ஜூலை 2024 இதழுக்கு ஆய்வுக்கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன

ஒரு கடலோர கிராமத்தின் கதை  சித்திரிக்கும் வட்டாரத் தன்மைகளும்  பண்பாட்டு வெளிகளும்

முனைவர் ந. இரத்தினக்குமார், உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை, மதுரைக் கல்லூரி, மதுரை 09 Nov 2021 Read Full PDF

ஆய்வுச் சுருக்கம்

          தலித்தியம், பின்காலனியம், மானிடவியல் வந்த பிறகு இனக்குழுக்களின் வாழ்வியல் வெளிகளை எழுதும் போக்கு தமிழ்ச் சூழலில் விரிவு பெற்றது.  இவ்வெளிக்குள்  தமிழ் இஸ்லாமியர் வாழ்வையும் அதன் நெருக்கடிகளையும் முதன்மைப்படுத்திப் பல்வேறு படைப்புகள் வெளிவந்தன.  அதில் ‘தோப்பில் முகம்மது மீரானின்’ படைப்புகள், இஸ்லாமியரின் வாழ்வியலைக் கலாச்சாரத் தன்மையிலும் இனவரைவியல் கூறுகளின் அடிப்படையிலும் மிக நுட்பமாகப் பதிவு செய்தவை. அதிலும் குறிப்பாக ‘ஒரு கடலோர கிராம’த்தின் கதைக்குத் தமிழ் நாவல் வரலாற்றில்  தனித்த இடம் உண்டு. அந்நாவலின் தனித்துவங்களை இக்கட்டுரை உரையாட விழைந்துள்ளது.

திறவுச் சொற்கள் மானிடவியல், எடுத்துரைப்பு, கதையாடல், கட்டமைப்பு, இனக்குழுக்கள், சொல்லாடல்.

முன்னுரை

          தமிழில் தோப்பில் முகமுது மீரான், சல்மா, கீரனூர் ஜாகிர் ராஜா, எஸ். அர்ஷியா, மீரான் மைதீன் எனப் பலர் இஸ்லாமியரின் பண்பாட்டு வெளிகளை, அவர்களின் தனித்த இனவரைவியல் கூறுகளை, இரண்டாயிரத்திற்குப் பிறகு தீவிரமாக எழுதத் தொடங்கினர். இரண்டாம் ஜாமங்களின் கதை, மீன்காரத் தெரு, ஏழரைப்பங்காளி வகையறா, அஜ்னபி போன்ற நாவல்கள் உள்ளடக்கத்திலும் எடுத்துரைப்பியல் வடிவத்திலும் தமிழ்ச் சூழலில் பல புதிய திறப்புகளைச் சாத்தியப்படுத்தின. குறிப்பாகத் தோப்பில் முகம்மது மீரானின் படைப்புகள்  தமிழ்ப் படைப்புச் சூழலில் பெரும் கவனத்தைப் பெற்றவை.  தென்னகத்து இஸ்லாமியரின் வாழ்வியலை, வட்டாரப் பின்புலத்தில் எழுதும் போக்கு தோப்பில் முகம்மது மீரானின்  தனித்துவம். ‘முஸ்லிம் முரசு’வில் தொடராக வெளிவந்து பின்பு நூலாக, 1988இல் வெளிவந்தது, ‘ஒரு கடலோர கிராமத்தின் கதை’(1988)எனும் நாவல். அது கட்டமைக்கும் இஸ்லாம் வாழ்வியலும் சமூக அசைவாக்கங்களும்  தனித்து விவாதிக்கத்தக்கவை.  அவற்றை இக்கட்டுரை கவனத்தில் எடுத்துக் கொள்கிறது.  

