ஜூலை 2024 இதழுக்கு ஆய்வுக்கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன

“கவிஞர் ஒளவை நிர்மலாவின் கவிதைச்சிந்தனைகள்”

கி.வீரமணி., எம்.ஏ.,எம்.எட்., பகுதி நேர முனைவர் பட்ட ஆய்வாளர், திரு.வி.க.அரசு கலைக்கல்லூரி, திருவாரூர் 09 Nov 2021 Read Full PDF

கட்டுரையாளர்: கி.வீரமணி., எம்.ஏ.,எம்.எட்., பகுதி நேர முனைவர் பட்ட ஆய்வாளர், திரு.வி.க.அரசு கலைக்கல்லூரி, திருவாரூர் 610003                   நெறியாளர்: முனைவர் கு.சந்திரன், உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை,, திரு.வி.க.அரசு கலைக்கல்லூரி, திருவாரூர்.

ஆய்வுச்சுருக்கம்:

               எழுத்தாளர் ஒளவை நிர்மலாவின் கவிதை நூல்களில் இயற்கை, சமூகம், அரசியல் என்று பரவலாகப் பேசப்படும் அனைத்துச் செய்திகளையும் உள்ளடக்கி சமூதாயத்தில் நிலவும் அத்துமீறல்களையும், அநியாயங்களையும் தட்டிக்கேட்டு நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும் ஒரு தூண்டுதலையும், இயற்கை குறித்த அழகு மற்றும் அதற்கு நேரிடும் ஆபத்தையும் நம் கண்முன் நிறுத்தி, அதன் அழிவை தடுக்கும் விழிப்புணர்வையும் ஏற்படுத்தி பெண்களுக்கு நேரிடும் சிக்கல்களையும், அதற்கான சில தீர்வுகளையும் அழுத்தந்திருத்தமாய் பதிவு செய்துள்ளார். மேலும், மாணவர்களுக்கு கல்வி சார்ந்த கற்றல் வழிகாட்டுதலும், இன்றைய கல்வி முறை மாணவர்களின் அறியாமையைப் போக்கக்கூடிய வகையில் இருக்க வேண்டும் என்பதையும் தம் கவிதை வாயிலாக சுட்டிக்காட்டியுள்ளார்.

திறவுச்சொற்கள்:

கழிவுகளோடு

கம்பிக்குள் காந்தி

அடையாளம்

ஜீவநதிகள்

முத்தல்லவோ

சுத்தம்

கல்வி

                                                            அரிதாரம்

முன்னுரை:

               புதுவை மாநிலத்தைச் சேர்ந்த புனிதவதியாம் காரைக்கால் அம்மையார் தோன்றிய காரைக்காலில் அவ்வையார் அரசு மகளிர் கல்லூரியின் தமிழ்த்துறை தலைவராய் சுமார் 25 ஆண்டுகள் சிறப்பான முறையில் பணியாற்றி தற்போது புதுவைக் காஞ்சி மாமுனிவர் பட்ட மேற்படிப்பு மையத்தில் தமிழ் இணைப்பேராசிரியராக பணியாற்றி வரும் கவிஞர் நிர்மலா அவர்கள் திறனாய்வாளர், எழுத்தாளர், கவிஞர், தலைச்சிறந்த கல்வியாளர் என சமூகத்தில் தன்னை இனம் காட்டிக்கொண்டு நிரூபித்தவர். இவர் தமிழ், ஆங்கிலம், இந்தி, மொழியியல், மொழி பெயர்ப்பு ஆகிய 5 துறைகளில் முதுகலை பட்டம் பெற்றவர். சிறுகதை, புதினம், நாடகம், கவிதை என்ற படைப்பிலக்கிய துறை எல்லாவற்றிலும் முத்திரை பதித்து தன்னை முழுமையாக பெண்ணிய சிந்தனையாளராகவும் உலகுக்கு தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார்.

               கவிஞர் நிர்மலா அவர்கள் கழகக்கால பெண்பாற் புலவர்களின் வரிசையில் இடம் பெற வேண்டிய எல்லா தகுதிகளையும் பெற்றவராக திகழ்கிறார். காக்கைப்பாடினியார், வெள்ளி வீதியார் என்பவர்களின் சிந்தனைகளைப் போல செழுமையானது இவரின் படைப்பாக்கம் ஆகும். அதுமட்டுமல்ல, பல பரிசுகளையும் தன் வசப்படுத்தியவர். ஆம். அவ்வை விருது, மங்கையர் மாமணி, செம்பணி சிகரம், இலக்கிய கருவி, சாதனை செம்மல், தமிழ்ச்சுடர், இலக்கியச்சுடர், தமிழ் இலக்கிய விருது என பல்வேறு விருதுகளுக்கு பெருமை சேர்த்தவர் கவிஞர் நிர்மலா அவர்கள்.

               பெண்களின் சமூக பிரதிநிதியாய் அவர்களின் அன்றாட வாழ்வில் நேரும் எல்லா சிக்கல்களையும் வெளிச்சமிட்டு காட்டி, அதற்கான தீர்வையும் தன் பழகு தமிழில் அழுத்தம் திருத்தமாய் பதிவு செய்து, ஒரு சிறந்த படைப்புக்குரிய அத்துணை தகுதிகளும் பெற்ற அவரது கவிதை படைப்பின் சிந்தனைகளை நாமும் அறிய முற்படுவோம். சமூக அவலங்களை அகற்றுவோம்.

தடம் மாறும் வரப்புகள்:

               தடம் மாறும் வரப்புகள் இக்கவிதை நூல் சமூதாயத்தில் நிலவும் அத்துமீறல்களையும், அநியாயங்களையும் தட்டிக் கேட்கத் தூண்டும் கவிதை நூல் முகத்துக்கெதிரே ஒருவனுடைய தவறுகளை சுட்டிக்காட்ட இயலாத தருணங்களில் கவிதை மூலமாக எழுத்தாய் வடிவித்து மனதை அமைதிப்படுத்தவும் முடிகிறது. அதே நேரத்தில் உள்ளார்ந்த உணர்வுகளை பதிவு செய்து உயிர்ப்புடன் வைத்திருக்கவும் கவிதை கைக்கொடுக்கிறது. இப்படி பல உணர்வுகளில் கவிதைகளை செதுக்கி, செம்மைப்படுத்தித் தந்துள்ளார்.

