ஜூலை 2024 இதழுக்கு ஆய்வுக்கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன

ஆண்டாள் ஆண்டவனை ஆண்டாள்

சா.சிவா,  முனைவர் பட்ட ஆய்வாளர் (பகுதி நேரம்), சர் தியாகராயா கல்லூரி, சென்னை - 600 021 09 Feb 2022 Read Full PDF

கட்டுரையாளர்:     சா.சிவா

                  முனைவர் பட்ட ஆய்வாளர் (பகுதி நேரம்),

                  சர் தியாகராயா கல்லூரி

                  சென்னை - 600 021.

நெறியாளர் :       முனைவர்.சொ.மகாதேவன்,

                  இணைப்பேராசிரியர், தமிழ்த்துறைத் தலைவர்,

                  சர் தியாகராயா கல்லூரி, சென்னை-21.

ஆய்வுச்சுருக்கம் :

வைணவம் என்பது இந்து மதத்தின் ஒரு பிரிவு. மிகவும் தொன்மையானச் சிறப்பும் உடையது. உயர்ந்த நெறிகளைக் கொண்ட வைணவத்தின் தத்துவம் ஆண்டவனை வழிபடுவதே. அதாவதுஇ அங்கம் பெற்ற பயன் என்ற நெறியில் இறைவனின் திருப்பாதங்களுக்குத் தொண்டு புரிவது. இதன்படி பிறவிப்பலன் எனக் கருதும் வைணவநெறி அடியவர்களின் வாழ்க்கைச் சக்கரத்திற்கு அச்சாணியாகத் திகழ்ந்து வழிநடத்துகின்றது என்பதே மேன்மையானக் கருத்தாகும். ‘தாம்பெற்ற பேறு பெறுக இவ்வையகம்” என்ற நோக்கில் ஆழ்வார்கள் அருளிச் செய்த பாசுரங்களே நாலாயிரத் திவ்யப்பிரபந்தம் என்ற தொகுப்பு. இதில் வேதமனைத்திற்கும் வித்து என்று போற்றக் கூடிய திருப்பாவை அருளிய ஆண்டாளின் பாசுரங்கள் கட்டுக் கதையாக வீழாமல் இட்ட விதையாக வீழ்ந்து அடியவர்களின் ஆழ் மனதில் விருட்சமென வளர்ந்து கவிதையின் கரம் பற்றி அடியவர்களை கண்ணனிடம் ஆற்றுப்படுத்துவதோடு கண்ணனையே ஆளும் ஆற்றல் படைத்தவை இதன்படி ஆண்டாளைப்பற்றி அமுதத் தமிழில் விழைவதே இக்கட்டுரை.

திறவுச்சொற்கள்: திருவருட்புனல், நாட்டுப்புறத்தன்மை, நாடகப்பாங்கு,

மங்கையர் திலகம், பாவைமொழி.

பாமரருக்கும் சாமரம் ஆண்டாள் மொழி :

      ‘சூடிக்கொடுத்த சுடர்க்கொடி” என்று சிறப்பிக்கப்பட்ட ஆண்டாள் கோதை என்னும் பெயர் தாங்கிப் பெரியாழ்வாரால் வளர்க்கப்பட்டாலும் தான் அனுபவித்த இறையின்பத்தை பாமர மக்களும் உணர்ந்து அனுபிக்க அவாக் கொண்டவள். அதன்படி தான் உணர்ந்த இறையின்பத்தை அனைவரும் உணர வேண்டும் என்று எளிய இனிய சொற்களால் பாமாலைகள் புனைந்தாள். ஆயர்குலப் பெண்ணைப் போன்றில்லாமல் ஆயர்குலப் பெண்ணாகவே மாறினாள். கண்ணனின் அற்புதங்களை நாட்டுப்பாங்கில் பாடி ஆண்டவனை அடையும் நெறிகாட்டினாள்.