தோப்பில் முகமது மீரானின் படைப்புகள்

தோப்பில் முகம்மது மீரான்(1944 – 2019) - கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தேங்காய்பட்டினத்தில் பிறந்தவர். தமிழ் இஸ்லாமிய எழுத்தாளர்களின் முன்னத்தி ஏர். நாவல்கள், சிறுகதைகள், மொழிபெயர்ப்புகள் எனத் தோப்பிலின் எழுத்துப் பயணம் பன்முகமாக அமைந்துள்ளது. இவர் எழுதிய, துறைமுகம்(1991), கூனன் தோப்பு(1993), குடியேற்றம்(2017), அஞ்சு வண்ணன்தெரு(2019) போன்ற நாவல்கள் மிகவும் பிரசித்தி பெற்றவை. இவரது சாய்வு நாற்காலி(1997)எனும் நாவலுக்கு சாகித்திய அகாதெமி விருது 1997இல் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

வணிகக் குடும்பம். உடன்பிறந்தோர் பதிமூன்று பேர். தந்தை அப்துல் காதருக்குக் கருவாட்டு வியாபாரம். கடல் கடந்தும் வணிகம் செய்பவர். கட்டுதிட்டான மதக்கட்டுப்பாடுகளைக் கடைபிடிப்பவர். காயல்பட்டின மீனவர்கள் பெரும்பாலும் செல்வந்தர்கள். அரபு இஸ்லாமியர்கள். இரண்டும் அவர்களை மிக உயர்ந்தவர்களாகக்  கருதிக் கொள்ளத் தூண்டியுள்ளது.  அந்த ஊரில் அரபிமொழிப் பேச்சிலும் எழுத்திலும் உண்டு. அடுத்த நிலையில்தான்  தமிழ், மலையாளம் எல்லாம். மரபு, செல்வம், மொழி என அனைத்து நிலைகளிலும் மற்றவர்களைவிடத் தாங்கள் உயர்ந்தவர்கள் என்ற நிலையிலே அந்த ஊரின் பெருங்குடிகள் இருந்திருக்கின்றன. அது மீரான் குடும்பத்தைக் கடும் நெருக்கடிக்குள்ளாகியிருக்கிறது. அவர் குடும்பம் மரபு வழிப்பட்ட அரபு  வழிவந்தவர்கள் அல்ல. தமிழ் இஸ்லாமியர்கள். இது தோப்பிலின் குடும்பத்திற்கு அங்கு பல நெருக்கடிகளைத் தந்துள்ளன. தோப்பிலின் தந்தை சொன்ன கதைகள், தோப்பில் மலையாளத்தில் படித்த பஷீர் கதைகள், ஊரின் பல தலைமுறை வாழ்க்கை எனப் பல அனுபவங்கள் புனைவுகளாகத் தோப்பில் மீரானிடம் திரட்சியடைந்துள்ளன.

  குறிப்பாகத் தனது வாழ்வியல் அனுபவங்களைக் கதைகளாகத் தனது படைப்புகளில் பொதிந்தடுக்கியுள்ளார் என்றே சொல்ல வேண்டும். அந்தளவிற்குத் தென்னகத்து இஸ்லாமியர் வரலாறும் வட்டாரப் பண்பாட்டியலையும் எழுதியுள்ளார். அதிலும் குறிப்பாக யாரும் கவனப்படுத்தாதத் தென்னகத்தின் கடல்சார் முஸ்லிம் மக்களின் வாழ்வியலைக் கதைகளாகப் படைத்ததில் முதன்மையானவா் தோப்பில் முகமது மீரான். ‘ஒரு கடலோரக் கிராமத்தின் கதை’  தோப்பிலின் முதல் நாவல்.   இதுவரைத் தமிழில் வெளிவந்துள்ள கடல்சார் வாழ்வியலைப் பேசிய நாவல்களில் தலையாய மூன்று நாவல்களைத் தேர்ந்தெடுத்தால் அதில் ஒன்று ‘கடலோர கிராமத்தின் கதையாக’ இருக்கும்.