பாரத தேசம்

                                             பாரததேசம் பாங்குறு தேசம்

                                             நட்பைக் கற்பாய்ப் போற்றும் தேசம்

                                             கலைகள் வளர்திடும் கவினுறு தேசம் - இதன்

                                             பண்பாட்டுச் சிறப்பைப் பாரே பேசும்”                         (ப.எண்:1)

               என தன் கவிதை தொடக்கத்தில் தொடங்கி நம் தேசத்தின் பெருமைகளை பட்டியலிட்டு உள்ளார். இயற்கை வளம் உண்டு, கனிவளம் உண்டு, கனிமவளம் உண்டு, உயிர்காக்கும் பயிர்வளம் உண்டு, புனிதம், புண்ணியம் பூமியில் உண்டு, கணிதம் உண்டு, அறிவியல் உண்டு, என்ன வளம் இல்லை இத்திருநாட்டில் என்று தம் தேசப்பற்றை உறுதிபடுத்தி வரும்கால இளம்தலை முறையினரிடம் நாட்டைப் பாதுகாக்கும் நற்பொறுப்பைக் கொடுத்து அவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளார்.

தடம் மாறும் வரப்புகள்

                                                            மரமெல்லாம் வெட்டிவெட்டி

                                                            மச்சுவீடாப் போச்சி

                                                            மழதண்ணி இல்லாம

                                                            பயிருகருக லாச்சி

                                                            ஏரிகுளம் மேடாகி

                                                            பிளாட்டாகி போச்சி

                                                            எறச்சகெணறு நீருவத்திக்

                                                            குப்பத்தொட்டி யாச்சி”                                                (ப.எண்:3)

               நாகரீகம் என்ற போர்வையில் முழ்கும் மானிடா இயற்கையைத் தொலைத்து விட்டோம். மீட்டெடுக்க முடியுமா சிந்தித்துபார். ஆளுக்கொரு வீடுகட்டி ஆறுகுளத்தையெல்லாம் தூர்து வைத்து வீட்டின் சாக்கடைகளை அவர் வீட்டின் முன்னே தேக்க வைத்து ஆடம்பர வாழ்க்கைக்காக மரங்களை வெட்டி, மாடுகன்னு இலை தழையில்லாமல் காகிதம் உண்டு உயிர்வாழும் அவலம், சுற்றுச்சூழலை பாதுகாத்து இயற்கையை நேசிப்பதற்கான வழிகாட்டலை உறுதிபடுத்தி இருக்கிறார்.

               சுற்றுச்சூழல் தூய்மை என தினம், தினம் பேசிக்கொண்டே இருக்கும் நாம் எப்போது நம் நாட்டை சுத்தம் செய்ய போகிறோம். நெகிழிகளை பயன்படுத்தாதே என்று கூறி கோசம் போட்டு வீடு திரும்பும் நாம் நெகிழிகளில் பொருட்களை வாங்கிக் கொண்டு போவது ஏனோ சுற்றுச்சூழல் மாசுபாட்டிற்கு யார் காரணம், யாரை குறை சொல்லிக் கொண்டே இருப்பது, சாலையோரத்துக் கழிவுகளையும் அதற்குக் காரணமானவர்களையும் நாம் கண்டு கொள்வதில்லை இக்கவிதையில் கேட்கும் வினாக்களுக்கு யார் விடை சொல்ல முடியும்.

                                                            கழிவுகளோடு

                                                            கோயிலுக்குள்ளே

                                                            சிலைகளுக்கோ

                                                            இளநீர் அபிஷேகம்

                                                            வெளிப்புறச் சுவர்களுக்கோ

                                                            எப்போதும்

                                                            சிறுநீர் அபிஷேகம் தான்”                                       (ப.எண்:32)

               வெளிப்புறச் சுவர்களில் சிறுநீர் கழிக்காதீர்” என எழுதப்பட்ட இடத்தில் சிறுநீர் கழிப்பது யார்? எப்படிச் சுத்தமாகும் சுற்றுப்புறம், வெளியிடங்களில் கழிப்பறை செயல்முறைகளைக் கூட சுட்டிக்காட்டும் மனவலிமை, சுத்தம் எனும் பெயரில் வசூலிக்கும் கட்டணம் அதற்கு பயன் தான் என்ன

                                                            கட்டணம் எதற்கு

                                                            சுத்தத்திற்கா?

                                                            அங்கும் இங்கும்

                                                            மூலை முடுக்கில்

                                                            கழிவுகள், கறைகள்

                                                            எச்சில் திட்டுகள்

                                                            காணும் கண்கள்

                                                            இமைகள் சுருக்கும்

                                                            கடிதாய்க் கைகள்

                                                            மூக்கை இறுக்கும்

                                                            கட்டணம் எதற்கு

                                                            மறைவிட மதற்கா?

                                                            கதவில் பாதியில்

                                                            பிய்த்த ஓட்டைகள்

                                                            தாழ்ப்பாள் இன்றி

                                                            ஆடும் கதவும்

                                                            நீரைத் தேக்கிடும்

                                                            குண்டுக் குழிகள்                   (ப.எண்: 34-35)

எப்படிக் கிடைக்கும் சுத்தம் இவ்வளவு ஓட்டைகளைத் தாண்டி கிடைக்கக்கூடிய சுகாதாரம் கிடைப்பதற்கு நாம் என்ன செய்வது? யார் செய்வது?  என்ற விழிப்புணர்வை நம் முன்னே ஏற்படுத்துகிறது இக்கவிதை “கழிவுகளோடு”.

                                             புறந்தூய்மை நீரான் அமையும் அகந்தூய்மை

                                              வாய்மையால் காணப்படும்”                                                (குறள்:298)

               என்ற வள்ளுவன் குறளுக்கு இனங்க தூய்மை என்பது நமக்கு மிகவும் அவசியம். புறந்தூய்மையான சுற்றுச்சூழல் தூய்மை மிகவும் முக்கியமானதாகும். ஒரு மனிதன் தான் வாழும் இருப்பிடத்தையும் சுற்றுபுறத்தையும் தூய்மையாகப் பேணுகின்ற போது தான் அவன் ஆரோக்கியமான உலகிற்கு வழிவகுக்கின்றன. நம் சூழலை அக்கறையுடன் பாதுகாத்து இன்புற்று வாழவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

               நம் நாட்டின் சுதந்திரத்திறகு அறவழியில் போராட்டம் நடத்தி தேசத்தைக் காக்க இரும்புக்கம்பிக்குள் அடைப்பட்டவர். ஆனால் இன்றோ

