ஜூலை 2024 இதழுக்கு ஆய்வுக்கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன

பண்டையத் தமிழரின் இருப்பிடத் தொழில்நுட்பம் - ஓர் ஆய்வு

முனைவர் பிரியா கிருஷ்ணன் சென்னை 09 Nov 2021 Read Full PDF

ஆய்வுச் சுருக்கம்:

ஆதிமனிதன் தனது உணவுத் தேடலுக்காக மேற்கொண்ட பயணங்கள் தன்னைப் பாதுகாத்துக் கொள்ளவும் தனக்கான ஒரு நிரந்தர இருப்பிடத்தை ஏற்படுத்திக் கொள்ளவும் தூண்டியது எனலாம்.அதன் பின்பே அவனது வாழ்க்கையில் வரையறை கொண்ட வாழ்வியல் அமைப்பும் அதன் காரணமாகத் தனக்கான இருப்பிட உருவாக்கமும் உண்டாக்கிக் கொண்டான்.அன்று ஆரம்பித்த  பயணம் இன்றும் முற்றுப் பெறாமல்  தொடர்ந்து பயணித்துக் கொண்டிருக்கிறது. அலைந்து திரிந்த மனிதனுக்கு இயற்கையிலிருந்து தன்னைக் காத்துக் கொள்ளவும், தன்னைச் சார்ந்தவர்களுக்கு பாதுகாப்பு தரவும் வீடு என்னும் அரண் தேவைப்பட்டது .பறவைகளின் கூடுகளை கவனித்தும் விலங்குகளின் இருப்பிடங்களை ஆராய்ந்தும் தனக்காக ஏற்படுத்திக் கொண்டதுதான் இல்லம் என்னும் அமைப்பு. இதுகுறித்து சங்க இலக்கியங்கள் பதிவு செய்த தரவுகள் கொண்டு ஆய்வு செய்வது இக்கட்டுரையின் நோக்கமாகும்.

திறவுச் சொற்கள்:

பண்டைத் தமிழர், இல்லம், வீடு, குரம்பை, குதிர்

முன்னுரை:

ஆதி மனிதனுக்கு மரமும் மலைக்குகையும்தான் முதல் வீடு. அவற்றில் பாதுகாப்பின்மையும் இயற்கைச் சீற்றத்தின்போது ஏற்படும் இழப்புகளும் அவனை நிரந்தர வீடு என்னும் அமைப்புக்கு கொண்டு சென்றிக்க வேண்டும்.பண்டையத் தமிழரின் இல்லங்கள் எவ்வாறு அமைக்கப்பட்டன ,அதன் அமைப்புகள் ஆகியவற்றை சங்க இலக்கியங்கள் வாயிலாக ஒருவாறு அறிந்து கொள்ள முடிகின்றது.

பண்டைத் தமிழரின் ஆதி குடில்:

முதன்முதலில் மனிதனுக்கு நன்கு பழக்கப்பட்ட மரங்களின் இழைத்தழைகளே ஆடைகளாக இருந்தன. அவை மானத்தை காப்பது மட்டுமின்றி குளிர் ,வெப்பம் போன்ற இயற்கையிலிருந்தும் அவனைக் காத்தன. இதனை உணர்ந்த அவன் தனது குடிலுக்கு முதன்முதலாக மேற்கூரையாகத் இழைத்தழைகளைக் கொண்டே அமைத்தான். இவ்வாறு இழைத்தழைகளால் ஆன இல்லத்திற்கு  கூரை என்றுபெயர். இன்றும் கிராமங்களில் ஏழைஎளிய மக்கள் கூரை வேய்ந்து வீடுகளை கட்டுகின்றனர். கூரை என்ற பழந்தமிழ் சொல்லாடலையும் பயன்படுத்தியும் வருகின்றனர். இந்த கூரை வீடுகள் மரங்களின் மேலே அமைக்கப்பட்டிருந்தன. ஏனெனில் அச்சமூட்டும் விலங்குகளிடமிருந்து தன்னைப் பாதுகாத்து கொள்ளவதற்காக மரங்களின் மேலே பாதுகாப்பாக அமைக்கப்பட்டது. அதன் வளர்ச்சியாக நிலத்தில் அமைக்கப்ப்ட்ட இல்லங்கள் அடுத்தடுத்த பரிணாம வளர்ச்சியினை எட்டியது.மரத்தின்மீது வீடு அமைக்குபோது மேற்கூரை மற்றும் தடுப்புச்சுவர்கள் மட்டுமே ஏற்படுத்தினால் போதுமானது.ஆனால் நிலத்தில் வீடு அமைக்கும்போது வீட்டைத் தாங்கிபிடிக்க மரங்கள் தேவைப்பட்டன. அதனால் நிலத்தில் தழைகளால் கூரைக் கட்டி அதன் பக்கங்களில் கழிகளைக் கட்டி பாதுகாப்பான அரணாக வீட்டை உருவாக்கிக் கொண்டான். இதனை இலக்கியங்கள் ”உவலைக்கூரை ” என்று பதிவு செய்கின்றது. உவலை என்றால் தழைக்கொத்து என்று பொருள்.நாகரிகம் வளர்ந்தபின்னும் உவலைக்கூரை கட்டும் தொழில் நுட்பம் தொடர்ந்தது .அதாவது போர்காலங்களில் போர்வீரர்கள் தங்கும் கூடாரம் சில இந்த உவலைக்கூரை வகையைச் சார்ந்தது.