‘பாதகங்கள் தீர்க்கும்

            பரமனடி காட்டும்

      வேதம் அனைத்துக்கும்

            வித்தாகும் - கோதைத்தமிழ்

      ஐயைந்தும் ஐந்தும்

            அறியாத மானுடரை

      வையம் சுமப்பது வம்பு

என்ற  வரிகள் வைணவ நெறி அறியாது வாழும் மானுடரைச் சுமந்தால் அது பூமிக்குப் பழி என்ற கருத்தை ஆண்டாளின் திருப்பாவை மையப்படுத்தி விழிப்புக்கு உள்ளாக்குகின்றது.

      ஆண்டாளின் பாடல்களில் நாட்டுப்புறப்  பாடல்களின் தன்மையும் மேலோங்கி நிற்பதைக் காணலாம். நாட்டுபுறச் சூழல்களையும் வழக்காறுகளையும் உள்ளடக்கிய ஆண்டாள் பாடல்கள் அனைவராலும் எளிதில் புரிந்து கொள்ளும் தன்மையனவாகும். ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம் என்ற உண்மைக்குப் பாத்திரமாக பாமர மக்களின் உணர்வுகளோடு ஆண்டாள் பயணித்ததால் என்னவோ அந்த பரமனருள் பெறும் பாக்கியம்  பெற்றாள் அவள்;.

உறவுமுறைச் சொற்கள் :

      நாட்டுப்புற மக்கள் சாதி, மதம், இன வேறுபாடின்றி ஒருவரை ஒருவர் உறவு சொல்லி அழைப்பதை இன்றும் நாம் காணலாம். இங்ஙனம் ஆண்டாள் பாடல்களிலும் உறவுமுறைச் சொற்கள் இடம்பெறுகின்றன.

      ‘கீழ்வானம் வெளுத்தது”, ‘புள்ளினங்களும் சிலம்பின”, ‘எல்லே இளங்கிளியே”, ‘இன்னும் உறங்குதியோ”? என்றெல்லாம் கூறி ஆயர் பாடியில், பெண்கள் நீராடச் செல்ல இருந்தவர்களைத் தடுத்து ஒரு குழுவாகச் சேர்ந்து செல்ல உன்னையும் அழைக்க வந்தோம். அவசியம் வரவேண்டும் என அழைக்கின்றாள். அப்படி அழைத்தும் காதில் விழாத வண்ணம் அகிற்புகைக்கமழத்துயின்று கொண்டிருந்தாள் ஒரு பெண். அவளைப் பற்றி,

      ‘மாமன் மகளே மணிக்கதவம் தாள்திறவாய்;” என வேண்டுகின்றாள்;. பயனில்லை. உடனே துயின்று கொண்டிருப்பவரின் அன்னையிடம் மாமீர் எழுப்பீரோ எனச் சொல்லி உறவு கொண்டாடும் உன்னத நிலையினை ஆண்டாள் பாடல்களில் வெளிப்படுத்துகின்றது. இறையின்பம் துய்ப்பவர்க்கு ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற மனப்பக்குவத்தோடு ஒன்று கூடி வழிபாட்டுநிலை வரவேண்டும் என்பதையும் இதன் வழி ஆண்டாள் உணர்த்த முற்படுகிறாள்.

மார்கழி நோன்பும் மகளிரின் மாண்பும் :

      திருப்பாவையில் ஒரு தோழி இன்னொரு தோழியுடன் உரையாடுவது போன்று பாசுரங்கள் காணப்படுகின்றன. ஒரு பெண் தன் தோழியை அழைத்து நோன்பு நோற்போம் வா, என அழைக்க மற்றொரு பெண்ணானவள் நோன்பு எதற்கு என்று கேட்க, மனதுக்குப் பிடித்த மணாளனை அடைவதற்கு என்று பதிலளிக்க அவள் சரியென்று சொல்ல இருவரும் சேர்ந்து தம் தோழியர்களையெல்லாம் எழுப்பி, நோன்பு நோற்க தலைகட்டி விடிகாலையே எழுந்து, சுனையாடி, திருச்சுன்னம்தரித்து, நோன்பிருப்போம் என்று சொல்ல, விடிகாலையில் சென்று எழும்பும்போது ஒரு தோழியானவள் அதற்குள்ளாகவா விடிந்துவிட்டது என்று கேட்க, விடிந்ததற்கான அடையாளங்களை விவரிக்க, அதற்கவள் உமது மனோநிலையின் வெளிப்பாடுகளே இந்த விடியல் உணர்வு என்று பதிலளிப்பதாக அறியப்படுகின்றது.

