ஜூலை 2024 இதழுக்கு ஆய்வுக்கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன

சிலப்பதிகாரம் - கம்பராமாயணம் இலக்கிய ஒப்புமைக்காண்டல்

முனைவர். க.மங்கையர்க்கரசி உதவிப்பேராசிரியர் தமிழ்த்துறை அகர்சந்த் மான்மல் ஜெயின் கல்லூரி,  மீனம்பாக்கம், சென்னை. 29 Nov 2021 Read Full PDF

சிலப்பதிகாரம் - கம்பராமாயணம் இலக்கிய ஒப்புமைக்காண்டல்

முனைவர். க.மங்கையர்க்கரசி

உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, அகர்சந்த் மான்மல் ஜெயின் கல்லூரி, மீனம்பாக்கம், சென்னை.

ஆய்வுச்சுருக்கம்:

வால்மீகி இராமாயணத்தின் வழிநூலே கம்பராமாயணம் எனினும் கம்பர் பல இடங்களில் முதல்நூலையே மிஞ்சும் அளவிற்குச் சிறப்பாகப் பாடியுள்ளார்.கற்பனை,சொல்லாட்சி, ஒலிக்குறிப்பு, உவமை, உருவகம், அணி என்று பலவற்றைக் கம்பர் வடித்துத்தந்துள்ளார். இரண்டாம் நூற்றாண்டில் இளங்கோவடிகளால் இயற்றப்பட்ட சிலப்பதிகாரத்தில் கூறப்பட்டுள்ள பல கருத்துக்களை கம்பரின் இராமாவதாரத்திலும் காணமுடிகிறது. ‘இலக்கிய ஒப்புமைக் காண்டல்’ என்றபடி சிலப்பதிகாரத்திலும், கம்பராமாயணத்திலும் ஒன்று போல் காணப்படும் கருத்துக்களைத்   தொகுப்பாகக் காணலாம்

திறவுச்சொற்கள்: சிலப்பதிகாரம், கம்பராமாயணம், ஒப்புமைக் காண்டல், கற்பு, கனவு.

முன்னுரை:

      இரு இலக்கியங்களில் ஒரே செய்திகள் எவ்வாறு கூறப்பட்டுள்ளன என்று ஒப்பு கூறுவதை ' இலக்கிய ஒப்புமைக் காண்டல் ' என்று கூறுவர்.இங்கு சிலப்பதிகாரமும், கம்பராமாயணமும் எந்தெந்த இடங்களில் எல்லாம் ஒப்பு நிலையைப் பெற்றுள்ளன என்பதையே காண இருக்கிறோம். இளங்கோவடிகளால் இயற்றப்பட்ட சிலப்பதிகாரம் 2ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது. கம்பர் தனது இராமாவதாரத்தை 12 ஆம் நூற்றாண்டில் எழுதினார் என்பர். முன்பே இயற்றப்பட்டது சிலம்பில் இராமாயணக்  குறிப்புகள் உள்ளன.

வடமொழியில் வால்மீகி முனிவர் இயற்றிய இராமாயணத்தைக் கம்பர் தனக்கே உரிய பாணியில் கருப்பொருள் சிதையாமல் தமிழ் மொழியில் இயற்றியுள்ளார்.  கி.பி. 12 ஆம் நூற்றாண்டு என்பது தமிழ் இலக்கியத்தின் காப்பியவளர்ச்சி காலம் என்பர், இக்காலத்தில்தான் காப்பியவளர்ச்சி உச்ச நிலையை அடைந்தது.

சிலப்பதிகாரத்தில் இராமாயணம்:

சிலப்பதிகாரத்திலேயே இராமாயணச்செய்தி, காணப்படுகிறது. கோவலன் கண்ணகியை அழைத்துக்கொண்டு மதுரை வந்தான். எனவே கோவலனைப் பிரிந்த புகார், ‘இராமனைப் பிரிந்த அயோத்தி போல் துன்புற்றது’ என்பதை கோசிகாமாணி கூற்றில் கூறப்பட்டுள்ளது.

            “அருந்திறல் பிரிந்த அயோத்தி போலப்”

(புறஞ்சேரி இறுத்தகாதை 65)

இதன்படி சிலப்பதிகாரத்தில் இராமாயணச்செய்தி காணப்படுகிறது.

இரண்டு நூல்களிலும் காணப்படும்  இலக்கிய ஒப்பு நிலைகள்:

தீவலம் வந்து திருமணம், கனவு காணுதலும், தோழியிடம் கூறுதலும், கண்கள் துடித்தல், தீ நிமித்தம் காண்டல், விமானத்தில் ஏறிச் செல்லல், மன்னன் இறந்த உடன் தேவி இறப்பு, மதிற்சிறப்பு, தூரம் எவ்வளவு, தம்பதியர் பிரிந்து வாழ்தல், குழந்தைப்பேறு இல்லை, இருவருமே கற்புக்கரசிகள், விருந்தோம்பல் சிறப்பு, இறந்த பின்பும் ஆவி உருவில் பேசுதல், ஊர்க்காவல் தெய்வம், கோவேறு கழுதை, சாபம் பலித்தல், ஊழ்வினை,. காமத்தின் விழைவு.

1. தீவலம் வந்து திருமணம்

எல்லாம்வல்ல பரம்பொருளினை, உரிய மந்திரங்களினால் எழுந்தருளச் செய்து வேள்விஆற்றி,  தீ மற்றும் கலசத்தில் முன்னோக்கி இறைவன் முன் திருமணம் செய்விக்கப்படுகிறது

தீயினை வலமாக வந்து திருமணம் செய்தனர் என்ற செய்தியை எட்டுத்தொகை நூலான கலித்தொகையில் மருதக்கலி (4) கூறுகிறது. காதலர் இருவரும் விரும்பும் திருமண நாளில் அந்தணர், இருவரையும் தீ வலம் வருமாறு சொல்ல, தலைவனும், தலைவியும் தீ வலம் வருவர்.