                                                                 கம்பிக்குள் காந்தி

                                                            “தேசத்தை நேசிப்பதாய்

                                                            வேஷமிடும்

                                                            காசுநோய்த் தலைவர்கள்

                                                            இரும்புப் பெட்டியில்

                                                            கட்டுகட்டாய் வைத்திருக்கும்

                                                            ரூபாய்தாளின்

                                                            வெள்ளிக்கம்பிக்குள்

                                                            இன்னும் ஏன்

                                                            சிறைபட்டுக் கிடக்கின்றாய்?”                              (ப.எண்:6)

               பண ஆசை பிடித்த செல்வந்தர்கள் அவர்கள் பதுக்கும் கருப்புப்பணம் நாட்டின் வளர்ச்சியையும், ஏழைகளின் முன்னேற்றத்தையும் வெகுவாக பாதிப்பதையும், காசுநோய் பிடித்து அலையும் சில தலைவர்களுக்கும் எச்சரிக்கை விடுப்பது இவரது கவிதை அதுவும் நம்மை சிந்திக்கத்தான் வைக்கின்றது. எங்கு சென்றாலும் கையூட்டு எப்படி வளரும் இந்திய தேசம் என நம்மிடையே வினாவை தொடுப்பது போல் அமைந்துள்ளது இக்கவிதை வரிகள்.

                                                            மனிதனுடைய

                                                            முழுத்திறமைகளின்

                                                            வெளிப்பாடே உண்மையான

                                                            கல்வி”                                                            (மகாத்மா காந்தி)

இன்றைய கல்வி கல்வி கற்கும் இடங்கள், கற்கும் முறை இதோ..

               தாயின் மடியில் தவழ வேண்டிய குழந்தை தளிர்கள் தீ விபத்தில் தவழ்ந்;தனவே. ஆம் பள்ளி தீ விபத்தை நினைவூட்டி மனதை பதைக்கச் செய்கிறது.

                                                            கருகிய மொட்டுகள்

                                                            மலரத் துடித்த

                                                            மொட்டுகள் எல்லாம்

                                                            உருவம் தொலைத்து

                                                            உருக்குலைந் தன ஏன்?

                                                            மழலை நாவால்

                                                            மகிழ்வித்த கிளிகளைத்

                                                            தீயின் நாக்குகள்

                                                            சுவைத்தது முறையோ?

                                                            வாயிற் கதவுகள்

                                                            பூட்டிக் கிடந்தால்

                                                            மரணக் கதவுகள்

                                                            திறந்தது சரியோ?”                                                            (ப.எண்:11)

               அடுக்கு மாடிக்குடியிருப்பில் மழலை பள்ளிக்கூடங்கள், அடிப்படை வசதியற்ற ஆங்கில வழிக்கல்வி கட்டிடங்கள், அதிகாரிகளின் அலட்சியப்போக்கு, பெற்றோர்களிடத்தில் ஆங்கில மோகம், இவைகள் தான் இதற்குக் காரணமா என யோசிக்கத்தான் வேண்டியுள்ளது.

               கல்வி என்னும் ஆலமரத்தை கிளைத்துத் தழைக்கச் செய்பவர் மாணவர்களை வாழ்க்கையின் சிகரத்தைத் தொடச்செய்ய உறுதுணையாக நிற்பவர் இனம், மதம் என பாகுபாடின்றி பழகச் செய்பவர், என பல கோணங்களில் ஆசிரியரின் (ஆசான்) சிறப்பை வெளிப்படுத்தியது இக்கவிதை.

                                                                           ஆசிரியர்

                                                            “மாணவர் பறவைகள்

                                                            பொற்கனி யென்னும்

                                                            பட்டம் பெற்றுச்

                                                            சிறக்கச் செய்பவர்”

              

                                                            மாணவர் துன்பம்

                                                            கூறிடும் போது

                                                            மணக்கும் மல்லிகை

                                                            ஆறுதல் தருபவர்”                                                          (ப.எண்:18)

ஆசிரியர் எப்படி இருக்க வேண்டும் என நன்னூலில்,

                                             குலனருள் தெய்வங் கொள்கை மேன்மை

                                              கலைபயில் தெளிவு கட்டுரை வன்மை

                                              நிலம்மலை நிறைகோல் மலர்நிகர் மாட்சியும்

                                              உலகியல் அறிவோடு உயர்குணம் இணையவும்

                                              அமைபவன் நூலூரை யாசிரியன்னே..”

               உயர்குடியில் பிறந்து கடவுள் பக்தி கொண்டு பல நூல்களைக் கற்றறிந்த அறிவும் அந்த அறிவை மாணவர்கள் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் எடுத்துக்கூறும் ஆற்றல் உடையவராக இருக்க வேண்டும் என தான் ஓரு பேராசிரியராக இருந்து பல மாணவ, மாணவியரை முன்னேற்றம் அடையச் செய்த நிலையையும், ஓர் ஆசிரியர் எப்படி இருக்க வேண்டும் என்ற செயலையும் தெளிவுபடுத்தியுள்ளார்.

தம் கவிதைவரிகளால் சமூக அக்கறைக் கொண்டு சமுதாயம் முன்னேற்றம் அடைய புகைபிடித்தலின் தீமையை வெளிப்படுத்தியுள்ளார். பல இளைஞர்களின் நடுவில் தன்னை ஷீரோவாக காட்டிக் கொள்ள கையில் சிகரெட் உடன் திரியும் இளைஞனே அது உன்னை கொஞ்சம் கொஞ்சமாக பொசுக்கி விடும் தெரிந்துகொள். மதுவுக்கும், தீய பழக்கக்கங்களும் அடிமையாகி உன் வாழ்க்கையை சாம்பலாக்கி விடும் என தன் மனித நேயத்தை வெளிப்படுத்தி உள்ளார்.

                                                                           மனிதம்

                                                            ஆயுளை அன்றாடம்

                                                            கொத்தித் தின்னும்

                                                            அக்கனிக் குஞ்சு

                                                            உதடுகளுக்குக்

                                                            கருமை தீட்டும்

                                                            தூரிகை

                                                            தொடரும்

                                                            தீய பழக்கக்களின்

                                                            சின்னத் திறவுகோல்

                                                            சாம்பலாகும் வாழ்க்கையை

எழுதிச்செல்லும்

                                                            எழுதுகோல்                               (ப.எண்:37-38)

தீய பழக்கங்களுக்கு அடிமையாகும் தம் உறவுகளை எச்சரித்துள்ளார்.