“………………………………கடுங்கண் மறவர்

உவலை செய் கூரை ஒடுங்க” ( பு.பொ.வெ:169)

என்று புறப்பொருள் வெண்பாமாலையில் காணலாம்.

முல்லைப்பாட்டில்,

உவலைசெய் கூரை ஒழுகிய தெரு(முல்லைப்பாட்டு:29)

என்ற பதிவினைக் காணமுடிகின்றது.

இலக்கியங்களில் குடில்கள்:

சங்க காலத்திலும் அந்தந்த நிலத்திற்கேற்றாவாறு ஏழை எளிய மக்களின் வீடுகள் குடில்களாகவே  இருந்தது என்பதை இலக்கியங்கள் பகிர்கின்றன. இவ்வகையான வீடுகள் பெரும்பாலும் ஓடுகளாலும், சில கூரைகளாலும் வேயப்பட்டிருந்தன. அவற்றிற்கு பயன்படுத்தப்படும் பொருள் கொண்டு அவ்வீடுகளின் பெயர்களும் அழைக்கப்பட்டன என்பதை இலக்கியங்கள் பதிவு செய்திருக்கின்றன. 

இலைகளையும் தழைகளையும் கொண்டு வேயப்பட்ட குடிலைக் குரம்பை என்றழைப்பர். குரம்பைகளை பற்றி ஒரளவு தெளிவு பெற கடியலூர் உருத்திரங் கண்ணனார் இயற்றிய பெரும்பாணாற்றுப் படை பெரிதும் உதவுகிறது.

வேழம் காவல் குரம்பை (பெரும்பாண்: 51).

வேழம் நிரைத்து வெண்கோடு விரைஇக்

தாழை முடித்துத் தருப்பை வேய்ந்த

குறியிரைக் குரம்பை (பெரும்பாண்: 263-265).

வெண்மையான வஞ்சிமரக் கொம்புகளையும் காஞ்சி மரக் கொம்புகளையும் கழிகளாகப் பரப்பி, நாணல் தட்டைகளை வரிச்சுக் கம்புகளாக வரிசையில் வைத்துத் தாழை நாரால் கட்டித் தருப்பை புல் வேயப்பட்ட தாழ்ந்த வாரியைக் கொண்ட குரம்பை  என்ற பொருளில் குரம்பை எவ்வாறு அமைக்கவேண்டும் என்ற தொழில் நுட்பத்தை பதிவு செய்திருப்பதைக் காணலாம்.

இலைகள் கொண்டு வேயப்பட்ட குடிலை இலைவேய் குரம்பை என்றழைக்கப்பட்டது.

”இலைமேல் குரம்பை உறையதட்பள்ளி ”(ம.காஞ்சி:310)

நெய்தல் நிலத்தில் தருப்பைப் புல்(நாணல்) அதிகம் விளைந்தது. அதனால் நெய்தல் நில வலைஞர்கள் கொம்புகளை இடையில் நிறுத்தித் தாழை நாரால் இறுகக் கட்டினர். அதன்மீது தருப்பைப் புல்லை வேய்ந்து தருப்பைக் குரும்பை கட்டினர்தருப்பைப் புற்களால் வேயப்பட்ட கூரைகள்  புல்வேய் குரம்பை என்றழைக்கப்பட்டது.

