ஜூலை 2024 இதழுக்கு ஆய்வுக்கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன

முத்தொள்ளாயிரத்தில் மெய்ப்பாடுகள்

முனைவர் வெ.ரா.மீனாட்சி, உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை. அக்சிலியம் கல்லூரி, வேலூர் 09 Nov 2021 Read Full PDF

ஆய்வுச்சுருக்கம்

      செந்தாமரைக்காடு போன்று செழித்த தமிழ் இலக்கியச் சோலையில் காலந்தோறும் பலவகைச் செடிகளும், கொடிகளும், மரங்களும் பூத்துக்குலுங்கி தமிழ்ச்சோலையை அழகுற மணங்கமழச் செய்துள்ளன. 3500 ஆண்டுகள் இடையறாத, தொய்வில்லாத இலக்கிய வரலாற்றுத் தொடர்ச்சியுடைய தமிழகத்தில் முத்தாய்ப்பாக மணிமுடி தரித்து நல்லாட்சிப் புரிந்த மூவேந்தர்களைப் போற்றிப் பாடிய அற்புதப் பனுவலாகிய முத்தொள்ளாயிரம் தமிழ்ச்சோலையின் மலா்வனம். தன்னேரில்லாத செழுந்தமிழில் முகிழ்ந்துள்ள வரலாற்று நூலாகிய முத்தொள்ளாயிரம் குறித்தும், முடியுடை மூவேந்தர்களாகிய சேர, சோழ, பாண்டியர்கள் வரலாற்றை முரசறைந்து அறிவிக்கும் இந்நூலில் காணலாகும் எண்வகை மெய்ப்பாடுகள் குறித்தும் இவ்வாய்வுக் கட்டுரையானது எடுத்தியம்பியுள்ளது.

திறவுச்சொற்கள்

      குடுமியவே, சாலோகம், பொங்கோதம், மன்னீர், அலங்கலம், விளங்கிழாய், போந்தியம்ப, கோற்றெடுத்த, பரிசயம், ஏமான்.

முத்தொள்ளாயிரத்தில் மெய்ப்பாடுகள்

      முடியுடை மூவேந்தர்கள் பண்டைத் தமிழகத்தை சீரோடும், சிறப்போடும் ஆண்ட செய்தியினை சங்க இலக்கியங்கள் தெள்ளத் தெளிவாக எடுத்துரைக்கின்றன. அவ்வரிசையில் செழுந்தமிழர்கள் அகவாழ்க்கையில் பண்பட்டு, புறவாழ்க்கையில் மேம்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க செய்தியினை அறிய உதவும் நூல்களுள் தலைசிறந்து விளங்குவது முத்தொள்ளாயிரம், இந்நூல் சேர, சோழ, பாண்டியர்களைக் குறித்து தொள்ளாயிரம் பாடல்கள் வீதம் மூன்று தொள்ளாயிரம் பாடல்களை உள்ளடக்கியது. ஆனால் தற்போது இதில் 109 பாடல்கள் மட்டுமே கிடைக்கப் பெற்றுள்ளன. முத்தொள்ளாயிரத்தில் காணலாகும் மெய்ப்பாடுகளின் சிறப்புகளை முன்னிறுத்துவதாய் இக்கட்டுரை அமைகிறது.

மெய்ப்பாடு

      உள்ளத்தில் எழும் உணர்ச்சி குவியல்கள் மெய்ப்பாடுகள் எனப்படும். பழம்பெரும் இலக்கண நூலாகிய தொல்காப்பியப் பொருளதிகாரத்தில்,

      “நகையே அழுகை இளிவரல் மருட்கை

        அச்சம் பெருமிதம் வெகுளி உவகையென்று

 அப்பால் எட்டாம் மெய்ப்பாடென்ப” 1

                        (தொல்,பொருள், மெய்ப்பாட்டியல் நூ : 247)

என்ற நூற்பா மெய்ப்பாடுகளை வரையறுத்துள்ளது. இவ்வரையறையில் சுட்டியுள்ளபடி முத்தொள்ளாயிரம் பாடல்களில் காணலாகும் எண்வகை மெய்ப்பாடுகள் குறித்த செய்யுட்களை இவண் நோக்குவோம்.

