ஜூலை 2024 இதழுக்கு ஆய்வுக்கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன

கம்பனின் மொழியில் விழி

முனைவர் விமலா அண்ணாதுரை,  தலைவர், முதுகலைத் தமிழியல்(ம) உயராய்வுத்துறை, செல்லம்மாள் மகளிர் கல்லூரி, பச்சையப்பன் அறக்கட்டளை, சென்னை 09 Nov 2021 Read Full PDF

ஆய்வுச் சுருக்கம்;

இலக்கியங்களில் அழகியலுக்கும்.வருணிப்பதற்கும் பல்வேறு பொருட்களை உவமையாக கொள்வர்.அவற்றில் இயற்கை, பறவைகள், விலங்குகள் இவற்றோடு மனித உறுப்புக்களில் அதிகமாக வருணனைக்கு உட்பட்டது கண்கள் தான்.இத்தகைய விழிகளைக் கம்பனின் மொழியில் வருணிக்கப்பட்ட இடங்களையும் ,விதத்தினையும்  கட்டுரையில் விளக்கப்பட்டுள்ளது. 

திறவுச் சொற்கள்;

கம்பன்,காப்பியம்,விழி, முரண் சுவை , உயர்வு நவிற்சி

முன்னுரை ;

கவிதை அனுபவத்தை மட்டுமில்லாமல்,மொழியின் அழகியலை கருத்தாக்கத்துடன்  பேரிலக்கியமொன்றின் பெருமளவு பாடல்களில் பதிவு செய்தவன் மாக்கவி கம்பன் .படிக்குந்தோறும் தெவிட்டாத இன்பத்தையும் புதிய புதிய புதிர் முடிச்சவிழ்ப்புக்களையும் கம்ப காவியம் வெளிப்படுத்துகிறது . இதர இலக்கியங்களை விட பன்முக அதிர்வுகளை நிகழ்த்தும் வகையிலே புனையப்பட்டுள்ள காப்பியம் இராமாயணம். வட மொழிக் காவியத்தின் மொழிப்பெயர்ப்பாக அமைந்தாலும் , பல தருணங்களில் மூலப்பிரதியிலிருந்து விலகி தன் புதுமையான கட்டமைப்போடு ஈர்க்கின்ற  கவித்துவத்தை வழங்குகின்றது  கம்பனின் சொல்லாட்சி, கவிச்சிறப்பு, அவன் தான் சொல்ல வந்ததை விளக்க கையாண்ட உவமைகள், அணிகள் அத்தனையும் தமிழுக்கு கிடைத்த பெருமை. கம்பனின் கவிகளை ஒவ்வொரு முறை படிக்கின்ற போதும்  உயர்ந்த பொருள், தத்துவங்கள்  உள்ளே பொதிந்திருப்பதனை அறியலாம் .அத்தகைய கம்பனின் மொழியில் விழி குறித்த பார்வையினைப் பதிவு செயவதே இக்கட்டுரையின் நோக்கம்.

இலக்கியத்தில் கண்கள்;

கண்களின் முக்கியத்துவத்தை அக்காலம் முதல் இக்காலம் வரை படைக்கப்பெற்றுள்ள  இலக்கிய, இலக்கணங்கள் உணர்த்துகின்றன. எண்ணும், எழுத்தும் என இரு அறிவுக் கண்களை பெற்றவர்களே உயிர் வாழ்வோராக கருதப்படுவர் என, வள்ளுவர் குறிப்பிடுகிறார்.

'எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்

கண்ணென்ப வாழும் உயிர்க்கு’

தமிழில் காதலுக்கு கண் இல்லை என்ற வாக்கியம் உண்டு. கண்கள் வழியே பார்த்து  உள்ளம் ஒன்றோடு ஒன்று கலப்பதே உண்மையான காதல். எழுத்துக்களில் ஒலிக்கும் கால அளவைக் கூட, கண் இமைக்கும் நேரத்தை கொண்டு வரையறை செய்தனர் தமிழ் இலக்கண அறிஞர்கள். கல்வி அறிவு பெறாதோர் கண் இருந்தும் குருடர் என, வள்ளுவர் குறிப்பிடுகிறார்.
தன்னை இகழ்ந்த காரியாற்றுத்துஞ்சிய நெடுங்கிள்ளியை பார்த்து,

 'உறங்கிய புலியை காலால் இடறிய குருடன் போல

உயிரோடு திரும்புவது அரிது'

என பாடுகிறார் (புறம் 73) சோழன் நலங்கிள்ளி. இதன்மூலம் அறியாமையை போக்கும் விளக்காக, கண்கள் திகழ்கின்றன என்பதை அறிய முடிகிறது.

கம்பனின் மொழியில் விழி

உலக இலக்கியங்கள் எவற்றிலாவது கம்பராமாயணம் அளவிற்கு "கண்” குறித்த நயமான பதிவுகளைப் பார்க்க முடியுமா ? என்பது கேள்விக்குறியே விழி , நேத்திரம் , நயனம் , நாட்டம் என்பன இராமாயண காவியத்தில் இடம் பெறுகின்ற கண்ணுக்குச் சமமான பொருளைத் தரக்கூடிய சொற்கள். “ கண் ” பற்றித் பலவிதமான சொற்கள் கம்பனின் மொழி வங்கியிலிருந்து வீரியமான கற்பனைகளோடு வெளிப்பட்டுள்ளன .

கவித்துவ ஆளுமையின் குறிகாட்டிகளில் ஒன்றாக அமைவது  அணியலங்காரம்.  உவமை , உருவகம் , உயர்வு நவிற்சி , முரண் போன்ற அழகான உத்திகளின் ஊடாக கம்பன்  அணியலங்கார நயத்தினைப் படிமப்படுத்தியுள்ளான் . உவமை அணியினை வெளிப்படுத்தும் சந்தர்ப்பங்களில் கவித்துவம் வாய்ந்த கற்பனையைக் காண முடிகின்றது .

கண்ணுக்கான உவமானங்கள் ;

கண்ணுக்குப் பன்முக உவமானங்களை எடுத்தாள்கின்றான் . வாள் ( வாள் நெடுங்கண் , நீட்டுவாள் அனைய கண் ) ; வேல் ( அயில் விழி , நச்சுவேற் கருங்கண் ) கயல் ( செங்கயல் அனைநாட்டம் , அம்கயல் கருங்கண் ) குவளை ( குவளையன்னகண் , பானல் அம்கண்கள் ) , தாமரை ( கமலக்கண் , பங்கயம் ஒத்த செங்கண் ) நெருப்பு ( தழல் விழியாள் , கனல் கண்ணான் ) ; நஞ்சு ( நஞ்சு அடுத்த நயனியார் , நஞ்சு சூழ் விழியாள் ) கூற்றம் ( கூற்றனைய கண் , கூற்றுறழ் நயனங்கள் ) அம்பு ( கணைக்கருங்கண் ) மாவடு ( மாழை ஒண்கண் , மாவகிர் இவை எனப்பொலிந்த கண் ) தேன் ( தேனே புரை கண் ) வண்டு ( தும்பி எனச் சிலர் கண் ) மழை ( மழைக்கண் ) பறை ( பறை புரை விழிகள் ) என்பன கண்ணுக்கு உவமைகளாக அமைத்து நம்மை வியக்க வைக்கின்றான்

உவமிப்பதில் புதுமை ;

மரபான உவமானங்களை மாற்றியமைத்து , உவமேயங்களையே உவமானங்களாக்கும் புதுமையான பண்பினைக் கம்பனிடம் காணமுடிகிறது . வெறுமனே “ உருவகம் ” என்ற நிலையினையும் கடந்து புதிய உத்திகளோடு அதிசயிக்கச் செய்யும் வகையிலே அவற்றினை வெளிப்படுத்துகின்றான் .