      சிலப்பதிகாரத்தில் கோவலன் கண்ணகியை திருமணம் செய்யும் போது, தீவலம் வருதல் குறிப்பிடப்பட்டுள்ளது

            “மாமது பார்ப்பான் மறைவழிக் காட்டிடத்

             தீவலம் செய்து காண்பார் கண் நோன்பு என்னை”

(சிலப்பதிகாரம் - மங்கலவாழ்த்துப்பாடல் 52-53)

அந்தணர் மந்திரம் ஓத மணமகன் தாலிகட்ட பார்ப்பான் வழிகாட்ட அக்கினியை வலம் வருதல் போன்றவை கோவலன் கண்ணகி திருமணத்தில் கடைபிடிக்கப்பட்ட முதன்மைச் சடங்காக இருந்திருக்கிறது.

கம்பராமாயணத்தில் இராமன் சீதையைத் திருமணம் செய்யும் போது, தீவலம் வருதல் கூறப்பட்டுள்ளது. இராமன் சீதையின் கைப்பற்றி தீ வலம் வந்தான்

              “நெய் அமை ஆவதி யாவையும் நேர்ந்தே

               தையல் தளிர்க் கை தடக்கை பிடித்தான்”

                              (பாலகாண்டம் - கடிமணப்படலம் 1196 பா)

ஹோமத்தீயை வலம் வரும் போது, இராமனைப் பின் தொடர்ந்து சீதை சென்றாள். அக்காட்சி வேறு வேறாக எடுக்கும் பிறவிகளில் உயிரானது உடம்பைத் தொடர்வதற்கு மாறாக, உடம்பு உயிரைப் தொடர்ந்து செல்வது போல இருந்தது என்று கம்பர் குறிப்பிடுகிறார்.                        

           தீ வலம் வந்து திருமணம் நடைபெற்றது என்பதை சிலப்பதிகாரமும், கம்பராமாயணமும் கூறுகின்றன என்பது பெறப்படுகிறது.

2. கனவு காணுதலும் தோழியிடம் உரைத்தலும்   

உடல் தூங்கினாலும் உள்ளம் தூங்குவதில்லை. ஆழ்ந்த உறக்கம் இல்லாத நிலையில் மனத்திரையில் தோன்றும் காட்சி தான் கனவு.     இலக்கியங்களில் பின்னால் நிகழப்போகும் சம்பவங்களைப்பற்றி முன்கூட்டியே குறிப்பால் உணர்த்தும் உத்தியாகக் கனவுகள் கையாளப்பட்டுள்ளன.    ஒருவர் காணும் கனவை நன்கு ஆராய்ந்தால் ஆழ் மன எண்ணங்களை அறிந்து கொள்ளலாம் என்பர் சிக்மண்ட் ஃபிராய்டு.

கனவு காணுதல் அதைத் தோழியிடம் கூறுதல் சிலப்பதிகாரம், கம்பராமாயணம் இரண்டிலுமே காணப்படுகிறது.

கண்ணகி தன் கனவு பற்றி தோழி தேவந்தியிடம், “என் இரு கை பற்றி அழைத்துப்போக ஒரு நகரிலே புகுந்தோம். அந்த நகரிலே வாழும் மக்கள் இடுதேளைப் பிடித்து என் மீது இடுவது போல, ஏலாதப் பழிச் சொல்லை எங்கள் மீது இட்டனர்”. அப்பழிமொழியில் கோவலனுக்குத் தீங்கு நேர்ந்தது என்று பிறர் சொல்லக் கேட்ட பின், யான் அரசன் முன் சென்று வழக்குரைத்தேன்.

            “கடுக்குமென நெஞ்சம் கனவினால் என்கை

            பிடித்தனன் போயோர் பெரும்பதியுள் பட்டேம்

            பட்ட பதியில் படாதது ஒரு வார்த்தை”

(கனாத்திறம் உரைத்தகாதை 45 - 47)

என்று கூறுகிறாள்.

கோவலன் கண்ட கனவாக அடைக்கலக்காதையிலும் (97-105) பாண்டிமாதேவி கண்ட கனவாக வழக்குரைக்காதையிலும் (1-7) கூறப்பட்டுள்ளது.

கண்ணகி தன் தோழி தேவந்தியிடமும், கோவலன் தன் தோழன் மாடலமறையோனிடமும், கோப்பெருந்தேவி தன் தோழியிடமும் தன் கனவினைப் பற்றிக் கூறுவதாக சிலப்பதிகாரத்தில் கூறப்பட்டுள்ளது.

கம்பராமாயணத்தில் திரிசடை, தான் கண்ட கனவினை சீதையிடம் கூறுகிறாள். தான் கண்ட கனவினை 10 பாடல்களில் கூறுகிறாள். (காட்சிப்படலம் 368 - 377)

இராவணன் தன் பத்துத்தலைகளிலும் எண்ணைத் தேய்த்துக் கொண்டு, எண்ணற்ற வலிய பெரிய கழுதைகளும், பேய்களும் பூட்டப்பட்ட தேரின் மேலே ஏறிச் சிவந்த ஆடை அணிந்தவனாய், தென் திசை நோக்கிச் சென்றான். இராவணன் வளர்க்கும் ஓமத்தீ, திரண்டு எழாமல் அணைந்தது. அந்த இடத்தில் கரையான்கள் கூட்டமாக வந்தன. பழைமையான அரண்மனையை விடியற்காலையில் இடியேறு தாக்கியது. வானிலிருந்து நட்சத்திரங்கள் விழுந்தன. இலங்கை நகரமும், மதில்களும் தீப்பற்றி எரியும். மங்கையரின் மங்கல அணியான தாலிகள், பிறரால் அறுக்கப்படாமல் தாமே அறுந்து விழுந்தன.

            “ஆண்டிதகை இராவணன் வளர்க்கும் அவ் அனல்

            ஈண்டில பிறந்தவால் இனம்கொள் செந்சிதல்”

    (காட்சிப்படலம் 370 பா)

என்று கூறுகிறாள்.

கனவு காணுதலும், தோழியிடம் உரைத்தலும் என்பதை சிலப்பதிகாரமும், கம்பராமாயணமும் கூறுகின்றன என்பது பெறப்படுகிறது.