நகை

எள்ளல், இளமை, பேதமை, மடம் என்னுமிடங்களில் நகைச்சுவை வெளிப்படும். தேரில் பவனி வரும் சேர அரசனின் அழகியலைக் கண்டுவக்க எழில் கொஞ்சும் மங்கை ஓடோடி வந்தாள். இளமை வாசலில் இன்முகத்துடன் அடியெடுத்து வைக்கும் எழிற்கன்னிகை ஆயிற்றே அப்பதுமை! காவல் நாயகனைக் கண்டால் கன்னி உள்ளம் நிலை தடுமாறும் எனக் கருதி தாய் அவளை இல்லினுள்ளே தள்ளி கதவடைக்கிறாள். தாய் அகன்றபின் தாங்கொணா பேராவலுடன் மகள் கதவைத் திறக்கிறாள். இவ்வாறு தாயும், மகளும் மாறி, மாறி கதவை மூடுவதும், திறப்பதுமாகிய இக்காட்சி முத்தொள்ளாயிரத்தில் நகைக்குரிய செயலாக சித்தரிக்கப்பட்டுள்ளது.

தாயர் அடைப்ப மகளிர் திறந்திட

 தேயத் திரிந்த குடுமியவே! ஆய்மலர்

 வண்டுலா அம்கண்ணி வயமான் தேர்க்கோதையை

 கண்டுலா அம்வீதிக் கதவு” 2  (முத்தொள்ளாயிரம் பா : 1)

தாய் அடைக்க, மகள் திறக்க காதல் பயிர் செழித்தோங்க கதவுக்குமிழ் தேய்ந்தது நகையுடன் கூடிய விந்தையாகிறது. இதுபோன்றே பாண்டிய மன்னன் எழில் உலா வருவதை அறிந்த கன்னி யானையை தன் வீட்டு சாளரத்தின் அருகே நடந்து பவனி வருமாறு வேண்டுகிறாள். இந்நிகழ்வு அவளுடைய பேதமையால் உண்டானதாகும். இதுவும் நகைப்பிற்குரியதாகிறது.

துடியடித் தோற்செவித் தூங்குகைந், நால்வாய்ப்

 பிடியே! யான்நின்னை இரப்பல் – கடிகமழ்தார்ச்

 சேலேக் வண்ணனொடு சேரி புகுதலும்

 எம் சாலோகம் சாரநட” 3 (முத்தொள்ளாயிரம் பா : 72)

அழுகை

இளிவு, இழவு, அசைவு, வறுமை ஆகிய இடங்களில் அழுகையானது வெளிப்படும். தலைவியானவள் தன் தோழியிடம் நான் குழந்தையாய் இருக்கும் போது உறையூர்க் காவலனாகிய சோழ வேந்தனை மணம் புரிந்து கொள் எனக் கூறி, கூறி தாய் என் உள்ளத்தில் ஆசையை வளர்த்தாள். பருவமங்கையாகிய இன்றோ அவன் மீது நான் மையல் கொண்டதை அறிந்த என் அன்னை என்னை பலவாறாக வைகிறாள். சோழன் மீது நான் கொண்ட காதல் கானல் நீராகி கண்ணீர் விட வைத்துவிட்டதே எனக் கூறி அழுகிறாள்.

      ”அலங்குதார்ச் செம்பிலன் ஆடெழில்தோள் நோக்கி

 விலங்கியான் வேண்டா வெனினும் நலந்தொலைந்து

 பீர்மேற்கொளல் உற்ற பேதையர்க் கென்வாய்ச் சொல்

 நீர்மேலெழுந்த நெருப்பு” 4 (முத்தொள்ளாயிரம் பா : 28)

அன்னை சோழ வேந்தனைப் பார்க்கக்கூடாது என்று கோல் கொண்டு அடித்து வன்மையாகக் கண்டிக்கிறாள். அக்கம் பக்கத்தவர்களும் என் காதல் நோய் கண்டு என்னை இழித்தும், பழித்தும் அலர் தூற்றி அழ வைக்கின்றனர். நான் கிள்ளி வளவனைக் கூடாமல் இருக்க இவர்கள் அனைவரும் என்மீது பழி கூறுகின்றனர். செய்யாத குற்றத்திற்காக நான் தண்டனைப் பெறுவது என் கண்களில் நீரை வரவழைக்கின்றது என தலைவி புலம்புகிறாள். இந்நிகழ்வு அழுகைக்கான உதாரணமாகிறது.