இராம பிரானின் அம்பின் தன்மையை

" தையலார் நெடு விழியெனக் கொடியன சரங்கள் "

என்றும், .

மையவாம் குவளை எல்லாம் மாதர் கண்மலர்கள் பூத்த "

என்று வருணிக்கும் போதும் கம்பனின் மாற்றி யோசிக்கும் திறனை வியக்க முடிகின்றது .

முரண்;

முரண் சொற்களின் வழியே புதுமையான அர்த்தங்களைக் கட்டமைப்பதிலும் கம்பனின் ஆற்றல் அபாரமானது . பூக்கொய் படலத்திலே சோணையாற்றங்கரையில் மகளிர் மலர் கொய்யும் போது அவர்களது விழிகளும் பூக்களும் ஒரே அலைவரிசையில் சந்திக்கும் விதத்தை

" நஞ்சினும் கொடிய நாட்டம் அமுதென நயந்து நோக்கி "

என்று முரண்சுவை ததும்ப விவரிக்கின்றான்

நீரொடு நெருப்புக் கான்ற நிறை நெடுங்கண்கள்

என்று முரணான இரு பூதங்களின் சேர்க்கையாகக் கண்களைச் சுட்டுவதும் கம்பனுக்கே உரிய வித்தியாசமான கற்பனை

மேலும் அனுமனின் வாலிலே கொளுத்தப்பட்ட அக்கினியை சீதாப் பிராட்டி அணைக்கும் சந்தர்ப்பத்தில் ,

நெற்றிக் கண் வன்னியும் குளிர்ந்ததன்றே "

எனக் குறிப்பிடும் போது கற்பனையின் உச்சம் வியக்க வைக்கிறது .

உயர்வு நவிற்சி;

மன்மதனின் அழகினை வென்ற விழிகளை உடையவர்களாகவும் , கொடிய நஞ்சும் வியந்து பயப்படும் கண்களைக் கொண்டவர்களாகவும் பெண்களை உயர்வு நவிற்சியில் சுட்டும்

வேளை வென்ற விழிச்சியர் "

" நஞ்சும் அஞ்சும் விழி "

என்னும் தொடர்களிலும் கம்பனின் தனித்துவத்தை அடையாளங் காணலாம் .

காதொடு குழை பொரு கயற்கண்

என்று மகளிரின் விழிகள் காதுகளிலுள்ள தோடு வரை சென்று போர் செய்வதாகப் புனைந்துரைப்பது உயர்வு நவிற்சியின் உச்சமாக அமைகிறது .

விதேக நாட்டு மருத நிலங்களை வருணிக்கும் பாங்கு மனதிற்கு இதமளிப்பதாக அமைகின்றது . கழனிகளில் களை அகற்றும் மகளிரின் கண்களது நிழல் நீரிலே விழுகின்றது . பிம்பத்தை மீன் என்று கருதிய நாரைகள் . கூரிய அலகினால் கொத்தி நாணங் கொள்வதாகக் கம்பன் காட்சிப்படுத்துகிறான் .

 பள்ளி நீங்கிய பங்கயப்

   பழன நன்னாரை

   வெள்ள வான்களை களைவுறு

    கடைசியர் மிளிர்ந்த

    கள்ளவாள் நெடுங்கண்ணிழல்

    கயலெனக் கருதா

    அள்ளி நாணுறும் "

திருமாலாகிய இராமன் பெண்களின் கண்களின் வழியே புகுந்து இனிமையை நல்குவதால் " கண்ணன் " என்ற மூல நாமத்திற்குச் சான்றாகிறான் எனக் கம்பர் தற்புதுமையாகக் குறிப்பிடுகின்றார் .