விடியலை புலப்படுத்த விழைந்து தாம் உணர்ந்த விடியலுக்கான அடையாளங்களைக் காட்டும் வகையில் இயற்கையின் நிகழ்ப்பாடுகளாக பறவைகள் சிலம்புவதையும், கோழி கூவுவதையும், தயிர் கடையும், சத்தத்தையும், முனிவர்கள் எழுந்து பூஜை செய்ய முற்படும் ஓசையையும் கோயில்களில் கேட்கும் சங்க நாதத்தையும் கறவையினங்கள் மேய்ச்சலுக்கு செல்வதையும் சுட்டிக்காட்டி ஒரு உரையாடல் நாடகமே நிகழ்த்துவதை அறிய முடிகின்றது. இப்படி அதிகாலை நிகழ்வுகளை கண்முன்னே படம் பிடித்துக் காட்டுவது போல் அமைகிறது துயிலெழும் தருணம்.

மார்கழியின் மகிமை :

      நோன்பு நோற்பதற்கு ஆண்டாள் மார்கழி மாதத்தைத் தெரிவு செய்கிறாள். காரணத்தை ஆராயின் மாதங்களில் நான் மார்கழியாய் இருக்கின்றேன் என்று பகவான் கிருஷ்ணன் கீதா உபதேசத்தில் தெரிவித்ததை கிருஷ்ண பிரம்மையில் மூழ்கிய ஆண்டாள் அந்த நினைவிலே மார்கழியைத் தெரிவு செய்திருக்கிறாள் என அறியப்படுகிறது.

      சத்யலோகம் என்பது பிரம்ம லோகம் இந்த தேவலோகத்தில் நமக்கு ஒரு வருடம் என்பது அவர்களுக்கு 1 நாள் அதாவது நம் கணக்குப்படி 6 மாதம் பகல் 6 மாதம் இரவு. ஆடி முதல் மார்கழி வரை 6 மாதம் தட்சினாயன புண்ணிய காலம் என்று அழைத்து போற்றப்படுகின்றது.

      ஆடி மாதம் நமக்கு ஆரம்பிக்கும் பொழுது தேவர்களான அவர்களுக்கு இரவு நேரம் ஆரம்பம். இரவு பொழுது நீண்டு வளர்ந்து நள்ளிரவாகி, சாமமாகி, விடியற்காலையில் பொழுது வருவதே மார்கழி மாதம் ஆகும்.

      தேவர்களால் தொழப்படும் மார்கழி மாதத்தின் விடியற்கால நேரத்தை ஆண்டாள் தெரிவு செய்து இறை உணர்வில் பக்தியுடன் நோன்பு நோற்கத் திட்டம் வகுத்தது அவளுக்கான ஏற்றமாகவே அறியலாகிறது.

      காலத்தை மட்டும் தெரிவு செய்தது மட்டும் அல்லாமல் ‘மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாள்” என்று திருப்பாவை முதல் பாடலாய் துவங்கியிருப்பது ஆராய்ச்சிக்கும் வியப்புக்கும் உரியதாகவே அமைகின்றது.

      இவ்வண்ணம் மண்ணுலக மங்கையர்க்கெல்லாம் திலகமாக விளங்கும் ஆண்டாள் மகளிரின் மாண்புக்கு இலக்கணமாக விளங்குகின்றாள். விண்ணையும், மண்ணையும் ஒரு சேர நேசிக்கின்ற உயர்ந்த பண்பே ஆண்டாளை ஆண்டவனிடம் அடைக்கலப்படுத்தி வைணவத்தின் பெருமையை உலகறியச் செய்தது என்றால் அது மிகையாகாது.