3. கண்கள் துடித்தல்:

நிமித்தம் அல்லது சகுனம் என்பது மக்களின் வாழ்வியல் மரபுகளில் ஒன்றாகும். பண்டையத் தமிழ் மக்களிடையே மரபாக சில நம்பிக்கைகள் நிலவி வருகின்றன. நிமித்தங்கள் எதிர்கால நிகழ்ச்சிகளை முன்கூட்டியே அறிவிக்கும் அறிகுறியாக மக்களால் தொன்றுதொட்டு இன்று வரை நம்பப் பட்டு வருகின்றன. அதாவது நிமித்தம் என்பது வாழ்வில் பின் நிகழவிருக்கும் நன்மைத்தீமைகளைச் சில நிகழ்ச்சிகள் மூலம் உணர்த்துவதாகும். மகளிர்க்கு கண், புருவம், நெற்றி முதலியன இடமாக துடித்தல் வரும் நன்மையை உணர்த்தும் நன்னிமித்தங்கள் ஆகும் என்று        இலக்கியங்கள் சுட்டுகின்றன.

சிலம்பில் பெண்களின் இடக்கண் துடித்தல் நன்மையாகும். வலக்கண் துடித்தால் தீமையாகும் என்ற செய்தி கூறப்பட்டுள்ளது. இந்திரவிழாவின் கடைநாளில், கண்ணகியின் கருங்கண்ணும், மாதவியின் செங்கண்ணும் தத்தம் உள்ளத்தே நிறைந்த குறிப்பினை மறைத்து நீர் சொரிந்தன.

            “எண்ணுமுறை இடத்தினும் வலத்தினும் துடித்தன”

(சிலம்பு - கடலாடுதுறை 239)

பிரிந்த கணவனை விரைவில் கண்ணகி அடையப் போகிறாள். ஆதலால் நன்னிமித்தமாக இடக்கண் துடித்தது. மாதவி கோவலனைப் பிரியப்போகிறாள் ஆதலின், தீ நிமித்தமாக அவளது வலக்கண் துடித்தது.

      அசோகவனத்தில் இருக்கும் சீதை, தன் கண்கள் துடித்ததைப் பற்றி கூறுகிறாள்.

            “பொலந்துடி மருங்குலாய் புருவம் கண்முதல்

            வலம் துடிக்கின் றிலவருவது ஓர்கிலேன்”

(காட்சிப்படலம் 360)

தன்னுடைய கண்கள் இப்போது இடப்பக்கமாகத் துடிக்கின்றன என்று திரிசடையிடம் கூறுகிறாள். நல்லது நடக்கும் போது, என்கண்கள் இடப்பக்கம் துடிக்கும். முன்பு இராமன் விசுவாமித்திரருடன் மிதிலை நகருக்கு வந்தபோது, (361) இடக்கண்கள் துடித்தன.

முன்பு இராமன் நாடு முழுவதையும் பரதனே பெரும்படி அதைத்துறந்து காட்டுக்கு வந்த நாளில் என் கண்ணும் புருவமும் வலப்பக்கம் துடித்தன. (362)

இராவணன் தண்டகாரணியத்தில் வஞ்சச்செயலைச் செய்ய வந்த போது, எனக்கு வலப்பக்கமே துடித்தன என்கிறாள்.

கண்களில் இடதுகண்கள் துடித்தால் பெண்களுக்கு நல்லது என்றும், வலது கண்கள் துடித்தால் நல்லதல்ல என்பதை சிலப்பதிகாரமும், கம்பராமாயணமும் கூறுகின்றன என்பது பெறப்படுகிறது.

4. தீ நிமித்தம் காண்டல்

கோவலன் மதுரை நகர வீதிக்குச் சென்று, கண்ணகியின் கால் சிலம்பை விற்கச் சென்றான்.

            “வல்லா நடையில் மறுகில் செல்வோன்

            இமிலேறு எதிர்ந்த திழுக்கென அறியான்”

(சிலம்பு - கொலைக்களக்காதை 99-100)

கோவலன் எதிரே ஒரு எருது பாய வந்தது. ஆயர்பாடி மாடு வளர்க்கும் பகுதி என்பதால், எருது வந்ததைத் தீய நிமித்தமாக அவன் கருதவில்லை.

            “குடப்பால் உறையாகுவியிமில் ஏற்றின்

            மடக்கணீர் சோரும் வருவதொன்றுண்டு”

                                                                 (சிலம்பு - ஆய்ச்சியர்குரவை 1)

தாழியில் உறையிட்ட பால்தோயாதிருந்தது, ஆனேற்றின் கண்களிலிருந்து நீர் வருகிறது. உரியிலே முதல் நாள் வைத்த வெண்ணெய் உருக்கினாலும் உருகவில்லை. ஆட்டுக்குட்டிகளும், துள்ளி விளையாடாமல் சோர்ந்து இருக்கின்றன. பசுக்கள் உடல் நடுங்கி அலறுகின்றன. அதன் கழுத்தில் கட்டிய மணிகளும், நிலத்தில் அறுந்து விழுந்தன என்று தீயநிமித்தங்கள் குறித்துக் கூறப்பட்டுள்ளன.

கம்பராமாயணத்திலும் தீய நிமித்தங்கள் பற்றி இராவணன் மந்திரப்படலத்தில் வீடணன் கூற்று மூலம் கூறப்பட்டுள்ளன.

            “வாயினும் பல்லினும் புனல் வறந்து

            உலறினார் நிருதர் வைகும்”

                                            (இராவணன் மந்திரப்படலம் 107)

அரக்கர் வாயிலும், பல்லிலும் நீர் மற்றும் காரணத்தால் நா வறண்டனர். அரண்மனையிலும், இலங்கை நகரத்திலும் தங்கும் பேயைக் காட்டிலும் மிகவும் பெரிய தோற்றமுடைய நரிகளும் நிறைகின்றன. மற்றவற்றையும், நினையின் அரண்மனையிலும், இலங்கை நகரத்திலும் உள்ள மகளிர் கூந்தலும், ஆடவரான நம் மயிர் முடியும் தீயில் கரிந்து தீய நாற்றம் உடையன ஆயின. இவற்றையே அல்லாது ஒரு நல்ல நிமித்தமேனும் பெறுகின்ற வகையும் இல்லை என்று கூறுகிறான்.