               அரசியலில் தம்மை அடையாளம் காட்டிக்கொள்ள காந்தியையும், காமராசரையும், பெரியாரையும், அண்ணாவையும் தம் அடையாளங்களாய்க் காட்டி தம் பெயர்களின் அடையாகவும் அச்சேற்றிக் கொள்ளும் இவர்கள் இத்தலைவர்களின் வழி நடப்பதற்காகவும், அவர்களின் நல்ல செயல்களை கடைபிடிக்கவாவது ஒரு அடியாவது எடுத்து வைத்ததுண்டா.

               இவர்களின் முகமூடியைப் பார்த்து பார்த்து வெறும் காகிதத்தில் இவர் காந்தி, அவர் தான் பெரியார் என சொல்லிக்கொண்டே இருந்து உண்மையான தலைவர்களின் வாழ்க்கை வரலாற்றை எப்படி புரியவைப்பது இளம் தலைமுறையிடம் இத்தலைவர்களின் உண்மையான நற்பண்புகள் அடையாளம் தெரியாமல் அல்லவா போய்விடும்.

                                                            அடையாளம்

                                                            “காலப்போக்கில்

                                                            இவர்களைப்

                                                            பார்த்துப்பார்த்து

                                                            பழகிப்போகும்

                                                            இளைய தலைமுறைக்குக்

                                                            காந்தியும்

                                                            காமராசரும்

                                                            பெரியாரும்

                                                            இப்படித்தான் நீசர்களாய்

                                                            இருந்தாரோ என்ற

                                                            ஐயம்

                                                            இயல்பாய் எழக்கூடும்             (ப.எண்:74-75)

               அரசியலில் முழ்கி தொண்டு செய்யும் அடிமை தோழர்களே சிறிது சிந்தித்துப் பாரீர் என இவர்களின் தலையில் ஒரு குட்டு வைத்து திருத்த நினைக்கும் கவிஞர்,

தொண்டு செய்யும் அடிமை

தன்வீட்டுப் பிள்ளை

                                                           பாலுக்கழும் போது

                                                           தலைவனின்

                                                            வானுயர் அட்டைக்கு

                                                            அபிஷேகம் செய்யும்

                                                           அர்ச்சகர்கள்

                                                            தன் குழந்தை

                                                            அரைநிர்வாணமாய்

                                                            அலைந்து திரிகையில்

                                                            தலைவனுக்குப்

                                                            பொன்னாடை போர்த்திப்

                                                            படமெடுத்துக் கொள்ளும்

                                                            தண்ணீர் பாம்புகள்”                                          (ப.எண்:13)

அரசியலில் தன்னை ஆட்படுத்திக் கொண்டு குருடர்களாக தன் தலைவனை முன்னேற்றப் பாடுபடும் தொண்டனே சற்று உன் வீட்டையும் பார்த்துக்கொள் அரசியலில் குதித்த பின் தலைவனின் குடும்பம் உயர்ந்து செல்கிறது. ஆனால் அத்தலைவனின் முன்னேற்றத்திற்குப் பாடுபடுவனின் குடும்பமோ பெரும் வீழ்ச்சியை சந்திக்கிறது.  இவ்விரண்டையும் ஒப்பிட்டு உணரமுடியாத அறிவுக்குருடர்களின் நிலையைக் காட்டியுள்ளார்.

ஜீவனிழக்கும் ஜீவநதிகள்

குயில்கள் தங்கிக்

கூவிய சோலையில்

நெடிது வளர்ந்த

கான்கீரிட் வீடுகள்

இடியொலி கேட்ட

இடங்களில் எல்லாம்

வெடியொலி எழுந்து

வெளிவரும் அமிலம்”                                  (ப.எண்:19)

என சமூக அவலத்தைத் தோலுரித்துக் காட்டியுள்ளார்.

                                                                           முத்தல்லவோ

                                                            “குருவியின் தலைமீதில்

                                                            பனங்காயை வைப்பது போல்

                                                            குவிந்த மொட்டு போன்றவுந்தன்

                                                            சின்னத் தலையினிலே

                                                            சீர்திருத்தம் அத்தனையும்

                                                            சுமத்துவதாய் எண்ணாதே

                                                            சின்னதோர் விதையதுவே

                                                            சிலிர்க்கும் ஆல் மரமாகும்

                                                            வெள்ளமென மக்களுக்கு

                                                            விரிந்து நிழல் கொடுக்கும்

                                                            முத்தான முத்தே

                                                            முகிழ் பரிதிக் கொத்தே

                                                            முன்வருவாய் நீ வளர்ந்து

                                                            முத்திரைகள் பதித்திடற்கு”                                    (ப.எண்:7)

               நாளைய பாரதம் இளைஞனின் கையில் வளர்ந்த பாரதத்தைக் காக்க இத்துணை சுமைகளையும் உன் தலையில் சுமர்த்தியதை எண்ணி வருந்தாதே மண்ணில் புதையுண்ட சின்ன விதை, நாளை வளர்ந்து பயன் தருவது போல் நீயும் வளர்ந்து சமுதாய சீர்கேடுகளைக் கடந்து வல்லரசு பாரதமாக மாற்ற வேண்டும் என நாட்டைப் பாதுகாக்கும் நற்பொறுப்பைக் கொடுத்து அவர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளார்.

               தடம் மாறும் வரப்புகள் சம்பதாய் ஒலிக்கும். எச்சரிக்கும் ஒரு சங்கமம் சமூகச் சாடல்களை அள்ளி வீசுகின்ற கனல் பறக்கும் சிந்தனைகள், இவை அனைத்தும் சமுதாய மாற்றத்திற்கான படைப்புகள் ஆகும். வரும் கால இளைய சமுதாயத்திற்கான கூவல் என்றே சொல்லலாம்.

அணுத்துளி

               கவிஞர் இக்கவிதைத் தொகுதியை ஹைக்கூவில் படைத்துள்ளார். இந்த வகை ஹைக்கூக்களை சென்ரியூ என்றழைப்பது பழக்கம். சென்ரியூ என்பது சமூக அக்கறையோடு எழுதக்கூடிய கவிதைகள் ஆகும்.

               இந்நூல் இயற்கை சமூகம், அரசியல் என்று இன்றைக்கு பரவலாக தேவைப்படுகின்ற செய்திகளை நமக்கு எடுத்துக்காட்டுகின்றன.

               ஹைக்கூ கவிதைகள் ஒவ்வொன்றும் வேறு வேறு சூழல்களில் எழுதப்படுவதால் இதனை ஒரு நாவலை படிப்பது போல் ஒரே மூச்சில் படித்து முடித்து விடுதல் கூடாது. ஒவ்வொரு கவிதையிலும் இருக்கும் கருத்துகளை உள்வாங்கி அனுபவித்தல் வேண்டும்.