 நாஞ்சில் நாட்டில் ஒரு பகுதியான தேங்காய்பட்டினத்தில் இரண்டாம் உலகப்போர் முடிந்த பிறகு கதை தொடங்குகிறது. கதை என்பது ஒரு ஊரின் கதைதான். மரபான மனிதர்களும் நவீன மனிதர்களும் புழங்கும் வெளி. அதனாலே அவர்களிடையே பொருத்தப்பாடுகளும்  விலகல்களும் உண்டு. பல்வேறு மனிதர்களின் வாழ்க்கையில் நடக்கும் சம்வங்கள்தான் கதைக்களம்.  தேங்காய்பட்டினத்தின் ஊர் வரலாற்றை, இஸ்லாமியர்கள் அங்கு குடிவந்து இனமாகத் திரண்டதை, காபீர்கள் வாழ்ந்த கதையை  நாவல் அடுக்கிச் செல்கிறது. சமூகம் என்பது பெருந்தொகுப்பு. அதில் பல்வேறு சிறு இனக்குழு மரபுகளும் அதன் பண்பாடுகளின் ஒழுகல்களும் இருக்கும்.  அவை அந்த வட்டாரத்தில் வாழும் மனிதர்களின் சமூக அசைவாக்கங்களாகச் செயல்படும்.  தோப்பில், தான் வாழ்ந்த ஊரில் பரதவர், நாடார், இஸ்லாமியர், பறையர், புலையர் என நான்கு இனத்தொகுதிகளின் பண்பாட்டிற்குள்ளும் அவர்களின் மொழிக்குள்ளும் பயணித்தவன் என்கிறார். பல்வேறு இனக்குழுக்களின் மொழி, வழக்காறு, நாட்டார்கூறுகள்,கிளைமொழிகள் இணைந்து தோப்பிலின்  நாவல்களுக்குப் பன்மைத் தன்மையை வழங்கியுள்ளன.

கதையாக்கமும் இனக்குழுப் பண்பாட்டியலின் விஸ்தரிப்புகளும்

பாரம்பரியமான ஒரு குடும்பத்தின் அடையாளங்களைப் புனைந்து அக்குடும்பம் காலப்போக்கில் வீழ்ச்சியை நோக்கி நகர்வதைச் சொல்வது நாவல்களின் ஒரு வகை. தமிழில் கரமுண்டார் வீடு, புத்தம் வீடு, தலைமுறைகள், ரப்பர், நுண் வெளிக்கிரகணங்கள் எனப் பல உதாரணங்கள் உண்டு.  அதையே ஒரு வட்டாரத்தை  மையமிட்டுச் சொல்வது இன்னும் விரிந்த தளம் கூடிவருவது. வட்டார இனத்தொகுதிகளை எடுத்துக்கொண்டு அதன் பழக்க வழக்கங்கள், சடங்குகள், கட்டுப்பாடுகள், நடவடிக்கைகள், ஒழுகலாறுகள்,நாட்டுப்புற வழக்காறுகள் என எடுத்துக்கொண்டு எழுதிச் செல்வது ஒரு முறையியல். கடல்புரத்தில், ரெயினிஸ் ஐயர் தெரு சிறந்த உதாரணங்கள். இதுபோன்ற கதையாடல் தன்மையில் அமைந்தவை ‘ஒரு கடலோர கிராமத்தின் கதை’. கடல்சார் இஸ்லாமியரின் இனத்தொகுதி, அதன் வாழ்வியல் நடைமுறைகள், அதன் சிக்கல்கள்  எனக் கதையாடுகிறது.

கடற்கரை இஸ்லாமிய மக்களின் வாழ்வியல் வெளி என்பது நிலக்குடி வாழ் முஸ்லிம்களின் வாழ்வியலோடு ஒப்பிடும்போது முற்றிலும் மாறுபட்டவை. அவர்களின் தொழில்சார் இடங்களும் பண்பாட்டுக் கூறுகளும் அது கட்டமைக்கும் சமூக அடையாளங்களும் மையப்பரப்பிற்குள் வரதாவை. அவற்றைக் கதையாக எழுதுவது என்பது அடிப்படையில் பல்வேறு சிக்கல்களுக்கும் விவாதத்திற்கும் உரியது. ஆனால், அதைத்தான் நாவலில் கதையாக்கம் செயதுள்ளார் மீரான். அதற்கு அவர் பின்பற்றிய மொழிலாவகமும் யதார்த்த எடுத்துரைப்பும்  அங்கதச் சுவையும் கதைப்பரப்பை சுவாரஸ்யமாக முன்னெடுத்துச் செல்கிறது. இதுவே நாவலின் பலம். இனிக் கதைப் பரப்பை விவாதத்திற்கு எடுத்துக் கொள்வோம்.