நிமித்தம் என்பதில் நன்நிமித்தம், தீ நிமித்தம் குறித்து கூறப்பட்டுள்ளது. என்பதை சிலப்பதிகாரமும், கம்பராமாயணமும் கூறுகின்றன என்பது பெறப்படுகிறது.

5. விமானத்தில் ஏறிச் செல்லல்:

 சோழன் நலங்கிள்ளி மீது, முதுகண்ணன் சாத்தனார் பாடிய பாடலில் நல்வினை செய்வோரை வானவூர்தி ஏற்றிக் கொண்டு செல்லும் என்றும், அந்த விமானம் விமானி இல்லாமல் தானாக ஓடும் என்றும் புறநானூறு 27 வது பாடலில்கூறியுள்ளார். திருஞானசம்பந்தர் பாடலிலும், பக்தி சிரத்தையுடன் ஆடல், பாடலுடன் மனம் உருகி பாடுவோர்க்கே இந்த விமானம் வரும் என்றும் கூறுகிறார் (முதல் திருமுறை - திருஞானசம்பந்தர்-வெங்குருவில் சீர்காழியில் பாடிய தேவாரம் இது).

கண்ணகி, கோவலனுடன் விமானத்தில் ஏறிச் சென்றாள். மதுரையை எரித்தபின், 14 நாட்கள் கடந்த பின், கோவலனை நினைத்து வாழ்த்தினாள்.

            “கோ நகர் பிழைத்த கோவலன் தன்னோடு

            வானவூர்தி ஏறினள் மாதோ”

                                    (சிலம்பு - கட்டுரைக்காதை 197 - 198)

கோவலன் வானுலகத்திலிருந்து இறங்கி வந்தான். அவனுடன் கண்ணகி வானவூர்தியில் ஏறி விண்ணுலகு அடைந்தாள்.

      கம்பராமாயணத்தில் இராமன் சீதை, இலட்சுமணன் மற்றும் பலர் விமானத்தில் ஏறி அயோத்தி சென்றனர்.

            “அனைய புட்பகவிமானம் வந்தவனியை அனுக”

(மீட்சிப்படலம் 4037)

என்று கூறப்பட்டுள்ளது.

நல்வினை செய் வோரை வானிலிருந்து ஊர்தி பூமி வந்து ஏற்றிச் செல்லும் என்பதை சிலப்பதிகாரமும், கம்பராமாயணமும் கூறுகின்றன என்பது பெறப்படுகிறது.

6. மன்னன் இறந்தவுடன் தேவியும் இறத்தல்:

கணவன் உயிர் விட்டு இறந்ததை, உணரும் நிலையிலேயே உயிர் விடுதலை ‘உடன் உயிர் விடுதல்’ எனலாம். போரில் அன்றி வேறு காரணத்தினாலோ தன் கணவன் இறந்த போது, ‘அவனன்றி பிறர் தமக்குத் துணையாகார்’ என்று கணவனின் மார்பைப் பொருந்தியோ, இணையடி தொழுதோ   உயிர்த் துறப்பவர்களைத் ‘தலைக்கற்பினர்’ என்று புகழப்படுவர்.

சிலப்பதிகாரத்தில் பாண்டிய நெடுஞ்செழியன் தன் தவறை உணர்ந்து, மயங்கி வீழ்ந்து மாண்டு போனான். பாண்டிமாதேவி கோப்பெருந்தேவியும் தன் கணவனின் இணையடிகளைத் தொட்டு வணங்கி வீழ்ந்து இறந்தாள்.

            “கணவனை இழந்தோர்க்குக் காட்டுவதில்லென்று

            இணையடி தொழுதுவீழ்ந் தனளே மடமொழி”

(வழக்குரைக் காதை 80 -81)

என்று கூறப்பட்டுள்ளது.

கம்பராமாயணத்தில் இராவணன் இறந்த செய்தியைக் கேட்டாள் மண்டோதரி, பலவாறு புலம்பி அழுது, உடன் உயிர் நீங்கினாள்.

            “நின்று அழைத்து உயிர்த்தாள் உயிர் நீங்கினாள்”

(வதைப்படலம் 3885)

என்பதை அறிய முடிகிறது.

கணவர் இறந்தவுடன் அவனது மனைவியும் உயிர்த்துறத்தல் தலைக்கற்பாகக் கூறப்பட்டது என்பதை சிலப்பதிகாரமும்,   கம்பராமாயணமும் கூறுகின்றன என்பது பெறப்படுகிறது.

7. பாண்டியனின் மதிற்சிறப்பு

அரண்மனையின் பாதுகாப்பிற்காக அரண்மனையைச்சுற்றி கட்டப்படும் சுற்றுச்சுவர் ‘மதில்’ எனப்படும்.

        பாண்டியனின் மதிற்சிறப்பு மதுரைக் காண்டம் அடைக்கலக்காதையில் கூறப்பட்டுள்ளது.

            “மிளையும் கிடங்கும் வளைவிற்பொறியும்

            கருவிரல் ஊகமும் கல்லுமிழ் கவணும்”

             ………              

               (அடைக்கலக்காதை 15: 207 - 219)