               வாழ்க்கை குறித்த அச்சம் மனிதனை எப்படியெல்லாம் வாட்டி வதைக்கின்றது. இந்த அச்சம் தான் சோதிடமாக, வாஸ்துவாக, குறிகேட்பதாக, மூட நம்பிக்கைகளாக, கடவுள்களாக நம்மைச் சூழ்ந்து நல்வாழ்க்கையைத் தீர்மானிக்கக் கூடிய அசுரசக்தியாக வலிமை பெறுகின்றன.

                                                                           கண்ணே

                                                            “காலையில் கண்ணில்பட்ட

                                                            மனிதனைப் பழிக்கிறது

                                                            அடிப்பட்ட பூனை”                                                           (ப.எண்:74)

               பூனை குறுக்கே போனால் ஆகாது என்ற நம்பிக்கை நம்மிடையே நெடுங்காலமாக இருந்து வருகிறது. இந்த பூனையை பழிக்க நமக்கு உரிமை இருக்கும் போது பூனை ஏன் நம்மை பழிக்கக்கூடாது, மனிதனைப் பார்த்த பூனை அடிப்பட்டுவிட்டது என்று மூட நம்பிக்கைகளை சிந்திக்கச் செய்துள்ளார்.

                                                                           படிப்படி

                                                            “ஆயிரமாயிரம் மலர் ஏடுகள்

                                                            தீவிர ஆய்வாளன்

                                                            தேனி!”

               மாணவர்களிடையே விழிப்புணர்வு படிப்படி நம்மை சுற்றி நாம் தெரிந்து கொள்ள ஆயிரம் ஆயிரம் ஏடுகள் இருக்கின்றன. அவற்றைத் தேடித் தேடி படி அறிவை வளர்த்துக்கொள். ஆம் தேனிக்கள் எங்கிருந்தோ பூக்களைத் தேடி தேன் உண்பதற்காக தேன் இருக்கும் இடத்தைத் தேடி வந்து உண்ணுகின்றன.

               அதே போல் நீயும் தேனியைப் போல ஒரு ஆய்வாளனாக நல்ல நூல்களைத் தேடி படித்து உன் சிந்தனைகளைப் பெருக்கி வாழ்வில் சிகரம் தொடு என மாணவச்செல்வங்களை நல்வழிக் கூறியுள்ளார்.

                                                                           படிபடி காலை படி

                                                            “நூலைப்படி – சங்கத்தமிழ்

                                                            நூலைப்படி – முறைப்படி

                                                            நூலைப்படி…

                                                            காலையில்படி – கடும்பகல்படி

                                                            மாலை இரவு பொருள் படும்படி

                                                            கற்பவை கற்கும் படி

                                                            வள்ளுவர் சொன்னபடி

                                                            கற்கத்தான் வேண்டும் படி

                                                            கல்லாதவர் வாழ்வதெப்படி?”

                                                                                                                          பாவேந்தர் பாரதிதாசன்

               என பாரதிதாசனின் வரிகளுக்கு இனங்க இன்றைய இளைய சமுதாயம் படிப்படியாய் நல்ல நூல்களைத் தேடி படித்து தன் வாசிப்புத் திறனை மேம்படுத்திக் கொண்டு இவ்வுலகில் வாழ்வதற்கான திறனை மேம்படுத்திக் கொள்ளவும் மாணவர்களின் சிந்தனையை தூண்டியுள்ளார்.

                                                            சுத்தம்

                                             “நனைந்த சுவர்கள்

                                             ஓயாத சிறுநீர் அபிஷேகம்

                                             பேருந்து நிலையம்….

                                             சுற்றுச்சூழல் சீர்கேடு

                                             சுட்டெரிக்கும் கோடையிலும்

                                             தரையெங்கும் ஈரப்புள்ளிகள் எச்சில்”                        (ப.எண்:26-27)

               சுகாதாரமற்ற மனிதர்கள் சுற்றுப்புறம் மாசுமாடு அறியாத நண்பர்கள் இயற்கை என்பது ஒரு முழுமையான நிரந்தர இயல்பாகும். மனிதன் இயற்கையைச் சார்ந்து உயிர் வாழ்கிறான். அவன் தனது வாழ்க்கை தேவைகள் அனைத்தையும் இயற்கையிலிருந்து எடுத்துக்கொள்கிறான். இயற்கை மனிதனின் அங்கம், அப்படிப்பட்ட இயற்கையை நாமே. அசுத்தம் செய்து பல நோய்களை வரவழைத்துக்கொண்டு வாழ்க்கையில் அனுபவிக்கும் துன்பங்களின் முன்னோடியே அசுத்தம்.  அப்படிப்பட்ட சுற்றுச்சூழலைப் பாதுகாத்து நோய் இல்லாத தமிழகம் உருவாக்க நாமும் முற்படுத்துவோம் என்ற சமூக நலனை சுட்டிக்காட்டியுள்ளார்.

நற்றமிழ்த் துளிப்பா நானூறு

               இந்நூலில் இயற்கை குறித்த துளிப்பாக்களாக நிலா, மலை, இருள், நீர், தீ, காற்று, மலர், பசுமை, புள், வேளாண் என்று இயற்கையை வருணித்துள்ளார் ஆசிரியர். வாழ்வியலில் பல்வேறு நிலைப்பாடுகளையும், அடிப்படைத் தேவைகளையும் பெண், தாய், குழந்தை, இளமை, காதல், திருமணம், இல்லறம், முதுமை, மறதி, வறுமை என சமுதாய நோக்கத்தோடு இக்கவிதை தொகுப்பை படைத்துள்ளார்.