அகலுள் ஆங்கண் கறிமிடைத்து இயற்றிய

”புல்வேய் குரம்பைக் கடிதொறும் பெறுகுவீர்” (மலை: 438)

தருப்பைப்புற்களுக்கு பதிலாக தினைத்தட்டைகளைக் கொண்டு வேயப்பட்ட குரம்பை தினைத்தாள் குரம்பை என்று பெயர். (இருவி-தினைத்தட்டை)இவை குட்டைக்கால்களை உடைய அமைப்பைக் கொண்டவை என்றும் அறிய முடிகிறது. ( இன்றும் தமிழகத்தின் தென்மாவட்டங்களில் பயன்பாட்டுகளில் உள்ளதாகும்.)

“இருவி வேய்ந்த குறுங்கால் குரம்பை”(குறி.பா:15)

பாலை நிலத்தில் எயினர்கள் ஈந்துக் (ஈச்சமரம்) குரம்பையில் வாழ்ந்தனர். ஈந்தின் இலைகளில் முட்கள் உண்டு. ஆதலால் அணிலும் கருப்பை (எலி)யும் ஓடாதிருக்க இதனை பயன் படுத்தினர். இதனை ஈச்ச ஓலை என்றும் ,ஓலைக் குரம்பை என்றும் அழைப்பர்.ஈச்ச குரம்பை முள்ளம்பன்றியின் முதுகு போல் இருந்ததாக உருத்திரங்கண்ணனார் உவமை கூறுவார் .

மருத நிலத்தில் நெல் மிகுதி. எனவே நெல் வைக்கோல் கொண்டு வேயப்பட்ட நெல்குரம்பை வீடுகள் அதிகம் இருந்தன. இவை மட்டும் அல்லாமல் பனைமட்டைகளும் வேயப்பட்டன. தென்னந்தோப்பில் வாழ்ந்தோர் தென்னை ஓலைகளை பாய்ப் போல் பின்னி, தெங்கு மடல் குரம்பையை ஏற்படுத்திக் கொண்டனர்.வளமான தென்னையினது பழுத்து காய்ந்து போன வாடிய மடலாழ் ஓலையினைக் கீற்றாகப் பின்னி வேயும் பழக்கத்தையும் பெரும்பாணாற்றுப்படையில் காணலாம்.

வந்தோட்டுத் தெங்கின் வாடுமடல் வேய்ந்த

… … … … … …. …. …. …. …. உழவர்

தனிமனைகள் ( பெரும்.பாண்; 358,355)

பசிய தழைகளால் ஆகிய குரம்பை குடில் என்றும் , காய்ந்த ஓலைகளால் ஆகிய குரம்பை குடிசை என்றும் வழங்கலாயிற்று. காலப்போக்கில் ஓடு வேய்ந்த மனை மச்சு என்றும் ,குசிசை குச்சு என்றும் அழைக்கப்பட்டன.

குடிகளின் அடுத்தடுத்த வளர்ச்சி நிலைகளையும் இலக்கியங்கள் சுட்ட தவறவில்லை.திட்டையே திண்னை சிற்றில் கூரையாம் (சூடாமணி நிகண்டு: இடப்பெயர்: 55)சற்று மேட்டு நிலங்களில் அமைந்த கூரை வீடுகள் திண்ணை அமைப்பை உடையதாக இருப்பதை சூடாமணி நிகண்டு தெரிவிக்கின்றது.இவை சுடுமண்ணால் செய்யப்பட்ட சுட்ட செங்ககளால் நிலைப்பாய் உயரமாகக் கட்டப்பட்டுச் “சுடுமண் ஓங்கிய நெடுநிலை மனை” (மணி:மலைவனம் புக்க காதை : 127) என்று பதிவு செய்துள்ளதை அறிய முடிகிறது.

இல்லங்களின் உள் மற்றும் வெளி அமைப்பு:

குடில் வீடாக மாறிய போது இல்லத்தினுள் பலவகையானப் பகுதிகளும் வளர்ந்தன. முன் மண்டபம், தெற்றி எனப்படும் திண்ணை, கூடம், தாய்க்கட்டு, அடுக்களை என அறைகளும் அமைக்கப்பட்டன. வீட்டினுள் காற்று வருவதற்கான ஏற்பாடும் செய்யப்பட்டது.இதனை,

வகைபெற எழுத்து வானம் மூழ்கிச்

சில்காற்று இசைக்கும் பல்புழை நல்லில் (ம.கா: 357,358)

மெல்லிய காற்றை வாங்கி நல்லோசையோடு தரும் சிறு சிறு புழை எனப்படும் துளைகள் கொண்ட அமைப்பைக் கொண்டிருந்தன என்று மதுரைகாஞ்சி பாடல் மூலம்  அறியமுடிகின்றது.