இப்பாடலில் காவல் அரணாகக்காடும், அகழியும் வரும் எதிரிகளைக் கண்டவுடன் வளைந்து, தானே தாக்கும் எந்திர வில்லும், கருத்த விரல்கள் உடைய கருங்குரங்கு உருவினால் பொறியும், கல் எறிந்து தாக்குகின்ற கவண்பொறியும், அருகே வந்தவர் மேல் கொட்டக், கொதிக்க வைத்த எண்ணைக் குண்டமும், சாணம் கரைத்துக் காய்கின்ற மிடாவும், இரும்பு உருக்கி வைத்த உலைக்கூடமும், கற்கள் நிரப்பி வைக்கப்பட்ட கூடைகளும், தூண்டில் வடிவின கருவிகளும், கழுத்தில் மாட்டி இழுக்கும் சங்கிலியும் ஆண்டலைப் பறவை (ஆண் மகன் தலை போன்ற தலையையுடைய ஒரு பறவை) வடிவாகச் செய்யப்பட்ட நெருப்படுப்பும், அகழியில் இருந்து மதில் ஏறி வர முயல்பவர்களை நெட்டித்தள்ளும் கவை வடிவமான கருவியும், கூரிய இரும்புக்கோலும், அம்புக்கட்டும், மறைந்திருந்து தாக்கும் இழுக்கு வழிகளும், நெருங்கி வருபவர் தலையை நசுக்குகின்ற மரங்களும், மதில் மேல் ஏறுபவர் கையைத் தாக்கித் தாக்கும் ஊசிப் பொறிகளும், பகைவர் மேல் சென்று கண்ணைக் குத்தும் சிச்சிலிப்பொறியும், மதில் மேல் ஏறுபவர்களை குத்திக் கிழிக்கும் பன்றி வடிவில் அமைந்த பொறியும், மூங்கில் தடிகளும், கோட்டைக் கதவுக்குப் பாதுகாப்பாக அடுக்கி வைக்கப்பட்ட பெரிய மரங்களும், வலிமை வாய்ந்த  கணைய மரங்களும், எறிகோலும்,   குத்துக் கோலும் ஈட்டியும், நிறைந்தது மதுரையின் காவல் மதில். என்று கூறுகிறது

கம்பராமாயணத்தில் இராவணனின் இலங்கை மதிற்சிறப்பு. ஆகாயம் உயர்ந்த நல்ல மதிலினை அமைத்து விட்டான் என்பதை ஊர்தேடுபடலம் 116) கூறுகிறது.

அழியாத மதிலின் ஒளியினால் கண் கூசுதலை நிறைந்த சூரியன் நாள்தோறும் விலகிச் செல்கிறான். இதனை அறியாதவர்கள் இராவணன் தன்னைக் கோபிப்பான் என்று அஞ்சியே இலங்கை நகரின் மேலே சூரியன் செல்லமாட்டான் என்று நெடுநாளாகக் கூறிவருகின்றனர் என்றும், முன்பு கயிலை மலையை எடுத்த இராவணன், தேவர்கள் நமக்குத் தீங்கு செய்யத்தக்கவர்கள். அதனால் அவர்கள் தம் ஊரிலிருந்து வெளிவரும் வாயிலைப் பயன்படாமல் செய்து, அதையும் கடந்த உயரத்தில் மதிலை அமைப்பின் என்று எண்ணி, ஆகாயம் என்னும் இடம் முழுவதையும் கடந் து உயர்ந்த நல்ல மதிலினை அமைத்துவிட்டான் என்றும்,,

                   “கறங்கு கால்புகா கதிரவன் ஒளி புகா மறலி”

             மறம் புகாது இனி வானவர் புகார் என்கை வம்பே   

                    திறம்பு காலத்துள் யாவையும் சிதையினும் சிதையா

                         அறம்புகாது இந்த அணி மதில் கிடக்கை நின்று அகத்தின்

 (ஊர்தேடு படலம் 117)

மதிலைக்கடந்து அதன் உட்புறத்தில் காற்று, மேகங்கள், சந்திரனின் கதிர், கூற்றவன் ஆற்றல் புகாது. அழியும் காலத்தில் அனைத்தும் அழிந்தாலும், அழியாமல் நிலைத்து நிற்கும் என்று மதிற்சிறப்பு கூறப்பட்டுள்ளது.

இராமனிடம் வீடணன் இலங்கையின் மதில் சிறப்பைப் பற்றி "அந்த இலங்கையின் மதிலானது ஏழுநூறு யோசனை அகலம் உள்ளது. கீழே ஆழம் ஆறு யோசனை ஆகும். சக்கரவாள மலையானது இந்த உலகத்தை எவ்வாறு வளைத்துக் கொண்டுள்ளதோ அவ்வாறே பெரிய மதில் அந்த நகரத்தைச் சூழ்ந்துள்ளது.அதன் உயரமோ சூரிய,சந்திரர் உலாவும் இடத்துக்கும் மேலே உள்ளது என்றும் அந்த மதிலில் அமைந்துள்ள வஞ்சகவேலைப்பாடும்                 "நூற்றுவரைக் கொல்லி" முதலிய எந்திரங்களின் வேலைப்பாடும் மிக்க காவலாக உள்ள அரண்களும், பிறவற்றையும் எண்ணத் தொடங்கினால் எண்ணமுடியாதவாறு  ஆயுள் சுரிங்கிவிடும்

அந்த இலங்கை தன்னைச் சூழ்ந்த கடலையே அகழியாகக் கொண்டதாகும்  என்பதை

             "மருங்குடை வினையமும் பொறியின் மாட்சியும்

               இருங் கடியரணமும் பிறவும் எண்ணினல்"

                                              (இலங்கை கேள்விப்படலம் 475) 

என்ற பாடல் மூலம் அறியமுடிகிறது.

ஒரு மன்னனின் மதிற்சிறப்பு அவனுடைய அரண்மனையின் பாதுகாப்பு குறித்து அறியப்படுவது   என்பதை சிலப்பதிகாரமும், கம்பராமாயணமும் கூறுகின்றன என்பது பெறப்படுகிறது.

8. எவ்வளவு தூரம்:

கோவலனும், கண்ணகியும் புகாரிலிருந்து கிளம்பி, மதுரையை நோக்கி வந்து கொண்டிருந்தனர். அப்போது கண்ணகி மதுரை எவ்வளவு தூரம்

            “மதுரை மூதூர் யாதென வினவ

            ஆறைங்காதம் நம் அகனாட்டும்பர்”

(நாடுகாண் காதை 41- 42)

என்று கேட்டாள். கோவலன் நம் நாட்டிலிருந்து ஆறு ஐந்து காத தூரம் உள்ளது என்றான்.

இராமாயணத்தில் சீதையும் காடு எவ்வளவு தூரத்தில் உள்ளது என்று கேட்கிறாள். இதனை அனுமன் சீதையை அசோகவனத்தில் கண்டு, இராம தூதன் என்பதைக் கூறி, இராமன் நலம் கூறி இராமன் உரைத்த செய்திகளையும், அடையாளங்களையும் சீதைக்குச் சொல்லும் போது வரும்.

