ஜூலை 2024 இதழுக்கு ஆய்வுக்கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன

தமிழ்  மரபில் அறம் குறித்த பதிவுகள் (Records of virtue in the Tamil tradition)

முனைவர்.பா.சங்கரேஸ்வரி உதவிப் பேராசிரியர், தமிழியற்புலம், மதுரை காமராசர் பல்கலைக்கழகம், மதுரை - 21. 09 Nov 2021 Read Full PDF

 ஆய்வுச் சாரம்

       ஆதி மக்களுடைய வாழ்க்கையில் துல்லியமான அறப்பண்புகளைக் காண முடியாது. அறிவு முதிர்ச்சியும், சீர்தூக்கிப் பார்க்கும் மனப்பான்மையையும் அறவுணர்வின் முக்கியக் கூறுகள். இவை இவர்களிடம் இல்லை. அறத்தின் வித்துக்கள் சில காணப்படுகின்றன. குலக்கட்டுப்பாட்டுக்கும்,  தண்டனைக்கும் பயந்து காரியங்கள் செய்யப்பட்டு வந்தன. (கலைக் களஞ்சியம் தொகுதி ஒன்று ப.123). எனவே மனித குலத்திற்குரிய சிறப்புக் குணமாய் விளங்குவது அறம் என்பதும், இதன் மூலம் மனித குலத்திற்கான தத்துவங்கள் மனித வரலாற்றில் தோன்றின என்பதும் கருதத்தக்கது. தமிழ்  மரபில் அகம் - புறம் என்கிற கட்டமைப்பில் தனித்துவமான அறம் காணப்படுகின்றது. தமிழ்  மரபில் அறம் குறித்த பதிவுகளை காண்பது இவ்வாய்வின் நோக்கமாகும்.

கருச்சொற்கள்

               அறம் - மனித வாழ்வு – அறம் சார் பதிவுகள் - அறநெறிகள் - வளர்ச்சி

– உயர்நிலை – அற மரபு).

Abstract

    Precise virtues cannot be found in the lives of primitives. Maturity of knowledge and an attitude of reconciliation are important elements of charity. They do not have these. Some of the seeds of virtue are found. Things were done for fear of genocide and punishment. (Kalai kalanchiyam Volume One p.123). It is therefore conceivable that virtue is the special quality of mankind, and thus philosophies for mankind have appeared in human history. In the Tamil tradition, there is a unique virtue in the structure of internal and external. The purpose of this study is to find records of virtue in the Tamil tradition.

Keywords

         Virtue - Human Life - Virtual Posts - Morals - Development    - High - Charitable Legacy

முன்னுரை

               “அறவாழ்க்கையின் வரலாறும், மனித வாழ்க்கையின் வரலாறும் ஒன்றே” (கலைக்களஞ்சியம் தொகுதி ஒன்று ப.58) என்கிறது. மனித வாழ்க்கையில் நிகழ்ந்த மாற்றங்களுக்கும் முன்றேறங்களுக்கும் ஏற்ப அறநெறிகளின் போக்குகள் வளர்ச்சி அடைந்துள்ளன. தொடக்கக் காலத்தில் கூட்டமாகச் சேர்ந்து வாழ்ந்த மனிதன் முரட்டுக் குணத்தை அடக்கி, நல்ல பழக்க வழக்கங்களைப் பின்பற்றி ஒழுகுபவனாக மாறினான். இதுவே மனிதனின் முன்னேற்றத்திற்கான முதல் படியாக அமைந்தது. இப்பண்பு மனிதனுடைய அறிவையும், துணிவையும், குறிக்கோளையும் மேம்படுத்தியதோடு அறவாழ்க்கையின் உயர்நிலையான சமூக அமைப்பிற்கு வித்திட்டது. அறத்திற்கு வித்திட்டவர்கள் தமி;ழர்கள் என்பதைத் தரவுகளின் அடிப்படையில் காணலாம். 