இத்தகைய நல்லில்லம் சுண்ணம் பூசப்பட்டும், வண்ணம் தீட்டப்பட்டும் காட்சிக்கு இனிமை சேர்த்தனவாம்.வெள்ளி போன்று விளங்கும் வெண்மையான சுண்ணாம்பு வாரிப் பூசப்பட்ட சுவர்கள் உருவாயின. நீலமணி போன்ற திரண்ட உறுதியான தூண்கள் நிறுத்தப்பட்டன. செம்பாலே செய்யப்பட்டது போன்ற நெடிய சுற்றுச் சுவர்கள் எழுந்தன. நல்ல அழகான பூங்கொடிகள் ஓவியமாகத் தீட்டப்பட்டன. மூல அறையாக கருவறையில் ( இல்லுறைத் தெய்வங்கள் - பூசை அறை) ஒன்றும் அமைக்கப்பட்டன என்று பின்வரும் நெடும்நல்வாடைப் பாடல் குறிப்பிடுகின்றது.

வெள்ளி அன்ன விளங்கும் சுதை உரீஇ,  

மணி கண்டன்ன மாத்திரள் திண் காழ்

செம்பு இயன்றன்ன செய்வுறு நெடுஞ்சுவர்,

உருவப் பல் பூ ஒருகொடி வளைஇ,

கருவொடு பெயரிய, காண்பு இன் நல் இல் (110-114)

பண்டைத் தமிழர்கள் வீட்டுக்குத் தேவையான உணவுப் பொருட்களை விளைவித்துக் கொள்ள வீட்டுக்குப் பின்னே வீட்டுத் தோட்டம் அமைக்கும் பழக்கத்தைக் கொண்டிருந்தனர். சங்க கால மக்கள் வீட்டுத் தோட்டத்தை  படப்பை என்பார்கள். (பெரும்பாண்-354-355)

வேளாளர்கள் வேளாண்மையை வாழ்வாதாரமாகக் கொண்டவர்கள். ஆதலால் இவர்கள் வீடுகளை குதிர், கொட்டில்,  படப்பை, முன்றில், தூண், பந்தல் என பல வகைகளில் அமைத்துக் கொண்டனர். கலப்பைகளை பாதுகாக்க நெடுஞ்சுவர் கொண்ட கொட்டில்கள் அமைக்கப்பட்டிருந்தன .(பெரும்பாண்;188-189,354-355)

   அறுவடை செய்யும் தானியங்கள் சேமிக்க குதிர்கள் பயன்பட்டன. இவை பார்ப்பதற்குப் பெரிய பெண் யானை அளவு இருந்தனவாம். குதிர்களைக் கட்டுவதற்கு முன்றில்கள் வடிவமைக்கப்பட்டன. குதிர்களைக் கட்டுவதற்கு முன்றில் அமைக்கப்பட்டது போன்றே, வீட்டுக்கு முன்னே முன்றில்களும் இருந்தன. முன்றிலிலும் மரம், செடி, கொடிகள் வளர்க்கப்பட்டன. முன்றிலில் இருந்த விளா மரத்தில் பிற மான்களைப் பிடிக்க பயன்படுத்தப்படும் பார்வை என்னும் மான் கட்டப்பட்டிருந்ததை பெரும்பாணற்றுப்படை (95-96) எடுத்துரைக்கிறது. முற்றத்தில் தூண்கள் நடப்பட்டிருந்தன. இத்தூண்கள் வீட்டுக் கூரைகளைத் தாங்கும் தாங்கிகளாகச் செயல்பட்டன. தூண்களில் கன்றுகளை கட்டியிருந்தனர். வெயில் வீட்டினுள் நேரடியாக பாயாதிருக்க முன்றிலில் பந்தல் போடப்பட்டிருந்தது.