            “ஆண்டநகர் ஆரையோடு வாயில் அகலாமுன்

            யாண்மையதுகான் என இசைத்ததும் இசைவப்பால்”

                                                   (உருக்காட்டுப்படலம் 548)

தசரதன் ஆணையை ஏற்று, அரசாட்சியை இழந்து காட்டுக்குப் புறப்பட்ட நாளில், அயோத்திநகரின் மதிலோடு கூடிய கோட்டை வாயிலைக் கடப்பதற்கு முன்னமே, என்னுடன் வந்த சீதை காடு எங்கே இருக்கிறது என்று கேட்டதையும் சொல்க என்றான்.

வெளியில் நடந்து பழக்கமே இல்லாத கண்ணகியும், சீதையும் நாம் செல்லும் இடம் எவ்வளவு தூரம் என்று வினவினர் என்பதை சிலப்பதிகாரமும், கம்பராமாயணமும் கூறுகின்றன என்பது பெறப்படுகிறது.

9. தம்பதியர் பிரிந்து வாழ்தல்:

சிலம்பில் கோவலன், மாதவியிடம் மையல் கொண்டு, கண்ணகியைப் பிரிந்தான். கணவன் மனைவியர் பிரிந்து வாழ்ந்தனர்.

கம்பராமாயணத்தில் வனம் சென்ற பிறகு, இராவணன் சீதையைத் தூக்கிச் சென்று, அசோக வனத்தில் சிறைவைத்ததால், தம்பதியர் பிரிந்து வாழ்ந்தனர்.

விதியின் செயலால் தலைவனும், தலைவியும் ஒருவரை ஒருவர் பிரிந்து வாழ்ந்த துன்பநிகழ்வு குறித்து சிலப்பதிகாரமும், கம்பராமாயணமும் கூறுகின்றன என்பது பெறப்படுகிறது.

10. குழந்தைப்பேறு இல்லை:

வாழ்வின் முழு நிறைவு தாய்மை அடைவது தான். அதனால் தான் வள்ளுவரும் மக்கட்பேறு என்று தனி அதிகாரத்தையே வகுத்துத்தந்துள்ளார். நல்ல குழந்தைகள் வாய்ப்பது குடும்பத்திற்குச் சிறந்த ஆபரணங்கள் அணிவித்தது போலாகும். எல்லாப் பெருமைகளிலும் அறிய வேண்டியவற்றையும், அறியும் நல்ல மக்களைப் பெறுவது முதன்மையானது, மற்ற பெருமைகளெல்லாம் அதன்பின் தான் என்று குறள் கூறுகிறது.

      சிலம்பில் கோவலன், கண்ணகிக்குக் குழந்தைப்பேறு இல்லை. கம்பராமாயணத்தில் இராமன், சீதைக்கும் குழந்தைப்பேறு இல்லை.

11. கற்புக்கரசிகள்:

கண்ணகி, சீதை இருவருமே கற்புக்கரசியர்.

கற்புக்கரசியர் எழுவர் என்று இலக்கியங்கள் கூறுகின்றன. கண்ணகி, சீதை இருவரும் கற்புக்கரசியர் என்பதை சிலப்பதிகாரமும், கம்பராமாயணமும் கூறுகின்றன என்பது பெறப்படுகிறது.

12. அந்தணரைப் போற்ற முடியவில்லையே:

 பண்டையத் தமிழரின் பண்பாட்டில் தலையானது விருந்தோம்பல் ஆகும். முன்பின் அறிமுகமில்லாதபுதியவரைப் பேணுதலே ‘விருந்தோம்பல்’ என்று தமிழர் கருதினர். தமிழர் மரபில் உணவோடு உணர்வையும் குழைத்துச் செய்த சமையல் விருந்தாகிறது. இல்லறக் கடமைகளில் ஒன்றான திருமணம் நடைபெறுவதன் நோக்கமே விருந்தோம்பலாகும். கணவனுடம் கூடி வாழும் மங்கல மகளிர்க்குரிய தனி்உரிமையாக விருந்தோம்பல் கருதப்பட்டது. கணவனை இழந்தவர்களுக்கும், பிரிந்து வாழ்பவர்களுக்கும், விருந்தினரை வரவேற்கும் உரிமை கிடையாது.   

அந்தணரைப் போற்ற முடியவில்லை என்பதை சிலம்பில் கண்ணகி கோவலனிடம் பேசும் போது

            “அறவோர்க்கு அளித்தலும் அந்தணர் ஓம்பலும்

             துறவோர்க் கெதிர்தலும் தொல்லோர் சிறப்பின்

             விருந்தெதிர் கோடலும் இழந்த என்னை”

   (கொலைக்களக்காதை 71-73)

நீங்கள் என்னைப் பிரிந்ததால் நான் அறவோர்க்கு அளித்தலையும், அந்தணரைப் போற்றுதலையும், விருந்தினரை வரவேற்று உபசரித்தலையும் இழந்தேன் என்கிறாள்.

கம்பராமாயணத்தில் சீதையும்

            “விருந்து கண்டபோது என் உறுமோ என்று விம்மும்”

(காட்சிப்படலம் 343)

மெல்லிய இலை உணவு யார் பரிமாற இராமன் உண்பான் என்றும், விருந்தினர் வருவதைக் கண்ட போது, உபசரிப்பவர் இல்லையே என்று எப்படித் துன்பப்படுவானோ என்று நினைத்து விம்முவாள்.

விருந்தினரைப் போற்றுதல் என்பது தமிழ்ப்பண்பாடு. கணவனை இழந்தவர்களுக்கும், பிரிந்தவர்களுக்கும் விருந்தினரை வரவேற்கும் உரிமை இல்லை என்பதை சிலப்பதிகாரமும், கம்பராமாயணமும் கூறுகின்றன என்பது பெறப்படுகிறது.

13. இறந்த பின்பும் ஆவி உருவத்தில் பேசுதல்:

 மனதிற்கு மிகவும் பிடித்தவர் இறந்துவிட்டாலும் அவர் உயிரோடு இருப்பதாகவும், தம்மிடம் பேசுவதாகவும் நம்பினர் என்று சில இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன.