அன்னையும் கோல்கொண்டு அலைக்கும் அயலாரும்

 என்னை அழியும் சொல் சொல்லுவர் – உள் நிலைய

 தெங்குண்ட தேரை படுவழிப் பட்டேன் யான்

 திண்தேர் வளவன் திறத்து” 5 (முத்தொள்ளாயிரம் பா : 8)

இளிவரல்

      மூப்பு, பிணி, வருத்தம், மென்மை ஆகிய இடங்களில் இளிவரல் தோன்றும். முத்தொள்ளாயிரத்தில் பல பாடல்கள் இளிவரல் சுவையில் அமைந்தவை. சோழன் உலா வருகிறான். அவனைப் பார்க்க ஒருத்தி சென்று அவள் தன் நெஞ்சத்து நினைவுகளைக் கூறுகிறாள். கிள்ளி வளவன் உலா வருகிறான். அவன் மீது காதல் கொண்ட என் நெஞ்சம் அவனைக் கண்டு களிக்கத் துடித்து நெகிழ்கிறது. ஆனால் மறுபக்கம் பெண்மைக்கே உரிய நாணம் அவனைப் பார்க்க விடாமல் தடுக்கிறது. கிள்ளியைக் காண வேண்டுமே என்று என் கண்கள் கவலையடைய பார்க்காதே என்று நாணம் என்னைப் பிடித்திழுக்க நள்ளிரவிலும் என் நெஞ்சம் அமைதியின்றி தூக்கமின்றி பரிதவித்து துடிக்கிறது. இச்செயல் இருதலைக் கொள்ளி எறும்பிற்கு உவமைப்படுத்தப் பட்டுள்ளது. இருதலைக்கொள்ளி எறும்பின் நிலைமிகக் கொடியது. மூங்கில் குழாயின் இருபுறமும் நெருப்பு எரிய இருபக்கமும் செல்ல இயலாது தவிக்கும் எறும்பின் நிலையைத் தலைவி அடைந்ததாக அமைந்த பாடல் இளிவரல் சுவையையொத்தது.

      “நாணொருபால் வாங்க நலனொரு பாலுண்னெணகிழ்ப்ப

        காமரு தோட் கிள்ளிக்கென் கண்கவற்ற – யாமத்

        திருதலைக் கொள்ளியின் உள்ளெரும்பு போலத்

        திரிதரும் பேருமென் நெஞ்சு” 6 (முத்தொள்ளாயிரம் பா : 100)

மனமோ சோழனைக் காணுக எனக் கால்களுக்குக் கட்டளையிடுகிறது. கால்கள் வாசலுக்குச் செல்கின்றன. நாணம் தடுத்து உள்ளிழுக்கிறது. இப்படி மனம் முன்னே செல்ல, நாணம் பின்னே இழுக்க, கண்களோ அவனைக் காணாது துன்புற்றுக் கலங்குகின்றன. மூங்கில் குழாய்க்குள் அகப்பட்ட எறும்பு போன்றதே தன் நிலையும், வாசலுக்கும், வீட்டுக்குமாய் சென்று, மீண்டு உழலுகிறது தன் நெஞ்சு என்று வருந்துகிறாள் தலைவி. இச்செய்யுள் இளிவரலை ஏற்படுத்தும் வண்ணம் உள்ளது.

      ”புகுவார்க்கு இடங்கொடா போதுவார்க்கு ஒல்கா

        நகுவாரை நானி மறையா இருகரையின்

 ஏமான் பிணைபோல நின்றதே கடலார்

 கோமான் பின்சென்ற என்நெஞ்சே” 7 (முத்தொள்ளாயிரம் பா : 92)

      உலா வந்த பாண்டிய மன்னனைக் கண்டு உள்ளம் பறிகொடுத்தாள் நங்கை ஒருத்தி காதல் கணை பிணைக்கப்பட்ட அவள் நெஞ்சமானது தென்வைக்கோமானின் பின்னால் ஓடோடிச் சென்றது. ஆனால் மன்னவன் அவள் நெஞ்சமானது தன் பின்னால் வந்ததை உணராது அரண்மனைக்குள் சென்று விட்டாள். அரண்மனை வாயிலில் நின்ற அவளது நெஞ்சு வருவோர்க்கு வழிவிடாமல் வாசலிலே நின்றது. அவளது நிலையைக் கண்டு அனைவரும் பரிகசித்தனர். அவளது இள நெஞ்சு தாழ்ந்த கரையில் உள்ள அம்பு தைத்த பெண்மானைப் போல் நைந்து நின்றது. என்று எண்ணி வருந்தும் காட்சி இளிவரலை விதந்தோதும்  காட்சியாக முத்தொள்ளாயிரம் வர்ணிக்கிறது.