நாவலின் கதையாடல் வெளிகள்

 கிழக்கும் மேற்கும் பள்ளிவாசல்கள். தெற்கே கடல் இதற்குள் வாழும் தேங்காய்பட்டினத்து மக்கள்.  ஊர்த் தலைவராக இருக்கும் வடக்குவீட்டின் அகமதுகண்ணைச் சுற்றி கதை பின்னப்பட்டுள்ளது. ஊரின் முதலாளி அவர். குடிகளின் தலைவன். ஊரில் உள்ள அனைத்து  இடங்களிலும் தனது மதிப்பும் மரியாதையும் கௌரவமாக அல்லது அதிகாரமாக இருக்க வேண்டும் என்றும் விரும்புபவா். அவருடன் மனைவி, மகள் ஆயிஷா, மகன் பரிது, சகோதரி பாத்திமா என வடக்கு வீட்டில் வாழ்ந்து வருகின்றனர். மனைவி மென்மைப் போக்குடையவர். ஒரு மகள் கணவனை இழந்து வீட்டோடு இருக்கிறார். மனவளர்ச்சி குன்றிய ஒரு மகன். ஆகக் குடும்ப வெளியிலும் பொது வெளியிலும் அதிகாரத்தோடு இயங்கும் சூழல் அவருக்கு அமைந்து விடுகிறது. மசூதியில் தொழுகையை அவா் வந்த பின்புதான் தொடங்க வேண்டும். தனக்காகப் பிறா் காத்திருப்பதில் தனது மரியாதை இருப்பதாக நம்பும் அவா், டீக்கடை தொடங்கி மசூதி, பேருந்துநிலையம், ரேசன்கடை, சந்தை எனப் பொதுவெளி அனைத்திலும் தனது இருப்பை மையப்படுத்திக்கொண்டு நகர்பவர்.  ‘வாப்பு’ எனும்கூலித்தொழிலாளி தன் ஐந்து வயது மருமகனை ‘வா’ என்று ஒருமையில் அழைத்ததைக் கேள்விப்பட்டு, அந்த கூலித் தொழிலாளியை, வெள்ளிக்கிழமை மசூதிக்கு முன்பு உள்ள கல்லில் கட்டி வைத்து அடிக்கச் சொல்லும் ஆதிக்கக் குணம் படைத்தவர். லெப்பை, பரீது அவுக்காரு, கருப்பன் போன்ற பல மாந்தர்கள் அகமதுகண்ணின் கண் சிமிட்டலுக்கு இயங்குபவர்கள்.  நிலவுடைமையே கிராமத்தின் மீது தனது அதிகாரத்தை வைத்திருக்கிறது என்பதைப் புரிந்து கொண்டவர் அகம்மது கண்ணு. அவ்வதிகாரத்தை வலுப்படுத்தத் தீவிரமாக மதக் கடமைகளைப் பின்பற்றவும், பிறருக்கு வலியுறுத்தவும் செய்கிறார். பல நாள் தொழுகாமல் இருந்தவர்கள்  கூட, அகமதுவிடம் உதவிக்குச் செல்லும்போது அவற்றை தொழுகையை நிறைவேற்றிவிட்டே செல்வர்.