                                                            தமிழ்ப்பத்து

                                             “தாத்தா தமிழாசிரியர்

                                             தமிழ் அறியாப் பேரன்

                                             அந்நியமாகும் உறவு…”

 

                                             “கடைகள் தோறும்

                                             ஆங்கிலப் பெயர்ப்பலகை

                                             தமிழ்நாடு……”

 

                                             “தாய்மொழி நான்

                                             விழாக்கோலம்

                                             ஆங்கிலப்பள்ளி…”                                                                           (ப.எண்:39)

               தமிழ் என்பது நம் தாய்மொழி மட்டுமன்று தமிழனின் முதன்மொழி தமிழ். அப்படிப்பட்ட செம்மொழியாம் தமிழ்மொழியில் கல்வி கற்காமல் அயல்மொழிக் கல்வி கற்றுத் தமிழ் உறவுகளை அறுத்துக்கொள்ளும் அவல நிலை தமிழாசிரியராக இருக்கும் தாத்தாவின் பேரனுக்கே தமிழில் தகராறு என்றால் மற்றவர்களின் நிலையைச் சொல்ல வேண்டியதில்லை ஆங்கில மோகம் கொண்டு தம் தாய்மொழியை மறந்து செல்லும் பெற்றோர்களின் நிலை, தலைப்பெழுத்தை ஆங்கிலத்திலும் பெயரை வடமொழியிலும் வைத்திருக்கிறான் என்றால் அவன் தமிழன் என்று நாம் அறிந்து கொள்ள முடியும். ஆம் எழுத்தாளர் அவர்கள் தமிழ்ப்பேராசிரியராக இருப்பதால் அவர் தம் மனக்குமுறலை நம்மிடையே வெளிப்படுத்தி உள்ளார்.

                                                            குழந்தைப்பத்து

                                             “உண்டனர் குழந்தைகள்

                                             உண்ணாமல் நிறைந்தது வயிறு

                                             தாய்”….                                                                                         (ப.எண்:65)

               தாயை யாரோடும் எப்போதும் ஒப்பிட முடியாது. தாய் மனித இனம், அவள் தெய்வம், அவள் வாழுமிடம் கோயில். ஆம் அன்றும் இன்றும் என்றும் தாய் தியாகத்தின் திருவுருவமாகத் திகழ்கிறாள். இருக்கும் உணவைக் குழந்தைகட்குப் பகிர்ந்தளித்து விட்டு உணவுப்பாத்திரங்களைக் கழுவிக் கவிழ்த்து விட்டுப் பசியோடும் பட்னியோடும் இருக்கும் தாயின் மகத்துவத்தை வெளிப்படுத்துகிறது.

நூலக ஆற்றுப்படை”

                              தமிழின் முதல் சிற்றிலக்கியம் என்ற பெருமை ஆற்றுப்படை நூல்களுக்கு உண்டு.

                              கூத்தரும் பாணரும் பொருநரும் விறலியும்

                              ஆற்றிடைக் காட்சி உறழத் தோன்றிப்

                              பெற்ற பெருவளம் பெறாஅர்க்கு அறிவுறீஇச்

                              சென்று பயன் எதிரச் சொன்ன பக்கமும்”               (தொல் புறத்-36)

என்று ஆற்றுப்படைகளுக்குத் தொல்காப்பியம் இலக்கணம் வகுக்கின்றது. ஆனால் இவ்வகை நூலக ஆற்றுப்படை நூல் நூலகத்தின் அருமை பெருமைகளை அதன் சிறப்பை அறியாத இளைஞன் ஒருவனுக்கு எடுத்துச்சொல்லி நூலகத்திற்குச் செல்ல ஆற்றுப்படுத்தலே இவ்வகை நூலாகும்.

                                             பாடநூலெனில் பாகலின் கசப்பே

                                             ஏடுக லின்றி எழுதுகோலின்றிக்

                                             கையை வீசிக் களித்தோம் அங்கே….

                                             தேர்வு வருங்கால் நண்பர் கூடிச்

                                             சேர்த்த நகலைத் தெளிவே யின்றிப்

                                             பார்த்த துண்டு.(உ)டல் வேர்த்ததுண்டு..

அதனால் நூலகம் செல்லும் எண்ணம்

எமக்கு என்றும் வாய்த்தது இல்லை..

அங்கே எட்டிப்பார்த்ததும் இல்லை”..                            (ப.எண்:45)

என்று மாணவர்களின் பொறுப்பற்ற கற்றலையும் இன்றைய கல்விமுறையையும் குறித்து விளக்கியுள்ளார். அதுமட்டும் இல்லாமல் நூலக பொறுப்பில் இருக்கும் அதிகாரிகளின் உண்மை நிலையையும் சுட்டிக்காட்டியுள்ளார். அடுக்கி வைத்திருக்கும் நூல்களை விரும்பிக் கேட்கும் மாணவர்களுக்கு வழங்காமல் பூட்டி வைத்து பாதுகாக்கும் பொறுப்பற்றவர்களின் மீதும் தன் கோபத்தைக் காட்டியுள்ளார்.

                                             மாணவர் தோழர் நூல்களை வேண்டி

                                             அவ்வப்போது அணுகிய துண்டு

                                             தலைமேல் அவர்க்குத் தாங்கொணாப் பணியால்

                                             இலையே நொடியும் ஓய்வெனச் சொல்லி

                                             தட்டிக் கழித்தே தடைசெய லானார்.”                           (ப.எண்:46)

 

                              “துடிப்புடை இளைஞ, யான்சொல்லும் செய்தி

                              படிப்பினை நல்கும் பண்புறக் கேள்நீ…

                              ----------------------------------------------------------------------

                              --------------------------------------------------------------------

                              கண்போல் நூல்கள் அறிவைத் துலக்கும்

                              மண்ணக வாழ்வில் மகத்துவம் நிறைக்கும்

                              தத்துவ மருத்துவம் சரித்திரம் என்று

                              வித்தகர் படைத்த நூல்பல் லாயிரம்

                              எத்துறை விருப்போ அத்துறை நூலைச்

                              சித்தம் கலந்து சிறப்பாய்க் கற்பின்

                              புத்தர் ஞான போதியும் தோற்கும்”……                          (ப.எண்:43)

               நூலகத்தின் அருமையையும், நூல்களின் பெருமைகளையும் எடுத்துரைத்துள்ளார்.

                              நூலகம் தன்னில் கடைப்பிடி நெறிகளை

                              மேலும் கூறுக” என்றே நூவன்றேன்

                              பல்லோர் அங்கே படித்திட லாலே

                              அமைதிகாத்தல் அறிவர் செயலாம்”…

 

நூலகத்தின் விதிமுறைகளையும் மாணவர்களுக்கு எடுத்து விளக்கியுள்ளார்.