மருட்கை

      புதுமை, பெருமை, சிறுமை, ஆக்கம் போன்ற இடங்களில் மருட்கை வெளிப்படும். சோழ மன்னனைக் கனவில் காணமுடியாதபடி கண்கள் உறக்கத்தால் மூடிக்கொண்டன. நேருக்கு நேராக தெருவிலோ சோழன் உலா வந்தாள். அவனை ஏறிட்டுப் பார்க்க முடியாதபடி என் பெண்மைக்கே உரிய நாணம் என்னை முழுமையாகத் தடுத்துவிட்டது. சோழனின் செங்கோலும் வெண்கொற்றக் குடையும் என் பார்வையிலிருந்து நழுவின. என் கண்கள் நாணத்தால் தீராதக் குற்றத்தை ஏற்படுத்தி விட்டனவே.இதென்ன புதுமை என்று தன் தோழியுடன் ஒரு இளநங்கை முறையிடுவதாக அமைந்த பாடல் மருட்கை சுவையை வெளிப்படுத்தும் விதத்தில் அமைந்துள்ளது.

      ”கனவிலும் காணகொடா கண்ணும் கலந்த

 நனவினுள் முன்விலக்கு நாணும் – இனவங்கம்

 பொங்கோதம் போலும் புகாஅர்ப் பெருமானார்

 செங்கோல் வடுப்படுப்பச் சென்று” 8 (முத்தொள்ளாயிரம் பா : 32)

அச்சம்

அணங்கு, விலங்கு, கள்வர், இறையெனப் பிணங்கல் ஆகிய விடங்களில் அச்சமானது வெளிப்படும். முத்தொள்ளாயிரத்தில் வர்ணிக்கப்படும். சேர, சோழ, பாண்டிய மன்னர்களின் போர் வன்மைகள் பகைவா்களுக்கு அச்சம் தரும் விதத்தில் உள்ளன. சேரனுடைய பட்டத்து யானை பகையரசர்களின் வெண்கொற்றக் குடையினைப் பிடுங்கி எறிந்து அதனை நொறுங்கச் செய்கிறது. அதோடு மட்டுமல்லாது வானில் தெரியும் முழுமதியையும் வேற்றரசன் ஒருவனுடைய வெண்கொற்றக் குடை என்று எண்ணிக் கொண்டு அதையும் பிடுங்கி எறியத் துதிக்கையை நீட்டுகிறது. இது அச்சம் தரும் விதமாக உள்ளது.

வீறுகால் மன்னர் விரிதாம வெண்குடையைப்

 பாற எறிந்த பரிசயத்தால் – தேறாது

செங்கண் மாக்கோதை சினவெம் களியானை

 திங்கள் மேல் நீட்டுத்தன் கை” 9 (முத்தொள்ளாயிரம் பா : 19)

வெற்றிவாகை சூடி சேர மன்னனுடைய யானைப்படையானது ஈட்டியும், வேலும் பொருந்திய கோட்டை வாசல் கதவுகளை முட்டி மோத அந்தக் கதவுகள் உடைந்து நொறுங்கி யானையின் தந்தக் கொம்புகளில் குத்திக் கொள்கிறது. இப்படி தந்தங்களில் கோட்டைக் கதவுகளைத் தூக்கிக்கொண்டு யானையானது நிற்கும் வெருவந்த தோற்றம் அச்சமூட்டும் விதத்தில் உள்ளது.

