண்டை  -           கனித்-தொண்-டை (நிரை,நேர்,நேர்) புளிமாங்காய் –

மூவசைச்சீர்

வாய்ச்சி                   -           வாய்ச்-சி (நேர்,நேர்)தேமா- ஈரசைச்சீர்

கதிர்முலைப்           -           கதிர்-முலைப் (நிரை,நிரை) கருவிளம் - ஈரசைச்சீர்

பாரிப்புக்                  -           பா-ரிப்-புக் (நேர்,நேர்,நேர்) தேமாங்காய் - மூவசைச்சீர்

கண்டழிவுற்             -           கண்-டழி-வுற் (நேரர்,நிரை,நேர்) கூவிளங்காய் –

மூவசைச்சீர்

றினிக்கண்              -           றினிக்-கண் (நிரை,நேர்) புளிமா - ஈரசைச்சீர்

டிலம்பற்றுச்            -           டிலம்-பற்-றுச் (நிரை,நேர்,நேர்) புளிமாங்காய் –

மூவசைச்சீர்

சிற்றிடைக்              -           சிற்-றிடைக் (நேர்,நிரை) கூவிளம்  -  ஈரசைச்சீர்

கென்றஞ்சு              -           கென்-றஞ்-சு (நேர்,நேர்,நேர்) சீரின் இறுதியில் தனிக்குறில்

நேரசையாக  நிற்கும். தேமாங்காய் - மூவசைச்சீர்

மெம்மனையே       -           மெம்-மனை-யே (நேர்,நிரை,நேர்) கூவிளங்காய் –

மூவசைச்சீர்

            இச்செய்யுளில் நிரையசையை ஈற்றியலுடைய முச்சீர்கள் வரவில்லை. அதாவது, தேமாங்கனி, புளிமாங்கனி, கருவிளங்கனி, கூவிளங்கனி என்ற வாய்பாடுடைய நால்வகையான முச்சீர்களும் இச்செய்யுளில் வரவில்லை. இவை தவிர மற்றவை இச்செய்யுளில் வந்திருப்பதை நன்கறியலாம். மேலும், உரிச்சீர், நேர்ஈற்று உரிச்சீர் என்றும், நிரைஈற்று உரிச்சீர் என்றும் இருவகைப்படும். தேமாங்காய், புளிமாங்காய், கருவிளங்காய், கூவிளங்காய் என நேரசையால் முடிகின்ற  நான்கு சீர்களும் நேர் ஈற்று உரிச்சீர் இதை வெண்பா உரிச்சீர் என்றும் அழைப்பர்.

            தேமாங்கனி, கருவிளங்கனி, கூவிளங்கனி, புளிமாங்கனி என நிரை அசையால் முடிகின்ற நான்கு சீர்களும் நிரை ஈற்று உரிச்சீர். இதை வஞ்சியுரிச்சீர் என்றும் அழைப்பர்.

            நேரசையை ஈற்றிலுடைய வெண்பா உரிச்சீரை, வெண்சீர் என்றும், காய்ச்சீர் என்றும் வழங்குவர் இலக்கண அறிஞர்.

            நேரசையை ஈற்றிலுடைய வெண்சீர்கள் (மூவசைச்சீர்கள்) வெண்பாவிற்குரியவை. நிரையசையை ஈற்றிலுடைய மூவசைச்சீர்கள்  வெண்பாவில் இடம்பெறாது. எனவே தான் வெண்பாவிற்கு உரியவான நேரீற்று மூவசைச் சீர்களை வெண்பா உரிச்சீர்  என்று அழைப்பர். வெண்பா உரிச்சீர் என்பது குறுகி ‘வெண்சீர்’ ஆயிற்று இவைகளுக்குரிய வாய்பாடு காய் என முடிவதால், காய்ச்சீர் என்று அழைப்பதும் பொருத்தமாகும். காய்ச்சீர் எல்லாம் மூவசைச்சீர் என்றழைக்கப்படுவதே பொருத்தமுடையதாகும்.

            இயற்சீரான, தேமா, புளிமாச்சீர்களை ‘மாச்சீர்’ என்றும், கருவிளம், கூவிளச்சீர்களை ‘விளச்சீர்’ என்று அழைப்பர்.