சிலம்பில், கோவலன் இறந்த பின்பும் கண்ணகியிடம், முழுமதி போன்ற முகம் வாடிவிட்டதே என்று கூறி தன் கையால் கண்ணீரைத் துடைத்துவிட்டான் என்பதை

            “நின்றாள் எழுந்து நிறைமதி வாள்முகம்

            கன்றியது என்றவள் கண்ணீர் கையான் மாற்ற”

(ஊர்சூழ்வரி 62-63)

என்பதை அறிய முடிகிறது.

இறந்து போன தசரதன் மண்ணுலகம் வந்து, சீதையைக் கண்டு, அவளைத் தேற்றுகிறான். “இராமன் உன்னுடைய கற்பின் திறத்தை மற்றவர்களும் அறியுமாறு செய்வதற்குத் தான் உன்னைத் தீயில் இறங்கச் செய்தான்” என்று கூறினான்.

            “நங்கை மற்றுநின் கற்பினை உலகுக்குநாட்ட”

     (யுத்தகாண்டம் - மீட்சிப்படலம் 4013 பா)

நின் கற்பின் மாட்சியை உலகத்தில் யாரேனும் ஐயப்பட்டிருப்பின், அந்த ஐயத்தைப் போக்குவதன் பொருட்டுத்தான் தீயில் இறங்கச் செய்தான். எனவே இராமன் மீது சினம் கொள்ளக் கருத வேண்டா” என்று கூறினான்.

உயிரானது உடலைவிட்டு பிரிந்து சென்ற பின்பும் ஆவி உருவில் பேசினர் என்பதை சிலப்பதிகாரமும், கம்பராமாயணமும் கூறுகின்றன என்பது பெறப்படுகிறது.

14. ஊர்க்காவல் தெய்வம்:

 ஒவ்வொரு ஊரிலும் ஊரைக்காவல் செய்ய காவல் தெய்வம் இருக்கும் என சில இலக்கியங்களில் கூறப்பட்டுள்ளது. மணிமேகலையிலும் ஊரைப் பாதுகாக்க சதுக்கபூதங்கள் இருந்தன என்று கூறப்பட்டுள்ளது.

சிலம்பில் “மதுராபதி” என்ற காவல்தெய்வம் கூறப்பட்டுள்ளது.

           “கொந்தழல் வெம்மைக் கூரெரி பொறாஅன்

            வந்து தோன்றினள் மதுராபதிதெய்வம்”

     (கட்டுரைக்காதை 156 - 157)

கண்ணகி முன் மதுராபதி தெய்வம் தோன்றியது.

கம்பராமாயணத்தில் “இலங்கைமாதேவி” காவல் தெய்வம் கூறப்பட்டுள்ளது. இலங்கையில் மாதேவி அனுமனைத் தடுத்தாள்.

            “காணாவந்த கட்செவி என்னக் கனல் கண்ணாள்”

        (ஊர்தேடுபடலம் 169 பா)

இலங்காதேவி அனுமனை உள்ளே செல்லவிடாமல் தடுத்தாள்.

ஊரைக்காவல் செய்ய ஊர்க்காவல் தெய்வம் இருந்தது என்பதை சிலப்பதிகாரமும், கம்பராமாயணமும் கூறுகின்றன என்பது பெறப்படுகிறது.

15. கோவேறு கழுதை:

ஒரு பெண் குதிரைக்கும், ஆண் கழுதைக்கும் ஏற்பட்ட இனக்கலப்பில் ‘கோவேறு கழுதை’ (Mule) என்னும் கலப்புயிரி தோன்றியிருக்கின்றது.

சிலம்பில் கடற்கரையில் கானல் விளையாட்டைக் காண விரும்பினாள் மாதவி. அவள் மூடு வண்டியிலும், கோவலன் அத்திரியிலும் ஏறினான்.

            “வான வண்கையன் அத்திரிஏற”

                                                          (கடலாடுகாதை 119)

என்று கோவேறு கழுதை கூறப்பட்டுள்ளது.

கம்பராமாயணத்தில் மகோதரன் என்ற மந்திரி பற்றிக்கூறும் போது, பேய், யாளி, கோவேறு கழுதை ஆகியவற்றைப் பூட்டிய தேர்ப்படை 10 கோடி உடையவன்.

            “பேயை யாளியை யானையைக் கழுதையைப் பிணித்தது”

              (இலங்கை வேள்விப்படலம் 492 பா)

என்ற அவனது சிறப்பில் கோவேறு கழுதை பற்றிய செய்தி கூறப்பட்டுள்ளது.

ஒரு பெண் குதிரைக்கும், ஒரு ஆண் கழுதைக்கும் ஏற்பட்ட இனக்கலப்பில் கோவேறு கழுதை தோன்றியது.   கோவேறு கழுதை குறித்து என்பதை சிலப்பதிகாரமும், கம்பராமாயணமும் கூறுகின்றன என்பது பெறப்படுகிறது.

16.சாபம் பலித்தல்

சிலப்பில் முற்பிறப்பில் கோவலன் செய்த தீவினையே பாண்டியன் முறை தவறுவதற்கும், கோவலன் கொலை செய்யப்படுவதற்கும் காரணம் என்பது மதுராபதியின் விளக்கம்.முற்பிறப்பில் பரதன் என்ற பெயரில் இருந்த கோவலன் சிங்கபுரம் என்னும் கலிங்க நாட்டு மன்னனின் பணியாள்.சிங்கபுரத்தின் எதிரி நாடான கபிலபுரத்தைச் சார்ந்த ஒற்றன் என்று சங்கமன் என்ற வாணிகனைப் பொய்க் குற்றம் சாட்டினான்.அதனால் சங்கமன் கொலை செய்யப்பட்டான். அவனது மனைவி நீலி என்பவள் முறை கேட்டு அழுது துயறுற்றாள்.   கணவன் இறந்த பதிநான்காம் நாளில்     மலையுச்சியில் ஏறி

"எம்புறு துயரம் செய்தோர் யாவதும்

தம்முறு துயரம் உற்று ஆகுக"

                   (கட்டுரைக்காதை166-167)    )

என்று சாபமிட்டு இறந்தாள்.