ஆய்வு பின்னனி

               தமிழ் மரபில் உள்ள அற மரபானது வடமொழி மரபை உட்செரித்து உருவானவை என்கிறார் ராஜ் கௌதமன். “ பழைய பாணர் மரபின் அகம் - புறம் என்ற பொருள் மரபின் சட்டகத்துக்குள் வடமரபின் தர்மம் (அறம்), அர்த்தம் (பொரள்), காமியம், (இன்பம்) என்னும் உறுதிப்பொருட்களைப் புலவர் மரபு உட்செறிக்க முறையே பிராமணர், சத்திரியர், பிறர் (வைசிய சூத்திர) ஆகிய வருணங்களோடு இணைத்துப் பார்க்கத்தக்கவையாக இருக்க, தமிழின் புலவர் மரபில் அவ்வாறாகக் காணப்படவில்லை. மூன்றிலும் அறம் சிறந்ததது; அடுத்தது பொருள் இறுதியில் இன்பம் என்ற படிமுறையைப் புலவர் மரபு உள்ளவாறே பின்பற்றியுள்ளது” (தமிழ்சமூகத்தில் அறமும் ஆற்றலும் ப.29) வடமொழி மரபின் திரிவாக்கம் தமிழில் அறம், பொருள், இன்பம் என்று பயன்படுத்தப்பட்டது என்pறார் ராஜ் கௌதமன். எனினும் தமிழ் மரபில் அகம் - புறம் என்கிற கட்டமைப்பில் தனித்துவமான அறம் காணப்படுகின்றது. அகத்தில் இன்ப அறமும் உள்ளார்ந்து காணப்படுகின்றன. இவ்வகை புற மரபுகளே தமிழ் அற மரபின் உருவாக்கத்திற்கு வித்திட்டன எனலாம்.

ஆய்வு முன்னோடிகள்

               ‘அறம்’ குறித்த ஆய்வுகள் பல உள்ளன. இரணியன் அவர்களின் சங்க அலக்கியத்தில் சமூக அறம்” என்னும் நூலானது, சங்ககாலச் சமூகத்தில் நிலவிய அறக்கூறுகளை எடுத்தியம்புகிறது. மேலும், தமிழ் இலக்கியங்களில் அறம், நீதி, முறைமை” என்னும் தலைப்பின் கீழ் வெளியான நூலானது, ‘அறம்’ குறித்த சிறந்த பொருள்களை தெளிவாக விவரிக்கிறது.

ஆய்வு நெறிமுறைகள்

               இவ்வாய்வுக்கான தரவுகள் உற்றுநோக்கல், நூலக ஆய்வு ஆகிய அணுகுமுறைகளால் பெறப்பட்டன. ஆய்வாளர் மாணவர்களின் எழுத்துப் படைப்புகளை உற்று நோக்குதல் மூலம் தரவுகளைச் சேகரித்துள்ளார். மேலும், நூலக ஆய்வுக்கு ஏற்ற புத்தகங்கள், ஆய்வுக் கட்டுரைகள், கல்விச்சார்ந்த ஆவணங்கள் ஆகியவை பயன்படுத்தப்பட்டு விளக்கமுறை அணுகுமுறையில் இவ்வாய்வு எழுதப்பட்டுள்ளது.

ஆய்வுத் தரவுகள் பகுப்பாய்வு

               ஆய்வுத் தரவுகளில் தொல்காப்பியத்தில் அறம் சார் பதிவுகள், எட்டுத்தொகை பத்துப்பாட்டில் அறம் குறித்த பதிவுகள், ஆகியவை விளக்கப்பட்டுள்ளன.

அறம் குறித்த பதிவுகள் - தொல்காப்பியம்

               மனித வாழ்க்கையின் பல்வேறு இயல்புகளையும் உலகப் பொருள்களையும் நுட்பமாக ஆராய்ந்த புலவர் இவற்றை இரண்டு வகையாகப் பகுத்துள்ளனர். 1.அகம், 2.புறம். அகம் என்பது ஒருவனும் ஒருத்தியும் தம் உள்ளத்தால் உணரக்கூடிய உணர்வும், அதன் பயனாகிய இன்ப அனுபவமுமாகும். புறம் என்பது புறத்தார்க்குப் புலனாகக்கூடிய அறஞ்செய்தலும், மறஞ் செய்தலும், அவற்றின் பயனுமாகும். இப்பாகுபாட்டினை அடைப்படையாகக் கொண்டே தமிழின் இலக்கியங்கள் படைக்கப்பட்டுள்ளன.