            நிரையசையை ஈற்றிலுடைய மூவசைச்சீர்களைப் பார்ப்போம். நிரையீற்று மூவசைச்சீர்கள் வஞ்சிப்பாவிற்குரியவை. எனவே. அவற்றை ‘வஞ்சியுரிச்சீர்’ என்று அழைப்பர். கனிச்சீர் என்றும் குறிப்பிடுவதுண்டு. கனிச்சீர் எல்லாம் நிரையை ஈற்றிலுடைய  மூவசைச்சீர்களேயாகும்.

            கனிச்சீர் எனப்படும் வஞ்சியுரிச்சீர்கள் வரும் செய்யுளைச் சான்றுக்காகக் காண்போம்.

            இயற்சீர் எனப்படும் ஈரசைச்சீர் ஆசிரியப்பா என்னும் பாவிற்குப் பெரும்பாலும் உரியவை. அவைகளை ஆசிரியச்சீர், ஆசிரியவுரிச்சீர் என்று அழைப்பது வழக்கமாகும்.

நீற்றானிறை           –          நீற்-றா-னிறை - மூவசைச்சீர் (நேர்,நேர்,நிரை)  

தேமாங்கனி . வஞ்சியுரிச்சீர்   எனப்படும் கனிச்சீராகும்.

வாகிய                      –          வா-கிய - ஈரசைச்சீர் (நேர்,நிரை) கூவிளம் இயற்சீர்

                                                எனப்படும்   ஆசிரியவுரிச்சீர்.

மேனியுட                 –          மே-னியு-ட - மூவசைச்சீர் (நேர்,நிரை,நேர்) கூவிளங்காய்

வெண்பாவுரிச்சீர்    எனப்படும்.

னிறையன்பு           –          னிறை-யன்-புறு - மூவகைச்சீர் (நிரை,நேர்.நிரை)

புளிமாங்கனி  வஞ்சியுரிச்சீர் எனப்படும் கனிச்சீர்.

சிந்தையி                 –          சிந்-தையி - ஈரசைச்சீர் (நேர்,நிரை) கூவிளம் இயற்சீர்

            எனப்படும்   ஆசிரியவுரிச்சீர் என்றும் வழங்கப்படும்.

னேசமிக                   -           னே-சமி-க மூவசைச்சீர் (நேர்,நிரை,நேர்) கூவிளங்காய்,

வெண்பாவுரிச்சீர்  எனப்படும் காய்ச்சீர்.

மாற்றார்புர            -           மாற்-றார் - புர மூவசைச்சீர் (நேர்,நேர்,நிரை) தேமாங்கனி,

வஞ்சியுரிச்சீர்  என்னும் கனிச்சீர்.

மாற்றிய                   -           மாற்-றிய - ஈரசைச்சீர் (நேர்,நிரை) கூவிளம் இயற்சீர்

அல்லது  ஆசிரியவுரிச்சீர் எனப்படும் விளச்சீர்.

வேதியரை               -           வே-தி-ரை - மூவசைச்சீர் (நேர்,நிரை,நேர்) மூவிளங்காய்,

வெண்பாவுரிச்சீர்  எனப்படும் விளச்சீர்.

மருளும்பிணி          -           மரு-ளும்-பிணி - மூவசைச்சீர் (நிரை,நேர்,நிரை)

புளிமாங்கனி,  வஞ்சியுரிச்சீர் எனப்படும் கனிச்சீர்.

மாயை                      -           மா-யை - ஈரசைச்சீர் (நேர்.நேர்) தேமா ஆசிரியவுரிச்சீர்

எனப்படும் மாச்சீர்.

யறுத்திடுவோன்   -           யறுத்-திடு-வோன் - மூவசைச்சீர் (நிரை,நிரை,நேர்)

கருவிளங்காய்   வெண்பாவுரிச்சீர் எனப்படும் காய்ச்சீர். நாலசைச்சீர்

            முற்கூறிய நிலையில் ஓரசை, ஈரசை, மூவசைச்சீர்களைப் பார்த்தோம். இனி பொதுச்சீர் என்று அழைக்கப்படும் சிறப்பில்  நாலசைச் சீர்களைப் பற்றி விளக்கமாக அறிவோம்.

            நான்கசைகலான சீரும் அபூர்வமாய் செய்யுள்களில் வருவதுண்டு. நாலசைச்சீர் சிறப்புடையதாக அறிஞர் பெருமக்கள் கருதுவதில்லை. இதைப் பொதுச்சீர் என்று வழங்குவர். சிறப்பில்லா மக்களைப் பொதுஜனங்கள் என்பதுபோல், சிறப்பிலா இச்சீரையும் ஆன்றோர் பொதுச்சீர் என பெயரிட்டழைத்தனர்.