  இவா்களை மையப்படுத்தி ஊரின் கதைகள், இனக்குழுக்களின் உணவுப் பண்பாடுகள், உடை குறித்த தேங்காய் பட்டினத்தின் பார்வைகள், வீடுகளின் அமைப்புமுறைகள், தொழுகைமுறைகள் என நாவல் இஸ்லாமியப் பெருவாழ்வினை மிக அழகாகச் சொல்கிறது. ஆனாலும் ஊர் பழமையில் கட்டுண்டுகிடக்கிறது. கடும் சட்ட திட்டங்கள் கொண்ட, மரபினைத் தொடரும் சமூகம். ஊரில் உள்ள ‘தாங்கள்’ என்பவர் மந்திரத்துத் தாயத்துக் கட்டுபவர். சுவைநிரம்பிய பாத்திரமாக அதைப் படைத்திருப்பார் ஆசிரியர். அவர் மந்திரத்துச் செய்யும் வேலைகள் காலத்தால் பழையவை, நம்பத்தகுந்தவை அல்ல என்பதை அவரின் பல நடவடிக்கைகள் காட்டும். மனிதர்கள் மனப்பிறழ்விற்கே சென்றாலும் தண்ணீர் ஓதித் தாரேன். குடித்தால் போதும், (ஒரு கடலோர கிராமத்தின் கதை, ப.67)என்பவர். இது போன்ற தோப்பிலின் பகடி தனது சமூகம் சார்ந்த சுய எள்ளல் தனித்துவமாக நாவலில் வந்துள்ளன.

     சுறாப்புலி விற்கும் மஹ்முகமது மெகபூப்கான், பள்ளி ஆசிரியா் ஆகிய இருவரும் ஊரின் இறுக்கமான அமைப்பைக் கேள்வி கேட்பவா்கள். மாற்றத்தை விரும்பும் முற்போக்காளா்கள். இவா்களின் உரையாடலால் கிராம முதலாளியம் நெருக்கடிக்குள்ளாகிறது.  கல்விதான் தேங்காய்பட்டினத்து மக்களை வாழ்வின் அடுத்தகட்டத்தை நோக்கி நகர்த்தும்  என்பதில் நம்பிக்கை உடையவா்கள். ஆங்கிலப்பள்ளியை ஊருக்குள் நுழையவிடாது கட்டுத்திட்டான ஊரின் எதிர்ப்பு  ஒருபுறம் என்றால், மறுபுறம் பள்ளியைக் கொண்டு வருவதற்கான எல்லா நிலைகளிலும் போராடும் ஆசிரியா் கூட்டணி. இந்த இரண்டு முரண்களில், இஸ்லாமியா் வாழ்வு நகா்கிறது.  பழமையிலிருந்து விடுபடுவதற்கான காலத்தின் தேவைகள் அதிகரிக்கின்றன என்கிறது கதையாடல். அகம்மது கண்ணு கருப்பனை வைத்துப் பள்ளியை தீ வைத்து அழிக்கப்பார்க்கிறார். ஊரில் பலர் அறியாமையினாலே கல்வியை மறுக்கின்றனர்,அல்லது முதலாளியின் முடிவுக்கு ஏற்ப தங்கள் நிலைப்பாட்டை எடுக்கின்றனர். முற்போக்காளர்கள் சிறிய மாற்றமும் கல்வி வழியேதான நடைபெறும் என்பதில் உறுதியாக இருக்கின்றனர். மற்றவர்களின் மீது  அதிகாரங்களைச் செலுத்தும் வடக்கு வீட்டு முதலாளி இறுதியில் மனப்பிறழ்விற்கு உள்ளாகிறார். முதலாளியம், மதவாதம் இரண்டையும் ஆங்கிலக்கல்வி மாற்றும் என்பதால் அது தீவைத்து எரிக்கப்படுகிறது. இறுதியில் வடக்கு வீட்டு முதலாளியின் அதிகாரம் வீழ்ச்சியடைகிறது. அவமானங்களைச் சந்தித்த மாற்றுத் தரப்பினர் கிராம விடுதலையை சாத்தியப்படுத்துகின்றனா்.