தமிழ்மொழியில் இன்று கிடைக்கக்கூடிய இலக்கண நூல்களுள் தொன்மையானது தொல்காப்பியம். இத்தொல்காப்பியத்தில் அறத்தினைப் பேசுகின்ற பல செய்திகள் இடம்பெற்றுள்ளன. தொல்காப்பியர் காலத்திற்கு முன்பே அறத்தைப் பேசும் பல நூல்கள் தோன்றியிருக்க வேண்டும். இதைக் குறித்துக் க.த.திருநாவுக்கரசு, “அறத்தை அடிப்படையாகக் கொண்டு இயற்றப்பட்ட அறநூல்கள் பல தொல்காப்பியர் காலத்திற்கு முன்பே தமிழில் இயற்றப்பட்டு இருந்தன. அவற்றை முதுமொழி, வாயுறை வாழ்த்து, செவியறிவுறூஉ என்று அறிஞர்கள் பாகுபாடு செய்திருந்தனர் என்பதைத் தொல்காப்பியம் உணர்த்துகிறது …. தனி மனிதனின் ஒழுகலாற்று நெறிகளையும், அவன் சமுதாயத்தில் ஒழுக வேண்டிய முறைகளையும், தொல்காப்பியத்தின் புறத்திணை இயலில் வாகைத் திணையிலும் காஞ்சித் திணையிலும் விரிவாக ஆசிரியர் தொல்காப்பியனார் விளக்கியுள்ளார். ~கட்டமை ஒழுக்கத்துக் கண்ணுமை| (தொல்.பொருள்.75) என்ற தொடரின் மூலம் அன்றைய தமிழர்கள் போற்றிய ஒழுக்க நெறியின் சிறப்புகளைத் தொல்காப்பியனார் அறிவுறுத்துகிறார்" (க.த.திருநாவுக்காரசு, திருக்குறள் நீதி இலக்கியம், பக். 330, 331). இதுமட்டுமல்லாமல் அறத்தின் இயல்பையும் அது மக்கள் வாழ்க்கையில் பெற்றிருக்கக் கூடிய சிறப்பான இடத்தையும் குறித்துத் தமது நூற்பாக்களின் பல இடங்களில் தொல்காப்பியர் வெளிப்படுத்தியுள்ளார்.

இன்பமும் பொருளும் அறனும் என்றாங்கு

அன்பொடு புணர்ந்த ஐந்திணை மருங்கின்                  (தொல்.நூ.1038)

அன்பே அறனே இன்பம் நாணொடு                                  (தொல்.நூ.1161)

அந்நிலை மருங்கின் அறமுதலாகிய

மும்முதற் பொருட்கும் உரியஎன்ப                                 (தொல்.நூ.1361)

அறம்புரி நெஞ்சமொடு                                                               (தொல்.நூ.1093)

அறம்புரி சுற்றமொடு கிழவனும் கிழத்தியும்  (தொல்.நூ.1138)

என்னும் தொல்காப்பிய நூற்பாத் தொடர்கள் அறத்தின் சிறப்பினைத் தெளிவுறுத்துகின்றன.

எட்டுத்தொகை, பத்துப்பாட்டில் அறம் குறித்த பதிவுகள்

               தொகைநூல்களான எட்டுத்தொகை, பத்துப்பாட்டில் அறநெறிக் கருத்துகள் பல அழகாகவும், நுட்பமாகவும் பதிவுசெய்யப்பட்டுள்ளன. எட்டுத்தொகையுள் ஒன்றான புறநானூற்றின் பல பாடல்கள் அறத்தை உணர்த்துவனவாக அமைந்துள்ளன. குறிப்பாகப் பாடாண் திணையில் ~செவியறிவுறூஉ| துறையிலான பாடல்களிலும், காஞ்சித்திணையில் ~பொருண்மொழிக்காஞ்சி|, ~பெருங்காஞ்சி|, ~முதுமொழிக்காஞ்சி| என்னும் துறைகளில் அமைந்த பாடல்களிலும் அறநெறிக் கருத்துக்கள் இடம்பெற்றுள்ளன. பத்துப்பாட்டில் இல்லறத்தார்க்கும், துறவறத்தார்க்கும், அரசர்க்கும் உரிய வகையிலான அறக்கருத்துகள் நூலின் இடையிடையே இடம்பெற்றுள்ளன.

               தொல்காப்பியர் செவியுறூஉ என்பதனை,

               செவியுறை தானே

               பொங்குதல் இன்றிப் புரையோர் நாப்பண்

அவிதல் கடன்எனச் செவியுறுத் தன்றே.                        