            இரண்டசைகளைக் கொண்டது இயற்சீர் இரண்டு இயற்சீர் ஒன்று சேர்ந்து ஒரு நாலசைச்சீர் ஆவதாகக் கொள்ளலாம். அல்லது மூன்று அசைகளை உடைய உரிச்சீரோடு நேரும் நிரையும் சேர்ந்து பொதுச்சீர் பிறந்ததாகவும் கருதலாம்.

            இப்பொதுச்சீர்கள் செய்யுளில் பெரும்பாலும் இடம்பெறுவதில்லை. ஆனால் வஞ்சிப்பாவில் இவை இடம்பெறக் காணலாம். பொதுச்சீரின் வகைகளும் அவற்றின் வாய்பாடுகளையும் கீழே காண்போம்.

 

  1. நேர்-நேர்-நேர்-நேர்                       
  2. நேர்-நேர்-நிரை-நேர்                    
  3. நேர்-நிரை-நேர்-நேர்                    
  4. நேர்-நிரை-நிரை-நேர்                 
  5. நிரை-நேர்-நேர்-நேர்                    
  6. நிரை-நிரை-நிரை-நேர்              
  7. நிரை-நிரை-நேர்-நேர்                 
  8. நிரை-நேர்-நிரை-நேர்     

 

என நேரிசையை ஈற்றில் பெற்ற எட்டுவகைப்  பொதுச்சீர்கள்

 

  1. நிரை-நிரை-நிரை-நிரை
  2. நிரை-நிரை-நேர்-நிரை
  3. நிரை-நேர்-நிரை-நிரை
  4. நிரை-நேர்-நேர்-நிரை
  5. நேர்-நிரை-நிரை-நிரை
  6. நேர்-நேர்-நேர்-நிரை
  7. நேர்-நேர்-நிரை-நிரை
  8. நேர்-நிரை-நேர்-நிரை

 

என நிரையசையை ஈற்றில் பெற்ற எட்டுவகைப் பொதுச்சீர்கள்

 

 

            நாலசைகளைக் கொண்ட பொதுச்சீர்கள் பதினாறு வகைகளில் அமையலாகின்றன.

            இயற்சீர் நான்கினோடு, நேர்,நேர் தொடரைத் தண்பூ என்றும், நேர்.நிரை தொடரைத் தண்ணிழல் என்றும், நிரைநேர் தொடரை நறும்பூ என்றும், நிரை,நிரை தொடரை நறுநிழல் என்றும் சேர்த்து கொள்ளலே, பொதுச்சீருக்குரிய வாய்பாடாகும். அதனை,

  • அங்கண்ஞாலம் (அங்-கண்-ஞா-லம்) நேர்,நேர்,நேர்,நேர்              - தேமாந்தண்பூ
  • கள்வார்குழலாய் (கள்-வார்-குழ-லாய்) நேர்,நேர்,நிரை,நேர்       - தேமாநறும்பூ
  • வெங்களியானை (வெங்-களி-யா-னை) நேர்,நிரை,நேர்,நேர்     -  கூவிளந்தண்பூ
  • கொங்கவிரசோகின் (கொங்-கவி-ரசோ-கின்) நேர்,நிரை,நிரை,நேர்        - கூவிளநறும்பூ
  • வடிவார் கூந்தல் (வடி-வார்-கூந்-தல்) நிரை,நேர்,நேர்,நேர் - புளிமாந்தண்பூ
  • முழுமதிபுரையும் (முழு-மதி-புரை-யும்) நிரை,நிரை,நிரை,நேர்- கருவிளநறும்பூ
  • எழில்மிகுபவாய் (எழில்-மிகு-பா-வாய்) நிரை,நிரை,நேர்,நேர்- கருவிளந்தண்பூ
  • செழுநீர்ப்பவளம் (செழு-நீர்ப்-பவ-ளம்) நிரை,நேர்,நிரை,நேர்    - புளிமாநறும்பூ

இவை எட்டும் நேரசையை ஈற்றியலுடைய பொதுச்சீர்கள் இவற்றைப் பூச்சீர்கள் என்று வழங்குவர். மேலும்,