                   இரண்டு கருத்தியல்கள் நாவலின் மையமாகின்றன. முரண்கள் தான் எத்தனை?தனி மனித முரண், பண்பாட்டு முரண், பழமைக்கும் புதுமைக்குமான முரண், மரபிற்கும் மீறலுக்குமான முரண், ஆணுக்கும் பெண்ணுக்குமான முரண் எனப் பல்வேறு முரண்கள் வழி நாவல் கட்டமைக்கப்பட்டுள்ளது. இருமை எதிர்வுகளால் பல்வேறு சம்பவங்கள் கதைக்கப்பட்டுள்ன. மதம் மற்றும் நிலவுடைமை எப்படி ஒரு சமூகத்தை இயக்குகிறது. ஒரு வட்டாரத்தைக் கட்டுப்படுத்துகிறது. மதநிறுவனம் குடும்ப அமைப்பிற்குள்ளும் பொதுவெளிகளிலும் மூட நம்பிக்கைகளையும் மனித மீறல்களையும் எங்ஙன் நிகழ்த்துகிறது,  நிலவுடைமையாளர்கள் எளியோரின் உழைப்பை எப்படிச் சுரண்டுகிறார்கள், இவையெல்லாம் கதையின் துணைப்பகுதிகள்.  கதைப்பரப்பில் பெண்களில் துயர்கள் சொல்லி மாளாதவை. அவை மிக நுட்பமாகப் பதிவு பெற்றிருக்கின்றன.

பெண்கள் – அபலைகள் – சூபிகள்

 பெண்கள் குடும்ப வெளிகளிலும் பொது வெளிகளிலும் முடக்கப்படுகிறார்கள். பெண்களின் அடையாளச் சிக்கல்கள் நாவலில் முக்கியமானதாகப் பரிணமிக்கிறது. கிழவரை மணம்முடிக்கும் இளம்பெண், மணமுறிவு செய்யப்பட்டு வாழும் அபலைகள், மனப்பிதற்றலுக்கு ஆளாகும் பெண்கள் எனக் கதைவெளி பரவுகிறது. ஆயிஷா தற்கொலை செய்து கொள்கிறாள். நாவல் துன்பியலிற்குச் செல்கிறது. பெண்கள் மத அடையாளத்திற்குள்ளும் நவீனமயமாக்கல் வெளிகளுக்குமான இரு வேறுநிலைகளில் போராடுகிறார்கள். இது நாவலின் முக்கியமான அடையாளச் சிக்கல். தேங்காய்பட்டினத்தில் மீனின் வாசனை அகன்றுவிடுவதில்லை. கடலின் ஓசையும்  நின்றும் விடுவதில்லை. அது போன்று பெண்களின் துயரங்களும் அங்கு முடிவதில்லை என்கிறது பெண்களின் கதைகள்.

மதம் கட்டுப்படுத்தும் இனக்குழுவாழ்வை, கல்வி மாற்றும். நவீன மாற்றங்களுக்கு மதம் விலக்காக இருக்க முடியாது, என்கிறது நாவல். தோப்பில் ஒரு நேர்காணலில்  "நாங்க வாழ்ந்த பகுதியில், உயர்நிலை மக்கள் இருந்தாங்க. புராதனமான பள்ளிவாசல் ஒன்று இருக்கும். பொருளாதார அளவில் உயர்ந்திருந்த சிலர், தாங்கள்தான் அரேபியாவில் இருந்து வந்தவங்க, குடும்பப் பாரம்பரியம் உள்ளவங்க என்கிற எண்ணத்தில், பள்ளிவாசலைச் சுற்றி வாழ்ந்து கொண்டு இருந்தாங்க. ஊருல ஒரு சுடுகாடு இருக்கு. அதை ஒட்டிதான் எங்க மூதாதையர் குடியிருக்காங்க. அந்த இடத்துக்குப் பேர்தான் தோப்பு. எங்க வீட்டு மதிலுக்குப் பின் பக்கம்தான் சுடுகாடு. தோப்பு என்கிற அந்த இடம் ஊரிலேயே பிற்படுத்தப்பட்டு ரொம்ப மோசமான இடமாகக் கருதப்பட்ட காரணத்தினாலதான், புரட்சியா தோப்பில் முகம்மது மீரான்னு பேர் வச்சுகிட்டேன்"(ஆனந்த விகடன்) என்று தெரிவித்துள்ளார். விளிம்பிலிருந்து மையத்தை நோக்கி நகர்ந்தவர் மீரான்.       