               (தொல்.1371)

இதற்கு உரையெழுதிய இளம்பூரணர், “செவியுறையாவது பெரியோர் நடுவு வெகுடலின்றித் தாழ்ந்தொழுகுதல் கடன் என்று செவியறிவுறுத்தல்"  என்று பொருள் கூறியுள்ளார். இக்கருத்தினை வலியுறுத்தும் வகையில் பாண்டியன் அறிவுடை நம்பிக்குப் புலவர் பிசிராந்தையார் வரி வாங்குதல் குறித்துக் கூறிய அறிவுரையினை இத்துறையில் அமைந்த பாடலுக்குச் சிறந்த சான்றாகக் கொள்ளலாம். அப்பாடல் வருமாறு:

               காய்நெல் அறுத்துக் கவளங் கொளினே

               மனநிறை வில்லதும் பன்னாட் காகும்

               நூறுசெறு வாயினுந் தமித்துப்புக் குணினே

               வாய்புகு வதனினுங் கால்பெரிது கெடுக்கும்

               அறிவுடை வேந்த னெறியறிந்து கொளினே

               கோடி யாத்து நாடுபெரிது நந்தும்

               மெல்லியன் கிழவ னாகி வைகலும்

               வரிசை யறியாக் கல்லென் சுற்றமொடு

               பரிவுதப வெடுக்கும் பிண்ட நச்சின்

               யானை புக்க புலம்போலத்

               தானு முண்ணா னுலகமுங் கெடுமே.                (புறநானூறு. 184)

இப்பாடல் அறிவுத்திறனில்லா அரசனுடைய நெறியற்ற செயலால், அவனும் உண்ணாமல் உலகமும் கெடுவதற்கு இடமுண்டாகி விடுகிறது| என்ற கருத்தை அறிவுறுத்தும் வகையில் பிசிராந்தையாரால் பாடப்பட்டுள்ளது. அரசன் குடிமக்கள் தாங்கும் அளவிற்கு மேலாக வரி விதிக்காது, முறையான அளவிலேயே பகுதிப் பொருளை வாங்குதல் வேண்டும், இதை அன்போடும் பண்போடும் பெறுதல் வேண்டும் எனப் பாண்டியன் நெடுஞ்செழியனுக்குப் பிசிராந்தையார் அறிவுறுத்துகின்றார். இவ்வாறு எடுத்துரைக்கும் முறை பிசிராந்தையாரின் அறிவுத்திறத்தினையும், பண்பாட்டையும் புலப்படுத்தும் வகையில் செவியறிவுறூஉ துறைக்கேற்றாற் போல் இப்பாடலின் பொருள் அமைந்திருப்பது தனித்துச் சுட்டத்தக்கது. இத்துறையைச் சார்ந்தனவாகப் புறநானூற்றில் 2, 3, 5, 6, 35, 40, 55, 184 என்னும் எட்டுப் பாடல்கள் காணப்படுகின்றன.

               காஞ்சித்திணையில் முதலாவதாக இருப்பது பெருஞ்காஞ்சி. இதனைத் தொல்காப்பியர்,

               ~மாற்றருங் கூற்றஞ் சாற்றிய பெருமையும்|                (தொல்.பொருள்.79)

என்று குறிப்பிட்டுள்ளார், ஐயனாரிதனார் தமது புறப்பொருள்வெண்பா மாலையில்,

               மலையோங்கிய மாநிலத்து

               நிலையாமை நெறியுரைத்தன்                  (புறப்.வெ.மா.270)

என்று விளக்கியுள்ளார். இத்துறையின் உட்பொருள் வாழ்க்கை நிலையில்லாதது என்பதாகும். தொல்லாசிரியர்கள் இத்துறைக்குப் ~~பிறரால் தடுத்திற்கு அரிய கூற்றம் வருமெனச் சான்றோர்கள் அறிவுறுத்துவது" என்று பொருள் கூறியுள்ளனார். இத்துறையில் அமைந்தவையாக ஒன்பது பாடல்கள் புறநானூற்றில் (194, 357, 359, 360, 362, 363, 364, 365, 366) காணப்படுகின்றன. அவற்றுள் தலைச்சிறந்த பாடல் ஒன்று சான்றாக இங்கு எடுத்துக்காட்டப்படுகின்றது.

               பல்சான் றீரே! பல்சான் றீரே!