                              நூலைத் தேடும் வாசகர் சிலரோ

                              பின்னர்ப் படிக்க விரும்பிடும் நூல்களை

                              வேறொடு துறையின் நூல்களின் அடுக்கில்

                              செருகிச் செருகி மறைத்தே வைப்பர்

                              காலப்போக்கில் மறந்தும் தொலைப்பர்”

 

                              “பாடம் தொடர்பாய்ப் படித்திடும் நூல்களின்

                              பக்கம் கிளிப்பர் பண்பிலா மாணவர்

                              மறுபதிப் பில்லா மாறிலா நூல்கள்

                              இதற்கு செயலால் இல்லா தாகுமோ”…                    (ப.எண்:51)

               சில ஒழுங்கைச் சிதைக்கும் விதமாய்த் தாறுமாறாக நூல்களைக் கண்ட இடத்தில் செருகி வைக்கும் பொறுப்பற்ற செயல், நூல்களில் பக்கங்களைக் கிழித்து எடுத்துச் செல்லும் பண்பற்ற செயலையும் இந்நூலில் விவரித்துள்ளார்.

                              “நூலகத்தின் பெருமைகளை அறிந்து கொண்ட மாணவன்

                              ஐயா மகிழ்ந்தேன் நன்றி மொழிந்தேன்

                              மெய்யாய் இன்றே கண்கள் திறந்தேன்

                              பொய்யாம் வாழ்வின் போக்குகள் விடுத்து

                              நையா நூல்கள் நாளும் படிப்பேன்”                                            (ப.எண்:57)

நூல்களை வாசிப்பதோடு மட்டும் இல்லாமல் விலைகொடுத்து வாங்கி விழாக்கள் தோறும் பரிசளிப்பேன் என்றும் நூலகங்களில் விருப்பத்தோடு பொழுதைக் கழிப்பேன் என்று இளைஞன் கூறுவதாக இத்தொகுப்பினை முடித்து இதனை படிக்கும் மாணவர்கள் கட்டாயம் நூலகத்தின் சிறப்பை அறிந்து அவர்களும் நூலகம் சென்று நல்ல நூல்களைக் கற்றுத்தேர்வர் என்பதில் சிறிதும் ஐயமில்லை.

                                                               அதிகாரப்பூச்சிகள்

                                                              என்றென்றும் அம்மா

                                                            “தொட்டிலில் அழுத போது

                                                            அமுதப்பால் கொடுத்து

                                                            பள்ளிக்குச் சென்ற போது

                                                            பாடநூல் கொடுத்து

                                                            துன்பத்தேள் கொட்டிய போது

                                                            தைரியக்கோல் கொடுத்து

                                                            வாழ்க்கைப் போர்களத்தில்

                                                            அறிவுவாள் கொடுத்தவள்”                                   

                                                            “அம்மா”                                                                           (ப.எண்:18)

               “அன்னையும் பிதாவும் முன்னெறி தெய்வம் என்கிறது கொன்றை வேந்தன்” ஒரு தாயின் சிறப்பைப் போற்ற எத்தனை பாடல்கள் இயற்றினாலும், புகழுரை தந்தாலும் எதுவும் ஈடு செய்யலாகாது எவ்வளவு வயதானாலும் நம் அன்னைக்கு நாம் என்றும் குழந்தைகள் தான் அவர் தன்னலம் கருதாது அக்குழந்தையை வளர்க்க சமூகத்தில் என்ன பாடுபடுகிறாள்.

                              “ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்

                               சான்றோன் எனக்கேட்ட தாய்”                                                      (குறள்:69)

அன்னையின் சிறப்பை விளக்கும் பாடல்கள் நம் சங்க இலக்கியங்களில் ஏராளம் அப்படிப்பட்ட அன்னையை என்றும் மறவாது தம் கவிதை தொகுப்புகளில் அன்னையை போற்றக்கூடிய வகையில் கவிதை வரிகளை அவர்களுக்கு காணிக்கையாக்கி உலகில் பெரிதும் நாம் மதிக்கக்கூடியவர்கள் அன்னையே என்பதை சுட்டிக்காட்டி உள்ளார். இன்றைய இளைஞர்களுக்கு மிகவும் அவசியமான ஒன்றாகும். இவர்கள் அன்னையை மதிக்கக் கற்றுக்கொண்டால் முதியோர் இல்லங்கள் குறைந்துவிடும் அல்லவா….

                                                                           கல்வி

                                                            “நீதியைக் காத்திடவும்

                                                            கல்வி வேண்டும்

                                                            உயர்ந்தமதி பெற்றிடவும்

                                                            கல்வி வேண்டும்

                                                            அன்புதான் அவனியிலே

                                                            பெரிதென்றாலும்

                                                            அறங்கள் பல செய்திடவே

                                                            கல்வி வேண்டும்”                                                           (ப.எண்:84-85)

               இன்றைய கல்வி மாணவர்களின் அறியாமையைப் போக்கக்கூடியதாகவும் சிந்தனையைத் தூண்டக்கூடியதாகவும் இருக்கவேண்டும்.  புத்தக மூட்டைகளில் புதைந்து கிடக்காமல் சாதனை புரிவதற்கான வித்தைகளை புகட்டக்கூடியதாகவும், மனப்பாடம் செய்து மதிப்பெண் பெறும் சீரழிவை அகற்றக்கூடியதாகவும், நற்சிந்தனை வளர்க்கின்ற ஏற்றமிகு கல்வியை வகுக்க வேண்டும் என உறுதிபடுத்தியுள்ளார்.

                                                                           நரிமுகம்

                                                            “சுதந்திர நாட்டில்

                                                            நாசப் படைக்குத்

                                                            தலைமை தாங்கி

                                                            இட்லரின் ஆட்சியை

                                                            மற்றொருமுறை

                                                            அரகேற்றத் துடிக்கும்

                                                            சர்வதிகாரிகள்”

 

                                                            “அறிவாளிகளைத் தேடிவரும்

                                                            பதவிகளையும்

                                                            பணவழிகளையும்

                                                            பாராட்டுகளையும்

                                                            திரைமறைவில்

                                                            பறித்துக்கொள்ளும்

                                                            இடைத்தரகர்கள்”                                                            (ப.எண்:36-37)

               நரிமுகம் இக்கவிதை நமக்கு மனிதனின் புதிய முகங்களை அறிமுகப்படுத்துகிறது. தன் உண்மையான முகத்தை மறைத்து அரிதாரம் பூசிக்கொண்டு இருக்கும் அதிகாரிகளின் மாற்றுமுகத்தை நரிமுகமாக்கிய இக்கவிதை நமக்கும் ஒரு புதிய சிந்தனையைத் தூண்டுகிறது.

                                             புதுமைப்பெண்ணே எழுக….