வைணவம் கூறும் வாழ்க்கை நெறி :

      வைணவத்தின் விடிவெள்ளியாகத் திகழும் ஆண்டாள் அருளிய திருப்பாவை முழுவதும் பக்தியின் மையமாக பாடப்பட்டது என்றாலும் இதில் இரு உண்மைகள் புலப்படுகின்றன. ஒன்று விவசாயம் மற்றொன்று பாவை நோன்பு. விவசாயம் சார்ந்த வளமைக் குறிப்புகளாக திருப்பாவையின் முதற்பாடலே அமைகின்றது. அதாவது விவசாயத்திற்கு உகந்த மார்கழி மாதத்தினைப் புகழ்வதாக அமைகின்றது. இதற்குக் காரணம் ஐப்பசி கார்த்திகை மாதங்களில் மழை பெய்து ஏரிகள் நிரம்பி நடவு செய்து பயிர் சற்று வளர்ந்துள்ள காலம். இந்த காலத்திற்கு அடுத்து வரும் மாதம் அறுவடைக் காலமாக அமைகிறது. இம் மாதங்கள் யாவும் செழிப்பான காலமாக அமைந்து வாழ்க்கையின் ஏற்றத்திற்கு வழி வகுக்கும் காலமாகவே தென்படும். அதன்படி பயிர்களது வளர்ச்சியும் மழையும் உலக வாழ்க்கையைச் செழிப்புறச் செய்கின்றன. திருப்பாவை முழுவதும் மழையைப் போற்றி மழை வர வேண்டும் என்ற குறிப்புகள் பல இடங்களில் இடம் பெறுகின்றன.

      திருப்பாவையின் வழிப் புலப்படும் மற்றொரு வாழ்க்கை நெறி எண்ணங்களில் தொன்மையான பாவை நோன்பு. அதாவது பாவையை வழிபாடு செய்தால் மழை பெய்வதும், பயிர்கள் செழிக்கச் செய்வதும் என்ற புராதன மந்திரத்தின் மீட்டுருவாக்கம் ஆண்டாள் செய்கிறாள்.

எதுவாயினும் நல்ல நோக்கத்திற்காக செய்ய முற்படும் எந்த காரியமும் நல்ல  நெறிகளைக் கடைபிடிப்பதைக் குறிக்கும் என்பதே இதில் நமக்கு புலப்படும் உண்மை.

      ‘ஒட்டிய வயிறோடு

      ஊருக்கே சோறிடும் உழவா!

      இங்கே, விளைநிலமெலாம்

      விலை நிலமாகிப் போனதே!

      பெருமைதான், உழவனாக

      ருப்பதும், றப்பதும்...”  

என்ற இன்றைய நிலையை நினைத்து வருந்த வேண்டியதாகவே அமைகின்றது.

அறிவியல் பார்வையில் ஆண்டாள் :

      உலக வாழ்க்கைக்குப் பொருந்தும் அறநெறிகளை கடைபிடித்து இயல்பான பாடல்களால் தன் இயல்புகளை வெளிப்படுத்தும் ஆண்டாளின் பார்வை என்பது அறிவியல் பார்வைக்குப் பொருந்தும் நிலையில் காணப்படுகின்றது. அதிகாலை எழுவது, நோன்பு இருப்பதுஇ இறைவனை வழிபடுவது என உலக நலனுக்காக சடங்குகள் சார்ந்த செயல்கள் மூலமாக நன்மையே நோக்கி விழைதல் என்பது இயல்பான பக்தர்கள் மீதான அறிவியல் கண்ணோட்டத்தையே ஆதாரமாகக் கொண்டு அமைந்துள்ளது.

      எளிய பிறவியும் இறை நிலையை அடைய முடியும் என்ற தன் எண்ணத்தின் மீதான அசைக்க முடியாத நம்பிக்கையான இவையனைத்தும் பக்தி நெறியில் ஒரு பரவசத்தை உண்டாக்குவதாகவே அமைகின்றன.