  • கொதிதிரையெறிகடல் (கொதி-திரை-யெறி-கடல்) நிரை,நிரை,நிரை,நிரை - கருவிளநறுநிழல்
  • கலைபல கற்றவர் (கலை-பல-கற்-றவர்) நிரை,நிரை,நேர்,நிரை - கருவிளந்தண்ணிழல்
  • மதியோவிதுவென (மதி-யோ-விது-வென) நிரை,நேர்,நிரை,நிரை - புளிமாநறுநிழல்
  • கயல்போற்கண்ணினை (கயல்-போற்-கண்-யினை) நிரை,நேர்,நேர்,நிரை        - புளிமாந்தண்ணிழல்
  • பொன்புனைநெடுமதில் (பொன்-புனை-நெடு-மதில்) நேர்,நிரை,நிரை,நிரை - கூவிளநறுநிழல்
  • வெங்கண்வினைப்பயன் (வெங்-கண்-வினைப்-பயன்) நேர்,நேர்,நிரை,நிரை - தேமாநறுநிழல்
  • நீள்வான்செல்மதி (நீள்-வான்-செல்-மதி) நேர்,நேர்,நேர்,நிரை    - தேமாந்தண்ணிழல்
  • அந்தரதுந்துபி (அந்-தர-துந்-துபி) நேர்,நிரை,நேர்,நிரை    - கூவிளந்தண்ணிழல்

மேற்கூறிய சான்றுகளால் நிறுவலாம்.

தொகுப்புரை

          செய்யுள் உறுப்புகளான எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை ஆகிய ஆறு உறுப்புகளில் சீரின் இன்றியமையாமையை விளக்கமுடிகிறது.

          அசைகளால் ஆவது சீர். சீர்களின் வகைகள் தக்க சான்றுகளுடன் விளக்கப்பட்டுள்ளது.

          இரண்டு அசைகளால் அமைந்தசீர் ஈரசைச்சீர் இதை இயற்சீர் என்பர். ஆசிரியச்சீர் அல்லது ஆசிரிய உரிச்சீர் என்றும் அழைக்கப்படும் மரபு விளக்கப்பட்டுள்ளது.

          யாப்பிலக்கண நூல்களான தொல்காப்பியம், யாப்பருங்கலம், யாப்பருங்கலக்காரிகை, வீரசோழியம், யாப்பதிகாரம் முதலிய நூல்களின் பயன்களையும் பெயர்ப்பாட்டியலுடன் அறிந்துகொள்ள வகைப்படுத்தப்பட்டுள்ளது.

முடிவுரை

            செய்யுள் உறுப்புகளான எழுத்து. அசை, சீர், தளை, அடி, தொடை ஆகிய ஆறு உறுப்புகளும் செய்யுளுக்கு இன்றியமையாததாகும். இவற்றில் சீர் யாப்பிலக்கணப் பயன்பாட்டிற்கு இன்றியமையாத கருவியாக விளங்குவதை அறியமுடிகிறது. ‘சீர்’ பற்றிய இக்கட்டுரையின் பயனால் புதிதாக யாப்பிலக்கணப் பயிற்சி பெறுபவர்களுக்கு மிக்க பயன் விளைவிப்பதாகவும், அதுவே இக்கட்டுரையின் நோக்கத்தை நிறைவுசெய்வதாகவும் அமையும்.

அடிக்குறிப்புகள்

  1. ச.வே.சுப்பிரமணியன், தொல்காப்பியம், பொருளதிகாரம், உரைவளக்கோவை (செய்யுளியல்) மெய்யப்பன் பதிப்பகம், சிதம்பரம், முதற்பதிப்பு, 2009, ப.74.
  2. மேலது., ப.282.
  3. மேலது., ப.282
  4. புலர் குழந்தை, யாப்பதிகாரம், பாரிநிலையம், சென்னை, ஆறாம்பதிப்பு,199.ப.1
  5. ஞா. மாணிக்கவாசன், திருக்குறள் தெளிவுரை, உமாபதிப்பகம், சென்னை, எட்டாம் பதிப்பு, 2002, ப.89.
  6. மேலது, ப.108.
  7. கே. இராஜகோபாலச்சாரியார், இலக்கணவிளக்கம் (யாப்பியல்), ஸ்டார் பிரசுரம் சென்னை, முதற்பதிப்பு, 1963.ப.31.