                                                            “உதட்டுச் சாயம்

                                                            உடலைக் காட்டும்

                                                            அழகில் கவர்ச்சியில்

                                                            அவிழ்ந்து போகாமல்

                                                            அறிவில் சிறந்தே

                                                            ஆக்கம் வளர்க்க

                                                            ஆளுமை பெருக

                                                            அகிலம் செழிக்க”                                              (ப.எண்:66-67)                                                    

               இன்று வளர்ந்து வரும் புதுமைப் பெண்களுக்கு நல்வழியை எடுத்துக்காட்டியுள்ளார். நாகரீகம் என்பது உன் உடையில் அல்ல. நீ காட்டும் கவர்ச்சியிலும் அல்ல. இவைகளை எல்லாம் தாண்டி உன் அறிவை வளர்த்து ஆக்கம் பெற, உன் ஆளுமையை வளர்த்துக் கொண்டு அகிலம் செழிக்க பாடுபடு என இன்றைய நவீனப் பெண்களுக்கு எடுத்துக்கூறியுள்ளார்.

                                                            விழுதுகளின் ஆலமரங்கள்

                                                                           “ஓ ஆலமரமே

                                                                           நீ

                                                                           புத்திசாலிதான்

                                                                           வயது ஏறஏற

                                                                           உன்னைத் தாங்கித்

                                                                           தழைக்கச் செய்ய

                                                                           எத்தனை எத்தனை

                                                                           விழுதுகள்?

                                                                           உன் விழுதுகளிடம்

                                                                           உள்ள பொறுப்பு

                                                                           எல்லா பிள்ளைகளிடம்

                                                                           இல்லையே

                                                                           தள்ளாடும் வயதினிலே

                                                                           தவிக்காமை விட்டுவிட்டுத்

                                                                           தனிக்குடித்தனம்

                                                                           அல்லவா போகிறார்கள்?”                           (ப.எண்:92)

இன்று முதியவர்களின் நிலை, கடைசி காலத்தில் அனாதையைப் போல் தவிக்கவிடும் பிள்ளைகள், தாய், தந்தையின் உழைப்பால் வளர்ந்து அவர்களுக்கு ஆறுதலாக இருக்க வேண்டிய பிள்ளைகள் அவர்களை ஒரு சுமையாக நினைக்கிறார்களே இன்றைய பிள்ளைகளுக்கு நீங்கள் பெற்றோருக்கு உறுதுணையாய் இருக்க வேண்டும் என்பதை வெளிக்காட்டியுள்ளார்.

               இதுபோன்ற எண்ணற்ற கவிதைகள் கவிஞரின் பல உணர்வுகளில் எழுதப்பெற்று அவை நம் உணர்வுகளோடு கலக்க அவரால் முயன்ற முயற்சியை மேற்கொண்டுள்ளார்.

முடிவுரை:

               எழுத்தாளர் ஒளவை நிர்மலாவின் கவிதை தொகுப்புகள் அனைத்தும் இன்றைய சமூக நிலையை உள்ளதை உள்ளவாரே காட்டும் கண்ணாடியாகத் திகழ்கிறது. இவரது கவிதைகளில் சம காலத்தில் மூடிமறைக்கப்படும் உண்மைகளை வெளிப்படுத்துவது சமூகக் கொடுமைகளுக்காக நடத்தும் போராட்டங்களுக்கு ஆதரவாக கவிதைகளை இயற்றுவது, புதிய சமுதாயம் பற்றிய நம்பிக்கை, சமூக மாற்றதிற்கான ஒரு விழிப்புணர்வு இவைகளை உள்ளடக்கியவாறு சமூக அக்கறையோடு, பாடுபடும் இவர்.

                                                                           பெண்

                                             “தாயாகும்போது பாசத்தின் அருவி

                                             மாமியாரானால் துவேஷத்தின் திறவுகோல்

                                             தோழியானால் தேசத்தின் தென்றல்

                                             மனைவியானால் ஆற்றலின் கருவூலம்

                                             மகளானால் ஆசைகளின் எதிர்பார்ப்பு

                                             பாட்டியானால் அன்பின் அரசாட்சி

                                             பணிமனையில் அறிவின் நிலைக்களன்

                                             அதிகாரியானால் ஆணவ உறைவிடம்”…….                             (பெண்களின் கதை)

என பெண்ணின் பல அவதாரங்களுக்கு தாம் ஒரு சமூகப் போராளியாக, சமூகப் பிரதிநிதியாய் நின்று அவர்களின் அன்றாட வாழ்வில் நேரும் சிக்கல்களையும் வெளிச்சமிட்டு காட்டி அவர்களுக்கு ஒரு விழிப்புணர்வையும் ஏற்படுத்தியுள்ளார்.

               எழுத்தாளர்களின் தலையாய கடமை, சமுதாயத்தில் நிலவும் அனைத்துச் சிக்கல்களையும் நடுநிலையோடு உற்றுநோக்கி அவற்றிற்கான தீர்வையும் முன்வைப்பதாகும்.  இவரின் படைப்பின் கருத்துக்கள் எதிர்கால சமூகத்தை சிந்திக்க வைக்கவும், ஒரு நல்ல முன்னேற்றமான மாற்றத்திற்கும் வழிவகுக்கும் என்பதில் ஐயமில்லை.

பார்வை நூல்கள்

1. அணுத்துளி – ஒளவை நிர்மலா - விழிச்சுடர்ப்பதிப்பகம், காரைக்கால் (2014)

2. அதிகாரப்பூச்சிகள் - ஒளவை நிர்மலா –விழிச்சுடர்ப்பதிப்பகம், காஞ்சிபுரம்(2012)

3. கொன்றைவேந்தன்-ஒளவையார்

4. தடம்மாறும் வரப்புகள் - ஒளவை நிர்மலா-விழிச்சுடர்ப்பதிப்பகம், காரைக்கால் (2000)

5. திருக்குறள் - பரிமேலழகர் (உரை)

6. தொல்காப்பியம் - கௌராபதிப்பகம் - ஜெகதா தமிழ்ச்செல்வன்

7.நற்றமிழ்துளிப்பா நானூறு -ஒளவை நிர்மலா-விழிச்சுடர்ப்பதிப்பகம்,

    காரைக்கால் (2017)

8. நன்னூல் - சாரதா பதிப்பகம் - இரா.வடிவேலன் (2006)

9. நூலக ஆற்றுப்படை - ஒளவை நிர்மலா-விழிச்சுடர்ப்பதிப்பகம், காரைக்கால் (2016)

10. பெண்களின் கதை -ஒளவை நிர்மலா-விழிச்சுடர்ப்பதிப்பகம், காரைக்கால்(2013)