பண்டையச் செல்வந்தர் இல்லங்களின் அமைப்பு:

இறைவன், அரசன், மக்கள் என்று மூன்று பிரிவுகளில் கட்டிடக்கலையினை அடக்கலாம். மாளிகைகளைக் குறிப்பிடும் போது குறிப்பாக செல்வந்தர்களின் மாளிகைகள் வடக்கு நோக்கியோ, கிழக்கு நோக்கியோ அமைக்கப்பட்டிருந்தது. (திருவிளையாடற் புராணம்-3;41) மாளிகைகளில் காலதர் என்று அழைக்கப்படும் காற்று வந்து செல்ல ஏதுவாக சாளரம் (ஜன்னல்) அமைக்கப்பட்டிருந்தது.

சாளரத்துக்கு நிகரான நேர்வாய்க்கட்டளை ,புழை என்ற சொற்களும் இலக்கியத்தில் காணப்படுகிறது.

சிலம்பில்,

மாலைத் தாமத்து மணிநிரைத்து வகுத்த

கோலச் சாளரக் குறுங்கண்(2;22-23)

சாளரங்களில் மணிமாலைகள் தொங்கவிடப்பட்டிருந்தன என்பதை எடுத்துரைக்கிறது.மாளிகைகள் எழுநிலை மாடங்களாக அமைக்கப்பட்டிருந்தன. வாயில்களுக்கு நேராகச் சாளரங்கள் அமைக்கப்பட்டிருந்தன. இதற்கு நேர்வாய்க்கட்டளை  என்று பெயர். இது வேனிற்காலத்தில் பயன்படுவது.

நெடுநல்வாடையில் ,

வானுற நிவந்த மேனிலை மருங்கில்

வேனிற் பள்ளித் தென்வளி தரூஉம்

நேர்வாய்க் கட்டளை ….(60-62) என்று எடுத்துரைக்கிறது.

கூதிர்காலத்தில்(கடுங்குளிர்) நேர்வாய்க் கட்டளை அமைப்பு இருக்காது.அதற்கு பதில்காற்று அதிகம் நுழையாதாவாறு குறுங்கண்சாளரங்கள் அமைக்கப்பட்டிருந்தன .குறுங்கண் வழியாக வரும் காற்றுக்குகூட ஆற்றாமல் மக்கள் அதனையும் அடைத்து முடங்கி இருந்தனர் என்பதனை,

வேனிற் பள்ளி மேவாது கழிந்து

கூதிர்ப் பள்ளி குறுங்கண் அடைத்து

என வரும் சிலம்பு(4;60-61) வரிகளால் அறியலாம்.

இலக்கியத்தில் எழுநிலை மாடத்தின் திறந்த நிலை மேல் தளம்(மொட்டை மாடி) வேயா மாடம் என அழைக்கப்பட்டது. இதனை நிலாமுற்றம் என்றும் சொல்லுவார்கள்.

நிலவுப்பயன் கொள்ளும் நெடுநிலா முற்றம்….

என்று சிலம்பும் (4;31), நெடுநல்வாடையும் (95) சுட்டுகிறது.

மாடங்களும் மாளிகைகளும்:

மாளிகைக்கும் மாடத்திற்கும் வேறுபாடு உண்டு. மாளிகை என்பது வேயப்பட்டும் வேயப்படாமலும் அமையும் வளமான நல்லில்லம்.ஆனால் மாடம் என்பது வேயப்படாத ஓட்டுக் கட்டிடம். நம் வீட்டு முன்வாயிலில் நிலையில் உள்ள இரு பக்கங்களிலும் விளக்கு அமைப்பதற்காக இரு புரைகள் அமைக்கப்பட்டிருக்கும். அவற்றிற்கு மாடப்புரை என்று பெயர். அவற்றை தற்போது மாடங்கள் என்றே அழைக்கின்றோம். மேல் வளைவாக ஒன்று கூடும் அமைப்பிற்கு மாடம் என்று பெயர். இம்மாட அமைப்பில் படகுகளும்,  மிதக்கும் தெப்பங்களும் கட்டப்பட்டன. அவை ”நீரணி மாடம்” என்றும் , ”மாடப்புணை ”என்றும் பெயர்.