தசரதன் வேட்டையாட விருப்பம் கொண்டு காட்டிற்குச் சென்றான். யானை, சிங்கங்களை தேடி அலைந்த போது , ஓரிடத்தில் யானை நீர் அருந்தும் சத்தம் கேட்க, அவ்விடத்திற்கு அம்பைச் செலுத்தினான். சலபோசன முனிவர்க்கும், அவர் மனைவிக்கும் கண் தெரியாததால் அவர் மகன் சுரோசணன் அவர்களைப் பாதுகாத்து வந்தான். அப்பெற்றோர்களுக்கு தாகம் தீர்ப்பதற்காகத் தண்ணீர் எடுத்துவர வந்த சுரோசணன் மேல் அம்புபட, குரல் கேட்ட தசரதன் பதறிப் போய் அக் குரல் கேட்ட இடத்திற்கு வர, மரணவேதனையில் தவித்த சுரோசணன் அனைத்து விபரங்களையும் கூறி, பெற்றோர்களுக்கு தண்ணீர் கொடுத்து விடுங்கள் என்று கூறி உயிர்விட்டான் தண்ணீருடன் சென்ற தசரதனை விசாரித்தப் பெற்றோர் "மனம் உடைந்து நாங்கள் இப்போதே விண்ணுலகம் செல்கிறோம் நீயும் உன் மகன் உன்னைவிட்டுப் பிரிய நீயும் விண்ணுலகம் அடைவாயாக" என்று சாபமிட்டனர்

இந்த சாப வரலாறு இராமன் காடு சென்றதால் ஏற்பட்ட பிரிவுத் துயரத்தால் தசரதன் கோசலையிடம் கூறும் இடத்தில் அமைந்துள்ளது.

                       "விண்ணின் தலை சேருதும் யாம் எம்போல் விடலை பிரிய        

                         பண்ணும் பரி மா உடையாய் அடைவாய் படர் வான் என்னா

                                                           (அயோத்தியாகாண்டம் நகர்நீங்குபடலம் 377)    பாடலடி மூலம் அறியமுடிகிறது.

சாபம் பலித்தல் என்பதை சிலப்பதிகாரமும், கம்பராமாயணமும் கூறுகின்றன என்பது பெறப்படுகிறது.

17. ஊழ்வினை:

சிலப்பதிகாரத்தில் பாவிகத்திலேயே “ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும் என்பதூஉம்” என்று கூறப்பட்டுள்ளது. முற்பிறப்பில் கோவலன் செய்த தீவினையே அவன் கொலை செய்யப்படக் காரணமாயிற்று என்று ஊழ் வினை குறித்து சிலம்பில் கூறப்பட்டுள்ளது.

கம்பராமாயணத்தில் நகர்நீங்குபடலத்தில்" நல்ல நீர் இல்லாமல். வற்றிப்போதல் அந் நதியின் தவறன்று. அதைப் போலவே எனக்கு இப்போது நேர்ந்துள்ள நிலைக்குக் காரணம் தந்தையின் தவறன்று.நம்மைப் பெற்றவள் போல பேணி வளர்த்த அன்னை கைகேயி பெற்றுள்ள அறிவின் தவறும் அன்று.அவளுடைய மகனான பரதன் செய்த தவறும் அன்று. பின்பு யாருடைய தவறு எனக் கேட்பின் இது ஊழ்வினை செய்த தவறாகும். இதற்காக நீ கோபம் கொண்டது ஏன் எனக் கேட்கிறான் இராமன்.

அனைத்திற்கும் ஊழ்வினையேக் காரணம் என்பதை சிலம்பும் கம்பராமாயணமும்    கூறுகின்றன என்பதுபெறப்படுகிறது

18. காமத்தின் விழைவு:

சிலம்பில் கோவலன் வீழ்ச்சிக்கு அவன் முற்பிறப்பில் செய்த ஊழ்வினை மட்டும் காரணமின்றி, இப்பிறப்பில் கடைபிடித்த மிகு காமத்தின் விளைவான இரண்டாம் மனைவியைக் கொண்டதும் தான்.

கம்பராமாயணத்தில் இராவணன் மிகுகாமத்தை விரும்பியது அவன் அழியக்காரணமாகும்.   

காமத்தின் விழைவு சிலம்பும் கம்பராமாயணமும் கூறுகின்றன என்பதுபெறப்படுகிறது.       

முடிவுரை:

 தீவலம் வந்து திருமணம், கனவு காணுதலும் தோழியிடம் உரைத்தலும், கண்கள் துடித்தல், தீ நிமித்தம் காண்டல்,  விமானத்தில் ஏறிச் செல்லல், மன்னன் இறந்தவுடன் தேவியும் இறத்தல், பாண்டியனின் மதிற்சிறப்பு,  எவ்வளவு தூரம், தம்பதியர் பிரிந்து வாழ்தல், குழந்தைப்பேறு இல்லை, கற்புக்கரசிகள்,  அந்தணரைப் போற்ற  முடியவில்லையே, இறந்த பின்பும் ஆவி உருவத்தில் பேசுதல், ஊர்க்காவல் தெய்வம்,  கோவேறு கழுதை, சாபம் பலித்தல்,  ஊழ்வினை,

காமத்தின் விழைவு மட்டுமல்லாது சிறப்பில்லாத பிறப்புகள், தலை வெட்டு பட்டு இறத்தல், பாடல் பாடும் திறமை, சாபவரலாறு, ஊர் தீயில் எரிதல் என்ற எண்ணற்ற ஒற்றுமைகள் சிலப்பதிகாரத்திலும், கம்பராமாயணத்திலும் காண முடிகிறது.

துணை நூற்பட்டியல்

1.     பூவண்ணன், கம்பராமாயணம் மூலமும் தெளிவுரையும் தொகுதி 1, 2,3,4,5,6,7,8. வர்த்தமானன் வெளியீடு, சென்னை, 2011.

2.     ஸ்ரீ. சந்திரன். ஜெ.சிலப்பதிகாரம் மூலமும் தெளிவுரையும், தமிழ்          நிலையம், சென்னை, 2012.