அயில்கதவம் பாய்ந்துழக்கி ஆற்றல்சால் மன்னர்

 எயில்கதவம் கோத்தெடுத்த கோட்டால்- பனிக்கடலுள்

 பாய்ந்தோய்ந்த நாவாய் போல் தோன்றுமே எம் கோமான்

 காய் சினவேல் கொதை களிறு” 10 (முத்தொள்ளாயிரம் பா : 20)

பெருமிதம்

      கல்வி, தறுகண், இசைமை, கொடை போன்ற இடங்களில் பெருமிதம் தோன்றும்,

பலயானை மன்னீர் படுதிறைதந்து உய்ம்மின்

 மல்லல் நெடுமதில் வாங்குவில் பூட்டுமின்

 வள்ளிதழ் வாடாத வானோரும் வானவன்

 வில் எழுதி வாழ்வார் விசும்பு” 11 (முத்தொள்ளாயிரம் பா : 17)

இப்பாடல் பெருமித சுவைக்கு உதாரணமாகும். பல யானைகளைக் கொண்டுள்ள அரசர்களே உங்கள் கையில் கிடைக்கும் திரைப் பொருள்களை எம் மன்னருக்குக் கொடுத்து விடுங்கள். அவருக்கு கட்டுப்பட்டவர் என்பதை அறிவிக்க உமது உயர்ந்த அரண்களின் சுவர்களில் சேரனது கொடியாகிய வில்லினது வடிவத்தைப் பொறித்து வையுங்கள். தேவர்களும் எம் வேந்தனது விற்கொடியை உயர்த்தி வானுலகில் வாழ்கின்றனர் என்பதை மறக்க வேண்டாம் என்று சேரனின் வீரம் எடுத்துரைக்கப்படுகின்றது.

முந்தங்க கம்பாமணி வீசும் போலையாத்

 திங்கள் அதற்கோர் திலகமா – எங்கணும்

 முற்றுநீர் வையம் முழுது நிழற்றுமே

 கோற்றப் போர்க் கிள்ளிகுடை” 12 (முத்தொள்ளாயிரம் பா : 47)

இப்பாடலில் சோழ மன்னனின் நல்லாட்சி பெருமிதச் சுவையோடு எடுத்துரைக்கப்பட்டுள்ளது. சோழ மன்னன் உலகம் முழுமைக்கும் பாதுகாவலனாக விளங்கியவன். அவனுடைய வெண்கொற்றக் குடை மந்தார மலையினைக் காம்பாகவும், நீலநிற வயிரக்கல் போல ஒளியுடைய கானத்தை ஓலையாகவும் கொண்டு நிலவு திலகமாக அமையக் கடல் சூழ்ந்த உலகம் முழுவதற்கும் அருள் நிறைந்த நல்லாட்சி வழங்கியது என்பதை இப்பாடல் விளக்கியுள்ளது.

வெகுளி

உறுப்பறை, குடிகோள், அலை, கொலை போன்ற இடங்களில் வெகுளி தோன்றும். சோழன் எந்த நாட்டின் மீது படையெடுத்தாலும் பேரழிவு தான். போர்க்களத்திற்கு அவனுடைய ஆண் யானை புறப்படுமேயானால் அதன் தலையைக் கண்டாலே போதும் கழுகுக் கூட்டமும், பருந்தினமும், நரியினமும் பின் தொடர்ந்து செல்லும். ஏனெனில் யானையின் திறத்தால் மாற்றார் இறந்துபடுவர். பிற உயிரினங்களுக்கு உணவு கிடைக்கும் என்பதற்காக செல்வதாக கூறப்படுகின்றது. பிற அரசர்களுக்கு வெகுளியை ஏற்படுத்தும் வகையில் களிறு பங்கு கொண்ட போர்க்களமானது காட்சி தருகிறது.

பற்றினம் ஆர்ப்பப் பருந்து வழிப்படர

 நாற்றிசையும் ஓடி நரிகதிப்ப ஆற்ற

 அலங்கலம் பேய்மகளிர் ஆடவருமே

        இலங்கிலை வேற் கிள்ளி களிறு” 13 (முத்தொள்ளாயிரம் பா : 44)

      தன் வலிமையினால் இந்நிலவுலகத்தைக் காக்கின்ற தோளில் ஒளியிடும் முத்து மாலையை அணிந்தவன் பாண்டியன். இவனது வன்மையைப் பார்க்கும் பகையரசர்கள் வெகுளி மேலீட்டால் வெதும்புவர்.