வானம் ஊன்றிய மதலை போல

ஏணி சாத்திய  ஏற்றகும் சென்னி

வான்பொர ரிவந்த வேயா மாடத்து

இரவில் மாட்டிய இலங்குசுடா ஞெகிழி

உரவுநீர் அழுவத்து ஒருகலங் கரையும் (பெரும்பாண்:346-350)

வானம் விழ்ந்துவிடாமல் ஊன்றி முட்டுக் கொடுத்தது போன்று ஏணி சார்த்தப்பட்டிருந்தது. ஏற அருமையாய் விண்ணைக் குத்துவது போன்று உயர்ந்து வளர்ந்த மாடத்தில் இரவில் ஏற்றப்பட்டுக் கொழுந்துவிட்டு எறியும் விளக்கு கடலில் வரும் கலங்களை அழைக்கும் கலங்கரை விளக்ககாக இருந்தது என்ற உருத்திரங்கண்ணனார் உவமையால் சிறப்பிக்கின்றார் .

மாளிகைகளும் பாதுகாப்புகளும்:

சங்ககால மக்கள் இறைவனுக்கு நிகராக மன்னர்களை மதித்தனர். அரசன் இறை என்றே அழைக்கப்பட்டான். அவன் வாழும் அரண்மனை கோயில் எனப்பட்டது. அரசனுக்குரிய அரண்மனை நூலறிவு கொண்ட சான்றோர்கள் கொண்டு அமைக்கப்பட்டது. மன்னனின் அரண்மனையை முதலில் ”திருமுளை சார்த்தி” என்னும் முறையிலிருந்து ஆரம்பிப்பர். அதாவது அரண்மனைக்கு என வகுக்கப்பட்ட இடத்தில் வடக்கிலும் தெற்கிலும் இரண்டு கோல்கள்  நடப்படும். அவற்றின் இடையே நடப்பட்ட  குச்சிகளில் இருந்து கிழக்கு  மேற்காகச் சூரியனின் நிழல் விழும் வேளையை எதிர்நோக்கிக் கண்காணித்துக் கொண்டிருப்பர். நேர் ஒழுங்கில் சூரியனின் நிழல் விழும் சமயம் அரண்மனைக்குத் திருமுளை சார்த்தத் தகுந்த வேளையாகக் கொள்ளப்படும். சிற்ப நூல் வல்லுநர்கள்  நுட்பமாக  நூலைப் பிடித்து அளந்து அரண்மனைக்கான கால்கோளை வகுக்கத் தொடங்குவர்.அந்தந்த திசைகளுக்குரிய தெய்வங்களைத் தொழுவர்.

சித்திரைத் திங்களில் முதல் பத்து நாட்களும் .இறுதிப் பத்து நாட்களும் நீங்களாக நடுவில் உள்ள பத்து நாட்களில் யாதேனும் ஒரு நாளில் பகற்பொழுது பதினைந்தாம் நாழிகையில் தெற்கு வடக்காக நடப்பட்ட கோல்களில் நேர் ஒழுங்கில் சூரியனின் நிழல் விழும் என்னும் வான நூல் அரிவியலை நம் முன்னோர்கள் அறிந்திருந்தனர். இந்நுட்பத்தினை  நெடுநல்வாடையும், சிலம்பும்  பின்வருமாறு தெளிவுபடுத்துகிறது.

விரிகதிர் பரப்பிய வியன்வாய் மண்டிலம்

இருக்கோற் குறிநிலை வழுக்காது குடக்குஏர்பு

ஒருதிறம் சாரா அரைநாள் அமையத்து

நூலறி புலவர் நுண்ணிதின் கயிறுஇட்டு

தேஎம் கொண்டு தெய்வம் நோக்கி

பெரும்பெயர் மன்னர்க்கு ஒப்ப் மனைவகுத்து…(நெடுநல்_73-78) என்றும்,

விரிகதிர் பரப்பிய வியன்வாய் மண்டிலம்

இருக்கோற் குறிநிலை வழுக்காது குடக்கோல்

பொறுதிறந் சாரா அரை நாள் அமையத்து

நூலறி புலவர் நுண்ணுதிற் கயிறிட்டுத்

தே எங் கொண்டு தெய்வம் நோக்கி

பெரும் பெயர் மன்னர்க்கொப்ப மனைவகுத்து

உலவுத் தலைவந்த பெருநாள் அமையத்து

இருசுடர் தம்முள் நோக்கி ஒரு சுடர்

புன்கண் மாலை மலை மறைந்தாங்கு..(சிலம்பு:) என்று பதிவு செய்துள்ளது.