வீதி வாய்ச் செல்கின்றான் போல்

விழித்திமையானது நின்ற

மாதரார் கண்களூடே

வாவுமான் தேரிற் செல்வான்

யாதினும் உயர்ந்தோன் தன்னை

யாவர்க்கும் கண்ணன் என்றே

ஓதிய பெயர்க்குத் தானே

உறுபொருள் உணர்த்தி விட்டான் "

காவியத்தலைவனது மூல நாமத்தினை வசீகரமான கற்பனை யூடாக வருவித்து கற்போருக்குக் கனிவை நல்கிவிடுகிறான் .

மேலும் இராமபிரானின் கருமை நிறத்திற்கும் புதுமையான விளக்கத்தினை வழங்க முனைகிறான்

 பஞ்சணி விரலினார் தம்

படை நெடுங்கண்கள் எல்லாம்

செஞ்செவே ஐயன் மெய்யில்

கருமையைச் சேர்ந்தவோதாம்

மஞ்சன மேனியான் தன்

மணி நிற மாதரார் தம்

அஞ்சன நோக்கம் பார்க்க

இருண்டதோ அறிகிலேமால் "

வேல் போன்ற கருவிழிகள் பதிந்ததால் திருமேனி கருமை நிறம் பெற்றதோ ? மைதீட்டிய கண்கள் பதிந்ததால் கருமையானதோ ?. என்று தெரியவில்லை எனக் கம்பன் வியக்கும் தன்மை அலாதியானது .

சீதையின் விழியழகு ;

 காவிய நாயகியான சீதையின் விழியழகினை கம்பநாடன் பன்முகப் பரிமாணங்களில் எடுத்து விளம்பியுள்ளான் . ஆடவரின் கண்களுக்கு விருந்தாக அமைகின்ற மகளிரது விழிக்கொரு விழவு " எனச் சீதை சிறப்பிக்கப்படுகிறாள் . சூர்ப்பனகையானவள் இராவணன் செவிகளில் ஊற்றும் சோபன மதுமொழிகளிலும் சீதையின் அழகு மிளிர்கிறது .

வதனம் மைதீர் கஞ்சத்தின் அளவிற்றேனும்

           கடலிலும் பெரிய கண்கள் "

 என முரண் அணி ததும்ப விழிக்கீர்த்தி பதிவாகிறது .

கொல்லும் வேலும் கூற்றமும் என்னும் இவையெல்லாம்

வெல்லும் வெல்லும் என்னமதர்க்கும் விழி கொண்டாள் "

எனவும் மிதிலாவின் நயன எழில் விதந்துரைக்கப்படுகின்றது . கன்னிமாடத்திலே " கண்ணொடு கண்ணினைக் கவ்விய " தலைவனை அகத்திலே இருத்தி காமத்திலே வெதும்பும் பிராட்டி விழிக்குள் நுழைந்தவனை காணமுடியாமற் தவிக்கும் வேதனையை

" கண்ணுளே இருந்த போதும்

என் கொல் காண்கிலாவே "

என்று கம்பன் பதிவு செய்யும் பாங்கு அற்புதமானது .

அவலச்சுவையில் விழி:

அசோகவனத்திலே தனித்துத் துன்புறும் காலத்திலும் உறக்கமும் விழிப்புமற்ற கண்களோடு சீதாபிராட்டி காணப்படுவதை

" துயில் எனக் கண்கள் இமைத்தலும் மகிழ்தலும் துறந்தாள்

என்று அவலச் சுவை வெளிப்படக் காட்சிப்படுத்துகின்றான் .