      இறைவனை அடைய முற்படும் நோக்கில் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும் ஒழுக்க நெறிகளில் நம்மை வழி நடத்துவதோடு மட்டுமல்லாமல் உடல் மற்றும் உள்ளத்தையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள மறைமுகமாக வழி வகுக்கிறது. நல்ல  நெறிகளோடு வாழும் கட்டமைப்பு என்பது இன்று கட்டவிழ்த்த காளையாக நெறிகெட்டு தறிகெட்டுப் போவதை அறிந்தும் அதை முறைப்படுத்த முன்வரும் முற்போக்காளர்களின் நிலை முள் இடுக்கில் முளைத்த செடியாக சிதைந்து போவது சிந்திக்க வேண்டிய ஒன்றாகும்.

ஆண்டாள் மானிடனை வேண்டாள் :

      ‘மானிடவர்க்கென்று பேச்சுப்படில் வாழகில்லேன்” என்று ஆண்டவனைத் தவிர பிற ஆடவனுக்கு வாக்குப்பட மாட்டேன் என்ற ஆண்டாளின் உறுதி வியப்புக்குரியதாக இருந்தாலும் உண்மைக்குப் புறம்பானதாக புலப்படவில்லை. எனவே தான் திருமாலுடனான தன் திருமணத்தைத் தானே காணும் காட்சியாக,

      ‘மத்தளங் கொட்ட வரிச்சங்கம் நின்றூத

      முத்துடைத்தாமம் நிரை தாழ்ந்தபந்தற் கீழ்

      மைத்துனன் நம்பி மதுசூதனன் வந்தென்னைக்

      கைத்தளம் பற்றக் கணாக் கண்டேன் தோழி நான்”

                                       (நாச்சியார்திருமொழி - வாரணமாயிரம்)

என்று தன் திருமணத்தை விவரித்துப் பாடும் ஆண்டாள் பெண் கவிஞர்களில் புதுமையானவள் திருமாலின் கரம் பிடிக்கத் துடிக்கும் ஆண்டாளின் வேட்கை கற்போற்கு பரவச மூட்டுகிறது.

முடிவுரை :

      கணக்கிலடங்காச் சிக்கல்களைக் கொண்டது நமது சமூக அமைப்பு.  காலச் சுவடுகளை சற்று பின்னோக்கிப் பார்த்தோமானால் அன்று பெண் அவ்வளவு எளிதாகப் பேசிவிட முடியாது. ஏனெனில் ஏற்கனவே உருவாகி இருக்கும் பல கட்டுமானங்களும் கருத்தாக்கங்களும் கெட்டியாய் கட்டிதட்டிப்போய் உள்ளன. இத்தகைய சூழலில் தன் மன உணர்வுகளை பக்தியின் வடிவில் வெளிக் கொணர்ந்தவள் ஆண்டாள்.

      மானிடப் பிறவியில் மங்கையாகப் பிறந்து பாமரமக்களையும் பரமனிடம் ஆற்றுப்படுத்தியவள் ஆண்டாள். இயற்கையின் இயல்புகளை இயன்றளவு படம் பிடித்துக் காட்டியதோடு இளமைத் தமிழால் பா இயற்றி இனிக்கச் செய்தாள். சில இரும்பு நெஞ்சங்களையும் கவரும் கந்தகச் சொல்லாடலை அவளது பாவை,மொழிகளில் கண்டு மகிழலாம்.

      ஆண்டாள், இயற்கையை, மொழியை, அடியவர்களை மட்டுமின்றி ஆண்டவனையும் ஆண்டாள். ஆண்டவனால் ஆட்கொண்டாள்.

துணை நூற்பட்டியல் :

1.     ஆழ்வார்கள் சரித்திரம் -     வை.மு.கோபால இராமாநுசாச்சாரி

2.     டாக்டர் நா.சுந்தரபாப்பா    -     ஆண்டாள் பாடல்களும் வழிபாடும்,

                                  முதற்பதிப்பு வெளியீடு - 1990

3.     ஸ்ரீராமானுசர்       -     பி.ஸ்ரீ

4.     வை.மு.நரசிம்மன்          -     ஆண்டாள் அருளிச்செய்த திருப்பாவை

5.     நஞ்சீயர்                  -     பூமா வேங்கடகிருஷ்ணன்