அரசர்கள் வாழும் அரண்மனைகள் ,செல்வந்தர்கள் வாழும் வளமனைகள் இன்னும் பல அறைகளை உள்ளடக்கியதாக இருந்திருக்கின்றது. அட்டில்(சமையலறை), கொட்டாரம்( பண்டகச் சாலை), கூடகாரம்(மேல்வீடு), பள்ளியம்பலம்( படுக்கையறை), கூத்தப்பள்ளி( கலையறை) உரிமையிடம் என அடுத்தடுத்தப் பகுதிகளை இறையனார் அகப்பொருள் உரை (நூற்பா 21) பதிவுச் செய்கின்றது.

ஒரு வளமனையில் உள்ள தூணும் ,திண்ணையும்  எவ்வாறு இருக்கும் என்பதை சிலம்பு ,

மரகத மணியொடு வயிரங் குயிற்றி

பவளத் திரல்கால் பைம்பொன் வேதிகை

நெடுநிலை மாளிகை (சிலம்பு: இந்திர: 147-149)

மரகத மணியும் வயிரக் கல்லும் அழுத்திப் பதித்த ஆயப்பலகைஅதன்மேல் பவளத்தால் திரண்டெழுந்த  தூண் , பசும்பொன் பட்டை பெற்ற திண்ணை மேடை என்று செப்புகின்றது.

இத்தகைய மாளிகைகளின் வாயில்களின் அமைப்பைப் பற்றி,

கடைமுகத்தி யாங்கணும்

கிம்புரிப் பகுவாய்க் கிளர்முகத் தொழுக்கத்து

மங்கலம் பொறித்த மகர மாளிகை ( சிலம்பு: இந்திர 151-153)

பொன்பூண் கட்டிய யானைத் தந்தங்கள் இணைக்கபட்டு, ஒளிவிடும் பருத்த முத்து மாலைகள் தொங்க விடப்பட்டு ,மங்கலம் பொறித்த மகர தோரணம் மாலைகளாக வளைவில் கட்டப்பட்டன என்றும்,

மையறு படிவத்து வானவர் முதலா

எவ்வகை உயிர்களும் உவமை காட்டி

வெண்சுதை விளக்கத்து வித்தகர் இயற்றிய

கண்கவர் ஓவியம் (மணி:மலர்வனம்:127-130)

தலைசிறந்த சிற்ப வல்லுநரால் வெண்சுதையால் செய்யப்பட்டவை.உலகத்து உயிர்களுக்கெல்லாம் உவமை காட்டுவன போல் ஊர்வன முதலாகத் தேவர் வரை பலவகை பிறப்பின் வடிவங்கள்  சிற்பங்களாக செய்யப்பட்டு அமைக்கப்பட்டவை என்று சொல்லப்படுகிறது.(இன்றும் செட்டிநாட்டில் நகரத்தார் மனைகள் இவ்வாறே அமைக்கப்பட்டிருப்பதைக் காணலாம்.

மாளிகையின் மேற்கூரைகள் வளைந்த மண் ஓடுகள் சுடப்பட்டு வேயப்பட்டன.காற்றுக்காக இரண்டு மண் ஓடுகளை மானின் கண்களைப் போல் அமைத்தனர்.இதற்கு மான்கண் காலதர் (கால்:காற்று,அதர்: வழி) என்று பெயர்.

மான்கண் காலதர் மாளிகை இடங்கள்(சிலம்பு:5:8)

அந்தப்புறமும் அரண்மனை பாதுகாப்பும்:

அரசி முதலான பெண்டிர் வாழும் பகுதியை இலக்கியங்கள் அந்தப்புரம் என்கிறது. அந்தப்புரம் என்பது நெடிதுயர்ந்த அளவில் அமைக்கப்பட்டிருந்தது. அந்தப்புரம் முழுவதும் வெள்ளியை ஒத்த சாந்தைக் கொண்டு சுவர்கள் முழுமையும் பூசப்பட்டிருந்தது. வலிமை வாய்ந்த தூண்கள் அமைக்கப்பட்டிருந்தது. சுவரெங்கும் அழகிய ஓவியங்களால் வரையபப்பட்டிருந்தன. இதனை நெடுநல்வாடை

வரை கண்டன்ன தோன்றல் ,வரைசேர்பு

வில் கிடந்தன்ன கொடிய ,பல்வயின்

வெள்ளி அன்ன விளங்கும் சுதைஉரீஇ

மண் கண்டன்ன மத்திரள் திண்காழ்

செம்பு இயன்றன்ன செய்வுறு நெடுஞ்சுவர்

உருவப் பல்பூஒரு கொடி வளைஇ (108-113),

என்று அந்தபுறக் காவலைக் குறிப்பிடுகின்றது.