               கயல்முள் அன்ன நரைமுதிர் திரைகவுள்

               பயனில் மூப்பின் பல்சான் றீரே!

               கணிச்சிக் கூர்ம்படைக் கடுந்திறல் ஒருவன்

               பிணிக்குங் காலை, இரங்குவிர் மாதோ;

               நல்லது செய்தல் ஆற்றீ ராயினும்

               அல்லது செய்தல் ஓம்புமின்; அதுதான்

               எல்லாரும் உவப்பது; ஆன்றியும்

               நல்லாற்றுப் படூஉம் நெயிமா ரதுவே                   (புறநானூறு.195)

இப்பாடல் காலத்தை வீணாகக் கழித்துவிட்டவர்களை மெல்ல மெல்ல நற்செயல்களில் ஈடுபடுமாறு தூண்டும் வகையில் நரிவெரூஉத்தலையாரால் பாடப்பட்டுள்ளது. இப்பாடலின் மூலம் உணர்த்தும் அறமாவது யாதுஎனில், “வாழ்க்கை நிலையில்லாதது. எனவே, அவ்வாழ்க்கையை ஒருவன் நல்லனவற்றைச் செய்வதற்கும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்; நல்லனவற்றைச் செய்யாது வாழ்நாளை வீண்நாளாகக் கழித்து விட்டவர்கள் இனியாகிலும் நல்லவற்றைச் செய்ய முயல்க! இயலாவிட்டால் தீமைகளேனும் செய்யாமல் வாழ்வதற்கு முயல்க! அது அனைவருக்கும் மகிழ்ச்சியைக் கொடுக்கும். அவ்வாறு நடந்து கொள்ளுவீர்களானால், நாளடைவில் அது அறநெறியில் உங்களைக் கொண்டு செலுத்தும்" என்பதாகும்.

இவ்விழுமிpய அறக்கருத்துகள் அனைத்து மனிதனுடைய செம்மையான வாழ்க்கையை நெறிப்படுத்துவதற்குக் கூறப்பட்டவையாகும்.

               ~முதுமொழிக்காஞ்சி| என்பது ~இளமை நிலையாமையை| அறிவுறுத்துகிறது. இதைத் தொல்காப்பியர்,  

               கழிந்தோர் ஒழிந்தோர்க்குக் காட்டிய முதுமையும்| (தொல்.பொருள்.79)

என்று விளக்குகின்றார். இளமைத் தன்மை முடிந்து முதுமை நிலையை அடைந்தவர்கள், இளமைத் துடிப்புள்ள அறிவில்லா மக்களுக்கு முதுமையைக் காட்டி, இளமை என்பது நிலையில்லாதது என்று அறிவுறுத்துவதாகும். இத்துறையில் அமைந்த புறநானூற்றுப்பாடல்,

               இனிநினைத் திரக்க மாகின்று திணிமணற்

               செய்வுறு பாவைக்குக் கொய்பூத் தைஇத்

               தண்கய மாடு மகளிரொடு கைபிணைந்து

               தழுவுவழித் தழீஇத் தூங்குவழித் தூங்கி

               மறையென லறியா மாயமி லாயமொ

               டுயர்சினை மருதத் துறையுறத் தாழ்ந்து

               நீர்நணிப் படிகோ டேறிச் சீர்மிகக்

               கரையவர் மருளத் திரையகம் பிதிர

               நெடுநீர்க் குட்டத்துத் துடுமெனப் பாய்ந்து

               குளித்துமணற் கொண்ட கல்லா விளமை

               அறிதோ தானே யாண்டுண்டு கொல்லோ

               தொடித்தலை விழுத்தண் டூன்றி நடுக்குற்

               பெருமூ தாளரே மாகிய வெமக்கே.                                       (புறநானூறு. 243)

இப்பாடலின் வழித் தொடித்தலை விழுத்தண்டினார் இளமையானது நிலையில்லாதது என்பதை அழுத்தமுற வலியுறுத்துகின்றார்.