      ”நேமி நிமிர்தோள் நிலவுதார்த் தென்னவன்

        காமர் நெடுங்குடைக் காவலன் ஆணையால்

        ஏம மணிப்பண் இமையார் திருந்தடி

        பூமி மிதியாப் பொருள்” 14 (முத்தொள்ளாயிரம் பா : 45)

உவகை

செல்வம், புலன், புணர்வு, விளையாட்டு போன்ற இடங்களில் உவமை தோன்றும் காதல் தோன்றுமிடங்களில் உவகை வெளிப்படும். பாண்டியன் மீது காதல் கொண்டாள் ஒரு பெண். காதல் முற்றி உடல் மெலிந்தாள். கையில் அணிந்துள்ள வளையங்கள் கழன்று கீழே விழுந்துவிடுமோ என்று சொல்லுமளவுக்கு உடல் மெலிந்து காணப்பட்டாள். இந்த நிலையில் மன்னன் உலா வருகிறான். அவன் வருகையைத் தெரிவித்தது வலம்புரிச் சங்கின் ஒலி. உடனே அவனைக் காணப்போகிறோம் என்ற மகிழ்ச்சியில் தலைவியின் மனம் பூரித்தமையால் மெலிந்திருந்த அவள் மீண்டும் அழகுற்றாள். இதனால் கைவளையல் கீழே விழாது நின்றதாக அமைந்த பாடல் இதோ,

செய்யார் எனினுந் தமர் செய்வரென்னுஞ் சொல்

 மெய்யாதல் கண்டேன் விளங்கிழாய்! கையார்

 வரிவளை நின்றன வையையார் கோமான்

 புரிவளை போந்தியம்பக் கேட்டு” 15 (முத்தொள்ளாயிரம் பா : 52)

இப்பாடலில் அப்பெண்ணின் கைவளையல் கழலாமல் இருந்ததற்கு காரணமாக சங்கின் ஒலியைக் குறிப்பிட்டுள்ளார். அதாவது பாண்டிய மன்னனை பார்த்தப்பின் பூரிக்க வேண்டிய தன் மனம், அவன் வருவதை அறிவிக்கும் சங்கின் ஒலி கேட்டே பூரித்ததாக கற்பனை நயம்படக் கூறியுள்ளார். பிற மக்கள் உதவி செய்தாலும் செய்யலாம் அல்லது செய்யாமலும் இருக்கலாம். ஆனால், ஒரு குடியில் பிறந்தவர்கள் கண்டிப்பாய் முன் வந்து உதவி செய்வர் என்ற கருத்தினை சங்கு வளையலுக்கு அதன் இனமாகிய வலம்புரிச்சங்கு உதவிய நிலையை உள்ளுறையாக கற்பனையழகோடு கூறுவது உவகைச் சுவையூட்டுவனவாக உள்ளது.

தொகுப்புரை

முத்தொள்ளாயிரம் குறிப்பிடும் மெய்ப்பாட்டுச் செய்திகள் மூலமாக மூவேந்தர்களின் நல்லாட்சி சிறப்புகளை ஆழ்ந்தறியமுடிகிறது.. இதில் வரலாற்றுச் செய்திகள், இயற்கை வளங்கள், போர்க்களக் காட்சிகள், மன்னர்கள் மீது மையல் கொண்ட இளம் நங்கையா்களின் காதலுணா்வு, தவிப்புடன் கூடிய காத்திருப்பு, முடியுடை மூவேந்தா்களின் முத்தாய்ப்பான ஆளுமைத்திற வன்மைகள், தமிழகப் பண்பாட்டுக் கூறுகள், நாகரிகச் சிறப்புகள், விழுமியச் சிந்தனைகள் முதலியவை ஆழமாகச் சுட்டப்பட்டுள்ளன.

துணைநூற்பட்டியல்

  1. இளம்பூரணர் உரை, தொல்காப்பியம், பொருளதிகாரம்,

கௌரா பதிப்பகம், சென்னை.

  1. டி.கே.சிதம்பரநாத முதலியார், முத்தொள்ளாயிரம், பாரி நிலையம், சென்னை.
  2. மேலது.
  3. மேலது.
  4. மேலது.
  5. மேலது.
  6. மேலது.
  7. டாக்டர் சே.உலகநாதன், முத்தொள்ளாயிரம் தெளிவுரை,

சாரதா பதிப்பகம், சென்னை.

  1. மேலது.
  2. மேலது.
  3. மேலது.
  4. மேலது.
  5. மேலது.
  6. என். சொக்கன், முத்தொள்ளாயிரம், கிழக்குப் பதிப்பகம், சென்னை.
  7. முனைவர் கதிர். முருகு, முத்தொள்ளாயிரம், சாரதா பதிப்பகம், சென்னை.