                      பெண்களின் மீதான   உரிமை மீறல்களை  நாவல் பதிவு செய்துள்ளது. மாற்றங்களைப் புதுமையை மதம் மறுத்து வருவதை உரிமை மீறலாகப் பார்க்கமுடியும். எல்லோரும் கல்விகற்கும் சூழல் உருவாவதை தடுக்க மேட்டிமைசக்திகள் கல்விகூடத்தை தீவைத்து எரிப்பது மிகப் பெரிய  மீறல். ஏழைகளை முன்னேற விடாமல் தடுப்பது அடிப்படை உரிமையைப்  பறிப்பதாகும். இவற்றை நாவல் பதிவு செய்வதுடன் உரிமையை மீட்கவும் குரல் கொடுப்பது நாவலின் பலம். நாவல்  சூஃபி மரபுகளை சில மாந்தர் வழியாகக் கவனத்தில் எடுத்துக் கொண்டுள்ளது சிறப்பு. இஸ்லாமியத்தின் பெருங்கொடை சூஃபி. அது பேசப்படும்போது அதன் ஞான மரபு புலப்படும். “இன்றைய இஸ்லாம், அரசியல் இஸ்லாமாகப் பரிணமித்திருக்கும் சூழலில் தத்துவ நோக்கில், சூபிக்கள் மறு கண்டுபிடிப்பு செய்யப்பட வேண்டும். கீழைத்தேயக் கோட்பாடு குறித்த மீட்டுருவாக்கத்திற்கும், கீழை நாடுகளின் அரசியல், சமூக, கலாச்சார செழுமைக்கும் இந்த கோட்பாட்டு ரீதியான மறு கண்டுபிடிப்பு முக்கியமான பங்களிப்பைச் செலுத்தும் என்பதில் சந்தேகமில்லை என்கிறார், எழுத்தாளர் எச்.பீர் முஹம்மது(கீழைத்தேயம்,ப.112).காயல்பட்டினம் முஸ்லிம்கள் பெரும் பணக்காரா்களாக வாழ்ந்தாலும் கட்டற்ற சுதந்திரம் என்பது குறைவுதான். இந்தப் பின்புலங்களில்தான் தோப்பில் முகம்முது மீரான் நாவல்கள் மானுட விடுதலையைப் பேசுகின்றன.

சோ.தர்மன், கடற்கரை முஸ்லிம்களின் வாழ்வைப் பாசாங்கில்லாமல் பதிவு செய்தவா் எனப் புகழ்கிறார். “தேங்காய்பட்டினத்து வட்டார மொழியைக் கொண்டு கடல்காற்றையும் உப்பு வாடையையும் எழுத்தில் கொண்டு வந்தவா். இஸ்லாமிய வாழ்வில் வெளித்தெரியாத பல விசயங்களை வெளிக்கொணர்ந்தவா். இதனால் அச்சமூகத்தால் அதிக எதிர்ப்பிற்கும் உள்ளானார். என்றாலும் தனது சமூகத்தில் ஏற்படவேண்டிய மாற்றங்களை உரத்து உரைத்தார். இஸ்லாமிய வாழ்வினைச் சிறுகதைகளை விட நாவல்களிலே பெரிதும் கவனப்படுத்தியவா். இஸ்லாமியர்களின் கண்ணீரையும் கடல் உப்பையும் சிறுதுளிகளாய் சேகரிக்காமல் மொத்தமாய் அள்ளி அடுக்கியவா். அதனால்தான் சோ. தர்மன் இஸ்லாமியர்களின் பாடுகளையும் பயணங்களையும் துாண்டில் கொண்டு பிடிக்காமல் வலைகொண்டு மொத்தமாய் எடுத்துப் படைப்பாக்கியவா்“(ஆனந்த விகடன்) என்றார். சோ. தர்மன் கருத்து ஏற்புடையதே. தோப்பில் தனது படைப்புகளில் எவ்வித சமரசத்திற்கும் விட்டுக்கொடுப்பிற்கும் இடம் அளிக்காமல் சுய விமர்சனத்தன்மையோடு தமது வாழ்வியலை எழுதியவர். கடும் எதிர்ப்பிற்கு உள்ளானபோதும் படைப்பிற்கு உண்மையாய் இருந்தவர்.