முதுகாஞ்சியோடு தொடர்புடையது முதுமொழிக்காஞ்சித் துறை. மக்கள் தம் வாழ்க்கையில் அடையவேண்டிய அறம், பொருள், இன்பமாகிய மூவகைப் பேறுகளையும் முறையாக எடுத்துக் கூறுவது முதுமொழிக்காஞ்சித் துறையாகும். இத்துறையை ஐயனாரிதனார்,

               மூதுரை பொருந்திய முதுமொழிக் காஞ்சி

               பலர்புகழ் புலவர் பன்னினர் தெரியும்   

               உலகியல் பொருள்முடி புணரக் கூறின்று.       (புறப்.வெ.மா.269)

என்று குறித்துள்ளார். “எல்லாரும் கொண்டாடும் அறிவுடையோர் குற்றம் நீக்கி ஆராயும் உலகியலுள் முடிந்த பொருளாகிய அறம்பொருளின்பத்தை அறியச் சொல்லுவது| என்பது இதற்குப் பொருளாகும். இத்துறையில் அமைந்தனவாகப் புறநானூற்றில் ஐந்து பாடல்கள் (18, 27, 28, 29, 74) உள்ளன.

               குழவி இறப்பினும் ஊன் தடி பிறப்பினும்

               ஆள்அன்று என்று வானில் தப்பார்

               தொடர்ப்படு ஞமலியின் இடர்ப்படுத்து இரீஇய

               கேளல்கேளிர் வேளாண் சிறுபதம்

               மதுகை இன்றி, வயிற்றுத்தீத் தணியத்

               தாம்இரந்து உண்ணும் அளவை

               ஈன்ம ரோவிவ் வுலகத்தானே                                                                  (புறநானூறு. 74)

சேரமான் கணைக்கால் இரும்பொருறை பாடிய இப்பாடல் அனைவரும் அறிந்த பாடலாகும்.

பொருண்மொழிக்காஞ்சி துறை என்பதற்குப் பண்டைய சான்றோர்கள், பொருளாவன அறம் பொருளின்பமும் அவற்றது நிலையின்மையும், அவற்றினீங்கிய வீடுபேறுமாம்| என்று விளக்கமளித்துள்ளனர்.  காஞ்சி என்பதற்கு நிலையாமை என்று பொருள். எனவே பொருண்மொழிக்காஞ்சி என்பதற்கு, உயிருக்கு இம்மை மறுமைகளில் உறுதி தருகின்ற பொருளைச் சான்றோர்கள் ஒருவனுக்கு கூறுதல் என்று பொருள். இதற்கு ஐயனாரிதனார்,

               எரிந்தி லங்கு சடைமுடி முனிவர்

               புரிந்து கண்ட பொருண்மொழிந் தன்று      (புறப்.வெ.மா.271)

என்று விளக்கமளித்துள்ளார்.

               பொருண்மொழிக்காஞ்சித் துறையைச் சார்ந்தனவாகப் புறநானூற்றில் பதினேழு பாடல்கள் (5, 24, 75, 121, 182, 183, 185, 186, 187, 188, 189, 190, 191, 192, 193, 195, 214) காணப்படுகின்றன. இவற்றுள் கணியன் பூங்குன்றனார் பாடிய பாடல் சான்றாக.

               யாதும் ஊரே! யாவரும் கேளிர்!

               தீதும் நன்றும் பிறர்தர வாரா

               நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன

               சாதலும் புதுவது அன்றே; வாழ்தல்

               இனிதென மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின்

               இன்னாது என்றலும் இலமே;  மின்னொடு

               வானம் தண்துளி தலைஇ, ஆனாது

               கல்பொருது இரங்கும் மல்லல் பேர்யாற்று

               நீர்வழிப் படூஉம் என்பது திறவோர்

               காட்சியின் தெளிந்தனம் ஆகலின், மாட்சியின்

               பெரியோரை வியத்தலும் இலமே;

               சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே!     (புறநானூறு.192)