அரண்மனை மதிலின் வாயிலில் உயர்ந்த நிலைகளைக் கொண்ட கோபுர வாயில்கள்அமைக்கப்பட்டன. மதிலின் வாயிலில் ஆணிகள்,பட்டங்கள், பிணிக்கப்பட்ட திண்ணிய கதவுகள் பொருத்தப்பட்டன. உத்திரகற்கவி என்னும் மரத்தாலான பலகை நிலைவாயிலில் பொருத்தப்பட்டது. உத்திரம் என்னும் பலகையில் குவளை மலர்களைத் துதிக்கையில் ஏந்திய யானைகள் இரண்டு புறத்திற்கு ஒன்றாக நிற்பது போல் அமைக்கப்படும் பலகையே உத்தரகற்கவி எனப்பட்டது. கதவுகள் செவ்வரக்கு கொண்டு தேய்த்து பளபளப்பாக்கப்பட்டன. கதவின் மூட்டு வாயில்கள் வெளிப்படா வண்ணம் தொழில் நுட்பம் சிறந்திருந்தது. கதவில் தாழ்ப்பாள் அமைக்கப்பட்டது. கதவும் ,நிலையும் மின்ன தேய்க்கப்பட்ட செவ்வரக்கின் மீது நெய்யும், ஐயவியும்(கடுகு) பூசித் தேய்க்கப்பட்டன என்று செடுநல் வாடைப் பாடலால் அறியலாம்.

கோட்டை வாயில் மன்னனின் வீரத்திற்கு அடையாளமாக விளங்கியது.பகைவர்களுடன் போரிட்டு வென்று அவர்களின் பற்களைக் கோட்டைக் கதவுகளில் பதித்தனர்.மூவன் ,எழினி,இவர்களின் வலிமையான பற்கள் பறிக்கப்பட்டு கோட்டைக் கதவுகளில் பதித்த செய்தியை இலக்கியங்கள் (நற்றிணை18,அகம்;211) சுட்டுகின்றன.

அடுத்ததாக இரகசிய வழிகள், மாடம் மீதிருந்த சுருங்கை வழிகள் அமைக்கப்பட்டன. இவை, நிலவறை வழியாக , நிதியம் காக்கும் அருங்கலன் இருக்கையாகவும், குடிநீர் வழங்கும் புழையாகவும், அரசர், அரண்மனைப் பெண்டிரின் அவசரக் காலத் தப்புகைத் தடமாகவும், சாய்க்கடை வழியாகவும் பயன்பட்டன என்று இலக்கியங்கள் வாயிலாக அறிகிறோம்.

முடிவுரை:

இவ்வாறாக பழந்தமிழர் தனது இருப்பிடத்தை நிலத்துக்கு ஏற்றவாறும் , கிடைக்கும் பொருட்களை கொண்டும் தனது இருப்பிடத்தை அமைத்துக் கொண்டனர்.அரசர்கள் மற்றும் செல்வந்தர்கள் தங்கள் இருப்பிடைத்தை ஆடம்பரமாகவும் அழகாகவும் பாதுகாப்பாகவும் அமைத்துக் கொண்டனர் என்று பார்த்தோம்.அன்று முதல் தமிழருக்கான இல்லங்கள் முறைப்படியும் பாரம்பரியம் கொண்டு அமைக்கப்பட்டுள்ளதை அறிய முடிகின்றது,விஞ்ஞானம் வளர்ந்த இன்றையக் காலத்திலும் கூட திரும்பவும் பழைய வீடுகளின் அமைப்பை விரும்பும் மனிதர்கள் அதிகரித்து வருவதையும் பார்க்க முடிகின்றது.இதுவே நமது பாரம்பரியத்தின் வெற்றி.

துணை நின்ற நூல்கள்:

1.பெரும்பாணாற்றுப் படை

2.நெடுநெல்வாடை.

3.நற்றிணை

4.அகநானூறு

5.சிலப்பதிகாரம்

6.மணிமேகலை

7.மதுரைக்காஞ்சி

8.முல்லைப்பாட்டு

9.புறப்பொருள் வெண்பாமாலை

10.சூடாமணி நிகண்டு.