பெரிய வாய்ப்பரவை ஒவ்வா

பிறிதொன்று நினைத்துப் பேச

உரிய வாய் ஒருவர் உள்ளத்து

ஒடுங்குவ அல்ல உண்மை

தெரிய ஆயிரங்கால் நோக்கின்

         தேவர்க்கும் தேவன் என்னக்

கரியவாய் வெளிய ஆகும்

வாள் தடங் கண்கள் அம்மா

என்னும் செய்யுளில் சீதையின் கண்களை விடப் பெரிய பொருளொன்றை ஒருவர் உள்ளத்திலே நினைப்பது அரியதாகும் என்று வியப்பதும் நயம் செறிந்தது

வனம்புகு படலத்தில் கானகத்தின் வளத்தினை இராமன் சீதைக்குக் காண்பித்து மகிழ்கிறான் . மயில்களும் மான்களும் சீதாபிராட்டியின் கண்களின் அருகே வருவதை இராமன் குறிப்பிடும் தருணமும் வசீகரம் மிகுந்ததாகவே அமைகின்றது .

நெய்ஞ்சிறை நெடுவேலின் நிழலுறு திறமுற்றிக்

 கைஞ்ஞிறை நிமிர் கண்ணாய் ! கருதின இனமென்றே

மெய்ஞ்ஞிறை விரிசாயல் கண்டும் நின் விழி

மஞ்ஞையும் மடமானும் வருவன பலகாணாய் ‘”

வேலின் சாயலும் , துன்புறுத்தும் திறமையும் , கையளவு அடங்காத் தன்மையும் உடைய சீதாப்பிராட்டியின் விழிகளை தமது இனமெனக் கருதிய மானும் , மயிலும் அருகணைவது விழிகளின் சிறப்பிற்கு அணி செய்கின்றது .

அரக்கியரின் விழியழகு;

இலங்கை மாநகரின் அரக்கியர் கூட அழகுமிக்க கண்களை உடையவராகவே காட்சிப்படுத்தப்பட்டுள்ளனர் . கயலுக்கும் , யமனுக்கும் , மன்மதன் அம்புகளுக்கும் ஒப்புமையில்லாத விழிகளோடு மதுவருந்தி மயக்கம் கொள்ளும் அரக்கியரைக் களியாட்டுப் படலத்திலே காணமுடிகின்றது .

" கயல் காலன்வைவேல்

காமவேள் கணை என்றாலும்

இயல் வருகிற்கிலாத

நெடுங்கணார் "

என்று அரக்கியரின் நயனத்தைக் கம்பநாடன் எழில் ததும்பப் பதிவு செய்கிறான் . மேலும் அரக்கியர் துயில் நீங்கி எழும் அழகினை அனுமனின் தரிசனமாக காட்சிப்படுத்தும் போதும் நயத்தோடு

மெள்ளவே இமைநீக்கி அஞ்சன விழுது வேய்ந்த

கள்ளவாள் நெடுங்கண் என்னும் வாளுறை கழிக்கின்றாரை "

என்று உறையிலிருந்து வெளிப்படும் வாளாக உறக்கம் நீக்கும் விழியினைச் சுட்டுகின்றான் .

முடிவுரை ;

கண்ணிலான் பெற்றிழந்தான் என உழந்தான் என தசரதனின் அவலத்தினை உணர்த்தும் போதும்  விழியின் அனுபவத்தை நன்கு உணரச் செய்து விடுகின்றான் . இவ்வாறு கம்பகாவியம் முழுமையும் விந்தை மொழி வங்கியான கம்பனிடம் “ விழி " குறித்த பதிவுகள் உன்னத ஆளுமையோடு திகழ்ந்துள்ளன . தீராத தேடலோடு நோக்கின் தெவிட்டாத பாடல்களில் ஆயிரமாயிரம் கருத்தாடல்களை வெளிக்கொணர முடியும்.

பார்வை நூல்கள்;

  1. கம்பன் எடுத்த முத்துக்கள்- பேராசிரியர் அ.ச.ஞானசம்பந்தன்
  2. கம்ப ராமாயணம் மூலமும் உரையும் – வ..த. இராமசுப்ரமணியம்
  3. கம்ப ராமாயணம் மூலமும் உரையும் வை.மு. கோபால கிருஷ்ணமாச்சாரியார்