இப்பாடல் ~ஓருலகக் கோட்பாட்டை வலியுறுத்திப் பேசுகின்றது. இப்பாடலில் அனைத்துல மனிதனைப் பற்றிய செய்திகளும் இடம் பெற்றுள்ளது. இவற்றுடன் உயர்ந்த அறிநெறிக் கருத்துகளையும் இப்பாடல் குறிக்கின்றது. “அவரவர் ஊழின் வழியே அவரவர் வாழ்க்கை அமைகின்றது. தெளிவு பெறுதல் வாழ்க்கையின் பயன். ஊழீன் முறைமை தெரிந்து பற்றற்று ஒழுகும் ஒழுக்கத்தால் மேன்மேலும் தெளிவினைப் பெற இயலும். அத்தகைய பண்பினையுடையோர்க்கு ~எல்லா ஊரும் தம்முடைய ஊரே! எல்லா மக்களும் தமக்கு உறவினரே! என்று அனைத்துலகண உணர்வு உண்டாகும் என்பது பண்டைத் தமிழ்ச் சான்றோர் உலகிற்கு வழங்கிய செய்தியாகும்" என்ற அறக்கருத்தைக் கணியன் பூங்குன்றனார் இப்பாடலின் மூலம் தெளிவுபடுத்துகின்றார்.இவ்வாறு பல்வேறு துறைகளில் அறக்கருத்துக்களைக் கூறும் புறநானூற்று பாடல்களைத் தொகுத்துப் பார்க்கும்பொழுது பண்டைத் தமிழரின் அறவுணர்வு குறித்த கருத்துகளைப் புரிந்துகொள்ள முடியும். புறநானூற்றின் நூற்றுக்குமேற்பட்ட பாடல்கள் அறக்கருத்துகளை கூறும் வகையில் அமைந்திருப்பது தொகை நூல்களில் புறநானூற்றின் சிறப்பை உலகிற்குக் காட்டுகின்றது.

செவியுறைச் செய்யுள், பெருங்காஞ்சிச் செய்யுள், முதுமொழிக்காஞ்சிச் செய்யுள் ஆகியன சங்ககாலத் தமிழரிடையயே வழங்கிய அறப்பாடல்கள் வகைகளாக இருக்கலாம். இவ்வகையிலான பாடல்களைத் தொகுத்து ஒன்றாகக் கொள்வது அக்கால இலக்கிய வழக்கமாக இருந்திருக்க வாய்ப்பில்லை. எனவே பண்டைத் தமிழ்ச் சான்றோர்கள் அறத்தைப் ~புறப்பொருளின்| ஒரு பகுதியாகக் கருதிப் போற்றியுள்ளனர். அதனால் அறக்கருத்துகள் அமைந்த பாடல்களைப் புறப்பொருள் நூல்களில் சேர்த்து தொகுத்துள்ளதை இதன் மூலம் உணர முடிகின்றது.

    சங்க கால இலக்கியங்கள் அகம், புறம் என இருபெரும் பிரிவுகளாகப் பகுக்கப்பட்டிருந்த நிலையில், அறம் சார்ந்த கருத்துகள் புறம் சார்ந்த நூல்களிலேயே பெரிதும் வலியுறுத்தப்பட்டு வந்துள்ளன. இப்பின்புலத்தில் அறக்கருத்துக்களைக் கூறும் புறநானூற்றுப் பாடல்களைத் தொகுத்துப் பார்க்கும்பொழுது பண்டைத் தமிழரின் அறவுணர்வு குறித்த கருத்துகளைப் புரிந்துகொள்ள முடியும்.

     புறநானூற்றின் நூற்றுக்குமேற்பட்ட பாடல்கள் அறக்கருத்துகளைக் கூறும் வகையில் அமைந்திருப்பது தொகை நூல்களில் புறநானூற்றின் தனிச் சிறப்பை உலகிற்குக் காட்டுகின்றது. புறநானூற்றில் உள்ள செவியுறைச் செய்யுள், பெருங்காஞ்சிச் செய்யுள், முதுமொழிக்காஞ்சிச் செய்யுள் ஆகியன சங்ககாலத் தமிழரிடையயே வழங்கிய அறப்பாடல்கள் வகைகளாக இருக்கின்றன.

எனவே பண்டைத் தமிழ்ச் சான்றோர்கள் அறத்தைப் ~புறப்பொருளின்| ஒரு பகுதியாகக் கருதிப் போற்றியுள்ளனர். அதனால் அறக்கருத்துகள் அமைந்த பாடல்களைப் புறப்பொருள் நூல்களில் சேர்த்து தொகுத்துள்ளதை இதன் மூலம் உணர முடிகின்றது.

துணைநூல்கள்:

1)Aravanan-2011. Ara Ilakkiya Kalanjiyam, Tamil Kottam Publications, Chennai

2)Kavitha Rani –2013. aramum Aranrei  chinthanaikalum, NCBH, Chennai.

3) N.Subbu Readdiyar -1988Tamil IlakkiYangalil Aram, Neethi, Muraimai,.  Madras University Discourse Collection, Chennai.