தொகுப்புரை

  • மரபு சார்ந்த பல்வேறு தடைகளை முதன் முதலில் தோப்பில் மாற்றினார் என்றே சொல்லலாம். இஸ்லாமியக் கலாச்சாரம் அதன் உண்மையான வடிவத்தில், நவீனத் தமிழ் இலக்கியத்தில் பதிவானது மிகக் குறைவு. அந்த, கலாச்சாரத்தைப் பொதுவெளிக்கு சிறப்பாக முன்வைத்தவர் தோப்பில்.
  •  இஸ்லாம் சார்ந்த வாழ்வை அவர் தன் எழுத்தில் விமர்சனப் பூர்வமாக அணுகினார். அந்த வாழ்வில் உள்ள இருள் மிகுந்த பக்கங்களைச் சுட்டிக்காட்டினார். “இஸ்லாமிய வாழ்வைப் பற்றி எழுதும்போது ஒன்று புனிதப்படுத்துகிறார்கள். அல்லது அவதூறு செய்கிறார்கள். இரண்டையும் செய்யாமல், அப்படியே எழுதியவர் தோப்பில். அவருக்குப் பிறகுதான் அந்தப் பாதையில் சல்மா, கீரனூர் ஜாஹீர் ராஜா ஆகியோர் உருவானார்கள்" என்கிறார் கவிஞர் மனுஷ்யபுத்திரன்.
  • சாய்வு நாற்காலி, துறைமுகம், கூனண் தோப்பு போன்ற நாவல்களும் இந்தப் பின்னணியில்தான் எழுதப்பட்டன. அந்த வகையில் அவற்றையும் மிக முக்கியமான நாவல்களாகக் கருதமுடியும். கடற்கரை சார்ந்த இஸ்லாமியர்களின் வாழ்வாதாரம் இனக்குழு அடிப்படையில் வர்க்க முரண்பாடுகளாலும் மேட்டிமைவாதத்தாலும் பின்னடைவுகளைச் சந்தித்து வந்தாலும் கல்வியால் பல முற்போக்கு நிலைகளை எட்டுவதை மீரான் நாவல்கள் நமக்குச் சொல்லிச் செல்கின்றன.

முடிவுரை

            ‘ஒரு கடலோர கிராமத்தின் கதை’ தேங்காய்பட்டின வட்டாரச் சமூகவியலையும் பண்பாட்டியலையும் விமர்சனப்பூர்வமாக அணுகியுள்ளது. குறிப்பாகத் தேங்காய்பட்டினத்து இஸ்லாமியர்களின் இனவரைவியல் கூறுகளையும் வரலாற்றுச் செய்திகளையும் உள்ளீடாகக் கொண்டிருக்கிறது. நெய்தல் திணையின் அழகியல் நாவலில் கலாப்பூர்மாகக் கைகூடி வந்துள்ளன, இது போன்ற காரணங்கள்  ‘ஒரு கடலோர கிராமத்தின் கதை“யை தமிழின் முக்கிய நாவலாக அடையாளப்படுத்தியிருக்கிறது.  

முதன்மை ஆதாரம்

தோப்பில் முகம்மது மீரான், ஒரு கடலோர கிராமத்தின் கதை, காலச்சுவடு, நாகர்கோயில், 01.

துணைமை ஆதாரம்

எச். பீர்முஹம்மது, 2017, எட்வர்ட் செய்த்தும் கீழைத்தேய இயலும், பாரதி புத்தகாலயம், பதிப்பகம் ,சென்னை -600 018.

பயன்பட்ட நூல்கள்

ஆ.சிவசுப்ரமணியன், 2014, இனவரைவியலும் தமிழ் நாவலும், நியு செஞ்சுரி புக்ஹவுஸ், சென்னை -98.

ஆ. தனஞ்செயன், 2015, விளிம்புநிலை மக்கள் வழக்காறுகள்(இனவரைவியல் ஆய்வு), நியு செஞ்சுரி புக்ஹவுஸ், சென்னை-98.